17. டைரக்டர் சாவித்ரி!

‘An Idle mind is a devils workshop’ மிகவும் சுறுசுறுப்பாக நடித்து வந்தவளுக்கு திடீரென்று ஓர் ஓய்வு ஏற்பட்டது. அது நீடிக்கக் கூடாது என்று நான் தான் பிடிவாதம்

‘An Idle mind is a devils workshop’  மிகவும் சுறுசுறுப்பாக  நடித்து வந்தவளுக்கு திடீரென்று ஓர் ஓய்வு ஏற்பட்டது. அது நீடிக்கக் கூடாது என்று  நான் தான் பிடிவாதம் செய்து, படங்களை டைரக்ட் செய்யுமாறு தூண்டினேன்.’ அரை மனதுடன் சாவித்ரி சம்மதித்தாள்.

 ‘என்னை இப்படி மாட்டி விட்டுவிட்டீர்களே... எனக்கு இந்த டைரக்ஷன் பொறுப்பு மிகச் சிரமமாகவும் தொல்லையாகவும்  இருக்கிறது’ என்று அங்கலாயித்தாள்.

‘கொஞ்சம் பொறுமையாக இரு. பலன் கிடைக்கும். என்றேன். ‘சின்னாரி பாப்பலு’ வெளியானது. அவளுக்கு நல்ல பெயர். மகிழ்ச்சியில்  நன்றியுடன் என்னை நோக்கினாள். சென்னை சினிமா ரசிகர் சங்கம், சிறந்த படம், சிறந்த இயக்குநர் என்று சாவித்ரியைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது. ’ ஜெமினி கணேசன்.

பத்திரிகைகளில்  டைரக்ஷன் பொறுப்பு குறித்து, சாவித்ரி அவ்வப்போது பேட்டிகள் கொடுத்தார். நடிகையர் திலகம் ஓய்ந்து விடவில்லை என்பதைச் சொல்ல, அத்தகைய நேர் காணல்கள் உதவின. சாவித்ரிக்கும் இனம் புரியாத மன ஆறுதல் கிடைத்தது.

‘நீங்கள் டைரக்டர் ஆக என்ன காரணம்? ’

‘விதவிதமான வேடங்களில் நடித்த போது உள்ளூர எனக்கு ஏற்பட்ட ஓர் உணர்வு அது. புதுப் புது குணாதிசயங்களை  திரையில் சமர்ப்பிக்கவும், எனது சுவைக்கேற்ற படங்களை உருவாக்கவும் ஆசை வந்தது. நான் டைரக்டர் ஆவேன் என்று ஒரு நாளும் நினைத்தது கிடையாது. எனது தோழிகளும் என்னை டைரக்ஷன் துறையில் ஈடுபடச் சொன்னார்கள். முதலில் மறுத்தேன்.  ஆனால் நான் கண்டிப்பாக டைரக்டர் ஆகவேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்திய போது என்னால் மறுக்க முடியவில்லை.

முதல் இயக்கம் சின்னாரி பாப்புலு. தமிழில் குழந்தை உள்ளம். தெலுங்குப் பட இயக்குநர் மதுசூதனராவ் அவர்களின் மனைவி வி. சரோஜினி எனது நெருங்கிய சிநேகிதி.

அவர் எழுதிய கதை சின்னாரி பாப்புலு. அதை இயக்க என்னைத் தூண்டியவரும் அவரே. சின்னாரி பாப்புலுவில் எனது அசோசியேட்டாகவும் பணியாற்றினார் சரோஜினி. உதவி இயக்குநர் - மோகன குமாரி. இசை - பின்னணிப் பாடகி பி. லீலா.  நடனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் நடிகை ராஜ சுலோசனா. தென் இந்தியாவில் மகளிர் மட்டும் இணைந்து பங்கேற்ற முதல் சினிமா அது!

எங்களது முயற்சியால் உருவாகும் முதல் படத்தில் கிடைக்கும் லாபத்தை,  ரிடையர்டு ஆர்ட்டிஸ்டுகளுக்கு உதவிப் பணமாக வழங்க அறக்கட்டளை ஒன்றையும் அமைத்தோம். இரண்டு பெண்கள் சேர்ந்தாலே கலகம் என்பார்கள். நாங்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டு வெற்றி பெற்றோம்.

ரோஜாரமணி, கண்ணே பாப்பா புகழ் பேபி ராணியின் தங்கை சாந்தி ஆகியோருடன் எனது டைரக்டர் வேலை ஆரம்பம் ஆனது. சோதனையாக, முதல் ஷாட்டிலேயே சீறும் பாம்பைப் படமாக்கும் படபடப்பான வேலை.

பாம்பு என்றாலே எனக்கு அலர்ஜி. இருந்தாலும் டைரக்டர் ஆயிற்றே. சகித்துக் கொண்டேன்.ரோஜாரமணிக்கு  நடிப்பில் கொஞ்சம் அனுபவம் உண்டு. ஆனால் என்னைப் போல் சாந்தியும் கத்துக்குட்டி. இரு குழந்தைகளுக்கும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கக் கற்றுக் கொடுத்தேன்.

ரஷ்  பார்த்ததில் திருப்தியாக இருந்தது. படம் முழுதாக முடியும் வரை யாருக்கும் போட்டுக்  காட்டவில்லை. எல்லாப் பணிகளும் பூர்த்தியான பின்பு முதலில் வாகினி அதிபர் - சக்ரபாணிக்கு திரையிட்டுக் காட்டினோம். சக்ரபாணி சிறந்த எழுத்தாளர். கதையை மேம்படுத்த சில யோசனைகளைக் கூறினார்.

எம்.ஜி.ஆர்.- சிவாஜி இருவருமே சின்னாரி பாப்புலு பார்த்தார்கள்.

‘அம்மாடி ரொம்ப நல்லா டைரக்ட் பண்ணி இருக்கே. கதையில கொஞ்சம் தொய்வு விழுது. இருந்தாலும் படம் வெரி குட். உன் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துகள்’ என ஆசி கூறினார் நடிகர்திலகம்.

சின்னாரி பாப்புலுவில் சவுகார்ஜானகி- ஜமுனா இருவரும் நடித்தார்கள். மோஸ்ட் கோவாபரேட்டிவ் ஆர்ட்டிஸ்ட். நடிகையான நான் முதன் முதலாக இயக்குகிறேன் என அற்பமாக நினைக்காமல், ஒரு டைரக்டருக்குரிய மரியாதையை, கவுரவத்தை எனக்கு வழங்கினர்.

பானுமதிக்கு அடுத்து படங்களை டைரக்ட் செய்ய முன் வந்த நடிகை நான் தான். குழந்தை உள்ளம், மாத்ரு தேவதா, சின்னாரி பாப்புலு ஆகிய படங்களைத் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கினேன்.

 நீர்க்குமிழியை தெலுங்கில் டைரக்ட் செய்து, அதில் டாக்டர் வேடத்தில் (தமிழில் சவுகார் ஜானகி நடித்தது)  வந்தேன். படத்தின்  பெயர்  சிரஞ்சீவி.

 ‘நீங்கள் இயக்கியதில் உங்களுக்குப் பெயர் வாங்கித் தந்த படம் எது? ’

‘மாத்ரு தேவதா, சிரஞ்சீவி முதலியன. மாத்ரு தேவதா என்.டி.ராமாராவ்- சந்திரகலா நடித்து பிரமாதமாக ஓடியது. சிரஞ்சீவி நான் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. டைரக்டர் என்ற முறையில் எனக்கு நல்ல பெயர்  கிடைத்தது.

‘இயக்கத்தில் உங்களுக்கென்று தனி பாணி இருக்கிறதா? ’

‘கதை, கதாபாத்திரத்துக்கேற்ற நடிகர் நடிகைகள் தேர்வில் அதிகக் கவனம் செலுத்துவேன். அதில் அடுத்தவர் குறுக்கிட அனுமதிக்க மாட்டேன். பிராப்தம் படத்தில் சந்திர கலாவைத் தேர்வு செய்தேன். முதலில் அதற்கு எதிர்ப்பு இருந்தது. சந்திரகலாவின் நடிப்பைப் பார்த்து அனைவருக்கும் இப்போது திருப்தி. ’

‘டைரக்ஷனில் உங்களுக்கு மன நிறைவு கிடைத்து விட்டதா? ’

‘திருப்தி என்பது ஒருவிஷயத்தில் கரை கண்டால் மட்டுமே ஏற்படும். நடிப்பிலும் சரி இயக்கத்திலும் சரி நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கின்றன. ’

‘உங்களின் படைப்புப் பணியில் நீங்கள் உணரும் கஷ்ட நஷ்டங்கள் என்னென்ன?’

‘பட இயக்கம் என்பது சிரமமான காரியம். கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டிய ரொம்பப் பொறுப்பான விஷயம். புதுப்புது கடமைகள் என்னைச் சூழ்ந்ததை மனமார உணர்ந்தேன். ’

திரைக்கதையில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கேரக்டர்களை அனலைஸ் செய்யும் போது என் நடிப்புத் திறனும் விருத்தியாகிறது.

அனுபவமுள்ள நடிகையான எனக்கு இயக்குநர் உத்தியோகம் புதுமையாகத் தோன்றவில்லை. நான் ஒரு சினிமா டைரக்ட் செய்ய ஒத்துக் கொண்டால் நாலு படங்களில் நடிக்கிற சான்ஸ் போய் விடுகிறது! ’

‘எப்படிப்பட்ட கதைகளைக் கையாள  ஆர்வம் காட்டுகிறீர்கள்? ’

‘பெண்ணினத்தின் துயரங்களையும் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் படமாக்க அதிக விருப்பம். தி விசிட் இங்கிலீஷ்  ஃபிலிம் பார்த்திருக்கிறீர்களா...?

 ஆண்கள் பெண்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதைப் பற்றிய கதை அது. அதில் வரும் இன்கிரிட் பெர்க்மென் ரோல் என்னை ரொம்பவும் கவர்ந்தது.’

சாவித்ரி நடிகையாகவும் டைரக்டராகவும் கொஞ்சமும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத மனுஷியாக வெற்றி வலம் வந்தவர். ஓர் இயக்குநராக அவருக்கு முதல் தமிழ்ப்படம் குழந்தை உள்ளம்.அதன் அவுட்டோர் ஒகனேக்கலில் நடைபெற்றது.

 மலையுச்சிக்குச் செல்வதற்கு காமிரா மேன் தயங்கி நிற்க, சாவித்ரியே காமிராவை தூக்கிக்கொண்டு காவிரியில் இறங்கி நடந்தார். காதல் மன்னன் ஹீரோ.

தன் மனைவிக்கு உதவி செய்யும் ஆர்வத்தில் அவர் ஏதேதோ உத்திகளைக் கூறத் தொடங்க,

‘மிஸ்டர் கணேஷ் இங்கே நான் தான் டைரக்டர். நான் சொல்கிற மாதிரிதான் எல்லாரும் நடக்க வேண்டும். எனக்கு யாரும் யோசனை சொல்லத் தேவையில்லை. ’ என்றார் கம்பீரமாக.

 அதைக் கேட்டு ஆர். எஸ். மனோகர் பிரமித்து விட்டார்.  நடிகையர் திலகத்தின் வல்லமை ஒகனேக்கல் அருவி போல் வானைத் தொட்டது. ‘நடிக மன்னன்’ ஜெமினி கணேஷ் டைரக்டரின் உத்தரவுக்குப் பின்னர் கப்சிப் ஆனார்.

பிரசாத் ஸ்டுடியோவில் பிராப்தம் ஷூட்டிங். கல்லூரி அறை செட்.  ஏராளமாக துணை நடிகர்கள் மாணவர்களாக கூடி  நின்றனர். ஸ்ரீகாந்த்துக்கு முக்கிய வேடம். அவர் செட்டுக்கு வெளியேச்  சற்றுத் தள்ளி கோல்ட் பிளேக் சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தார். நடிப்பிலும் இயக்கத்திலும் நடிகையர் திலகத்துடன் அவருக்கு பிராப்தம் முதல் அனுபவம்.

அரிதாரம் பூசிய கலைஞராக ஆன பின்னும், அமெரிக்க தூதரகத்தில் தொடர்ந்து  பணியாற்றி வந்தவர் ஸ்ரீகாந்த். அதிகம் பிரபலமாகாத சூழலில்  அமெரிக்கன் எம்பஸிக்கு அடிக்கடி, சினிமா பார்க்க வரும் சாவித்ரியை  அநேக முறைகள் சந்தித்திருக்கிறார்.

 பள்ளிக் கூட மாணவராக தேவதாஸில் சாவித்ரியின் நடிப்பைப் பார்த்து வியந்து போனவர் ஸ்ரீகாந்த். சாவித்ரியிடம் அதன் பிரமிப்பைச் சொல்ல சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

ஷாட் எடுக்க நேரமாகியும் செட்டில் ஸ்ரீகாந்த் இல்லாததால், ‘எங்கே ஆர்ட்டிஸ்ட்ட  காணோம்... ’ என்று  தேடிக் கொண்டு வெளியேயே வந்து விட்டார் சாவித்ரி.

 அதனைச் சற்றும் எதிர்பாராத ஸ்ரீகாந்த், ‘அத்தனை பெரிய கூட்டத்திலேயும் நான் இல்லாததைக் கண்டு பிடிச்சிட்டீங்களே..., யாராவது ஒரு அசிஸ்டென்டை அனுப்பாம நீங்களே நேர்ல வந்துட்டீங்களே...! ’

என்று ஆச்சர்யங்களை அடுக்கினார்.

ஸ்ரீதர் இந்தியத்திரை உலகின் பிதாமகன்களில் முக்கியமானவர். டைரக்டர் சாவித்ரியின் ஆளுமை குறித்து ஸ்ரீதர்:

‘ஒரு தடவை நான் சாவித்ரி டைரக்ட் செய்து கொண்டிருந்த செட்டுக்குள் நுழைந்தேன்.

அடேயப்பா...  என்ன சுறுசுறுப்பு!  காமிராவுக்கு கோணங்கள் பார்ப்பது, நடிகர் நடிகைகள் எப்படி நடக்க வேண்டும், எப்படி வசனம் பேச வேண்டும் என்று சொல்லித் தருவது- இவைகளையெல்லாம் மிகவும் கச்சிதமாகத்  தான் நினைத்தவாறு படமாக்கும் வரையில் அவர் விடவில்லை.

பிராப்தம் - சாவித்ரி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால் சாவித்ரியின் டைரக்ஷன் அதில் மிக  நன்றாகவே இருந்தது. ’

1971ல்  பொங்கல் தொடங்கி மாதா மாதம் முழுநிலவும், அமாவாசையும் வருகிறதோ இல்லையோ சிவாஜி  நடித்த படங்கள் தவறாமல் வெளி வந்தன.

ஜனவரியில் இரு துருவம், பிப்ரவரியில் தங்கைக்காக, மார்ச்சில் அருணோதயம் - குலமா குணமா, ஏப்ரலில் பிராப்தம் - சுமதி என் சுந்தரி.

பிராப்தமும் சுமதி என் சுந்தரியும் ஒரே நாளில்  தமிழ்ப்புத்தாண்டு அன்று  ரிலீஸ் ஆனவை. பிராப்தம் -கருப்பு வெள்ளை.  தெலுங்கு ரீமேக். குழப்பமான பூர்வஜென்மக் கதை.

‘சுமதி என் சுந்தரி’ ஜொலிஜொலித்தது. ஏறக்குறைய நடிகர் திலகத்தின் சொந்தப்படம் போன்றது. அவரது மூத்த மகன் பெயரில்,  ‘ராம்குமார் பிலிம்ஸ்’  பேனரில் தயாரானது.

அனைத்து  ரசிகர்களும்  பிராப்தம் படத்தை விட, சுமதி என் சுந்தரியை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்தார்கள். அதற்கு மிக முக்கியமான காரணத்தை பத்திரிகை விமர்சனங்களில்  காணலாம்.

‘இந்தப் படத்தைப் பொருத்தவரை சிவாஜியையும் ஜெயலலிதாவையும் பற்றித் தனித்தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லாமல் இருவரும் ரொம்பவும் இணைந்து நடிக்கிறார்கள்.

அதுவும் குறிப்பாக ஓர் இடத்தில் சிவாஜி ஒரு நாவல் படிக்க, ஜெயலலிதா அதைப் பிடுங்கிக் கொள்ள  சிவாஜி மேல் விழ, சிவாஜி ஜெயலலிதாவைக் கட்டியணைத்துத் தழுவ அமர்க்களம் தான். ’- ஆனந்த விகடன் (16.5.1971).

‘சிவாஜியும் ஜெயலலிதாவும் அடிக்கடி தழுவிக் கொள்கிறார்கள். முகத்தோடு முகம் வைத்து இழைகிறார்கள். சமயங்களில் இவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இளம் உள்ளங்களைச் சுண்டி இழுக்கும் டூயட்ஸ். -  ‘ஒரு தரம்’ பாடல்,  படத்துக்கு அதுவே சிபாரிசோ? ’ தினமணி கதிர் - ( 30.4.1971)

-------------------விளைவு  சாவித்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாவித்ரி இயக்கிய பிராப்தம், மூகமனசுலு ஆகவோ, மிலன் மாதிரியோ வாகை சூடவில்லை. நடிகையர் திலகத்தை நஷ்டக் கணக்கு பார்க்கச் சொல்லி, துயர சமுத்திரத்தில்  மூழ்கடித்தது.

‘சாவித்ரியைக் கல்லூரி மாணவி என்று ஏற்றுக் கொள்வது சற்று கடினமான காரியம். பிந்தைய கட்டங்களில் அநாயாசமாக நடித்திருக்கிறார்.

சிவாஜியிடம் பாட்டு கற்றுக் கொள்ளும் போதும், சிவாஜியைப் பாடச் சொல்லி கண்களாலேயே அனுமதி வழங்கும் போதும் சாவித்ரி நடிப்பு நெஞ்சை நிறைக்கிறது.

எளிமையும் வெள்ளை மனமும் கொண்ட கண்ணன் பாத்திரத்துக்கு சிவாஜியை விட்டால், வேறு யார் கிடைக்கப்போகிறார்களாம்...?

சாவித்ரியிடம் அவர் சின்னம்மா என்று குழைவது, ஸ்ரீகாந்துக்கு தேங்க்ஸ் சொல்வது,  ஸ்ரீகாந்தை சாவித்ரிக்காக அறைந்து விட்டு வருவது...,  அப்புறம் சிவாஜி, சாவித்ரியை சாப்பிட வைக்கும் கட்டத்தை இலேசில் மறக்க முடியுமா?

படம் வெளி வரும் முன்பே பிரபலமாகி விட்ட பாடல்கள். அருமையான பின்னணி இசை.

சாவித்ரி டைரக்ட் செய்திருக்கும் தமிழ்ப்படம். இது அவருக்குத்தான் பெருமையே தவிர, படத்துக்கு அல்ல. ’-  பிரபல வார இதழின்,  பிராப்தம்  சினிமா  விமர்சனம்.

‘சாவித்ரி அம்மாவும் எங்க அய்யாவும் டாப்பிலே ஜோடியாக நின்னாங்க. சிவாஜி சார் கூட சாவித்ரி அம்மாவைப் பார்த்து பயப்பட்ட நாள் உண்டு. சாவித்ரி அம்மா யாருக்காகவும் பணிய மாட்டாங்க. ஜெமினி சாரை யாராவது ஏதாவது சொன்னா சும்மா விட மாட்டாங்க. சண்டைக்குப் போயிடுவாங்க.’

அப்படியோர் கருத்தைச் சொல்லியிருப்பவர் யாரோ அல்ல. அல்லும் பகலும் ஜெமினி - சாவித்ரியின் நிழலாக வாழ்ந்த காதல் மன்னனின் நிரந்தரமான  கார் டிரைவர் சுந்தரம்.

1971 மே மற்றும் ஜூன் மாதங்களில் சிவாஜி சினிமா ஏதும் ரிலிஸ் ஆகவில்லை. ஜூலையில்  150வது படமாக சவாலே சமாளி வெற்றிச் சித்திரமும், அதைத் தொடர்ந்து தேனும் பாலும் படமும்  திரைக்கு வந்தன.

‘பிராப்தம் படத்துடன் போட்டி போடுவது போல் நடிகர் திலகம்,  சுமதி என் சுந்தரியை ஒரே நாளில் ஏன் களம் இறக்க வேண்டும்?  அவர் நினைத்திருந்தால் அதை மே அல்லது ஜூன் மாதம் வெளியிட்டிருக்கலாம். பிராப்தம் படு தோல்வி அடைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

பெண்கள் கூட்டம் முந்தியடித்துக் கொண்டு போய்  பிராப்தம் படத்தை ஓரளவேணும் ஓட வைத்திருக்கும். அதற்கான வாய்ப்பையே கணேசன் தரப்பு தரவில்லை. ஏன் ?   

சமயம் பார்த்து ‘அன்னை இல்லம்’ சாவித்ரியை கவிழ்த்து விட்டு விட்டது! ’

கணேசனின்  எதிரிகள் கிளப்பிய குற்றச்சாட்டுகள் அவை.

ஆனால் சாவித்ரி  எதையும் சட்டைசெய்யவில்லை. அவர் வீழ்ந்த போதும் அண்ணனைப் பாராட்டும் பார்வையாளராக, ‘சவாலே சமாளி’  100வது நாள் விழாவில் பெருந்தன்மையுடன் பங்கேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com