அத்தியாயம் 13: எழுந்து நடக்கத் தொடங்கிய உலகமும் முடமாக்கப்பட்ட இந்தியாவும்!

1931-ல் சாத்தம் ஹவுஸில் காந்தி என்ன சொன்னாரோ அது நேரடியாக அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. ஹெர்டாக் அதை அப்படித்தான் செய்தார்.

1931-ல் சாத்தம் ஹவுஸில் காந்தி என்ன சொன்னாரோ அது நேரடியாக அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. ஹெர்டாக் அதை அப்படித்தான் செய்தார். காந்தி ஆற்றிய உரையின் ஒட்டுமொத்தத்தைக் கணக்கில் கொண்டு அதைப் புரிந்துகொள்ளவேண்டும். பிரிட்டிஷ் காலகட்டத்தில் இந்திய பாரம்பரிய அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு அழிவைச் சந்தித்தன என்பதுதான் காந்தி சொல்லும் முழுச் சித்திரம். கல்வி சார்ந்த அந்தப் பெரும் அழிவு 1820களில் ஆரம்பித்தது, அதற்கு முன்பாக இல்லாவிட்டாலும் என்பதையே மதராஸ் பிரஸிடென்ஸி ஆய்வறிக்கையும் வங்காளம் பிகார் தொடர்பாக டபிள்யூ ஆடம்மின் அறிக்கையும் தெரிவிக்கின்றன. 1822-25 காலகட்டத்தில் மதராஸ் பிரஸிடென்ஸியில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 1,50,000. சுமார் 20- 30 வருடங்களுக்கு முன்பாக இதைவிட அதிக பள்ளிகள் இருந்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அந்தச் சாத்தியக்கூறை நிச்சயம் ஒருவர் மறுக்கவே முடியாது.

மதராஸ் பிரஸிடென்ஸியில் 1823-ல் மொத்த மக்கள் தொகை 1,28,50,941. இங்கிலாந்தின் மக்கள் தொகை 1811-ல் 95,43,610. இரு பகுதிகளின் மக்கள் தொகையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் இங்கிலாந்தில் அனைத்துவிதமான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை (சாரிட்டி, சண்டே, சர்குலேட்டிங் என அனைத்துப் பள்ளிகளையும் சேர்த்து) 75,000. மதராஸ் பிரஸிடென்ஸியில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை இதைவிட இரண்டு மடங்கு அதிகம். மேலும் பிரிட்டனில் இருந்த 75,000 பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் பள்ளி நடந்ததே வெறும் 2-3 மணிநேரம் மட்டுமே. அதுவும் ஞாயிறுகளில் மட்டுமே அந்தப் பள்ளிகள் நடந்தன.

ஆனால், 1803-க்குப் பிறகு இங்கிலாந்தில் ஒவ்வொரு வருடமும் கல்வி கற்கத் தொடங்கியவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்க ஆரம்பித்தது. 1800-ல் 75,000 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 1818-ல் 6,74,883 ஆகவும் 1851-ல் 21,44,377 ஆகவும் அதிகரித்தன. அதாவது ஐம்பது வருடங்களில் 29 மடங்கு அதிகரித்தது. எனினும் இந்த ஐம்பது ஆண்டுகளிலும் கல்வியின் தரம் ஒன்றும் உயர்ந்திருக்கவில்லை. பள்ளி நேரமும் அதிகரித்திருக்கவில்லை. 1835-ல் கல்வி ஒரு வருட காலமாக இருந்தது 1851-ல் இரண்டு வருடமாக ஆனது. அவ்வளவுதான்.

காந்தியும் மதராஸ் பிரஸிடென்ஸி கலெக்டர்களும் டபிள்யூ ஆடம், ஜி.டபிள்யூ லெய்(ட்)னர் ஆகியோருடைய அறிக்கையும் சொல்வது என்னவென்றால் இந்த ஐம்பது ஆண்டு காலகட்டத்தில் இங்கிலாந்தில் நடந்த மாற்றங்களுக்கு நேர் எதிராக இந்தியாவில் கல்வி தேக்க நிலை அடைந்தது என்பதையே காட்டுகின்றன. அதுதான் காந்தியை லண்டன் கருத்தரங்கில் அப்படிப் பேச வைத்தது. இரண்டாவதாக, தனது கூற்றை எட்டு வருடங்கள் கழித்து பின்வாங்க மாட்டேனென்று மறுக்கவும் அதுவே காரணமாக இருந்தது. ஹெர்டாக் போன்ற பாண்டித்தியம் மிகுந்தவர்கள், ஒருவர் சொன்ன வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தார்கள். மேற்கத்திய சமூக பொருளாதாரக் கோட்பாடுகளுக்குப் பொருந்ததாதவற்றில் குற்றம் குறை கண்டுபிடித்தபடியே இருந்தனர்.

புள்ளிவிவரங்கள் சார்ந்த தரவுகளைத்தான் ஹெர்டாகும் அவரைப் போன்றவர்களும் அன்று கேட்டார்கள். அவை கிடைத்திருந்தால் விவாதம் அப்போதே முடிவுக்கு வந்திருக்கும். 1880கள், 1890 களில் மதராஸ் பிரஸிடென்ஸியில் படித்தவர்களின் எண்ணிக்கையை 1822-25ல் படித்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிகார் வங்காளப் பகுதிகளில் முந்தைய காலகட்டத்துத் தரவுகள் போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை. பம்பாயிலும் கிடைக்கவில்லை. எனவே அந்தப் பகுதிகளின் தரவுகளை இப்படி ஒப்பிட்டுப் பார்க்க இயலவில்லை.

மதராஸ் பிரஸிடென்ஸியின் பொது கல்வி இயக்குநரின் 1879-80ம் ஆண்டுக்கான அறிக்கையின்படிப் பார்த்தால் கல்லூரிகள், மேல்நிலை, இடைநிலை, ஆரம்பப் பள்ளிகள் விசேஷப் பள்ளிகள், தொழிற்கல்வி மையங்கள் உட்பட மதராஸ் பிரஸிடென்ஸியில் இருந்த அனைத்துவகைப் பள்ளிகளின் எண்ணிக்கை 10,553. இதில் ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 10,106. அங்கு படித்தவர்களில் 2,38,960 ஆண்கள். 29,419 பெண்கள்.

அந்தக் காலகட்டத்தில் மொத்த மக்கள் தொகை 3,13,08,872. 1879-80ல் கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கையை 1822-25-ல் படித்த பெண்களோடு ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. ஆனால், ஆண்களின் விகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டிருக்கிறது.

1822-25 காலகட்டத்தில் பயன்படுத்திய கணக்கீட்டையே 1879-80க்கும் பயன்படுத்துவோம். அதாவது மொத்த மக்கள் தொகையில் ஒன்பதில் ஒரு பங்கு பேர் பள்ளிக்குச் செல்லும் வயதினராக இருப்பார்கள். ஆண்களுடைய எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால் பள்ளிக்குச் செல்லும் வயதினர்களின் எண்ணிக்கை 17,39,400 ஆக இருக்கும். பள்ளியில் படிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 2,18,840 ஆக இருக்கும்நிலையில் அந்த வயதில் பள்ளிக்குச் செல்லவேண்டிய மாணவர்களின் சதவிகிதத்தில் அது 12.58% ஆக இருக்கும். ஆனால், 1822--25-ல் இந்திய பாரம்பரியக் கல்வி சிதைவுற்ற நிலையில் அது 25% ஆக இருந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்துவிதமான கல்வி மையங்களிலும் படிப்பவர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டு பார்த்தால் அந்த எண்ணிக்கை 2,38,960 ஆக அதாவது, 1879-80-ல் அது 13.74% ஆக மட்டுமே இருக்கிறது!

1879-80 லிருந்து 1884-85 காலகட்டம்வரை, மிகச் சிறிய அளவில் என்றாலும் லேசான முன்னேற்றம் தென்படுகிறது. மக்கள் தொகை லேசாகக் குறைந்து 3,08,68,504 ஆக இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கை 3,79,932 ஆகவும் மாணவிகளின் எண்ணிக்கை 50,919 ஆகவும் இருந்தது. கல்வி பெற்ற ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருக்கும் இந்த இடத்தில்கூட பள்ளியில் கற்ற ஆண்களின் எண்ணிக்கை பள்ளிப் பருவத்துக் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையில் 22.15% ஆகத்தான் இங்கும் இருக்கிறது. ஆரம்பப் பள்ளிகளில் ஆண்களின் சதவிகிதம் 18.33% தான். இவை 1822-25 காலகட்டத்து அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைவிட மிகவும் குறைவுதான்.

மாணவிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் பிற பகுதிகளில் அதிகரித்திருக்கிறது. எனினும் மலபாரில் 1884-85-ல் இதுபோன்ற கல்வி மையங்களில் கல்வி கற்ற முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை வெறும் 705 மட்டுமே. 62 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1823-ல் மலபாரில் கல்வி பெற்ற பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 1122. அப்போது மக்கள்தொகை 1884-85-ல் இருந்ததைவிட பாதியாகத்தான் இருந்திருக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

11 வருடங்களுக்குப் பிறகு 1895-96-ல் அனைத்துவகையான கல்வி மையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்கள் தொகை 3,56,41,828 ஆக உயர்ந்தது. கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 6,81,174 ஆக அதிகரித்தது. பெண்களின் எண்ணிக்கை 1,10,460 ஆக அதிகரித்தது. இந்தக் காலகட்டத்தில்தான் அந்த சதவிகிதம் 34.40 % ஆக உயர்ந்து தாமஸ் மன்ரோ 1826-ல் குறிப்பிட்ட 33.3% வீடுகளிலோ பள்ளிகளிலோ கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையை அடைந்தது. இந்தக் காலகட்டத்தில்கூட அதாவது மன்ரோவின் ஆய்வறிக்கைக்கு 70 ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட பள்ளியில் படிக்கும் ஆண்களின் எண்ணிக்கை 28% ஆகத்தான் இருந்திருக்கிறது.

1899-1900 அதாவது 19-ம் நூற்றாண்டின் கடைசி வருடத்தில் கல்வி கற்ற ஆண்களின் எண்ணிக்கை 7,33,923 ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 1,29,068 ஆகவும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்லும் வயதில் இருந்த ஆண்களின் எண்ணிக்கை 26,42,909 ஆக இருந்ததாக மதராஸ் பிரஸிடென்ஸி பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்திருக்கிறார். அப்படியாக அன்று கல்வி பெற்றவர்களின் சதவிகிதம் 27.8% ஆக இருந்திருக்கிறது. இந்த தரவுகளைக் கொஞ்சம் நெகிழ்வாகக் கையாண்டால்கூட 19-ம் நூற்றாண்டின் கடைசி கட்டத்தில் கூடப் பள்ளியில் கற்பவர்களின் எண்ணிக்கை தாமஸ் மன்ரோ குறிப்பிட்டதைவிட குறைவாகவே இருந்திருக்கிறது. இத்தனைக்கும் மன்ரோ குறிப்பிட்ட 1822-25 காலகட்டத்தில் இந்திய பாரம்பரியக் கல்வி சிதைவுற்ற நிலையில்தான் இருந்தது.

19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் நம் காலத்தில் இருப்பவர்களைப் போலவே தமது சாதனைகளை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக புள்ளிவிவிரங்களை மிகைப்படுத்திக் காட்டியிருக்க வாய்ப்ப்பு உண்டு. எனவே, இந்தப் பிந்தைய தரவுகளைக் கொஞ்சம் சந்தேகத்துடன்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், 1822-25-ல் நிலைமை நிச்சயம் அப்படி இருந்திருக்காது. அப்போது அவர்களுக்கு அப்படி மிகைப்படுத்திக் காட்டவேண்டிய எந்த அவசியமும் இருந்திருக்காது.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களில் இருந்து 1822-25-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் சிதைவானது அடுத்த 60 ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பது புரியவருகிறது. அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான பாரம்பரியக் கல்வி மையங்கள் அழிந்துவிட்டன. எஞ்சியிருந்தவையும் பின் 19-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் அமைப்பினால் உள்ளிழுக்கப்பட்டுவிட்டன. 1890-க்குப் பிறகுதான் புதிய கல்வி அமைப்பில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 1822-25-ல் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை இணையாக ஆகியிருக்கிறது. தரத்தைப் பொறுத்தவரையில் எதுவும் சொல்வதற்கில்லை.

மேலே சொல்லியிருக்கும்வகையில் 1880-கள் 90-களில் மதராஸ் பிரஸிடென்ஸியில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையை 1882-85 காலகட்டத்தில் கற்றவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் இருந்து கிடைத்திருக்கும் தீர்மானம் 1882-ல் லெய்(ட்)னர் முன்வைத்த கூற்றுகளுக்கு ஆதாரமாக (அப்படி ஏதேனும் தேவைப்பட்டால்) இருப்பதைப் பார்க்கலாம். முந்தைய 35-40 வருடங்களில் பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி அமைப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதை இந்த லெய்(ட்)னரின் ஆவணம் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com