பானுமதி: 7. எம்.ஜி.ஆர். - பானுமதி சண்ட!

‘பானுமதியைத் தவிர எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமான ஜதை வேறு யாரும் இல்லை’ என்று சகலரும் நினைத்தார்கள்.

வசூலை வாரிக் குவிப்பதில் வணிக ரீதியாக முன்னிலை வகித்தது எம்.ஜி.ஆர்.- பானுமதி ஜோடி. இருவரும் இணைந்து நடிப்பதாக, ஸ்வஸ்திக் பிலிம்ஸ் மருதுபாண்டியன், பவானி, ராஜா தேசிங்கு போன்ற புதிய படங்களின் அறிவிப்புகள், பத்திரிகைகளில் வெளியான வண்ணம் இருந்தன.

‘பானுமதியைத் தவிர எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமான ஜதை வேறு யாரும் இல்லை’ என்று சகலரும் நினைத்தார்கள்.

சொந்தப் படத் தயாரிப்பில் பானுமதி - எம்.ஜி.ஆர். நேரிடையாக மோதும் சூழ்நிலை ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஏதும் பிரச்னையோ, மனக்கசப்போ வராமல் பானுமதி சாமர்த்தியமாகத் தடுத்தார். எம்.ஜி.ஆரிடம் நேரிடையாகப் பேசினார்.

அதைப் பற்றி ‘வாத்தியாரே’ எழுதியுள்ளவை -

‘சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபா’ படத்தில் நானும் திருமதி பானுமதி அவர்களும் நடித்துக்கொண்டிருந்தோம். அப்போது நாடோடி மன்னன் விளம்பரம் வெளியிடப்பட்டது.

இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு, பரணி பிக்சர்ஸாரின் விளம்பரமும் வந்தது. அன்று, படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. திருமதி பானுமதி அவர்கள் சொன்னார்கள் –

‘நாங்கள் எடுக்கும் கதையையே (‘ஜெண்டாவின் கைதி’ என்ற ஆங்கிலக் கதையின் தழுவல்) நீங்களும் எடுக்கப்போகிறீர்களாமே...!

நமக்குள் போட்டி வேண்டாம். உங்கள் கதையை மாற்றிக்கொள்ளுங்கள். நாங்கள் பல மாதங்களாகச் செலவு செய்து எல்லாமே தயாராகிவிட்டன’ என்று.

நான் சொன்னேன் -

‘நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த உருவம் இது. எனது வாழ்வில் ஒரு திருப்பத்தை விரும்பி, அதற்காக இக்கதையை தேர்ந்தெடுத்தேன். அதிலும் நானே டைரக்டர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று.

இது பற்றி மேலும் பேச்சு நடந்தது. முடிவாகச் சொன்னேன் -

‘நான் ஜெண்டாவின் கைதி என்ற கதையில் உள்ள ‘மன்னனாக மாற்றப்படும் காட்சி’யை மட்டும் வைத்துக்கொள்ளப்போகிறேன். மற்றவை எல்லாமே வேறாக இருக்கும்.

உங்களுக்கும் கதையை மாற்ற முடியாது இருக்குமானால், நீங்களும் எடுங்கள். நமக்குள் போட்டா போட்டியே வராது.

உங்கள் கதை ‘ஜெண்டாவின் கைதியின் நேர்ப்பதிப்பு. எனது கதை வேறு’ என்று சொன்னேன்.

‘உண்மையில் எனக்கும் குழப்பம்; அவர்களுக்கும் அதே நிலை. சில நாள்களுக்குப் பிறகு சொன்னார்கள் -

‘நாங்கள் அந்தக் கதையை எடுப்பதை நிறுத்திவிட்டோம். சந்தேகம் இல்லாமல் தாங்கள் படத்தை எடுக்கலாம்’ என்று. நன்றி தெரிவித்தேன், உண்மையான உள்ளத்துடன்.

‘நாடோடி மன்னனில்’ தனக்கு நடிக்கும் வாய்ப்பு இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை அப்போது.

எந்த நலத்தையும் எதிர்பாராமல் பானுமதி விட்டுக்கொடுத்தார்கள் என்பது உண்மை. அவர்களின் பெருந்தன்மையை எவ்வளவு போற்றினாலும் போதாது’.

*

பானுமதியால் நம்பமுடியவில்லை. எம்.ஜி.ஆரின் சொந்தப் படத்தில் அவர் ஹீரோயின் என்பதை. காரணம், இருவருமே தங்கள் சிம்மாசனத்தை எப்போதும், எதற்காகவும், யாருக்காகவும் கடுகு அளவுக்குகூட விட்டுத்தராதவர்கள்.

‘நான் எங்கு தொழில் செய்தாலும், சுதந்தரமாக இருக்கவும், தொழில் செய்யவும் விரும்புகிறவன். அதே குணத்தைப் படைத்தவர் திருமதி பானுமதி அவர்கள். நாங்கள் இருவருமே விட்டுக்கொடுக்காத மனோபாவம் உள்ளவர்கள்’ - எம்.ஜி.ஆர்.

டைரக்டர் கே. சுப்ரமணியத்தின் மேற்பார்வையில், நாடோடி மன்னன் ஷூட்டிங் தொடங்கியது.

பொதுவாக, பானுமதி சினிமாவில் பாட வேண்டுமானால் அவரைத் தேடிச் சென்று, ஒத்திகை பார்ப்பது வழக்கம்.

‘சம்மதமா... நான் உங்க கூட வர சம்மதமா...?’ பாடலுக்கு, தன் வீட்டில் ரிகர்ஸல் வைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

அதுவரையில், எந்த நடிகரின் வீட்டுப்படியையும் மிதிக்காதவர் பானுமதி. லாயிட்ஸ் ரோட்டுக்கு வந்து பாடிவிட்டுப் போனார்.

எம்.ஜி.ஆரின் எதிரிகளே மலைத்துவிட்டார்கள். புது ஜோரில் இதெல்லாம் சகஜம். இந்த நட்பும் ஒத்துழைப்பும் எத்தனை நாள்?

படம் முடிகிறவரையில், பானுமதி நிச்சயம் நடிக்கமாட்டார் என்று ஆருடம் சொன்னார்கள்.

எம்.ஜி.ஆரின் நொடிக்கு நொடி நிறம் மாறும், நிலையற்ற காட்சி அமைப்புகளால், பானுமதிக்கு நிம்மதி போய்விட்டது.

நடனம் ஆடுவதும் பானுமதிக்கு ஒத்துவராது. நாடோடி மன்னனில் அவருக்கு டான்ஸ் சீக்வன்ஸ் உண்டு. பானுமதி நேரடியாக எம்.ஜி.ஆரிடமே கேட்டுவிட்டார்.

‘எனக்கு நாட்டியம் சரிப்பட்டு வராதுன்னு உங்களுக்குத் தெரியுமே. அப்புறம் ஏன் அப்படி ஒரு சீன்?’

எம்.ஜி.ஆர். பதில் சொல்லவில்லை.

இன்னொரு தினம். சீன் சூப்பராக வரவேண்டி ஒரு டைரக்டராக பானுமதியை வேலை வாங்கினார். சுனாமியானார் நாயகி. வார்த்தைகள் தடித்துத் தகராறு ஆனது.

‘இதோ பாருங்க எம்.ஜி.ஆர்., ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப எத்தனை முறை எடுப்பீங்க. இவ்வளவு நாளா சொல்ல வேண்டாம்னு இருந்தேன். எனக்கும் டைரக்ஷன் தெரியும். கே. சுப்ரமணியம் சாரை நிறுத்தினது தப்பு. அவர் ஒரு பெரிய டைரக்டர். அவர் போனதுக்கு அப்புறம் உங்க அசிஸ்டென்ட்ஸ் எங்கிட்ட வந்து டெய்லி புதுப்புது கதை சொல்றாங்க.

நீங்க என்ன எடுக்கறீங்கன்னு உங்களுக்கே தெரியல. நீங்களே இந்தப் படத்தோட ப்ரொடியூசருங்கறதால, எல்லா ஆர்ட்டிஸ்டும் உங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க. நீங்க அதை ஒங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க.

முதல்ல ஒழுங்கா கதையை முடிவு பண்ணுங்க. நான் கொடுத்த கால்ஷீட் முக்கால்வாசி முடிஞ்சுபோச்சு. இனிமேயாவது வேற டைரக்டரை போடுங்க. நான் தொடர்ந்து நடிச்சுத் தரேன். இன்னிக்கு எனக்கு மூடு போயிடுச்சு. நான் கிளம்பறேன். ஸாரி...

‘எம்.ஜி.ஆர்., பானுமதி மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். பானுமதி இவ்வளவு தூரத்துக்குப் போவார் என எதிர்பார்க்கவில்லை. தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் உத்தேசம் எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கிடையாது. அவர் சுதந்தர சுயம்பு.

‘என் டைரக்ஷன்ல உங்களுக்கு நடிக்க இஷ்டம் இருந்தா நடிங்க. இல்லேன்னா விட்டுடுங்க’.

பானுமதிக்குள் தன்மானம் கூச்சல் போட்டது.

‘மிஸ்டர் ராமச்சந்திரன், நானும் அதைத்தான் சொல்றேன். குட் பை. வரேன்’.

பானுமதி தொடர்ந்து நடிக்காமல் போனாலும், அதை மனத்தில் கொள்ளாமல், எம்.ஜி.ஆர். மிகுந்த பெருந்தன்மையுடன் அவருக்காகப் பேசிய சம்பளம் முழுவதையும் செட்டில் செய்துவிட்டார்.

பானுமதி அதை ஜானகிக்குத் திருப்பி அனுப்பினார். கூடவே ஒரு கடிதமும்...

‘அன்புள்ள வி.என். ஜானகிக்கு, பானுமதி எழுதிக்கொண்டது. உங்கள் கணவரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த செக்கை நான் ஏற்றுக்கொள்வதற்கு இல்லை. மன்னிக்கவும்’.

பானுமதி, இடைவேளையோடு நம்பியாரின் கத்தி வீச்சில் இறந்துவிடுவார். அதை, அம்பு பட்ட மான் செத்துக்கிடப்பதாக ஒரு ஓவியம் மூலம் எம்.ஜி.ஆர். காட்சிப்படுத்தினார்.

ஆனந்தவிகடன், நாடோடி மன்னன் சினிமா விமர்சனத்தில் பானுமதியைப் பாராட்டியது.

‘எம்.ஜி.ஆரும் பானுமதியும் முதல்ல மீட் பண்றதே காமிக்தான். பானுமதி, சொந்தக்குரலிலே ஒரு பாட்டுப் பாடிச்சு அண்ணே! தேனாட்டம் இருந்தது. பாடி ஆடி வேடிக்கை காட்டி பாதியிலே தியாகம் செய்துடறாங்க. பாவம்’.

‘நாடோடி மன்னன் வெற்றியில் பானுமதிக்கும் உரிய பங்குண்டு!’ என்று எம்.ஜி.ஆர்., அவரை மனமாரப் பாராட்டி, அதன் வெற்றி விழா மலரில் எழுதினார்.

‘எம்.ஜி.ஆர். தானே டைரக்ட் செய்து, தன் சொந்தத்தில் எடுக்கும் இப்படம் ஒழுங்காக முற்றுப்பெறுமா? நாடோடி மன்னன் வெளிவரும்போது பானுமதி அவர்கள் படத்தில் இருப்பார்களா...?

என்றெல்லாம் சந்தேகப்பட்டவர்கள், (அதைவிட எனது வீழ்ச்சியைக் காண ஆசைப்பட்டவர்கள் என்றால் பொருந்தும்) வெட்கித் தலை குனியும்படி பானுமதி அவர்கள் ஒத்துழைத்ததோடு மட்டுமல்ல, தான் ஏற்ற ‘மதனா’ என்கிற பாத்திரத்தை வேறு எவரும் இவர்போல் திறமையாக நடித்திருக்க முடியாது என்று மக்களே சொல்லும்படிச் செய்துவிட்டார்.

இவ்வாறு புகழப்படுவதைவிட, ஒரு நடிகையின் வெற்றிக்கு வேறு என்ன வேண்டும்’ - எம்.ஜி.ஆர்.

நாடோடி மன்னன் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றது. பானுமதி வெளியூர் வைபவங்களில் பங்கேற்கவில்லை.

சென்னையில் அண்ணா பங்கேற்ற பரிசளிப்பு விழாவில் மட்டும் கலந்துகொண்டார்.

நாடோடி மன்னனுக்கு ஒரு வாரம் முன்னதாக, 1958 ஆகஸ்டு 15-ல், சிவாஜி - பானுமதி நடித்த ‘சாரங்கதாரா’ ரிலீஸானது. தியாகராஜ பாகவதர் - கண்ணாம்பா நடித்து ஓஹோவென்று ஓடிய அசோக் குமாரும், அதுவும் ஒரே கதை. நடிகர் திலகத்தின் 50-வது படம். 50 நாள்களை எட்டிப் பிடிக்கவே சிரமப்பட்டது.

‘வசந்த முல்லை போலே வந்து’ பாடல் மட்டும் சாரங்கதாராவை இன்றும் நினைவூட்டுகிறது.

1959-ல், டி.ஆர். மகாலிங்கம் - பானுமதி ஜோடியாக நடித்தது ‘மணிமேகலை’. டி.ஆர். மகாலிங்கம் - பானுமதி இணைந்து பாடிய சூப்பர் ஹிட் டூயட் அதில் ஒலித்தது.

நாடோடி மன்னனுக்காக எம்.ஜி.ஆர். தனது மற்ற படங்களை நிறுத்திவைத்திருந்தார். அவை மெல்ல வளர்ந்தன. அவற்றில் பானுமதி நடித்த ராஜா தேசிங்கும் ஒன்று.

எம்.ஜி.ஆர்., ‘ராஜா தேசிங்கு - தாவுத்கான்’ என இரு மாறுபட்ட வேடங்களில் தோன்றியதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. மிகத் தாமதமாக, 1960 கோடையில் வெளியானது.

அதில் ‘வனமேவும் ராஜகுமாரா...’ கேட்கக் கேட்கத் தெவிட்டாத கானம்! சி.எஸ். ஜெயராமனுடன் இணைந்து பானுமதி பாடிய சூப்பர் ஹிட் பாடல்.

பானுமதியின் ஒப்பற்ற ஆற்றலுக்கு, ராஜா தேசிங்கு தீனி போடவில்லை. பானுமதி, எம்.ஜி.ஆருடன் கவுரவ வேடத்தில் வந்து போனதைப்போல் இருந்தது.

'தாவுத்கானாக’ எம்.ஜி.ஆர். தன் அற்புதமான நடிப்பை அங்குலம் அங்குலமாக வெளிப்படுத்திய படம் ராஜா தேசிங்கு. இருந்தும், இன்னொரு மதுரை வீரனாகவில்லை.

ராஜா தேசிங்கு தோல்விக்கான காரணத்தை கண்ணதாசன் வெளிப்படையாக எழுதியுள்ளார்.

‘ராஜா தேசிங்குக்குப் பகையாக வந்த தாவுத்கான், ராஜா தேசிங்கின் தந்தைக்கும் முஸ்லிம் மனைவிக்கும் பிறந்தவன் என்று நான் கதை எழுதிவிட்டேன். படம் வெளியானபோது, முஸ்லிம்களிடையே அது பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கதை சோடைபோனதன் காரணமாக, அதைத் தயாரித்த ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ கவிழ்ந்துவிட்டது’.

சிவாஜி, பத்மினி, வைஜெயந்திமாலா, பண்டரிபாய் ஆகியோருடன் பானுமதி நடித்தும் ராஜபக்தி தோல்வி அடைந்தது. பானுமதிக்கு வில்லி கம் ஹீரோயின் வேடம். சிவாஜியும் அவரும் மோதுவதில், சூடோ சுவையோ இல்லாமல், இருவரது நடிப்பும் எடுபடாமல் போனது.

லைலா மஜ்னு ஸ்டைலில் தமிழ் - தெலுங்கில் ஏ.நாகேஸ்வரராவ் - பானுமதி, சித்தூர் வி. நாகையா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் நடிக்க, இளங்கோவன் வசனத்தில் ‘நூர்ஜஹான்’ பட அறிவிப்பு வெளியானது. ஆனால், வந்ததாகத் தெரியவில்லை.

அதற்குப் பதிலாக, 1961-ல் பரணி பிக்சர்ஸ் ‘கானல் நீர்’, ஒப்பற்ற முறையில் சரத் சந்திரரின் படைப்பில், பானுமதியின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த உருவானது. அவரது ராசியான ஹீரோ ஏ. நாகேஸ்வர ராவ், ‘கானல் நீர்’ கதாநாயகன்.

அதில், பானுமதி பாடிய ‘வழி தேடி வந்தேன்’ காலத்தை வென்ற கானம்!

‘இளம் விதவை மாதவியாக வருபவர் பானுமதி. அவர் இவ்வளவு மெலிந்திருப்பது ஆச்சரியம்! அதைவிட பெரிய ஆச்சரியம், முதல் கட்டம் தொடங்கி இறுதிக் காட்சி வரையில் தனக்கு இயல்பான அதிகப்பிரசங்கித்தனத்தை மறந்து ‘மாதவி’யோடு ஒன்றிவிட்டார்’ என்று ‘குமுதம்’ பாராட்டியது.

அதோடு மட்டுமல்ல, அந்த ஆண்டின் மிகச் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுத்து கவுரவித்தது.

இத்தனைக்கும் 1961, சாவித்ரி நடிப்பில் சக்கை போடு போட்ட ஆண்டு. (சாதனைச் சித்திரங்கள் - பாசமலர், பாவமன்னிப்பு). சாவித்ரியைச் சற்றே புறக்கணித்துவிட்டு, பானுமதியின் நடிப்பைக் ‘குமுதம்’ கொண்டாடியது வியப்பின் விஸ்வரூபம்!

*

நாற்பதை நெருங்கிக்கொண்டிருந்தார் பானுமதி. கண்ணாடி அவருக்குப் பகை ஆனது. கோலிவுட் ஒட்டுமொத்தமாக சரோஜாதேவிக்கு மாறிய தருணம். தமிழில் பானுமதிக்குச் சுத்தமாகப் படங்கள் இல்லை.

நீண்ட காலத் தயாரிப்பாக, சிவாஜியோடு ‘அறிவாளியும்’, எம்.ஜி.ஆரோடு ‘கலையரசி’ ‘காஞ்சித்தலைவன்’ மிச்சம் இருந்தன.

விஜயா - வாஹினி, ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், ஜூபிடர், பட்சி ராஜா, விக்ரம் என அன்றைய அத்தனை ஸ்டுடியோ அதிபர்கள் தயாரித்த படங்களிலும் நடித்து, பெரிய ரவுண்டு வந்தாகிவிட்டது.

அந்த வரிசையில், ஏவி.எம். மட்டும் பாக்கி. மாபெரும் வெற்றி, வசூல் ராணி போன்ற வார்த்தைகள் பானுமதிக்கு பழகி ஓய்ந்தவை.

மெய்யப்பச் செட்டியாருக்கும் பானுமதிக்கும் இடையே சுமுகமான நட்பு கிடையாது. ‘ஏவி.எம்.மில் கால் வைக்கமாட்டேன்’ என்று பானுமதி எதன் பொருட்டோ சபதம் எடுத்திருந்தார்.

‘இளம் வாலிபனுக்கு அம்மாவாக ஏவி.எம்.மில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள்...’ என்றதும் நம்ப முடியவில்லை.

‘சும்மா கிடந்த நிலத்தைக் குத்தி...’ பாடல் காட்சியை ஏவி.எம்.மில் படமாக்கத் திட்டமிட்டது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ். பானுமதி அங்கு வரமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்றார்.

அப்புறம், ‘நாடோடி மன்னனில்’ அவருக்காகவே விஜயா - வாஹினியில் ‘பேக் புரொஜெக்ஷன்’ வசதி செய்யப்பட்டது. வேறு வழி?

‘பானுமதி, ஏவி.எம். தயாரிப்பில் நடிப்பாரா...?’ என்பது அந்நிறுவனத்துக்கே, மில்லியன் டாலர் கேள்வியாகத் தோன்றியது.

இந்தியாவில், பானுமதியைத் தவிர வேறு யாராலும் நடிக்கமுடியாத மிக அபூர்வமான வேடம்.

‘அவரது சம்மதத்தைக் கேட்டுப் பார்ப்போம். சரி என்றால் படத்தை உருவாக்குவோம். மறுத்துவிட்டால் வேறு சினிமா தயாரிப்பது...’ என்கிற முடிவோடு பானுமதியை அணுகினார்கள்.

புதிதாக நடிக்க, இனியும் சாதிக்க ஏதும் இருக்கிறதா என்கிற யோசனைகளெல்லாம் காணாமலே போயின. குடும்பத்தில் முழுக்க மூழ்கிவிட்ட பின், ஏவி.எம். படத்தில் நடிக்க வேண்டுமா?

டி.ஆர். மகாலிங்கம், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று தமிழகத்தின் தன்னிகரற்ற கலைஞர்கர்களைத் தொடர்ந்து நாயகர்களாக்கிய நிறுவனம் ஏவி.எம்.

அந்நாளில், அங்கு ஹீரோ - ஹீரோயின்களை விடவும், கதைகளுக்கே கூடுதல் முக்கியத்துவம் தருவார்கள். அப்படிப்பட்ட செட்டியாரின் காம்பவுன்டில், முதன்முதலாக அவர்களே தேடிச்சென்று ஒப்பந்தம் செய்த ஒரே துருவ நட்சத்திரம் பானுமதி!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com