அத்தியாயம் 15: பாரம்பரியக் கல்வியின் வீழ்ச்சி!

மதராஸ் பிரஸிடென்ஸியிலும் நிலைமையில் பெரிய மாற்றமில்லை. இத்தனைக்கும் பிரிட்டிஷார் இந்தப் பகுதியின் முழு எஜமானர்கள் ஆனதும்


மதராஸ் பிரஸிடென்ஸியிலும் நிலைமையில் பெரிய மாற்றமில்லை. இத்தனைக்கும் பிரிட்டிஷார் இந்தப் பகுதியின் முழு எஜமானர்கள் ஆனதும் 1750-1800 காலகட்டத்தில் இந்திய பாரம்பரிய அமைப்புகளை சிதைத்து அழிக்க ஆரம்பித்திருந்தார்கள். 1801 வாக்கில் இன்றைய ராயல் சீமா, கன்னட பெல்லாரி மாவட்டம் போன்ற பகுதிகளில் 35% நிலம் வரியில்லா நிலமாக இருந்திருக்கிறது. தாமஸ் மன்ரோ அந்த எண்ணிக்கையை ஐந்து சதவிகிதமாகக் குறைக்க முயற்சிகள் எடுத்திருக்கிறார். இந்த முயற்சிகள் பிற மாநிலங்களிலும் இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. சில இடங்களில் அவை நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுத்துக்கொண்டது.

1805-20 காலகட்டத்தில் மதராஸ் பிரஸிடென்ஸியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிடைத்த வருவாய் கணக்குகள் இந்த நிலப்பங்கீடு பற்றி (அல்லது தானிய, பண நன்கொடைகள்) பல தகவல்களைத் தருகின்றன. அவை அதுவரையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டன. அல்லது பல்வேறு தனிநபர்கள், நிறுவனங்களுக்கு பிரித்துத் தரப்பட்டிருந்தன. அரசு எப்போதெல்லாம் புதிய கொள்கையை அமல்படுத்தியதோ அல்லது யாருக்கேனும் புதிதாக இந்தச் சலுகைகள் தரப்பட வேண்டியிருந்தாலோ இந்தப் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சாவூரில் 1813-ல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, நில மானியங்கள் பெற்ற சிறிய மற்றும் பெரிய கோவில்களின் எண்ணிக்கை 1013. தனி நபர்களின் எண்ணிக்கை 350-400. கோவில்களுக்குக் கிடைத்த தொகை 43,037 ஸ்டார் பகோடாக்கள். தனி நபர்களுக்கு 5929 ஸ்டார் பகோடாக்கள் (ஸ்டார் பகோடா என்றால் ரூ 3.50).

வங்காளம், பிகார், மதராஸ் பிரஸிடென்ஸியைப் போலவேதான் பம்பாய் பிரஸிடென்ஸி, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற பிற பகுதிகளும் இருந்தன. இதுபோன்ற நில மானியங்களாக ஒதுக்கப்பட்டவை எல்லா இடங்களிலும் பிரிட்டிஷ் ஆவணங்களைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. பிரிட்டிஷார் அனைத்தையும் தலைகீழாகக் கவிழ்த்துப் போடும்வரை இந்தியப் பாரம்பரிய சமுதாயத்தில் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கானது சமூக, கலாசார கட்டமைப்புகளின் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

இதுபோல் மானியமாகத் தரப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்தவர்களால் செலுத்தப்பட்ட வரி வெகு குறைவாக இருந்தது. வங்காளத்தின் ஆய்வாளர்களால் 1770-கள் 80-களின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி, பாஸி நில மானியம் பெற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட வரி கால் பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்காக இருந்தது. கால்ஸா நிலங்களாக வகைப்படுத்தப்பட்டவற்றுக்கு பிரிட்டிஷார் விதித்த அதே அளவு வரி இந்த நிலங்களுக்கும் விதிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது. இந்த வகை நிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து பிற வகை நிலங்கள் எல்லாம் மறைய ஆரம்பித்தன. மதராஸ் பிரஸிடென்ஸியில் இருக்கும் பல்வேறு மாவட்டங்களிலும் 1820-கள் வரை நிலைமை இதுவாகவே இருந்திருக்கிறது. மேலும் மலபார் பிரதேசத்தில் ஆச்சரியப்படும்வகையில் 1750 காலகட்டம் வரையிலும் நில வரி என்பதே இருந்திருக்கவில்லை. வேறுவித வர்த்தக, சட்டரீதியான வரிகள் இருந்திருக்கின்றன. ஐரோப்பியர்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றோரால் அமைதி முற்றாகக் குலைக்கப்படுவதுவரை எந்தவொருவிதமான வரியும் மலபார் பிரதேசத்தில் யாரும் தந்திருக்கவில்லை. திப்புவின் காலகட்டத்தில்கூட மலபாரில் வரி மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது.

படை வீரர்கள், உள்ளூர் காவலர்கள் எனப் பல்வேறு பிரிவினருக்குத் தரப்பட்ட நில மானியங்கள் பிரிட்டிஷாரின் ஆட்சி அமலானதைத் தொடர்ந்து (வங்காளம், பிகாரில் 1757-58 வாக்கில் ஆரம்பிக்கப்பட்டன) ரத்து செய்யப்பட்டன. சக்கரன் ஜமீன், பாஸி ஜமீன் ஆகியவை அதன் பிறகே வந்தன. 1770 வாக்கில் பிந்தையது பாதிப்படைந்தது. 1800 வாக்கில் இவற்றில் பெரும்பகுதி சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எஞ்சியவற்றில் பெரும்பாலானவற்றுக்கு வழங்கப்பட்ட வசதிகள் பல வழிகளில் குறைக்கப்பட்டுவிட்டன. அந்த வழிகளில் ஒன்று சலுகை பெற்றவர்களுக்கும் அவர்களுக்கு வருமானத்தைத் தரும் மூலங்களுக்கும் சேர்த்து வரி விதிக்கப்பட்டன. வரி உயர்த்தப்பட்டதோடு, ஒதுக்கப்பட்ட நிலங்களின் அளவும் குறைக்கப்பட்டது. அடுத்ததாக பணத்தின் மதிப்பு கீழிறக்கப்பட்டது. தனி நபரானாலும் நிறுவனமானாலும் முந்தைய வருமான மூலங்களில் சிலவற்றைத் தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும் முந்தைய ஆண்டுகளில் செய்ததுபோல் எந்தச் செயலையும் செய்ய முடியாதபடிக்கு நிலைமை மோசமானது. யாருடைய மானியங்கள் முற்றாக ரத்து செய்யப்பட்டனவோ அவர்கள் வறுமையில் வீழ்ந்தனர். இந்த வருமானத்தை நம்பியிருந்த பல்வேறு சமூகச் செயல்பாடுகளை நிறுத்த வேண்டியது வந்தது. அரசின் தடை போன்ற காரணத்தோடு போதிய பண வசதி இல்லாததால் பல விஷயங்கள் முடங்கிப் போயின.

சம்ஸ்கிருதம், பாரசீக மொழி சில நேரங்களில் ஆரம்பக் கல்வி போன்றவற்றை வழங்கிய ஆசிரியர்களுக்கு சில மானியங்கள் தரப்பட்டது தொடர்பாக இங்குமங்குமாக சில குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. வேறு சில கலெக்டர்கள் வேறு வகையான மானியங்கள் இருந்தது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள் (அவை திப்பு சுல்தானால் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன. பிரிட்டிஷார் அந்தப் பகுதிகளைக் கைப்பற்றியபோது அந்த வருவாயை அரசுக்குக் கிடைக்கும்படிச் செய்தனர்).

1792-1806 காலகட்டத்து ஆவணங்கள், முன்பு மானியமாகக் கொடுக்கப்பட்டவற்றை திப்பு சுல்தான் பல்வேறு உத்தரவுகள் மூலம் ரத்து செய்ததாகத் தெரிவிக்கின்றன. ஆனால், அவையெல்லாம் வருவாய் அதிகாரிகளின் விருப்பத்துக்கு ஏற்ப பல நேரங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன என்றும் அதே ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எதிரிகளுக்கு ஒருவித அச்சுறுத்தலாக இருக்கும் என்று நினைத்து திப்பு செய்த இந்த விஷயங்கள் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் நடைமுறையாகவே மாற்றப்பட்டுவிட்டன.

பிரிட்டிஷார் கைப்பற்றிய இடங்களில் (ஆற்காடு நவாபின் சார்பாக அல்லது ஹைதராபாத் நிஜாமின் சார்பாகக் கைப்பற்றிய இடங்கள் அல்லது தஞ்சாவூரின் பல்வேறு ராஜாக்களின் சார்பாக ஆட்சி புரிந்த இடங்களில்) இந்த நில மானிய ரத்து 1800-க்கு முற்பட்ட காலத்தில்தான் மும்முரமாக நடந்தேறியிருக்கின்றன. 1750-களுக்குப் பிறகு இந்த நடைமுறை ஆரம்பித்தது. 1780-களில் தென் இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் வலுவடைய ஆரம்பித்தபோது ஆற்காடு நவாபுக்காக வசூலிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட வருவாய்கள் அனைத்துமே பிரிட்டிஷாருக்கே போய்ச் சேர்ந்தது. மாவட்டச் செலவினங்கள் என்ற பெயரில் தரப்பட்ட பணமானது அப்படியே முற்றாகக் குறைக்கப்பட்டது. முன்பு அந்தப் பணம் அந்த மாவட்டத்துப் பணிகளுக்காக மாவட்டத்தாலேயே பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவை பெயரளவில் ஆற்காடு நவாபின் கணக்கு புத்தகங்களில் காட்டப்பட்டன. திருச்சி போன்ற சில மாவட்டங்களில் மாவட்டச் செலவுகள் 93% குறைக்கப்பட்டுவிட்டது. 2,82,148 ஸ்டார் பகோடாவாக இருந்த அந்தச் செலவு வெறும் 19,143 ஆகக் குறைக்கப்பட்டது.

இந்தியப் பாரம்பரியக் கல்வி பற்றிய பெல்லாரி கலெக்டரின் அறிக்கை மிகவும் புகழ் பெற்றது. இந்தியப் பாரம்பரியக்கல்வி பற்றிய கட்டுரைகள் பலவற்றிலும் அது மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. மிகவும் நீளமான அது பல அம்சங்களைத் தெளிவுபடுத்தக்கூடியது. அந்தத் தரவுகள் அத்துனை விரிவானவை அல்ல. என்றாலும் ஒரு கலெக்டர் என்ன சொல்ல முடியுமோ அதை தெரிவிக்கின்றன. தேசத்தைப் பீடித்த பொதுவான வறுமையினால் கல்வி அமைப்பு மெள்ள சிதைய ஆரம்பித்துவிட்டிருக்கிறது என்று அதில் தெரிவித்திருக்கிறார்.

‘ஐரோப்பிய பொருள்களின் வருகையால் உள்ளூர் தொழிலாளர் வர்க்கங்கள் வெகுவாக நசிந்துவிட்டன; உள்ளூர் அரசு மற்றும் அதிகாரிகள் தமது முதலீட்டை உள்ளூர் தொழில்களுக்குத் தந்து அதை விரிவுபடுத்தியிருந்தனர். அந்த முதலீடு தற்போது ஐரோப்பியர்கள் வசம் போய்விட்டிருக்கிறது. மேலும் ஐரோப்பியர்கள் இந்தியாவில் தற்காலிக முதலீடு செய்வதுகூட சட்டத்தால் தடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தியப் பணமானது தினம் தினம் உறிஞ்சப்பட்டதால் வறுமைக்குள் இந்தியா வீழ்ந்துவிட்டிருக்கிறது. இதனால் கிராமங்களில் முன்பு பல பள்ளிகள் இருந்தன. இப்போது ஒன்று கூட இல்லை.

எந்தவொரு நாட்டிலும் அரசின் ஆதரவு இல்லையென்றால் அங்கு கல்வி வளர்ச்சி அடையவே முடியாது. இந்தியாவில் அறிவியல் துறைகளுக்கு முன்பு தரப்பட்டு வந்த உதவிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இப்போது மாவட்டத்தில் இருக்கும் 533 கல்வி மையங்களில் ஒன்றுக்குக்கூட அரசின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதைச் சொல்ல வெட்கப்படுகிறேன். முந்தைய இந்து அரசாங்கங்களில் கல்விக்கு மிக அதிக அளவில் பண உதவியும் நில மானியங்களும் தரப்பட்டிருந்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போது இந்த மாவட்டங்களில் பிராமணர்களுக்குத் தரப்படும் அந்தக் கணிசமான உதவிகள் இதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.’

இறுதியாக அவர் சொல்கையில் : முந்தைய அரசுகள் கொடுத்த உதவிகள் எந்தவித வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்படாதவையாக இருந்திருக்கின்றன. சில துறவிகள் அல்லது பண்டிதர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள அல்லது அவர்களுடைய ஆசியைப் பெறும் நோக்கில் இந்த நல்கைகள் மிகவும் தாராளமாகத் தரப்பட்டன. அப்படி நல்கைகள் பெற்ற அனைவருமே ஏதாவது கல்வித் துறைகளுக்கான பள்ளிகளை நடத்தி வந்திருக்கிறார்கள். அங்கு இலவசமாகவே கல்வி தரப்பட்டிருக்கிறது. நல்கைகள் வழங்கும்போது கல்விக்கு என்று தனித்துக் கூறப்பட்டிருக்கவில்லையே தவிர இந்த இலவசக் கல்வியைத் தரும் கடமை உள்ளடங்கியதாகவே இருந்திருக்கிறது.

பெல்லாரியின் கலெக்டர் ஏ.டி.கேம்பல் மிகவும் அனுபவமும் திறமையும் வாய்ந்தவர். வருவாய்த்துறை செயலராக இருந்தவர். தாம்ஸ் மன்ரோவின் அன்புக்குப் பாத்திரமானவர். 1826 மார்ச் 10-ல் தாமஸ் மன்ரோவுக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்திய பாரம்பரியக் கல்வி முந்தைய காலங்களில் மிகச் சிறப்பானதாக இருந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார். பிரிட்டிஷார் அதிகாரக்குவிப்பில் ஈடுபட்டு மையத்தில் அனைத்தையும் குவிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து அந்தப் பாரம்பரியக் கல்வி அமைப்பு பாதிப்புக்குள்ளாகி சிதைவுற்று அழிந்தேபோனது. இந்த உண்மையை கவர்னர் போன்ற பெரிய பதவியில் இருந்த தாம்ஸ் மன்ரோவால் அதிகாரபூர்வ அரசு ஆவணங்களில் நிச்சயம் இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லியிருக்க முடியாதுதான்.

இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம் சேகரிக்க முடியும். இந்தியாவின் பல்வேறு பகுதிகள் பற்றிய பிரிட்டிஷ் காலகட்டத்து ஆவணங்களைத் தேடிப் பார்த்தாலே போதும். லெய்(ட்)னர் பஞ்சாபின் நிலை தொடர்பாக இப்படித்தான் நடுநிலையோடு ஆராய்ந்து தன் முடிவுகளை முன்வைத்திருக்கிறார். காந்திஜியைப் பொறுத்தவரையில் அவருடைய உள் மனது இது தொடர்பாக என்ன சொன்னதோ அதுவே உண்மையைப் புரிந்துகொள்ளப் போதுமானது. அதனால்தான், ‘என் முன் தீர்மானம் அல்லது யூகம் சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. சாத்தம் ஹவுஸில் நான் சொன்னதை பின்வாங்க நான் தயாரில்லை’ என்று ஹெர்டாகுக்கு மிகுந்த தன்னம்பிக்கையுடன் பதில் தெரிவிக்க அவரால் முடிந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com