ரிட்டர்ன் டு செண்டர் (Return To Sender)

அமெரிக்க வாழ் நண்பரொருவர் ஒரு படத்தை பரிந்துரைத்திருந்தார். அவர் மரண தண்டனைக்கு ஆதரவானவர். ஒரு குற்றத்தினால்

அமெரிக்க வாழ் நண்பரொருவர் ஒரு படத்தை பரிந்துரைத்திருந்தார். அவர் மரண தண்டனைக்கு ஆதரவானவர். ஒரு குற்றத்தினால் பாதிக்கப்பட்டவனின் மனநிலையிலிருந்து அந்தப் பிரச்சினையை அணுகினால் மரண தண்டனை சரியானதுதான் என்கிற முடிவுக்கு வந்துவிடலாம் என்று சொல்லியிருந்தார். 

கதையின் நாயகி செவிலியராக இருக்கிறாள். அறுவை சிகிச்சை செய்யும் செவிலியராக வேண்டும் என்பதுதான் அவளது லட்சியம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாள். கிட்டத்தட்ட பணிமாற்றம் உறுதியாகிவிட்டது. அதே சமயத்தில் ஒரு வீடு வாங்கவும் விரும்புகிறாள். அதற்காக ஒரு தரகரை அணுகுகிறாள். அவளுக்கு பிடித்தமான வீடும் அமைந்துவிடுகிறது. புது வீடு; புது வேலை- மிக சந்தோஷமாக இருக்கிறாள். நாயகியுடன் அவளுடைய அப்பாவும் அவர் வளர்க்கும் ஒரு செல்ல நாயும் இருக்கிறது. நாயகிக்கும் நாய்க்கும் ஏழாம் பொருத்தம். அவளுக்கு அப்பாவைப் பிடிக்கிறது. ஆனால் நாயைப் பிடிப்பதில்லை. நாய் பிடிக்கவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்னையா? வாழ்க்கை வெகு அமைதியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

இந்தச் சமயத்தில் அவளுடைய தோழி கெவின் என்னும் மனிதரைப் பற்றிச் சொல்கிறாள். கெவினுடன் பழகிப் பார்க்கச் சொல்லி பரிந்துரைக்கிறாள். ஒருவேளை பிடித்திருந்தாள் நாயகி தனிமையிலேயே இருக்க வேண்டியதில்லை என்பது தோழியின் பரிந்துரைக்கான காரணம். காதலில் விழக் கூடும். அதற்கு நாயகியும் சம்மதிக்கிறாள். கெவினைச் சந்திக்க ஒத்துக்கொண்ட நாளன்று நாயகியின் வீட்டுக்கு யாரோ வருகிறார்கள். வந்திருப்பவன் கெவினாக இருக்கக் கூடும் என்று நாயகி நம்புகிறாள். அவனை உள்ளே வரச் சொல்கிறாள். அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றவுடன் வந்தவன் அத்து மீறுகிறான். தனது அனைத்து பலத்தையும் முயன்று பார்க்கிறாள். ஆனால் அவனுக்கு முன்னால் அவளது பலம் வேலைக்கு ஆவதில்லை. அவளுடன் முரட்டுத் தனமாக மோதி அவளைச் சூறையாடுகிறான். காரியம் முடிந்தவுடன் அவன் தப்பி ஓடுகிறான்.

இந்தச் சமயத்தில் கெவின் நாயகியைத் தேடி வருகிறான். அப்படியென்றால் முன்பு வந்திருந்தவன் கெவின் இல்லையா? ஆமாம். அவன் கெவின் இல்லை. கெவின் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கிறான். ‘அவனை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா?’ என்று விசாரணையின் போது கேட்கிறார்கள். அவனை நாயகி முன்பு எப்பொழுதோ பார்த்திருக்கிறாள். அதை காவலர்களிடம் தெரிவிக்கிறாள். மருத்துவமனையில் அவள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது அந்தக் காமுகனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். நாயகியின் முகம் கைககள் என சகல இடங்களிலும் காயம்பட்டு ரத்தம் கட்டிப் போயிருக்கிறது. சிகிச்சை முடிந்தவுடன் இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிக்கிறாள். ஆனால் அதுவொன்றும் அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. அவளைச் சுற்றிய விஷயங்கள் மட்டும் மாறியிருக்கவில்லை. அவளே நிறைய மாறியிருக்கிறாள். மனநிலை மட்டுமில்லாது உடல்நிலையும் கூட மாறியிருக்கிறது. அவளது வலது கையில் நடுக்கம் உண்டாகியிருப்பதை கவனிக்கிறாள். அது அவளது கனவில் விழுந்த பேரிடி. இந்த நடுங்கும் கையை வைத்துக் கொண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது என உடைந்து போகிறாள்.

அந்தச் சம்பவம் நாயகியை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீண்டாக வேண்டும். தந்தையின் நாயுடன் இணக்கமாக பழகுகிறாள். இதை ஒரு குறியீடாக புரிந்து கொள்ளலாம். ஏனெனில் அதே சமயத்தில் தன்னைச் சூறையாடியவனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்புகிறாள். அந்தக் கடிதத்தை தபால் பெட்டியில் போடுவதற்கு முன்பாக மெலிதாகப் புன்னகைக்கிறாள். கிட்டத்தட்ட தன்னைக் கடிக்க வந்த நாயுடன் இணக்கம் ஆவதைப் போலத்தான். ஆனால் இவள் அனுப்பும் கடிதங்கள் அத்தனையும் இவளுக்கே திரும்பி வருகின்றன. Return to Sender. படத்தின் பெயரும் அதுதான்.

2015 ஆம் ஆண்டில் வெளியான படம்.

இப்படித் திரும்ப வரும் கடிதங்களை சலிக்காமல் உறை மாற்றி மீண்டும் அனுப்புகிறாள். இப்படியான கடிதக் குவியல்களுக்கு மத்தியில் ‘you won' என்ற பதில் வந்து சேர்கிறது. அது அவன் அனுப்பிய பதில். பிறகு இருவரும் சிறைச்சாலையில் சந்தித்துப் பேசுகிறார்கள். இப்படியான சந்திப்புகளும் கடிதப் பரிமாற்றங்களும் இருவரையும் நெருங்கச் செய்கின்றன. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நாயகியின் வீட்டுக்கு வருகிறான். அவள் நன்றாகத்தான் பேசுகிறாள். ஆனால் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. அவளது வீட்டு முன்புறத்தில் இருக்கும் சில வேலைகளைச் செய்து கொடுக்கிறான். இந்த விவகாரம் நாயகியின் தந்தைக்குத் தெரிய வருகிறது. இருவருக்குமிடையில் செமத்தியான சண்டை. ‘அவனைப் போய் நீ...’ என்று இழுக்கிறார். ஆனால் நட்பு நின்ற பாடில்லை. தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இதுவரையிலும் சொன்ன கதைக்கும் முதல் பத்திக்கும் சம்பந்தமேயிருக்காது. ‘எவன் கெடுத்தானோ அவனையே கட்டிக்கோ’ என்று தீர்ப்பெழுதும் ஆலமர பஞ்சாயத்து மாதிரிதானே கதை போய்க் கொண்டிருக்கிறது? ஆனால் அப்படியில்லை. அவனது பலாத்காரத்தால் அவள் பாதிக்கப்பட்டதை மெல்ல மெல்ல காட்சிப்படுத்தி பிறகு அவள் இயல்பு நிலைக்கு மாறுவதாகக் காட்டுகிறார்கள். அவள் உண்மையில் இயல்பு நிலைக்கு மாறுவதேயில்லை. அதைப் படத்தைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும். க்ளைமேக்ஸைச் சொல்லிவிட்டால் படத்தின் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதால் அதைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதைச் சொல்லாமல் இந்தப் படம் குறித்தான அறிமுகத்தை எப்படி முடிக்க முடியும் என்று தெரியவில்லை.

இதை வெறும் திரைப்படமாகப் பார்த்தால் அவ்வளவு சுவாரஸியமான படம் என்று சொல்ல முடியாது. அவன் நாயகிக்கு கடிதம் எழுதிய பிறகு இருவரும் சிறைச்சாலையில் சந்தித்துப் பேசிக் கொள்ளும் காட்சிகள் சற்று இழுவையாகத்தான் தெரிகின்றன. ஆனால் படத்தை மனோவியல் ரீதியில் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. நாயகியின் இடத்தில் நாம் இருந்தால் என்ன முடிவை எடுத்திருப்போம் என்கிற ரீதியிலான யோசனையுடன் பார்க்கும் போது வேறு புரிதல்கள் உருவாகின்றன.

படத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள் தெரியாமல் படத்தைப் பார்க்க வேண்டும். ‘இதுதான் நடக்கப் போகிறது’ என்று தெரிந்துவிட்டுப் பார்த்தால் மொன்னையாகத் தெரியும். முதலில் படத்தைப் பார்த்துவிடுங்கள். பிறகு பேசிக் கொள்ளலாம்.

வன்புணர்ச்சிக் காட்சியிலும் கூட ஆடை விலகாமல் கண்ணியமாக எடுத்திருக்கிறார்கள். எல்லாவிதத்திலும் நல்ல படம்தான். ஒன்றைச் சொல்ல வேண்டும்- இந்தப் படத்தைப் பார்க்கும் போது குற்றச் செயல்களினால் பாதிக்கப்படுபவர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதன் ஒரு பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் கூட மரண தண்டனை சரியானது என்கிற இடத்துக்கெல்லாம் வர முடியாது. உயிரை எடுப்பதைவிட்டுவிட்டு எவ்வளவு பெரிய தண்டனையை வேண்டுமானாலும் அளிக்கலாம். இந்தப் படத்தில் நாயகியை வன்புணர்ந்தவனுக்கு அளிக்கப்படும் தண்டனையைப் போலவே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com