13 அஸாஸின்ஸ் (13 Assassins)

சிறந்த ஜப்பானிய படங்களின் வரிசையைத் தேடிக் கொண்டிருந்த போது 13 அஸாஸின்ஸ் கிடைத்தது. 13 கொலையாளிகள். படத்தைப்

சி 

றந்த ஜப்பானிய படங்களின் வரிசையைத் தேடிக் கொண்டிருந்த போது 13 அஸாஸின்ஸ் கிடைத்தது. 13 கொலையாளிகள். படத்தைப் பற்றி ஏற்கனவே சில நண்பர்களும் சிலாகித்திருந்தார்கள். வழக்கமான  சாமுராய் கதைகளைப் போல நம்ப முடியாத அதிரடிக் காட்சிகளை நிரப்பி மிளகாய் அரைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படியெல்லாம் எதிர்மறையாக நினைத்திருக்கவே வேண்டியதில்லை. படம் ஆரம்பிக்கும் போதே ஒரு மனிதர் தனது வயிற்றைக் கிழித்துக் கொண்டு சாகிறார். அது காலங்காலமாக ஜப்பானியர்கள் பின்பற்றிய முறை. வீரத்தோடு மரணத்தை தழுவும் இந்த முறைக்கு ‘செப்புகு’ என்று பெயர். எதற்காக இப்படிச் சாகிறார் என்று யோசிப்பதற்குள்ளாகவே அடுத்தடுத்து காட்சிகள் விரிகின்றன. இரண்டரை மணி நேரப் படம். சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டேயிருக்கிறது.

1840களில் நடந்த கதை இது. அப்போது நிலவிய ஜப்பானிய ராணுவ ஆட்சியில் ராணுவத் தளபதிகளை ஷோகுன் என்கிறார்கள். அரசர் இருந்தாலும் கிட்டத்தட்ட இவர்கள்தான் ஆட்சியாளர்கள். அப்படியொரு ஷோகுனின் தம்பி சர்வாதிகாரியாக இருக்கிறான். பெண்களை வன்புணர்வு செய்வதிலிருந்து குஞ்சு குளுவான் என்று கூட பாராமல் ஒரு குடும்பத்தில் அத்தனை பேரையும் கொல்வது வரை எல்லாவிதமான முரட்டுத்தனங்களையும் செய்கிறான். ஒரு பெண்ணின் கைகள், கால்கள் என துண்டித்து வீசிவிட்டு நாக்கையும் கத்தரித்து விடுகிறான். அவளை விளையாட்டுச் சாமானாக்கிவிடுகிறான். அவ்வளவு குரூரமானவன். நரிட்சுகு என்பது அவன் பெயர். இவன் இப்பொழுதே இவ்வளவு ஆட்டம் போடுகிறானே இன்னமும் பெரிய பதவிகளுக்கு வந்தால் நாடு நாறிப் போய்விடும் என்று மந்திரி பயப்படுகிறார். அவரது பயம் எந்தவிதத்திலும் பொய்த்துவிடாமல் எல்லாவிதமான சேட்டைகளையும் செய்து கொண்டிருக்கிறான் நரிட்சுகு.

அவனது சேட்டைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது வயிற்றைக் கிழித்துக் கொண்டு சாகிறவரைத்தான் முதல் காட்சியில் காட்டுகிறார்கள். மந்திரிக்கும் வருத்தம்தான். நரிட்சுகுவின் சோலியை முடித்துவிடலாம் என்று முடிவு செய்கிறார். அது லேசுப்பட்ட காரியமா? அவனைச் சுற்றிலும் எந்நேரமும் பெரும் ராணுவப்படை பாதுகாப்புக்கு நிற்கிறது. இருந்தாலும் ஏதாவது செய்தாக வேண்டும் என எத்தனிக்கிறார். தனக்கு நம்பகமான சாமுராய் ஒருவரை உதவிக்கு அழைக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வேறு பத்து சாமுராய்களைச் சேர்த்து ஒரு அணி அமைக்கிறார்கள். அப்படியானால் 12 அஸாஸின்ஸ் என்றுதானே படத்தின் பெயர் இருந்திருக்க வேண்டும்? காரணமிருக்கிறது. இந்தப் பனிரெண்டு பேரும் ஒரு காட்டு வழியாகச் செல்கிறார்கள். அப்பொழுது பாதையைக் கோட்டைவிட்டுவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் ஒருவன் - இந்த வேட்டைக்காரன்தான் படத்தின் நகைச்சுவைக் கதாபாத்திரம்- சாமுராய்களுக்கு வழிகாட்டுவதோடு நில்லாமல் அவர்களோடு இணைந்து கொள்கிறான். கணக்கு பதின்மூன்றாகிறது.

நரிட்சுகு தனது படையோடு இடோ என்னுமிடத்திலிருந்து அகாஷி என்னுமிடத்துக்குச் செல்கிறான். சாமுராய்கள் அவனது கதையை வழியிலேயே முடித்துவிடத் திட்டமிடுகிறார்கள். ஆனால் நரிட்சுகுவுடன் இருக்கும் ஹன்பேய் என்னும் போர்வீரன் சாமர்த்தியசாலி. அவனுக்கு இந்தச் சதித்திட்டம் பற்றிய தகவல் போய்ச் சேர்கிறது. அவன் சாமுராய்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறான். படம் வேகமெடுக்கிறது. சாமுராய்களை வழி நடத்தும் மந்திரியும் கில்லாடிதான். மிகச் சிறப்பாக வழிநடத்துகிறார். நரிட்சுகு பயணம் செய்யும் பாதையின் நடுவில் ஓர் ஊரைத் தேர்ந்தெடுக்கும் சாமுராய்கள் தங்களது எதிரிக்கான பொறியை உருவாக்குகிறார்கள். நரிட்சுகு அந்தப் பொறியில் வந்து சிக்க வேண்டுமல்லவா? அதற்காக அவன் செல்லுகிற பாதையில் சில தடைகளை ஏற்படுத்தி வைக்கிறார்கள். அதற்கு வேறொரு ஊரின் தலைவரும் உதவுகிறார். அவருடைய மகனையும் மருமகளையும் நரிட்சுகு சிதைத்திருக்கிறான் என்பதால் அவருக்கும் ஒரு பழைய கணக்கு இருக்கிறது. இவர்கள் நினைத்த மாதிரியே நடக்கிறது. நரிட்சுகு தனது படையின் ஒரு பகுதியை திசை மாற்றுகிறான். இவர்கள் பொறி வைத்திருக்கும் ஊருக்குள் நரிட்சுகுவின் படை வந்து சேரும் போது அவனிடம் எழுபது பேர்கள்தான் இருப்பார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள். அதுதான் தப்புக்கணக்காகிவிடுகிறது. ஹன்பேய் ஏதோவொரு வகையில் ஆட்களைத் திரட்டிவிட்டான். நரிட்சுகுவின் படையில் இருநூறு பேர்கள் சேர்ந்துவிட்டார்கள். சாமுராய்கள் வெறும் பதின்மூன்று பேர்கள்தான். தங்கள் முழு பலத்தையும் காட்டியாக வேண்டும். பொறிக்குள் சிக்கியிருக்கும் இருநூறு பேரையும் சின்னாபின்னப்படுத்தியாக வேண்டும். அப்பொழுதுதான் எதிரியை வீழ்த்த முடியும். சாமுராய்கள் துணிந்து களமிறங்குகிறார்கள். எதிரியின் படைக்குள் புகுந்து அடித்து நொறுக்குகிறார்கள். விறுவிறுப்பு கூடிக் கொண்டே போகிறது.

ஜப்பான் சென்றிருந்த போது ஒரு வரலாற்றாசிரியரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சாமுராய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தவர். நிறையப் பேசினார். ‘உண்மையிலேயே சாமுராய்கள் சகலவிதத்திலும் வல்லவர்களா’ என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவில்லை. சாமுராய் என்பது உடல் ரீதியிலான பலசாலி மட்டுமில்லை. மனரீதியிலான பலசாலியும் கூட என்றார். தான் சாகப் போகிறோம் என்று தெரிந்த பிறகு போராடுவது சாமானிய மனிதனுக்கு சாத்தியமான காரியமில்லை. உதாரணமாக நான்கு பேர்கள் துரத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் நம்மைக் கொல்வதற்காகத் துரத்துகிறார்கள். அது நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஓடுகிறோம். ஓடும் போதே வெட்டுக்கள் விழுகின்றன. சிறிது தூரம் ஓடிய பிறகு ஒரு மூலையில் சிக்கிக் கொள்கிறோம். அந்த கணத்தில் நம்முடைய அத்தனை மனவலிமையும் சரிந்துவிடும். கெஞ்சுவோமே தவிர போராடத் துணிய மாட்டோம். அதில்தான் சாமுராய்கள் வித்தியாசப்படுகிறார்கள் என்றார். சாமுராய்கள் இறுதி வரைக்கும் போராடுவார்கள் என்றார். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் அதைத் துல்லியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சாமுராய்கள் ஒவ்வொருவருவராக வீழ்கிறார்கள். என்னதான் வீரர்களாக இருந்தாலும் இத்தனை பேர் சூழ்ந்து கொண்டு தாக்கும் போது நின்று போராடுவது யாருக்குமே சாத்தியமில்லாத காரியம்தான். ஆனால் கடைசியாக சரியும் வரைக்கும் போராடுகிறார்கள். கடைசி வெட்டு விழும் வரைக்கும் வாளைச் சுற்றுகிறார்கள். அப்படியான மனிதர்கள் ஒரு காலத்தில் உண்மையிலேயே வாழ்ந்தவர்கள்தானே? நினைத்துப் பார்த்தால் சிலிர்த்துவிட்டது.

இந்தப் படம் 1960களிலேயே வந்துவிட்டது. அப்பொழுதும் படத்தின் பெயர் இதேதான். 13 அஸாஸின்ஸ். அந்தப் படத்தைத்தான் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு 2010 ஆம் ஆண்டில் ரீமேக் செய்திருக்கிறார்கள். மிகச் சிறந்த ஆக்‌ஷன் படமாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்ட படம் இது. அந்தக் கொண்டாட்டத்திற்கு முழு தகுதியான படம்தான். முதல் காட்சியில் ஒருவர் தனது வயிற்றை அறுத்துக் கொண்டு இறந்து போகிறார் அல்லவா? அதன் பிறகு சாமுராய்கள் அணி அமைவதற்கான முஸ்தீபுகளைத் தொடங்கும் சமயத்தில் சற்று இழுவையாகத் தெரிந்தது. அதுவரையிலும் உரையாடல்கள் சற்று அதிகம். ஆனால் அந்த இழுவை சில நிமிடங்களுக்கு மட்டும்தான். படம் வேகமெடுத்துவிடுகிறது.

படத்தின் காட்சியமைப்புகளுக்காகவும் இசைக்காவும் வெகுவாக பாராட்டுகிறார்கள். உண்மையிலேயே இரண்டுமே அருமை. அதைவிடவும் குறிப்பாக நடிகர்களின் நடிப்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். சாமுராய்களாகட்டும். நரிட்சுகுவாகட்டும், கை கால்கள் துண்டிக்கப்ட்ட பெண்ணாகட்டும்- பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு நீளமான வெளிநாட்டு படத்தை சலிப்பில்லாமல் பார்க்க வைத்திருக்கிறார்கள். சாமுராய்கள் ஏன் இந்தப் படையில் சேர்கிறார்கள் என்பதன் நியாயப்படுத்துதல்கள் எதுவுமே துருத்திக் கொண்டு நிற்பதில்லை. ரத்தமும் அன்பும் காதலும் அக்கறையும் சாமுராய்களின் அர்ப்பணிப்பும் படம் முழுக்கவும் விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கு தேவையான அளவு மட்டும் நடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் பெரும்பலம்.

கடைசி இருபதாண்டுகளில் வெளியான அதிரடித் திரைப்படங்களின் வரிசையில் இந்தப் படத்தை தவிர்க்க முடியாது என்று ஒரு விமர்சகர் பாராட்டியிருந்தார். அது முற்றாகச் சரி. படத்தைப் பார்த்துவிட்டு முடிவெடுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com