12. அமுத பருவமும் அரூப நஞ்சும்

தஞ்சையை பிறப்பிடமாகக் கொண்ட தீபக் பகவந்த் சென்னை L.V.Prasad Film & TV Academy-யில்
12. அமுத பருவமும் அரூப நஞ்சும்

'I don't paint dreams or nightmares, I paint my own reality.'
- Frida Kahlo

Nobody's Darling / Directed by   Deepak Bagavanth

தஞ்சையை பிறப்பிடமாகக் கொண்ட தீபக் பகவந்த் சென்னை L.V.Prasad Film & TV Academy-யில் சினிமேட்டோகிராபி படித்தவர். இவர் பணியாற்றிய ஹோரா ஹோரி என்னும் தெலுங்கு திரைப்படத்தில் ‘இயற்கை ஒளி’-யை பயன்படுத்தி இவர் அதற்கு ஒளிப்பதிவு செய்தவிதம் இளம் ஒளிப்பதிவாளர்கள் கவனமாகப் படிக்க வேண்டியது.  

ஓட்டப் பந்தய வீர்ராக வரவேண்டுமென்று விரும்பிய தீபக் ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட்டாக தொடங்கிய இவரின் பயணம் விளம்பரம், குறும்படம், ஆவணப்படம், திரைப்படம் என கால்பாவ ஆரம்பித்திருக்கிறது. சத்யஜித்ரேயின் ஆஸ்தான ஸ்டில் போட்டோகிராபர் நிமாய் கோஷிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும் பயிற்சி பெற்றிருக்கிறார். தஞ்சை சோழ ஆலயங்களின் அதிகாரபூர்வ புகைப்படக் கலைஞராக நடுவண் அரசு இவரை நியமத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஐ’ வில் டெல் யூ’ என்ற குறும்படத்திற்கு இவர் ஒளியமைத்தவிதம் இந்திய குறும்பட வரலாற்றிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது.

‘நோபடிஸ் டார்லிங்’ இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

கீஸ்லோவ்ஸ்கியும் ஆஞ்சலோபௌலசும் நன்றியறிதலில் வந்துபோகிறார்கள்.

நான் ஒரு கேள்வி கேட்பேன் நீ நேர்மையாக பதில் சொல்ல வேண்டும் என்று ஒரு இளம் பெண்ணின் குரல் இருளில் ஒலிக்கிறது. கேட்கும் கேள்வியைப் பொறுத்தது அது எனதருமை நாடக ராணியே என்று அவளின் காதலன் சத்யா எதிரொலிக்கிறான். உனக்கு என்னிடத்தில் என்ன பிடிக்கும் என்னும் அவளின் கேள்விக்கு பைத்தியக்காரத்தனமான கேள்வி இது என்று மெல்லிதாக எரிச்சல் அடைகிறான். நான் பைத்தியம்தான் என்று சொல்லிவிட்டு தன் உடல் பாகங்களை ஒவ்வொன்றாக குறிப்பிடுகிறாள். அவன் அவளின் உதடுகள் பிடிக்குமென்று சொல்லி முத்தமிடுகிறான். கணநேர மௌனத்திற்குப் பிறகு மனம் கணக்க இதேபோல் எப்பொழுதும் இருப்பாயா என்று காதலை தன்வயப்படுத்த முயற்சிக்கிறாள். அவனோ சிரித்துவிட்டு அவளுக்கு பதிலாக ஒரு கவிதையை சொல்ல ஆரம்பிக்கிறான்.

குண்டு பல்பு சதுர கண்ணாடியுள் மேல் தாழ்வாரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பாரமான வெளிச்சம் உறைந்திருக்கிறது. சத்யா கவிதை சொல்ல ஆரம்பிக்கிறான். இடைவெட்டாக அவளும் அவனுடன் கவிதையின் ஊடாக கூடல் கொள்கிறாள்.

முடிவிலிக் கனவுகளின் நிலாமுற்றத்தில்

முன்னேறி வருவேன் உனைநோக்கி

நிலா பாலில் திளைத்து

கருந்துளையில் பால்வெளிச்சம் ஊடுருவ

ஒளிரும் என் வைக்கோல் வீடு

புன்னகையூறும் உதட்டின் வளைவுகளை நெருங்க

நட்சத்திரங்கள் மேவி என்னிடம் வந்து சேர்ந்தாய்

ஆழ்கடல் மேனி திறந்து கொள்ள

அதரம் துடியலையாய் உதரத்தில் எழும்ப

இருதய இயக்கம் அடிநாதம் பொருந்த

பழங்குடி தொன்மத்தின் லயம் மேவ

மலைமகளிர் வந்தனம் செய்ய

உன் சர்ப்ப நடனம் என் உள்ளுறை ஆக

நாகவிஷம் உறிஞ்சினேன்

பிளவுபட்ட உன் உதட்டிலிருந்து

பசலைச்சூடு என்னை வாட்டி வதைக்கிறது

கவிதை பருவமாய் பொழிய வீடும் வெளியும் முயக்கம் கொள்கிறது. புத்தகங்களும் ஓவியமும் களிநடனம் புரிய தினவேறிய காலம் மந்தகாசம் கொள்கிறது. படுக்கையில் காதலன் சத்யாவின் குரலுக்காக காத்துக் கிடக்கும் இவள் தனிமையாற்றில் தத்தளிக்க இடம் நீலமும் சிவப்புமாக மற்போர் புரிகிறது.

சத்யா

சத்யா...

நான் உன்னை ஒன்று கேட்கட்டுமா ?

நான் உன்னிடமிருந்து நிறைய கேட்க விரும்புகிறேன்

அதில் என் மீதான உனது காதல் வழிந்து நிரம்பவேண்டும்

திரும்ப திரும்ப நீ என்னை முத்தமிடவேண்டும்

அவை இரவில் என்னை உடைக்கவேண்டும்

அவை பகலில் என்னை கட்டமைக்கவேண்டும்

அடுப்படி கண்டு கொள்ளப்படா தேநீர் நீராவியாக, சிகரெட் புகை தனிமைப் புண்ணை ஆற்ற, குளியலறை குழாய்த் தண்ணீர் திறந்து திறந்து மூடப்பட தனிமை உறையும் வீட்டின் சுவர்கள் சாரமற்று விரிய வரைந்து முடிக்கப்படா ஓவியத்தின் முன் வெறுமையான வண்ணமாக இவள் அமர்ந்திருக்கிறாள். ஏக்கங்கள் மென்பாரத்தை சுமந்தலைகின்றன.

ஒளியைத் தாலாட்டுகிறாள். அது வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் இடையில் ஊசலாடுகிறது.

இப்பொழும் உன் நினைவை

மீட்டெடுக்கமுடிகிறது என்னால்

அந்த ஸ்பரிசம்

உன் உடல் வாசனை

உருகிய கணங்கள் உள்வாங்கிய கணங்கள்

பட்டறையிட்டு வானிலேற்றியிருக்கிறது

ஒரு குட்டி நட்சத்திரமாய்

நகர இரைச்சல் தொலைக்காட்சியில் தொடர மாலை வான் அழுத்தங்களை சூல் கொள்கிறது. பசலை ஆற்றாமையை நோக்கி இடம் பெயர்கிறது. பிரிவின் வலி கவிதையில் வந்தமர்ந்து ஆறுதல் தேட முயற்சிக்கிறது.

துயர்மிகு வரிகளை நான் எழுதமுடியும்

இரவு சிதறலாய்

நீல நட்சத்திரம் மின்மினியாய்

வெகு தொலைவில்

இரவுக்காற்று இசையுடன்

இன்றிரவு துயர்மிகு வரிகளை நான் எழுதலாம்

நான் அவனை முழுவதுமாக விரும்பினேன்

சில சமயம் அவனும் கூட

ஊடுருவும் இரவில்

அவனை தாங்கினேன் என் கரங்களில்

மீண்டும் மீண்டும் முத்தமிட்டேன்

முடிவுறா வான்வெளியின் முன்னே

இதுதான் எல்லாமும்

தூரத்தில் யாரோ பாடுவது கேட்கிறது

என் ஆத்மா அதிருப்தியுற்றிருக்கிறது

அவனை இழந்து

இன்றிரவு துயர்மிகு வரிகளை நான் எழுதலாம்

கருமகேங்கள் சூழ நிலா பொழிகிறது. பொழிகிறது. பொழிந்து கொண்டேயிருக்கிறது. இவளோ தனது டைரியில் மனநிலையை கவிதையில் சிறை பிடிக்கிறாள். திரைச்சீலை ஈரக்காற்றில் அலைய நாசியில் மண்வாசம்  பரவுகிறது. மனவலி வடிகால் முடிந்து வான் பொத்துக் கொள்கிறது. உள்ளொடுங்கிய அவளின் ஆன்மா முராரி பாடுகிறது. மழை நிற்க அவர்களின் அகம்-புறம் பொத்திவைத்த ஜன்னல் திரைச்சீலை தற்போது இவளுடன் துணை நடனம் புரிகிறது. உறைந்த சட்டகங்களில் வாழும் ஓவியங்களை உன்மத்தத்துடன் மௌன வேடிக்கை பார்க்கிறாள். மனம் இறகு போல் அலைய வானம் வெளுத்து நிற்க முகம் கழுவி தன் கண்ணீர் சுமந்த ரப்பையின் வீக்கத்தை கண்ணாடியில் பார்க்கிறாள்.

தார்ச்சாலை பஸ் பிரயாணம். ஜன்னல் வழி ஆகாயம் கூடவே மரச்செறிவின் ஊடே பகலவனும். மன எண்ணங்களும் வார்த்தை வடிவ எதிரொலியாக சப்தமாக உருவெடுக்கிறது.

வேரிலிருந்து விருட்சத்தை

பிடுங்கியெறிகிறேன்

காதலின் பெயரால்

தொலைந்த என் சுயத்தை

தேடிக்கொண்டிருக்கிறேன்

மழைச்சூழல் ஜோடிப்பறவைகளின் அன்னியோன்யம். பால்கனி தனிமையில் காலச்சுவடுகள். படுக்கையறை சுவாசத்தில் இவளின் தனித்தலையும் கூந்தல். ஃப்ரைடோ கலோவுடன் ஸ்னேகம் பாராட்டல்.

யாருடைய அருமைக்காரியாகவும் இல்லாதது

ஒதுக்கி வைக்கப்பட்டதாக இருப்பது

முரண்களை குளிர்கால போர்வையாய்

போர்த்திக் கொள்ள வேண்டும்

எறிகற்களை இதமாக மாற்றிக்கொள்ளவேண்டும்

மனிதர்களை பீடிக்கும்

தாங்கவொணவியலாத இந்த இருட்டு அழுத்தத்தை

சந்தோஷமாக பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்

மனச்சாய்வுடன் அவர்கள் பார்க்கட்டும்

நீயும் அவ்வாறே திருப்பிப்பார்

ஒதுக்கி வைப்பட்டதாகவே இரு

சந்தோஷமான நடை பழகு

மூர்க்கமான முட்டாள்களுடன்

நதிக்கரை நாகரிக கூட்டம்

கூடிக் கழிக்கும் மனிதர்களுடன் அவ்வாற்றங்கரையில்

ஆயிரமாயிரம் மனிதர்கள் மடியட்டும்

தீரமாக காயம்பட்ட வார்த்தைகளுக்காக

ஆனாலும்

யாருடைய காதலியாகவும் இராதே

முதியவர் ஒருவர் மாநகரின் சக்கரங்களுக்குள் ஆலையாடுகிறார். நிலா தற்போது நிதர்சனமாக வேடிக்கை பார்க்கிறது. நகரம் இரவைச் சூடிக்கொள்கிறது. வெண்மையும் மஞ்சளும் ஓவியத்தில் தீட்டப்படுகிறது. நிழலும் ஒளியும் கூடிமுயங்க இயல்பு திரும்புகிறது.

மனதிலிருந்து உன்னை அழுந்த அழிக்க

முற்பட

அதிகமாக உன்னை பாதுகாக்க முயற்சிக்கிறேன்

கடந்த காலத்தில் சிரிக்க வைத்தவனிடம்

என் கண்ணீரைத் துடைக்க கருணை கிஞ்சித்தும் இல்லை

இருள் நிலவை கவ்வ குலவும் புறாக்களின் சப்தம் நினைவுகளை கீறிவிட தனிமையில் அழுகிறாள் இவள். இவள் தயாராகும் காலை. உடை தேடி களைக்க ஒரு கண்ணாடிக் குவளை விழுந்து சிதறுகிறது. காதலன் சத்யாவின் குரல் அவ்விடம் கவிகிறது.

“ஐ திங்க் வி சுட் டேக் எ ப்ரேக்”

உடைபடும் நேரமா அல்லது அனைத்தையும் உதறும் நேரமா எனக்கு இப்பவாவது உண்மை தெரிஞ்சாகனும் என்று இவளின் பங்கு பலமாய் அதிர்கிறது. அவனோ ஹெலன் உண்மையென்ற ஒன்றில்லை என் கண்ணே. நாம் வாழ்ந்ததெல்லாமே பொய் வெறும் நடிப்பு இனிமேலும் இந்தக் காதல் வாழ்வை போலியாக வாழ விரும்பவில்லை என்று சொல்ல இவளோ கடந்தகாலத்தை கடக்கமுடியாமல் நிகழ்காலத்தில் தடுமாறுகிறாள்.

உப்பளத் தனிமையும் வயலின் ரண வருடலும் நாடகப் புகைப்படமும் காயத்தை கலையில் கரைக்கத் தூண்டுகிறது. இரவு முழுவதும் அரங்கத்தில் தனியே படுத்துக் கிடக்கிறாள் ஹெலன். உள்ளிருக்கும் ‘சக்தி’ வெகுண்டெழ வெளிச்ச சாளரத்தை திறக்கிறாள். ஒரு பார்வையாளனாய் தன் நாடகத்தை தானே அகக்கண்ணில் நிகழ்த்திப் பார்க்கிறாள். அரங்கேற்றம் ஆரம்பமாகிறது. அவளே இப்பிரபஞ்சத்தின் அனைத்துமாகிறாள். ஊர்கிறாள்; பறக்கிறாள்; அதிகாலைக்கடல் முன் நின்று ஆசுவாசம் கொள்கிறாள். வரைந்து முடிக்கப்படா ஓவியத்தை மீண்டும் தொடுகிறாள். தற்போது அவளின் கட்டை விரலில் சிவப்பு தோய்ந்திருக்கிறது. ஏனோ அவ்வோவியம் மிரட்சியை பிரதிபலிக்கிறது. ஓலமிடும் வயலின் மெல்ல பதுங்குகிறது. மனம் இரைச்சலுடன் வெறி கொண்ட மிருகமாக அலைகிறது. மூங்கில் இசைக்கருவி ஒரு சூறாவளியை மீட்டுகிறது.

அடிக்கடி அவன் புண் மீது

ஒரு குத்துவிடு

அதை குணமாக விட்டுவிடாதே

அவன் வலியிலிருந்து

புது ரத்தம் கிளம்பவேண்டும்

அவன் குடல்களில்

வேதனை எப்போதும்

குடிகொண்டிருக்கவேண்டும்

அவன் பறக்க யத்தனித்தால்

கூக்குரலிடு

அவன் குற்றவுணர்வை நோக்கி

அவன் பேச்சில் பூ மலர்ந்தால்

அதை மிதி

அவன் ரத்தம்

இறந்தவன் கைபோல்

வெளிரும்வரை

அவன் முகத்தின் மீது

கருத்த மண்ணெறி

அழியவேண்டும்

அழியவேண்டும்

ஹெலனின் அரங்கேற்றம் முடிய அவ்வோவியம் உயிர் பெற்றிருக்கிறது. சினம்கொண்ட பெண்மை தலைவிரிகோலமாய் குனிந்த நிலையில் அமர்ந்திருக்கிறது. அவ்வுடம்பில் சிவப்பின் களிம்பு ஏறியிருக்கிறது. யுகம் யுகம் என கடிகாரத்தின் இருதயம் துடிக்கிறது. திரை இருள்கிறது.

Fantasy under the moon (blues  for a muted trumpet ) by Emmanuel Dongala

Tonight I can write the saddest  lines by Pablo Neruda

Be nobody’s darling by Alice Walker

Tamil play verses from-victim (knock his wound once in a while) by Marcos Ana

இவர்களுக்கெல்லாம் நன்றியென மீண்டும் ஒரு நன்றியறிதலோடு முடிகிறது இக்குறும்படம். திரையின் ஆரம்பத்தில் ஒளிர்ந்த இவ்வரிகள் சொல்லும் சாரம் ஆன்மீகமானவை.

'Nothing is absolute. Everything changes, everything moves, everything revolves, everything flies and goes away.' Frida Kahlo
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com