எங்கோ ஒளிந்திருக்கும் வாழ்க்கை (The Good Lie)

பால்ய காலத்தில், பரமன் என்றொரு நண்பன் இருந்தான். முரட்டுத்தனமான தோற்றமுடையவன். அவனது அம்மாவும் அப்பாவும் விவசாயக் கூலிகள். மூன்றாம்

பால்ய காலத்தில், பரமன் என்றொரு நண்பன் இருந்தான். முரட்டுத்தனமான தோற்றமுடையவன். அவனது அம்மாவும் அப்பாவும் விவசாயக் கூலிகள். மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார்கள். அவர்களாகவெல்லாம் நிறுத்தவில்லை. இவன்தான் படிக்க முடியாது என்று சொல்லிவிட்டான். அதன் பிறகு, எப்பொழுதாவது பெற்றவர்களுடன் சித்தாள் வேலைக்குச் செல்வான். ஆனால், பெரும்பாலான நாள்களில் தன்னந்தனியாகச் சுற்றிக்கொண்டிருப்பான். நாங்கள் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும்போது, அவன் உண்டிவில்லைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவான். அவனைப் பார்ப்பதற்குப் பொறாமையாக இருக்கும். வயல்வெளிகள், வாய்க்கால் வரப்பு, மேட்டாங்காடு என்று ஓர் இடம் பாக்கியில்லாமல் அலைந்து அணிலோ, முயலோ, காடையோ வேட்டையாடுவதுதான் வேலை. அத்தனை இடங்களிலும் வெறும் கால்களுடன் சுற்றுவான். செருப்பு அணியாமல் நடந்து நடந்து, அந்த வயதிலேயே காய்ப்பு ஏறிய பாதங்கள் அவனுக்கு. சொரசொரவென்று இருக்கும். இவனால் மட்டும் எப்படி வெறியெடுத்தவனைப்போலத் திரியமுடிந்தது என்ற ஆச்சரியம் இன்னமும் இருக்கிறது.


பரமனின் நினைவுகளை ஒரு படம் கிளறிவிட்டுவிட்டது. The Good Lie. பரமனின் தோற்றமுடைய ஒரு பையன் நடித்திருக்கிறான். சூடான் தேசத்து பையன் அவன். படமே சூடான் பற்றியதுதான். உலகில், கடைசியாக உதித்த நாடான தெற்கு சூடான்தான் கதைக்களம். 1983-ம் ஆண்டு, சூடானில் உள்நாட்டுக் கலவரம் வெடித்தது. வடக்கு சூடானிடமிருந்து தங்களுக்கு சுதந்தரம் வேண்டுமென போராடிக் கொண்டிருந்த தெற்கு சூடான்காரர்களை, வடக்கத்திக்காரர்கள் ராணுவ வீரர்களை விட்டு அடிக்கத் துவங்கினார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது - சூடானுக்கு வருமானம் தரக்கூடிய எண்ணெய் வளத்தில் 75 சதவீதம் தெற்கு சூடானில்தான் இருக்கிறது. தனி நாடு ஆகிவிட்டால், தங்கள் வருமானம் போய்விடும் என்று சூடான் அரசும் ராணுவமும் பயப்பட்டன. அமெரிக்கா விடுமா? அதுவும், எண்ணெய் வளமிகுந்த பகுதி. தெற்கு சூடான் உருவாவதற்கு முழு ஆதரவையும் தந்தது. தனி நாடு ஆகிவிட்டால், தனது அகோர எண்ணெய்ப் பசிக்கு இரண்டு ஸ்பூனாவது தெற்கு சூடானிலிருந்து கிடைக்கும் என்கிற நப்பாசைதான்.

1983-ல் ஆரம்பித்த சண்டை, கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரமடையத் தொடங்கியது. சூடானின் போர்வீரர்கள், தெற்குப் பகுதிக்குள் புகுந்து கண் மண் தெரியாமல் சுட்டுத் தள்ளினார்கள். கலவரக்காரர்கள் என்று பெயரிட்டு, பொதுமக்களையும் சலித்துத் தள்ளினார்கள்.

இந்தப் படம், அந்தப் புள்ளியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. தெற்கு சூடானில் அதுவொரு சந்தோஷமான கிராமம். அந்தக் கிராமத்தில் புகுந்த ராணுவ வீரர்கள், துப்பாக்கிகளின் ரவைகளுக்கு வேலை தருகிறார்கள். பெரியவர்கள் அத்தனை பேரும் சுருண்டு விழும் குருவிக் குஞ்சுகளாகிறார்கள். சற்று தொலைவில் விளையாடிக் கொண்டிருந்த பொடியன்கள் மட்டும் தப்பித்துவிடுகிறார்கள். இனி அந்த இடத்தை விட்டு ஓடியாக வேண்டும். தியோ என்கிற சற்றே பெரிய பையனின் தலைமையில் குழந்தைகள் தப்பிக்கிறார்கள். நூற்றுக்கணக்கான மைல்கள் வடக்காக நடந்தால் எத்தியோப்பியாவை அடைந்துவிடலாம். ஆனால் நடப்பது அவ்வளவு சுலபமில்லை. பாலைவனம். தண்ணீர் கிடைப்பதுகூட சிரமம்தான். வழியில் சிறுத்தைகளைத் துரத்திவிட்டு, அவை தின்றுகொண்டிருந்த மான்கறியைத் தின்றுவிட்டு நடக்கிறார்கள். வழியிலேயே, சிறுவர்களில் ஒருவன் இறந்துபோகிறான். அடக்கம் செய்வதெல்லாம் இல்லை. சடலத்தை புதருக்குள் வீசிவிட்டு வருகிறார்கள்.


பரமனும் இப்படியொரு கதையைச் சொல்லியிருக்கிறான். பரமன், இலங்கையின் வவுனியாவிலிருந்து வந்தவன். அப்பொழுது இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தது. உயிருக்குப் பயந்து அகதிகளாக வந்தவர்களில் அவனும் ஒருவன். எங்கள் ஊரில் ஓர் அரிசி ஆலையில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் தமிழ் உச்சரிப்பு உருவாக்கியிருந்த ஈர்ப்புக்காகவே பரமனுடன் பழகத் தொடங்கியிருந்தேன்.  நிறைய பேசுவான். இலங்கையிலிருந்து வரும்போது ஒரு படகில் வந்தார்களாம். பெரிய குழு அது. ஒரு பெண்மணி தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டு படகு ஏறியிருக்கிறாள். நள்ளிரவுப் பயணத்தில், குழந்தையின் முகத்தில் சாரல் அடிக்கிறது என்று ஒரு பாலித்தீன் காகிதத்தை வைத்து மறைத்திருக்கிறாள். எப்படி மூடினாள் என்று தெரியவில்லை. அவளும் மற்றவர்களும் யாரும் அறியாமலே, மூச்சுத் திணறிச் செத்துப்போனதாம் அந்தக் குழந்தை. நடுக்கடலில் கதறலோடு மீனுக்கு இரையாக்கிவிட்டு வந்ததாகச் சொன்னான்.

அதேபோலத்தான் இந்தச் சூடான் குழந்தைகளும். பாலைவனத்தில் சிங்கத்துக்கோ சிறுத்தைக்கோ அந்தக் குழந்தையின் உடலை வீசிவிட்டு வருகிறார்கள். எத்தியோப்பியாவின் எல்லையை பொடியன்கள் நெருங்கும்போது, அங்கேயிருந்து ஒரு பெரும் குழாம் திரும்பி வந்துகொண்டிருக்கிறது. எல்லையில் எத்தியோப்பிய படைவீரர்கள் நிற்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள், நாடு தாண்டுபவர்களை அனுமதிப்பதில்லை. வேறு வழியில்லாமல், தெற்கு நோக்கி நடக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் பல நூறு மைல்கள் நடந்தால் கென்யாவுக்குச் செல்லலாம். நடக்கிறார்கள்.

இடையில், சூடான் ராணுவ வீரர்களிடம் தியோ சிக்கிக்கொள்கிறான். இவர்கள் புல்வெளிக்குள் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும்போது ராணுவம் வந்துவிடுகிறது. விட்டால் எல்லோரும் சிக்கிக்கொள்வார்கள் என்று தியோ அவசரமாக எழுந்து சென்று, தான் மட்டும் தங்களது குழுவிடமிருந்து திசை மாறிவிட்டதாகச் சொல்கிறான். துப்பாக்கி முனையில் அவனை இழுத்துச் செல்கிறார்கள். மற்றவர்கள் தப்பித்து வந்து கென்யாவின் அகதி முகாமை அடைகிறார்கள். இது 1987-ம் ஆண்டில் நடக்கிறது. அதன்பிறகு பதின்மூன்று ஆண்டுகள் அகதிகள் முகாம்தான். குழந்தைகளாக வந்தவர்கள் பெரியவர்களாகிறார்கள். வசதிகள் எதுவும் இல்லையென்றாலும் உயிர்ப் பயம் இல்லை. கி.பி. இரண்டாயிரமாவது ஆண்டில், கென்யாவின் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இளைஞர்களை, கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா தனது நாட்டுக்கு அழைத்துச் செல்கிறது. இப்படி, கிட்டத்தட்ட நான்காயிரம் பேர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதில் இந்தக் குழுவும் உண்டு. மிகுந்த சந்தோஷத்துடன் அமெரிக்கா சென்று சேர்கிறார்கள்.

அமெரிக்காவில் இறங்கியவுடன் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. தங்கையை மட்டும் வேறு ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். ஆண்களோடு தங்க அனுமதிக்க சட்டத்தில் வழிவகையில்லை என்று பிரிக்கிறார்கள். கண்ணீரோடு பிரிகிறார்கள். இளைஞர்கள் மூன்று பேருக்கும், அமெரிக்கா பேரதிசயமாக இருக்கிறது. ரீஸ் விதர்ஸ்பூன் இவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இளைஞர்களுக்கு பீட்ஸாவும் கோகோகோலாவும் டெலிபோனும் ஆச்சரியமாகத் தெரிகின்றன. இந்த நாட்டில் சிங்கமும் மாடுகளும் இல்லாதது குறித்து ஆச்சரியப்படுகிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவின் சூழலுக்குப் பழகுகிறார்கள். இது, படத்தின் மிக அற்புதமான தருணம். சற்று மிகைப்படுத்தியிருக்கிறார்களோ என்று தோன்றினாலும், எதுவும் துருத்திக்கொண்டிருப்பதில்லை. கடும் போராட்டத்துக்குப் பிறகு விதர்ஸ்பூன், பாஸ்டன் நகரத்தில் இருக்கும் தங்கையை அழைத்து வந்து இவர்களோடு சேர்த்துவைக்கிறார். அந்தச் சமயத்தில்தான் தியோவிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அவன் கென்யாவில் அகதிகள் முகாமில் இருப்பதாக அந்தக் கடிதம் சொல்கிறது. அவன் இறந்துவிட்டதாக நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியான செய்திதான். மர்மெர் என்கிற இளைஞன், தியோவை அழைத்து வருவதற்காக கென்யாவின் அகதிகள் முகாமுக்கு கிளம்பிச் செல்கிறான். அதன்பிறகு என்ன ஆனது என்பதுதான் The Good Lie. ஒரு பொய்யைச் சொல்கிறார்கள் தியோவும் மர்மெரும்.

கடந்த வாரத்தில் எட்டுப் படங்கள் பார்க்க நேரம் கிடைத்தது. விருதுப் படங்கள். ஆனால், அவை எல்லாவற்றையும்விட இந்தப் படம் ஒரு படி மேல் என்று தயங்காமல் சொல்லலாம். பாலைவனத்தில் நடப்பதிலிருந்து, அமெரிக்காவில் இறங்கி வாயைப் பிளப்பது வரை நடிகர்கள் கலக்கியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் கறுப்பின நடிகர்கள் அத்தனை பேரும் சூடான் அகதிகள். சூடானிலிருந்து தப்பி வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். அதனால், வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ரீஸ் விதர்ஸ்பூனைத்தான் போஸ்டர்களில் காட்டுகிறார்கள். அமெரிக்காவில் சந்தைப்படுத்துவதற்கான உத்தியாக இருக்கலாம். ஆனால், விதர்ஸ்பூனை தூக்கி விழுங்கியிருக்கிறார்கள் கறுப்பின நடிகர்கள்.

நடிப்பு மட்டுமில்லை ஒளிப்பதிவு, இசை என எல்லாமும் மிகக் கச்சிதமாக அமைந்த படம் இது. படத்தில் குறையே இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. கண்டபடி சுட்டுத்தள்ளும் ராணுவம், தியோவை மட்டும் எப்படித் தப்பிக்கவிட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. சூடானின் எண்ணெய் அரசியல், மத அரசியலையெல்லாம் ஒற்றைவரியில் தாண்டிச் செல்கிறார்கள். அமெரிக்காவை நல்லவனைப்போலக் காட்டும் இன்னொரு ஹாலிவுட் படம் என்று சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால், இதையெல்லாம் தாண்டி இந்தப் படம் தெற்கு சூடானின் அரசியல் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு திறப்பை உருவாக்குகிறது.

அமெரிக்காவுக்கு ஏன் இந்த நாட்டின் மீது அவ்வளவு அக்கறை என்று யோசிக்கச் செய்கிறது. தெற்கு சூடானை உலகின் 193-வது நாடாக அங்கீகரிக்க பின்னணி என்ன என்பது குறித்து ஒரு விநாடி ஸ்தம்பிக்கச் செய்கிறது. இதையெல்லாம் இந்தப் படம் நேரடியாகச் செய்வதில்லை. சூடான் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சித்திரப்படுத்துவதோடு நின்றுகொள்கிறது. ஆனால், அந்த உள்நாட்டுக் கலவரத்தின் பின்னணியிலிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் சதிகளை வால் பிடித்துப் போனால், மிகப்பெரிய சுவாரஸியம் காத்திருக்கிறது. அந்த வகையில், இது ஒரு முக்கியமான படம்.

                            ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com