அத்தியாயம் 29- நிறைவுக் கேள்விகள்

நேர்முக்கியத்தேர்வின் இறுதிச்சுற்றில் கேள்விகள் மிகவும் யதார்த்தமாகக் கேட்பதுபோல் தோன்றினாலும், அவற்றின் பின்னணியில் சரியான அளவிடும் காரணங்கள் இருக்கும்.


நேர்முக்கியத்தேர்வின் இறுதிச்சுற்றில் கேள்விகள் மிகவும் யதார்த்தமாகக் கேட்பதுபோல் தோன்றினாலும், அவற்றின் பின்னணியில் சரியான அளவிடும் காரணங்கள் இருக்கும்.

அப்படித்தான் நேரடிக் கேள்விகளும், மறைமுகக்கேள்விகளும் நம்மை அளக்கும்.

சென்ற வாரம் பார்த்த மறைமுகக்கேள்விகள் மூலமாக , நமது எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் செயல்கள் பற்றித் தெரிந்துகொள்வார்கள்.

உங்கள் சுயசரிதை எழுதப்பட்டால், யார் ஆசிரியராக இருப்பார்கள்? அதற்கு என்ன தலைப்பு வைப்பீர்கள்?

உடனே பதில் சொல்வதாக நினைத்து, யாராவது ஒரு பெரிய எழுத்தாளரின் பெயரைச் சொல்வோம். பிறகு தலைப்பும் சொல்வோம். எல்லாம் சரிதான்..!! ஆனால் கேள்வியை இன்னும் சரியாகக் கவனித்தால் ஒரு விஷயம் விளங்கும். சுயசரிதை என்பது சம்பந்தப்பட்ட நபரே எழுதுவது.. அதைப்போய் அடுத்தவரை வைத்து எழுதுவேன் என்று சொல்லி மாட்டிக்கொள்ளக்கூடாது.

இந்தக்கேள்விமூலம், நமது கவனத்தையும், வாழ்வின் குறிக்கோளையும் தெரிந்துகொள்வார்கள்.

இதுவரை வாழ்வில் நீங்கள் தோற்ற சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்!

இதில் நம் உண்மைத்தன்மை சோதிக்கப்படும். கண்டிப்பாக ஏதாவது ஒரு விஷயத்தில் தோற்றிருப்போம். காதல், பணம், உறவுகள், கல்வி என்று ஏதாவது ஒரு தோல்வி நம்மைக் கடந்து சென்றிருக்கும் அதனை இயல்பாகச் சொன்னால் போதும். அதிலிருந்து எப்படி நம்மைத் தேற்றிக்கொண்டோம் என்று சொல்லலாம். எல்லா இடத்திலும் அறிவைப் பயன்படுத்துவதை விட, சில இடங்களில் உணர்வுகளைப் பயன்படுத்தினால் இன்னும் பலம் அதிகரிக்கும். இது நம் மனநிலையை நாம் உணர்ந்துகொண்டிருக்கிறோமா என்றும் அளவிடப் பயன்படும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் எங்கு, எப்படி இருப்பீர்கள்?

இது கேட்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும், மிகவும் சிக்கலான கேள்வி! இதற்கு பதில் சொல்லும்போது, ஐந்தாண்டுகள் கழித்து ஐரோப்பாவில் இருப்பேன். ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக இருப்பேன். அல்லது இந்த நிறுவனத்தில் ஒரு பொறுப்பில் இருப்பேன் என்று சொல்லுவோம்.

நமது திட்டமிடலையும், இந்த நிறுவனத்தில் நாம் எத்தனை ஆண்டுகள் வேலைபார்க்க எண்ணியிருக்கிறோம் என்பதையும் இது உணர்த்திவிடும். பொதுவாக , சகஜமான கேள்வியாக நினைத்துக்கொண்டு, குத்துமதிப்பாக பதில் சொல்லாமல், ஒரு தெளிவுடன் ஐந்தாண்டுத் திட்டம் போல இரண்டு ஆண்டுகளில் இப்படி, இதைச்செய்யப்போகிறேன். அடுத்த ஆண்டுகள் எப்படி இருக்கப்போகிறது என்று தெளிவாக, கல்வி, வேலை, குடும்பம் ஆகியவற்றில் நமது இலக்கை வெளிப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

அடுத்ததாக..

சூழலுக்கேற்ற கேள்விகள்

அந்தச் சூழலில் உங்கள் பதிலை வைத்தோ, நடை, உடை, பாவனைகளை வைத்தோ கேட்கப்படும் கேள்விகள் இந்த வகைப்படும். அது நம்மை இடக்கு மடக்காக மாட்டிவைப்பதாகவோ, நமது சமயோசித அறிவை வெளிப்படுத்துவதாகவோ அமைந்துவிடும். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் கவனமாக இருப்பதுதான் எப்போதும் நன்மை பயக்கும்.

குணாதிசயத்தை வெளிப்படுத்தும் கேள்விகள்

இவை, நம் வேலைத்திறனை விட கடைசி நேர டென்ஷன் அடைகிறோமா என்று பார்ப்பதற்காக செய்யப்படும். எனக்குத் தெரிந்து ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கான நேர்முகத்தேர்வில் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து கடைசிச்சுற்றுக்கும் வந்தாயிற்று! அந்த நபருக்கு கொஞ்சம் பதற்றம் இருப்பதாக அதிகாரிக்குத் தோன்றியிருக்கிறது. உடனே, தனக்கு வந்த ஒரு தொலைபேசியில், பேசவேண்டியதை சுருக்கமாகப் பேசிவிட்டு,

ஓ… ஓஹோ..! அப்படியா? இதை முன்னரே சொல்லியிருக்கலாமே? இங்கே ஒருத்தரை செலக்ட் செஞ்சு முடிவெடுக்குற நிலைமைல இப்படிச் செய்யலாமா? அவர் எம்.டிக்கு வேண்டியவர்ன்னா நாம ஒண்ணுமே கேக்க முடியாதே? சரி… நான் அவர்க்கிட்ட சொல்லி அனுப்பிடுறேன். என்று சொல்லச் சொல்ல.. நம் ஆளின் முகம் வெளிறியும், கோபத்தில் கொந்தளித்தும் மெதுவாக சீட்டை விட்டு எழுந்திருக்க முயற்சித்திருக்கிறார்.

இதைத் துல்லியமாக கவனித்துவிட்டு, போனைத் துண்டிப்பதுபோல் பாவ்லா செய்து, இவரைப்பார்த்து பேசத் துவங்கும் முன்..

“தெரியும் சார் ! நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு? ஏன் சார்.. இப்படி ஒருத்தனை வதைக்கிறீங்க? எல்லா இடத்திலும் சிபாரிசு, சிபாரிசுன்னா திறமைசாலியெல்லாம் எங்க போவோம் ? என்று பொரிந்து தள்ளிவிட்டார். அப்போதுதான் அந்த அதிகாரி பேசத்துவங்கியிருக்கிறார்.

இங்க நான் பேசிய தொலைபேசி உரையாடலை நீங்க தேவையே இல்லாமல் கவனித்திருக்க வேண்டாம்.

அப்படியே கவனித்திருந்தாலும், நான் என்ன சொல்கிறேன் என்று காத்திருந்திருக்கலாம்.

நான் உங்கள் வேலைக்கு வேறு ஆள் வரப்போகிறார் என்று எப்போதாவது சொன்னேனா? இங்கு உங்களைத்தவிர பல வேலைகளுக்கு ஆட்கள் நியமித்திருக்கலாம் அல்லவா?

இவற்றையெல்லாம் மீறி, இந்த வேலை கிடைக்காவிட்டால், இவ்வளவு கோபப்படுவீர்கள் என்றால், கிடைத்தால் இன்னும் அதிகமாக கோபப்படுவீர்கள் போலிருக்கிறது. மன்னிக்கவும்! உங்களுக்கு வேலை இல்லை!  மேலும், அந்த தொலைபேசி உரையாடலே நடிப்புதான் என்றும் சொல்லிவிட்டார்.

இப்படித்தான் சூழலுக்கேற்ற தேர்வுமுறையும், குணாதிசயம் அறிவதும் நடக்கும்.

இந்த நடப்பில் , சிபாரிசு என்ற வார்த்தை உலவியதை கவனித்திருக்கலாம். அப்படி சிபாரிசு மூலம் வேலை கிடைப்பது இப்போது ஓரளவு நடந்தாலும், யாரும் முழுதாக சிபாரிசை (RECOMMENDATION) ஆதரிப்பதில்லை. ஆனால், அதற்குப்பதிலாக இன்னொரு நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அது REFERENCE எனப்படும் பரிந்துரைத்தல்! ஒரு நிறுவனத்தில் ஏற்கனவே வேலை பார்ப்பவர் இருந்தால், அவரது பரிந்துரையின் பேரில் உள்ளே நுழையலாம். அது, அந்த நிறுவனத்தில் இந்த வேலை காலியாக உள்ளது என்று தெரிந்துகொள்ளவும், இன்னாரை எனக்குத் தெரியும் என்று சொல்வதற்கும் மட்டும்தான் உதவும். அதற்குப்பிறகு, நிறுவனம் எடுப்பதுதான் முடிவு.! அதில் இன்னொரு கொக்கியும் உண்டு. ! ஒருவர் பரிந்துரையில் வேலையில் இருக்கும்போது, நாம் எதாவது தவறு செய்தால், அவரிடமும் குறை சொல்ல வாய்ப்பிருக்கிறது.

இத்தனை சவால்களையும் கடந்து, வென்றால், நேர்முகத்தேர்வாளர் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவார். அப்போது , “நீங்கள் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா? என்று கேட்பார்!

உடனே,

சம்பளம் கேஷா, அக்கவுண்டில் போடுவீங்களா?

மாசாமாசம் எத்தனாம் தேதி சம்பளம் கிடைக்கும்?

வேறென்ன அலவன்ஸெல்லாம் எனக்கு உண்டு?

கடன் வாங்க எத்தனை மாதம் ஆகும்?

இன்கிரிமெண்ட் எத்தனை சதவீதம்?

என்று கேட்டால், 1000 படிகள் ஏறி, கடைசிப்படியில் வழுக்கி அடிவாரத்துக்கு வந்தது போலாகிவிடும்.

நமக்கு கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் வரும்போது.. சில பயனுள்ள, நம்பிக்கை ஏற்படுத்தும் கேள்விகளைக் கேட்கலாம்

என் வேலையின் ஒருநாள் என்பது எப்படி இருக்கும்?

நிறுவனத்தின் வளர்ச்சித்திட்டங்கள் என்னென்ன?

இந்த நிறுவனத்தின் கலாச்சாரம் எப்படிப்பட்டது?

எப்படி ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது?

என் வேலையில், எனது திறமையை எதனை அடிப்படையாகக் கொண்டு அளவிடுவீர்கள்?

இப்போது உங்கள் அளவீட்டுப்படி, நான் எந்தத் திறனில் இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும்?

ஏன் இந்தப் பதவி காலியானது? (நேர்முகத்தேர்வாளரின் குணத்தைப்பொறுத்து இந்தக்கேள்வியைக் கேட்கலாம்)

நான் எப்போது வேலையில் சேரவேண்டும்?

இந்தக்கேள்விகள் கேட்பதன் மூலம், நாம் வேலையில் மட்டுமே கவனமாக இருப்போம் என்று தெரிந்துகொள்வார்கள். இது கடைசிப்படியில் கைகொடுத்துக் கூட்டிச்செல்லும் வகையில் அமையும்.

இதிலும் தேறிவிட்டால்… வேலை கிடைத்துவிட்டது என்ற செய்தியோடு இருப்பிடம் போய்ச் சேருவோம்.

ஆனால், இன்னும் சில குட்டித்தகவல்கள் இருக்கின்றன. அத்துடன் நேர்முக்கியத்தேர்வு நிறைவுக்கு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com