THE FAULT IN OUR STARS

பெங்களூரில் எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் ஒரு புற்றுநோய் மருத்துவமனை இருக்கிறது. எந்நேரமும் கூட்டம்

பெங்களூரில் எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் ஒரு புற்றுநோய் மருத்துவமனை இருக்கிறது. எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியும் அளவுக்குப் புகழ் பெற்ற மருத்துவமனை அது. பங்களாதேஷ், ஆப்பிரிக்க உள்ளிட்ட அந்நிய தேசங்களில் இருந்தும் நோயாளிகள் குவிகிறார்கள். இப்படி வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தங்குவதற்காக மருத்துவமனையைச் சுற்றிலும் நிறைய தனியார் விடுதிகள் உண்டு. முந்நூறு ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் வரைக்கும் அறை வாடகையாகத் தர வேண்டும். அப்படி வந்திருந்த ஒரு பிஹாரி குடும்பத்துடன் அறிமுகமாகியிருந்தேன். மாநில அரசாங்கத்தில் குமாஸ்தாவாக இருந்த அந்த மனிதர், தனது மகள் சஹானாவை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அவளுக்குத்தான் சிகிச்சை அளிக்கவேண்டி இருந்தது. நோய் முற்றியிருந்ததது. அதனால் சில மாதங்கள் பெங்களூரிலேயே தங்கியிருக்கச் சொல்லிவிட்டார்கள். அந்தக் குடும்பத்தினர், ஒரு விடுதியில் அறை பிடித்திருந்தார்கள். அப்பொழுது அடிக்கடி அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கூடவே அந்த தேவதையையும்.

சஹானாவுக்குத் தொண்டையில் புற்று வளர்ந்திருந்தது. நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அவளால் அதிகமும் பேச முடியாது. ஆனால், கண்களில் வலியின் வேதனை எந்நேரமும் மின்னிக்கொண்டே இருப்பதை உணரலாம். அவர்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்தால், ஒரு பள்ளியின் மைதானம் தெரியும். அறையில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, பெரும்பாலும் அவள் அந்த மைதானத்தைத்தான் வெறித்துக் கொண்டிருப்பாள். அவள் எந்தத் தவறும் செய்யாதவள். இந்தப் புவியில் நிகழும் அசுர வளர்ச்சியின் மாற்றங்கள், அவளது தொண்டையைப் பதம் பார்த்திருக்கின்றன என்பது அவரது தந்தையின் குற்றச்சாட்டு. அவர் சொல்வதும் சரிதான். காற்று, நிலம், நீர் என சகலத்தையும் மாசடையச் செய்திருக்கிறோம். அது, சஹானாவைப் போன்றவர்களைப் பாதிக்கிறது.

மொழி தெரியாத இந்த ஊரில் தினமும் மருத்துவமனைக்கும் விடுதிக்குமாக அவர்கள் அலைந்துகொண்டிருப்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கனவுகள், குடும்பத்தினரின் ஆசைகள் என அத்தனையும் காட்டாற்றில் சிக்கிக்கொண்ட சருகைப்போல் திசையற்று அலைந்துகொண்டிருந்தன. அவளது நோய் தீவிரமாகிக்கொண்டிருந்தது. இனி தாக்குப்பிடிப்பது சிரமம் என்று மருத்துவமனையில் கை விரித்துவிட்டார்கள். அவர்களது குடும்பம் பிஹாருக்குக் கிளம்பும் முன்பாக சஹானாவைப் பார்க்க வேண்டும் என விரும்பினேன். அவளோடு அதிகம் பேசியதில்லை. ஆனால், கடைசியாகப் பார்த்தபோது தனது அத்தனை வலியையும் பொறுத்துக்கொண்டு ஒரு விநாடி சிரித்தாள். அந்தச் சிரிப்பு இன்னமும் மனத்துக்குள் உறைந்துபோய்க் கிடக்கிறது.

பிறகு, புற்றுநோய் குறித்து எதை எதிர்கொண்டாலும், சஹானாவின் அந்தப் புன்னகையைத் தவிர்க்க முடிவதே இல்லை. சமீபத்தில் ஒரு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. The Fault in our stars.

படத்தின் நாயகி ஹெய்சல், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவள். தைராய்டில் புற்று. அவளுக்கு நுரையீரலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், எந்நேரமும் ஆக்ஸிஜன் சிலிண்டரை தூக்கிக்கொண்டேதான் அலைய வேண்டும். இல்லையென்றால், மூச்சுவிடுவதில் சிரமமாகிவிடும். ஹெய்சலின் பெற்றோருக்கு அவள் ஒரே மகள். அம்மாவுக்கு மகளைப் பற்றிய வருத்தம் பெருகுகிறது. திரும்பத் திரும்ப ஒரே புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறாள் என்று மருத்துவரிடம் புகார் தெரிவிக்கிறாள். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய புத்தகம் அது. நோயைப் பற்றிய நினைவுகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் உதவி மையத்துக்குச் செல்ல வேண்டும் என்று ஹெய்சலிடம் சொல்கிறார்கள். உதவி மையத்தில் வேறு சில புற்றுநோயாளிகள் தினமும் கூடுகிறார்கள். சக நோயாளிகளுக்கு ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்கள். நோயாளிகளுக்கு அது ஒருவிதமான ஆறுதலைக் கொடுக்கிறது. அந்தக் கூட்டத்தில்தான் அகஸ்டஸைச் சந்திக்கிறாள் ஹெய்சல். அவன் மிகச் சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரனாக இருந்தவன். இப்பொழுது புற்றுநோயின் காரணமாக ஒரு காலை நீக்கிவிட்டார்கள். ஆனால், தனது புன்னகையால் ஹெய்சலை வசீகரிக்கிறான். அவனும் ஹெய்சலும் தாங்கள் விரும்பிய புத்தகங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஹெய்சலுக்குப் பிடித்தமான புத்தகம் அகஸ்டஸுக்கும் பிடித்துவிடுகிறது. ஹெய்சலும் அகஸ்டஸும் அந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் பீட்டருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். தன்னைக் காண்பதற்காக ஆம்ஸ்டர்டாம் நகரத்துக்கு வரச் சொல்லி, எழுத்தாளரிடமிருந்து பதில் வருகிறது.

இது, The Fault in our stars படத்தின் முதல் பாதி. அதே பெயரில் ஒரு நாவல் வந்திருக்கிறது. சில மாறுதல்களுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

இத்தகைய கதைகளைக் கொண்ட படங்கள், எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும்படியாகத் தொடங்கினால் பார்வை யாளனுக்குச் சற்று தொய்வு ஏற்பட்டுவிடக்கூடும். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது - எனக்கு சலிப்பாக இருக்கும். ஆனால் இந்தப் படம், பாஸிட்டிவ் எனர்ஜியுடன்தான் ஆரம்பிக்கிறது. அதற்காக மற்ற சாதாரணப் படங்களைப் போன்ற துள்ளலான இசையுடனும் கொண்டாட்டத்துடனும் ஆரம்பிக்கிறது என்று சொல்ல முடியாது. சற்றே உள்ளடங்கிய குரல். அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் களம் அப்படியானது. கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மனிதர்கள்தான் கதை மாந்தர்கள். ஆனால், தங்களின் நோய்மையை நினைத்து ஒடுங்கிக்கிடக்காத இளைஞர்கள். அப்படியான பாஸிடிவ் எனர்ஜி.

படம் தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே நம்மை உள்ளே இழுத்துப் போட்டுக்கொள்கிறார்கள்.

மிக எளிமையான காட்சிகள். காமத்தை வெளிப்படுத்தாத காதல் காட்சிகள். ஹாலிவுட் படங்களில் வழக்கமாக சித்தரிக்கப்படும் பொறுப்பில்லாத பெற்றோர்கள் என்று இல்லாமல், ஹெய்சல் மீது உயிரையே வைத்திருக்கும் பெற்றோர்கள் என பார்வையாளனை ஒன்றச் செய்துவிடுகிறார்கள். அடுத்த பாதியில், அகஸ்டஸும் ஹெய்சலும் ஆம்ஸ்டர்டாம் செல்வதும், அங்கே அந்த எழுத்தாளன் இவர்களை வெறுப்பேற்றும்போதும், அவர்கள் பரஸ்பரம் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொள்ளும்போதும் என காட்சிகள் நகரும்போது, அந்தச் சம்பவங்கள் எல்லாம் ஏதோ நமக்கே நிகழ்வதுபோலத்தான் தோன்றுகிறது. ஆம்ஸ்டர்டாம் செல்வதற்கு முன்பாகவே, ஹெய்சலை மருத்துவர்கள் எச்சரித்துத்தான் அனுப்புகிறார்கள். ஆனால், ஹெய்சல் உயர்ந்த படிகளில் நடந்தே ஏறுகிறாள். தனது சுவாசக் குழாயைக் கழட்டி விமான நிலையத்தில் கேள்வி கேட்கும் குழந்தைக்குக் காட்டுகிறாள். இப்படியான ஒவ்வொரு காட்சிகளிலும் ‘அய்யோ ஹெய்சலுக்கு மூச்சுத் திணறல் வந்துவிடுமோ’ என்று பயத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். இதெல்லாம்தான் படத்தின் மிகப்பெரிய பலங்கள் என்று தோன்றுகிறது.

ஹெய்சலாக நடித்திருக்கும் ஷெலின் வுட்லியும், அகஸ்டஸாக நடித்திருக்கும் ஏன்ஸல் எல்கார்ட்டும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்காகவே இரண்டு மூன்று முறையாவது திருப்பித் திருப்பி படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

முதல் முறை படம் பார்த்து முடித்தபோது அதிகாலை மூன்று மணி ஆகியிருந்தது. அகஸ்டஸையும் ஹெய்சலையும் தாண்டி, என் நினைவில் சஹானா வந்துகொண்டிருந்தாள். அன்றைய தினம் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது - ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலை அது. சஹானாவின் தந்தை அழைத்திருந்தார். குரல் உடைந்திருந்தது. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வெகுநேரம் ஆகவில்லை. நான்கு நாட்களுக்கு முன் சஹானாவுக்கு மூச்சுத் திணறல் வந்திருக்கிறது. அருகாமையில் இருந்த மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனை வாயிலை அடையவும் சஹானா இந்த உலகைவிட்டு நீங்கவும் சரியாக இருந்திருக்கிறது. தனது பிஹாரிய ஆங்கிலத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாகக் காத்திருந்தேன். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, மூக்கை உறிஞ்சிக்கொண்டு ‘அந்த மருத்துவமனை பக்கமாகப் போனால் சஹானாவை ஒரு விநாடி நினைச்சுக்குங்க’ என்று சொல்லிவிட்டுத் துண்டித்தார்.

படத்தில் ஒரு காட்சி வரும். உதவி மையத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது அகஸ்டஸ் ‘தனது மறைவுக்குப் பிறகும் தன்னை மற்றவர்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்’ என்பான். தனது மகளை அடுத்தவர்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சஹானாவின் அப்பா விரும்பியது போலவே.

மூன்று மணிக்கு மேலாகத் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. மொட்டை மாடிக் கதவைத் திறந்தேன். இந்த மாநகரின் சோடியம் விளக்குகள், வானத்தில் சிவப்பு நிறத்தைச் சிதறடித்திருந்தன. நட்சத்திரங்கள் எதுவும் தெரியவில்லை. படத்தின் இறுதிக்காட்சியில், வானத்தைப் பார்த்தபடி ஹெய்சல் படுத்திருப்பாள். அகஸ்டஸின் கடிதத்தை வாசித்துக்கொண்டிருக்கும், அவள் அவனது நினைவுகளால் முழுமையாக நிரம்பியிருப்பாள். நான் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சஹானாவின் நினைவுகளால் நிரம்பிக் கொண்டிருந்தேன். குளிர் வாடைக்காற்று முகத்தில் அறைந்துகொண்டிருந்தது. அப்பொழுது திரண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக்கொள்ள வேண்டும் என்று விரல்களுக்குத் தோன்றவே இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com