அத்தியாயம் 14: புள்ளிவிவரங்களைத் தாண்டிய உண்மைகள்

இந்த நீண்ட விவாதத்தில், முக்கியமான ஒரு விஷயம் கவனத்தில் கொள்ளப்படாமலேயே போய்விட்டது.


இந்த நீண்ட விவாதத்தில், முக்கியமான ஒரு விஷயம் கவனத்தில் கொள்ளப்படாமலேயே போய்விட்டது. அதாவது லட்சம் பள்ளிகள் என்றும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு பள்ளி என்றும் மன்ரோவும் பிறரும் சொன்னவையே அனைவருடைய கவனத்தையும் கவர்ந்திருந்தன. இந்தப் பள்ளிகள் எல்லாம் எப்படி நிர்வகிக்கப்பட்டன, எப்படி நடந்தன என்ற முக்கியமான விஷயத்தைப்பற்றி யாரும் அதிக கவனம் செலுத்தவே இல்லை. லெய்(ட்)னர், ஆடம் ஆகியோர் இது தொடர்பாகப் பல சூசகக் குறிப்புகள் தந்திருக்கிறார்கள். இத்தனை நீண்ட காலகட்டத்துக்கு இவ்வளவு பரந்த அளவில் சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் கல்வியைத் தந்த பள்ளிகள் எந்தவித சமூகக் கருத்தியல் பின்புலமோ பொருளாதார ஏற்பாடுகளோ இல்லாமல் நீடித்திருக்கவே முடியாது.

நவீன இந்தியர்கள் இந்தியாவின் கடந்த காலம் மற்றும் நிகழ் காலம் பற்றிப் பொதுவாக அந்நியர் தரும் புள்ளிவிவரங்கள் மற்றும் கருத்துகளையே மேற்கோள் காட்டிப் பேசுவது வழக்கம். ஒரு பிரிவினர் இந்தியா காட்டுமிராண்டித்தனமான ஆணாதிக்கப் பழக்க வழக்கங்கள், அறியாமை, ஒடுக்குமுறை, ஏழ்மை என்ற நிலையிலேயே காலகாலமாக இருந்துவந்ததாக மேற்கத்திய மேற்கோள்களைக் காட்டிப் பேசிவருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியா பெரும்பாலான காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாயமாகவே இருந்திருக்கிறது. மார்க்ஸிய வார்த்தையில் சொல்வதானால் ஆசிய சமுதாய வழிமுறை.

வேறொரு பிரிவினர் இந்தியா எப்போதுமே உன்னதமான நிலையில் இருந்திருக்கிறது. சிற்சில குறைபாடுகள் இங்குமங்குமாக இந்திய சரித்திரத்தில் உண்டு. ஆனால், பெருமளவில் தர்ம சிந்தனையும் நல்லெண்ணமும் கொண்ட அரசர்களால் அது ஆளப்பட்டுவந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

வேறு சிலரோ சார்லஸ் மெட்காஃப், ஹென்றி மெய்ன் போன்றோர் சொல்வதுபோல் இந்தியா ஒரு கிராமப்புறக் குடியரசாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறது என்கிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் சார்பு கல்வி பெற்றதாலோ வேறு ஆழமான காரணங்களாலோ (பிராமண கல்வியின் அதி அறிவார்ந்த மண்டையைப் பிளக்கும் வறண்ட அதீத கல்வி முறையாலோ) இந்தியர்கள் சொல்லவரும் விஷயத்தைப் புரிந்துகொள்ளாமல் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்குபவர்களாக ஆகிவிட்டார்கள். குறியீட்டுரீதியில் சொல்லப்படுவதையும் எழுதப்படுவதையும் புரிந்துகொள்ளும் திறனை இழந்துவிட்டார்கள். இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. அதனால்தான் கிராமப்புற குடியரசுகள் என்றதும் குடியாட்சி என்பதன் உள்ளார்ந்த அர்த்தத்துடன் அதைப் புரிந்துகொள்ளாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை, வாக்களிக்கும் முறை என்பதுபோன்ற அதன் மேலோட்டமான அம்சங்களை மனதில் கொண்டுவந்து ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டுவிடுகிறார்கள்.

சார்லஸ் மெட்கஃபேயும் ஹென்றி மெய்னும் முந்தைய பிரிட்டிஷ் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த வார்த்தையை முன்வைத்திருக்கிறார்கள். அதாவது பின் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்து ஐரோப்பிய பயணிகள், நிர்வாகிகள் அவர்களுக்கு முந்தையவர்கள் ஆகியோர் எழுதியவற்றில் இருந்து அப்படியான பிம்பத்தை முன்வைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷாருக்கு இந்தியர்களைப் பற்றி அப்படிப் புகழ்ந்து சொல்லவேண்டிய எந்த அவசியமும் இருந்திருக்கவில்லை. அவர்கள் சொன்னதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு இந்திய கிராமமும் (கிராமம் என்பதை அவர்கள் எப்படி வரையறுத்தார்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை) ஒரு தனி அரசாங்கம் போல் இருந்திருக்கிறது. அது தனது எல்லைக்குள் சர்வவல்லமை மிகுந்ததாக இருந்திருக்கிறது. அந்தப் பகுதியின் வருவாயை அதுவே நிர்வகித்திருக்கிறது.

இந்த கிராமப்புறக் குடியரசு எப்படி உருவாகியிருந்தது என்பது முக்கியமல்ல. அது ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததா, பல்வேறு ஜாதி, தொழில் குழுவின் பிரதிநிதிகளைக் கொண்டிருந்ததா, அவற்றுக்குள்ளான உப ஜாதிகளைக் கொண்டிருந்ததா, அல்லது குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது வழியில் நிர்வகிக்கப்பட்டதா என்பது முக்கியமல்ல. கிராமப்புறக் குடியரசு என்பது எப்படியான அதிகாரத்துடன் விளங்கியது; எப்படித் தன் வளங்களை அது நிர்வகித்தது; எப்படிப் பகிர்ந்துகொடுத்தது; எப்படிப் பயன்படுத்திக்கொண்டது இவையே இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம்.

அசோகர், விஜய நகரம், மொகலாயர் போன்றவர்களின் சாம்ராஜ்ஜியங்கள் பற்றியும் பிற கீழைத்தேய சர்வாதிகாரம் பற்றியும் எவ்வளவோ எழுதப்பட்டிருக்கின்றன. என்றாலும் இந்திய சமுதாயமும் இந்திய அரசியல் அமைப்பும் சரித்திரம் முழுவதிலும் மையம் அழிக்கப்பட்டதாகவே இருந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போதைய ஆய்வுகளில் மட்டுமல்ல. 18, 19-ம் நூற்றாண்டு அறிக்கைகள், ஆய்வுகள், கையெழுத்துப் பிரதிகள் அனைத்திலுமே இதற்கான சான்றுகள் இருக்கின்றன. ஜஹாங்கீரின் வரி வசூல் தொகையானது அவருடைய சாம்ராஜ்ஜியத்தின் ஒட்டு மொத்த வருமானத்தில் வெறும் ஐந்து சதவிகிதம்மட்டுமே. அவுரங்கசீப் தனது ஆட்சிகாலத்தில் வரி விதிப்பை மிக அதிகமாக அதிகரித்திருந்தபோதிலும் ஒட்டுமொத்த வருவாயில் 20% மட்டுமே அவரால் வசூலிக்கப்பட்டது. இவையெல்லாம் இந்திய அரசு எவ்விதம் நடந்திருக்கிறது என்பதை விளக்குகின்றன.

இந்த மையம் அழிந்த அமைப்புதான் இந்திய அரசைப் பலவீனமானதாக்கியிருக்கிறது; ராணுவரீதியாகப் பலம் குறைந்ததாக ஆக்கியிருக்கிறது என்று சிலர் சொல்வதுண்டு. ஏனென்றால், அதிகாரம் மையத்தில் குவிந்த வலுவான ராணுவ அரசுகள்தான் நிலைத்து நிற்கும். இந்தக் கூற்று கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மைதான். சுமார் 100-200 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய சமூகமும் அரசமைப்பும் எப்படிச் செயல்பட்டன என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். மேலும் இந்திய சமூகத்தின் பல்வேறு பரிமாணங்கள், பலங்கள், பலவீனங்கள் பற்றியும் தெரிந்துகொண்டாகவேண்டும். ஐரோப்பிய எழுத்துகளில் இருந்துமட்டுமல்ல இந்திய படைப்புகளில் இருந்தும் இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பல்வேறு பகுதிகளில் இருக்கும் சமூகங்கள், குழுக்கள் ஆகியவற்றின் நம்பிக்கைகள், பாரம்பரியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூகம் தொடர்பான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஏனென்றால், அந்தத் தகவல்கள்தான் அந்தக் காலகட்ட சமூகத்தைப்பற்றிய அழுத்தமான, நம்பகமான சித்திரத்தைத் தரமுடியும். அவைதான் அந்த சமூகத்தின் அங்கமாக இருந்திருக்கின்றன.

பரந்து விரிந்து கிடக்கும் பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து ஓர் உண்மை தெரியவருகிறது. இந்திய கிராமப்புறங்களின் வருமானத்தில் உள்ளூர் காவல், நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றைப் போலவே கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. இந்த வருமானமே உயர் கல்விக்கு மட்டுமல்லாமல் ஆரம்பக் கல்விக்கும் செலவிடப்பட்டிருப்பதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏற்பாடு நீங்கலாக குழந்தைகளின் பெற்றோரும் காப்பாளர்களும் தங்களால் முடிந்த அளவில் நன்கொடைகள், தானங்கள், வசதி இல்லாத மாணவர்களுக்கு உணவும் உறையுளும் (தங்குமிடமும்) தருதல் என உதவிகள் செய்து இந்தக் கல்வி அமைப்பை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இப்படியாக ஆழமாக வேரூன்றிய, விரிவான, அனைத்து தரப்பினருக்கும் கல்வி வழங்கிய ஓர் அமைப்பு வெறும் கல்விக்கான கட்டணம் அல்லது இலவசக் கல்வி, ஏழை மாணவர்களுக்கு உணவு போன்றவற்றால் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்று நம்புவது அறியாமையே.

1780கள், 90களில் பிகார், வங்காளம் பற்றிய ஆவணங்களின்படி, கால்ஸா நீங்கலாக வேறு பிரிவுகளாகவும் இந்தப் பகுதிகளின் வருவாய் பிரிக்கப்பட்டிருந்தது. கால்ஸா என்பது ஒருவகை வருவாய் வரி வசூல் அமைப்பு. இதுவும் இதோடு சேர்ந்த சில வகைகளுக்கும் வருமானம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது (ஒரு பகுதியில் 80% வருவாய் இவற்றுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது). சக்கரன் ஜமீன், பாஸி ஜமீன் என்பவை அதில் இரு பிரிவுகள். நிர்வாகம், பொருளாதாரம், கணக்கியல் பணிகளுக்கான தொகை இதில் சேகரிக்கப்படும். இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும்வகையில் நிலங்கள் அல்லது பிற வருவாய் மூலங்கள் ஒதுக்கப்படும். பாஸி ஜமீன் என்பது மதம் சார்ந்த தான தருமம் சார்ந்த ஊக்கத்தொகைகளைச் சேகரிக்கும் அமைப்பு. மதம் சார்ந்த செலவினங்கள் பெரிதும் வழிபாட்டு மையங்களின் நிர்வாகத்துக்காகவே ஒதுக்கப்பட்டன. அனைத்துவகையான கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சத்திரங்கள், மடங்கள் ஆகியவற்றுக்கு இந்த வருவாய் மூலங்கள் ஒதுக்கப்பட்டன. அக்ரஹாரங்களுக்கு அல்லது வங்காளத்திலும் தென் இந்தியாவிலும் அழைக்கப்படுவதுபோல் பிரம்மதேயம் என்ற பெயரில் ஒரு பகுதி ஒதுக்கப்படும். எனினும் இந்த ஒதுக்கீடுகள் பலதரப்பட்டவர்களுக்குத் தரப்பட்டிருக்கின்றன. பண்டிதர்கள், புலவர்கள், ஜோதிடர்கள், மருத்துவர்கள், நாவிதர்கள், விதூஷகர்கள், உத்தரபிரதேசத்தில் கங்கைநதி நீரை திருவிழாக்காலங்களில் குறிப்பிட்ட கோவில்களுக்கு எடுத்துச் செல்பவர்கள் எனப் பலதரப்பட்டவர்களுக்கு இப்படியாக நிலங்கள் தானமாகத் தரப்பட்டதுண்டு.

பாஸி ஜமீன் என்ற பெயரில் வரி இல்லாத நிலங்களாகக் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட நிலங்கள் இருந்ததாக வங்காளத்தில் ஹெட்கலீ பகுதி தொடர்பாக 1700-ல் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாஸி ஜமீன் (இது தனி நபர், குழுக்கள், நிறுவனங்கள் என அனைவருக்கும் தரப்பட்டது) பிகார், வங்காளத்தில் பாஸி ஜமீன் தரப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,000லிருந்து 36,000 ஆக இருந்திருக்கிறது. ஹெச்.டி.பிரின்ஸெப் என்பவரின் கூற்றுப்படி 1780-ல் வங்காளத்தில் பாஸி ஜமீன் பதிவுக்கு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 72,000ஆக இருந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com