பானுமதி: 9. நடிப்புக்கு இலக்கணம்!

1963ல்  பானுமதி நாயகியாக நடித்து மூன்று தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவை நீண்ட காலத் தயாரிப்பில் இருந்தவை.

1963ல்  பானுமதி நாயகியாக நடித்து மூன்று தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவை நீண்ட காலத் தயாரிப்பில் இருந்தவை.

மக்கள் திலகத்துடன் கலை அரசி, காஞ்சித் தலைவன், நடிகர் திலகத்துடன் அறிவாளி. தொடக்கத்தில் எதிர்பார்த்த பெரிய வெற்றி அமையாது போனது. ஆயினும் கே. டிவி வருகிற வரையில்  மறு வெளியீடுகளில் தொடர்ந்து வசூலித்தன.

‘அறிவாளி’ சிவாஜி - பானுமதி நடித்த மற்றுமொரு சிரிப்புப் படம். ஆங்கில சினிமாவின் தழுவல். கணேசனும் பானுமதியும் போட்டி போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள். குறிப்பாக அவர்களது திருமணக் காட்சியில் வயிறு சிரித்து சிரித்துப் புண்ணாகி விடும். ஆபாசமற்ற அக்மார்க் ஹாஸ்ய அமர்க்களம்!

ஆண் ஆதிக்கத்தை வெறுக்கும் பானுமதியின் இயல்பான குணத்தையொட்டிய கதாபாத்திரம் நாயகி மனோரமா. அதனால் பானுமதியின்  நடிப்பு முழு வீச்சில் கொடி கட்டிப் பறந்தது.

அறிவாளியின் சிறப்புக்கு  குமுதம் எழுதிய விமர்சனம் கட்டியம் கூறியது.

‘நிமிஷத்துக்கொரு சிரிப்பு. நடிப்பில் சிவாஜியும் பானுமதியும் மோதிக்கொள்ள வேண்டும்  என்ற நம் விருப்பம் நிறைவேறியது. மோதலின் முடிவு ட்ரா.

பானுமதியின் வெளிப்படையான ஆர்ப்பாட்டத்துக்கும் கணேசனின் உள்ளடங்கிய தன்னம்பிக்கைக்கும் - வெறுப்பில் பிறந்த பானுமதியின் பரபரப்புக்கும், அன்பில் உதித்த சிவாஜியின் சூழ்ச்சிக்கும் நல்ல பொருத்தம்.  

மூன்று சண்டைப் படங்களால் கலைக்கு நேரக் கூடிய சேதத்தை, ஒரே ஓர் ‘அறிவாளி’யால் ஈடு செய்ய முடியும்.’

குமுதம் ஓஹோவென்று அறிவாளியைப் பாராட்டி விமர்சித்த விதத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் நொந்து போனார்கள்.

அப்போது தமிழகமெங்கும் புரட்சி நடிகரின் பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலை காக்கும் ஆகிய படங்கள் ஒரே சமயத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன.

மெஜஸ்டிக் ஸ்டுடியோ கோலாகலமாக அண்ணாவை வரவேற்றது. காஞ்சித்தலைவன் துவக்க விழா! வழக்கமாக வாழ்த்து பெறும் எம்.ஜி.ஆர்.,- மு.கருணாநிதியைக் கடந்து, அண்ணாவின் நெஞ்சில் பரிபூரணமாக அன்று நிறைந்திருந்தவர் பானுமதி.

‘அன்னை’  படத்தின் தாக்கம் அவர் மனத்தில் குறையாமல் இருந்தது. மைக்கைப் பிடித்த பேரறிஞர்,

‘பானுமதி அம்மையார் நடிப்பைப் பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்வேன். அவர் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை!’ என்றார்.

அரை நூற்றாண்டு கடந்த பின்னும் அண்ணாவின் வார்த்தைகள் பானுமதியை இன்னமும் கவுரவிக்கிறது.

காஞ்சித் தலைவன் பட விமர்சனத்தில்

‘எம்.ஜி.ஆருக்கும் பானுமதிக்கும் தீண்டாமைக் காதல்! எப்போதும் இரண்டடி இடைவெளி!’  என்று எழுதியது குமுதம்.

திரும்பிப்பாருக்குப் பிறகு கலைஞரின் காஞ்சித் தலைவனும் மிகுந்த சென்சார் நெருக்கடியில் சிக்கித் தவித்தது.

மாமல்லனைக் கொல்ல இரண்டாம் புலிகேசியால் அனுப்பப்பட்ட தீவிரவாதி வேடம் பானுமதிக்கு. அவரது குரலில் ஒலித்த ‘மயங்காத மனமும் யாவும் மயங்கும்’ காற்றலைகளில் இப்போதும் தவழும் குயில் பாட்டு!

1966  குடியரசு தினத்தில் பானுமதிக்கும் சிவாஜிக்கும் ஒரே சமயத்தில்  பத்மஸ்ரீ பட்டம் கிடைத்தது. அதையொட்டி நடிகர் திலகமும், பானுமதியும் ஒருவரை ஒருவர் பாராட்டி, கட்டுரை  எழுதினர். தமிழ் சினிமாவின் மிக அபூர்வ நிகழ்வு அது!

பானுமதி பற்றி சிவாஜிகணேசன் -

‘இரவு மணி ஒன்பதுக்கு மேலிருக்கும். நாடகம் சில நிமிஷங்களுக்கு முன்பு முடிந்திருந்தது. நடித்து முடித்த களைப்பு உடலெங்கும் நிரவியிருந்தாலும் உள்ளத்திலே ஏதோ ஒரு வகை பரபரப்பு. அதையொட்டி உடலிலே ஒரு சுறுசுறுப்பு.

அவசர அவசரமாக மேக் அப்பைக் கலைத்து விட்டு, சாப்பிட உட்கார்ந்தேன். என்னைப் போலவே என் நண்பர்களும் பறந்தார்கள். சிறிது நேரத்தில் நாங்கள் அனைவரும் கிளம்பத் தயாராகி விட்டோம்.

எங்கே? ஸ்வர்க்க சீமா படத்தைப் பார்க்க. அதுவும் இரண்டாவது தடவையாகப் பார்க்க!

‘பத்மஸ்ரீ பானுமதி ’பாவுரமா’ பானுமதியாக இதில் வந்து, தனக்கென ஒரு புதிய சகாப்தத்தை வகுத்துக் கொண்டு, புகழ் ஏணியின் முதல் படியில் காலை வைத்துக் கொண்டிருந்த நேரம்.

அதே சமயத்தில் பெங்களூரில் அப்போது சக்தி நாடக சபாவினர் முகாமிட்டு, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள்.  

கம்பெனியில் நானும் ஒரு நடிகன். கவியின் கனவு, ஜீவன், விதி, ராம பக்தி, மனோகரா போன்ற நாடகங்களை அப்போது அங்கு நடத்திக் கொண்டிருந்தோம். மாலையில் நாடகம் நடக்கும். இரவு ஒன்பது மணி சுமாருக்கு முடியும்.

பெங்களூரில் அப்போது  ‘ஸ்வர்க்க சீமா’ படம் திரையிடப்பட்டிருந்தது. பானுமதி இதில் பிரமாதமாக நடித்திருப்பதாகக் கேள்விப்படவே, ஒரு நாள் நாடகம் முடிந்ததும், இரவு ஒன்பது மணிக் காட்சிக்கு நண்பர்களுடன் படம் பார்க்கப் புறப்பட்டேன்.

ஒன்றும் தெரியாத பட்டிக்காட்டுப் பெண் சுப்புலு, பெரிய நடிகையாகி, நாகரிக மங்கை சுஜாதாவாக மாறி விடுகிறாள்.

பட்டிக்காட்டு சுப்புலுவாகவும், நாகரீக மங்கை சுஜாதாவாகவும் ஒன்றுக் கொன்று முற்றிலும் இரு மாறுபட்ட  வேஷங்களில் பானுமதி சிறப்பாக நடித்திருந்தார்.

அன்றுதான் நான் அவர் நடித்த படத்தை முதன் முதலாகப் பார்த்து, அன்றைய தினமே, அவர் ஒரு சிறந்த நடிகை என்ற மதிப்பையும் என் உள்ளத்தில் இடம் பெற வைத்து விட்டேன்.

அப்போது நான் பெண் வேஷங்களில் நடிப்பதும் உண்டு. குறிப்பாக மனோகராவில் பத்மாவதியாக  நடிப்பேன். ஆகவே ஸ்திரி பார்ட் போட்டு நடித்ததனால், ஒரு பெண் எப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்பதையும் கற்பனை செய்து நடித்து வந்தேன்.

பானுமதியை திரையில்  கண்ட போது, அந்த அனுபவத்தின் அடிப்படையில்  அவரது நடிப்பைக் கூர்ந்து கவனித்தேன். பெண் வேஷம் ஏற்று நடிப்பவர், பெண்ணாகவே இருந்தாலும் அதன் நெளிவு சுளிவுகளில் ஒரு தனி குணத்தையே பானுமதியின் நடிப்பில் காண முடிந்தது.

பானுமதி  நடித்திருந்த பாணி என்னைக் கவர்ந்து விட்டது. இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேனே... அவரது நடிப்புக்காக!

படம் பார்த்து விட்டுத் திரும்பும் நாங்கள் உடனே படுக்கப் போய் விட மாட்டோம். அதைப் பற்றி வாயாரப் பேசுவோம். விவாதிப்போம்.

‘ரத்ன குமாரில்’ ஒரு காட்சி. குழந்தைகள் கையில் வைத்துக்கொண்டு விளையாடும் கிலுகிலுப்பை போன்ற ஒரு பொருள். கம்பின் கீழே ஒரு குரங்கு பொம்மை. மேலே ஒரு கிளி. கீழே உள்ள விசையை அழுத்தினால் இந்தக் குரங்கு உடனே தாவி, மேலே உள்ள கிளியைத் தொட்டு விட்டு வரும்.

அதைத் தன் கையில் வைத்துக் கொண்டு, ஒரு பாட்டுப் பாடியவாறு ரத்னகுமாரில் வருவார். பானுமதி பாடி, நடித்துள்ள அக்காட்சியை எவ்வளவு ரசித்திருக்கிறேன் தெரியுமா?

பாட்டும், நடிப்பும் பிரமாதமாக இருக்கும்.

அடுத்து நான் பார்த்தது ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படம்!  ஏன், அதன் பின்னர் வெளி வந்த  பானுமதியின்  படங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கத் தவறியதே இல்லை!

ஒவ்வொரு படத்திலும் அவர் நடிப்புத் திறமையில் தனித்து நின்று, பிரகாசிப்பதைக் காண முடிந்தது.

பானுமதியுடன் நடிக்கும் போது, நமக்கு அனுசரணையாக அவரது உதவியும் கிடைக்கும். உதாரணமாக உணர்ச்சிமிக்கக் கட்டமொன்றில் நடிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னுடன் நடிப்பவரும், நான் எந்த அளவில் உணர்ச்சியைக் கொட்டி நடிக்கிறேனோ, அதே அளவில் தன்னுடைய நடிப்பிலும் பிரதிபலித்துக் காட்டினால் தானே,  நடிப்பவர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.

இந்த உதவி எதிர்த்தரப்பில் நடிப்பவர்களிடமிருந்தும் கிடைக்க வேண்டும். பானுமதியுடன் நடிக்கும் போது அது தாரளமாகக் கிடைக்கும்.

காட்சியின் அமைப்பைச் சொல்லி விட்டால் போதும்! அவரும் சரி, நானும் சரி அதைப் புரிந்து கொண்டு நடிக்க ஆரம்பித்து விடுவோம்!

பரஸ்பரம் அந்த உதவி இருந்தால் தான் காட்சியில் சோபிக்க முடியும். அதை அவரும் புரிந்து கொண்டவர்; நானும் புரிந்து வைத்திருக்கிறேன்.

‘மக்களைப் பெற்ற மகராசி’  படம் ஆரம்பமாகியது. நானும், அதன் கதாசிரியர் ஏ.பி. நாகராஜனும், இதில் வரும் நாயகனும், நாயகியும் கொங்கு நாட்டுத் தமிழில் பேசி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அபிப்ராயப்பட்டோம். அதை எல்லாரும் ஆமோதித்தார்கள்.

பானுமதி தெலுங்கு நடிகை. தமிழில் பேசி நடிக்கக் கூடியவர். ஆயினும் கொங்கு நாட்டுத் தமிழைப் பேசி நடிக்க வேண்டுமே!

அவர் எப்படிப் பேசி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். பானுமதிக்கு சொல்லிக் கொடுப்பதில் யாருக்கும் கஷ்டமே இருக்காது.அவர் நொடியில் எதையும் புரிந்து கொண்டு விடுவார்!           

கொங்கு நாட்டுத் தமிழும் சில விநாடிகளிலேயே அவருக்குக் கை வந்த கலையாகி விட்டது. அதை  நானும், அவரும் பேசி நடிக்கும் போது ஒரே தமாஷாக இருக்கும்!’

-------------------

தமிழகத்தில் விரைவில் பொன் விழா கொண்டாட இருக்கிறது திராவிடக் கட்சிகளின் ஆட்சி! ஆரம்பத்தில் அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தின் மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது.

‘கணேசனுக்கு அவர் வாழ்நாளின் கடைசி நொடி வரையில், சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காமல்  செய்ததே,  நம்மை ஆண்டவர்கள்  காட்டிய நன்றிக்கடன்!’

தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்கப் போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர்  சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடியவர்   பானுமதி. அவர் வழங்கிய வாக்குமூலம் அதற்கு சத்திய சாட்சி!

நடந்தது என்ன?

தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதி பங்கு பெற்றார். சிவாஜி நடித்த படங்களும் போட்டிக்கு வந்திருந்தன.

பரிசளிப்பில் நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் அவார்டு கமிட்டியினர்.

சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை பிறப்பிக்கவில்லையே தவிர பலத்த சிபாரிசு வந்தது.

ஆற்றலுக்கொரு கலைஞன் கணேசனுக்கு  நடந்த அசிங்கம் கண்டு சிலிர்த்து எழுந்தது பெண் சிங்கம். உடனடியாகப் பதவி விலகியது. தன் உறுமலை உரத்த குரலில் அரசாங்கத்தில் எதிரொலித்தது.

‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறந்த நடிகர் விருது அளிக்க அரசுக்கு விருப்பம் இல்லையென்றால், பேசாமல், நாகரிகமாக தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களையோ, அல்லது அவரது தயாரிப்பாளர்களையோ இனிமேல், ‘திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டிக்கு உங்கள் திரைப்படங்களை அனுப்பாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு, மறைமுகமாக சிவாஜியை மறைக்கப் பார்க்க வேண்டாம்.       

என்னைப் பொறுத்த வரையில் எத்தனை முறை நான் தேர்வு கமிட்டியில் இருந்தாலும், அங்கே சிவாஜி கணேசன் அவர்களின் படங்கள் தேர்வுக்கு வந்தால், நடிகர் திலகத்தைத் தான் சிறந்த கலைஞராகத் தேர்வு செய்வேன். ஏனெனில்  நடிப்புக் கலையில் அவரே சிறந்தவர்!’

----------------

பத்மஸ்ரீ விருதுக்குப் பிறகு பானுமதி நடிப்பில் சொற்ப சினிமாக்களே தமிழில் வெளிவந்தன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படம் பூவும் பொட்டும். வாசு ஸ்டுடியோ தயாரிப்பு. தாதாமிராசி இயக்கத்தில் உருவானது.

‘இத பாருங்க... செலவை நான் குறைக்க முடியாது.  செலவுக்குத் தக்கினபடி நீங்க வரவைப் பெருக்கத்தான் வேணும்.’

எளிமையாக வாழ எண்ணும் கல்லூரி முதல்வரின் (எஸ்.வி. ரங்காராவ்) படாடோப மனைவி ‘பத்மாவதி’யாக பானுமதி சக்கை போடு போட்டார்.

கொஞ்சம் பிசகினாலும் வில்லியாகி விடக் கூடிய வேடம். அவரது நாகரிக மோகத்தால் குடும்பம் சின்னா பின்னமாவதே கதை.

அம்மாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறிய மகனாக நாகேஷ், தாயின் பேச்சைக் கேட்டு பணக்கார வாலிபனைக் காதலித்து, கற்பை இழக்கும் மகளாக ஜோதிலட்சுமி நடித்திருந்தார்கள். மிக மாறுபட்ட குடும்பச் சித்திரம். அதனை  ஸ்ரீதர் இந்தியில் ரீமேக் செய்தார் என்பது விசேஷம்.

1969 தைத் திருநாளில் பீம்சிங்கின் யூனிட்டில் உருவான பட்டத்து ராணியில் பானுமதி முக்கிய வேடத்தில் நடித்தார். நாயகன் ஜெமினி கணேசன்.

அதற்குப் பிறகு தகுந்த வேடங்கள் அமையாததால் பானுமதி தமிழில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்.

‘என்னை நடிக்க வைத்து இயக்கக் கூடிய அளவுக்குக் குறிப்பிட்ட சில டைரக்டர்களே இருக்கிறார்கள். என் யோசனைகள் படத்தின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் வீணாகக் கருத்து வேறுபாடு என்பார்கள். அதனால் ஒதுங்கி இருக்கிறேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் அவசியம் நடிப்பேன்.’- என்றார் பானுமதி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  தி.மு.க. எம்.எல். ஏ. இராம அரங்கண்ணல்  தயாரித்த சினிமா ‘கட்டிலா தொட்டிலா’. சிவாஜி - ஜெயலலிதா நடித்த ‘சவாலே சமாளி’ வெற்றிப்படத்தின் டைரக்டர்  மல்லியம் ராஜ கோபால் இயக்கினார்.

ஏட்டிக்குப் போட்டியாக வாழும் புருஷன் - பொண்டாட்டி கதை. டாக்டர் கணவர் ‘மீனாட்சி சுந்தரமாக’ ஜெமினி கணேசன்.

 ‘அப்பா ஒரு மாதம் அம்மா ஒரு மாதம் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டும்’ என்று சவால் விட்டு,  ஒரே வீட்டில் தனியாக வாழ்ந்து காட்டத் துடிக்கும் வக்கீல் மனைவி ‘மீனாட்சி’யாக  பானுமதி. முதல் காட்சியிலிருந்து கடைசி வரையில் சிவகாசி பட்டாசாகப் பொரிந்து தள்ளுவார்.

‘பானுமதி நடிப்பு ஏ ஒன்!’ என்று நற்சான்றிதழ் வழங்கியது குமுதம்.

கட்டிலா தொட்டிலா வசூலில் மோசம் செய்து விட்டது. ஏனோ எம்.ஜி.ஆர்.- சிவாஜியோடு சேர்ந்து பெற்ற வெற்றி ஜெமினியோடு நடித்த போது பானுமதிக்குக் கிடைக்காமல் போனது.

கதாபாத்திரமும் கதையும் பிடித்துப் படங்களை  ஒப்புக் கொண்டு விடுவார் பானுமதி. பூராவும்  நடித்து முடிப்பாரா என்பது அவருக்கே தெரியாது.

 ‘சதாரம்’  சினிமாவுக்கு முன்பே  1955ல் இரு மாபெரும் வசூல் சித்திரங்களில் ஜெமினியுடன் பானுமதி நடித்திருக்க வேண்டும்.

முதலில் கணவனே கண் கண்ட தெய்வத்தில். அதற்காக அவர் சொந்தக்குரலில் பாடல்கள் பாடிப் பதிவாகி விட்டது.  ஏதோ காரணத்தால் பானுமதி நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார்.

பானுமதிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது நாகராணி வேடம். அதை விட  நாயகி அஞ்சலிதேவியின் கதாபாத்திரம், மக்களிடம் புகழ் பெறும் என்று நினைத்தாரோ என்னவோ... அவர் நடிக்கவில்லை. கடைசி நிமிடத்தில் பத்மினியைத் தேடிப் போக, அவர் தன்னை விட அக்கா லலிதாவே  அந்த கேரக்டருக்குப் பொருத்தம் எனச் சொல்லி லலிதாவை நடிக்க வைத்தார்.

லலிதா இரவு பகல் பாராமல் முழு மூச்சாக நடித்துப் பெரும் புகழ் பெற்றார்.

பானுமதி பாடிய பாடல்களை ரத்து செய்து விட்டுப் புதிதாக பி.சுசிலாவைப் பாட வைத்தார்கள்.

கணவனே கண் கண்ட தெய்வம் படப் பாடல்கள் மூலம் பி.சுசிலாவுக்குத்  தமிழில் நிரந்தர இடம் கிடைத்தது. அதற்கு மறைமுகக் காரணம் பானுமதி.

அடுத்து  மிஸ்ஸியம்மாவில் ஜெமினி கணேசனும் பானுமதியும் நடிப்பதாக இருந்தது. விஜயா ப்ரொடக்ஷன்ஸ் சக்ரபாணியுடன் பானுமதிக்கு ஏதோ மனக்கசப்பு. உடனடியாக விலகிவிட்டார்.

பானுமதியின் தங்கையாக ஒப்பந்தம் ஆகியிருந்த சாவித்ரி, பானுமதி ரோலில் சூட்டிகையாக நடித்து முத்திரை பதித்தார். 1955ல்  ஜெமினி-சாவித்ரி ஜோடி புதிய சரித்திரம் படைத்தது.

அவை மட்டுமல்ல. சிட்டாடல் ஸ்டுடியோவின் ’ஞானசவுந்தரி’  எம்.வி. ராஜம்மாவுக்கு நடிப்பில் மகுடம் சூட்டிய படம். டி.ஆர். மகாலிங்கம் ஜோடியாக முதலில் பானுமதி நடிக்க ஒப்புக் கொண்டார். தயாரிப்பாளர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின்பு நடிக்கவில்லை.

நடிப்புலகில் பானுமதி பெற்றதைப் போலவே இழந்ததும் அதிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com