துப்பாக்கி முனை (American Sniper)

கிறிஸ் கய்ல். நம் எல்லோருக்கும் தெரிந்த கிரிக்கெட் வீரரில்லை. துப்பாக்கி வீரர். அமெரிக்காவின் ஸீல் (SEAL) படை வீரர்.


கிறிஸ் கய்ல். நம் எல்லோருக்கும் தெரிந்த கிரிக்கெட் வீரரில்லை. துப்பாக்கி வீரர். அமெரிக்காவின் ஸீல் (SEAL) படை வீரர். ஒசாமா பின் லேடனை நள்ளிரவில் வீடு புகுந்து சுட்டுக்கொன்றார்கள் அல்லவா? அவர்களேதான். SEa, Air, Land ஆகிய சொற்களின் சுருக்கம்தான் SEAL. கடல், நிலம், வானம் என எங்கே விட்டாலும் கபடி ஆடுவார்கள். அவ்வளவு பயிற்சிபெற்ற சகலகலாவல்லவர்கள். இந்தப் படையில் அவ்வளவு எளிதில் யாரும் சேர்ந்துவிட முடியாது. அப்படியே சேர்ந்தாலும், அதன் பயிற்சிகளை முடிப்பது சாதாரணக் காரியமில்லை என்கிறார்கள். பெண்டு நிமிர்த்திவிடுவார்களாம்.

கிறிஸ் கய்லின் அப்பா ஒரு ஒழுக்கவாதி. தேசபக்தி, ஒழுக்கம் என்பதையெல்லாம் தனது குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே மந்திரம் ஓதுவதுபோல் ஓதிக்கொண்டிருந்தவர். டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்த கய்ல், ஆரம்பத்தில் அமெரிக்க ராணுவத்தில் சேரவெல்லாம் விரும்பவில்லை. Cowboy-ஆகச் சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன? அமெரிக்காவின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்களைப் பார்த்து மனமாற்றம் ஏற்பட்டு, ஏதோ ஒருகட்டத்தில் ஸீல் படையில் சேர்ந்துவிட்டார்.

இவரது கதையைத் தொடர்வதற்கு முன்பாக, இன்னொருவரின் கதையைச் சொல்லிவிட வேண்டும். அந்த இன்னொருவர், கிறிஸ் போன்ற ஹீரோவெல்லாம் இல்லை. சாமானிய மனிதர். அலுவலக நண்பர். மாலை ஏழு மணிக்கு மேல் கோடி ரூபாய் கொடுத்தாலும் அலுவலகத்தில் இருக்கமாட்டேன் என்று காலையில் வந்தவுடனே சொல்லிவிடுவார். அவருடன் பழகிய ஆரம்ப நாள்களில் உண்மையாகத்தான் சொல்கிறார் என நினைத்துக்கொள்வேன். ஆனால், ஆறரை மணிவரைக்கும் நகர்வதற்கான எந்த அசைவும் இல்லாமல் கணினியை வெறித்துக்கொண்டிருப்பார்.

‘கிளம்பலையா?’ என்று யாராவது கேட்டுவிடக்கூடாது. கேட்டால் அவ்வளவுதான். பதறத் தொடங்கிவிடுவார். வேலையும் முடிந்திருக்காது. கிளம்ப வேண்டும் என்கிற ஆசையும் வடிந்திருக்காது. பினாத்திக்கொண்டே இருப்பார். அவருக்கான பிரச்னை மிக எளிமையானது. ஒவ்வொரு நாளும் அவரது மனைவி ‘இன்று சீக்கிரம் வந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டு அனுப்பிவைப்பாராம். இவரும் மண்டையை ஆட்டிவிட்டு வந்துவிடுகிறார். ஆனால், வேலை இழுத்துப் பிடித்துவிடுகிறது. அலுவலகத்தில் வந்து வீராப்பாக சவால் விடாமலாவது இருக்கலாம். ஒவ்வொருவரிடம் சொல்லி வகையாக மாட்டிக்கொள்கிறார்.

வீட்டில் சற்று பயப்படும் அத்தனை ஆண்களுக்கும் இந்தப் பிரச்னை உண்டு. இந்த சாமானியரைப் போலவேதான் கிறிஸ்ஸூக்கும் பிரச்னை. கிறிஸ், ஸீல் படை வீரராக ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் செல்வதற்கு சில தினங்கள் முன்பாகத்தான் திருமணம் நடந்தது. டயா என்பது மனைவியின் பெயர். ‘போர், சண்டையெல்லாம் போதும்.... விட்டுட்டு வந்துடுங்க’ என்று கேட்கத் தொடங்கியிருந்தார். சமாதானப்படுத்திவிட்டு போருக்குச் சென்ற கிறிஸ் திரும்ப வரும்போது முதல் குழந்தை பிறந்திருந்தது. ‘இனியாவது இங்கேயே இருந்துடுங்களேன்’ என்று மனைவி மீண்டும் கெஞ்சினார். இந்த முறையும் சமாதானம் செய்துவிட்டு போருக்குச் சென்றார். இந்த முறை இரண்டாவது குழந்தையும் பிறந்திருந்தது. இப்படி இவர் போருக்குச் செல்வதும், குடும்பத்தினரின் அழுத்தம் அதிகரிப்பதாகவுமே இருந்து வந்தது. துப்பாக்கியைப் பார்க்க வேண்டுமா? தொட்டிலை ஆட்ட வேண்டுமா? வேலையா? குடும்பமா? அமெரிக்காவா? ஈராக்கா என்று சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் நடத்தாத குறைதான்.

இது கிறிஸ் கய்லுக்கு மட்டுமான அழுத்தம் இல்லை. ஈராக்கில் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தபோது பெரும்பாலான அமெரிக்க வீரர்களுக்கும் இந்த அழுத்தம் இருந்தது. நாடு திரும்ப விரும்புவதாக அடிக்கடி செய்திகள் வந்துகொண்டே இருந்தன. போர் முடிவுறுவதாகவே தெரியவில்லை. எங்கிருந்தோவெல்லாம் தாக்குதல்கள் வந்துகொண்டிருந்தன. வீரர்கள் சலிக்கத் தொடங்கியிருந்தார்கள். திடீரென்று அமெரிக்காவின் பெருந்தலைகள் போர்க்களத்துக்கு நேரடியாகச் சென்று அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்திவிட்டு வருவார்கள்.

வீரர்கள், நாடு திரும்ப விரும்புவதற்கான காரணம் வெறும் உயிர் பயம்தான் என்று சொல்லிவிட முடியாது. பல மாதங்களாக அந்நிய தேசத்தின் வெக்கையிலும் குண்டுப் புகையிலும் குடும்பத்தையும் உறவுகளையும் விட்டுவிட்டுப் போரிடுகிறார்கள். தன்னுடன் இருந்தவன் திடீரென்று மனித வெடிகுண்டுத் தாக்குதலிலோ அல்லது எங்கிருந்தோ வரும் துப்பாக்கியின் ரவையிலோ உயிரை இழக்கிறான். அழுத்தம் கூடத்தானே செய்யும்? மற்றவர்களை அதே இடத்தில் விட்டுவிட்டு, இறந்தவனின் பிணம் மட்டும் தாய்நாடு திரும்பும். இந்த மரணச் செய்திகளைக் கேள்விப்படும் தனது குடும்பம் எதையெல்லாம் யோசிக்கும் என்றெல்லாம் போர்வீரர்கள் நினைக்கும்போது, தம்மையும் அறியாமல் பினாத்தத்தானே செய்வார்கள்?

கய்ல் பினாத்துவதெல்லாம் இல்லை. இது தனது கடமை என்று நினைக்கிறார். தாய்நாட்டுக்காக போராட வேண்டியது அவசியம் என்பது அவரது நிலைப்பாடு. ‘இவ்வளவு நாள் நீங்க போராடிட்டீங்க... இனி வேற யாராச்சும் பொறுப்பு எடுத்துக்கட்டும்’ என்பது அவரது மனைவியின் நிலைப்பாடு. இந்த இரு எதிர்துருவங்களும்தான் கிறிஸ் மீதான அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

கிறிஸ் கய்லின் வாழ்க்கையை அப்படியே சித்திரப்படுத்தும் American Sniper படம், சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டிருக்கிறது. வழக்கமான ஹாலிவுட் படங்களில் இருக்கும் அதிரடிகள் மட்டுமில்லாமல், அவரது மனைவி, குடும்பம், அவர்களைப் பிரிவதில் அவருக்கு உண்டாகும் அழுத்தம் என எல்லாவற்றையும் திரைக்கதையின் போக்கோடு சேர்த்து படமாக்கியிருக்கிறார்கள். ஏன், கிறிஸ் கய்லின் கதையைப் படமாக்க வேண்டும்? எவ்வளவோ வீரர்கள் இருக்கிறார்கள் அல்லவா? இருக்கிறார்கள்தான். ஆனால் கிறிஸ், பத்தோடு பதினொன்று என்கிற சாதாரணப் போர் வீரன் இல்லை. எட்டு வயதிலேயே அவனது அப்பா துப்பாக்கியைக் கையில் கொடுத்து சுடச் சொல்லியிருக்கிறார். அப்பொழுதிருந்தே அதிரடிதான். அதிகாரப்பூர்வமான கணக்குப்படி மட்டும், நூற்று அறுபது பேர்களை போர்க்களத்தில் சுட்டுத் தள்ளியிருக்கிறார். ஆனால், கணக்கு எப்படியும் இருநூறைத் தாண்டும் என்கிறார்கள். வேறு எந்த அமெரிக்க வீரனைவிடவும் இதுதான் அதிக எண்ணிக்கை. குருவி சுடுவதுபோலச் சுட்டுத்தள்ளியிருக்கிறார் போலிருக்கிறது.

ஈராக்கின் வீதிகளில், தீவிரவாதிகளைத் தேடி வீடு வீடாக ஒரு படை நுழையும். பெரும்பாலான சமயங்களில் கிறிஸ் அந்தப் பகுதியின் உயரமான கட்டடம் ஒன்றில் ஏறி துப்பாக்கியை ஏந்தியபடி படுத்துக்கொள்வார். தனது படை நடமாடும் பகுதிகளில் யாரேனும் சந்தேகத்துக்கு இடமாக அசைந்தால், ட்ரிக்கரை அழுத்துவதுதான் வேலை. கிறிஸ்ஸின் கண்களிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடிவதில்லை என்பதாலும், எவ்வளவு தூரத்திலிருந்தும் சுட்டுத் தள்ளுகிறார் என்பதாலும், அவரை மற்ற வீரர்கள் கொண்டாடுகிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஒருவனைக் கிறிஸ் சுட்டுக்கொன்றிருக்கிறார். இதுதான், தூரத்தைப் பொறுத்தவரை இதுவரையிலுமான சாதனை.

கொன்றுவிட்டு எல்லா நேரத்திலும் கிறிஸ் சந்தோஷமாக இருப்பதில்லை. கிறிஸ் முதன் முதலில் சுட்டுக்கொன்றது ஒரு சிறுவனைத்தான். முன்னேறி வரும் அமெரிக்கப் படை மீது வீசுவதற்கு, தான் ஒளித்து வைத்திருக்கும் கையெறி ஏவுகணை ஒன்றை தனது மகனிடம் ஒரு தாய் கொடுக்கிறாள். அவனுக்குப் பத்து வயதுக்குள்தான் இருக்கும். அவன் முன்னேறும்போது கிறிஸ் அவனைச் சுட்டுக் கொல்கிறார். அவன் விழுந்தவுடன், அந்த ஏவுகணையை அந்தத் தாய் தூக்கி வீச முயல்கிறாள். அவளையும் சுட்டுத் தள்ளுகிறார். மிகுந்த மனப்போராட்டத்துக்குப் பிறகுதான் சுடுகிறார். ஆனால், சுடவில்லையென்றால் பல வீரர்களை அந்த ஏவுகணை காவு வாங்கிவிடும். என்ன செய்வது? கிறிஸ்ஸின் ஆட்காட்டி விரல் துப்பாக்கியை அழுத்துகிறது. இந்தச் சுடுதலுக்குப் பிறகு, அவரது துப்பாக்கி விளையாட்டு ஆரம்பமாகிறது. சகவீரர்கள் அவரை Legend என்று அழைக்கத் தொடங்குகிறார்கள்.

மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம் இது. கிறிஸ் கய்ல், அமெரிக்கப் படையில் சேர்ந்ததில் இருந்து, அவர் படையை விட்டு வெளியேறுவது வரையிலான கதை. ப்ராட்லி கூப்பர் கய்லாக படம் முழுவதும் தூள் கிளப்பியிருக்கிறார். ஆஸ்கர் விருதுக்கு ஏகப்பட்ட பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்ட படம் இது. ஆனால் ஒரு பிரிவில்தான் விருது வாங்கியது.

அமெரிக்கா திரும்புவதும் மீண்டும் ஈராக் செல்வதுமாகவும் இருக்கும் கிறிஸ், ஈராக்கில் நடைபெறும் ஒரு போரின்போது வசமாக சிக்கிக்கொள்கிறார். அது ஒரு உயர்ந்த கட்டடம். அந்தக் கட்டடத்தில் இருந்துதான் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு தீவிரவாதியைப் போட்டுத் தாக்குகிறார். குண்டு சரியாகப் பாய்ந்து, அவன் போய்ச் சேர்ந்துவிடுகிறான். ஆனால், திமுதிமுவென்ற கூட்டம் அந்தக் கட்டடத்தை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது. அமெரிக்க வீரர்கள் திணறிப்போகிறார்கள். தான் முடிந்துவிடுவோம் என்கிற மனநிலைக்கு கிறிஸ் வந்து சேர்கிறார். மனைவியை அழைத்து ‘வீட்டுக்கு வரத் தயாராகிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் சண்டையிடுகிறார். மிகப்பெரிய திணறலுக்குப் பிறகு தப்பித்து வருகிறார்கள். அதுதான் கிறிஸ் கலந்துகொண்ட கடைசிப் போர்க்களம்.

வீடு திரும்பியவருக்கு, மனம் போர்க்களத்திலேயே இருக்கிறது. வீட்டுக்குப் பக்கத்தில் யாரோ ட்ரில்லிங் மெஷினில் துளையிடுவதுகூட போர்க்களத்தை ஞாபகப்படுத்துகிறது. தன்னால் ராணுவம் சம்பந்தப்படாத வேலையை நினைத்துப் பார்க்கவே முடியாது எனக் கருதியவரை, ஒரு மனநல ஆலோசகர்தான் ஆற்றுப்படுத்துகிறார். போர்க்களங்களில் கை கால்களை இழந்த வீரர்களுக்குப் பயிற்சியளிக்கச் சொல்கிறார். அவர்களுக்கும், இதுவகையில் மன ஆறுதல். கிறிஸ் சம்மதிக்கிறார். அதை செய்யத் தொடங்குவதாகப் படம் முடிகிறது.

அதற்கு பிறகு, க்றிஸ் என்னவானார் என்று தேடத் தொடங்கினேன். இறந்துவிட்டார். முன்னாள் படை வீரன் ஒருவனை அழைத்துச் சென்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் போர் வீரன் கிறிஸ்ஸை சுட்டுக் கொன்றுவிட்டான். அந்தப் போர் வீரன், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தவன். ஏற்கெனவே மனநிலை சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தானாம். அவன் கையில் துப்பாக்கியைக் கொடுத்திருக்கிறார்கள். குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகிவிட்டது. கிறிஸ்ஸின் இறுதி அத்தியாத்தை எழுதி முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

கிறிஸ்ஸின் இறுதி ஊர்வலத்தின்போது, சாலையின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கிறார்கள். அமெரிக்காவில் இது ஒரு அபூர்வம். பெரிய நாயகர்களுக்கு மட்டும்தான் இவ்வளவு பேர் கூடுவார்களாம். கிறிஸ் தன்னை அமெரிக்காவின் நாயகனாக மாற்றிக்கொண்டவர். அவரது மனைவி டயா, குடும்பங்களுக்காகவும் பெண்களுக்காகவும் செயல்படும் களப்பணியாளாராக இருக்கிறார்.

                                ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com