சாவித்ரி- 3. அம்மாடி! தாயே! நீ ஆபத் பாந்தவி!

இந்தியாவிலேயே அப்படியொரு காம்பினேஷன் முதலும் கடைசியுமாக தமிழ் சினிமாவில் அபூர்வமாக அமைந்தது. அது சிவாஜி- ஜெமினி- சாவித்ரியின்

ந்தியாவிலேயே அப்படியொரு காம்பினேஷன் முதலும் கடைசியுமாக தமிழ் சினிமாவில் அபூர்வமாக அமைந்தது. அது சிவாஜி - ஜெமினி - சாவித்ரியின் வெற்றிகரமான கூட்டணி! 1956ல் ’பெண்ணின் பெருமை’ படத்தில்  தொடங்கிப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நீடித்தது.

திறமையான நட்சத்திரங்களின் ஆழ்ந்த அன்பையும், சிநேக பந்தத்தையும் ஏ.பீம்சிங்  செம்மையாகப் பயன்படுத்திக் கொண்டார். மூவரையும் வைத்து அவர் இயக்கத்தில் வெளியான ‘பா’ வரிசைப் படங்கள் காலப் பெட்டகங்கள்!

வேறு எவரிடமும் அகப்படாத அரிய குணம் ஜெமினி - சாவித்ரி ஜோடிக்கு உண்டு. சினிமா போஸ்டர், டைட்டில், சம்பளம், அதிகக் காட்சிகள், டூயட், தனிப்பாடல் எல்லாவற்றிலும் அவ்விருவரும் சிவாஜிக்காக விட்டுக் கொடுத்தார்கள். அவையே  ‘பா’ வரிசைச்  சித்திரங்கள் குறுகிய காலத்தில் தயாராகி, அநேகத் தலைமுறைகளைக் கடந்து  நிலைப்பெற்று நிற்கக் காரணம். 

டைட்டில் விஷயத்தில் சாவித்ரியை வருத்தப்பட வைத்த விவகாரத்தை முதலில் வாசிக்கலாம்.

‘பாசமலரில் பிரபல நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடித்தோம். அதன் வெற்றியைத் தொடர்ந்து மல்டி ஸ்டாரர் சினிமாக்களுக்கு ஒரு மவுசு ஏற்பட்டது. பார்த்தால் பசி தீரும் அப்படி உருவானது. அதில் எனக்கு குருட்டுப் பெண் வேஷம். மலை ஜாதிப் பெண்ணானதால் மொழி தெரியாது. ஜெமினி எனக்கு அ’ னா, ஆவன்னா என்று பாடம் கற்றுக் கொடுப்பார். அதுவே ஒரு பாட்டாகிப் பிரபலம் ஆயிற்று!

இதில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டது. பார்த்தால் பசி தீரும் படத்தில் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், நான், சரோஜா தேவி எல்லாருமே நடித்திருந்தோம். அன்று நாங்கள் எல்லாருமே முன்னணி நட்சத்திரங்கள். டைட்டிலிலும் விளம்பரங்களிலும் யார் பெயரை முதலில் போடுவது...?  இந்தச் சிக்கலுக்கு ஒரு வினோதமான தீர்வும் காணப்பட்டது.

‘நான் தான் சரோஜாதேவியை விட சீனியர். ஆனால் அவர் அடுத்த இடத்தில் தன்னுடைய பெயரைப் போட்டுக் கொள்ள, ஏதாவது மறுப்புச் சொல்லி இருப்பார் போலிருக்கிறது. பெயர்களை எப்படி வரிசைப்படுத்துவது என்பது பற்றிக் குழப்பம் கூடியது.

என்னுடைய பெயரைத் தொடர்ந்து சரோஜாதேவியின் பெயர், அப்புறம் சவுகார் ஜானகி அப்படி இருந்திருந்தால் சரியாக அமைந்திருக்கும். ஆனால் சிக்கல் அவ்வளவு சுலபமாகத் தீரவில்லை.

‘எங்கள் வீட்டு மகாலட்சுமி’ யில் கண்ணாம்பாவின் பெயரையே முதலில் காண்பித்தார்கள். அப்போதும் நான் முன்னணி நடிகை. ஆனாலும் என் பெயரை அடுத்தபடியாகப் போட ஒப்புக்கொண்டேன்.’

தயாரிப்பாளர்கள் கடைசியில் டைட்டிலில்,

‘உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று போட்டு  எல்லாருடைய படத்தையும் ஒன்றாகக் காட்டி விட்டார்கள். ஆகவே அனைவருக்கும் சமமான மதிப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் மட்டுமே அப்படிக் காட்டினார்களாம். வெளியூர்களில் சரோஜாதேவியின் பெயர் டாப்பில் இருந்ததாகக் கேள்வி.

எந்தப் படத்திலும் நடிப்பே முக்கியம். இந்தப் பெயர் போட்டுக் கொள்வது, நீ முந்தி... நான் முந்தி... என்று சண்டை போடுவது எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டேன்.’ 

ஏறக்குறையப் பத்துப் படங்களில் மூவரும் இணைந்து நடித்தனர். அவை அத்தனையும் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ் சினிமா சரித்திரத்தில் இடம் பிடித்தவை. சமூகம், வரலாறு, புராணம் என ஒன்றுக்கொன்று மாறுபட்டவை.

ஜெமினி குறித்த சிவாஜியின் கருத்து இது:

‘ஜெமினி பெரிய பலசாலி! பயங்கரமான துணிச்சல்காரன். பயப்படவே மாட்டான் ஜெமினி மாப்ளே மனசுல ஒண்ணு வெச்சுக்கிட்டு  மாத்திப் பேசத் தெரியாது. எதையும் சீரியஸா எடுத்துக்க மாட்டான்.’

சிவாஜியுடனான அறிமுகம் குறித்தும், அது  கெட்டித்தயிர் போல் தோழமையில் தோய்ந்தது பற்றியும் ஜெமினி நிறையச் சொல்லியிருக்கிறார்.

‘நானும் சிவாஜியும் பெண்ணின் பெருமையில் முதன் முதலாகச் சேர்ந்து நடித்தோம். புத்தி சுவாதீனமில்லாத மூத்த சகோதரன் வேடமும்,  அவனைத் துன்புறுத்தும் தம்பியின் வில்லன் பாத்திரமும் இருந்தன.  அதில் உங்களுக்கு எந்த ரோல் வேண்டுமோ  அதை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்’ என்றார் சிவாஜி.

சாவித்ரிக்கு மிகச் சிறந்த கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காகவே, நான் அவளது கணவனாய்  சிவாஜியோடு பல படங்களில் நடிக்க வேண்டியதாயிற்று. பதிபக்தி, பாசமலர், பந்தபாசம் இன்னமும் ஞாபகத்தில் இருக்கு.

ரேவதி (தற்போது விஜயா) ஸ்டுடியோவில் பெண்ணின் பெருமை  படப்பிடிப்பு. அங்கு ஏராளமாக தென்னை மரங்கள் இருக்கும். சிவாஜி குறி பார்த்துச் சுடுவதில் வல்லவரான வேட்டைக்காரர் ஆயிற்றே... லன்ச் பிரேக்கில்  தன் கைத்துப்பாக்கியால் இளநீர் கொத்தைச் சுடுவார். அது கீழே விழும். ஆளுக்கொன்றாக அடுத்த விநாடியே அந்தக் கொத்து காலியாகி விடும்.

பராசக்தியில் நடிப்பதற்கு முன்னால் கணேசன் ஜெமினிக்கு வேஷம் கேட்டு வந்தார். நடிகர் தேர்வு இலாகாவில் நான் இருந்தேன். அவரைப் பற்றி அப்போதே என் குறிப்புப் புத்தகத்தில்

‘களையான முகம். தீர்க்கமாக பேசும் கண்கள். எதிர்காலத்தில் சிறந்த நடிகராக வர முடியும்’ என்று எழுதினேன்.  நாங்கள் இணைந்து நடித்தபோது இந்தப் பழைய கதையெல்லாம் நினைவூட்டிக் கொண்டோம்.

’என்ன கணேசு! ஜெமினியிலே என்னை அளவெடுத்தியே ஞாபகம் இருக்கா? ஹூம் யார் நினைச்சிருப்பாங்க...! நீயும் நானும் இப்படி சேர்ந்து நடிப்போம்னு...?’  என்றார் சிவாஜி.

கட்டபொம்மனில் வெள்ளைய தேவன் வேடம் எஸ்.எஸ்.ஆர். நடிப்பதாக இருந்தது. பின்பு அவர் நடிக்கவில்லை. என்னைத் தேடி வந்தார்கள்.

‘என்னால் நடிக்க முடியவில்லை என எஸ்.எஸ்.ஆரிடமிருந்து, கடிதம் எழுதி வாங்கி வாருங்கள்’ என்றேன் பந்தலுவிடம். அவரும் அவ்வாறே செய்தார். அப்படியும் எனக்கு நடிக்க மனமில்லாமல், ‘சாவித்ரிக்குத் தலைப்பிரசவம்! அவளுக்கு யாரும் துணை கிடையாது’ என மறுத்தேன். ஜெய்ப்பூரிலிருந்து சிவாஜி, சாவித்ரிக்கு டிரங்கால் பண்ணினார். 

‘அம்மாடி! தாயே! மகமாயி உன்னைக் காப்பாத்துவா. உனக்கு ஒரு கஷ்டமும் வராது.  நீ அவரை அனுப்பிச்சி வைம்மா.  ஊர்ல இருக்குற பெரிய டாக்டர்களையெல்லாம் உன்னை கவனிக்கச் சொல்றேன். என் தாயாரை அனுப்பி வெச்சு, உனக்குப் பிரசவம் பார்க்கச் சொல்றேன்.’ என்று ரொம்பவும் கேட்டுக் கொண்டார்.

‘இந்த மாதிரி நேரத்தில் போனால் மாத்திரமே உதவின்னு பேரு.  எனக்குக் கடவுள் ஒரு குறையும் வைக்க மாட்டார்.’ என்று என்னை அனுப்பி வைத்தாள் சாவித்ரி. நல்ல வேளை நாங்கள் வந்த மறுநாள் விஜயா பிறந்தாள். ‘மகமாயி காப்பாத்திட்டா’ என்றார் சிவாஜி. ‘எனக்கு ஒரு புது வடிவம் கொடுத்தது வீரபாண்டிய கட்டபொம்மனில் வெள்ளையத் தேவன் ரோல்.

சிவாஜி அழகாய் வசனம் பேசுவார். கட்டபொம்மன்ல அவர் எப்படி  நடிச்சாரோ  அப்படித்தான் நடிக்கணும். அதை அடக்கி அன்டர் ப்ளே பண்ணா நல்லா இருக்குமா...?  என்னை மாப்பிள்ளை என்று சிவாஜி எப்போதும் கூப்பிடுவார். நான் அவரை கணேசா என்பேன். குடும்பத்தோடு பழகுவதற்கு மிக நல்ல நண்பர்.’

கட்டபொம்மனில் மட்டுமா? அதே நேரத்தில் உருவான  டி.ஆர். ராமண்ணாவின் ’காத்தவராயன்’  படத்தில் முதல் நாள் டி.எஸ். பாலையாவுடன் நடித்த எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றார். மந்திர தந்திரக் காட்சிகளில் நடிக்கத் தனது  இயக்கமான தி.மு.க அனுமதிக்காது என விலகி விட்டார். டி.ஆர். ராமண்ணாவுக்கு சிவாஜியும், சாவித்ரியும் ஓடோடி வந்து ஆதரவு அளித்தனர். 1958 தீபாவளிக்கு வெளியான காத்தவராயன் மிகப் பெரிய வசூல் சித்திரம்!  அதில் டி.எம்.எஸ். குரலில் ஒலித்த ‘வா  கலாப மயிலே...’ மறக்க முடியாத காதல் கீதங்களில் முக்கியமானது.

நடிகர் திலகத்துடன் நடித்த முதல் அனுபவம் குறித்து சாவித்ரி கூறியவை:

‘பெம்புடு கொடுகு தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் அண்ணனுடன் நடித்தேன். அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை.அண்ணியாகத் தோன்றினேன். அமரதீபத்தில் கதாநாயாகியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிவாஜியுடன் நடிப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உள்ளூற ஒரு பயமும் இருந்தது.

நீளமான வசனத்தை  உணர்ச்சியுடன்  பொழிந்து தள்ளுவதில்,  சிவாஜிக்கு நிகர் யாரும் இல்லை என்ற பேச்சு இருந்தது. அவருக்கு இணையாக பேசி நடிக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை. சிவாஜி நான் பேசும் வசனத்தைக் கூர்ந்து கவனிப்பார். தப்பு ஏதாவது இருந்தால் திருத்திச் சொல்லிக் கொடுப்பார். அமர தீபம் பெரிய வெற்றி அடைந்தது! நானும் சிவாஜியும் தொடர்ந்து சேர்ந்து நடிக்க நல்ல ஆரம்பமாக அமைந்தது.

டைரக்டர் பீம்சிங் எடுத்த பதிபக்தி 1957 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தப் படம் ஒரு மல்டி ஸ்டார்  காம்பினேஷன் என்பது மாத்திரம் இல்லை. அதை கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தவரே ஒரு பெரிய ஸ்டார். அவர் பத்மினி!  மல்லிகாவில் நடித்துக்கொண்டிருந்தவர் அதே மேக் அப்புடன் வந்து நியூடோன் ஸ்டுடியோவில் பதிபக்தியை ஆரம்பித்துத் தந்தார்.’

சாவித்ரியுடனான சிவாஜியின் நட்பு திரையைத்  தாண்டியும் வலுப்பெற்றது. நேரம் கிடைக்கும்போது சாவித்ரியின் வீட்டுக்குச் சென்று,  விரும்பிய அசைவ உணவுகளை அவரைச் சமைக்கச் சொல்லி விருந்துண்டு வருவது சிவாஜியின் ருசி! ரசனை! மகிழ்ச்சி!.

அதே போல் ஜெமினி- சாவித்ரி இருவரும் கணேசனின் அன்னை இல்லத்துக்கு போய், தீபாவளி முதலான விசேஷ நாள்களில், அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லி விட்டு வருவதும் வழக்கம். சிவாஜி- சாவித்ரி இடையே நல்ல புரிதலும், சிறந்த நட்பும் தொடர்ந்தது.

’குறவஞ்சி’ முதலில் எஸ்.எஸ்.ஆரும் பண்டரிபாயும் ஜோடியாக நடிக்க வேகமாகத் தயாரானது. கலைஞருக்கும் ராஜேந்திரனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் முடங்கிவிட்டது. கருணாநிதி  சிவாஜியிடம் சென்றார். அவரது ‘மேகலா பிக்சர்ஸில்’ சாவித்ரியை குறவஞ்சியாக நடிக்கச் சொல்லிக்  கேட்டார்கள்.

கலைஞரின் வசனத்தை, சுகம் எங்கே படத்தில் ஏற்கனவே பேசி நடித்ததும், வணங்காமுடியின் முன் அனுபவமும் சாவித்ரிக்கு உண்டு. அதனால் சாவித்ரி சட்டென்று, சிவாஜியின் இன்ஸ்டன்ட் நாயகியாகி உதவினார்.

மு.கருணாநிதியின் எழுச்சிமிக்க வசனங்களைப் பேசுவதில் முதலிடம் பெற்ற கணேசனோடு நேரடியாக மோதிப் பார்க்கும் அரிய சந்தர்ப்பம். அரிமாவின் குகையிலேயே சிந்தித்தும்  சீறியும் பேசி நடித்ததில் சாவித்ரியின் புகழ் எப்போதும் போல் அதிகரித்தது.

சிவாஜியை மேடைகளில்  தி.மு.க.வினர் கடுமையாகத் தாக்கிப் பேசிய நேரம். குறவஞ்சியில்  நடிக்கவே கூடாது என்றெல்லாம், ரத்தக் கையெழுத்திட்டுக் கடிதங்கள் எழுதினார்கள் சிவாஜி ரசிகர்கள். ’பராசக்தி’ கணேசன் பெருந்தன்மையாகத் தன் தோழருக்குத் தோள் கொடுத்துத் துன்பத்திலிருந்து தூக்கி நிறுத்தினார். குறவஞ்சி முழுமையாகி வெளி வந்தது. கலைஞர் பெருத்த நஷ்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்.

கட்டபொம்மனில் மட்டுமல்ல. கப்பலோட்டிய தமிழனிலும் பந்தலுவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதற்குக் காரணம் சரோ. ஜெமினிக்கு ஜோடியாக ஆடிப் பாட  ஏற்கனவே ஒப்புதல் தந்தவர், தேவர் கூடுதலாக பணக்கட்டுகளைக் காட்டியதும், ’தாய் சொல்லைத் தட்டாதே’யில் நடிக்க ஓடினார். பாவம் பந்தலு! தத்தளித்துப் போய் விட்டார். அப்போதும் அவருக்குக்  கை கொடுத்த தெய்வம் சாவித்ரி ஒருவரே!

பிசியான கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து, ம.பொ.சி.யின் கற்பனை பாத்திரமான, மாடசாமியின் கண்ணம்மாவாக சாவித்ரி, கப்பலோட்டிய தமிழனில் கவனம் ஈர்த்தார்.

சிவாஜியும் சாவித்ரியும்  ‘அமர தீபம்’ தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு டஜன்  படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவற்றில் திருவிளையாடல் உள்ளிட்ட வெள்ளி விழா சித்திரங்களும், நவராத்திரி போன்ற நூறு நாள் படங்களும் நிறைய. வடிவுக்கு வளைகாப்பு, பிராப்தம் ஆகியன மாத்திரமே வசூலில் படுதோல்வி அடைந்தன. காரணம் நீண்ட காலத் தயாரிப்பு.

நடிகர் திலகம் - நடிகையர் திலகம் இருவரின் இணையற்ற நடிப்பில் எவையும் அன்னையின் ஆணைக்கு ஈடாகாது. அன்னையின் ஆணை  தமிழ்த் திரை வரலாற்றில் முதல் பழி வாங்கும் ஆக்‌ஷன் சினிமா! மாறுபட்ட  ‘எதிர்பாராதது’ வெற்றிச் சித்திரத்தை இயக்கிய சி.ஹெச். நாராயணமூர்த்தியின் புதுமைப் படைப்பு! வசனம் முரசொலி மாறன். சிவாஜி கணேசனின் பிரபலமான சாம்ராட் அசோகன் நாடகம் இதில் இடம் பெற்றது.

படம் முழுவதிலும் மிக நாகரிகமாக, நளினமாக ஆங்கில ஸ்டைலில் காட்சியளிக்கும் சிவாஜி- சாவித்ரி இருவருக்கும் அபாரமான நடிப்புப் போட்டி! அதைக் குறித்து சிவாஜி தன் சுயசரிதையில் எழுதும் அளவு முக்கியத்துவம் பெற்றது அன்னையின் ஆணை.

அப்பா சிவாஜியைக் கொன்ற எஸ்.வி. ரங்காராவை, தன் வீட்டிலேயே இளைய சிவாஜி சிறை வைத்துப் பழிக்குப் பழி வாங்குவதே கதை.  நிஜம் தெரிந்து சாவித்ரி பதறி, கணவர் சிவாஜியிடம் அப்பாவை விடுதலை செய்யச் சொல்லிக் கேட்பார்.  தன்னை மறந்து நடிப்பதில் சாவித்ரி தன்னிகரற்றவர். அதற்கானப் படப்பிடிப்பில் நடந்த விபரீதம் இதோ:

‘அது ஓர் அருமையான காட்சி. என்னோடு சாவித்ரி நடிக்கிறார்கள்.  சாவித்ரி உணர்ச்சிவசப்பட்டு, என்னுடைய சட்டையைப் பிடித்து உலுக்குவது போல் காட்சி. சாவித்ரிக்குள் ஏதோ பூதம் உள்ளே போய் விட்டது போலும். என் சட்டையைப் பிடித்து கிழித்து,  நெஞ்சையெல்லாம் பிராண்டி, மார்பில் ரத்தமாக வழிகிறது.அதன் பிறகு அவர் கையைப் பிடித்து நிறுத்திவிட்டு, நான் சென்று தண்ணீர் எடுத்துக் கழுவினேன். பிறகு என் டவலை நனைத்துப் பிழிந்து, அந்த அம்மாவை அடிப்பது போல் நடித்தேன். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறார்கள்.’ ---- சிவாஜி கணேசன்.

சாவித்ரி என்று வாயைத் திறந்தாலே ஜனங்களின் மனத்தில் முதலில் மலர்வது பாசமலர்.  பாசமலர் பற்றி ஏதும் சொல்லாமல், சாவித்ரியின் சரித்திரத்தை எழுதுவதா என்ற உங்களின் பதற்றமும் பரிதவிப்பும் எனக்குப் புரிகிறது. பாசமலரை அத்தனைச் சாதாரணமாக எழுதி விட முடியாது. காரணம் சினிமா விளம்பரங்களில்  ‘கங்காரு’ காலம் வரையில் அண்ணன் தங்கை பாசத்துக்கு ஒரே உதாரணச் சித்திரம் பாசமலர் மாத்திரமே.  தமிழ் சினிமாவின் தலை சிறந்த ஐந்து தரமான படங்களில்  எப்போதும் முதலிடம் பெறுவது பாசமலர்.

ஆயிற்று. 2015 மே 27ல்  பாசமலருக்கு 55 வயது பூர்த்தியாகி, 56வது வயது பிறக்கிறது.(1961-2015) அடுத்த வாரம் அதைக் கொண்டாடுவோமே!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com