அத்தியாயம் 27- அடுத்த கட்ட அலசல்

பொதுவாக இன்றைய சூழலில், நிறுவனங்கள் கீழ்க்கண்ட வரிசையில்தான் நேர்முகத்தேர்வின் அடுத்தடுத்த கட்டங்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

பொதுவாக இன்றைய சூழலில், நிறுவனங்கள் கீழ்க்கண்ட வரிசையில்தான் நேர்முகத்தேர்வின் அடுத்தடுத்த கட்டங்களை வடிவமைத்திருக்கிறார்கள்.

  • சுயவிபர வடிகட்டல்

  • தொலைபேசி வழித் தேர்வு

  • தொழில்நுட்பச் சுற்று (எழுத்துத் தேர்வு)

  • தொழில்நுட்பச்சுற்று  ( நேர்முகம்)

  • மனிதவள அதிகாரி நேர்முகத் தேர்வு ( தனி நபர்)

  • குழு விவாதம்

  • இறுதி நேர்முகத்தேர்வு

  • பின்புல ஆராய்ச்சி

  • உடல்நலத் தேர்வு

  • வேலை நியமன ஆணை

இதில் நாம் சுயவிபரத்தில் துவங்கி, குழுவிவாதம் வரை வந்துவிட்டோம். இதில், தொலைபேசித் தேர்வு குறித்து, ஒரு சில குறிப்புகளை இங்கு பகிர எண்ணுகிறேன்.

நிறுவனங்களுக்கு அதிக ரெஸ்யூமேக்கள் வந்திருந்து, அவற்றில் அதிக நபர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால், எல்லோரையும் நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்ல முடியாது. ஆகவே, நேரம், உழைப்பு ஆகியவற்றை மிச்சப்படுத்த, துரிதமாக ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடுவது மூலம், அவர்களது பேசும் விதத்தை, அணுகுமுறையை, தெளிவைத் தெரிந்துகொள்ளலாம் என்பதற்காகத்தான் இந்தச் சுற்று வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தின் வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு, அவர்கள் என்று வேண்டுமானாலும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கலாம் என்ற சூழலில் இருக்கும்போது, நமக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் மிக முக்கியமானதாகும். சில விஷயங்களில் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகிறது.

வேலை நேரமான காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை செல்பேசியில் யாருடனும் அதிக நேரம் பேசாமல் பார்த்துக்கொள்ளலாம்.

ஏதாவது தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்து நாம் எடுக்காமல், துண்டிக்கப்பட்டால், தயங்காமல் திரும்ப அழைக்கலாம்.

முக்கியமாக, எந்த எண்ணை, சுயவிபரத்தில் கொடுத்திருக்கிறோமோ அந்த எண் உள்ள மொபைல் நம் கையில் இருக்கவேண்டும். ஏனெனில், ரெஸ்யூமேவில் கொடுத்த எண்ணை, அவசரத்துக்கு அண்ணனிடம் கொடுத்து அனுப்ப, அவர் “மோகன் ஊர் சுத்தப்போயிருக்கான்” நீங்க யாரு? அவன் ஃப்ரெண்டா? ஏன்ப்பா நேத்து குடிச்சிட்டு கலாட்டா பண்ணீங்க? என்று வினவினால் போதும்! இனிமேல் அந்த நிறுவனம் தொடர்பு எல்லைக்கு வெளியில்தான்!

செல்ஃபோன் பேட்டரியை முழுமையான சார்ஜில் வைத்தல் அவசியம்.  “சார்! பேட்டரி லோ! என்று சொல்லி ஒரு வேலையை இழத்தல் தலைகுனிவு!

அது நிறுவனத்தின் வேலைக்கான அழைப்புதான் என்று தெரிந்தால், உடனே ஒரு அமைதியான இடத்துக்கு நகர்ந்துவிடுதல் நன்று! அதையும் மீறி, பயணத்திலோ, கூட்டமான இடத்திலோ இருந்தால், அழைத்தவரிடம், நம் நிலையைச் சொல்லி, நான் இன்னும் சற்று நேரத்தில் அமைதியான இடத்துக்குச் சென்றுவிட்டு அழைக்கவா? என்று கேட்டுக்கொள்ளலாம்.

'சார்! சத்தமா இருக்கு ! நீங்க பேசுறது கேக்கலை! இன்னும் சத்தமா பேசுங்க என்று சொல்வதை தவிர்த்து, நான் மறுபடியும் அழைக்கவா?' என்று கேட்பது நல்ல பழக்கம்!

பேசத்துவங்கும்போது, 'ஹலோ! யார் பேசறது?' என்று அதிகாரமாகக் கேட்காமல், … 'குட் மார்னிங்! கேசவன் பேசுறேன்!' என்று நேரத்துக்கு ஏற்றார்போல் வணக்கம் தெரிவித்து , பெயரைச் சொல்லலாம்.

நம்மைப்பற்றிய தகவல்களையும், அந்த நிறுவனத்தைப்பற்றிய அடிப்படைத் தகவல்களையும் மூளையின் மேலடுக்கில் தயாராக வைத்திருக்கவேண்டும். கேட்கும்போது தயக்கமின்றி சொல்லல் அவசியம்.

கேட்கும் கேள்விக்கு, தெளிவாக, ஏதாவது ஒரு மொழியில் பதில் சொல்லவேண்டும். பொதுவாக, அவர்கள் பேசும் மொழியிலேயே பேசுவது பலனளிக்கும். மேலும் பேசும்போது ‘ம்.., அதுவந்து…, இருங்க சொல்றேன்' போன்ற பதங்கள் சொதப்பலின் வாசலாக அமையும்!

அவர்களைப் பேசவிட்டு, முழுமையாகக் கேட்டுக்கொண்டு, பிறகு பதில் சொல்வது உத்தமம்! பேசி முடிக்கும்போது, 'அழைத்தமைக்கு நன்றி' என்று மகிழ்ச்சியாகக் சொல்லலாம்.

இயல்பாக பதில் சொல்லி, அவர்கள் அப்போதே ஒரு முடிவுக்கு வரும்வகையில் பேசிவிடுதல் நலம். அதேபோல், அவர்கள் நேர்முகத்தேர்வுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் வரும்படி அழைத்தால், மிகவும் நுணுக்கமாகக் கேட்கிறேன் பேர்வழி என்று அவர்களிடமே அலுவலகத்துக்கு வரும் வழியைக் கேட்டால், தாழியை உடைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ! வேலை என்ற வெண்ணையை வேறு யாரோ ஒருவருக்குக் கொடுத்துவிடுவார்கள்.

அலுவலக முகவரி, இணையத்தில் இருக்கும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், அந்த அலுவலக தொலைபேசிக்கு அழைத்து, வரவேற்பாளரிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம். அதை விடுத்து, நேர்முகத்தேர்வாளரிடமே வழி கேட்பது சொந்தச் செலவில் சூனியம்தான்!  முடிந்தவரை, தானாகத் தேடிச்சென்று அலுவலகத்தை அடைவதுதான் புத்திசாலித்தனம்!

இப்படி எல்லா வழிகாட்டும் நெறிமுறைகளையும் படித்துவிட்டு, தொலைபேசி, நேர்முகம், குழுவிவாதம் இவையனைத்தும் கடந்துவந்தபின், நம்மை மீண்டும் சந்தித்து பதம் பார்ப்பார்கள்.

நேர்முகத்தேர்வு, குழு விவாதம், தொழில்நுட்பக் கேள்விகள், எழுத்துத்தேர்வு ஆகியவற்றின் மூலம் ஒரு நிறுவனம் ஆழமாக மூன்று விபரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறது.

நமக்கு அந்த வேலையைச் செய்யும் தகுதி இருக்கிறதா?

உண்மையிலேயே நமக்கு அந்த வேலை மிகவும் தேவையாக இருக்கிறதா?

அந்த நிறுவனத்தின் கலாச்சாரத்துக்கு நாம் பொருந்துவோமா?

இதன் அடிப்படையில்தான் அவர்கள் எதிர்பார்க்கும் குணாதிசயம் நம்மிடம் இருக்கிறதா என்று பார்க்க அவர்கள் ஆடும் சதிராட்டங்களும் , கேள்விகளும் இடம்பெறும்.

அந்த வகையில் நேர்முகத்தேர்வின் இரண்டுகட்டங்களிலும் ஒரு நபர் வென்றுவிட்டால் அவரது வேலை கிட்டத்தட்ட உறுதிதான்..! ஆனால், நம்மைப்போலவே இன்னும் நான்குபேர் வென்று , நின்றுகொண்டிருந்தால், அதுவும், ஒரே ஒரு பதவிதான் இருக்கிறது என்று வரும்போது நிலைமை இன்னும் அழுத்தமாகும். இது இரண்டு தரப்புக்குமே பொருந்தும்.

அப்போது இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வு இன்னும் கொஞ்சம் ஆழமாக இருக்கும். அப்போது பங்கேற்பாளருக்கு கொஞ்சம் அதிகமாக சுதந்திரமும் கொடுக்கப்படும். ஏனெனில் அப்போதுதான் தவறு செய்ய வாய்ப்பிருக்கும். வாய் விடுவார்கள். நிராகரிக்கச் சுலபமாக இருக்கும்!

கடைசிக்கட்ட நேர்முகத்தேர்வில் கேட்கும் கேள்விகளில் பல அஸ்திரங்கள் இருக்கும். அவற்றையும் சந்தித்துவிட்டால் போதும். பத்ம வியூகத்தை உடைத்தது போல் வேலையைக் கைப்பற்றலாம்.

ஒவ்வொரு கேள்விக்குள்ளும் பல்வேறு அர்த்தங்களும், நம்மை நோண்டி, குணம் தெரிந்துகொள்ளும் நடைமுறையும் அடங்கியிருக்கும். அவற்றைப் பார்க்க ஆறு முழுநாட்கள் காத்திருந்தால் போதும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com