அத்தியாயம்25 - கருத்துக்கு என்ன செய்ய?

கடந்த 2015 ஏப்ரலில் கல்லூரி இறுதி ஆண்டுத் தேர்வு முடித்த அனைத்து இளைஞர்களும், இந்த மாதத்தில் தேர்வு முடிவுகள் வந்து, அதற்கான மதிப்பெண்

கடந்த 2015 ஏப்ரலில் கல்லூரி இறுதி ஆண்டுத் தேர்வு முடித்த அனைத்து இளைஞர்களும், இந்த மாதத்தில் தேர்வு முடிவுகள் வந்து, அதற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்லூரியில் இருந்து தற்காலிகச் சான்றிதழ் (PROVISIONAL CERTIFICATE) வாங்கியிருப்பார்கள். இதுதான் வேலை வேட்டைக்கான காலகட்டம். !

சொந்தக்காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் என்று அனைவரிடமும், 'ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க!’ என்று கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

நண்பர்களுடன் தொலைபேசும்போது, 'செல்வத்துக்கு வேலை கிடைச்சிருச்சாமே? ஆனா 5000-ம்தான் தரேன்னாங்களாம். பாவம்.. நாம கொஞ்சம் வெய்ட் பண்ணி நல்ல கம்பெனியா சேந்துரணும் மச்சி! அப்புறம்.. என் ரெஸ்யூம் சரியா இருக்கான்னு பாரு.. மெயில் அனுப்புறேன். ஏதாவது மாத்தணும்னா மாத்தி மானே, தேனே..பொன்மானேல்லாம் போட்டு கரெக்ட் பண்ணிக்குடுடடா’ என்று உரையாடல் நீளும்.

வீட்டில், இன்னிக்கு ஒரு இன்டெர்யவியூ இருக்கு! என்று நேரிலோ, தொலைபேசியிலோ சொல்லிவிட்டு காலையில் கிளம்பி, அந்த நிறுவனத்தின் முகவரியைத் தேடிக்கண்டுபிடிக்கவே, திண்டாடிப்போய் அப்புறம் சொன்ன நேரத்தை விட அரைமணிநேரம் தாமதமாகச் சென்று அவர்களிடம் வழிந்து, எடுத்துச் சென்ற ரெஸ்யூமேவைக் கொடுத்து, அதில் கையெழுத்தில்லை என்று அவர் சொல்ல, அதனைப்போட்டு, அதற்குப் பிறகு “Expecting” என்பதற்குப் பதிலாக, “Excepting” என்று அதில் இருக்கும் பிழையை அவர் கண்டுபிடித்துச் சொல்ல, 'THAT DTP OPERATOR MADE A MISTAKE SIR’ என்று முகம் தெரியாத யாரையோ குறை சொல்லி,  (உண்மையில், அந்த ரெஸ்யூமேவை தட்டச்சியதே நாமாகத்தான் இருக்கும்) அவரிடம் சமாளித்ததாய் நினைக்க..

நேர்முகத்தேர்வாளரோ, 'அப்போ, பிரிண்ட் எடுத்ததுக்குப் பிறகு, உங்க ரெஸ்யூமேவை நீங்க ஒருதடவைகூடப் படிச்சுப் பாக்கல. .. Right? என்று கேட்க, மழுப்பிக்கொண்டே, வாங்கிய பல்பை எங்கு வைப்பது என்று தெரியாமல் தடுமாறி, அவர்  கேட்ட தொழில்நுட்பக் கேள்விகளுக்கு ஓரளவுக்கு சமாளித்து பதில் சொல்லி, அவரும். நம்மிடம் ஏதோ ஒரு திறன் இருப்பதாய் நம்பி, அடுத்த கட்டமான குழு விவாதத்துக்கு நம் பெயரைப் பரிந்துரைத்து, மதிய உணவுக்குப் பிறகு, குழு விவாதத்தில் சென்று அமரும்போது லேசாக உதற ஆரம்பிக்கும்.

அப்போது, HR உள்ளே நுழைவார். நாம் இப்போது 'புவி வெப்பமடைதலும், அதன் மூலம் உலகப் பொருளாதாரத் தாக்கமும்’ என்ற தலைப்பில் குழு விவாதம் செய்யப்போகிறோம். எல்லோரும் தயாரா? என்கிறார்.

நமக்கு முதலில் புவி வெப்பமடைதல் என்றாலே முழுமையாகத் தெரியாது. அதற்கும் உலகப் பொருளாதாரத்துக்கும் என்ன தொடர்பு என்று சுத்தமாகத் தெரியாது.

இந்த நிலையில், சோடாபுட்டி கண்ணாடி போட்ட பெண் ஒருத்தி Global warming is.. என்று ஆரம்பிப்பாள். அவளது ஆங்கில வேகமும், அதில் பொதிந்திருக்கும் கருத்துக்களும் மிரட்டும். அவள் சொன்ன வார்த்தைகளை அதே வேகத்தில் கவனித்து, நம் மூளைக்குள் ஓடும் ஆங்கிலம்-தமிழ் அகராதியைப் புரட்டி, மொழிமாற்றம் செய்து மனதில் ஏற்றி……புரிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வருவதற்குள்.. அந்தப்பெண், புவி வெப்பமயமாதலால் உலகப்பொருளாதாரம் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது சொல்லத்துவங்கிவிடுவாள்.

'இந்தப்பொண்ணு, காலேஜில் படிச்சாளா இல்லை லைப்ரரியிலயே படிச்சாளா?’ என்று மனம் மருகும். உருகும். கருகும்.

அடுத்த இளைஞன் பேச ஆரம்பித்துவிடுவான். இதில் இன்னொரு அறிவிக்கப்படாத அறிவிப்பாக நாம் தவறாக எடுத்துக்கொள்வது என்னவென்றால்…

வட்டமாக அமர்ந்திருப்பவர்களில், யார் முதலில் ஆரம்பிக்கிறார்களோ, அவருக்கு அடுத்து அமர்ந்திருப்பவர், பிறகு அதற்கடுத்தவர் என்று வரிசையாகத்தான் பேசவேண்டும்.

யார் பேசுவதையும் காத்திரமாக மறுத்துப் பேசிவிடக்கூடாது.

நமக்கான சுற்று வரும்போது நாம் நினைப்பவற்றைப் பேசவேண்டும்.

பிறர் சொன்ன கருத்தும் நம் கருத்தும் ஒத்துப்போனால், அமைதியாக இருந்துவிடவேண்டும்.

நாம் பேச நினைக்கும்போது, வேறு யாராவது குறுக்கிட்டால், அமைதியாக விட்டுக்கொடுத்துவிடவேண்டும்..

என்று பல தவறான அபிப்பிராயங்களை நாமாகவே உருவாக்கிக்கொண்டு காத்திருப்போம்.

இந்தச் சூழலில், விவாதம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.

ஒரு இளைஞன் சொல்லுவான்.   நாம் இங்கு கூடி, புவி வெப்பமயமாதலைப் பற்றிப் பேசும் இந்த இடமே புவியை வெப்பமயமாக்கிக்கொண்டிருக்கிறது. இங்கு உள்ள ஏ.ஸி. புவியை வெப்பமயமாக்குவதில் பங்கு வகிக்கிறது. இங்கு உள்ள பாலி கார்பனேட் நாற்காலி, புவியை வெப்பமயமாக்குகிறது என்று ஒரே பாராவில் ஹீரோவாகிக்கொண்டிருப்பான்.

நமக்கு கொதிக்கும். ஆஹா..! இப்படி டைமிங்கா பேசத்தெரியலையே.. வீட்டில் அப்பா தினம் பேப்பர் படின்னு சொல்லும்போது.. அம்மாவிடம் சென்று.. 'யம்மா! எப்படிம்மா இந்த ஆளைச் சமாளிக்கிற? காலைல விடிஞ்சவுடன என்னை எப்படித் திட்டறதுன்னு ராத்திரி ஃபுல்லா திட்டம் போட்டுக்கிட்டிருப்பாரோ?’ இப்ப உலகம் உள்ளங்கைக்கு வந்திருச்சும்மா! ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தா. இவர் சொல்ற எல்லாத்தையும் ஃபிங்கர்டிப்புல வச்சுக்கலாம். அதுக்கு வீட்டு ஹால்ல உக்காந்து பேப்பரை விரிச்சி வச்சுக்கிட்டு, ஒரு மணி நேரம் படிக்கணும்னு அவசியமில்லை. எங்க வேணும்னாலும் படிக்கலாம். நினைச்ச நேரம், நினைச்ச இடத்தில் சூப்பரா படிக்கலாம். இதெல்லாம் உன் வீட்டுக்காரருக்கு எங்க தெரியப்போகுது.. ? எனக்கு ஒரு ஃபோன் வாங்கிக்குடுத்துட்டு இதெல்லாம் பேசச்சொல்லு!’ என்று மிதப்பாகப் பேசியது நினைவுக்கு வரும்.

ஆனால் அதற்குப்பிறகு, பெற்றோர் ஸ்மார்ட்ஃபோன் வாங்கிக்கொடுத்ததும், அதை வைத்துக்கொண்டு ஒருநாள்…   ஒரு நாள் என்ன.? ஒரு நிமிடம்கூட நாம் செய்திகளைப் படித்ததில்லை என்பதும் நினைவுக்கு வரும். நாம் அந்தப் ஃபோனைப் பயன்படுத்தி செய்ததெல்லாம், ஓய்வு நேரங்களில்.. ம்ஹூம்.. எல்லா நேரங்களிலும், கேண்டி க்ரஷ், சப்வே சர்ஃபர், டெம்பிள் ரன், சமூக வலைத்தளங்களில் மொக்கை போடல் ஆகியவைதான்! இதனால்தான், ஒரு கருத்தும் வளரவில்லை என்று நொந்துபோய்க்கொண்டிருக்கும் போதுதான் நாம் ஒரு நிறுவனத்தின் நேர்முகத்தேர்வுக்கு வந்து அதற்கான குழுவிவாதத்தில் குமுறிக்கொண்டிருப்பது நினைவுக்கு வரும்..

இவ்வளவு நேரம் நாம் வாய் பார்த்துக்கொண்டிருந்ததையே பார்த்துக்கொண்டிருந்த HR நம் பெயரை அழைத்துச் சொல்லுவார்…

'இந்த டாபிக்கில் உங்க கருத்தைச் சொல்லுங்க?’

கருத்தா? நானா?? என்று நாக்கு சஹாராவாகும். கைகளில் வைத்திருக்கும் பேனா, நோட்டில் கோலம்போடும்.!

'புவி வெப்பமயமாதல், வெப்பமான பூமி இன்னும் சூடாகுவது. இரண்டு பக்கமும் கொதிப்பது அதாவது பூமியை அடுப்பில் வைத்ததற்குச் சமம்! என்று உளற ஆரம்பிப்போம்.!

'இப்படி எங்களை நல்லா ஓட்டுங்க! இதை எப்படி சரி செஞ்சுக்குறது .. என் கருத்துச்செறிவை வளர்த்துக்கிறது?’ என்று கேட்டால்…

இந்தக்கட்டுரையை முழுமையாகப் படித்திருக்கிறீர்கள், நீங்கள் கருத்தை வளர்த்துக்கொள்ள தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால், இது ஒரு நாளில் வந்துவிடாது. அது ஒரு நாள்பட்ட சூட்சுமம். ஆனால், இப்பொழுது புதிதாக ஒன்றும் செய்யவேண்டாம். Dinamani.comன் ஜங்ஷன் பகுதியில் வரும் எலலா நாளும், எல்லாக் கட்டுரைகளையும் படியுங்கள். பல்வேறு துறைகள், பல்வேறு தலைப்புகளில் தரமாக கட்டுரைகள் வருகின்றன. இதனைப்படித்தாலே போதும். கருத்துவளம் வளர்வது நிச்சயம்!

இது ஒரு வழிமுறைதான்.. இன்னும் நிறைய இருக்கிறது . வரும் வாரங்களில் பார்ப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com