கிறிஸ்டி (Kristy)

சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் நண்பரொருவரிடம் திரைப்படங்களைப் பற்றி அடிக்கடி பேசுவது வழக்கம்.

சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் நண்பரொருவரிடம் திரைப்படங்களைப் பற்றி அடிக்கடி பேசுவது வழக்கம். சினிமாவை வெறும் கதையாக மட்டும் பார்க்காமல் அதைத் தாண்டிப் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன என்று திரும்பத் திரும்பச் சொல்வார். சமீபத்தில் அப்படித்தான் திரைக்கதை அமைப்பைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர் ‘ஒரு நல்ல திரைக்கதையில் சம்பந்தமில்லாத எந்தக் காட்சிகளும் இருக்கக் கூடாது’ என்றார். எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. உதாரணம் கேட்டதற்கு ‘கிறிஸ்டி(Kristy) படத்தை பார்த்துவிடுங்கள். பிறகு பேசலாம்’ என்று சொல்லியிருந்தார். ஏதாவது விஷயம் இருக்கும் என்று பெங்களூரில் தேடியதில் டிவிடி கிடைத்துவிட்டது. கடந்த ஆண்டு வந்த த்ரில்லர் படம் இது. இணைய தளங்களில் படத்துக்கான ரேட்டிங் சுமாரானதாகத்தான் இருந்தது என்பதால் சாதாரணமாக நினைத்துக் கொண்டு பார்க்கத் தொடங்கியதுதான் வினையாகப் போய்விட்டது. வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தெரியாத்தனமாக பார்க்கத் தொடங்கிவிட்டேன். நடுங்க வைத்துவிட்டார்கள். காலண்டர் அசைவது கூட எவனோ வெட்டுக் கத்தியைத் தூக்கிக் கொண்டு வருவது போல இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜஸ்டின் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பெண். விடுதியில் தங்கியிருக்கிறாள். நன்றி அறிவிப்பு நாள் (Thanks Giving Day) விடுமுறையில் கிட்டத்தட்ட விடுதி காலியாகிவிடுகிறது. ஆளாளுக்கு வெளியில் கிளம்பிவிடுகிறார்கள். ஆரம்பத்தில் ஜஸ்டினுக்குத் துணையாக தானும் விடுதியிலேயே இருப்பதாகத்தான் அறைத்தோழி சொல்கிறாள். அதனால் ஜஸ்டின் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறாள். ஆனால் அறைத் தோழியின் தந்தை அவளை ஃபோனில் அழைத்து கிளம்பி வரச் சொல்லி விடுகிறார். தோழிக்கு வேறு வழியில்லை. தன்னுடைய கார் சாவியை ஜஸ்டினிடம் கொடுத்துவிட்டுக் கிளம்புகிறாள்.  விடுதியில் ஜஸ்டினைத் தவிர வேறு எந்த மாணவரும் இல்லை. இரவு நேரத்தில் ஜஸ்டின் காரை எடுத்துக் கொண்டு கடைக்குச் செல்கிறாள். கடையில் ஒரு பெண்ணை எதிர்கொள்கிறாள். உதட்டில் வளையம் மாட்டிக் கொண்டு தலையில் துணியை முக்காடாக அணிந்து கொண்டு வித்தியாசமாக இருக்கும் பெண் அவள். ஏதாவது வக்கணையாகப் பேசிக் கொண்டேயிருக்கும் அவள் ஜஸ்டினைக் கொல்லப் போவதாகச் சொல்லிவிட்டு ஒரு மிரட்டு மிரட்டுகிறாள். பயத்தில் அவசர அவசரமாகக் கிளம்பும் ஜஸ்டினின் காருக்கு முன்னால் தனது காரை நிறுத்தி கண்ணாடி வழியாக ஜஸ்டினைப் பார்க்கிறாள். படம் பார்த்துக் கொண்டிருந்த போது சிலிர்த்துப் போய்விட்டது. இதுவரை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த படம் வேகம் எடுக்கிறது.

அரண்டு போகும் ஜஸ்டின் பதறியடித்துக் கொண்டு விடுதிக்கு வருகிறாள். விடுதியின் காவலரிடம் தான் வித்தியாசமான அனுபவத்தை எதிர்கொண்டதாகச் சொல்கிறாள். அவர் தைரியமூட்டுகிறார். தாங்கள் பார்த்துக் கொள்வதாக நம்பிக்கை கொடுக்கிறார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே கொலைகாரி இன்னமும் மூன்று ஆண்களுடன் சேர்ந்து விடுதிக்கு வருகிறாள். ‘கிறிஸ்டியைக் கொல்’ என்பதுதான் மூல மந்திரம். திகில் ஆரம்பமாகிறது. அவர்களிடம் சிக்கிக் கொள்ளும் ஜஸ்டின் தான் கிறிஸ்டி இல்லையென்றும் தன்னுடைய பெயர் ஜஸ்டின் என்றும் சொல்கிறாள். அவர்கள் கேட்பதாக இல்லை. ஜஸ்டின் தப்பித்து ஓடுகிறாள். எதிர்ப்படும் விடுதிக் காவலர்களைக் கொன்றுவிட்டு ஜஸ்டினை வெறித்தனமாகத் தேடுகிறார்கள். படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஒற்றைப் பெண்மணி, துணைக்கு யாருமே இல்லாத வளாகம், திகில் நிறைந்த அந்த இரவில் தன்னைக் கொல்ல வந்திருக்கும் நான்கு பேரையும் சமாளிக்கத் தொடங்குகிறாள். ஓடுவதும் ஒளிவதுமாகத் திரியும் ஜஸ்டினாகவே பார்வையாளனும் மாறிப் போய்விடுவதுதான் படத்தின் வெற்றி.

இந்தக் காலத்தில் படம் அல்லது காட்சியின் வழியாக மனிதர்களை மிரட்டுவது லேசுப்பட்ட காரியமில்லை. ஃபேஸ்புக் யுகத்தில் எவ்வளவு குரூரமான நிகழ்வினையும் சர்வ சாதாரணமாகத் எடுத்துக் கொள்ள பழகிக் கொண்டிருக்கிறோம். முகம் தெரியாமல் வெட்டிச் சிதைக்கப்பட்ட நிழற்படத்தினை லைக் போட்டு தாண்டிச் செல்கிறோம். விபத்தில் தலை நசுங்கிக் கிடப்பவனுக்கு RIP என்ற ஒரு பின்னூட்டத்தோடு அடுத்த வேலைக்கு நகர்ந்து விடுகிறோம். ஒருவிதத்தில் நம் மனங்கள் இறுகிக் கொண்டிருக்கின்றன. இல்லையா? சமீபத்தில் ஒரு கோழி இறைச்சிக் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு மனிதர் தனது குழந்தையோடு வந்திருந்தார். பேசக் கூட பழகியிருக்காத பச்சிளம் குழந்தை அது. கோழி வெட்டப்படுவதைக் காட்டி ‘அங்க பாரு...கோழியை அறுக்கிறாங்க..ரத்தம் பாரு’ என்று காட்டிக் கொண்டிருந்தார். வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் ‘இதையெல்லாம் ஏன் காட்டுறீங்க?’ என்று கேட்டுவிட்டேன். ‘இதெல்லாம் பழகணும்....ரத்தத்தைப் பார்த்து பயப்படாம வளரணும்...அப்போத்தான் சமாளிக்க முடியும்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் தனது பிரதாபத்தை குழந்தையிடம் தொடங்கியிருந்தார். இந்தப் பதிலைக் கேட்டு எச்சிலைக் கூட என்னால் விழுங்க முடியவில்லை. மனிதர்கள் எவ்வளவு மாறிக் கொண்டிருக்கிறோம்? குழந்தைக்கும் இதே மனநிலைதானே வரும்? அடுத்தவனின் மரணத்திலும் சாவிலும் சிறு சலனம் கூட அடையாத சமூகமாக உருவாகிக் கொண்டிருக்கிறோம். எதற்குமே பயப்படாத வெறியெடுத்த சமூகம்தான் நம்முடைய பாதையாக இருக்கிறது.

இந்தச் சூழலில் ஒருவனை சினிமாவின் வழியாக பயப்படுத்த விரும்பினால் அந்தப் படத்தின் பாத்திரமாக பார்வையாளன் தன்னை உணர வேண்டும். அதைக் கிறிஸ்டி செய்கிறது.

உதவி இயக்குநர் சொன்ன விஷயத்திற்கு வருகிறேன். படம் ஆரம்பிப்பதே ஒரு கொலையில்தான். எதற்காக அந்தக் கொலை நடைபெறுகிறது என்பதற்கான விடை படத்தின் இறுதியில் இருக்கிறது. ஜஸ்டினின் வகுப்பில் ஆசிரியர் சோடியம் நைட்ரேட் பற்றி பாடம் எடுக்கிறார். ஏன் அந்தப் பாடக் குறிப்பு வருகிறது என்ற கேள்விக்கான விடை படத்தின் இறுதியில் வருகிறது. இதைத்தான் அந்த உதவி இயக்குநர் சொல்லியிருக்கிறார் - படத்தில் சம்பந்தமில்லாத காட்சி என்று எதுவும் இருக்கக் கூடாது என்று. இந்தப் படத்தில் Randomness உண்டு. படம் ஆரம்பித்தவுடன் சில காட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகின்றன. சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் எந்தவொரு காட்சியும் அவசியமில்லாதது என்று சொல்ல முடியவில்லை. Random ஆன காட்சிகளை மிகச் சிறந்த வகையில் ஒற்றை Loop ஆக மாற்றியிருப்பதுதான் திரைக்கதையமைவின் முக்கியமான அம்சம்.

ஆள் நடமாட்டமில்லாத கல்லூரி வளாகத்தில் வெளிச்சம் குறைவான இருள் நேரத்திலேயே இரண்டு மணி நேரத்தையும் ஓட்டுகிறார்கள். குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு, படுபயங்கர சண்டை என்று எதுவுமேயில்லை. வழக்கமான த்ரில்லர் படங்களில் காட்டப்படும் வன்முறைக் காட்சிகள் இல்லை. இவையெல்லாம் எதுவுமேயில்லாமல் படத்தின் ஒளிப்பதிவிலும் இசையிலும் நடிகர்களின் முகபாவனையிலுமே நம்மை நடுங்கச் செய்கிறார்கள். அதிலும் வில்லியின் ஆட்களாக வரும் மூன்று ஆண்களும் முகமூடி அணிந்து கொள்கிறார்கள். ஆக நாயகியும் வில்லியும்தான் படத்தின் மிகப்பெரிய பலம். அசால்ட்டாக கலக்கியிருக்கிறார்கள்.

வெறும் துரத்தலும் தப்பித்தலுமாக மட்டுமே படம் இல்லை. அவ்வப்போது நாயகி தனது அறிவைப் பயன்படுத்துகிறாள். உதாரணமாக, ஒரு காட்சியில் நாயகியை ஒருவன் துரத்திக் கொண்டு வருகிறான். அவள் மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்கும் அறையை நோக்கிக் கத்தியை எடுத்துக் கொண்டு நகர்கிறான். எப்படியும் கொன்றுவிட வேண்டும் என்கிற நினைப்பில் அறைக்குள் நுழைகிறான். ஆனால் அந்த அறையில் அவள் இருப்பதில்லை. தனது குரலை ரெக்கார்டரில் பதிவு செய்து வைத்துவிட்டு அவள் வேறு அறையில் ஒளிந்திருக்கிறாள். ரெக்கார்டரைப் பார்த்து அவன் சுதாரிப்பதற்குள் ஓடி வந்து தாக்குகிறாள். இப்படியான சுவாரஸியங்கள் படம் நெடுகவும் உண்டு. செல்போன் சிக்னல் ஜாமர், ஐன்ஸடைனின் கண்டுபிடிப்பு, ஹெய்ஸன்பெர்க்கின் நிலையற்ற தன்மை குறித்தான விளக்கங்கள் போன்ற அறிவுசார்ந்த விஷயங்கள் ப்ளாஷ் அடித்துவிட்டுச் செல்வது படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.

அமெரிக்காவின் கல்வி வளாகங்களில் அவ்வப்போது யாராவது துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டுத் தள்ளுகிறார்கள் என்கிற செய்திகளிலிருந்துதான் இந்தக் கதை உருவாகியிருக்கக் கூடும். அதை சற்று மாற்றியிருக்கிறார்கள். அதே பாதுகாப்பு பலவீனமான கல்வி வளாகம்தான் களம். ஆனால் எல்லோரையும் பெரும்மொத்தமாகச் சுடுவதற்கு பதிலாக ஒரு பெண்ணைக் குறி வைத்து உள்ளே நுழைகிறார்கள். அவர்கள் நுழைந்த பிறகு அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தோடு பார்வையாளனை ஒன்றச் செய்கிறார்கள். பாத்திரம் பயப்படும் போது பார்வையாளன் பயப்படுகிறான். நாயகி மூச்சு வாங்கும் போது நமக்கு மூச்சு நிற்கிறது. இதை இயக்குநர் அட்டகாசமாகச் செய்து முடித்திருக்கிறார். மையக் கதையோடு சேர்த்து இந்தக் கொலைகளை ஏன் செய்கிறார்கள்? இணையத்தில் எதற்காக அவற்றை அப்லோடு செய்கிறார்கள் என்பதையெல்லாம் போகிற போக்கில் வேகமாகக் காட்டிவிடுகிறார்கள்.

வெகு நாட்களாக த்ரில்லர் படம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. குரூரம் எதுவும் இல்லாமல் வெறுமனே பயமூட்டும்படியான படம். அதை இந்தப் படம் பூர்த்தி செய்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com