சாவித்ரி-13. நூறு நூறு பெருமைகள்!

ஜெமினி கணேஷ் - சாவித்ரி ஜோடி 1953 தீபாவளி அன்று வெளியான மனம் போல் மாங்கல்யம் படத்தில் நடிக்கத் தொடங்கி, 1967 பொங்கல்

ஜெமினி கணேஷ் - சாவித்ரி ஜோடி 1953  தீபாவளி அன்று வெளியான மனம் போல் மாங்கல்யம் படத்தில் நடிக்கத் தொடங்கி, 1967 பொங்கல் வெளியீடான கந்தன் கருணை, சீதா வரையிலும் தொடர்ந்து 14 ஆண்டுகள் கிட்டத்தட்ட 40 படங்களில் ஜோடியாக நடித்து அரிய சாதனை புரிந்தது. அவர்களுக்கு முன்னும் பின்னும் வேறு யாரும் அவ்வாறு, மிக நீண்ட வருடங்கள் இடை விடாமல் இணையாக வலம் வந்ததில்லை.

கவுரவத் தோற்றங்களில் அவர்கள் இருவரும் நடித்த ஒரே படம் வல்லவனுக்கு வல்லவன். மாடர்ன் தியேட்டர்ஸின் 100வது தயாரிப்பு என்கிற சிறப்புக்காக அதில் இடம் பெற்றனர். ‘பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்’ பாடல் காட்சியில் சாவித்ரி தோன்றினார். ஜெமினிக்கு மிக வித்யாசமான ஸ்டைலிஷான வில்லன் வேடம். வல்லவனுக்கு வல்லவன் 100 நாட்கள் ஓடியது.

சிவாஜியைப் போலவே நடிகையரில் ஒரே நாளில் தொடர்ந்து இரண்டு படங்கள் ரிலிசானது சாவித்ரிக்கு மாத்திரமே.1957 தமிழ்ப் புத்தாண்டுக்காக ஏப்ரல் 12ல் மாயா பஜார்- வணங்காமுடி, அதே ஆண்டின் தீபாவளித் திருநாளில் மகாதேவி- சவுபாக்கியவதி, 1962 தைத் திருநாளில் கொஞ்சும் சலங்கை-பார்த்தால் பசி தீரும். 1963 தீபாவளிக்கு கற்பகம் - பரிசு. 1964 பொங்கலுக்கு கர்ணன் - வேட்டைக்காரன். அவை அத்தனையும் பிரமாதமாக ஓடியவை என்பது கூடுதல் சிறப்பு.

‘‘வடக்கில் மீனாகுமாரி, வங்காளத்தில் சுசித்ரா சென், தென்னாட்டில் சாவித்ரி  இந்த மூன்று பேரையும் விடச் சிறப்பாக குணச்சித்திர வேடங்களில் யாரும் நடிக்க முடியாது’ என்று ஸ்கிரின் இதழில் சாந்தாராம் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சாவித்ரி, சுசித்ராசென்னை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் வங்காளத்தில் சுசித்ரா சென் ஏற்ற வேடங்களில் தமிழிலும் தெலுங்கிலும்  மேலும் மெருகூட்டி நடித்துப் புகழின் உச்சிக்குச் சென்றார் நடிகையர் திலகம்.

ஜகார்தா திரைப்பட விழாவில் ஜெமினிகணேசனும் சாவித்ரியும் கலந்து கொண்டார்கள். இந்தோனேஷியாவின் அதிபர் சுகர்னோ அவர்களை வரவேற்று  விருந்து வழங்கி கவுரவித்தார். சுகர்னோ அப்போது பாரதத்துடன் சுமுக உறவில் இல்லை.

சுகர்னோவுடன் சேர்ந்து நடனம் ஆடியதற்காகவும், அவரது அழைப்பை ஏற்றுச் சாப்பிட்டதற்காகவும் ஜெமினி- சாவித்ரி ஜோடிக்கு தமிழகத்தில் சிலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அத்தகைய நிலை ஜெமினி- சாவித்ரியின் வாழ்வில் ஏற்பட்டது அதுவே முதலும் கடைசியுமாகும்.   

6.3.1964ல்  காதல் மன்னன் - நடிகையர் திலகம் இருவரையும் ஹைதராபாத்தில், ஊர்வலமாக யானை மீது பவனி வரச் செய்து விழா கொண்டாடினார்கள் தெலுங்கு சகோதரர்கள்.1965ல் சிறந்த தம்பதிகள் போட்டியில் ஜெமினி-சாவித்ரிக்கு முதல் பரிசு கிடைத்தது.

தேசிய விருதுகள் வழங்கப்படும் போது முன்பெல்லாம், தயாரிப்பாளர், இயக்குநர் தவிர, சிறந்த படங்களில் பங்கேற்ற நாயகன் நாயகி ஆகியோரும் கவுரவம் பெறுவர். காரணம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்பது போன்ற தனித் தேர்வுகள் ஏற்படவில்லை.

பாரத், ஊர்வசி விருதுகள் முதன் முதலாக 1967ன்  சினிமாக்களுக்குத் தரப்பட்டன. சிறந்த பிராந்திய மொழிச் சித்திரம் ஒன்றுக்கு வெள்ளிப்பதக்கமும், மற்ற அற்புதமானப் படங்களுக்கு தரச் சான்றிதழும் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு இரண்டிலும் தொடர்ந்து சாவித்ரி ஒரு டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் நேருவிடம் விருதுகள் பெற்று அபூர்வ சாதனை புரிந்தார்.

1961ல் தமிழில் சாவித்ரி நடித்து மூன்று படங்கள் தில்லிக்குச் சென்றன. மூன்றுமே பரிசு பெற்றுத் திரும்பின.  பாவமன்னிப்பு  ‘தங்கப்பதக்கம்’ பெற வேண்டியது. ஏ.பீம்சிங் அதற்காக மெனக்கெட விரும்பாததால் சில ஓட்டுகளில் அதை இழந்தது. அதற்கு இந்தியாவிலேயே சிறந்த இரண்டாவது படம் என்கிற விருதும், கப்பலோட்டிய தமிழனுக்கு வெள்ளிப் பதக்கமும், பாசமலருக்கு சிறந்த படம் என்கிற தரச் சான்றிதழும் கிடைத்தது.

கப்பலோட்டிய தமிழனில்  சாப்பிடும் காட்சியில், ‘கண்ணம்மா தனது முறைப் பெண் என்பதை அறியாமல் கோபிப்பார்  மாடசாமி’. அக்காட்சியில் சாவித்ரிக்கு எவ்வாறு நடிப்பது என  ஜெமினி பாடம் நடத்தினார். சாவித்ரிக்கு வந்ததே கோபம்!

‘எனக்கு நீங்க ஆக்டிங் சொல்லித் தரீங்களா...?’ எனப் பரிமாறும் கரண்டியை எடுத்துத் தன் ஆசை நாயகன் மேல் வீசினார். யூனிட் மொத்தமும் அதைப் பார்த்து அதிர்ந்தது.

‘மாடசாமியும் அவன் காதலி கண்ணம்மாவும் இல்லாவிட்டால் கப்பலோட்டிய தமிழன் கரை தட்டிப் போகும் என்பதில் ஐயம் என்ன? சாவித்ரிக்கு ஈடு கொடுத்து ஜெமினி ஒரு படி உயர்ந்து விடுகிறார்.’என்கிற குமுதம் விமர்சனம் சாவித்ரியின் செய்கையை நியாயப்படுத்தியது.

பி.ஆர். பந்தலு குறித்து சாவித்ரி: ‘ கையில் வெற்றிலை பெட்டியுடன் பனியனோடு வருவார் டைரக்டர் பந்தலு. மளமளவென்று  ஷாட்களை எடுத்துத் தள்ளி விடுவார்.  துணிந்து முடிவெடுக்கும் தைரியசாலி. எனக்கு மாலை 4 மணிக்கு அவுட்டோர் போக வேண்டும். அன்று கப்பலோட்டிய தமிழனில் காற்று வெளியிடை கண்ணம்மா பாடலுக்கான ஷூட்டிங்.

முன்னதாகவே தெரிந்ததால், ‘கேன்சல் செய்து விடலாம். இன்னொரு நாள் வைத்துக் கொள்வோம்’ என்றேன்.‘பரவாயில்லையம்மா. நீ வந்து விடு.’ என்றார் விடாப்பிடியாக. 

எனக்கு நம்பிக்கையே இல்லை. சரியாக காலை எட்டு மணிக்குப் படப்பிடிப்பை ஆரம்பித்தவர், மதியம் ஒன்றரை மணிக்கே எல்லாவற்றையும் எடுத்து முடித்து என்னைக் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.’

1964ல் மட்டும் அவருக்கு ஐந்து அவார்டுகள். சிறந்த மாநில மொழிப் படமாக கை கொடுத்த தெய்வம் வெள்ளிப்பதக்கம் பெற்றது. கர்ணனுக்கு நற்சான்றிதழ்  வழங்கினர்.

சாவித்ரியின் 150 வது படம், ஜெமினியின் முதல் சதம் இரண்டும் ‘சீதா’ என்கிற ஒரே சினிமாவில் பூர்த்தியானது. ஜெமினிக்கு அதில் ஓர் தனி அதிசயம். அவரது முதல் படம் மிஸ். மாலினி, 100வது படம்  சீதா இரண்டுமே சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் வெளியானது.ஏனோ இரண்டுமே பெரிய வெற்றிச்சித்திரங்களாக அமையாமல் போனது.  இடைப்பட்ட 98 சினிமாக்களில் வெள்ளி விழா கொண்டாடியவை மூவேந்தர்களில் ஜெமினிக்கே அதிகம்.

இரண்டு கணேசன்களின் 100வது படங்களிலும் நாயகியாக நடித்த பெருமை சாவித்ரிக்கே உண்டு. அவை இரண்டுமே ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையில் வெளியானவை என்பது கூடுத ல் சிறப்பு.

சீதா  ரிலிசையொட்டி ஒரு பாராட்டு விழா ஜெமினி- சாவித்ரி ஜோடிக்கு சென்னை  ஸ்ரீநிவாஸ காந்தி நிலையத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள் நாவலர் நெடுஞ்செழியன், டி.கே. ஷண்முகம், ஏ.பி. நாகராஜன், ஏ.எல். ஸ்ரீனிவாசன் ஆகியோர். சபையில் ரசிகர்களின் கைத்தட்டல்களுக்கு மத்தியில் ஜெமினிகணேசனின் கால்களில் விழுந்து சாவித்ரி ஆசி பெற்றுக் கொண்டார்.

இந்தியும் சாவித்ரியும்!

இந்தியில் நடிக்க வேண்டும், வடக்கிலும் வாகை சூட வேண்டும்  என்ற ஆசை சாவித்ரிக்கு நிறையவே உண்டு. சுரையா அவரது அபிமான நட்சத்திரம். பத்மினி போல் சாவித்ரிக்கு இந்தியில்  கூடுதலாக ஈடுபாடு கொள்ள முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். 1. தமிழ், தெலுங்கு இரண்டிலும் சாவித்ரி பிசியாக நடித்துக் கொண்டிருந்தது. 2.சாவித்ரியின் திராவிடப் பெண்மை.

இன்றைக்கும் வடக்கில்  நடிகைகள் எல்லாருமே ஒல்லியாகக் காட்சியளிப்பார்கள். ஆனால் சாவித்ரியின் உருவம் அவ்விதத்தில் பொருத்தமாக அமையவில்லை. சாவித்ரிக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில்   இந்தியில் அவரது படங்கள் தொடர்ந்து நிறையவே ரீ மேக் ஆகி விழா கொண்டாடின.

(பாசமலர்) ராக்கி -  வஹீதா ரெஹ்மான்

(மிஸ்ஸியம்மா) மிஸ் மேரி - மீனாகுமாரி

காதல் கணவர் ஜெமினி கணேசன் துணை இருந்தும், சாவித்ரிக்கு ஜெமினி ஸ்டுடியோவில், தமிழ், தெலுங்கில் நாயகியாக வெற்றிக்கொடி கட்டும்  வாய்ப்பு வராமல் போனது. அவரது அந்த ஏக்கத்தை இந்தியில்  பூர்த்தி செய்தார் எஸ்.எஸ். வாசன்.

ஜெமினியின் ‘பால நாகம்மா’ தமிழில் காஞ்சன மாலா, புஷ்பவல்லி ஆகியோரின் நடிப்பில் வெளியானது. மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் அதே சினிமா இந்தியில் ‘பஹூத் -தின்-ஹூவே’வாக உருவானது.  அன்றைய உச்ச இந்தி நட்சத்திரம் மதுபாலா, காஞ்சனமாலாவின் வேடத்தில் சென்னையில் தங்கி நடித்தார். ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவி புஷ்பவல்லி நடித்த கவர்ச்சியான வில்லி வேடத்தில் மூன்றாவது துணைவியான சாவித்ரி நடிக்க வேண்டி வந்தது கலையின் விசித்திரம்!

தனது இந்தி அனுபவங்களைப் பற்றி சாவித்ரி-

‘பஹூத்-தின்- ஹூவே  ஜெமினியிலும் வாகினியிலும் தயாராயிற்று. எனக்கு இதில் மூன்று நடனப் பகுதிகள். அவற்றுக்கு மூன்று மாதம் ஒத்திகை. எஸ்.எஸ். வாசன் எதையும் பிரமாதமாகவே திட்டம் போடுவார். நினைத்ததை மிகச் சிறப்பாக  நடத்தி முடிக்கும் வரையில் விட மாட்டார்.எங்கள் எல்லாருடைய  உழைப்புக்கும் சமமாக அவரும் கூட இருந்து பாடுபடுவார். அப்படிப்பட்ட ஒரு தயாரிப்பாளரை, நான் அபூர்வமாகவே சந்தித்திருக்கிறேன்.

சில காரெக்டர்களை இந்தியில் நான் நடிக்க விரும்பியது உண்டு. ஆனால் அந்த அளவு வாய்ப்பு கிடைக்காத போது, அதே கதை தமிழில் எடுக்கப்பட்ட சமயத்தில் ஆசைப்பட்ட ரோலில் நடித்துத் திருப்தி அடைந்திருக்கிறேன். வேறு வழி?’

இந்தியில் சாவித்ரியோடு நடித்த பிரபலங்கள் தர்மேந்திரா, மெகமுத் எனச்  சிலரே.

----------------

சாவித்ரியால்  வாழ்வு பெற்றவர் கே.பாலாஜி. ஜெமினியின் அவ்வையார் படத்தில்  முருகனாக  அறிமுகமானார். 1950 முதலே ஜெமினியின் நட்பு வட்டத்துக்குள் வந்தவர்.

தொடர்ந்து வேஷம் கட்டும் வாய்ப்பின்றி நரசு ஸ்டுடியோவில்   தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார்.  அங்கு இந்தியில் அசோக்குமார் நடித்து சூப்பர்ஹிட்டான கிஸ்மத், பிரேம பாசம் என்ற டைட்டிலில் தயாரானது. அதில் நடிக்க வந்த ஜெமினி- சாவித்ரியுடனான சிநேக பந்தம் பாலாஜிக்கு மேலும் வலுப்பட்டது. தொடர்ந்து சினிமாவில் தலை காட்ட வேண்டும் என்கிற தீராத ஆர்வம். அதில் ஜெமினிகணேசனின் சிபாரிசில் சின்ன வேடம் கிடைத்தது.

அரிதார ஆசையால் நரசு ஸ்டுடியோ வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அந்த நொடியில் அவருக்கு  காதல் மன்னனிடமிருந்து சம்பள பாக்கியை கேட்டு, போன் வந்தது. ஏற்கனவே மனக் கொதிப்பில் இருந்த பாலாஜி,

அழுதவாறே ஜெமினி கணேசனிடம் தொலைபேசியில் தன் நிராதரவான நிலையைத் தெரிவித்தார். அடுத்து அவர் போய் நின்ற இடம் வாகினி ஸ்டுடியோ. அங்கு  மாதர் குல மாணிக்கம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

அதன் தயாரிப்பாளரிடம் உடனடியாக பாலாஜிக்கு ஒரு வாய்ப்பு தரச் சொன்னார் ஜெமினி கணேசன். ஜெமினி குறிப்பிட்டது அஞ்சலி தேவியின் அண்ணன் ரோல். தயாரிப்பாளர் அதற்கு ஏற்கனவே ஆள் வந்தாயிற்று. இனிமேல் மாற்ற முடியாது என்றார்.

உடனடியாக ஜெமினி ‘அப்ப என்னை மாத்திட்டு வேற ஹீரோவைப் போட்டுக்குங்க... என்றவாறே வெளியேற ஆரம்பித்தார். ‘சார் வேணாம் சார்...’ என்று பதறிய பட அதிபர் ஜெமினியின் சிபாரிசான கே. பாலாஜியை ஏற்றுக் கொண்டார்.

அதிலிருந்து கே. பாலாஜிக்கு நிறைய படங்கள் வரத் தொடங்கின. ஆனாலும் ஹீரோவாவது  கனவாகவே இருந்தது. காமெடி நடிகர் டி.எஸ். துரை ராஜ் தன் தயாரிப்பான ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’யில் கே. பாலாஜியை நாயகனாக்குவதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் விதித்த ஒரே நிபந்தனை சாவித்ரி அதில் நாயகியாக நடிக்கச் சம்மதிக்க வேண்டும். சாவித்ரி இருந்தால் போதும். படம் பிய்த்துக் கொண்டு ஓடும்.  உடனடியாக கஜானா நிறையும். நடிகையர் திலகத்தின் அபரிதமான செல்வாக்கை காசு பண்ண துரைராஜ் காய் நகர்த்தினார்.

தனக்கு இணையாக சாவித்ரியா...! நம்புவதற்கே சிரமமாக இருந்தது பாலாஜிக்கு. தவித்துப் போனார். தென் இந்தியாவின் ஒப்பற்ற நடிகையாக ஒளி வீசும் சாவித்ரியின் நட்சத்திர அந்தஸ்துக்கு முன் அவர் எம்மாத்திரம்!

சாவித்ரியின் இரக்கம் வழிந்தோடும் நேசம் பழகிய ஒன்று. ஆனால் அவரை வழி நடத்தும் ஜெமினி தடை ஏதும் சொல்லாமல் இருப்பாரா...! தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் தவிர, தெலுங்கில் என்.டி. ராமாராவ், ஏ. நாகேஸ்வர ராவ் ஆகிய ஜாம்பவான்களுடன் மட்டுமே நடித்து வரும் தன் நாயகியை, பாலாஜிக்கு ஜோடியாக்கினால் சாவித்ரியின்  இமேஜ் பாழாகும் என நினைப்பாரா...?  எல்லாம் கைகூடி வந்தாலும் சாவித்ரியின் கால்ஷீட் ஒத்து வருமா?

அவநம்பிக்கைகளின் அணி வகுப்பில் பாலாஜிக்கு வியர்த்தது. ஆனாலும் நம்ம சாவித்ரி மேடம் நல்ல பதிலையே  சொல்வார்  என்கிற உள்ளுணர்வு.

பாலாஜியின் ஒப்பனை எதிர்காலம் சாவித்ரியின் தாம்பூலம் பூசிய உதடுகளில் உறைந்து கிடந்தது.

‘டி.எஸ். துரைராஜ் என்னை ஹீரோவா பிரமோட் பண்ணிட்டார். பட் நீங்க  ஓகே சொன்னாத்தான் நான் நிஜமா ஹீரோ. இல்லன்னா ஜீரோ. உங்களோட ஜோடியா நடிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்களேன்.’

வேஷப் பிச்சை கேட்டுத் தங்கள் முற்றத்து வாசலில் நின்ற பாலாஜியின் பல்லாண்டு காலத் தவிப்புக்கு ஜெமினி-சாவித்ரி இருவரும் முற்றுப் புள்ளி வைத்தார்கள். ஜெமினி முழு மனதோடு அனுமதிக்க பாலாஜி, சாவித்ரியின் காதலனாக திரையில் டூயட் பாடி வலம் வந்தார். அவர்கள் சேர்ந்து நடித்த மற்ற படங்கள்  தூய உள்ளம், படித்தால் மட்டும் போதுமா.

பானை பிடித்தவள் பாக்கியசாலி படத்தில் திருச்சி லோக நாதனின் குரலில் ஒலித்த

‘புருஷன் வீட்டில் வாழப் போற பெண்ணே’ மன்மத ஆண்டின் முகூர்த்த நாள்களிலும் கல்யாண வீடுகளில் தவறாமல் கேட்கிறது.  சாவித்ரி காலத்தால் செய்த உதவியால் பாலாஜி சீக்கரத்தில் சின்ன பட்ஜெட் படங்களின் கதா நாயகனாக சக்கை போடு போட்டார்.

 2,000/- ரூபாய்க்கு பட்டாசு வெடித்து  முரசொலி மாறன் உள்ளிட்ட மிக முக்கிய 25 சகாக்களுடன் ஒவ்வொரு தீபாவளி ரிலிஸ் சினிமாவையும் அன்றே ராத்திரி ஆட்டம் பார்த்து, உல்லாச உலகம் உனக்கே சொந்தம் என உற்சாகமாக வலம் வந்தார். எல்லாம் சாவித்ரி மகிமை!        

கடைசி வரையில் நன்றி மறக்காதவர் கே. பாலாஜி. அவர்  சினிமா தயாரிப்பாளர் ஆனதும் ‘அண்ணாவின் ஆசை என்ற பெயரில் ஜெமினி- சாவித்ரியை வைத்துத் தன் முதல் ப்ராஜெக்டை உருவாக்கினார். பாலாஜியின் ஒரே நேரடி தமிழ் படைப்பு அது. மற்றவை யாவும் ரீமேக் ஃபிலிம்ஸ். அண்ணாவின் ஆசையில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தவர் பிரபல இந்தி நட்சத்திரம் அசோக் குமார். 

கே. பாலாஜியை மட்டும் அல்ல. சிவகுமாரையும் கை தூக்கி விட விரும்பியவர் நடிகையர் திலகம். இடது கையால் சுந்தரத் தெலுங்கில்  எழுதுவது சாவித்ரியின் சுபாவம்!  சிவகுமாரும் அப்படியே.

ஏவிஎம் ஸ்டுடியோ. 1971  ஜனவரி. வெயில் உறைக்காத தைத் திங்களின்  உச்சி நேரம். அருகருகே இருந்த தளங்களில் சாவித்ரியும் சிவகுமாரும் நடித்துக்கொண்டிருந்தார்கள். சாவித்ரியின்  கலை வண்ணத்தில் வியட்நாம் வீடு தெலுங்கு பேசியது. மடிசார் மாமியாக மெல்ல செட்டை விட்டு வெளியே வந்த சாவித்ரியின் கண்களில் சிவகுமார் பட்டார். மூத்த நட்சத்திரத்தைக் கண்டதும் உடனே கை கூப்பி வணக்கம் சொன்னார் பணிவின் பக்தர்.

சாவித்ரி-‘என்ன படம் ஷூட்டிங்? உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?’

சிவகுமார்- ‘திருமகள்’  நடந்துகிட்டு இருக்கு. என்னைத் தவிர  ஏவிஎம். ராஜன், லட்சுமி, ஜெமினி மாமா, பத்மினி, மேஜர், எஸ். வரலட்சுமின்னு ஏகப்பட்ட ஸ்டார்ஸ்.’

‘எத்தனை நாள்கள் தபால் தலை அளவில் விளம்பரங்களில் இடம் பெறுவது, எப்போது பிரபல ஹீரோ ஆவோம்’ என்கிற  மெல்லிய தாபத்தின் தடயங்கள் சிவகுமாரின் வார்த்தைகளில்.

சாவித்ரி - ‘சிவகுமார், உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?’

சிவகுமார்- ‘தெரியாது.’

சாவித்ரி- ’தெலுங்கு படியுங்களேன். தெலுங்கு ஃபிலிம்ஸ்ல நிறைய நல்ல சான்ஸ்  வாங்கித் தரேன்.’

சிவகுமார் பதில் சொல்லாமல் புன்னகைத்தார்.  தமிழில் முதலில் நினைத்ததை சாதித்து விட்டு மற்ற மொழிகளைப் பற்றி யோசிப்போம். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்கிற குழப்பம்  வேண்டாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது.

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com