11. வேலு நாச்சியார்

கண்ணிமைக்கும் நேரத்தில் அக்கூரிய குத்துவாள் ஓடிக் கொண்டிருந்த புலியின் காலில் செறுகி நின்றது.
11. வேலு நாச்சியார்

கண்ணிமைக்கும் நேரத்தில் அக்கூரிய குத்துவாள் ஓடிக் கொண்டிருந்த புலியின் காலில் செறுகி நின்றது. காயம்பட்டதில் புலியின் வேகம் மட்டுப்பட, தன் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருந்த மானின் தூரம் அதிகரித்தது. புலியிடமிருந்து தப்பி ஓடிவிட்டது மான். புலி நொண்டிக் கொண்டே காட்டில் மறைந்தது.

குத்துவாள் எங்கிருந்து வந்தது, மிகச் சரியாக எப்படி புலியின் உயிரைக் குடிக்காமல் சொல்லி வைத்தாற்போல் காலில் குத்தி வேகத்தை மட்டுப்பட வைத்தது? சற்று தூரத்தில் பதின் வயதுப் பெண்கள் ஆரவாரமும் சிரிப்புமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்திதான் மரத்தின் மீதிருந்து புலியை காயப்படுத்தியது.

அரண்மனைக்குத் திரும்பியவுடன் அந்த அழகுச் சிலை காட்டில் நடந்ததை தந்தையிடம் தன் செப்புவாயால் வருணித்துக் கொண்டிருந்தாள். அவளை அருகில் அமர்த்தி தலையை வருடியவாரே கேட்டுக் கொண்டிருந்த தந்தைக்கு பெருமையாகவும், அதே சமயம் தன் மகளுக்கு வாழ்க்கையின் நியதியை சொல்லிக் கொடுக்கும் கடமையை உணர்ந்தவருமாக பேசத் தொடங்கினார்.

‘உன் குறுவாள் வீச்சின் திறன் அறிந்தோம் மகளே. ஆனால் ஒன்றைப் புரிந்து கொள். உணவுச் சங்கிலியில் புலிக்கு மான் இறையாவதும் மானுக்கு புல் இறையாவதும் இயற்கையின் நியதி அம்மா. அதைத் தடுக்க நாம் யார். உன் செயலால் மான் காப்பாற்றப்பட்டிருக்கலாம் ஆனால் புலியின் உணவுக்கு அல்லவா அநீதி இழைத்திருக்கிறாய்?’

‘இது முறையல்ல தந்தையே, புலிக்கு உணவு வேண்டுமென்றால் இறந்த மானை சாப்பிடுவது தானே. ஏன் ஓடுகின்ற மானை துரத்தி அடிக்கிறது. என் கண் முன்னே யாரும் பாதிக்கப்படுவதை என்னால் சகித்திருக்க முடியாது’ என்று சொல்லியபடி உள்ளே ஓடும் மகளை சிறு முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் தந்தை.

வீரமும் விவேகமும் நிறைந்த அச்சிறு பெண்தான் வேலு நாச்சியார். பிற்காலத்தில் ஆங்கிலேயர்களின் காலணி ஆட்சிக்கு எதிராக தம் மக்களைக் காத்த வீர மங்கை. தன் கணவரின் மரணத்துக்கு துணிவுடன் போரிட்டு ஆங்கிலேயர்களை வென்று பழி தீர்த்தவர் இந்த தென்னாட்டு அரசி. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக களம் இறங்கி போரிட்ட முதல் பெண் வீரமங்கை வேலு நாச்சியார். ராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி- முத்தாத்தாள் தம்பதியருக்கு ஒரே பெண் வாரிசாக 1730-ம் ஆண்டு சக்கந்தி என்ற ஊரில் பிறந்தவர். ஆண்வாரிசு இல்லையே என்று குறைபடாமல் ஆண் பிள்ளைக்கு நிகராக சுதந்திரமும் போர் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்து தன் பெண்ணை வீராங்கனையாகவே வளர்த்தார் மன்னர் செல்லமுத்து சேதுபதி.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப வளரும் போதே தைரியமும் வீரமும் செறிந்து வளர்ந்தார் வேலுநாச்சியார். இளம் கன்று பயமறியாது என்பதும் ஒரு சொல்லாடல். ஆனால் வேலுநாச்சியார் இளம் வயதில் மட்டுமல்ல இறக்கும் வரையிலும் பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாமல் வாழ்ந்தவர். அவர் வயதை ஒத்த பெண்கள் பல்லாங்குழியும் அம்மானையும் ஆடிய வயதில் வேலுநாச்சியார் வாள் வீச்சு, கத்தி வீச்சு, வில்வித்தை, ஈட்டி எறிதல், குதிரையேற்றம் யானை ஏற்றம் என்று போர்ப்பயிற்சிகளில் ஆர்வமாகவும் தீவிரமாகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

படிப்பிலும் வேலுநாச்சியார் பெயர் பெற்றவர். ராமாயண மாகாபரத இதிகாசங்களும் உபநிஷதங்களும் அவருக்கு தலைகீழ் பாடம். அதுமட்டும் அல்லாது தமிழ் தவிர ஆங்கிலம் உருது உட்பட இன்ன பிற ஏழு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்ற பன்மொழி வித்தகர். சகலகலாவல்லி.

துணிவும் தைரியமும் தன் ரத்தத்தில் ஊற வளர்ந்தார் வேலு நாச்சியார். பருவ வயதடைந்ததும் அவரை திருமணம் முடிக்க விழைந்தனர். அவரின் அழகிலும் வீரத்திலும் அறிவிலும் தன் மனதை பறிகொடுத்த சிவகங்கை மன்னரான முத்து வடுகநாதர் வேலுநாச்சியாரை மணம் புரிந்தார். திருமணத்துக்குப் பின் தன் தாய் வீடான சத்கந்தியை விட்டு சிவகங்கை சென்று அந்நாட்டின் பட்டத்து ராணியாக சுடர் மிகுந்து விளங்கினார். அங்கே அவரது இல்லற வாழ்க்கை இனிதே தொடங்கியது. வெகு சிறப்பாக வேலுநாச்சியாரும் முத்துவடுகநாதரும் சிவகங்கை சீமையை ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களின் அன்புக்கு அடையாளமாக ஒரு மகள் பிறந்தாள். வெள்ளை நாச்சியார் என்று பெயர் சூட்டி சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர்.   அவர்களது நல்லாட்சிக்கு பிராதானி தாண்டவராயப் பிள்ளை மற்றும் மருது சகோதரர்கள் பக்க பலமாய் துணையிருந்து வந்தனர். இப்படியாக மக்களையும் நாட்டு நலன்களையும் தன் இரு கண்கள் எனக் கருதி ஆட்சி செலுத்தி வந்த நேரத்தில் விதி தன் கோர விளையாட்டைத் தொடங்கியது.

முத்து வடுகநாதர் தன் ஆட்சியை காலணி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர மறுத்துவிட்டார். ஆற்காட்டு நவாபிற்கு கப்பமும் கட்டுவதில்லை. என் நாடு என் மக்கள் நான் உனக்கு எதற்கு கப்பம் கட்ட வேண்டும் என்று கப்பம் கேட்டு வந்த சிப்பாய்களை வெளியேற்றினார். இதனால் பிரிட்டீஷ் பிரபுக்களும் நவாபும் முத்துவடுக நாதரின் மேல் தீராத பகைமை கொண்டிருந்தனர். முத்து வடுகநாதரும் சாமான்ய ஆள் அல்ல. அவரும் வீரத்துக்கும் விவேகத்துக்கும் பெயர் போனவர். ஆங்கிலேயர்களும் நவாபும் வடுகநாதரை நேருக்கு நேர் போரில் சந்திக்க திராணி அற்றவர்களாக இருந்தனர். அவரை எப்படியாவது சதி செய்து அப்புறப்படுத்த தகுந்த சமயம் பார்த்து காத்திருந்தார்கள்.

வடுகநாதர் இறை வழிபாட்டிற்கு காளையார் கோயில் சென்ற நேரத்தில் அவரைத் தாக்க திட்டம் தீட்டினான் நவாப். அவனுக்கு ஆங்கிலேயப் படை உதவ முன் வந்தது. நவீன ரக ஆயுதங்களை வைத்து வடுக நாதர் எதிர்பாரத நேரத்தில் அவரை சுற்றி வளைத்து கோரமாகத் தாக்கிக் கொன்றனர். தன் கணவன் இறந்த செய்தி கேட்டு சொல்லொண்ணாத் துயரம் அடைந்தார் வேலுநாச்சியார். தன் கணவனது உடலை பார்த்துவிடத் துடித்து உடனே காளையார் கோயில் நோக்கி குதிரையில் சென்றார். அவரையும் தாக்கிக் கொல்ல நவாபின் படை காத்திருந்தது. ஆனால் அப்படைகளால் வேலு நாச்சியாரை ஒன்றும் செய்ய முடியவில்லை. கணவனை இழந்த கோபத்தில் நாச்சியார் ஆவேசமாக போரிட்டு அப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.

காளையார் கோயில் சென்று பார்த்த நாச்சியாரின் இதயம் சுக்கு நூறாக உடைந்தது. கண் முன்னே கணவனின் சடலம் வெட்டுபட்டும் குண்டடி பட்டும் கிடந்தது. அருகில் ஒரு பாவமும் அறியாத இளைய ராணி கௌரி நாச்சியாரும் வெட்டுண்டு கிடந்தார். வேலு நாச்சியார் அங்கேயே கணவனின் சிதையில் தானும் வீழ்ந்து உடன் கட்டை ஏறத் துணிந்தார். ஆனால் அவரது வீரமும் வைராக்கிய மனமும் தன் கணவனைக் கொன்றவனை பழி வாங்கியே தீர வேண்டும் என சபதம் பூண்டது. அரசனும் அரசியும் இல்லாத நாட்டை நவாபும் ஆங்கிலேயப் படையும் கைப்பற்றிக் கொண்டன. கோட்டையும் அரண்மனையும் எதிரியின் வசமானது. எதிரிப் படைகளில் இருந்து தப்பி மருது சகோதரர்களின் உதவியுடன் வேலுர் வழியாக திண்டுக்கல் சென்றார்.

அவரது ராஜ தந்திரம் கணக்கு போட்டது. நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும் பொதுவான எதிரி ஹைதர் அலி. அவரிடம் படை உதவி கேட்பது என்று முடிவெடுத்தார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் தங்கியிருந்தார். அவரது அரண்மனை வாசலில் வேலு நாச்சியாரின் படை வீரர்கள் மூன்று பேர் காத்திருப்பதாக தகவல் அறிந்து உள்ளே அனுப்பச் சொன்னார் ஹைதர் அலி.

என்ன விஷயம் எனக் கேட்க, படை உதவி கேட்டு ராணி நாச்சியார் கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறி ஒரு வீரன் கடிதத்தை ஹைதர் அலியிடம் கொடுத்தான். அவனிடம் உங்கள் ராணி வரவில்லையா எனக் கேட்க. தன் தலைப்பாகையை கழற்றியதும் அவ்வீரன் ராணி வேலு நாச்சியாராக இருப்பதைக் கண்டு திகைத்துப் போனார். அது மட்டுமல்லாது தன்னுடைய வேதனைகளையும் பிரச்னைகளையும் மிகச் சரளமாக உருதுவில் விளக்கிக் கூறினார். தனக்கு அவர் உதவி தேவை என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார் வேலு நாச்சியார். தெளிவாக உருதுவில் வேலுநாச்சியார் பேசியதைக் கேட்ட ஹைதர் அலி ஆச்சரியம் அடைந்தார். அவரது உத்தியையும் புத்திக்கூர்மையும் வீரத்தையும் கண்டு மகிழ்ந்தவர் அவருக்கு உதவ ஒப்புக்கொண்டார்.

வேலுநாச்சியார் விருப்பாட்சி  மற்றும் திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாக தங்கி படைகளைத் திரட்டத் தொடங்கினார். போர் புரியும் உத்திகளையும், படைப்பிரிவுகளையும் அங்கிருந்தபடியே ஏற்படுத்தி ஆங்கிலேயரையும் நவாபையும் தாக்க திட்டம் தீட்டினார். அவரின் பிராதான லட்சியமே ஆங்கிலேயப்படையை எதிர்ப்பதும், நவாபை பழிவாங்கி மறுபடியும் சிவகங்கைக் கோட்டையில் தங்களது அனுமன் கொடியை பறக்க விடுவதுமாக இருந்தது. சதா அச்சிந்தனையிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

வேலு நாச்சியார் தனது படைகளை 'சிவகங்கை பிரிவு’, 'திருப்புத்தூர் பிரிவு’ ‘காளையார் கோயில் பிரிவு” என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். சிவகங்கைப் பிரிவிற்கு தனது தலைமையிலும், திருப்புத்தூர் பிரிவிற்கு நள்ளியம்பலம் என்பவர் தலைமையிலும், காளையார் கோயில் பிரிவிற்கு மருது சகோதரர்கள் தலைமையிலும் படைகளைப் பிரித்து அனுப்பி வைத்தார்.

அரண்மனையில் விஜயதசமி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆங்கிலேயப் படை வெளியில் காவல் காக்க நாவாப் கோட்டைக்குள் இருந்தான். விழாவிற்கு செல்லும் பெண்கள் கூட்டத்தோடு கூட்டமாக வேலுநாச்சியாரும் அவரது பெண் படைப் பிரிவும் மாறுவேடத்தில் ஆடைக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்துச் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர்.  அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள் என்றும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.  குயிலியை உலகின் முதல் மனித ஆயுதம் என்று கூறலாம்.

இவரது படையில் இருந்த மற்றொரு வீராங்கனையும் வேலு நாச்சியாருக்காக தன் இன்னுயிரை ஈந்தார். உடையாள் எனும் வீராங்கனை வேலுநாச்சியார் எங்கிருக்கிறார் எனக் கேட்டு ஆங்கிலேயப் படைகள் பலவாறு துன்புறுத்திய போதும் பதிலேதும் கூறாமல் அவரைக் காட்டிக் கொடுக்காமல் உயிர் நீத்தார். வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார் நாச்சியார்.. இந்தக் கோவில் இன்றும் இருக்கிறது. இது கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது.

1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது. வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார். சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.

இவரது ஆட்சியின் போது சிவகங்கை பல முன்னேற்றங்களைக் கண்டது. படையெடுப்பால் சீரழிந்த கோட்டைகள் உறுதியாக மீண்டும் சீரமைப்பு கண்டன. குளங்கள் ஆறுகள் எல்லாம் வெட்டப்பட்டு தூர் வாரி நீர்வளம் மேம்படுத்தப்பட்டது. துனைக்கால்வாய்களை நிறைய ஏற்படுத்தி நீர் பாசனம் விரிவாகி விவசாயம் செழிப்பாகியது.

பின்னாளின் தனது மகளின் மரணத்தால் மனமுடைந்த வேலு நாச்சியார் இதய நோயாளி ஆனார். தன்னுடைய கடைசி காலத்தை விருப்பாட்சி அரண்மனையிலேயே கழித்தார். டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் சிப்பாய்கலகத்தின் மூலமாகவே வெளிப்பட்டது. ஜான்சி ராணி காலத்துக்கு முன்பே வேலு நாச்சியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் நாட்டு மக்களைக் காக்க சுதந்திரப் போராட்டத்தை துவங்கிவிட்டார். வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

வடக்கே ஜான்சி ராணி தோன்றிய ஒரு நூற்றாண்டுகக்கு முன்பே தோன்றியவர் வீரமங்கை வேலு நாச்சியார். கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறி தானும் மடியும் வழக்கம் உடைய காலகட்டத்தில் வாழ்ந்தும் கூட, தன் கணவனைக் கொன்றவனை பழி தீர்த்து தன்னை விட அதிகளவு படைகளையும் நவீன ஆயுதங்கள் குண்டுகள் என வைத்திருந்த ஆங்கிலேயரை மிகத் தைரியமாகவும் துனிச்சலாகவும் எதிர் கொண்டு போராடி வெற்றியும் பெற்றவர் வேலு நாச்சியார். வட தேசத்து ஜான்சிராணியை கொண்டாடும் நாம் நமது நாட்டு தமிழ் போராளியும் வீர மங்கையுமான வேலு நாச்சியாரைக் குறித்தும் பெருமை கொள்வோம்.

இசைக்கலாம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com