சாவித்ரி-9. தங்கச் சரிகை சேல!

சிவாஜியும் சாவித்ரியும் நமக்குக் கிடைத்திருக்காவிட்டால், பல அற்புதமானப் பொற்காலச் சித்திரங்களைத் தமிழ் சினிமா நிச்சயம் இழந்திருக்கும்.


சிவாஜியும் சாவித்ரியும் நமக்குக் கிடைத்திருக்காவிட்டால், பல அற்புதமானப் பொற்காலச் சித்திரங்களைத் தமிழ் சினிமா நிச்சயம் இழந்திருக்கும்.

தமிழ் சினிமாவில் முதல் மண்வாசனைக் கலைஞன் ஏ.பி.என்!  அவரது எழுத்தாற்றல் திரும்பவும் உச்சம் தொட உதவியது. புத்தம் புதிதாக ‘ஸ்ரீவிஜயலட்சுமி பிக்சர்ஸ்’ என்கிற பேனரில் நவராத்திரி உருவானது.

நள்ளிரவில் காதலன் ஆனந்தனைத் தேடி அலையும் பரிதாபகரமான ‘நளினி’ என்ற வித்தியாசமான ரோல் சாவித்ரிக்கு. 9 வேடங்களில் நவரஸங்களைக் கொட்டித் தீர்த்த சிவாஜிக்குப் போட்டியாக சாவித்ரி ஒவ்வொரு எபிசோடிலும் நடிப்பில் இலக்கியம் படைத்தார்.

அதிலும் திரையில் பத்து நிமிஷம் நடைபெறும் ‘சத்தியவான் சாவித்ரி’ தெருக்கூத்து விசேஷ விருந்து.

எனக்குத் தெரிந்து 85 ஆண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றில், வேறு எந்த வேற்று மொழி நாயகியும் சாவித்ரியைப் போல் தெருக்கூத்து ஆடியது கிடையாது. அதைப் பற்றி சிவாஜி தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
‘தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, சாக்கியர் கூத்து போன்றவற்றைச் சிறு வயதிலேயே பார்த்துப் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டவன் நான். அவற்றில் பாடுகின்ற முறை, வசனம் பேசுகின்ற லாகவம், மேடையில் தோன்றும் விதம் எல்லாமே சற்று வித்தியாசமானவை.

நவராத்திரி படத்தில் அத்தகையக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் அக்காட்சியை அமைத்த டைரக்டருக்கும், எனக்குச் சமமாக ஆடிய சாவித்ரிக்கும் அந்தப் பெருமை சேரும். நவராத்திரியில் நடித்தது எனது திறமைக்கு ஒரு சோதனை.’

சிவாஜி பார்த்துப் பரவசப்பட்டு நடித்ததை சாவித்ரி பார்க்காமலேயே வெளுத்துக் கட்டினார்.

‘வந்தேனே... ஏஏஏ...  வந்தேனே... ஏஏஏ...  ராஜாதி ராஜன் மகன் மகாராஜன் பிறந்ததாலே ராஜாதிராஜன் வந்தேனே...
வந்தேனய்யா வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனய்யா...’
எனத் தொடங்கும் தெருக்கூத்து சிவாஜி- சாவித்ரியின் ஜோடிக் குரலிலேயே முழுவதும் பாடப்பட்டது.

‘இன்னும் மணமானதோ... ஓஹோ!  இல்லையோ... சொல்லு. இச்சை கொண்டேன் கேட்பதற்கு லஜ்ஜையும் ஆகாது.’
‘சொல்ல வெட்கமாகுதே. ஓஹோ!  இன்னும் மணமில்லை.’ சொந்தமான தந்தை தாயார் எண்ணிடவுமில்லை.’

‘அதாகப்பட்டது ப்ரபோ...’
‘பெண் பாவாய்’
‘என் திருமணத்தைப் பற்றி  தாய் தந்தையர் நினைக்கவும் இல்லை. நானும்...  -  நேற்று வரை  அதைப் பற்றிச்   சிந்திக்கவும் இல்லை’
‘இன்றென்னவோ...’
‘அதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா ஸ்வாமி!’
‘ரூப சித்திர மாமர குயிலே உனக்கொரு வாசகத்தினை நான் உரைத்திட நாடி நிற்கிறதா...!   அன்பினால் இன்பமாய் இங்கு வா ...’
‘அட்டி ஏது? இதோ கிட்டி வாரேன்.’
‘சித்தமானேன். சமீபத்தில் நீ வா’
‘மன்னா என் ஆசை மறந்திடாதே!’
‘சகி!  உன் ஆசை  நானோ மறப்பதில்லை.’
‘மறந்திடாதே!’
‘மறப்பதில்லை.’
‘தங்கச் சரிகை சேல எங்கும் பளபளக்க’ என கூத்தில் பாடியவாறு தோன்றும் சாவித்ரியின் தஞ்சாவூர் பொம்மை போன்ற பாந்தமான தோற்றமும், அங்க அசைவுகளும், காட்டும் முக பாவங்களும், ஸ்வாமி! என்று இழுத்துக் கூப்பிடும் அழகும், கைக்குட்டை வீசி ஆடும் ஆட்டமும், கூத்து முடிந்ததும் மூச்சு வாங்க போடும் கும்பிடும் அபாரம். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாதது.

தூக்கத்தையே மறந்து, அதுவரையில் கடைப்பிடித்த  கொள்கையையும் தியாகம் செய்தார் நடிகையர் திலகம்.

‘இரவு ஷூட்டிங்கில் நடிப்பதை நான் பொதுவாக விரும்புவதில்லை. அப்படி நடித்தால் மறுநாள் மிகுந்த சோர்வாக இருக்கும். அதற்குத் தேவையான ரெஸ்ட் கிடைப்பதும் அரிதாக இருந்தது.

“மிகுந்த வெளிச்சத்தில் குளோஸ் அப் அதிகமாக எடுத்துக் கொள்ளாதே. கூடியவரையில் இரவு ஷூட்டிங் வேண்டாம். முகத்தின் பொலிவு கெட்டு சீக்கிரம் முற்றிப் போய் விடும்,” என்று அடிக்கடி என்னுடன் நடித்த என்.டி. ராமாராவும், நாகேஸ்வர ராவும் சொல்வதுண்டு. அது ஓரளவுக்கு உண்மை. என்னுடைய முகம் கள்ளமில்லாத குழந்தை முகமாக இருக்கிறது என்று பல ரசிகர்கள் குறிப்பிடுவது உண்டு. அதற்குக் காரணம், நான் கூடிய வரை இரவு ஷூட்டிங்கை மேற்கொள்ளாதுதான்.’

ஆனால் நவராத்திரி மட்டும் விதிவிலக்கு. படப்பிடிப்புக்கும் பெயருக்கும் நல்ல பொருத்தம். இரவு வேளைகளில் தான் அந்தப் படத்தின் ஷூட்டிங்ஸ். சரியான ராத்திரிப் படம்! டைட்டிலுக்கேற்றவாறு அமைந்து விட்டது.

நவராத்திரியில் நடிக்கிற போது அது அண்ணனின் 100வது படம் என்று எனக்குத் தெரியாது. சிவாஜியோடு யார் நடித்தாலும் அவரது நடிப்புக்கேற்ற ரீ ஆக்ஷன் பண்ணியாக வேண்டும். அவர் கூட நடிப்பது ரொம்பவும் எளிதானது.
நாம் டல்லடித்து விடக்கூடாது என்ற வீம்பும் பிடிவாதமும் கூட நடிப்பவர்களுக்குத் தானாகவே வந்துவிடும். சத்யவான் சாவித்ரி தெருக்கூத்தை முழுக்க முழுக்க அவரிடமே பாடம் பண்ணிக்கொண்டு நடித்தேன். காரணம் தெருக்கூத்தை நான் பார்த்தது கிடையாது.

பைத்தியக்கார ஆஸ்பத்திரி  சம்பவங்களில் டாக்டராக வரும் சிவாஜியை, அவர் முன்னிலையிலேயே சில காட்சிகளில் குறும்பாக இமிடேட் செய்து நடித்தேன். நான் அவ்வாறு நடிப்பதை அவர் ஆர்வமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

எத்தனைப் பெரிய நடிகர் சிவாஜி! நான் அவரை கேலி செய்வதாக நினைக்காமல், பெருந்தன்மையுடன் என்னைப் பாராட்டினார். ரசிகர்களும்  அதற்குக் கலகலப்பாகக் கைத்தட்டினார்கள். ‘மற்ற பிரபல ஹீரோக்களிடம் அது சாத்தியமா என்ன...?’ - சாவித்ரி.

‘நவராத்திரியில் கதாநாயகியாக சாவித்ரி ஜே ஜே என்று நடித்து இருக்கிறார்’ என குமுதம் நடிகையர் திலகத்தைப் பாராட்டியது.
பீம்சிங்குக்குப் பிறகு ஏ.பி.என்.இயக்கத்தில் சிவாஜி- சாவித்ரி தொடர்ந்து சங்கமித்தனர். நவராத்திரியை அடுத்து  வரலாறு காணாத ஆன்மிக பிரம்மாண்டமாக திருவிளையாடல் உருவானது. சாவித்ரி அதில் ஈஸ்வரி. சக்தி ஸ்வரூபமாக, பெண் உரிமைக்காக சிவனிடம் போராடும் வேடம். ‘சிவா’ஜியுடன் ஒப்பிடும் போது சாவித்ரிக்கு நடிப்பாற்றலைக் காட்டும்  வாய்ப்பு குறைவு.

இருந்தாலும் படகோட்டி சரோவுக்குப் போட்டியாக, அலைகளில் எதிர்பார்ப்புடன் ஏராளமான காஸ்ட்யூமில்  சாவித்ரியும் பாடினார்.  ‘ ஏலே எலோ... நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு’பாடற் காட்சி அடங்கிய கடற்கரை சம்பவங்கள்  ரசிகர்களுக்கு நிறைவளித்தது.
வெகு காலம் வரையில் இலங்கை வானொலியில் திருவிளையாடல் வசனங்களை ஒலிபரப்பி, ‘நல்ல தமிழ் கேட்டீர்கள்’ என அறிவித்தார்கள். ஒவ்வொரு ஆடி பிறந்ததும் அம்மன் உற்சவங்களில் மூலை முடுக்கெல்லாம்  திருவிளையாடல் ஒலிச்சித்திரம்  கேட்கும்.

வலைத்தளம், செல்போன், வாட்ஸ் அப், டப்ஸ்மேஷ் என ஏதேதோ வந்து விட்டன. நாத்திகம் கொடி கட்டிப் பறந்த  1965ன்  ஆடி அமாவாசை முதல், ஐம்பது ஆண்டுகளாக  திருவிளையாடலில் சாவித்ரியின் சந்தனக்  குரல், நம் செவிகளில் திரும்பத் திரும்ப பக்திமணம் கமழச் செய்கிறது.

‘திருவிளையாடலில் எனக்குப் பார்வதி வேஷம். அதுவும் பச்சை நிற மேக் அப். அதைப் போட்டுக் கொள்ளும் போது எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், அப்புறம் படத்தில் அதுவே பிரமாதமாகப் பொருந்தி விட்டது. பரமசிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் அப்படியோர்  அமைப்பை நீங்கள் எங்கே பார்ப்பது? நாங்கள் காலண்டரைப் பார்த்து அமைத்துக் கொண்டோம்!’ -  சாவித்ரி.

சென்னையில் முதன் முதலாக சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி என்று மூன்று தியேட்டர்களில் மகத்தான வசூலுடன் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் திருவிளையாடல். தேசிய அளவில் பாராட்டுப் பத்திரமும் அதற்குக் கிடைத்தது.
கே. பாலசந்தரின் நாணல் படத்தில், ‘விண்ணுக்கு மேலாடை’பாடல் காட்சியை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அதில் ‘சாந்தி’யில் திருவிளையாடல் ஓடிய  காலம் கண்களில் தெரியும்.

திருவிளையாடலைத் தொடர்ந்து உடனடியாக ஏ.பி. என். கூட்டணியில் சரஸ்வதி சபதம் தொடங்கியது. சாவித்ரி- சரஸ்வதி. பத்மினி- பார்வதி. தேவிகா-மகாலட்சுமி. சிவாஜி கணேசன் நாரதராகவும், சரஸ்வதியால்  ஊமையாக இருந்து ஞானம் பெற்றப் புலவராகவும் இரு வேடங்களில் நடித்து முப்பெரும் தேவியருக்கும் வேலை இல்லாமல் செய்து விட்டார்.
மகன் சதீஷை வயிற்றில் சுமந்தவாறு கர்ப்ப ஸ்திரீ சாவித்ரி, சந்தோஷ சங்கடத்துடன் நடித்த படம் சரஸ்வதி சபதம்.  அம்மாவோடு ஷூட்டிங்குக்குச் சென்ற ஆறு வயதுச் சிறுமி விஜியை வியப்பில் ஆழ்த்தினார் டைரக்டர் ஏ.பி. நாகராஜன். அன்று ‘கோமாதா என் குலமாதா’என்கிற ஏழு நிமிட பாடலைப் படமாக்கினார்கள்.

1966  ஆயுத பூஜைக்கு வெளியாகி  சரஸ்வதி சபதமும் சென்னை ‘சாந்தி’யில்  133 நாள்கள் ஓடியது. சாவித்ரி டைட்டில் ரோலில் நடித்து தமிழில் வெற்றி பெற்ற கடைசிப் படம் அதுவே.

(ஏற்கெனவே வெளியான இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்த சில தவறான தகவல்கள் திருத்தப்பட்டுள்ளன)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com