அத்தியாயம் 28- கேள்விகளுக்குள் வேலை!

எல்லாவிதமான ஆரம்பகட்ட சோதனைகளும் கடந்து, ஒரு நிறுவனம் எதிர்பார்க்கும், கவனம், கற்பனா சக்தி, பொறுப்பு, ஆளுமைத்திறன், குழு மேலாண்மை இன்னபிற

எல்லாவிதமான ஆரம்பகட்ட சோதனைகளும் கடந்து, ஒரு நிறுவனம் எதிர்பார்க்கும், கவனம், கற்பனா சக்தி, பொறுப்பு, ஆளுமைத்திறன், குழு மேலாண்மை இன்னபிற குணாதிசயங்கள் இருந்தாலும், இன்னும் இந்த நபர் நம் நிறுவனத்துக்குச் சரிப்பட்டு வருவாரா என்று கடைசியாக சோதித்து விட்டுதான் முடிவெடுப்பார்கள். அப்படி முடிவெடுக்க மீண்டும் ஒரு நேர்முகத்தேர்வு நடக்கும். அந்தத் தேர்வை உடனே வைக்காமல், ஒரு வாரம் கழித்து நாள் குறிப்பிட்டு வரச்சொல்லுவார்கள். நம்முடன் போட்டி போட்ட இன்னும் சிலரையும் வரச்சொல்லியிருப்பார்கள். ஏனெனில், இந்த இடைப்பட்ட நேரத்தில், இரண்டு தரப்பிலும் சில விஷயங்கள் நடக்கும். நிறுவனத்தின் தரப்பில், நாம் தேர்ந்தெடுத்த வழிமுறைப்படி, இந்த நபர் சரியானவர்தானா?

நேர்முகத்தேர்விலும், குழுவிவாதத்திலும், இந்த நபரின் பதில்களும், நடவடிக்கையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளலாமா? (குழு விவாதத்தை சில நிறுவனங்கள் ஒளிப்பதிவு செய்து கொள்கிறார்கள்) சுயவிபரக்குறிப்பில் குறிப்பிட்டபடி, REFERENCE என்று குறிப்பிட்டிருக்கும் நபர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் கூறியது சரிதானா என்று விசாரித்துக்கொள்ளலாம்.

நம் தரப்பில், அந்த நிறுவனத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்துகொள்ளலாம். நிறுவனத்தின் அதிகாரிகள், நிதி நிலைமை, பங்குச்சந்தையில் அந்த நிறுவனத்தின் போக்கு, நிறுவனத்தின் தயாரிப்புகள்,  சேவைகள் குறித்த உட்பார்வை ஆகியவற்றை ஒரு அலசு அலசி வைத்துக்கொள்வது பயனளிக்கும். ஆனால், பொதுவாக நம் இளைஞர்கள், ‘மச்சி ! மொதல் ரெண்டு ரவுண்டு செலக்ட் ஆகிட்டேன். மூணாவது ரவுண்டுக்கு அடுத்த வாரம் வரச்சொல்லியிருக்காங்க! சும்மா தூள் கிளப்பிடலாம். வேலை நிச்சயம்!  இடையில் ஒரு வாரம் இருக்கு! வரியா கொடைக்கானல் போய்ட்டு வரலாம்!“ என்று கிளம்பிவிடுவார்கள்.அல்லது, ‘அதெல்லாம் சும்மா ஐ வாஷ் டா! வேற யாருக்காவது வேலையைத் தூக்கிக்குடுத்துருவானுங்க! நான் வேற கம்பெனிக்கு அப்ளை பண்ண வேண்டியதுதான்!' என்று துவண்டுவிடுவார்கள். இந்த கால அவகாசத்தை, நேர்முகத்தேர்வுக்கு வந்த பங்கேற்பாளரின் உளவியல் மாற்றத்தை அறிவதற்காக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும்.முதல் நபர், மிதமிஞ்சிய நம்பிக்கையுடன் இருப்பார். இந்தச் சுற்றில் கோட்டை விட்டுவிடுவார்.

அடுத்தவர், சுத்தமாக நம்பிக்கை இழந்து காணப்படுவார். அவருக்கும் அதே கதிதான்!

ஆனால், எத்தனையோ நாள் காத்திருந்தோம். இந்த ஒரு வாரம் கொஞ்சம் சிரத்தையுடன் அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வோம். நமக்கு வேலை கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும், ஒரு நல்ல அனுபவத்தையாவது கொள்முதல் செய்யலாம். வேலை கிடைத்துவிட்டால், என்ன செய்வது என்பது பற்றி தெளிவான முடிவுக்கு வரலாம். நமது தகுதிக்கும், திறமைக்கும் நிச்சயம் அந்த நிறுவனம் வேலை கொடுக்கும். அப்படிக் கொடுத்தால், அந்த நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதில், எனது பங்கு ஒருதுளியாவது இருக்கவேண்டும். என்று நேர்மறையாகச் சிந்திக்கும் மூன்றாவது நபர்தான் நிறுவனத்தின் இலக்கு!

அப்படி பல்வேறு சிந்தனைகளுடன், ஒருவாரம் கழித்து அடுத்த சுற்று நேர்முக்கியத்தேர்வுக்கு உள்ளே நுழைபவர்களுக்கு பல்வேறு விதமான கேள்விகள் காத்திருக்கும். அவற்றை இப்படி வகைப் படுத்தலாம்.

  • நேரடிக் கேள்விகள்

  • மறைமுகக் கேள்விகள்

  • சூழலுக்கேற்ற கேள்விகள்

  • குணமறியும் கேள்விகள்

  • நுட்பத் திறன் கேள்விகள்

இவற்றை இன்னும் ஆழமாகப் பார்க்கலாம்.

நேரடிக் கேள்விகள் :

இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில்தான் இருக்க முடியும். அது பொது அறிவாகவும் இருக்கலாம். சொந்த வாழ்க்கையாகவும் இருக்கலாம்.

ஜப்பானின் பிரதமர் பெயர்? 

அலெக்ஸாண்டரின் குருநாதர் பெயர்?

எவரெஸ்ட் எந்த நாட்டில் உள்ளது?

பாதாளச்சாக்கடைகளின் மூடிகள் ஏன் வட்டமாக இருக்கின்றன?

நீங்கள் படித்த கல்லூரி தாளாளர் பெயர் என்ன?

என்ற ரீதியில் கேள்விகள் இருக்கும். இதில் நமக்கு பதில் தெரிந்திருந்தால் நல்லது..! இல்லை யென்றாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அடுத்த கேள்வி நோக்கிச் சென்றுவிடுவார்கள். இப்படி நம்மை ஒரு சகஜநிலைக்குக் கொண்டுவந்துவிட்டு, நேரடிக்கேள்வியாக, தடாலடிக்கேள்விகள் வந்து விழும்.

இந்த வேலையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

இங்கு யாரையாவது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? ஆம் எனில் அவர் யார்? என்ன பதவியில் இருக்கிறார்?

இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்? நிறுவனத்தைப்பற்றி இரண்டு நிமிடம் பேசவும்.

இந்த வகையாகக் கேட்கப்படும்போது, ஏற்கனவே பல்வேறு குணாதிசயங்களை அலசியது போக, உண்மையிலேயே நாம் அக்கறையுடன்

இந்த வேலைக்கு வருகிறோமா? வருவோமா? என்று தெரிந்துகொள்கிறார்கள். மேலும், நமது பொது அறிவுத்திறனும் ஓரளவு வெளிப்பட்டுவிடும்.

அடுத்ததாக..

மறைமுகக் கேள்விகள் :

இவை கேட்பதற்குக் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் .ஆனால், நிதானித்து, நம் அத்துனை திறமையையும் ஒருங்கிணைத்து பதில் சொல்லவேண்டும். இதில் அவர்கள் என்ன தெரிந்துகொள்ளப் போகிறார்கள் என்று நேரடியாகத் தெரியாது. ஆனால், நம்மை எடைபோட அது ஒரு கண்ணுக்குத் தெரியாத தராசு என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும். ஆனால், இந்தக் கேள்விகளின்போது விழிப்புணர்வுடன் இருப்பது மட்டும் முக்கியம்.

நீங்கள் ஒரு சிறு கரப்பான்பூச்சி அளவுக்கு மாறிவிட்டீர்கள். அதுவும் ஒரு மிக்ஸிக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். மிக்ஸி எப்போது வேண்டுமானாலும் இயக்கப்படலாம். என்ன செய்வீர்கள்?

உங்கள் சுயசரிதை எழுதப்பட்டால், யார் ஆசிரியராக இருப்பார்கள்? அதற்கு என்ன தலைப்பு வைப்பீர்கள்?

இதுவரை வாழ்வில் நீங்கள் தோற்ற சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்!

அடுத்த ஐந்தாண்டுகளில் எங்கு, எப்படி இருப்பீர்கள்?

இதில்..முதல் கேள்வி கேட்பதன் நோக்கம்,  தப்பிக்கவே முடியாத அளவு, பிரச்னை வரும்போது, அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளதான்…!  பதிலில் பதட்டம் இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்!!

இப்படித்தான் ஒரு நேர்முகத்தேர்வில், ஒருவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ஒரு கிராமத்து இரயில் பாதையில், தண்டவாளம் விரிசல் விட்டிருக்கிறது. இரயில் அதனைக் கடந்தால் நிச்சயமாக மிகப்பெரிய விபத்தாக மாறவும்  வாய்ப்பிருக்கிறது. இந்தச் சூழலில், நீங்கள் தண்டவாள விரிசலைப் பார்த்துவிடுகிறீர்கள். இரயில் பாதை அருகே நிற்கிறீர்கள். இரயிலை நிறுத்த என்னவெல்லாம் செய்வீர்கள்?

சிவப்பு துணியைக் காட்டுவேன் –

இருக்கும் நேரத்தில் எங்கு போய் சிவப்பு துணியைத் தேடுவீர்கள். துணி கிடைக்கவில்லை! இப்போது என்ன செய்வீர்கள்?

நெருப்பு காட்டுவேன்

அன்று கும்மிருட்டு, கடுமையாக மழை பெய்துகொண்டிருக்கிறது. நெருப்பு காட்டமுடியாது.. இப்போது என்ன செய்வீர்கள்?

டார்ச் காட்டுவேன்.

உங்கள் டார்ச் ரிப்பேர் .. விளக்கு எரியவில்லை. இப்போது என்ன செய்வீர்கள்?

இவ்வாறு இன்னும் வேறுவிதமான யோசனைகளும் நிராகரிக்கப்பட்டு, இப்போது என்ன செய்வீர்கள் என்று மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அப்போது நம் ஆள் சொன்னார்.

என் பாட்டியைக் கூட்டிக்கிட்டு வருவேன் சார்!

ஏன்? அவங்களால ரயிலை நிறுத்திட முடியுமா? என்கிறார் நேர்முகத்தேர்வாளர்.

அவங்கதான் இன்னிக்கு வரைக்கும் இரயில் விபத்தே பார்த்ததில்லை! நாங்க ரெண்டுபேரும் நின்னு பார்ப்போம்.!

அப்புறம் என்ன? நகைச்சுவை உணர்வோடு முடித்த அந்த ஆளை நிறுவனம் சேர்த்துக்கொண்டு விடுவார்கள்.

ஏனெனில் இங்கு பிரச்னைக்குள் சிக்கிக்கொள்ளாமல், தீர்வுகளை அள்ளித்தெளிக்கும் ஆட்கள்தான் நிறுவனங்களின் இன்றியமையாத தேவை!

அடுத்தது சூழலுக்கேற்ற கேள்விகள்! நம் சூழல் இந்த பாகம் இன்னும் நீளும் போலிருக்கிறது. ஆகவே, அடுத்த வாரம் பார்க்கலாம் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com