20. உள்ளே தள்ளு….

தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளா மற்றும் பிற தென் மாநிலங்களிலும் கூட அந்தத் துணிக்கடை பிரபலம். 'இதிலென்ன இருக்கிறது.. சாரதாரண வெள்ளை

தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளா மற்றும் பிற தென் மாநிலங்களிலும் கூட அந்தத் துணிக்கடை பிரபலம். 'இதிலென்ன இருக்கிறது.. சாரதாரண வெள்ளை வேட்டிதானே!’ என்றுதான் எல்லோரும் நினைத்திருந்த நேரம், வேட்டியை மட்டுமே 'சிங்கிள் பிராடெக்ட்’ ஆக வைத்து ஆரம்பித்து, பிரமாண்டமாக வளர்ந்து , இன்றைக்கு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்  அளவு வியாபாரம் செய்யும் ஆச்சரியம் ராம்ராஜ் காட்டன் நிறுவனம்.

அதன் நிறுவனர் திரு நாகராஜ் பள்ளி இறுதிப்படிப்பில் முதல் முறை  தோல்வி அடைந்தவர். அதிகம் படிக்கவில்லை. வேறு கடைகளில் மொத்த விலைக்கு  வாங்கிய துணிகளை சைக்கிள் பின்புறம்  வைத்து எடுத்துப் போய் சிறிய கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கும் மார்கெட்டிங் வேலை செய்தவர்.

அந்த நேரம் அவர் கற்றுக்கொண்ட வேலை, ‘சேல்ஸ்’,  விற்பனை செய்வது மற்றும் மனிதர்களுடன் பேசுவது, பழகுவது, வியாபாரம் செய்வது.

இவற்றை எல்லாம் அவர் பார்த்துப் பார்த்து கவனமாகச் செய்திருப்பார். செய்தவற்றில் சில சரியாக வந்திருக்கும், வேறு சில  வழிமுறைகள் சரியாக வந்திருக்காது. அவர் எல்லாவற்றையுமே பாடமாக எடுத்துக்கொண்டிருப்பார். சரியாக வந்தவற்றை மனதில் பதிவு செய்துகொண்டிருந்திருப்பார். 'ரிசல்ட்’ தராதவற்றை  வெட்டி எறிந்திருப்பார்.

நாட்கள் ஓடுகின்றன. 1983ல் அவர் சொந்த நிறுவனம் தொடங்குகிறார். இப்போது அவர் செய்யவேண்டியவை வெறும் 'மார்கெட்டிங்’ அல்லது 'சேல்ஸ்’ மட்டுமல்ல. பல வேலைகள் செய்யவேண்டும். சில புதியவை. வேறு சில ஏற்கனவே செய்தவை.

உற்பத்தி செய்வது, ஸ்டாக் வைப்பது, கடைக்கு இடம் தேர்வு செய்வது, ஆட்கள் எடுப்பது, வேலை வாங்குவது, விளம்பரம் செய்வது போன்றவை அவருக்குப் புதிய வேலைகள்.

விற்பனை செய்வது, பல்வேறு விதமான மனிதர்களுடன் வியாபார நிமித்தம் பேசுவது போன்ற வேலைகள் அவர் ஏற்கனவே செய்து பழகியவை.

செய்து பழகியவற்றை அவர் அதிக சிரமமின்றி சிறப்பாக செய்திருப்பார். புதியவற்றை கவனமாக பிறர் ஆலோசனை பெற்றுச் செய்திருப்பார்.

மாதங்கள் ஓடுகின்றன. வியாபாரம் மேலும் பெருகிறது. அவர் இப்போது பெரிய நிறுவனத்தின் முதலாளி. ஆரம்பத்தில் அவர் செய்த வேலைகளை அவர் இப்போது செய்வதில்லை. காரணம், அந்த அதெற்கெல்லாம் தகுந்த ஆள்கள் போட்டுவிட்டார்.  திரு நகாராஜ் அவர்களே நேரடியாக பார்த்த வேலைகள் பல இப்போது அவர் கவனத்துக்கு வராமலேயே நன்றாக நடக்கின்றன.

அவையெல்லாம் இன்றைக்கும் முக்கியமான வேலைகள்தான். ஆனால் நேரடியாக நுணுக்கமாகப்  பார்ப்பதில்லை. காரணம் அவர் அவற்றை தக்க நபர்களிடம் பகிர்ந்துகொடுத்துவிட்டார். இதை 'டெலிகேஷன்’  என்பார்கள். அவர் செய்வது வேறு முக்கிய வேலைகளை.

எல்லாம் சரி. ராம்ராஜ் காட்டன் முதலாளிக்கும் 'எல்லோரும் வல்லவரே’ க்கும் என்ன சம்பந்தம்?

சென்ற அத்தியாத்தில் பார்த்த கற்றுக்கொள்ளுதலின் நான்கு நிலைகள் நினைவிருக்கலாம். அந்த நான்கு நிலைகளையும் மேலே பார்த்த ராம்ராஜ் கட்டன்  எடுத்துக்காட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். சரியாகப் பொருந்தும்.

ஆனால் சொல்ல வருவது, அதற்கும் மேலே.. வேறு ஒரு தகவல்.

நமது மூளையின் அமைப்பு பற்றியெல்லாம் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. மூளையின் வெவ்வேறு பகுதிகள்,  அவை செய்யும் வேலைகள் என்பன பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம்.

கற்றலின் நான்கு நிலைகள் பற்றி விளக்குவதற்காக மூளையை இப்படி இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ளலாம்.

ஒன்று மேலோட்டமாக இருக்கும் பகுதி. அடுத்தது ஆழத்தில் இருக்கும் பகுதி.  இதை சிலர் 'கான்ஷியஸ் மைண்ட்’ என்றும் 'சப் கான்ஷியஸ் மைண்ட்’ என்றும் சொல்வார்கள். 

‘கான்ஷியஸ்’ என்றால் நாம் முன்பே பார்த்ததுதான்.  நினைவாக செய்பவை.

'அன்கான்ஷியஸ்’ என்றால் நினைத்துப் பார்க்காமலேயே செய்ய முடிபவை. சாலையில் வண்டி ஓட்டும் போது செல்போன் பேசும் உதாரணத்தில் அதை நாம் 'அன்கான்ஷியஸ் காம்பிடென்ஸ்’ என்றோம்.

அந்த 'அன்கான்ஷியஸ் காம்பிடென்ஸ்’ வருவது அன்கான்ஷியஸ் மைண்டில் இருந்து என்று சொல்லலாம்.

மேலே கொடுக்கப்படிருக்கும் படம் ஒன்றில் நடுவில் 'ஆட்டோமேட்டிக்’  என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை இந்த உதாரணத்திற்கு ஆழ்மனது என்று எடுத்துக்கொள்ளலாம். 

ஒரு விஷயத்தை முதல் சில முறைகள் செய்யும் போது அவை மனதின் (மூளையின்) மேற்பகுதியில் தான் பதிகிறது. இதை 'ஷார்ட் டெர்ம் மெமரி’ என்றும் சொல்லலாம்.

கொஞ்ச நேரம் நினைவிருக்கும். பின்பு மறந்துவிடும்.  காரணம், எவருடைய மூளைக்கும்  ஒவொரு நொடியும் புதிய புதிய விஷயங்கள், தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. அங்கே எண்ணங்களின் ‘டிராபிக்’ (Traffic)அதிகம்.

ஆனால் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் படிக்க,  அல்லது செய்ய, அது மனதில் மேற்பரப்பில் இருந்து மெல்ல மெல்ல கீழே இறங்குகிறது.

அதாவது ‘ஷார்ட் டர்ம் மெமரி’ யில் இருந்து ’லாங் டெர்ம் மெமரி’ க்குப் போகிறது.

‘கான்ஷியஸ் மைண்ட்’ டில் இருந்து ’அன்கான்ஷியஸ் மைண்டு’ டிற்கு நகர்த்தப்படுகிறது.

இதை மற்றொரு எடுத்துக் காட்டு மூலம் பார்க்கலாம்.

காலையில் பேப்பர்காரன் இரண்டு தமிழ் தினசரிகள் இரண்டு ஆங்கிலப் பேப்பர்களைக் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போகிறான். வீட்டு வாசலில் கிடந்த அவற்றை அம்மா எடுத்து வந்து ஹாலில் வைக்கிறார்கள். நாம் படிக்கிறோம். அதில் வந்திருக்கிற ஒரு செய்தி  நாம் ஒரு விழாவில் கலந்துகொண்டது பற்றி. அதை மட்டும் கத்திரிக்கிறோம்.

அந்த முக்கிய செய்தியை வீட்டின் உள்ளே எடுத்து போய் பீரோவில் வைக்கிறோம். மீதி தினசரிகளை பழைய பேப்பராக விற்பதற்காக வீட்டுக்கு வெளியில் இருக்கும் கூடையில் போடுகிறோம். அதன்பின் அவற்றைப் பார்க்கப்போவதில்லை. அடுத்த நாள் மீண்டும் வேறு தினசரிகள் இதேபோல வீட்டிற்கு உள்ளே வந்துவிட்டு வெளியே போய்விடும்.

இதுவும் ஒரு 'டிராபிக்’ (Traffic)  தான்.

ஹால் வரை இருப்பது 'ஷார்ட் டர்ம் மெமரி’. அதுதான் 'கான்ஷியஸ் மைண்ட்’ ல் பதிவதும். கத்தரித்து உள்ளே போய் வைப்பது, மேற்பரப்பில் இருந்து 'சப் கான்ஷியஸ் மைண்டு’ க்கு, 'லாங்க் டெர்ம் மெமரி’ க்குத் தள்ளுவது போல.

ராம்ராஜ் காட்டன் முதலாளி எடுத்துக்காட்டிலும் நிகழ்ந்திருக்கக் கூடியது அதுதான். நினைவாக தானே முயன்று செய்ததை, பின்னால் அதிக முயற்சி மற்றும் கவனம் இல்லாமலேயே செய்ய முடிவதற்கான காரணம், அந்த செயல், 'கான்ஷியஸ் மைண்ட்’ டில் இருந்து 'அன்கான்ஷியஸ் மைண்ட்’ டிற்குப் போய்விட்டிருக்கும்.

ஒரு விஷயம் அன்கான்சியஸ் மைண்டிற்குப்போய்விட்டால், அதிக முயற்சி மற்றும் கவனம் இல்லாமலேயே அதை செய்ய முடியும். செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்ட முடிவதும் இதனால்தான்.

அடிக்கடி செய்யும் வேலைகள், கேட்கும் பாடல்கள், எல்லாம் போய்ச் சேர்வது ஆழ்மனதிற்கு.

ஆழ் மனதிற்கு போய்விட்டவை ஸ்பெஷல். அவற்றைச் செய்ய நேரம் ஆகாது. அவற்றைச் செய்ய  'கான்ஷியஸ் மைண்ட்’ டின் அனுமதி தேவையில்லை. அதனால்தான் தூக்கத்தில் கேட்டால் கூட சொல்ல முடியும். சிலர் (ஆழ் மனதிற்குப் போய்விட்ட)காதலியின் பெயரை, நினைவில்லாமல் தூக்கத்தில் உளருவார்கள்.

மொத்தத்தில் சொல்ல வருவதென்ன?

நல்லதோ கெட்டதோ.. பழகிவிட்டால் அதைச் செய்வது சுலபம்.

பெரிதோ, சிறிதோ கூடுதல் முயற்சி எடுத்தால் அதைச் செய்ய முடியும். எதையும் செய்ய முடியும்.

ஐன்ஸ்டைன் சொன்னதை இங்கே நினைவுப்படுத்திப் பார்க்கலாம். நான் யாரைக் காட்டிலும் அதிக புத்திசாலியில்லை. ஆனால் எடுத்துகொண்டதைப் பற்றி அதிக நேரம் சிந்திக்கிறேன்.

அதிக நேரம் சிந்திப்பது என்பது கான்ஷியஸ் மைண்டில் இருந்து மெல்ல மெல்ல உள்ளே தள்ளுவது.

 (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com