27. மைத்ரேயி

108 உபநிடதங்களில் காலத்தால் முற்பட்ட முதல் மூன்று உபநிடதங்களில் பிரஹதாரண்யக உபநிடதம் முக்கியமானது.
27. மைத்ரேயி
Published on
Updated on
6 min read

தத் த்வம் அஸி    -நீயே அதுவாக இருக்கிறாய்

ப்ரக்ஞானம் பிரம்ம -தூய அறிவே பிரம்மம்

அயமாத்மா பிரம்ம -இந்த ஆத்மாவே பிரம்மம்

அஹம் பிரம்மாஸ்மி - நானே பிரம்மம்

பிரம்மம் என்பது குணம், வடிவம், காலம் ஆகியவற்றைக் கடந்தது.

  • பிரஹதாரண்யக உபநிடதம்

108 உபநிடதங்களில் காலத்தால் முற்பட்ட முதல் மூன்று உபநிடதங்களில் பிரஹதாரண்யக உபநிடதம் முக்கியமானது. இது சுக்லயஜூர் வேதத்தைச் சார்ந்தது. ஏனென்றால் மெய்ஞானத் தேடல்கள் நிறைந்த சபையில் பெரும் அறிஞர்களுக்கும் முனிவர்களுக்கும் இடையில் உரையாடல்கள், கேள்வி பதில்கள், விவாதங்கள் நடைபெறும். அப்போது அரசர்கள் முதல் பொதுஜனம் வரை விவாதங்களில் கிடைக்கப் பெறும் விஷயங்கள் மூலம் ஆன்ம தேடலையும் ஞானத்துக்கான மார்க்கத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

இவ்விவாதங்கள் நடைபெறும் இடத்தில் பெரும்பாலும் ஆண்களே முக்கியத்துவம் பெற்றவர்களாகவும் பங்கெடுப்பவர்களாகவும் இருப்பார்கள். பிரஹதாரண்யக உபநிடதத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக வேதம் படித்து அதில் கரை கண்டு விவாதத்திலும் பங்கு கொண்டதாக கூறப்பட்டுள்ளது. வேத காலத்தில் ஞானத்தை அடையவும் அறிவுப் பூர்வமான தேடல்களுக்கு விடை காணவும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை இருந்தது. பால் பாகுபாடற்ற காலமாக விளங்கியது வேத காலம். ஆண்களை விட எண்ணிக்கையில் சற்றே குறைவாக இருந்தாலும் பெண் முனிவர்களும் மெய்யிலாளர்களையும் கொண்ட காலமாக விளங்கியது வேத காலம்.

ஜனக மன்னரின் அமைச்சர் மித்திரரின் புதல்வி சுலபை. உலகிலுள்ள அழகுகளையெல்லாம் ஒரு கலையத்தில் இட்டு கடைந்து எடுத்து அதன் வார்ப்பில் உருவானவள் சுலபை எனச் சொல்லும் அளவுக்கு மேம்பட்ட அழகுடையவளாகத் திகழ்ந்தாள். தன் அழகின் மேல் எப்போதும் அவளுக்கு ஒரு மயக்கம் உண்டு. தன்னை மேலும் அழகு படுத்திக் கொள்வதிலும், பொலிவாக நடப்பதிலும் அடுத்தவரை கவரும் வண்ணம் பாங்காக அலங்காரம் செய்து கொள்வதிலும் ஆர்வம் அதிகம்.

ஒரு சமயம் அவளும் தோழிகளும் நதிக்கரையில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர். ஒருவர் அழகை மற்றவர் புகழ்ந்து கொண்டும், சீண்டிக் கொண்டும் விளையாட்டு தொடர்ந்த வண்ணம் இருந்தது.  ஒரு வழியாக நீராடிக் களைத்து அவர்கள் அங்கிருந்து செல்ல ஆரம்பித்தனர். வனத்தின் வழியை கடந்து செல்கையில் அங்கே ஒரு குடிலுக்கு முன் சிலர் காத்துக் கொண்டிருப்பதை பார்த்து அங்கே சென்றனர்.

மிடுக்காக அழகுடன் அத்தனை இளம் பெண்கள் அருகில் வருவதைக் கண்டும் அங்கிருந்த காளைகளில் ஒருவர் கூட அவர்கள் பக்கம் திரும்பவில்லை. அவர்களின் தவிப்பு வேறு ஒரு விஷயத்தில் மையம் கொண்டிருப்பது கண்டு, சற்றே வியப்பும் ஏமாற்றமும் தோன்ற அங்கிருந்த காவலாளியிடம் விபரம் கேட்டாள் சுலபை. அவர்கள் யாருக்காக காத்து நின்றிருக்கிறார்கள்?’ என்று  கேட்டாள்.

‘வேதப் பேரறிவரான கார்கிதேவிக்காக அவர்கள் நின்றிருக்கிறார்கள். அவர்களில் எவரை அவர் சீடனாக ஏற்பார் என்று தெரியாதனனால் தவிப்பு கொண்டிருக்கிறார்கள்’ என்றான் அவன்.

நெடுநேரம் கடந்து கதவு மெல்லத் திறந்து ஒரு மாணவன் வெளிவந்து கார்கிதேவியின் வரவை அறிவித்தான். இரு மாணவர் தொடர வெளிவந்த கூனுடல் பெண்ணைக் கண்டு திகைத்தாள் சுலபை. கார்கியின் சிறுத்த உருவமும், குறுகிய கால்களும், கூன் விழுந்த முதுகும், கருத்த தோற்றமும் அவளை அசூயை அடைய வைத்தது. அவளைக் கண்ட அடுத்த நொடி தன்னையறியாமல்  பின்னடைந்தாள்.  அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் அக்கூனுடல் கொண்ட கார்கியை  நோக்கி சென்ற இளைஞர்கள் அவள் காலடியில் பணிந்து ‘கல்விக் கொடையளியுங்கள், ஆசிரியரே’ என்று இறைஞ்சினர். அவள் அவர்களின் தலைமேல் கைவைத்து வாழ்த்தினாள். பின் தன் குடிலுக்குள் சென்றுவிட்டாள் கார்க்கி.

அரண்மனைக்கு வந்த சுலபைக்கு கார்கியின் தோற்றமும் அறிவைத் தேடி அவளிடம் இறைஞ்சிக் கொண்டிருந்த இளைஞர்களின் தவிப்புமே மனக் கண்ணில் ஓடிக் கொண்டிருந்தது. விகாரமான உருவம் கொண்டிருந்தாலும் அவள் அறிந்த வேதத்தால், ஞானத்தால் கார்கி தேவியின் கண்கள் சுடராக ஒளிர்வதைப் பார்த்தாள் சுலபை. அவர் முன்னால் தன் உடல் அழகு தூசியெனப் பட்டது. இத்தனை நாள் இந்த அழகில் தான் மாய்ந்து கர்வம் கொண்டிருந்ததெல்லாம் வீண் எனத் தோன்றியது. தனக்குள்ளாகவே தர்க்கத்தில் ஈடுபட்டாள் சுலபை.

இத்தனை நாள் அழகே என் தகுதி என்று எண்ணலானேன்.  அழகு கவரும் தன்மை கொண்டது என்பதனால் மேலும் கவர்வதன் மூலமாக  மேலும் அழகு கொள்ளலாம் என எண்ணினேன். என்னை அழகு செய்தேன். அழகிய அசைவுகளை கற்றுக் கொண்டென். இனிய நடிப்புகளை பழகினேன். பிறரைக் கவர்பவளாக ஆவதற்காகவே என் வாழ்க்கையை இதுவரை அமைத்துக் கொண்டிருக்கிறேன்’ எதற்கு இம்முயற்சிகள் எல்லாம். யாரை நிறைவு செய்ய நான் படைக்கப் பட்டிருக்கிறேன்? பிறரை கவர்வதற்காகவே நான் வாழ வேண்டுமென எனக்கு ஆணையிட்டவர் எவர்? எனக்கென்று ஏதும் இல்லையா? அழகும் கவர்வதும் மட்டுமே என் தகுதி என நான் எவ்வாறு நினைத்துக் கொண்டேன்’ என பலவாறாக தனக்குள்ளேயே கேள்விகளை எழுப்பி தன் எண்ணங்களாலேயெ தன்னை அடித்துக் கொண்டாள் சுலபை.

அவளுள் எழுந்த கேள்விகள் எல்லாம் அவளை எரியச் செய்தது. தன் மேல் எரி துகள் விழுந்ததைப் போல் துடித்துப் போனாள். ஒருவாறு சொற்களின் ஆழங்களின் நீராடித் தெளிந்தாள்.  அடுத்த நாளே கார்கியின் ஆசிரமத்திற்குச் சென்று தன்னை அவருடைய சிஷ்யை ஆக்கிக் கொள்ளும் படி பணிந்தாள். அதற்கு கார்கி ‘நீ இன்னும் முதிரா இளம்பெண். உன் தந்தையிடம் ஒப்புதல் பெற்று வருக!’ என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்.

மகளின் சொல்லால் அதிர்ச்சி அடைகிறார் மித்திரர். அவரால் எத்தனை எடுத்துக் கூறியும் மகளின் மனதை மாற்ற முடியவில்லை. அறிவுத் தேடலுக்குப் புறப்பட்ட அவளை தடுத்து நிறுத்துவது நியாமும் இல்லை என உணர்ந்து ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தார். உரிய வயது வந்தவுடன் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மகள் அவ்வுறுதியை அளித்தபோது ‘நீ விழைவதை அடைக!’ என வாழ்த்தி அனுப்பினார்.

கார்கியின் மாணவியாகி அவளுடன் சுலபை கிளம்பிச் சென்றாள். மிதிலையின் எல்லைக்கு அருகே இருந்த கர்கவனம் என்னும் காட்டில் அமைந்த குடிலில் ஆசிரியையுடன் தங்கினாள். அவள் காலடியில் அமர்ந்து சுலபை வேதம் கற்றாள். நால்வகை சொல் முறையையும் அறுவகை நோக்குகளையும் ஆழ்ந்து அறிந்தாள். அவர்களிருவரும் இணைந்து வேதச் சொல்லவைகளுக்கு சென்றனர். ஆசிரியைக்குப் பின்னின்று ஏடு எடுத்தளிக்கும் முதல் மாணவியாக அவள் ஆனாள்.

காலங்கள் உருண்டோடின. சுலபை திருமண பருவத்தை அடைந்தாள். அதற்கென்றே காத்திருந்ததைப் போல மித்திரர் ஆசிரமம் தேடி வந்து சுலபையின் திருமண ஏற்பாடுகளைப் பற்றி பேசினார். ஆனால் அவளுக்கு அதில் ஆர்வமே இருக்கவில்லை. எப்படியேனும் தட்டிக் கழிப்பதிலேயே அவள் புத்தி சென்றது. மேலும் சில காலம் சென்றது. இம்முறை தந்தை பிரம்மாஸ்திரத்தை தன் மகள் மேல் ஏவினார்.

குலத்தில் அனைவரும் வயது வந்த மகளை மணம் செய்து கொடுக்காமல் வைத்திருப்பதைப் பற்றி அவதூறு பேசுவதாகவும், அவளைப் பற்றியுமே தகாது பேசுவதாகவும், இனியும் தன்னால் பொறுத்திருக்க முடியாது என்றும் கூறினார். திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இறுதி அஸ்திரத்தை எடுத்து விட்டார்.

கார்கியும் சுலபையிடம், நீ கன்னியாக இருக்கும் வரை சபைகளில் பெண் என்றே பார்க்கப்படுவாய். உன் அறிவுத் திறனை விட உடல் அழகு மட்டுமே கவனிக்கப்படுகிறது. அதனால் நீ திருமணம் செய்து கொண்டு உன் தேடலை தொடரலாம் என எடுத்துரைத்தார். சரி என சம்மதித்து தான் தேர்வு செய்பவரை மட்டுமே மணம் செய்விக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தந்தையுடன் சென்றாள் சுலபை.

அப்படிக் கூறி விட்டாளே தவிர அவளால் ஒருவரையும் கணவனாகத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. தன் ஞானப் பசிக்கு தீனி போடும் அளவுக்கு யாரையும் பார்க்க முடியவில்லை. மித்திரர் மிகவும் நொந்து போய்விட்டார். அப்படியான ஒரு சமயத்தில், ஜனகரின் அவை கூடலுக்கு வந்த யாக்ஞவல்கியரை சுலபை கண்டாள். அவையில் வெண்ணிறத் தாடியும் தோள் புரண்ட பனிக் குழலும் இனிய புன்னகையுடன் எழுந்து நின்று அவர் வேத மெய்மையை உரைத்தார். அவரின் அறிவால் ஈர்க்கப்பட்ட சுலபை அவரின் சிஷ்யை ஆக வேண்டும் என முடிவெடுத்தாள். கன்னிப் பெண் முனிவரின் ஆசிரமத்தில் மாணவி ஆக முடியாதென்ற விதியால், அவரை மணந்து அவரின் பத்தினியாக முடிவு செய்தாள். தந்தையிடம் தன் எண்ணத்தை தெரிவித்ததும் அவர் அரண்டு போனார். ‘மகளே அவருக்கு என் வயது. நீ எப்படி அவரை மணந்து கொண்டு இல்வாழ்க்கை நடத்த முடியும். மேலும் அவருக்கு முன்னரே மனைவியும் நான்கு மைந்தரும் உள்ளனர் என்பதை நீ அறிவாயா? உன் வயிற்றில் நன் மைந்தர்கள் உதித்து அவர்களை நான் கொஞ்சி விளையாட வேண்டும் என விரும்புகிறேனம்மா. வேறு யாரேனும் இளவயதினராக தேர்வு செய்யக் கூடாதா?’ என்றார்.

ஆனால் சுலபையோ ‘அனைத்தும் அறிவேன் தந்தையே. அவரிடம் என் விருப்பத்தைச் சொல்லி அவருக்குச் சம்மதமா என்று மட்டும் கேளுங்கள்’ என்று தீர்மானமாக சொல்லிச் சென்று விட்டாள். மகள் இத்தனை தூரம் திருமணத்திற்கு சம்மதித்ததே பெரிய விஷயம் என அவரும் யாஞ்சவல்கியரிடம் தன் மகளின் விருப்பத்தை தெரிவித்தார்.

இறை சங்கல்பம் இல்லாமல் ஒரு பெண் மனதில் இவ்வாறு தோன்றாது. இதில் தன் சம்மதத்தை விட தன் மூத்த மனைவியின் சம்மதமே தேவை என்பதை தெரிவித்து, அவளிடம் பேசச் சொல்லி அனுப்பினார் யாஞ்சவல்கியர். மித்திரரும் சுலபையும் அவரின் ஆசிரமத்துக்குச் சென்று அவரின் முதல் மனைவி காத்யாயினியை பார்த்ததுமே அவள் அனைத்தையும் புரிந்து கொண்டாள். குனிந்து அவள் கால்களைத் தொட்டு, ‘உங்களுக்கு இளையவளாக இங்கிருக்க அருள வேண்டும்’ என்றாள். அவளின் உண்மையான நோக்கை புரிந்து கொண்ட காத்யாயினி அவளை தழுவி ஆசிர்வதித்தாள்.

யாக்ஞவல்கியர் தன் மனைவி மற்றும் மைந்தரின் ஒப்புதலுடன் மாணவர் புடைசூழ சுலபையை மணம் புரிந்தார். அவள் பிருஹதாரண்யக குருகுலத்தில் இரண்டாவது ஆசிரிய மனைவியாக மைத்ரேயி என்னும் பெயருடன் அமைந்தாள்.

யாக்ஞவல்கியரின் மனைவியான மைத்ரேயி, அவரிடம் ஆவலுடன் வேத சாஸ்திரங்களைப் பயிலத் துவங்கினாள். காலம் செல்லச் செல்ல தேர்ச்சி பெற்றவள் ஆனாள். குருகுலத்தின் நலன்களை நோக்கத் தொடங்கியவள் செல்வம் வருவதையும் போவதையும் வழி நடத்தலானாள். யாக்ஞவல்கியருக்கு வலது கையாக விளங்கினாள். அவருக்காகக் காத்திருந்த பலமுடிவுகள் அவளால் எடுக்கப்பட்டன. அவள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சிறந்த முடிவாக இருந்தது. அவளால் யாக்ஞவல்கியரின் பணிச் சுமைகள் குறைந்தன. நாளடைவில் அவளே பிருஹதாரண்யகக் குருகுலத்தின் அனைத்துப் பிரிவினராலும் ஏற்கப்பட்ட முதல்வி என்றானாள். யாக்ஞவல்கியரின் நான்கு மைந்தரும் அவளையே முதன்மை அன்னை என கருதினர்.

கூடவே மைத்ரேயி காத்யாயனியுடன் நேரம் செலவழிப்பதிலும் அவளுக்கு வேண்டியன செய்வதிலும் குறை வைப்பதில்லை. மூத்தவளுடன் அவள் மேலும் மேலும் அணுக்கமாகிக் கொண்டிருந்தாள். யாக்ஞவல்கியர் நாளெல்லாம் ஓடிச் செய்த பணிகளை அரை நாளிலேயே முடித்து இல்பேணவும் அவளுக்கு நேரமிருந்தது. இரவுகளில் மூத்தவளுடன் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து அவளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் அவள் வழக்கம்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், யாக்ஞவல்க்கியர் தான் உலக நியதிப்படி சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளப் போவதாகக் கூறினார். தான் செல்வதற்கு முன் இரு மனைவியரையும் அழைத்து தன்னுடைய சொத்துக்களை சம பிரிவுகளாக்கி இரு மனைவிகளுக்கும் பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளித்து உங்கள் வாழ்க்கை துயரற்றதாக ஆக வேண்டும் என்றும், நீங்கள் நிறைவடைய வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் என்றார்.

தனக்குப் பின் தனது குருகுலத்தையும் தன் குலத்தையும் செம்மையாக மைத்ரேயியால் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும் என அவர் நம்பினார்.

மைத்ரேயி புன்னகை மாறாமல் ‘இவற்றை நீங்கள் ஏன் அளிக்கிறீர்கள்?’ என்றாள். ‘ஏனென்றால் இவற்றால் எனக்கு இனி பயனில்லை, நான் முக்தியை நோக்கி பயணிக்கப் போகிறேன்’ என்றார் யாக்ஞவல்கியர். ‘அப்படியென்றால் இங்கிருந்து பயனுள்ள எதை எடுத்துச் செல்கிறீர்கள்?’ என்றாள் மைத்ரேயி. அக்கேள்வியை எதிர்கொண்டதும் அவர் ஒருகணம் திகைத்தார் ‘நீ கேட்ட பின்னரே எண்ணினேன். மானுடன் மறுபிறவிக்கு கொண்டு செல்லக் கூடியவை இரண்டே, வினைப்பயனும் மெய்யறிவும். வினைப்பயன் தானாக உடன் வரும், மெய்யறிவு எடுத்துச் செல்லப்படவேண்டும்’.

நீங்கள் தந்திருக்கும் செல்வங்களால் நிரந்தர மகிழ்ச்சி எனக்குக் கிட்டுமா? என்றாள்.

இல்லை இதனால் வசதியாக வாழலாம் ஆனால் மோட்சத்திற்கு இட்டுச் செல்லாது. செல்வம் வந்தால் ஆசைகள் பெருகும், ஆசைகள் பெருகினால் பாவங்கள் செய்யத் தொடங்கிவிடுவோம்”

‘எனில் எனக்கு இது தேவை இல்லையே? நிரந்தர மகிழ்ச்சி தராத ஒன்று எனக்கு ஏன்? இது உங்களுக்கு பயன்படாது எனும் போது ‘பயனுள்ளவற்றை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள் என்றால் பயனற்ற பழையவற்றை எங்களுக்கு விட்டுச் செல்கிறீர்கள் என்றல்லவா பொருள்?’ என்றாள்.  

‘நான் அளிப்பவை இப்புவியில் கணவன் மனைவிக்கு அளிக்கக் கூடியவை அனைத்தும் அல்லவா? இவையே இவ்வாழ்வின் பொருள் என்பதனால்தான் பொருளென அழைக்கப்படுகின்றன’ என்றார் யாக்ஞவல்கியர்.

‘இவற்றில் என்றுமழியாதவை எவை?” என்று அவள் கேட்டாள். ‘அழிவதே பொருள்’ என்றார் யாக்ஞவல்கியர். ‘அழிபவை அழியாத ஒன்றை அளிக்க இயலுமா?’ என்றாள் மைத்ரேயி. ‘இல்லை, அவை அளிக்கும் அனைத்தும் அழிபவையே.’

‘அழியக் கூடிய ஒன்று எப்படி நிறைவை அளிக்க முடியும்? மாறா நிலையே நிறைவு எனப்படுகிறது’ என்றாள் மைத்ரேயி. ‘நிறைவை அளிக்கும் செல்வம் எது?’ என்று அவள் மீண்டும் கேட்டாள். ‘விடுதலை’ என்று அவர் சொன்னார். ‘விடுதலையை அளிப்பது எது?’ என்றாள் மைத்ரேயி. ‘கட்டியிருப்பது அறியாமை. அறிவே விடுதலையாகும்’ என்றார் யாக்ஞவல்கியர். ‘அறிவின் உச்சம் என்ன?’ என்றாள். ‘தன்னை அறிதல்’ என்றார் யாக்ஞவல்கியர். ‘முழுவிடுதலை எப்படி அடையப்பெறும்?’ என்றாள் மைத்ரேயி. ‘அறியும் தோறும் அறிதலே கட்டுகளாகின்றது. அறிவிலிருந்து அடைவதே முழுவிடுதலை’ என்றார்.

எதனால் நான் அம்ருதத்துவத்தை அடைய முடியாதோ, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? தாங்கள் எதை அறிய விரும்புகிறீர்களோ, அதை எனக்கு கூற வேண்டும்.” என்றாள் மைத்ரேயி.

யஞ்சவல்கியர் சிரித்துக் கொண்டே ‘நீ எப்பொழுதும் எனக்கு பிரியமானவளாகவே இருந்திருக்கிறாய். கணவனை ஒரு மனைவி காதலிப்பது, ஆத்மாவின் பொருட்டே அப்பிரியம் உண்டாகிறது. மனைவியை ஒரு கணவன் காதலிப்பதும், ஆத்மாவின் பொருட்டே. அதனாலேயே, புத்திரர்களும், செல்வமும் பிரியத்துக்குரியதாகிறது. எனவே, ஆத்மாவே பார்க்கப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும், நினைக்கப்பட வேண்டும். அறியப்பட வேண்டும்.

ஆத்மா ஒன்றை மட்டும் அறிந்து விட்டால், உலகில் அறிய வேண்டியது எதுவும் இல்லை. ஆத்மா அழிவற்றது. அப்பரம்பொருள் மாயைகளால் பல ரூபங்களை அடைந்தது. அது தான் பிரம்மம். ஆதியில்லாதது. முடிவில்லாதது. அகமில்லாதது. புறமில்லாதது என்றுரைத்தார். பின் அவர்களை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டார். ”நான் நிறைவுசெய்ய வேண்டிய பெரும் பணி உங்கள் இருவருக்கும் நானறிந்த மெய்யறிவை முழுதுமாக அளிப்பதே ஆகும்” என்றார். அவ்விருவரின் காதிலும் அவர்களுக்கு மட்டுமே கேட்கும் குரலில் ஊழ்கச் சொல்லை சொன்னார்

‘அஹம் பிரம்மாஸ்மி’

இவ்வாறான உரையாடலுக்குப் பின், யக்ஞவல்கியர் சந்நியாசம் மேற்கொள்கிறார். வாழ்வின் உண்மையை அறிந்து கொண்ட மைத்ரேயி, உலகப்பற்றையும் பொருள் ஆசையும் துறந்து தானும் தவ வாழ்க்கை மேற்கொண்டாள். தனது மிகுந்த அறிவால், வேதாந்தினி என்றும், பிரம்ம வாதினி என்றும் மைத்ரேயி அழைக்கப்பட்டுள்ளாள்.

இசைக்கலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com