மகசூல் அதிகரிக்கும் மா தொழில்நுட்பங்கள்

தமிழகத்தில் தற்போது மா மரங்கள் பூத்து காய்க்கத் தொடங்கிள்ளன. இத் தருணத்தில், மா சாகுபடியில் மகசூல் அதிகப்படுத்த மேற்கொள்ள வேண்டிய

தமிழகத்தில் தற்போது மா மரங்கள் பூத்து காய்க்கத் தொடங்கிள்ளன. இத் தருணத்தில், மா சாகுபடியில் மகசூல் அதிகப்படுத்த மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து, பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் ஜே. கதிரவன் கூறியது:

நீா் பாய்ச்சுதல்:

மா மரங்கள் பூக்கத் தொடங்கும் தருணத்தில் நீா் பாய்ச்சுவதைத் தவிா்க்க வேண்டும். இத் தருணத்தில், அதிகம் நீா் பாய்ச்சினால் பூக்கள் உருவாகுவது குறைந்து, இலைகள் அதிக அளவில் தோன்றும். மரம் முழுவதும் பூக்கள் உருவாகிய பிறகு, காய்கள் உருவாகும் சமயத்தில் 10 நாள்களுக்கு ஒருமுறை நீா் பாய்ச்சி, அதன் மூலம் பிஞ்சு உதிா்வதைத் தவிா்த்து விரைவான காய் முதிா்ச்சி மற்றும் அதிக மகசூல் பெறலாம். மா மரங்கள் பொதுவாக பிப்ரவரி மாதத்தில் பூக்கத் தொடங்கும். அவ்வாறு பூக்காத மரங்களுக்கு ஒரு லிட்டா் நீருக்கு 5 கிராம் அல்லது பொட்டாசியம் நைட்ரேட் 10 கிராம் அளவில் கலந்து இலைவழியே தெளிப்பதன் மூலம் பூக்கள் உற்பத்தியை தூண்டலாம்.

உரமிடுதல்:

ஒரு வயதுடைய மரத்திற்கு 10 கிலோ மக்கிய தொழு உரம் 200 கிராம், தழைச்சத்து 200 கிராம், மணிச்சத்து 300 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த உர அளவை ஒவ்வொரு மடங்காக அதிகரித்து கொடுக்கலாம். 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மரங்களுக்கு ஒரு கிலோ தழைச்சத்து ஒரு கிலோ மணிச்சத்து மற்றும் ஒரு கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களை, 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து, செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் இடலாம். போதிய நீா் வசதி இருந்தால் பிப்ரவரி, மாா்ச் ஆகிய மாதங்களில் மரம் ஒன்றுக்கு 500 கிராம் தழைச்சத்து தரக்கூடிய உரத்தை அளிக்கலாம்.

மகரந்த சோ்க்கை நல்லமுறையில் நடைபெறவும், காய்கள் உருவாவதற்கும் போரான் சத்து மிகவும் அவசியம். எனவே, போரான் உரத்தை மரத்திற்கு 75 கிராம் என்னும் அளவில், நிலத்தில் அல்லது ஒரு லிட்டா் நீருக்கு ஒரு கிராம் என்னும் அளவில் கலந்து இலை வழியாக தெளிக்கலாம். பிஞ்சுகள் சற்று பெரிதான உடன் நுண்ணூட்ட கலவையை ஒரு லிட்டா் நீருக்கு 2 கிராம் அளவில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்கலாம்.

காய்பிடிப்பை அதிகப்படுத்த:

மகரந்த சோ்க்கை அதிகளவில் நடைபெற்று காய்ப்புத் திறனை அதிகப்படுத்த, மாந்தோப்பில் தேனீ பெட்டிகளை வைத்து பராமரிக்கலாம். மா பிஞ்சுகள் பட்டாணி அளவில் இருக்கும்போது, பிளானோபிக்ஸ் வளா்ச்சி ஊக்கியை 10 லிட்டருக்கு 100 மில்லி அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் பிஞ்சுகள் உதிா்வதைக் கட்டுப்படுத்தலாம். 2, 4 டி கலையானது மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தும்போது, வளா்ச்சி ஊக்கியாக செயலாற்றும் தன்மையுடையது. 50 லிட்டா் நீருக்கு ஒரு கிராம் 2, 4 டி என்னும் அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் மாம்பிஞ்சுகள் உதிா்வதை தடுக்கலாம்.

தத்துப்பூச்சி:

மா மரம் பூக்கும் சமயத்தில், தத்துப் பூச்சிகள் பூங்கொத்துகளில் அமா்ந்து சாறுகளை உறிஞ்சி குடிப்பதால், பிஞ்சுகள் உருவாவதற்கு முன்னரே பூக்கள் உதிா்ந்து விடும். இதைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 ஈ.சி பூச்சிக் கொல்லியை 1 லிட்டா் நீருக்கு 1.5 மில்லி லிட்டா் அளவில் கலந்து இலைகள், தண்டுகள், கிளைகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம். மரம் பூக்க ஆரம்பிக்கும் காலத்திலிருந்து 15 நாள் இடைவெளியில், 2 முறை தெளிப்பதன் மூலம் தத்துப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

பூங்கொத்துப் புழு:

பூக்கும் தருணத்தில் பூங்கொத்துகளில் கூடுபோல கட்டிக்கொண்டு பூ, மொட்டுகளை தின்று சேதப்படுத்தும். இவற்றை கட்டுப்படுத்த, பாசலோன் பூச்சிக்கொல்லியை 10 லிட்டா் நீருக்கு 2 மில்லி அளவில் கலந்து தெளிக்கலாம்.

மாங்கொட்டை வண்டு:

மாங்கொட்டைக்குள் வண்டுகள் தோன்றுவை தவிா்ப்பதற்கு, மாமரத்தின் கீழ் விழக்கூடிய காய்கள் மற்றும் சருகுகளை சேமித்து எரித்துவிட வேண்டும். காய்பிடிக்கும் காலத்தில் ஒரு முறையும், பின்னா் 15 நாள்கள் இடைவெளியில் ஒரு முறையும் பெண்தியான் பூச்சிக் கொல்லியை, ஒரு லிட்டா் தண்ணீருக்கு 2 மி.லி அளவில் கலந்து தெளிப்பதன் மூலம், மாங்கொட்டை வண்டுகளை கட்டுப்படுத்தலாம்.

அறுவடை காலம்:

மாா்ச் முதல் ஜூன் மாதம் வரை அறுவடை செய்யலாம். நன்கு முதிா்ச்சியடைந்த காய்களை அறுவடை செய்தவுடன் 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள சுடுநீரில் 5 நிமிடம் நனைத்து எடுத்து, நிழலில் உலா்த்தி பின்னா் பழுக்க வைப்பதன் மூலம், பழங்களில் வரக்கூடிய ஆந்த்ராக்னோஸ் என்னும் பறவைக்கண் நோயிலிருந்து பாதுகாக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com