23. எல்லோரும் வல்லவரே

மூளை எப்படி இருக்கிறது, அதன் திறன் என்ன என்று எப்படி விளக்கிச் சொல்லலாம்? சரி.. இப்படி கற்பனை செய்துகொள்வோம்.

இந்த உலகத்திலேயே மிக அடர்த்தியான, அதிகம் பயணம் செய்யவேண்டிய, அதிகம் பேர் பார்த்திராத, எல்லோருக்கும் வாய்ப்பிருக்கும், எத்தனையோ பொக்கிஷங்களை தன்னிடம் வைத்திருக்கும் இடம், அவரவர் மூளை.
- சோம வள்ளியப்பன்

சின்ன விஷயங்களைக் கூடப் புரிந்து கொள்ளும் அளவு நுண்ணிய பார்வை நுட்பமான பார்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும். காரணம், அதுதான் ஆயுதம், அதுதான் கருவி, அதுதான் அதிக நேரம் சிந்திப்பதால் கிடைக்கும் பலன்.

-சோம வள்ளியப்பன்



மூளை எப்படி இருக்கிறது, அதன் திறன் என்ன என்று எப்படி விளக்கிச் சொல்லலாம்? சரி.. இப்படி கற்பனை செய்துகொள்வோம்.

எலெக்டிரானிக் பொருட்கள் வாங்கினால் அவற்றைச் சுற்றி ஒரு வித்யாசமான பிளாஸ்டிக் பேப்பர் இருக்குமல்லவா. அந்த பேப்பரில் சின்ன சின்ன முட்டைகள் போல காற்று நிரம்பிய குமிழ்கள் இருக்குமே.. அதன் காரணமாகதானே  அந்தத் தாள், 'மெத்மெத்’ என்று மென்மையாக இருக்கும். சிலர் வேடிக்கைக்காக அந்த முட்டைகளை விரல்களால் நசுக்குவர்களே.  அவை வெடித்து அதிலிருந்து காற்று வெளியேறுமே.

அப்படிப்பட்ட  பேக்கிங் பேப்பர் ஒன்றை கற்பனை செய்துகொள்ளுங்கள். அதை  ‘பபிள் ராப்’ (Bubble wrap)  என்று அழைப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய பெரிய தாள் ஒரு பெரிய வெளியிடத்தில்  விரிக்கப்பட்டிருக்கிறது.  மிகப்பெரியது என்றால், அந்தத் தாளின் மொத்தப் பரப்பளவு   ஒரு மிகப் பெரிய விளையாட்டு மைதானம் அளவு இருக்கும். அதன் சுற்றளவு  மட்டுமே  இரண்டு கிலோ மீட்டர் அளவு ( என்று கற்பனை செய்துகொள்வோம்.

அவ்வளவு பெரிய  'பபிள் ராப்’  தாள். வட்டமான பெரிய மெல்லிய பபிள் ரேப் தாள்.  அந்தத் தாள் முழுவதும் நெருக்கமாக சின்ன சின்ன முட்டைகள்.

அந்த முட்டைகளில் என்ன இருக்கும்?

இந்தத் தாளில் காற்று இருக்காது. அதற்கு பதிலாக ஒவ்வொரு முட்டையிலும்  அறிவு, திறன், என்பன போல இன்னும் பலவும் கிட்டித்து வைக்கப்பட்டிருக்கும்.  ஒரு ஆண்டிராய்ட் மொபைல் போனில் இருக்கும் மிகத் திறமையான 'ஆப்பரேட்டிங் சிஸ்டம்’ போல பல திறன்கள் சிறிய அளவுகளில் உள்ளே  வைக்கப்பட்டிருக்கும்.

நாம் இப்போது கற்பனை செய்துகொண்டிருக்கும் இந்தத் தாள் மிக மிக மெல்லிய,  சில மைக்ரான் அளவே பருமன் உள்ளது. அதாவது ஒரு பட்டர் பேப்பரைக் காட்டிலும் பல மடங்கு மெல்லியது.

இந்தத் தாளை இறைவன் (அல்லது இயற்கை) அவனுடைய அல்லது அதன் இரண்டு ராட்சத  கைளால் அப்படியே வாரி,  சேர்த்துத் தூக்கி, கைகளை நெருக்கி,  ஒரு கொழுக்கட்டை பிடிப்பது போல  அமுக்கி,  ஒரு உருண்டையாக பிடித்து… மனிதர்களின் தலைக்குள் வைத்துவிட்டான்/து!

ஆமாம், ஒவ்வொருவர் தலையிலும் ஒன்று.

தன்னுள் இருக்கும் கோடிக்கணக்கான சிறு முட்டைகள்  ஒவ்வொன்றிலும், பல்வேறு திறன்களைக் கொண்டிருக்கும், அடர்த்தியாக உருட்டப்பட்ட, , மிக மெல்லிய பபிள் ரேப் போன்ற மைதானம் அளவு பெரிய பேப்பர் போன்றது மனித மூளை என்பது எனது கற்பனை.  அப்படி கற்பனை செய்யக் காரணம், மனித மூளைக்குள் இருக்கும் நியூரான்களின்  எண்ணிக்கை  அப்படி. சுமார் பலகோடி.நியூரான்கள் என்கிறார்கள். ஆராய்சியாளர்கள்  (பெட்டிச் செய்தி).

இப்படிச் செய்தால் எந்த அளவு விவரங்களும் திறனும் ஒருவர் தலைக்குள் இருக்க முடியும். அந்த அளவு அடுக்குகளும் , அதில் திசுக்களும், ஒவ்வொரு திசுவிலும் விவரங்களும், அவற்றுக்கு ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்ளும் ஆற்றல்மிகு 'நெட் ஒர்க்’ க்கும் ஒவ்வொருவர் தலைக்குள்ளும் இருக்கிறது!

அவ்வளவு அரிய பொக்கிஷத்தை தலைக்குள் வைத்துக்கொண்டு ஏன் வெளியில் கையேந்த வேண்டும்? நம்மிடமே கேட்கலாம். கெஞ்சி அல்ல. அதட்டியே!

ஒவ்வொரு திசுவையும் நசுக்கலாம். பிதுக்கி எடுக்கலாம்.

நானோ டெக்னால்ஜி போல, மூளையின் சின்னஞ் சிறிய திசு ஒவ்வொன்றிலும் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.

மிக மிகச் சிறிய கண்ணுக்குத் தெரியாத அணுவைப் பிளந்து மாபெரும் சக்தி உருவாக்கும் நியூகிளியர் டெக்னாலஜி போலதான் இதிலும். சிறிய தலைக்குள் இருக்கும் மூளை போதும். அதிகம் வேண்டும் என்பதில்லை. இருப்பதை முழுமையாகப் பயன்படுத்துதினாலே போதும். கொட்டிக் கொடுக்கும்.

*

1903ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 17ம் தேதி. அமெரிக்காவில், வட கரோலினா என்கிற இடம். ஆர்வில்லி மற்றும் வில்பர் ரைட் . Orville and Wibur Wright  என்ற இரு சகோதரர்கள். இவர்களை ரைட் சகோதர்கள் என்று சொன்னால் சுலபமாக அடையாளம் தெரியும்.

மனித இனத்தின் பறக்கும் முயற்சியில் முதல் வெற்றி பெற்றவர்கள்.  வரலாற்றில் அழியாத இடம் பிடித்தவர்கள்.

அன்று இவர்களுடைய விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்தது தெரியுமா?

20 அடி உயரம்.

பறந்த தூரம் எவ்வளவு தெரியுமா?

120 அடி தூரம்

இவர்கள் விமானம் விண்ணில் (!)  இருந்த நேரம் எவ்வளவு?

12 வினாடிகள்.

பலருக்கும் வியப்பாக இருக்கலாம். அட! இதென்ன உயரம், இதென்ன தூரம், இதென்ன நேரம் என்று. சொற்பமாகத் தெரியலாம்.

இன்றைக்கு சாதாரணமாக பயணிகள் விமானங்கள்  பறப்பது 30 ஆயிரம் அடி உயரத்தில். செல்லும் தூரங்களும் அப்படி ஆயிரக்கணக்கான மைல்கள்தான். நேரமோ நாள் கணக்கில்.

பயணிகள் விமானங்கள் மட்டுமா பறக்கின்றன?

சமீபத்தில் இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியதே மங்கள்யான். அதன் சுற்று வட்டப்பாதையை அடைய, மங்கள்யான்  பிரயாணம் செய்த தூரம் எவ்வளவு என்று தெரியுமல்லவா?

68 கோடி கி.மி

ஆமாம், அறுபத்து எட்டுக் கோடி கிலோ மீட்டார். பயண நேரம் பத்து மாதங்கள்.

ரைட் சகோதரர்கள் முயற்சிக்கும் இதற்கும் இடையே என்ன வேறுபாடு?

நம்ப முடியாத அளவு அசாத்திய முன்னேற்றம்.

எல்லாம் வெறும் 112 ஆண்டுகளில்.

புரிந்துகொள்ளப்படவேண்டியது இதைத்தான்.   தொடக்கங்கள் சிறிதாக இருக்கலாம். சிறிதாகத்தான் இருக்கும். ஆனால், தொடர் பயணம், தொடர் முயற்சி எங்கெங்கோ இட்டுச் செல்லும்.

விண்ணில் மட்டுமல்ல.

மூளைக்குள்ளும்தான்.

வெளியில் தேடவேண்டியதில்லை. எல்லாம் உள்ளேயே இருக்கின்றன.

'கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்றார் அவ்வையார். நம் பலம் பற்றி நமக்குத் தெரிந்தது கையளவு; நம் பலம் பற்றி நமக்குத் தெரியாதது கடல் அளவு என்று சொல்லலாம்.  அறியாமை என்ற திரையை விலக்கினால் அறிவு கிடைக்கும்.

இந்த உலகத்திலேயே மிக அடர்த்தியான, அதிகம் பயணம்  செய்யவேண்டிய,  அதிகம் பேர் பார்த்திராத, எல்லோருக்கும் வாய்ப்பிருக்கும், எத்தனையோ பொக்கிஷங்களை தன்னிடம் வைத்திருக்கும் இடம், அவரவர்  மூளைதான்.

அதை எவ்வளவோ நபர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். அப்படி செய்து காட்டியவர்களில் ரைட் சகோதர்களும் அடக்கம்.

மனித இனத்தின் பறக்கும் சாதனையைத் தொடங்கி வைத்த சகோதரர்கள் வைத்திருந்தது சைக்கிள் கடை. ஆர்வில்லி படித்தது மூன்று ஆண்டு பள்ளிப்படிப்பு.  வில்பர் ரைட் படித்தது   நான்கு ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. அவ்வளவுதான். ஆனால் அவர்கள் செய்து காட்டியது!

ஆக,

யாரோ சிலர் அல்ல. வெகு சிலர் அல்ல. எல்லோரும் வல்லவரே.

நம்மிடம் இருக்கும் கண் காது, மூக்கு வாய், உடல் என்ற ஐந்து புலன்களையும் சரியாக பயன்படுத்தி, நடப்பன கவனித்து, உள்வாங்கி, சிந்தித்தால், கை கூடாதது எதுவும் இல்லை.

நாம்… முயற்சித்தால் மட்டும் போதும்.

வாழ்த்துகள்

(நிறைந்தது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com