22. கூர்மைப்படுத்து

படங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்டுச் சொல்லும்படி இந்தப் படங்களில் அப்படி என்ன இருக்கிறது என்கிற சந்தேகம் வருகிறதா?

கீழே கொடுக்கபட்டுள்ள ஐந்து  படங்களையும் பாருங்கள். 

இவை என்னவென்று என்னவென்று தெரிகிறதா?

சில மனிதர்களின் உருவங்கள். படங்கள் எப்படி இருக்கின்றன?  உருவங்கள் நேர்த்தியாக இருக்கின்றன அல்லவா?

இவற்றை வரைந்தவரின் திறமை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

படங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்டுச் சொல்லும்படி இந்தப் படங்களில் அப்படி என்ன இருக்கிறது என்கிற சந்தேகம் வருகிறதா?

சந்தேகம் சரிதான். ‘சித்திரம்’ என்று பார்த்தால் ‘ஓரளவு நன்றாக இருக்கிறது’ என்று சொல்லலாம். அவ்வளவுதான். ஆனால்..இவை எங்கே வரையப்பட்டிருக்கின்றன என்கிற விவரம் தெரியவந்தால்  இவற்றின் சிறப்பு புலப்படும்.

மேலே மொத்தம் ஐந்து முகங்கள் இருக்கின்றன அல்லவா. அவை ஒவ்வொன்றும் ஒரு அரிசியில் வரையப்பட்டவை. நம்ப முடிகிறதா?

அதுதான் இவற்றின் சிறப்பு.

முதல் படம், வரையப்பட்ட அரிசி, ஒருவரின் விரல் நகத்தின் மீது நிற்கிறது.  வெவ்வேறு அரிசி மணிகளில் வரையப்பட்டிருக்கும் அடுத்த நான்கு படங்களையும் ஒரு பென்சிலின் முனையில் ஒட்டி வைத்திருக்கிறார்கள். விரல் நகம் மற்றும் பென்சில் முனையில் வைத்து அந்த அரிசி மணிகளின் அளவு எவ்வளவு சிறிது என்று காட்டுகிறார்கள்.

இந்தப் படங்கள் தெரிவிக்கும் விவரம் என்ன?

அவ்வளவு சிறிய அரிசிக்குள் இவ்வளவு விவரங்களுடன் படம் வரைய முடியும். சிலருக்கு சாத்தியமாகிறது.

இதே போல கரும்பலகைகளில் எழுதப் பயன்படுத்தப்படும்  சின்னஞ்சிறிய ‘சாக்பீஸ்’ களில்  சிலர் உருவங்கள் செதுக்குவார்கள்.

இந்தக் குட்டி சிற்பங்கள் தெரிவிப்பதும் அதையேதான்.

எவ்வளவு சிறிதாகவும் வரைய முடியும். எவ்வளவு சிறிதாகவும் செதுக்க முடியும்.

அது சரி. அப்படி வரைய, செதுக்க என்னவெல்லாம் தேவைப்படும். எவை இருந்தால் இவை சாத்தியமாகும்? அதுதான் நமக்கு இங்கே முக்கியம். அதற்காகத்தான் இந்த எடுத்துக்காட்டுகள்.

படம் வரையும் திறன், சிற்பம் செதுக்கும் திறன் ஆகியவை தவிர, அந்த வேலைகளைச் செய்யத் தோதான, ஏற்ற, நுண்மையான கருவிகள் தேவை. மிக நுண்ணிய பிரஷ். மிக நுண்ணிய ஊசி ஆகியவை.பிரஷ் அல்லது ஊசியின் முனை நூலாம்படை போல மெலிதாக இருக்கவேண்டும். அதே சமயம், மிக உறுதியானவையாகவும் இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட சின்னஞ் சிறு வேலைகள் செய்வது பற்றி விவாதிக்கும் நேரம், முன்பு பார்த்த ‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ விளக்கம் நினைவுக்கு வரலாம். இப்படி படங்கள் வரைவதும், சிற்பங்கள் செதுக்குவதும் கூட எறும்புத் தோலை உரித்துப் பார்ப்பது போன்ற வேலைதான்.

கூர்மையான கருவி இருந்தால் இவ்வளவு அரிதான வேலையைக் கூட செய்யலாம் என்பது போலவே, அறிவுக் கூர்மை இருந்தால் எந்த விஷயத்தையும் புரிந்துகொள்ள முடியும். அதிக நேரம் செலவு செய்தால் எவராலும் அறிவைக் கூர்மைப் படுத்திகொள்ள முடியும் அதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

எனக்கு மிகவும் வேண்டியவர் ஒரு மேற்படிபிற்காக அயல்நாட்டுக்குப் போனார். பாடத்திட்டங்களின்  ஒரு பகுதியாக அவர் பிராஜெக்ட்டுகள் அசைன்மென்டுகள் (குறிப்பான வேலைகள்) செய்ய வேண்டும். செய்தவற்றை  ஏனைய மாணவர்கள் முன்னிலையில், வகுப்பில் எடுத்துப் பேசி,பேராசிரியரிடம் சமர்பிக்க வேண்டும்.

அந்த மாணவர் அந்த ‘அசைன்மென்ட்’ டுகளை வற்றை மிகுந்த அக்கறையுடன் செய்வார். எடுத்துப் பேசுவார். மாணவர்களின் வேலையும் ‘பிரசென்டேஷன்’ னும்  எப்படி இருந்தது என்று பற்றி பேராசிரியர் அவ்வப்போதே வகுப்பில் அவரது கருத்தை (பீட்பேக்) சொல்லுவார். அதில் பாராட்டுகளும் இருக்கும். கண்டணங்களும் இருக்கும்.

ஒவ்வொருமுறையும் வகுப்பு முடிந்து அறைக்குத் திரும்பியதும்,அந்த மாணவர்  பேராசிரியர் சொன்னவற்றை தொலைபேசி மூலம் என்னிடம் விவரமாகத் தெரிவிப்பார்.

பாராட்டுகள்  கிடைக்கும் நாள்கள் அவர் சொல்லும் விவரங்களுக்கும், மேன்மை செய்ய வேண்டியவை குறித்து-  Areas for improvement-  அதிகம் சொல்லப்பட்ட நாள்களில் அவர் என்னிடம் பகிர்ந்துகொள்ளும் விவரங்களின் அளவுகளுக்கும் இடையே கணிசமான வேறுபாடு இருப்பதை நான் உணர்ந்தேன். அதை அவரிடம்  சுட்டிக் காட்டி காரணம் கேட்டேன்.

Areas for improvement- குறித்து சொல்லப்பட்ட விவரங்களை அவரால் சொல்ல முடியவில்லை. காரணம் அவர் அவற்றைக் குறித்துக்கொள்ளவில்லை. நினைவாக கேட்டு கொள்ளவும் இல்லை. முதல் அடி விழுந்ததுமே சோர்ந்துபோய்விட்டிருக்கிறார்..

அதன்பின் நான் அவருக்கு சொன்ன ஆலோசனை, ‘பேராசிரியர் சொல்வது அனைத்தையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொள். அவர் சொல்லும் நேரம் மகிழ்வதோ வருத்தப்படுவதோ வேண்டாம். பாராட்டோ கண்டணமோ, தகவல்கள் எதையும் தவறவிடாதே. ஒன்றுவிடாமல் குறித்துக்கொள்.’

‘குறித்துக்கொண்டு..?’

‘பின்னால் அமைதியாக அவற்றை படித்துப்பார். ஒரு முறை அல்ல. பல முறைகள். அன்று மட்டுமல்ல. பின்னர் ஓரிரு மாதங்கள் கழித்தும்.’

‘என்ன காரணம்?’

‘முதல் முறையே, ஒரே முறையே எல்லாம் புரிந்துவிடாது.’

*

ஒரே நாவல்தான். அல்லது ஒரே திரைப்படம்தான். வெவ்வேறு நேரம் படிக்கையில், பார்க்கையில்  வெவ்வேறு விஷயங்கள் தெரிய வரும், புரியும்.

அதெப்படி, ஒரே நாவல், அதே பக்கங்கள் அதே எழுத்துக்கள் வெவ்வேறு சமயத்தில், வாசிப்பில்  வெவ்வேறு அனுபவங்கள் கொடுக்க முடியும்? அப்படிக் கொடுக்கிறது என்றால், அந்த வேறுபாடு நாவலில் இல்லை. படிப்பவரிடம்,திரைப்படம் பார்ப்பவரிடம்தான் இருக்கிறது என்றுதானே பொருள்?

அதை விவேகானந்தர் சொன்னார் என்று முன்பே பார்த்தோம். ‘உலகின் மிகப்பெரிய நூற்களஞ்சியம்  மனதிற்குள் இருக்கிறது. புற உலகம் ஒரு தூண்டுதல் மட்டுமே.அறியாமை என்ற திரையை விலக்குவதுதான் அறிவு பெறுவது’. என்று.

எதுவாக இருக்கட்டுமே கண்டுபிடிக்க முடியாதா, புரிந்துகொள்ள முடியாதா என்ன? என்ன கொஞ்சம் கவனமாக, கூர்மையாக அதே சிந்தனையாக இருந்தால், அடிக்க அடிக்க சுவற்றில் ஆணி இறங்குவது போல, எவருக்கும் தகவல்கள் உள்ளே இறங்கும்.

சிந்தனை என்பது பாப்கார்ன் கொறிப்பது போலல்ல, முரட்டுக் கேரட்டைக் கடித்து மெல்லுவது போல. நன்கு மென்று, சாற்றை விழுங்குவது போல.

*

முதல் ஆங்கிலப் புத்தகத்தின் பின் அட்டையில் போடுவதற்காக அதிக பணம் செலவு செய்து பெரிய  ஸ்டூடியோவில் எடுத்த என்னுடைய புகைப்படம் ஒன்றை நண்பர் கேசவன் என்பவரிடம் காட்டினேன்.

படம் நன்றாக இருக்கிறது என்றவர், கவனித்துவிட்டுச் சொன்னார், ‘நல்ல சட்டை, நல்ல டை, நல்ல கோட். எல்லாம் சரி.. ஏன் இப்படி ஒரு பேனாவைப் போய் கோட்டுப்பையில் வைத்திருக்கிறீர்கள்!’

பேனாவில் என்ன என்று அப்போதுதான் நானும் அதைத் தனியாக ஊன்றிப் பார்த்தேன். ‘அட! ஆமாம், அது ஒரு சாதாரண ஐந்து  ரூபாய் பிளாஸ்டிக் பேனா!!’

அந்த அற்புதமான கருப்பு வெள்ளை படத்தில், திருஷ்ட்டி பரிகாரம் போல, வெகு சுமாரான பேனா.

ஆமாம், எந்த சட்டை, எந்த கழுத்துப் பட்டை எந்தக் கோட் என்றெல்லாம் சிந்தித்து தேர்வு செய்து எடுத்துப்போய் போட்டு புகைப்படம் எடுத்த நான் எப்படி பேனாவில் கவனம் செலுத்தாமல் போனேன்!

உண்மையில் நண்பர் கேசவன் எடுத்துச் சொல்லும்வரை, என்ன மாதிரி பேனாக்களை என் சட்டைப் பைகளில் வைத்துக்கொள்கிறேன் என்கிற கவனம் என்னிடம் வந்ததே இல்லை. அதனால்தான் அந்தத் தவறு, அந்த முக்கிய புகைப்படத்தில் நேர்ந்திருக்கிறது.

பேனாவை எடுத்து வைத்துக்கொள்கிறேன். போட்டோ எடுத்துக்கொள்கிறேன். போட்டோவைப் பார்க்கிறேன். பேனாவும் கண்ணில் படுகிறது. ஆனால் அதைப்பற்றிய புரிதல் அதுவரை வந்ததே இல்லை. அதன் மீது அதுவரை தனிப்பட  கவனம் செலுத்தியதில்லை.

ஆக, அறிவு இருக்கிறது. அறியும் திறன் இருக்கிறது. ஆனால் கவனம் பெற்று கூர் செய்தால்தான் அது பயன்படுகிறது.

கூர் செய்தல் என்பது, ஒரு விஷயத்தில் பரிச்சியம் ஏற்படுவது முதல்  பாண்டித்தியம் அடையும் வரையிலான பயணம். இதில் ஆரம்ப  பல அத்தியாயங்களில் பார்த்த, கழிப்பறை கட்டுதல்,  இசை, சமையல், நகைச்சுவை, வண்ணங்கள், ரசிப்புத்தன்மை,  பொதுக்கூட்டங்கள் போடுதல் போன்ற எல்லாமே அடங்கும்.

மொத்தத்தில் பெரிதில் இருந்து சிறியது நோக்கிப் போகும் பயணம். விறகு, நிலக்கரி,  மண்ணெண்னை, கேஸ், ‘மைக்ரோவேவ் அவன்’  என்பது போன்றஅடிவாரத்தில் இருந்து உச்சி நோக்கிப் போகும் மலை ஏற்றம்.

அதனால்,

உள்ளே போ. உனக்குள் பார். வெளியே நின்று பராக்கு மட்டும் பார்த்துக் கொண்டிருக்காதே!

சின்ன விஷயங்களைக் கூடப்  புரிந்து கொள்ளும் அளவு நுண்ணிய பார்வை நுட்பமான பார்வை உருவாக்கிக்கொள்.

அதுதான்  ஆயுதம், அதுதான் கருவி.  அதுதான் அதிக நேரம் சிந்திப்பதால் , நேரம் செலவு செய்வதால்  வரும் பலன்.

விவரமாக, ஆழமாக, நுட்பமாக பார்.

குறிப்பிட்ட வழித்தடத்தில் அதிக தூரம் போவதுதான் தேடல்.  அப்படிப் போகிறவர்கள் மற்றவர்கள் பார்க்காததை எல்லாம் பார்ப்பார்கள். கொண்டுவந்து காட்டுவார்கள். வெளி உலகில் கொட்டுவார்கள்.

ஐன்ஸ்டைன், எடிசன், கார்ல் மார்க்ஸ், காந்தி, பெரியார்,விவேகானந்தர், ஏ.கே ராமானுஜன், சிவாஜி கணேசன்,  கண்ணதாசன், ஜே.கிருஷ்ணமூர்த்தி, போன்றவர்கள்  எல்லாம் பல்வேறு துறைகளில் செய்தது அவற்றைத்தான்.

எவரும் செய்யலாம் இப்படிப் பட்ட தேடல். 

(அடுத்த வாரம் முடியும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com