பானுமதி: 3. எமனா இருக்குது...!

தினமும் ஒரு பக்கம் என்று பானுமதி தமிழ் கற்க ஆரம்பித்தார். அவர் முழுதாகத் தங்கு தடையின்றி தமிழ் வாசித்துத் தேற, எடுத்துக்கொண்ட மாதங்கள் பதினெட்டு.

தினமும் ஒரு பக்கம் என்று பானுமதி தமிழ் கற்க ஆரம்பித்தார். அவர் முழுதாகத் தங்கு தடையின்றி தமிழ் வாசித்துத் தேற, எடுத்துக்கொண்ட மாதங்கள் பதினெட்டு.

‘பானுமதியுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட முடியாதா..?’ என ஏங்கினார்கள் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யூ. சின்னப்பாவும். பானுமதியுடன் ஜோடி சேருவதன் மூலம் மேலும் பிரகாசிக்க முடியும் என்று மனமார நம்பினர்.

‘தமிழ் சினிமாவில் பானுமதியை அறிமுகப்படுத்தும் திருப்பணியைத் தாங்கள் செய்ததாக, சரித்திரம் பேச வேண்டும்’ என்று இருவருமே நினைத்தார்கள்.

போட்டி போட்டுக் கொண்டு பி.யூ.சின்னப்பா நடித்த முருகன் டாக்கீஸ் ரத்னகுமாரிலும், நரேந்திரா பிக்சர்ஸ் ‘ராஜமுக்தி’யிலும், பானுமதியை ஒப்பந்தம் செய்தனர்.

‘ராஜ முக்தி’ பாகவதரின் சொந்தத் தயாரிப்பு. பூனாவில் பிரபாத் ஸ்டுடியோவில் ஒரே ஷெட்யூலாக ஆறு மாதத்தில் ஷூட்டிங் முடிக்கத் திட்டம். பானுமதி, வி.என். ஜானகி, பி.எஸ். வீரப்பா, ஆகியோருடன் எம்.ஜி.ஆரையும் அழைத்துக் கொண்டு பாகவதர் புறப்பட்டார்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கால் பாகவதர்-கலைவாணர் இருவரிடையே விரிசல் விழுந்தது. கிருஷ்ணன் - மதுரம் மட்டும் அல்ல, ராஜமுக்தியில் எம்.கே.டியின் வழக்கமான டீமும் வேலை செய்யவில்லை. இளங்கோவனுக்குப் பதிலாக வசனம் எழுதியவர் புதுமைப்பித்தன்.

முக்கியமாக பானுமதியைத் தொடாமலே நடித்தார் பாகவதர். அதற்கு டைரக்டரிடம் அவர் சொன்ன காரணம் பரிதாபகரமானது.

‘எனக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்பப் படக் கதை அமையட்டும். நான் மீண்டும் நல்ல பெயரைச் சம்பாதிக்க ‘ராஜ முக்தி’ உதவ வேண்டும்.’

முதலும் கடைசியுமாக பாகவதருடன் இரு நடனங்களுக்கு ஆடிப் பாடக் கூடிய அற்புதமானச் சந்தர்ப்பம் பானுமதிக்குக் கிடைத்தது.

ராஜமுக்தியை இயக்கியவர் எம்.ஜி.ஆரின் மானசீக குருவும், தமிழ் சினிமா சிற்பிகளில் ஒருவருமான ராஜா சந்திரசேகர்.

‘ரத்னகுமார் ரிலிசுக்கு முன் சீக்கிரத்தில் தன் படத்தை முடித்து, மறுபடியும் விஸ்வரூபம் எடுக்க விரும்பினார் பாகவதர்.

‘ராஜமுக்தியின் தரம் முக்கியம். அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்க மாட்டேன்.’ பிடிவாதமாக பாகவதருக்கு உடன்பட ராஜா சந்திரசேகர் மறுத்தார்.

டைரக்டரை மீறித் தன்னிச்சையாக பாகவதர் செயல்பட்டார். ஒழுங்காகப் பூர்த்தி பெறாமல் ராஜமுக்தி 1948 அக்டோபர் 9ஆம் தேதி வெளியானது.

பாகவதருக்கோ, பானுமதிக்கோ, மக்களுக்கோ எந்த நன்மையும் செய்யாமல் பெட்டிக்குள் முடங்கியது. தீமையிலும் ஒரே நன்மை எம்.ஜி.ஆர்.-வி.என். ஜானகி காதலுக்கான அஸ்திவாரம்!

என். எஸ். கிருஷ்ணனுடன் நடிக்கும் வாய்ப்பும் பானுமதியைத் தேடி வந்தது.

‘சமூக சீர்திருத்தக் கருத்துக்களை முழுமையாகப் பாமர மக்களிடம் சொல்ல, சொந்தப்படம் முக்கியம்’ என்பதை கலைவாணர் உணர்ந்த சமயம்.

மவுண்ட்ரோட் கேசினோ தியேட்டரில் ‘டீஸ் கோஸ் டு டவுன்’ ஓடிக் கொண்டிருந்தது.

‘அந்த ஆங்கில சினிமா நமக்கு உபயோகப்படும்.’ என்று கலைவாணரிடம் குணச்சித்திர நடிகர் எஸ். வி.சகஸ்ரநாமம் சிபாரிசு செய்தார்.

கிருஷ்ணன் -பஞ்சுவும் அந்த ஹாலிவுட் படத்தைப் பார்த்து விட்டு வந்தார்கள்.

அதுவரை ஹாஸ்யத்தில் உச்சம் தொட்ட கிருஷ்ணன் முதன் முதலாக ஹீரோ அவதாரம் எடுத்தார். என். எஸ். கிருஷ்ணனுக்குப் புதிய யோசனை தோன்றியது.

தன் எண்ணங்களை ‘அரசியலிலும் எழுத்திலும் பரபரப்பாகப் பேசப்படும், அண்ணாதுரையின் வசனம் மூலம் ஜனங்களிடம் பளிச்சென்றுப் பதிய வைத்தால் என்ன...?’

கலைவாணரின் மக்கள் செல்வாக்கும், புகழும் சிரஞ்சீவித்துவம் பெற்றவை. என்.எஸ். கிருஷ்ணன் அழைக்கிறார் என்றதும் அண்ணாவுக்கும் ஆனந்தம்.

அண்ணாவின் திரைக்கதை வசனத்தில், ’1949 பிப்ரவரி 2’ல் வெளியான முதல் டாக்கி நல்லதம்பி. அதில் வில்லி கம் நாயகியாக ’புஷ்பா’ என்கிற வேடத்தில் பானுமதி நடித்தார். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினர்.

பேன்ட் ஷ்ர்ட் போட்டு இன் செய்து நவ நாகரிக யுவதியாக, பானுமதி இளமை எழில் வீச கம்பீரமாகத் திரையில் தோன்றினார்.

பானுமதியின் ’கிளியோபாட்ரா’ நாட்டிய நாடகம் ’நல்லதம்பி’யின் சிறப்பு அம்சம்.

நல்லதம்பி பார்த்தது முதல் அண்ணா, ’கிளியோபாட்ராவாக’ ஆடிப்பாடிய பானுமதியின் ரசிகராக மாறினார். பின்னாளில் தன் கதைகளில் நாயகியாக நடிக்க பானுமதியை அண்ணா சிபாரிசு செய்தார். அதற்கு நல்லதம்பி நங்கூரம் பாய்ச்சியது.

தமிழில் பானுமதி நடித்த முதல் சமூகச் சித்திரம் நல்லதம்பி. சிறந்த பிரச்சாரப் படம் என்கிறப் புகழை அடைந்தது.

‘நல்லதம்பியில் நிறைய நல்ல விஷயங்கள் தெரிகிறது. பானுமதியின் நடிப்பு சோபிக்கிறது. தமிழ் உச்சரிப்பு பரவாயில்லை. இன்னமும் கூட நாக்கு திருந்த வேண்டும். அவர் ஆடியுள்ள ஆட்டம் ரசிகர்களைக் கவரக் கூடும். கிளியோபாட்ரா நடனக்காட்சி கண்ணுக்கு விருந்து.’

என்று ’குண்டூசி’ மனம் திறந்து பாராட்டியது.

...

‘பி.யூ. சின்னப்பாவுக்கு ’நடிக நாயகன், வசன வாருதி, இசை இறை’ என்று மூன்று பட்டங்களை ஒரு சேரத் தரலாமா?’

குண்டூசி சினிமா இதழில் 1949 நவம்பரில் ’மேச்சேரி தி. செ. ராமசாமி’ என்பவரின் கேள்வி அது.

சின்னப்பாவின் புகழுக்கு அதை விடக் கட்டியம் கூற வேண்டாம். அன்றைய சகலகலாவல்லவரான ஒரே கலைஞர்! அவர் பானுமதியுடன் இணைந்து நடிக்க விரும்பியதே இருவரின் மேன்மையைச் சொல்லும்.

பானுமதி ஒழுக்கத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தவர். பதிலுக்கு அவர் அடைந்த அவதூறுகள் ஏராளம்.

பி.யூ.சின்னப்பா என்றாலே அனைவருக்கும் சிம்ம சொப்பனம்! ரத்னகுமார் படத்தை புது டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு மிகுந்த பயபக்தியோடு இயக்கி வந்தனர்.

சரக்கடித்து விட்டு ஷாட்டுக்கு ரெடியாவது சின்னப்பாவுக்குச் சாதாரணம். ரத்னகுமார் ஷூட்டிங்கிலும் மது நீடித்தது. உடன் நடித்துக் கொண்டிருந்த பானுமதிக்கு, வித்தியாசமான அழுகிப் போன பழ வாடை காட்டிக் கொடுத்து விட்டது.

’எனக்குத் தலையை வலிக்கிறது’ என்று சொல்லி விட்டு மேக் அப் ரூமுக்குச் சென்றார் பானுமதி. அங்கிருந்து நைசாக வீட்டுக்கே கிளம்பிப் போய் விட்டார். அடுத்த காட்சிக்கு லைட்டிங் முடிந்ததும் தேடினார்கள். ஹீரோயினைக் காணோம் என்பது தெரிந்தது.

பானுமதியின் திடீர் ஓட்டத்துக்கான காரணத்தை பி.யூ. சின்னப்பா புரிந்து கொண்டார். அவருக்கு அவமானமும் ஆத்திரமும் அதிகரித்தது.

டைரக்டர்களிடம் சீறினார்.

‘நான் குடித்திருப்பது தவறு என்றால் அதை என்னிடமே நேரில் சொல்லி இருக்கலாம். யாருக்கும் தெரியாமல் தன் இஷ்டப்படி போகலாமா? இது தான் மரியாதையா?’

‘சின்னப்பா குடித்து விட்டு வந்தற்காக ஏற்கனவே கண்ணாம்பா, எல்லார் முன்பும் கண்டித்துள்ளார். யார் சொல்லியும் திருந்தாதவரை, ஒரு புதுமுகம் பிரமாதமாகப் பழி தீர்த்து இருக்கிறார்.’

என்கிற பேச்சு கிசுகிசுப்பாகக் கிளம்பியது. பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணாவிடம் முறையிட்டனர் இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு.

‘சின்னப்பா இதே மாதிரி குடித்து விட்டு வந்தால், இனி நான் நடிக்க மாட்டேன்’ தன் நிலைப்பாட்டில் பானுமதி உறுதியாக நின்றார்.

பி.யூ. சின்னப்பா என்கிற சிகரம் பானுமதியிடம் பணிந்தது. தண்ணி அடித்து விட்டு வருவதென்ன... படப்பிடிப்பில் பீடி குடிப்பதையும், கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைத்தார்.

ஜி.ராமநாதன் - சி.ஆர். சுப்பராமன் இருவர் இசையில், பி.யூ.சின்னப்பாவுடனும் சேர்ந்து பாடும் வாய்ப்பு பானுமதிக்கு ரத்னகுமாரில் கிடைத்தது. ’நீ தயை புரிவாயே, கலை மாதும் அலை மாதும், விழுது விட்டுத் தழைத்தோங்கி...’ என்று தொடங்கிய பாடல்கள் தமிழகமெங்கும் இனிமை சேர்த்தன.

பானுமதியின் புகழைக் காசு பண்ண முனைப்புடன் முதலில் களமிறங்கிய ரத்னகுமார், 1949 டிசம்பர் 15ல் மிகத் தாமதமாக வெளியானது.

மதுரையில் விமானத்திலிருந்து ’ரத்னகுமார்’ பட விளம்பர நோட்டீஸ்கள் வீசப்பட்டன. ஏனோ தரை டிக்கெட் ஜனங்கள் கூட ’ரத்னகுமார்’ பார்க்கத் திரண்டு வரவில்லை.

தமிழ் சினிமாவின் முதல் மூவேந்தர்களுடன் நடித்தும், பானுமதியின் முழுத் திறமையும் வெளிப்படாமல் இருந்தது. ’பாவுரமா’ பாடித் தெலுங்கில் பெற்ற மகுடம் தமிழில் சட்டென்று கிடைக்கக் காணோம்.

அடுத்து முரசு கொட்டிய ’அபூர்வ சகோதரர்கள்’ பானுமதிக்கு உரிய சிம்மாசனத்தைத் தமிழ் சினிமாவில் கொண்டு வந்து போட்டது.

‘அலெக்ஸாண்டர் டூமாஸ்’ எழுதிய நாவல் ’கார்சிகன் பிரதர்ஸ்’. ஹாலிவுட்டில் படமாகியது. அந்த இங்கிலீஷ் சினிமாவின் அப்பட்டமான காப்பி அபூர்வ சகோதரர்கள்.

ஜெமினியின் அபூர்வசகோதரர்களுக்கு ஆரம்பத்தில் என்ன காரணத்தாலோ ’காந்திமதி’ என்று பெயர் வைத்தார்கள். வைஜெயந்திமாலா கதாநாயகி. இளமை பூரித்து நின்ற வைஜெயந்தியிடம் வாசனுக்கு ஏதோ ஒன்று குறைவதாகத் தோன்றியது. உடனடியாக பானுமதியை நாடினார்.

அபூர்வ சகோதரர்களில் வாய்ப்பு கிடைத்த விதம் குறித்து பானுமதி:

‘ராஜமுக்தியில் அமைச்சர் மகள் ’கன்னிகா வாக’ எனக்கு வில்லி வேஷம். தமிழில் இந்த மாதிரியான ரோலில் அறிமுகமாவதா என்று நான் யோசிக்கவில்லை. அந்த கேரக்டருக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைப் பின்பற்றினேன்.

ராஜமுக்தி படத்தில் என் பெர்ஃபாமன்ஸ் நல்லாயிருக்குன்னு எஸ்.எஸ். வாசன் பாராட்டினார். என்னாச்சு தெரியுமா?

அபூர்வ சகோதரர்கள் படம் கிடைத்தது. இரண்டே மாதங்களில் இரவு பகலாக மூன்று மொழிகளில் தயாரானது. முதலில் தமிழிலும் பிறகு இந்தியிலும் தனித்தனியாக எடுத்தார்கள். தெலுங்கிலும் டப் செய்தார்கள்.

யாருக்காகவும் காத்திருக்காமல் வாசன் காலை ஏழு மணிக்கே முதல் ஷாட் எடுப்பார். ஒரு நாள் காட்சி அமைப்பில் திருப்தி இல்லை. நான், எம்.கே. ராதா என அனைவரும் காத்திருக்க, நேரம் ஓடியவாறே இருந்தது. நாலு முறைக்கு மேல் ஒத்திகை பார்த்தும் தெளிவு ஏற்படாமல், இரவு பதினோரு மணிக்குத் தன் முதல் ஷாட்டை ஓகே செய்தார் வாசன்.

அப்ப என் மகன் பரணி குழந்தை. இந்த ரெண்டு மாசமும் என்னால் அவன் முகத்தைக் கூட சரியாப் பார்க்க முடியல. ஷூட்டிங் முடிஞ்சு வீடு திரும்பறப்ப அவன் தூங்கிக்கிட்டு இருப்பான். விடியகாலைல நான் கிளம்பறப்பவும் கண் விழிக்க மாட்டான்.

ஒரு தாயா என் மனம் சங்கடப்படும். சினிமாவில் என் பங்கை சரியாச் செய்ய வேண்டுமே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

இப்படித்தான் ஒரு நாள் விடிய விடிய படப்பிடிப்பு. தூங்காத சோர்வு எல்லார் கண்களிலும். வாசன் சார் என்னிடம் ’கொஞ்சம் பிரேக் பண்ணிட்டு தொடரலாமா’ன்னு கேட்டார்.

நானோ இல்ல சார்... பிரேக் விட்டோம்னா அப்புறம், நாம நினைக்கற வேகத்துக்குப் படப்பிடிப்பைத் தொடரமுடியாது’ன்னு பிடிவாதமா மறுத்திட்டேன்.

படம் வெளியாகி பெரிய வெற்றியை எட்டினப்போ, வாசன் சார் என்னோட சின்சியாரிடி பத்தியும் பாராட்டி இருக்கிறார்.

தன் மனைவி பட்டம்மாவிடம் வாசன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா...?

‘தொழில் ஆர்வத்துல பானு என்னை விட எமனா இருக்குது!’

இதுக்கு மேலே என்ன பாராட்டு வேணும் ? சொல்லுங்க...’ - பானுமதி.

ஜெமினியில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், பானுமதியின் பரணி பிக்சர்ஸ் மிக மும்முரமாக உருவாக்கிய படம் ’லைலா மஜ்னு’ (தெலுங்கு).

அபூர்வ சகோதரர்களுக்கு முன்பாக 1949 செப்டம்பரில் வெளியாகி ஆந்திராவில் வசூல் சுனாமியை ஏற்படுத்தியது.

அந்தக் காலத்திலேயே தீபாவளிக்கு அரை டஜன் டாக்கிகளாவது வரும். ’மிகப் பிரம்மாண்டமான அபூர்வ சகோதரர்களோடு, தங்கள் படங்கள் போட்டியிட்டால் அவை வசூலில் கட்டாயம் தோல்வி அடையும்’ என்று மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

1949 அக்டோபர் 21ல் சென்னையில் வெலிங்டன், பிரபாத் தியேட்டர்களிலும் ’நிஷான்’ என்ற பெயரில் இந்தியிலும் ரிலீஸ் ஆனது. அதே நாளில் பானுமதி நடித்த மற்றொரு தமிழ்ப் படமான ’தேவமனோகரி’ பாரகனில் திரையிடப்பட்டது. அதில் ஹொன்னப்ப பாகவதர் ஹீரோ.

ஒரே நாளில் பானுமதி நடித்து மூன்று சினிமாக்கள் வெளியானது. இன்றைக்கும் ஒரு கலைஞரே நடித்து அதே தினத்தில், இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் வருவது அரிய சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது. முதன் முதலில் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் பானுமதி!

நிஷானில் பானுமதி நாயகி. ஹீரோ மட்டும் எம்.கே. ராதாவுக்குப் பதிலாக ’சந்திரலேகா’ புகழ் ரஞ்சன்.

ஜெமினியின்

அபூர்வ சகோதரர்கள்

’உணர்ச்சி மிகுந்த கதையுடன் கூடிய உன்னத சித்திரம்’

என்று சென்னை நகரமெங்கும் அட்டகாச விளம்பரங்கள் ரசிகர்களைப் பரவசப்படுத்தின.

‘சேலையால் தன் நெஞ்சுப் பகுதியை மூடாமல், இரு மார்புகளுக்கும் இடையில் தாவணி நுனியைச் சொருகி, கைகளில் தேநீர் நிறைந்த கப் அன்ட் சாசர்களை ஏந்தி, சுந்தரப் புன்னகை சிந்தும் பானுமதியின் கவர்ச்சிகரமான போஸால்’ எல்லா சுவரொட்டிகளிலும், பிரபல பத்திரிகைகளிலும் சிருங்கார ரசம் ததும்பியது.

அதைப் பார்த்து பார்த்து ரசித்த வாலிப, வயோதிக அன்பர்களின் உதடுகளில் ஜொள்ளு படிப்படியாக வழிந்தது.

‘காஞ்சனாவாக பானுமதி வெகு லாகவமாக நடித்திருக்கிறார். குறும்புக்காரப் பெண்ணாக நடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். காதல் காட்சிகளில் வெகு இயற்கையாகவும் அநாயாசமாகவும் நடித்திருக்கிறார்.

சமையற்காரியாக மாறி ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி, வீரர்களையெல்லாம் ஏமாற்றி கம்பி நீட்டும் காட்சியையும், காதலன் எம்.கே. ராதா முன்னிலையில் வேலைக்காரியாக பேசி நடிப்பதையும், ’பிரமாதம்’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம்.

அந்தக் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் பலமுறை அபூர்வசகோதரர்கள் பார்ப்பார்கள் என்பது நிச்சயம். பானுமதி பாடும் ’லட்டு... லட்டு’ பாட்டு தமாஷ். மற்றும் அவர் பாடியுள்ள ’மானும் மயிலும், மனமோகனமே’ ’ஓடக்காரா...! ஓடக்காரா...! ஓடத்தில் ஏற்றி செல்வாயோ ?’ பாடல்கள் இனிமையோ இனிமை.’

‘புராணப்படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள்’ என்கிறப் பட அதிபர்களின் கூற்றைப் பொய்யாக்கி விட்டது கற்பனை கதையான அபூர்வ சகோதரர்கள்’. என்று விமர்சனங்கள் உற்சாகப்படுத்தின.

அன்றைய ஹைடெக் ஓட்டல் மேஜைகள் ஒவ்வொன்றிலும், காஞ்சனாவின் (பானுமதி) மார்பளவு குட்டி குட்டி கட் அவுட்கள் காட்சி அளித்தன.

உடனடியாக அபூர்வ சகோதரர்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. 1950 தைப் பொங்கல் அன்று ஆந்திராவெங்கும் அபூர்வ சகோதரலு ரிலிஸ் ஆனது.

வடக்கில் சந்திரலேகாவை அடுத்துக் குறுகிய காலத்தில் 1950 ஏப்ரலில் நிஷானும் வெள்ளிவிழா கொண்டாடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com