21. எல்லாம் முக்கியமல்ல...

பில்கிளிண்டன் மாணவராக இருந்த நேரம். அவரது பெற்றொர் அவரை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையைச் சுற்றிப் பார்க்க

பில்கிளிண்டன் மாணவராக இருந்த நேரம். அவரது பெற்றொர் அவரை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையைச் சுற்றிப் பார்க்க அழைத்துப் போகிறார்கள். மாளிகையை சுற்றிப்பார்த்துவிட்டு மற்ற பார்வையாளர்களுடன் சேர்ந்து வெளியே வரும் நேரம். சிறுவன் கிளிண்டன் மனதில் மாளிகையின் அமைப்பு, பிருமாண்டம், அதன் வசதிகள் குறித்தெல்லாம் வியப்பு. அவனது பெற்றோரிடம் கேட்கிறான், 

'ஒருவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வசிப்பிடம்!’

'அவர் அமெரிக்க அதிபர் அல்லவா’

இது போல நடந்திருக்கிறது அந்த உரையாடல்.

அதைக் கேட்டு அதிசயித்த கிளிண்டன்,  'நான் அடுத்த முறை இந்த மாளிக்கைக்கு அமெரிக்காவின் அதிபராகத்தான் வருவேன்’ என்று சொல்லியிருக்கிறான்.

பின்னால் நடந்தது எல்லோரும் அறிந்ததே. 1993  ல் அமெரிக்காவின் 42 வது அதிபராக பில் கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் ஒருமுறை என்று 2001 வரை அவர்தான் அதிபராக வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்காவை எட்டு ஆண்டுகள் ஆண்டவர்.

*

விக்ரமன் என்ற மாணவர் அவருடைய பள்ளி ஏற்பாடு செய்த மோட்டிவேஷன் நிகழ்ச்சி ஒன்றில் காதில் வாங்கிய செய்தி இது.  பில் கிளிண்டன்  பற்றிய அந்த செய்தியைச் அன்றையக் கூட்டத்தில் சொன்னவர் , ஐ.பி.எஸ் விஜயகுமார் அவர்கள்.  

கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, விஜயகுமார் வெளியே வருகிறார். அப்போது அவரைச் சந்தித்த மாணவன் விக்ரமன் அவரிடம் சொல்லியிருக்கிறார், 'நான் உங்களை அடுத்த முறை ஒரு ஐ பி எஸ் ஆகத்தான் சந்திப்பேன்’ என்று.

பில் கிளிண்டன் எடுத்துக்காட்டு அவ்வளவு தூரம் மாணவர் விக்ரமன் மனதில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது.

விக்ரமன், அதுவரை  பள்ளித் தேர்வுகளில் சுமாரான மதிப்பெண்களே பெற்றுக்கொண்டிருந்த ஒரு மாணவர்.

*

சில ஆண்டுகளுக்குப்  பிறகு முசவுரி என்ற இடத்தில் ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. சீனியர் சிவில் சர்விஸ் அதிகாரிகள் வகுப்புகள் எடுக்கிறார்கள். ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாரும் ஒரு வகுப்பு எடுக்கிறார். இடைவேளையில் அவரை ஒரு மாணவர் சந்திக்கிறார். அவர்..

ஆமாம், அவர் நாம் முன்பு பார்த்த அதே விக்ரமன்தான்.

சாதாரண மதிப்பெண்கள்  எடுத்துக்கொண்டிருந்த சராசரி மாணவன்  விக்ரமன் ஐ.பி.எஸ் ஆகிவிட்டிருந்தார். அது எப்படி சாத்தியம் ஆனது? 

சுலபமாக இல்லைதான்.  ஐ பி எஸ்  தேர்வில் இரு முறை தோல்வி.  மூன்றாவதாக இன்னொரு முறை முயற்சிக்கலாம் என்று முடிவெடுக்கிறார்.  ஆனால், அவரைச் சுற்றி இருந்தவர்கள் சொல்கிறார்கள், 

'உன்னால் முடியவில்லை என்றால் விட்டுவிடேன்’

அதன்பின் விக்ரமன் செய்தது என்ன தெரியுமா?

அதுதான் ஐன்ஸ்டைன் சொன்னது. இந்தத் தொடரில் வெவ்வேறு எடுத்துக்காட்டுகளுடன் நான் மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் தெரிவிப்பது.

ஒரே விஷயத்தை ஆழமாக தொடர்ந்து சிந்தியுங்கள். அது மட்டுமே முக்கியம் என்று அதன் மீது முழு கவனம் செலுத்துங்கள். அது கைகூடும் வரை அதையே செய்யுங்கள்..

விக்ரமன் சொன்ன வார்த்தைகளிலேயே அவர் செய்ததைச் சொல்லுவதென்றால்,

‘நான் வனவாசம் கொண்டேன்’.  முடித்தேன்.

வனவாசம் என்றால், நாட்டைவிட்டுவிட்டு காட்டுக்குப் போவது. விக்ரமன் செய்தது, ஆறு மாதம் மற்ற எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு, 'ஐ.பி.எஸ் ல் தேறுவதுமட்டும் தான் இப்போதைக்கு’ என்று முடிவு செய்து, ஒற்றை நோக்கோடு  அதே வேலையாக இருந்தது.

பிறகு!

எல்லாம் முக்கியனென்றால் எதுவும் முக்கியம் இல்லை என்றுதானே அர்த்தம் ஆகிறது!

முன்பு பார்த்த முனைவர் பட்டத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரே அமர்வாக (சிட்டிங்) வீட்டில் இருந்து தொடர்ந்து அதையே சிந்தித்து முடித்தவர் நினைவிருக்கலாம். அதேபோலத்தான் செய்திருக்கிறார் விக்ரமன்.

*

நாம்  திரையரங்கிற்கு  படம் பார்க்கப் போகிறோம். சற்று முன்னதாகவே போய்விட்டோம். படம் போடப்படுவதற்கு  முன்பே  அரங்கிற்குள் போய், நமது இருக்கையைக் கண்டுபிடித்து அமர்ந்துவிடுகிறோம்.

விளம்பரப்படங்கள், அறிவிப்புகள் டிரெயிலர்கள் எல்லாம் போகின்றன. பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  நமக்கு பக்கத்தில் மூன்று இருக்கைகள் காலியாக இருக்கின்றன. 

'மெயின் பிக்ச்சர்’  தொடங்குகிறது.  பெயர்கள் திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.  அப்போது மூன்று பேர் வருகிறார்கள். அவர்கள் வருவது  நமக்குப் பக்கத்தில் இருக்கும் அந்த மூன்று  காலி இருக்கைகளுக்குத்தான். நம்மைத் தாண்டிப் போகையில் நம் காலை மிதிக்கிறார்கள். நமக்கு கோபம் வருகிறது.

அவர்கள் ஏன் மிதித்தார்கள்? வேண்டும் என்றா?

அவர்களுக்குத்  நமது கால்கள் இருக்குமிடம் தெரியவில்லை. இருட்டு.அதனாலதான் மிதித்திருக்கிறார்கள்.

ஆனால் , அதே திரையரங்கில் அதே வரிசையில் இருக்கும் நமக்குக் கண் தெரிகிறதே!

நமக்குத்தெரியும். ஆனால் அவர்களுக்குத் தெரியாது. காரணம், நாம் கொஞ்சம் நேரம் உள்ளேயே இருந்ததால் அந்த இருட்டுக்குப் பழகிவிட்டோம். அவர்கள், வெளியில், வெளிச்சத்தில் இருந்து உள்ளே வந்திருக்கிறார்கள். அவர்களுடைய கண்கள் இன்னும் அந்த அளவு இருட்டில் பார்ப்பதற்கு அந்த நேரம்வரை பழகவில்லை. அதனால்தான் அவர்களுக்குத் தெரியவில்லை.

திரையரங்க  இருட்டுப் போலதான் இன்ன பிறவும். பழகாதததில், தெரிந்துகொள்ளாததில் அனுபவப்படாததில் எல்லாம்  மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.

பழகியது நன்கு தெரியும்.

*

ஒருவர் அதுவரை மோட்டார் சைக்கிள் மட்டுமே வைத்திருந்தவர். கார் வாங்கவில்லை. அலுவலகம் ஏற்பாடு செய்து வங்கிக் கடன் கிடைக்கிறது. கார் வாங்க முடிவு செய்கிறார். பலரிடமும் விசாரிக்கிறார். கார் மாடல்கள், செக்மெண்ட், மைலேஜ், சர்விஸ் , ஸ்பேர்கள் போன்ற பல விஷயங்கள் அவருக்கு புதிதாக இருக்கின்றன.

அவர் பல முறை காரில் போயிருக்கிறார். சாலைகளில் கார்களைப் பார்த்திருக்கிறார். ஆனாலும் அப்போதெல்லாம் தெரிந்திராத விஷயங்கள், இப்போது அவருக்குத் தெரியவருகின்றன. அவர் கவனம் கொள்கிறார்.

அவையெல்லாம் முன்பே இருந்தவைதான். பலரும் அவரிடம் அவை பற்றி பேசிக்கூட இருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் புரியாதது, மனதில் சரியாக வாங்கப்படாதது, இப்போது புரிகிறது.

காரணம் என்ன?

கார் வாங்கப் போகிறோம் என்று முடிவானதும், அதற்காகவே மனது ஒரு பைல்  (கோப்பு)திறக்கும். அதன்பின் கிடைக்கும் விவரங்களை எல்லாம் அந்தப் பைலில் போட்டு வைக்கும். அதைப்பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதனால்தான் அது கூடுதலாக கவனம் பெரும் விஷயம், புரிய ஆரம்பிக்கிறது.

பயிலரங்குகள், கல்லூரிகளில் கேட்பேன், 'நான் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா?  என் கட்டுரைகளை தொடர்களை பத்திரிக்கைகளில் பார்த்திருக்கிறீர்களா?’ என்று.

தெளிவாக இல்லை என்பார்கள்.

ஆனால், நிச்சயம் பார்த்திருப்பார்கள். ஆனால் பார்த்த நேரம் அது  நான்தான் என்று அவர்களுக்குத் தெரியாது. அப்போது அவர்களுக்கு நான் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. அதனால் எவரோ பேசுகிறார் என்றுதான் பார்த்திருப்பார்கள். இப்போது தெரியவில்லை.

அந்தப் பயிற்சிக்குபின் என்றாவது தொலைகாட்சியிலோ அல்லது பத்திரிக்கைகளில் என பெயர் அல்லது புகைப்படம் பார்த்தால், ஒரு சில நொடிகளே கவனித்தாலும் போதும் சுலபமாக, அது நான்தான் என்று அடையாளம் காண்பார்கள். அறிமுகம் ஆகிவிட்டிருப்பதால், பார்ப்பதை மனது தொடர்புபடுத்திக்கொண்டு புரிந்துகொள்ளும்.

இதுதான், தெரிந்ததுதான் தெரியும் என்பது. இதுபற்றி விரிவாக  'உஷார் உள்ளே பார்’  என்ற மனம் பற்றிய புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். கண்கள் பார்க்கும்தான். ஆனால் அதற்கு தெரிந்தவற்றை மட்டுமே அதனால் உணர  interpret செய்ய முடியும்.

எவற்றுக்கெல்லாம் மனது பைல்  (கோப்பு) கள் வைத்திருக்கிறதோ (அறிமுகம் இருக்கிறதோ. அல்லது முக்கியம் என்று நினைத்து அப்போது பைல் திறக்கிறக்கிறதோ) அவை புரியும்.  அதன்பின் கிடைக்கும் அது தொடர்பான விவரங்களை எல்லாம் அந்தப் பைலில் போட்டு வைக்கும். அதைப்பற்றிய சிந்தனை மனதில் அதிகரிக்கும். அதனால் அது கூடுதலாக கவனம் பெறும்.  புரிய ஆரம்பிக்க்கும்.

ஆக, கவனம் பெறுவது  புரிய ஆரம்பிக்கும்.

கவனம் பெறுவது மட்டுமே புரியும்.

கவனம். ஒன்றின் மீது கவனம்.

கவனம் என்றால் தீவிரமான குவிக்கப்பட்ட ஆற்றல்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com