பத்மினி - 6. பூவே பூச்சூடவா!

1950 தொடங்கி 1960 வரை, வருடத்துக்கு ஏறக்குறைய இரண்டு டஜன் படங்களில் இரவு பகலாக நடித்துக்கொண்டிருந்தவர் பத்மினி. நடுவில் மாண்புமிகுகள், மேதகுகள்,
Updated on
10 min read

1950
தொடங்கி 1960 வரை, வருடத்துக்கு  ஏறக்குறைய இரண்டு டஜன் படங்களில் இரவு பகலாக நடித்துக்கொண்டிருந்தவர் பத்மினி. நடுவில் மாண்புமிகுகள், மேதகுகள், ஹைனஸ்கள், மஹா கனம் பொருந்தியவர்கள் பங்கேற்ற விசேஷங்களில், பரதம் ஆடி அவர்களை உற்சாகமூட்டும் பணி வேறு. இங்கிலாந்து இளவரசியா, தலாய் லாமாவா, மற்ற அயல் தேசத்து முக்கியப் பிரமுகர்களா... யார் சென்னைக்கு விஜயம் செய்தாலும், கூப்பிடு பத்மினியை... என ஒரே குரலில் அழைத்தன அரசாங்கமும், தனியார் ஸ்தாபனங்களும்.

‘ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹ்திஹை’, இந்தியாவெங்கும் வசூல் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தது. உச்சகட்டப் புகழ் என்பார்களே... அப்படியொரு மந்தகாச நிலை. பத்மினியை மணக்க அரும்பு மீசை இளவரசர்கள் முதல், ஜமீன்களும், மிட்டா மிராசுகளும், படா படா தொழில் அதிபர்களும், விவிஐபிகளும், சினிமாகாரர்களும், நான் நீ எனப் போட்டி போட்டார்கள். அமிர்தத்தை ஏந்திக்கொள்ள ஆலோசனையா...!

பாவம் நாட்டுப்புறத்து ஏழை இளைஞர்கள்... பப்பி தங்களுக்கு எட்டாத உயரம் எனத் தெரிந்தும் ருசிகரக்  கனவுகளில், பத்மினியின் பேரழகால் வெளிச்சம் பெற்ற இரவுகளில் இளமையைத் தொலைத்தனர். பத்மினி முப்பது வயதைக் கடக்கும்முன், எப்படியாவது கல்யாணத்தை முடித்துவிட, சரஸ்வதி அம்மாள் சந்தனம் இட்டுக்கொண்டார். தங்களின் குடும்பப் பெரியவர் குருவாயூரப்பனுடன் கூட்டு சேர்ந்தார். குருவாயூரப்பனுக்கும் பத்மினி மீது அலாதிப் பிரியம். நிரந்தரமான கெடுபிடிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் குறைவற்ற குருவாயூர் கோயிலில்,  ஸ்ரீமன் நாராயணன் கண்ட முதல் மானுட நர்த்தனம் லலிதா-பத்மினி ஆடியது. பகவானும் மனம் குளிர்ந்து பத்மினிக்கான மங்கல காரியங்களில் மும்முரமாக ஈடுபட்டார்.

பத்மினியின் விருப்பம் போலவே, ஒரு டாக்டர் மாப்பிள்ளையைக் கை காட்டினார். தெல்லிச்சேரியின் பிரபலமான வக்கீல் குஞ்சப்பன் நம்பியார். அவரது சீமந்தபுத்திரன் ராமச்சந்திரன். தலைச்சனுக்குப் பின்னால் ஏழு சகோதரர்களும் ஒரு சகோதரியும் க்யூவில் நின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 25 பேர். ஒவ்வொரு வேளையும் பந்திக்குப் பாயும், வாழை இலையும், தண்ணீரும், நேந்திரம் பழமும்  எடுத்துவைத்துக் கட்டுப்படி ஆகாது.

அத்தனை பேருக்கும் அவியலுக்கு கறிகாய் நறுக்கியே களைத்துப்போகும் ஹேமலதாவின் கைகள். சக்கைப் பிரதமன் செய்வது பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர், குஞ்சப்பன் நம்பியாரின் மைத்துனி மட்டுமல்ல, இரண்டாம் தாரமும்கூட. தெல்லிச்சேரியின் மிக இளமையான மாமியார் ஹேமலதா!  அவருக்கும், மருமகளாகச் செல்லவிருந்த பத்மினிக்கும் இடையே அதிகமில்லை... ஜஸ்ட் எட்டு ஆண்டுகள் அகவை  வித்தியாசம். ராமச்சந்திரனின் ஜாதகம் வாங்கி, ஆருடம், பொருத்தம் எல்லாம் பார்த்து, சகலமும் சரஸ்வதி அம்மாளுக்கு மனத் திருப்தியானது.

பரதம் - சினிமா. வங்கிக் கணக்குகளில், வீட்டுப் பெட்டகங்களில், சரஸ்வதி அம்மாளின்  இடுப்பு சேலை மடிப்புகளில் கண்மண் தெரியாத பணப் புழக்கம். ஆள், அம்பு, சேனை, பரிவாரம்! ஃபோட்டோ கேட்டு ரசிகர் கடிதம். இமயம் கடந்த நட்சத்திர செல்வாக்கு. அத்தனையையும் ஒரு நொடியில் மறந்து, அம்மாவின் சொல் பேச்சு கேட்டு, அறியா பாலகியாக தாயாரின் முந்தானையைப் பிடித்து மணமேடை ஏறிய பத்மினி பேராச்சரியம்!

போட்டது போட்டபடி,  எவ்வாறு அவரால் எல்லாவற்றையும் உதறித் தள்ளி, ஓர் இன்பத் துறவறத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள முடிந்தது! நினைக்க நினைக்க இன்னமும் மலைப்பாகவே இருக்கிறது. சரஸ்வதி அம்மாள் -  தங்கப்பன் பிள்ளை என்ற  பெற்றோரைப் போற்றும், தாய் சொல்லைத் தட்டாத, அந்நாளின் பாரதப் பண்பாடு, குடும்பப் பாரம்பரியம், கலாசாரத்துக்கான மிக முக்கிய அடையாளமாக பத்மினியைச் சொல்லலாமா... இருந்திருந்து ஒரு சினிமா நடிகைதானா அதற்கு எடுத்துக்காட்டாகக் கிடைத்தாள்... என யாராவது வம்புக்கு வருவார்களா...!

பாக்கு - வெற்றிலை மாற்றிக்கொள்ளும் மங்கல உற்சவம், 1960 நவம்பர் 9-ல் ஆலப்புழையில் அக்கா லலிதாவின் வீட்டில் நடைபெற்றது. அந்த இன்பமான நொடிகளில், பத்மினியும் ராகினியும் காட்சிப்பொருளாக அங்கே இல்லை. பாரதத் தலைநகரில், ரோஜாவின் ராஜா பண்டித நேருவை குஷிப்படுத்தும் வண்ணம்,  ஜவஹரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், எப்போதும்போல் பதத்துக்கு ஆடிக்கொண்டிருந்தனர்!

1961, ஏப்ரல் 27 என மண நாள் குறிக்கப்பட்டது. பதறியவாறு ஓடி வந்தது, கலை உலகம். ‘ப்ளீஸ்! கொஞ்சம் கல்யாணத்தைத்  தள்ளிவையுங்கள். திடுதிப்பென்று இப்படிச் செய்தால் தொழில் பாதிக்கும். பத்மினியை நம்பி லட்சக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. முடிகிற நிலையில் உள்ள படங்களையாவது பூர்த்தி செய்துவிட்டுப் போகட்டும்’.

ஒரு மாதம்போல் சற்றே தள்ளி, அக்னி நட்சத்திரம் முடியும் நிலையில் புதிய முகூர்த்தம் ஏற்பாடானது. 1961 மே 25-ல், ஏற்கெனவே வேண்டிக்கொண்ட மாதிரி, குருவாயூரப்பன் ஸ்தலத்தில் பத்மினிக்குக் கல்யாணம் என அறிவிப்பு வெளியானது. பத்மினி திருமணத்துக்குப் பின் நடிக்கக்கூடாது என்கிற வழக்கமான வேண்டுகோளை புகுந்த வீடு முன் வைத்தது.

அதனால், மே 23-ந் தேதி அன்றும் பத்மினியால் அரிதாரத்தைக் கலைக்க முடியவில்லை. அவர் மணமகள் அவதாரம் எடுப்பதற்குள், போதும் போதும் என்றாகிவிட்டது. இடையில், மே 20, 21, 22 ஆகிய தினங்களில், சாயங்காலத்தில் ராமாயண நாட்டிய நாடகம்! விடியலின் ஒவ்வொரு நகர்வும், பத்மினி தன் கல்யாண சந்தோஷத்தைச் சிந்திக்க இடமில்லாமல், மிகக் கடின உழைப்பால் நிரம்பி வழிந்தது.

மே 24. மிக உக்கிரமான கத்திரி வெய்யிலின் காலை. நேரம் 10 மணி 40 நிமிடம். கொச்சிக்கு வானூர்தி ஏற மீனம்பாக்கம் சென்றார் பத்மினி. பூரண கும்ப மரியாதையுடன் டைரக்டர் கே.சுப்ரமணியம் தலைமையில் கலையுலகினர் வரவேற்றார்கள். நாகஸ்வரம், மங்கல இசை பெருக்கியது. கல்யாண வசந்தம் வாசித்தது. சுற்றமும் நட்பும் ஆரத்தி எடுத்தது.

சென்னை இளைஞர்கள் அங்கு திரண்டு நின்றார்கள். அவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் இருக்கும் என நாளிதழ்கள் எழுதின. அத்தனை பெரிய ரசிகர் கூட்டத்தை யாரும் அதுவரையில் விமான நிலையத்தில் கண்டதில்லை. அடக்க முடியாமல் அழுகை பெருகியது பத்மினிக்கு. மூச்சு முட்டக் கை குவித்து, திருவாளர் பொது ஜனத்துக்கு உளமாற நிறைவான வணக்கம் சொன்னார். மகிழ்ச்சியைவிட துக்கமே அதிகரித்தது. கண்ணீரும் புன்னகையும் முகங்களில் வழிந்தோட,  தங்களின் அபிமான நடிகைக்குப் பிரியாவிடை தந்தனர்  வாலிப விசிறிகள். வேறு யாருக்கு, பத்மினிக்குக் கிடைத்த அத்தகைய பாக்கியம் அமைந்தது!

கொச்சியில் இருந்து பத்மினியை ராகினி காரில் அழைத்துக்கொண்டு திருச்சூருக்குப் பயணமானார். திருச்சூர் ராமவிலாஸ் மாளிகையில், சகோதரிகள் தங்கினர். முந்தைய  பிஞ்சு இரவுகளின் மழலைப் படிவங்களில்  விடிய விடிய விழுந்து எழுந்தார்கள். ரசிகர்களின் பட்டாளம் போதாதென்று, வானமும்  மழையைச் சிறப்பு விருந்தினராக அனுப்பிவைத்தது. குருவாயூரில் பத்மினியின் மருதாணிப் பாதங்கள் பட்டதும், மழை இன்னும் வீறுகொண்டு பொழிந்தது.

‘செரிய பிராயத்தில் அரி கழிக்குந்ந ஷீலம் உண்டோ...’ (பப்பி பால்யத்தில் நிறைய அரிசி தின்றிருப்பாரோ’) ‘இப்படி மழை விடாமல் பெய்கிறதே...’ கூடியிருந்தவர்கள் குறும்பு செய்தனர்.

இனி, லைவ் ரிலே பை பத்மினி.

‘விமான நிலையத்தில் எனக்கு அளிக்கப்பட்ட வழியனுப்பு உபசாரம் என்னைத் திணறடித்துவிட்டது. நாதஸ்வர இசையும், கலைஞர்களின் ஆசிச் சொற்களும், ரசிகர்களின் வாழ்த்தொலியும் சேர்ந்து என்னை எங்கோ அழைத்துச் சென்றுவிட்டன. என் மனநிலை, விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஓர் உலகிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறுகிறோம் என்ற எண்ணம் என்னை என்னவோ செய்தது. 

‘புதுமையான மலர் அலங்காரத்துடன் மணப்பந்தல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உள்ளே பரப்புவதற்காகத் திருவனந்தபுரத்திலிருந்து, ஸ்பெஷலாக வெள்ளை மணலை லாரி லாரியாகக் கொண்டுவந்து கொட்டினார்கள். விளக்குடன் கூடிய தட்டுகளை ஏந்திய ஒன்பது கன்னிகைகள், என்னை அவரிடம் அழைத்துச் சென்றனர். என் தம்பி சந்திரன், அவர் கால்களை அலம்பினான். எங்கள் சம்பிரதாயப்படி, அவர் எனக்கு முண்டு கொடுத்தார். பிறகு மோதிரம் மாற்றிக்கொண்டோம். சரியாக காலை 8.15-க்கு அவர் எனக்குத் தாலி கட்டினார். என் உடல் புல்லரித்தது. என் வாழ்வில் மறக்கமுடியாத நேரம் அல்லவா அது!

‘12 மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்பட்டு அவர் ஊரான தலைச்சேரி சென்றோம். அங்கு, மஞ்சள் துணி விரித்த மனையில் என்னை அமர்த்தினார்கள். அந்தக் கணத்திலிருந்து நான் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டேன். ‘சென்னை ஆபட்ஸ்பரி மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. சினிமாகாரர்களைப் பார்க்க, மாலையில் மவுண்ட் ரோட்டில் ஜன சமுத்திரம் அலை அலையாகக்  கூடியது. இரவு நெருங்க நெருங்க, 1961-ன்  சுனாமியாகி  தேனாம்பேட்டையையே திணறச் செய்துவிட்டார்கள்.

*

ராஜாஜி, எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டவர்கள் நேரிலும், மாநில கவர்னர்கள், ராணி எலிசெபத், மவுன்ட்பேட்டன் பிரபு, நேரு, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், நேபாள மன்னர் போன்றவர்கள் தந்தி மூலமும் பத்மினிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உலகப் பேரொளியின்  திருமணத்தில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களும் ஆப்சென்ட். ஜெமினி தன் இரண்டு மனைவிகளுடன் (பாப்ஜி - சாவித்திரி) ஸ்ரீதரின் ‘தேன் நிலவு’ ஷூட்டிங்கில், வைஜெயந்திமாலாவுடன் ஓஹோ எந்தன் பேபி பாடியவாறு காஷ்மீரில் இருந்தார். சிவாஜிக்குப் பதிலாக அவரது தாயார் ராஜாமணி அம்மாள், தம்பி வி.சி.ஷண்முகம் ஆபட்ஸ்பரிக்குச் சென்று ஆசிர்வதித்தனர். எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள் கிடையாது. அக்கா லலிதாவின் கல்யாணத்தில், நடிகர் சங்கத் தலைவராக வாழ்த்துப் பத்திரம் வாசித்தவர் புரட்சி நடிகர்.

விவிஐபிகளுக்காக பிரத்யேக ரிசப்ஷன் ஓஷியானிக் ஹோட்டலில் நடந்தது. அதில் ரவிசங்கரின் சிதார் இசை இடம் பெற்றது. வேறு எந்த முக்கியப் பிரமுகரின் அழைப்புக்கும் விரல் அசைத்து வாசிக்காத மேதை,  பத்மினிக்காக சிதாரை மீட்டி, கலையரசிக்கும் தனக்கும் உள்ள சிறப்பான சிநேகத்தை வெளிப்படுத்தினார்.

மலையாள நாயர் வகுப்பைச் சேர்ந்தவர் பத்மினி. தமிழ்ப் பண்பாட்டினை மறக்காமல் தன் திருமணத்தில் தொங்கத் தொங்கத் தங்கத்தாலி கட்டிக்கொண்டார். பத்மினி மீதான தமிழர்களின் நேசம், சரித்திரம் காணாதது. வேறு எந்த சினிமா  ஸ்டாரின் கல்யாணத்தைவிட பத்மினியின் திடீர் திருமண அறிவிப்பும், உடனடியான கல்யாண ஏற்பாடுகளும் அன்றைய தமிழகத்தில் சமூக, அரசியல் விவகாரங்களைப் பின்னுக்குத் தள்ளின. அன்றைக்கு இதேபோல் இன்டர்நெட் வசதிகளும், தனியார் தொலைக்காட்சி சேனல்களும் இருந்திருந்தால், மங்கல நிகழ்வுகள் உலகமெங்கும் நிச்சயம் நேரடி ஒளிபரப்பாகக் காட்டப்பட்டிருக்கும். அந்தக் குறையே தெரியாதவாறு, ‘தினத்தந்தி’ நாள்தோறும் தலைப்புச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு தமிழ்நாட்டைத் தயார் செய்தது. ‘இரவும் பகலும் சினிமாவில் நடிக்கிறார் பத்மினி!’, ‘ஓட்டல்கள் நிறைந்துவிட்டன’, ‘பத்மினி திருமணத்தைப் பார்க்க ரசிகர் கூட்டம்!’, ‘இன்று நடக்கிறது பத்மினி - ராமச்சந்திரன் திருமணம்!’, ‘பத்மினி கழுத்தில் தாலி கட்டினார் மாப்பிள்ளை ராமச்சந்திரன்!’…

தங்களின் அபிமான நடிகையை மணமகள் கோலத்தில் காண வேண்டும் என்பதற்காக, மெனக்கெட்டு கிடைத்த வாகனங்களில் ஏறி, குருவாயூர் போய்ச் சேர்ந்த 1961-ன் விடலைகள், இந்நேரம் ஆயிரம் நிலவைக் கொண்டாடி இருப்பார்கள். பத்மினி கல்யாணத்துக்குப் போக வர இருபது ரூபாய் டிக்கெட் என்றெல்லாம் வாலிபர்களை உசுப்பேற்றி, தமிழகத்தின் தனியார் பஸ் அதிபர்கள் வசூலை வாரிக் குவித்தார்கள். சென்னை ராஜதானியில், மூன்று தினங்களுக்கு பத்மினியால் இன்பப் பிரளயம் நிகழ்ந்தது.

பத்மினி - ராமச்சந்திரன் தம்பதிக்கு ஒரே மகன் பிரேம் குமார். தற்போது அவருக்கும்  ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். டைம் பத்திரிகையில் நிருபர் பணி. அவரது மனைவி ஒரு டாக்டர். கேரளத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் ஓர் ஆண் வாரிசு.
 


நட்சத்திரங்களிடையே நோய்க்கிருமியாகப் பரவும் காழ்ப்புணர்ச்சி, பத்மினியிடம் அறவே கிடையாது. தன் காலத்தில் ஒளிவீசிய சக கதாநாயகிகள் அத்தனை பேருடனும் சேர்ந்து நடித்தவர் அவர் ஒருவரே. ஓய்வாக இதை வாசிக்கிறவர்கள், சட்டென்று அந்த நட்சத்திரப் பட்டியலை ஒரு பார்வை பார்த்துவிடலாம்.

1.  டி.ஆர். ராஜகுமாரி - அன்பு, தங்கப்பதுமை

2. பானுமதி - மதுரைவீரன், ராஜாதேசிங்கு

3. அஞ்சலிதேவி - சொர்க்கவாசல், மன்னாதிமன்னன்

4. வைஜெயந்திமாலா - வஞ்சிக்கோட்டை வாலிபன்,  அமர் தீப் (ஹிந்தி)

5. சாவித்ரி - அமரதீபம், சரஸ்வதி சபதம்

6. கண்ணாம்பா - புனர்ஜென்மம்

7. ராஜசுலோசனா - அரசிளங்குமரி

8. சௌகார் ஜானகி - பேசும் தெய்வம்

9. கே.ஆர்.விஜயா - இருமலர்கள், பாலாடை

10.ஜெயலலிதா - குருதட்சணை

11. லட்சுமி - பெண் தெய்வம், திருமகள்

12. சரோஜாதேவி - தேனும் பாலும்

13. தேவிகா - சரஸ்வதி சபதம், அன்னை வேளாங்கன்னி

14. காஞ்சனா - விளையாட்டுப்பிள்ளை

15. வாணிஸ்ரீ - எதிர்காலம், குலமா குணமா

 16. ராஜஸ்ரீ – இரு துருவம்

17. விஜயநிர்மலா – சித்தி

18. மஞ்சுளா – ரிக்ஷாக்காரன்

19. சுஜாதா - தாய்க்கு ஒரு தாலாட்டு

20. நதியா - பூவே பூச்சூடவா

21. ஜெயசித்ரா - லட்சுமி வந்தாச்சு

பத்மினியோடு மிக அதிகப்படங்களில் நடித்தவர், அறுபதுகள் வரையில்  எம்.என்.ராஜம். அதன் பிறகு மனோரமா. விஜயகுமாரி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரை நீங்கள் பத்மினியோடு பார்த்திருக்கிறிர்களா? ஒருவேளை மற்ற மொழிகளில் நிர்மலாவும் பப்பியோடு தோன்றி இருக்கலாம். விஜயகுமாரிக்கு அந்தச் சந்தர்ப்பமும் கிடையாது. மிக நீண்ட வருடங்கள், அவர் மற்ற மொழிகளில் நடித்தது இல்லை. கவிஞர் கண்ணதாசனின் ‘தாயே உனக்காக’  படத்தில் கவுரவ வேடங்களில், தனித் தனி கதைகளில் சிவாஜி - பத்மினி, எஸ்.எஸ்.ஆர். - விஜயகுமாரி, முத்துராமன் - தேவிகா ஆகிய ஜோடிகள் நடித்தனர்.  பத்மினியும் விஜயகுமாரியும் இணைந்து நடித்த காட்சிகள் அதில் கிடையாது. ‘சின்னதம்பி’ புகழ் குஷ்புகூட பேபி ஆர்ட்டிஸ்டாக ஹிந்தியில் பத்மினியுடன் நடித்திருக்கிறார். தமிழில் ஏறக்குறைய இரண்டு டஜன் ஹீரோயின்களோடு நடித்த ஒரே நட்சத்திரம் பத்மினி! ஹிந்தியை கணக்கில் சேர்த்தால் பட்டியல் நீளும்.

பத்மினியின் ஒப்பற்ற உயர்ந்த குணங்களில் மிக முக்கியமானது தோழமை. 1950-களில் அரும்பி, எம்.என்.ராஜம் உள்ளிட்ட சக நட்சத்திரங்களிடம், அந்திம காலம் வரையில் ஆத்ம நேசத்தோடு நிறம் மாறாமல் மண்ணின் மகளாகப் பழகியவர். மூப்பு படர்ந்து நட்சத்திர வாழ்வின் எல்லையில் இருந்தபோதும், முன் பின் பார்த்திராத பத்திரிகையாளரைக்கூட பத்மினியின் வரவேற்பு புத்துணர்ச்சி பெற வைக்கும். சிநேக பாவத்துடன் நேர் காணல் பூர்த்தி பெறச் செய்யும். நான் பத்மினி என்கிற ஆணவம், திமிர், தெனாவட்டு எதுவும் அவர் முகத்தில் தென்படாது. பொதுவாக, பெண்களின் நிரந்தர அடையாளம் புறம் பேசுதல். எப்போதும் உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்தும், பத்மினி ஒருகாலும் சக நடிகைகள் குறித்துத் தவறாக ஒரு சொல் பேசியதாக வரலாறு இல்லை.

பத்மினியின் மாபெரும் சாதனைகள் அவருடைய பாதங்களால் வேர் விடவில்லை. நாக்கில் நிலைப்படியாக நின்றது.

‘வட இந்திய நடிகர் நடிகையர் எல்லாருடனும் அநேகமாக நடித்திருக்கிறேன். ஆனால் யாருடனும் சின்ன சண்டைகூடப் போட்டதில்லை. சாதாரண உப நடிகை எனக்கு அட்வைஸ் பண்ணினாலும்கூட, அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும் என்று நல்லவிதமாக எடுத்துக் கொள்வேன். எனக்குக் கோபமே வராது. யாராவது சில சமயம் என்னைப் பற்றி குத்தலாகப் பேசுவது கேட்கும். காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளமாட்டேன்.

‘ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மாத்திரமே தூங்க முடியும். அப்படி ஓர் உழைப்பு. புகழ்பெற்ற நடிகையாக இருப்பது லேசான காரியம் இல்லை. உடம்பை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். தோற்றம், நிறம், கவர்ச்சி எல்லாவற்றையும் பாதுகாக்க வேண்டும். கூடிய வரை, தயாரிப்பாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். இவற்றில் கொஞ்சம் தவறினால்கூடக் கீழே போக வேண்டியதுதான். அப்புறம் மேலே வருவது ரொம்ப சிரமம்!’  - பத்மினி.

அநேக நாயகிகளுக்கு அதிர்ஷ்டமாக அமைந்த இரட்டை வேடம், பத்மினிக்குக் கிடைக்காமல் போனது. உங்களை ஏன் இரட்டையராகப் பார்க்க முடியவில்லை? ‘மாதத்தில் பத்து நாள்களாவது நாட்டியமாடுவது என்று எப்போதும் நடிப்பையும் நாட்டியத்தையும் இரு கண்களாக  பாவித்து வந்தேன். ஒரு வேடத்தில் நன்றாக நடித்துப் பெயர் வாங்குவதே கஷ்டமான காரியம். இதில் இரு வேடங்களில் நடிப்பது என்னால் எப்படி முடியும்? சுசித்ரா சென், தாயும் மகளுமாக நடித்த மம்தாவின் தமிழ் ரீமேக்கில் நடிக்க எனக்கு ஆசை. ‘காவியத்தலைவி’ என்ற பெயரில் சௌகார் ஜானகி அதை சொந்தமாகத் தயாரித்து நடித்தார்’.

பத்மினி உஷார் பார்ட்டி. கணேசனின் பிரியசகியாக திரையில் இடைவிடாமல் வலம் வந்தவர். டி.ஆர்.ராஜகுமாரி தொடங்கி ஏராளமானோர் சிவாஜியை நாயகனாக்கிச் சொந்தப் படங்களைத் தயாரித்தனர். மற்ற ஹீரோயின்கள் செய்த தவறை அவர் சிந்தித்தவர் அல்ல. ‘என்னை ஹிந்தி, தமிழ்ப் படங்கள் தயாரிக்கும்படி சில பேர் யோசனை கூறியது உண்டு. ஆனால்,  அந்த முயற்சியில் ஈடுபட்டதில்லை. நான் ஒரு சிறந்த நடிகையாக இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளராக வெற்றிபெறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பதே என் அபிப்ராயம்’ - பத்மினி.

பத்மினிக்கு ஆஸ்துமா தொந்தரவு உண்டு. 1971 மார்ச் 27-ல், அமெரிக்காவில் கென்னடி ஏர்போர்ட்டில் பத்மினி சென்று இறங்கும்வரையில் அவரைப் படாதபாடு படுத்தியது. கால்ஷீட் கலாசாரத்தில் அந்நோயைக் கண்டுகொள்ளமாட்டார். மழை, பனி, குளிர் என்று பாராமல்,  நிஜமான நீரோடைகளிலும் சினிமா அருவிகளிலும் குதியாட்டம் போடுவார். மூக்கடைப்பும் மூச்சுத் திணறலும் அவரது வாழ்க்கையில் நிழலாக உடன் வந்தது.

சரம் சரமாக மல்லிகைப்பூ தோரணமாக மணக்கும் கூந்தல், மாம்பழம், அம்பலப்புழை பால் பாயசம், ஊறுகாய் ஆகியவை பத்மினிக்கு உயிர். ரொம்பவும் நட்சத்திரப் பஞ்சாங்கம் அவர். நியூஜெர்ஸியில் கணவர் வாங்கிய சொந்த வீட்டில், 1971 செப்டம்பர் 15-ல் குடித்தனம் செய்யத் தொடங்கிய நாள் முதலாக, வெள்ளிப் பிள்ளையாருக்கு பூஜை,  தியானம், சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றிலும் ஆழ்ந்த பற்று ஆரம்பித்தது. பத்மினி, வடஅமெரிக்காவுக்குப் போன பின்பே அங்கு விநாயகருக்குக் கோயில் கட்டப்பட்டது. அதற்காக, ஓயாமல் ஆடி நிதி திரட்டித் தந்தார். தனது 63-வது பிறந்த நாளில், கடுங் குளிர் வீசும் கார்த்திகைத் திங்களில் திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் செய்தவர் பத்மினி.

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரக் குடும்பம் பத்மினியுடையது. திருவாங்கூர் சகோதரிகள் மூவரைத் தவிர, பத்மஸ்ரீ பட்டம் பெற்ற சுகுமாரி, பத்மினிக்கு மாமன்  மகள். தில்லானா மோகனாம்பாளில் மதன்பூர் மகாராணியாக, எம்.என்.நம்பியாரின் மனைவியாகத் தோன்றிய அம்பிகா, பத்மினியின் பெரியம்மா பெண்.

மலையாள சினிமாவில் இந்தியாவின் சிறந்த நடிகை எனும் தேசிய விருது பெற்ற ஷோபனா, பத்மினியின் தம்பி மகள். எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு,  தளபதி, மல்லுவேட்டி மைனர் போன்றவை, தமிழில் அவரது பெயரைச் சொல்லும். நாட்டியத்துக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். காதல் தேசம், சந்திரமுகி புகழ் வினீத், பத்மினியின் கணவர் ராமச்சந்திரனின் தம்பி மகன்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல, ரத்த சொந்தங்களும் அன்பைப் பொழிந்தால் மட்டுமே நீண்ட காலம் நிலைத்திருக்கும். அபூர்வ சகோதரிகளா இவர்கள்! இவர்களுக்குள் சண்டை சச்சரவே வராதா என லலிதா - பத்மினியைப் பார்த்து அங்கலாயித்தவர்கள் ஆயிரம் பேர். ஏன் அவர்களுக்குள் தகராறு இல்லை. பத்மினி, ரத்த பாசத்தின் ரகசியம் குறித்துச் சொன்னவை -

‘எங்க அம்மா, மூன்று பேருக்கும் ஒரே மாதிரியான டிரஸ் வாங்குவார். உடைகள்ல மட்டும் ஒற்றுமையில்ல. உள்ளத்தின் எண்ணங்களும் எங்களுக்குள் ஒத்துப்போச்சு. ஆச்சரியமான நெருக்கமும் பாசமும் இருந்தது. லலிதாவும் நானும் சகோதரிகளாகப் பழகவில்லை. இரு தோழிகளாகவே பழகினோம். அக்கா நல்ல பொறுமைசாலி. அவளிடமிருந்து நான் பல நல்லப் பண்புகளைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒருநாள்கூட நாங்கள் சண்டை போட்டுக்கொண்டது இல்லை. ஒருவரைப் பார்த்து மற்றவர் பொறாமைப் பட்டது கிடையாது.

இத்தனைக்கும், எனக்குத்தான் கதாநாயகி ரோல் கிடைக்கும். லலிதாவுக்கு சாதாரணமா வில்லி கேரக்டர். ராகினிக்கு காமெடி ரோல்னு அமையும். நடிப்பைத் தொழிலாக நாங்க பாவிச்சமே தவிர, புகழைப் பிடிக்கணும்ங்கற ஆசை வராது.

குறும்பு, ராகினியின் கூடவே பிறந்தது. திருவருட்செல்வர் ஷூட்டிங் நடந்த சமயம். அடிக்கடி காஸ்ட்யூம் மாற்றி ஆடியதால், களைத்துப் போனேன். செட்டின் ஓரமாக சோபாவில் சாய்ந்தவள், என்னையும் அறியாமல் தூங்கிவிட்டேன். மீண்டும் ஷாட்டுக்காக என்னை அழைக்க ஆடப் புறப்பட்டேன். மொத்த யூனிட்டும் என்னைப் பார்த்துச் சிரித்தது. எதற்காகச் சிரிக்கிறார்கள் என்று புரியாமல், ஏன் கேலி செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

கண்ணாடியில் முகத்தைப் பார்க்கச் சொன்னார்கள். நான் கண் அயர்ந்த சமயம், ராகினி எனக்கு அழகாக மீசை போட்டிருந்தாள். அதைப் பார்த்ததும் நானும் என் தங்கையின் செய்கையை எண்ணிச் சிரித்தேன். ராகினி எப்போதும் தமாஷ் பேர்வழி.

உறவினர்களின் நெருக்கம்தான் என் பலம். இந்த மண்ணின் ஈர்ப்பும் கடமை உணர்வும் என் பலம். அதுதான் என்னை இங்கு வருஷத்துக்கு ஒருமுறை இழுக்கிறது. பந்தம், பாசம் என்பதுதான் வாழ்வுக்கு அர்த்தத்தைக் கொடுப்பது, எங்கிருந்தாலும்.

பொன் நகைகளில் எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. பூத்தாலி போன்ற எங்கள் மாநிலத்து ஆபரணங்களை வைத்திருக்கிறேன். லலிதா, ராகினி கொடுத்தவை, ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் மனைவி பட்டம்மாள் தந்த வளையல்கள், இப்படிப் பலவிதமான அணிகலன்கள் என்னிடம் இருக்கின்றன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கிய நகைகளைக்கூட நான் அழித்து மாற்றிக்கொள்ளவில்லை.

ஏனென்றால், அவை ஒவ்வொன்றும் எனக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியை ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அவை ஒளிவிடும்போது, என் வாழ்க்கையின் ஒளி மிகுந்த நாள்களை மறுபடி நினைவுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

‘பத்மினியைத் தவிர வேறு எந்தப் பிரசாசமும் இல்லாமல் உருவானது  ‘பூவே பூச்சூடவா’. டைரக்டர் ஃபாசில், அவருக்குப் பரிச்சயமானவர் அல்ல. முன்பின் பார்த்தறியாதவர். புது இயக்குநர் சொன்ன கதை பிடித்ததும், பத்மினி எந்த மறுப்பும் சொல்லாமல் கேமரா முன்பு மீண்டும் தோன்றினார். மலையாளத்தில் ‘நோக்கத் தாத்த தூரத்து கண்ணும் கூட்டு’ என்ற பெயரில் முதலில் தயாராகி, பின்னர் தமிழில் ரீமேக் ஆனது. இரண்டிலும் பத்மினி தன்னை நிரூபித்து நின்றார். பத்திரிகைகளின் பாராட்டு மழையில் நனைந்தார்.

‘அழகிய பாட்டியாக வருபவர் பத்மினி. அழுத்தமான பாகம். அநாயாசமாகச் செய்திருக்கிறார்’, ‘பத்மினியிடம் அந்நாளைய அனுபவம் பளிச்சிடுகிறது!’ மலையாளத்தில் ‘நோக்கத் தாத்த தூரத்து கண்ணும் கூட்டு’ மாதிரியான கவிதைகள், வழக்கமானதாக இருக்கலாம். தமிழில் பூவே பூச்சூடவாவின் திரைக்கதையும் தரமும் வசூலும் அபூர்வமானது.

2006 செப்டம்பர் 23. மாலையில், சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா!  சக்கர நாற்காலியுடன் பத்மினி பங்கேற்ற நிறைவான நிகழ்வு. அவரது அறிமுகப் படமான மணமகளுக்கு வசனம் எழுதிய மு.கருணாநிதியின் சிறப்பைச் சொன்னது. அமெரிக்காவில் வாழ்வது தாற்காலிகம் என்கிற உணர்வோடே வாழ்ந்தவர். தமிழ் மண்ணில்தான் உயிர் விட வேண்டும் என்று தயாராகத் தாயகம் திரும்பியவர். மரணம் பொதுவானது. பத்மினிக்கும் மாரடைப்பால் நேர்ந்தது. மறுநாள் செப்டம்பர் 24.  இரவு பத்து மணி பத்து நிமிடங்களுக்கு, உலக நாட்டியப் பேரொளி இயற்கை எய்தினார்.

பத்மினியின் அளப்பரிய சாதனைகளுக்கு ஏற்றவாறு, நமது தேசம் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறிவிட்டது. இத்தனைக்கும் அகில இந்திய நட்சத்திரம்!  நேரு, காமராஜர் போன்ற பெருந்தலைவர்களிடம் நல்ல அறிமுகம் உடையவர். 1967-ல், தமிழகத் தேர்தலில் காங்கிரஸுக்காக பிரசாரம் செய்தவர்.

அவரது மயிலாப்பூர் வீட்டுக்கு பத்மஸ்ரீ என்று பெயர். ஆனால், மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட எந்த விருதுகளும் பத்மினிக்குக் கிட்டாமல் போனது. நாலு மொழிகளிலும் அவர் நடித்த ஏராளமானவை, வருடம்தோறும் சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகளை வாங்கிக் குவித்துள்ளன. பத்மினி போன்ற ஆற்றல்மிக்கக் கலைஞர்கள், பத்ம விருதுகள் பெற என்ன அளவு கோல் என்பது புதிராக உள்ளது. தமிழகத்தின் ஒப்பற்ற சாதனையாளர்களை, குறிப்பாகச் சிறந்த நடிகைகளை மத்திய அரசு மதிக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

குறுகிய  இடைவெளியில் காலமானதாலோ என்னவோ, (ஸ்ரீவித்யா நினைவு தினம் அக்டோபர் 19), தென் இந்திய நடிகர் சங்கம் பத்மினிக்கும், நடிகை ஸ்ரீவித்யாவுக்கும் சேர்ந்தே அஞ்சலிக் கூட்டம் நடத்தியது. குழந்தைப் பருவத்தில் இருந்து எதிர் வீட்டில் வாழ்ந்த பத்மினியைப் பார்த்து, பரதம் கற்றுக்கொண்டு அவரது இன்ஸ்பிரேஷனால், படங்களில் நடிக்க வந்தவர் ஸ்ரீவித்யா. தமிழர்களின் உதாசீனத்துக்குள்ளான, போற்றப்படாத திறமைசாலி. நட்சத்திர வாழ்க்கையால் அமைதியை இழந்தவர் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டவர்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான ஸ்ரீவித்யாவுக்கு, கேரளம் அரசு மரியாதைகளுடன்  இறுதி அஞசலி செலுத்தியது. தென் இந்தியாவில் வேறு எந்த நடிகைக்கும் கிடைத்திராத சிறப்பு, ஸ்ரீவித்யாவுக்கு மரணத்துக்குப் பின் நிகழ்ந்தது. ஒருவேளை நர்கீஸுக்கும் அத்தகைய உயரிய தனித்துவத்தை மராட்டியம் வழங்கி இருக்கலாம். அமரத்துவம் அடைந்த நர்கீஸின் உடலை, அம்மாநில முதல்வரே சுமந்து சென்றதாகச் செய்திகள் உண்டு.

கேரளத்தில், சினிமாகாரர்கள் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்ததாகச் சரித்திரம் கிடையாது. ஆனாலும், மலையாளிகள் தாங்கள் உளமாற நேசித்த, தங்களின் அபிமான நடிகையை மயானம் வரையிலும் மாண்புறச் செய்தனர். கலையுலகிலிருந்து தொடர்ந்து மாநில முதல்வர்களைத் தேர்வு செய்கிற தமிழர்கள்,  பத்மினிக்காகச் செய்த மேன்மைகள் என்ன?  கேள்விக்குறியோடும், ஆதங்கத்தோடும் நிறைவுபெறுகிறது உன்னதமான பத்மினியின் கலை உலக நிகழ்வுகள்.

அடுத்து, உருக்கத்தின் விளைநிலம் நடிகையர் திலகம் சாவித்ரியின் அரிதார நாள்களை அலசலாம்.

                          ***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com