அத்தியாயம் 26- அணி அனுசரிப்பு!

சென்ற வாரம் ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. கோவை அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கலந்தாய்வுக்குச் செல்ல வேண்டிய ஒரு +2 முடித்த மாணவி,

சென்ற வாரம் ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. கோவை அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கலந்தாய்வுக்குச் செல்ல வேண்டிய ஒரு +2 முடித்த மாணவி, தன் தாயுடன் சென்னை வந்து இறங்கியதும், இங்குள்ள நல்ல உள்ளங்கள் உதவியால் உடனடியாக விமானம் மூலம் கோவை சென்று கலந்தாய்வில் பங்குகொண்டு மேற்படிப்பில் சேர்ந்ததும் பல்வேறு பாராட்டுகளையும் விமர்சனங்களையும் கிளப்பியது.

ஒரு பெண்ணின் கல்விக்காகப் பலவிதமான மனிதர்கள் உதவியது பாராட்டாகவும், இவ்வளவு படித்த பெண், அதெப்படி கோவையா, சென்னையா என்றுகூடத் தெரியாமல் இருந்தாள் என்பது விமர்சனமாகவும் முன்வைக்கப்பட்டது.

பாராட்டியதை நன்முறையில் ஏற்றுக்கொண்டு, அதே சமயம் அந்த விமர்சனங்கள் மீது விமர்சனம் வைக்கவேண்டி இருக்கிறது. அந்தப் பெண் பார்க்காமல் வந்தது தவறுதான்!! ஆனால், அது அவளது குற்றம் மட்டுமல்ல! ஏட்டுக்கல்வி மட்டுமே போதும் என்று போதிக்கப்பட்டு, மதிப்பெண்கள் பின்னால் பிள்ளைகளை ஓடவைத்திருக்கும் நம் சமூகமும் இதற்குப் பொறுப்பாளிதான்! பள்ளியில் படிக்கும்போதே, பாரதியார், பாரதிதாசன், காமராஜர், அண்ணா, அன்னை தெரசா, மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் பல்கலைக்கழகங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்று சொல்லிக் கொடுத்திருந்தால், இந்தத் தவறு நிகழ்ந்திருக்காது.

பள்ளியிலேயே, பொது விவரங்கள் தெரிந்துகொள்ள, செய்திகளை அலச ஒரு அமைப்பை உருவாக்கியிருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது. அண்ணா பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகமாக கோவையிலும் இருக்கிறது என்று தெரிந்திருந்தால், அவள் ஏன் அங்கு செல்லப்போகிறாள்? ஒரு கிராமத்தில், முதல் தலைமுறையாக பன்னிரண்டாம் வகுப்பை எட்டிப்பிடிக்கும் ஒரு பெண், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட கலந்தாய்வு உறுதிச்சீட்டை முழுமையாகப் புரிந்து படிக்க இயலாமல் செய்தது நம் கல்விமுறையின் தவறுதானே ஒழிய, அந்தப் பெண்ணை மட்டும் குற்றம் சொல்லிவிட முடியாது.

இங்குதான், நம் தொடரின் இந்த அத்தியாயத்துக்கான தேவை துவங்குகிறது. சென்ற வாரம் பார்த்ததைப்போல், கருத்து வளம் எங்கிருந்து வரும் என்றால், கல்வி தவிர பல்வேறு விஷயங்களில் ஆர்வத்தையும் உற்றுநோக்கலையும், கல்வி நிறுவனமோ, வீட்டில் உள்ளவர்களோ மேம்படுத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, மாணவர்களை மதிப்பெண் மட்டும் வாங்கு! மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கொள்வோம் என்று இருதரப்பும் சொல்வதுதான் வேதனைக்குரியது! அதனால்தான், நிறுவனங்களும் “மற்ற திறன்கள் இருக்கிறதா என்று பார்! மதிப்பெண்ணை அப்புறம் பார்த்துக்கொள்வோம்!” என்று சிந்திக்கின்றன.

ஆக, கருத்து வளத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம்தான், ஒரு குழு விவாதத்தில் தனது திறனை ஒரு நபர் முழுமையாகக் காட்டமுடியும். அதை விடுத்து, அமைதியாக இருந்தால், அமைதியாக நிராகரிக்கப்படுவார்.

சரி…! நன்கு கருத்தாகப் பேசுகிறார். இதுமட்டும் போதுமா? என்று கேட்டால், போதாது. அதற்கு அடுத்ததாக, அவர் அந்தக் குழுவில் எப்படி நடந்துகொள்கிறார் என்று பார்க்கத் துவங்கிவிடுவார்கள். ஒரு குழுவில் பேசும்போது, நம் கருத்தை ஒட்டிப் பேசுபவர்களும் இருப்பார்கள். வெட்டிப் பேசுபவர்களும் இருப்பார்கள். அதை இனம் கண்டு, தனிமனிதத் தாக்குதல் நடத்தாமல், எப்படி லாகவமாகக் கையாள்கிறோம் என்று பார்ப்பார்கள்.

ஒரு தலைப்பில் பேசத் துவங்கும்போதே, சில நேரங்களில், ஒத்தக் கருத்து உடையவர்களை ஒன்றாக அமரவைத்து, எதிர்க் கருத்துக்காரர்களுடன் மோதவிடுவார்கள். அப்போதுதான், அணித் திறமையும் வெளிப்படும். அதைத்தான் நாம் ஆங்கிலத்தில் TEAM என்கிறோம். தனிமனிதராக நன்கு வேலை பார்க்கிறேன் என்று சொன்னாலும், அணியுடன் வேலை பார்க்கும்போது, இன்னும் திறமை மேம்பட வேண்டும். அதைக் கீழ்க்கண்ட விதமாகப் பிரித்துப் பார்ப்பார்கள்.

ஒத்தக் கருத்துள்ள அணி தன்னை எப்படி வளப்படுத்திக்கொள்கிறது?

யார், அணியில் தலைவராகச் செயல்படுகிறார்?

யாருக்கு அணியில் மதிப்பளிக்கப்படுகிறது?

யார், அணியில் எல்லோரையும் மதிக்கிறார்?

யாருக்கு அணியில் நிறைய விவரம் தெரிகிறது?

யார், அணிக்குத் தேவையான தகவல்களை உடனடியாக அளிக்கிறார்?

யார், தன் நன்மையைவிட அணியின் நன்மைக்காக உழைக்கிறார்?

யார், சுய விருப்பு வெறுப்பின்றி எல்லோரிடமும் சமமாகப் பழகுகிறார்?

யார், அணியுடன் கலந்து பேசி தன் கருத்தை வெளிப்படுத்துகிறார்?

யார், அணியை அரவணைத்துச் செல்கிறார்?

யார், தனி மனிதத் தாக்குதல் நிகழ்த்தாமல் இருக்கிறார்?

ஒரு அலுவலகப் பணியே அணியாகச் செய்வதுதான்! அப்படிச் செய்யும்போது, மேற்கண்ட அனைத்துச் செயல்களும் ஒரு ஊழியரிடம் சரியாகத் தேவைப்படும். அதனை அளப்பதற்கு இந்த விவாதத்தை நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும்.

குழு விவாதத்தின்போது, ஒத்தக் கருத்துள்ளவர்கள், எதிர்க் கருத்து உடையவர்களைக் கையாளும் விதம் வேறு; தன் அணிக்குள்ளேயே நடந்துகொள்ளும் விதம் வேறு. என் அனுபவத்தில், பல்வேறு குழு விவாதங்களில் பார்த்திருக்கிறேன்.

ஒரு தலைப்புக் கொடுத்து, இரண்டு அணியாகப் பிரித்து, ஒரு அணிக்கு தன் வாதத்தை வைக்க குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்தால், பல்வேறு திறமைகளையும் குறைபாடுகளையும் கண்டறியலாம்.

தான் சொல்ல நினைத்த அத்தனையும் சொல்லிவிட வேண்டும் என்ற நினைப்புடன் பேசும் நபர்கள் இருப்பார்கள். அவர்களால், அந்த அணியில் மற்ற யாரும் பேசவே முடியாது.

தான் எதுவுமே சொல்லாமல், என் அணியினர் சொன்னவற்றை நான் ஆமோதிக்கிறேன் என்று சொல்வார்கள். இவர் என்ன சொல்கிறார் என்று கடைசிவரை சொல்லமாட்டார்.

அணியைக் கலந்து ஆலோசிக்காமல், திடீரென்று, தன் அணிக்காரர் ஒருவர் சொன்ன கருத்தில் இருக்கும் பிழையைச் சுட்டிக்காட்டி, தன் மேதமைத்தனத்தை மட்டுமே வெளிப்படுத்துவார்கள்.

அணிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல், எந்தக் கருத்திலும் தலையிடாமல், இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம். பூவைப் பூவும்னும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் என்ற ரீதியில் வழவழா கொழகொழா கருத்தாளர்களும் சிக்குவார்கள்.

ஆனால், ஒருவர் தனது கருத்துகளையும், பிறரது கருத்துகளையும் ஒரு நோட்டில் எழுதி, அனைவரிடமும் பகிர்ந்துகொண்டு, மொத்த நேரத்தைக் கணக்கிட்டு, ஒருவருக்கு இத்தனை நிமிடம் என்று பிரித்து, தனது கருத்தில் இரண்டை மட்டும் தான் எடுத்துக்கொண்டு, மற்றவற்றை அணி உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளித்து,  எல்லோரையும் சிறப்பாகப் பேசவைத்து, தான் கடைசியாகப் பேசி முடித்து, நிமிர்ந்து நிற்பார். அவரைத்தான் அந்த நிறுவனம் அந்த வேலையில் அமரவைக்கும்.

அணியுடன் அனுசரிப்பது என்பது ஒரு கலை! இந்தச் சமூகத்தில் நாம் எல்லோரையும் அனுசரித்துத்தான் வாழவேண்டி இருக்கிறது. அதனை உணர்ந்தால் போதும். எனக்கேற்றார்போல் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பதால்தான், சமூகத்தில் குழப்பங்களும், ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்வும் மேலோங்குகிறது. ஒரு அலுவலகத்துக்குள் இரண்டு செக்ஷன்கள் வேறு அணிகளாக நினைத்துக்கொண்டாலும், இரண்டுமே மிகச்சரியாக, சிறப்பாக வேலை செய்தால், நிறுவனம்தான் வளரும். அதே சமயத்தில், இன்னொரு நிறுவனத்துடன் மோதும்போது, அந்த நிறுவனத்திலுள்ள அனைவரும் ஒரே அணியாகச் செயல்பட வேண்டும்.

இதை இன்னும் சுலபமாகச் சொன்னால், உள்ளூர் கிரிக்கெட்டில், அண்ணா நகர் அணியும், ராயபுரம் அணியும் மோதினால் ஒரு தரப்பு அண்ணா நகரை ஆதரிக்கும். அதே சமயத்தில், 20/20 கிரிக்கெட்டில், சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதும்போது நாம் சென்னை அணியை ஆதரிப்போம். ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா விளையாடும்போது, அனைத்து இந்தியர்களும் ஒன்றாக ஆதரிப்போம். இப்படித்தான் நிறுவனமும் எதிர்பார்க்கும். அதைத்தான் TEAM SPIRIT என்பார்கள்.

இதிலும் வென்றுவிட்டால்… அடுத்து ஆரம்பிக்கும் அக்னிப்பரிட்சை!!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com