நான் வளர்கிறேனே…! (Boyhood)

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பாக வார இதழ் ஒன்றில் வெளியான அப்போதைய பிரபல நடிகரின் பேட்டி இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.

கி 

ட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பாக வார இதழ் ஒன்றில் வெளியான அப்போதைய பிரபல நடிகரின் பேட்டி இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்தச் சமயத்தில் அவர், தந்தை ஆகியிருந்தார். தனது குழந்தை வளர்வதை தினந்தோறும் பதிவு செய்து வைக்கப் போவதாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். டிஜிட்டல் கேமராக்கள் வந்திராத காலம் அது. தனது வீடியோ கேமராவில் படம் பிடித்து அவற்றை கேஸட்களில் பதிவு செய்து வைப்பதுதான் அவருடைய திட்டம். அப்பொழுது அந்தச் செய்தியை வாசிக்க ஆச்சரியமாக இருந்தது. தினந்தோறும் அரை மணி நேரம் படம் பிடித்தாலும் கூட அதைச் சேகரித்து வைக்க ஏகப்பட்ட கேஸட்கள் தேவைப்படும். அதை தேவையான இடத்தில் வெட்டி ஒட்டினால் அது பொக்கிஷமாகிவிடும். இருபது வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் போது அந்தக் குழந்தைக்கு அதுவொரு மிகப்பெரிய பரிசாக இருந்திருக்கும். ஆனால், அதை அந்த நடிகரால் சாத்தியப்படுத்த முடிந்ததா என்று தெரியவில்லை என்றாலும் அவர் வெளிப்படுத்தியிருந்த ஆசை முக்கியமானதாகத் தெரிந்தது. உலகத்தில் இதை யாராவது செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

அப்படியொரு படம்தான் Boyhood. 2014 -ம் ஆண்டு வெளிவந்த படம் இது. இந்தப் படம் மிக முக்கியமானது என்றும் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய படம் என்றும் நிறையப் பேர் சொல்லியிருந்தார்கள். ஆறு வயதுச் சிறுவன் மேஸன் வளர்ந்து பதினெட்டு வயதுடைய வாலிபனாகிறான். அவனுடைய வாழ்க்கையின் திருப்பங்களும் சோகங்களும் சந்தோஷங்களும் தான் கதை. படம் பார்க்கும் போதே ஆச்சரியம் தொற்றிக் கொண்டது. ஆறு வயதுச் சிறுவனாக நடித்தவனின் முகத்துக்கு அச்சு அசலாக எட்டு வயதுச் சிறுவனாக நடித்தவனின் முகவெட்டு  இருந்தது. அதே போலத்தான்  பத்து வயதுச் சிறுவனாக நடித்தவனின் முகவெட்டும். குழப்பத்தோடு படத்தைப் பற்றிய விவரங்களைத் தேடிய போதுதான் தெரிந்தது- எல்லோரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை. ஒருவனேதான். அந்தப் படத்தை பன்னிரண்டு வருடங்களாக எடுத்திருக்கிறார்  இயக்குநர் ரிச்சர்ட் லின்க்லேட்டர்.


2002-ம் ஆண்டிலேயே படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார்கள். அப்பொழுது இதுதான் கதை என்று எந்தத் திட்டவட்டமும் இல்லை. பிறகு 2013 வரை ஒவ்வொரு வருடமும் அவ்வப்போது படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். நடிகர்களிடமே அவர்களது சொந்த அனுபவங்களையெல்லாம் கேட்டுக் கேட்டுத்தான்  கதையை வளர்த்திருக்கிறார்கள்..  இப்படி மெல்ல வளர்ந்த படத்தை சென்ற ஆண்டு வெளியிட்டிருக்கிறார்கள்.. ஆனால், எவ்வளவுதான் நுணுக்கமாகப் பார்த்தாலும் என் சிற்றறிவுக்கு எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில்  அசுர வளர்ச்சி நிகழ்ந்திருக்கிறது. நேற்று இருந்த கேமராவை விட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்த கேமரா இன்று வந்திருக்கிறது. இசை, எடிட்டிங் உள்ளிட்ட எல்லாவற்றிலும்  இந்த அசுர வளர்ச்சி இருக்கிறது. ஆனால் அந்த வித்தியாசம் தெரியாமல் படத்தை எடுத்திருக்கிறார்கள். ‘இது பெரிய காரியமா? படம் ஆரம்பிக்கும் போது பயன்படுத்திய  சாதனங்களையே கடைசி வரைக்கும் பயன்படுத்தினால் காரியம் முடிந்துவிடும்’ என்று சொல்லிவிடலாம்தான். ஆனால், அதே சாதனங்களைப்  பயன்படுத்தி 2014-ல் வெளிவரும் இன்னொரு படத்தின் தரத்துக்கு எந்த விதத்திலும்  சளைக்காமல் வெளியிடுவது  சாதாரண காரணமில்லைதானே? அதைத்தான் செய்திருக்கிறார்கள்.

மேஸன் என்கிற பொடியன் தான் கதையின் நாயகன். அவன் வளர வளர அவனுடைய பார்வையிலேயே  கதையும் வளர்கிறது. தொடக்கத்திலேயே அவனுடைய அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிடுகிறார்கள். அதன் பிறகு தனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமானால், தான் கல்லூரிப்படிப்பை முடித்தாக வேண்டும் என அவனுடைய தாய் முடிவெடுக்கிறாள். தங்கள் ஊரைவிட்டு இன்னொரு ஊருக்குச் செல்கிறார்கள். அங்கு கல்லூரியின் பேராசிரியருடன் அம்மாவுக்கு காதல் அரும்புகிறது. விரும்பி அவரை மணம் முடிக்கிறாள். அந்தப் பேராசிரியருக்கு இரண்டு குழந்தைகள். ஆரம்பத்தில் அத்தனையும் சந்தோஷமாகத்தான்  இருக்கிறது. மேஸனும் அவனுடைய அக்கா சமந்தாவும் இந்தக் குழந்தைகளோடு  ஒட்டிக் கொள்கிறார்கள். ஆனால், வெகு விரைவிலேயே அந்தப் பேராசிரியர் குடித்துவிட்டு அடிக்கத் தொடங்குகிறான். பயந்து நடுங்குகிறார்கள். தன்னுடைய குழந்தைகள்  இருவரையும் இழுத்துக் கொண்டு அவனுடைய தாய் தப்பித்து ஓடுகிறாள். சமந்தாவுக்கு காதல் வருகிறது. மேஸனுடைய தாய்க்கும் இன்னொரு காதலன் கிடைக்கிறான். இடையிடையில் மேஸனின் தந்தை அடிக்கடி தனது குழந்தைகளைச் சந்தித்து அவர்களோடு நேரம் ஒதுக்குகிறார். இப்படி கதை நீண்டு கொண்டே போகிறது. கிட்டத்தட்ட  இரண்டே முக்கால் மணி நேரப் படம் இது.

2002 -ம் ஆண்டு படத்தில் யாரெல்லாம் நடித்தார்களோ அவர்களேதான் 2013 ஆம் ஆண்டிலும் நடித்திருக்கிறார்கள். இடையிடையே புதிய நடிகர்கள் வந்து சேர்ந்து கொள்கிறார்கள் என்றாலும் முக்கியமான நடிகர்கள் பத்து பன்னிரண்டு வருடங்களுக்குத்  தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சில வாரங்களை ஒதுக்கிக் கொடுத்திருப்பதை பாராட்டியே தீர வேண்டும். இவ்வளவு வருடங்களாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஒவ்வொரு சிறு விஷயங்களிலும்  கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. ஹாரிபாட்டரின் புத்தக வெளியீட்டிலிருந்து ஈராக் போர் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் முக்கியமான நிகழ்வுகளைப் பார்த்துப் பார்த்துச் சேர்த்திருக்கிறார்கள். இதெல்லாம் தான் படம் பார்க்கிறோம் என்கிற ஒரு உணர்வே இல்லாமல் நகர்த்திக் கொண்டு போகிறது. ஏதோவொரு பையனின் வாழ்க்கைப் பதிவை பார்த்துக் கொண்டிருப்பதான பாவனை வந்து சேர்கிறது.

ஒரு அமெரிக்கக் குழந்தை எப்படி தன் வாழ்க்கையை எதிர்கொள்கிறது என்பதை இவ்வளவு தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை அல்லது வேறு யாரும் சொல்லியிருப்பார்கள் என்றும் நம்பிக்கையில்லை. அதனால்தான்  இந்தப் படத்தை மைல்கல் என்று குதூகலித்து விமரிசனங்களை  எழுதி இருக்கிறார்கள். அந்தக் குழந்தை இளைஞனாகும் வரையிலான அத்தனை மேடுபள்ளங்களையும்  காட்டிவிடுகிறார்கள். அம்மாவும் அப்பாவும் பிரிகிறார்கள். அந்தச் சண்டையைப் பார்த்துத்தான் வளர்கிறான். நண்பர்களை விட்டுவிட்டு  வேறு ஊருக்கு வருகிறார்கள். தனது பால்யத்திலிருந்து  சிறுவனாக மாறிக் கொண்டிருக்கும் பருவத்தில் அவனது தலைமுடியை  ஒட்ட கத்தரித்துவிட்டு மற்ற குழந்தைகளின் முன்பாக அவமானப்படுத்துகிறான்  அம்மாவின் இரண்டாவது கணவனான அந்தக் குடிகாரன். மூன்றாவதாக அமையும் அம்மாவின் கணவனுக்கும் இவனுக்குமிடையேயும்  முரண்பாடுகள் நிறைகின்றன. டீன் - ஏஜ் பருவத்தில் நிற்கும் மேஸனுக்கு இது பெரிய தர்மசங்கடமாக இருக்கிறது. இதனூடாகத்தான்  பாலியல் புத்தகங்களை  வாசிக்கிறான். நண்பர்களோடு விவாதிக்கிறான். துளிர்த்து முறியும் அவனுடைய காதல்கள், நிழற்படங்கள் எடுக்கும் அவனது வேட்கை, ஆறுதலாகவும் தோழனாகவும் இடையிடையே வந்து போகும் அப்பா என வளர்பருவத்தின்  அத்தனை  விஷயங்களையும் முடிந்த வரையிலும் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்திய மனநிலையிலிருந்து  மட்டும் இந்தப் படத்தைப் பார்த்தால் அது உருவாக்கக் கூடிய தாக்கம் அவ்வளவு முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அமெரிக்க வாழ்வியலோடு இணைத்துப் பார்க்கும் போது படத்தின் நுண்பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியும். வெகு எளிதாகப் பிரிந்துவிடும் மனித உறவுகள், புதியதாக ஒரு இணையைச் சேர்த்துக் கொள்ளும் சாத்தியங்கள்  உள்ளிட்ட கலாசாரக் கூறுகளுடன் சேர்த்து இந்தப் படத்தைப் பார்க்கும் போது புத்தாயிரத்தில் அமெரிக்கக் குழந்தைகள் எதிர்கொள்ளும் வாழ்க்கைக்கும் நம் குழந்தைகள் எதிர்கொள்ளும் வாழ்க்கைக்குமான ஒரு ஒப்புமையை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. மேற்கத்திய வாழ்வியல் முறை நோக்கி நகரும் நாம் இப்போது எந்த இடத்தில் நிற்கிறோம், எந்தத் திசையில் நகர்கிறோம், எதிர்காலத்தில் நாம் எந்த இடத்தை அடையப் போகிறோம் என்பது குறித்தான ஒரு பெருமொத்தமான முடிவுக்கு வந்துவிட முடியும்.

ஒரு மனிதனின் ஆளுமையைக் கட்டமைப்பதில் வளர் பருவத்துக்கு மிக முக்கியமான இடமுண்டு. அந்த வளர்பருவத்தின்  சின்னச் சின்ன தருணங்களைக்  கவித்துவமாகப் படமாக்கியிருக்கிறார்கள் என்று சொல்வதில் எந்த மிகைப்படுத்தலும்  இல்லை. படத்தின் நீளம் சற்று அயற்சியூட்டுகிறதுதான்.  ஆனால், அதைச் சாக்குப் போக்காகச் சொல்லியெல்லாம் இந்தப் படத்தை தவிர்த்துவிடக் கூடாது. படமாக்கப்பட்ட விதத்தில் தொடங்கி பன்னிரண்டு வருடங்களில் நடிகர்களின் புற மற்றும் அக மாற்றங்கள், மெருகேறும் அவர்களின் நடிப்பு, கதை நகரும் பாங்கு என எல்லாமும் சேர்த்து இந்தப் படத்தை மிக முக்கியமான படமாக மாற்றுகின்றன.

                                  ***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com