அக-நாகர்கள்

உலகம் முழுவதும் பாம்புகள் என்றால் ஒரு அச்சம் இருந்திருக்கிறது. கூடவே ஒரு வித கவர்ச்சியும் இருந்து வந்துள்ளது. ஏன்? மிக இயல்பான பதில் அவற்றின் விஷம். அவற்றினால் ஏற்படும் மரண ஆபத்து.

லகம் முழுவதும் பாம்புகள் என்றால் ஒரு அச்சம் இருந்திருக்கிறது. கூடவே ஒரு வித கவர்ச்சியும் இருந்து வந்துள்ளது. ஏன்? மிக இயல்பான பதில் அவற்றின் விஷம். அவற்றினால் ஏற்படும் மரண ஆபத்து.

ஆனால் உலக பண்பாடுகள் அனைத்திலும் பாம்புகள் மிக உச்சமான ஆனால் மிக ரகசியமான ஒரு விஷயத்தின் குறியீடாக மதிக்கப்பட்டிருக்கின்றன.

நமக்கு மிக எளிதாக நினைவுக்கு வருவது குண்டலினிதான். மானுடத்தின் இறை வேட்கை இறை அனுபவம் இவற்றுடன் தொடர்புடைய  ஒரு ‘ஆற்றலாக’ குண்டலினி எனும் கோட்பாடு இந்திய மரபில் உள்ளது. அதன் குறியீடாக பாம்புகள் உள்ளன. ஒன்றோடொன்று பிணைந்த பாம்புகள். இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற பண்பாடுகளிலும் இத்தகைய பாம்புக்குறியீடுகள் உள்ளன. கிரேக்க பண்பாட்டில் ஹெர்மஸ் (Hermes) தெய்வத்தின் கையில் இருக்கும் கோலில் பின்னி பிணைந்த பாம்புகளை காணலாம். இன்றும் மருத்துவ சின்னங்களில் இவற்றை காணலாம். உலகமெங்கும் இன்று மிகவும் பொதுவாக நிலவி வரும் பாம்பு குறித்த தொன்மம் பைபிளில் உள்ளதுதான்.

பைபிள் என்பதை பொதுவாக கிறிஸ்தவ மதநூலாக நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அது கிறிஸ்தவ இறையியலிலிருந்து மாறுபட்ட யூத மறைநூலாகவே பைபிள் கருதப்பட வேண்டும். அடிப்படையாக பாம்புடன் தொடர்புடைய ‘ஆதிபாவம்’ எனும் கருத்தியல் யூத இறையியலில் இல்லை. இதுதான் யூத தொன்மத்தில் பாம்பின் பங்களிப்பை சுவாரசியமானதாக ஆக்குகிறது. கிறிஸ்தவம் யூத விவிலியத்தை தனதாக்கிக் கொண்ட போது அதற்கு ஒரு நேரடித்தன்மையை உருவாக்கியது. விவிலியத்தின் சிருஷ்டி பாடலானது ஒரு கவிதை என்பதிலிருந்து விலகி ஒரு நிகழ்ந்த சம்பவம் என்று மாற்றப்பட்டது. ஆனால் யூத விவிலியத்திலோ ஆதி தோட்டமும் அதில் ஆதிமனிதனும் ஏவாளும் சர்ப்பமும் பல கவித்துவ சாத்தியங்களை உள்ளடக்கியது. அது மட்டுமல்ல பின்னர் எழுந்த கபாலா போன்ற சில முக்கிய மறைஞான மரபுகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகளை புரிந்து கொள்ளவும் பயன்படக்கூடியது.

யூதம் இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய மூன்றையும் ஆபிரகாமிய மதங்கள் என்று நாம் குறிப்பிட்டாலும் இஸ்லாம் கிறிஸ்தவம் இரண்டு மட்டுமே தம்மை விரிவாக்கும் விரிவாதிக்கத்தன்மை கொண்டவை. ஆனால் அவற்றிலும் கூட விரிவாதிக்கத் தன்மையற்ற மரபுகள் உண்டு. ஆனால் அவை பெரும்பாலும் விளிம்புநிலைகளில் இருப்பவை. மாறாக யூத மதத்தில் ஏக-இறை கோட்பாடு இருந்தாலும் கூட மறைஞான மரபுகள் (mystic traditions) அதே அளவு முக்கியத்துவம் கொண்டவையாக விளங்குகின்றன.

கபலா (Kabbalah) அத்தகைய ஒரு யூத மறைஞான மரபு. கபலா ஏறக்குறைய குண்டலினி போல ஒரு உருவகத்தை இறை சக்தியின் வெளிப்பாடுகளுக்கு அளிக்கிறது. இதனை ‘சர்ப்ப பாதை’ (Way of the Serpent) என சொல்கிறது. க்னாஸ்டிக் (Gnostic) ஞான மரபுகளில் ஏதேன் தோட்டம் குறித்த கதையில் சர்ப்பம் ஞானத்தேடலுக்கான குறியீடாகவே கூட சொல்லப்படுகிறது. ஆதி தோட்டத்தில் சமநிலையில் இருக்கும் மனிதம் ஒருவித சலனத்துக்கு ஆளாகிறது. அந்த சலனமே மானுடத்துக்கு சுய போதம் (self-awareness) அளிக்கிறது. இதுவே மானுடத்தை பிற விலங்கினங்களிலிருந்து பிரிப்பதாக கருதப்படுகிறது. உண்மையாகவே பிற விலங்கினங்களுக்கு சுய போதம் கிடையாதா என்கிற கேள்வியை விட்டுவிடலாம். எதுவானாலும் தனக்கு சுயபோதம் உண்டு என்கிற உணர்வு மனிதனுக்கு இருப்பதை காண்கிறோம். இத்துடன் தொடர்புடையது ஒழுக்கவிதிகள் குறித்த கருத்துகள் உருவாகுதல். எது சரி எது தவறு என்பது குறித்த உணர்வு.  இவையெல்லாம் எங்கிருந்து உருவாகின்றன என்றால் மூளையிலிருந்து. மானுடத்தின் மூளையின் அபரிமிதமான பரிணாம வளர்ச்சிக்கும் சுயபோதம், தவறு சரி குறித்த அறிதல் ஆகியவற்றுக்கும் தொடர்பு உள்ளது. மானுட மூளையின் இந்த பெருக்கத்தின் விளைவாக பிரசவம் வலி உடையதாக ஆகிறது.

கார்ல்சாகன் இந்த இணைப்பை குறித்து மூளையின் பரிணாம வளர்ச்சி குறித்த தன்னுடைய நூல் ஒன்றில் (’The Dragons of Eden) சுட்டிக்காட்டுகிறார். யூத-விவிலியம் இந்த தொடர்பை இறை சாபமாக பேசுகிறது. சுயபோதம் பெற்றுவிட்ட ஆதி தம்பதியினருக்கு இறைவன் கொடுக்கும் சாபம் பெண் தன் சந்ததியை வேதனையில் பெற்றெடுப்பாள் என்பது. ஒருவிதத்தில் இதில் ஒரு ஆழ்ந்த பரிணாம உண்மை இருக்கிறது. அதே சர்ப்பம் பின்னர் கபலாவில் இறைசக்தியின் வெளிப்பாட்டு பாதையின் குறியீடாக மாற்றப்படுவதை காண்கிறோம். ஆக யூத மறைஞானிகள் விவிலியத்தின் கவிதை வழியாக சொல்லியிருப்பது ஒரு நேரடியான வரலாற்று சம்பவம் அல்ல. அது கவிதை மூலமாக தாங்கள் உணர்ந்த ஆழ்ந்த சத்தியம் ஒன்றை குறியீடுகள் மூலமாக் அளித்திருக்கின்றனர்.

தென்னமெரிக்க பழங்குடிகளின் ஆன்மிக பாரம்பரியங்களை குறித்து ஆராய்ச்சி செய்த மானுடவியலாளர் ஜெர்மி நார்பி. இவர் மாந்திரீக சடங்குகளில் சர்ப்ப படிமம் எத்தனை மையமாக வெளிப்படுகிறது என்பதை விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார். அயஹூஅஸ்கா (Ayahuasca) என்பது நம் நாட்டு சோமபானம் போன்ற ஒன்று. தென்னமெரிக்க ஷமான்களால் தயாரிக்கப்பட்டு அருந்தப்படுவது. விரதமிருந்து அருந்த வேண்டும். அது பலவித அககாட்சிகளை உருவாக்கும். நார்பி இளம் மானுடவியலாளனாக அயஹுஅஸ்காவை விரதமிருந்து அருந்துகிறார். அப்போது அவருக்கு ஒரு அககாட்சி விரிகிறது. அதில் சர்ப்பங்கள் அவரது மானுடமைய (human-centric)  பார்வையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

பின்னர் அயஹுஅஸ்கா அனுபவங்கள் பெற்ற பலரிடமும் கேட்கும் போது சர்ப்பங்கள் அககாட்சிகளில் மையம் பெறுவது இந்த அனுபவத்தில் பொதுவான ஒரு அம்சம் என உணர்கிறார் நார்பி. பண்பாட்டு வேறுபாடுகளைத் தாண்டி இது பொதுவானதாக இருப்பதை அவர் கூறுகிறார். அமெரிக்க கவிஞன் அல்லது மானுடவியலாளன் அல்லது ஷமான் எவராக இருந்தாலும் அயஹுஅஸ்கா அனுபவங்களில் அககாட்சிகளில் சர்ப்பம் மையமாக அமைவதை அவர் கவனப்படுத்துகிறார். உதாரணமாக, அத்தகைய காட்சிகளிலிருந்து ஓவியங்களாகத் தீட்டியவர் பாப்லோ அமரிங்கோ (Pablo Amaringo). புகழ் பெற்ற பெரு நாட்டு ஓவியர். இவரது ஓவியங்களில் சர்ப்பங்கள் முக்கிய இடம் வகிப்பதை நார்பி சுட்டிக்காட்டுகிறார். முப்பெரும் உயிர் அன்னையரை பாப்லோ அமரிங்கோ மூன்று பெரும் சர்ப்பங்களாக அககாட்சியில் கண்டு அவர்களை ஓவியமாக்குகிறார். வளி மண்டலத்தின் அன்னை வய்ரமம்மா, நீர் மண்டலத்தின் அன்னை யகுமம்மா,

வனங்களின் அன்னை சச்சமம்மா

சதபதபிராமணம் சர்ப்ப வித்தை என அக அறிதலை கூறுகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நாக தெய்வங்கள் இருக்கின்றன. மண் சார்ந்த சக்தியான குண்டலினியின் வெளிப்பாடுகளாகவும் நீர்நிலைகள் அருகில் காவல்தெய்வங்களாகவும் அவை உள்ளன. இந்தியாவில் வழக்கம் போல இதற்கு ஒரு இனக்குழு வரலாறு கற்பிக்கப்படுகிறது. அதில் உண்மை இருக்கலாம்; இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாக வழிபாடு உலகம் முழுவதும் இருந்திருப்பதும் நிறுவன மதங்கள் மேலெழுந்து வரும் போது நாக வழிபாட்டுடன் ஒரு மோதல் நிலை உருவாகியிருப்பதையும் நம்மால் காண முடிகிறது.

இந்தியாவில் பூர்விக குடிகள் நாகர்கள் என்றும் ஆரியர்கள் அவர்களை வென்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் பல முக்கிய அரசர்கள் நாக வம்சத்துடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ராமனின் வம்சாவளியிலேயே நாகர் தொடர்பு இருந்திருப்பதை காண முடிகிறது. மேலும் சாலிவாகனன் மணந்த நாகர் இளவரசி சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவளாக இருந்திருக்கிறாள். இதன் மாற்று பார்வையாக சீனாவின் மிக மிக தொன்மையான ஒரு பழம்பாடல்  நாக தேவதைக்கும்  மானுடனுக்குமான காதல் குறித்தது. வெண்சர்ப்பத்தின் காதலை முறியடிப்பதை ஒரு பௌத்த துறவி செய்கிறார். இந்தியாவில் நாகர் எனும் குறியீட்டுக்கு அளிக்கப்படும் அதே சட்டகத்தை இங்கே பொருத்தி பார்த்தால் இது எத்தனை அபத்தமானது என்பது தெரியும்.

இந்தியாவில் மட்டுமே எவ்வித அடக்குமுறையும் இல்லாமல் நாக வழிபாடு அதன் அத்தனை செறிவுடனும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நம் சமூக கல்வியோ அதனை மிக மிக பலவீனமான காலனிய இனவாத அறிதல் சட்டகங்கள் மூலம் அறிந்து கொள்ள முயற்சி செய்து மிகவும் அபத்தமான ஊகங்களை கருத்தியலாக முன்வைத்து அதிலிருந்து அரசியலை கூட வடித்தெடுக்கின்றனர். பின்னர் அரசியல் சார்ந்த ஆதாயங்களுக்காக கருத்தியல் அபத்தங்கள் தக்கவைக்கப்படுகின்றன. உலகளாவிய தொன்ம ஆராய்ச்சியில் முதன்மையாக நிற்கும் கருவிகள் வாய்க்கப்பட்டிருந்தும் அவற்றை தூக்கிவீசிவிட்டு வறியவர்களாக காலவதியாகிப் போன அறிதல் சட்டகங்களை யாசித்து நிற்கிறோம் நாம்.

நம் நீர்நிலைகளையும், புனித வனங்களையும் காப்பாற்றும் சர்ப்ப தெய்வங்களே நம் பாரம்பரிய அறிதல் கருவிகளையும் காக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com