பானுமதி: 4. பூங்கோதையும்... கல்யாணியும்...

தெலுங்கிலும் தமிழிலும் பானுமதிக்கு வரவேற்பு தொடர்ந்தது. 1939---ல் அறிமுகமான பானுமதிக்குப் பத்து ஆண்டுகள் கடந்தும், நீடித்தப் புகழோடு பரபரப்பானப் பொற்காலமும் சேர்ந்து கொண்டது.

தெலுங்கிலும் தமிழிலும் பானுமதிக்கு வரவேற்பு தொடர்ந்தது. 1939---ல் அறிமுகமான பானுமதிக்குப் பத்து ஆண்டுகள் கடந்தும், நீடித்தப் புகழோடு பரபரப்பானப் பொற்காலமும் சேர்ந்து கொண்டது.

ஆந்திராவை ஒரு கலக்கு கலக்கிய பானுமதியின் ‘லைலா மஜ்னு’ வை அன்றைய பிரபல சினிமா நிறுவனமான ஜூபிடர் 1949 நவம்பர் 5-ல் தமிழில் வெளியிட்டது. இங்கும் அமோக வசூல் கிடைத்தது.

இளையராஜாவையே கட்டிப் போட்ட சூப்பர் ஹிட் பாடல்கள் அதில் ஒலித்தன.

சி.ஆர். சுப்பராமனின் இசையில் 1. ‘எனது உயிர் உருகும் நிலை - சொல்லுவாய் வான்மதி’, 2. பறந்து பறந்து செல்லும் பைங்கிளியே மறதியாகுமா?- இது நியாயமா? 3. பிரேமைதான் பொல்லாததா’ போன்ற பாடல்கள் நெஞ்சில் நிலைத்தவை.

ஹாலிவுட் கீதங்களை நம் பண்பாட்டுக்கு ஏற்ப சுவீகரிக்க கொஞ்சமும் தயங்காதவர் பானுமதி.

ஸ்வர்க்க ஸீமாவில் ரீடா ஹேவர்த் பாடலைப் பின்பற்றி பாவுறமா பறக்க விட்டதை, லைலா மஜ்னுவிலும் பின்பற்றினார்.

இம்முறை லாரென்ஸ் ஆலிவரின் ‘ஹாம்லெட்’ படத்தில் இருந்து கிடைத்த மெட்டை, ‘பிரேமை தான் பொல்லாதது’ என்கிற டூயட்டாக உயிர்ப்பித்தார்.

மஜ்னுவாக ஏ. நாகேஸ்வரராவும், லைலாவாக பானுமதியும் வாழ்ந்து காட்டியிருந்தார்கள்.

திரையில் லைலாவாக மறு பிறவி எடுத்த பானுமதியின் கமென்ட் இது.

‘என் கணவர் ஒரு டைரக்டர். என்னைப் போன்ற பிரபல நட்சத்திரத்தோட கணவராக இருந்துக்கிட்டு, அடுத்தவங்க கிட்ட வேலை செய்ய விரும்பல. அதுக்காகத் தானே, புதுசா ஒரு சினிமா கம்பெனி ஆரம்பிச்சார். அவர் இயக்கத்துல என் கேரக்டர்கு ஒத்து வராத படம் லைலா மஜ்னு. அழுது அழுது கண்ணு புண்ணாப் போச்சு. - பானுமதி (1993 பிப்ரவரி பொம்மையில்)

அதே நேரத்தில் பானுமதி குறித்த கண்டனங்களும் பரவலாக எழுந்தன.

நவம்பர் 1949 குண்டூசி இதழில் ‘மலாயா செண்டூல்- எம்.எஸ். ராதா’ என்கிற வாசகர் ஒரு கேள்வி எழுப்பினார்.

‘ஆந்திர நடிகையான பானுமதி இப்படியேன், மார்பகத்தில் துணியே இல்லாமல் ஆபாசமாய் நடிக்கிறார்? இதை அவரது கணவர் பார்த்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறார்...?’

‘நிஷானின்’ வரலாறு காணாத ஓட்டத்தைத் தொடர்ந்து, ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’ பானுமதி- ரஞ்சன் மீண்டும் இணைந்து நடிக்க இந்தியில் ‘மங்களா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

பாரதம் உலகின் மிகப் பெரிய குடியரசு நாடாக, ஜெய பேரிகை கொட்டிய ஜனவரி 26, 1950. ஒட்டு மொத்த இந்தியாவெங்கும், பானுமதியின் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

1949 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த நடிகையாக பானுமதியைத் தேர்வு செய்து கவுரவித்தது சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்.

1951ல் பி.என். ரெட்டியின் வாகினி பிக்சர்ஸில் பானுமதி நடித்தது ‘மல்லீஸ்வரி’ தெலுங்கு வெற்றிச் சித்திரம். என்.டி. ராமாராவ் ஹீரோ. பானுமதியின் இனிய பாடல்களும், அத்தனை இலேசில் மறக்க முடியாத நடிப்பும் மல்லீஸ்வரியை ஓஹோவென்று ஓட வைத்தன.

லைலா மஜ்னுவில் லாபம் குவித்த ஜூபிடர், பானுமதி நாயகியாக நடிக்க நேரடியாகத் தயாரித்த படம் ராணி. 1952 கோடையில் வெளியானது. ராஜா ராணி கதை. ஓடாமல் போனது.

லைலா மஜ்னு வெற்றிக்குப் பின்னர் பரணி பிக்சர்ஸின் அடுத்த படைப்பு ‘காதல்’. அதே பானுமதி- ஏ. நாகேஸ்வர ராவ் ஜோடி. பானுமதியின் ஆஸ்தான இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமனின்

‘இன்பக் காவியம் ஆகும் வாழ்வே காதலினாலே’ போன்ற இனிய பாடல் இடம் பிடித்தும் ‘காதல்’ தோல்வியில் முடிந்தது.

பானுமதி ராசியான தனது மகன் பெயரிலேயே பரணி ஸ்டுடியோவை சாலிகிராமத்தில் உருவாக்கினார். அங்கு உருவான சண்டிராணி, இந்திய சினிமா சரித்திரத்தில் இடம் பெற்ற பானுமதியின் சாதனைச் சித்திரம்!

பானுமதியின் சண்டிராணி சாகஸங்கள்:

‘ஒரு தடவை என்னைக் காப்பாத்தறதுக்காக எம்.ஜி.ஆர்., நம்பியாரோட கத்திச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். நான் இந்த சண்டைக்கு நடுவே தவித்துக் கொண்டிருப்பதாக காட்சி. எனக்குத்தான் இந்த மாதிரி கட்டங்கள் தாங்காதே...

அந்தக் காட்சி படமானதும் நான் ‘எம்.ஜி.ஆரிடம், ‘உங்க வாளை என் கிட்ட கொடுத்தா, என்னை நான் காப்பாத்திக்க மாட்டேனா...?’ என்றேன்.

எம்.ஜி.ஆர். அதை ரொம்பவே ரசித்துச் சிரித்தார்.

உண்மையில் நான் சண்டிராணி படத்தில் நடிக்கும் போது வாள் சண்டையில் பயிற்சி எடுத்திருந்தேன். அதோடு அந்தப் படத்துக்குத் தேவையான குதிரை ஏற்றமும் கற்றேன்.

நான் கத்தி வீச எங்கே, எப்படிப் பயின்றேன் என்பதே கூட ஆச்சர்யமானதாக இருக்கும். பஞ்ச பாண்டவர்களின் வம்சத்தினர் கல்கத்தாவில் வாழ்வதாகக் கூறுகிறார்கள்.

அங்கு பாண்டவர் பரம்பரையில் பிறந்த ஒரு பெரியவர், எனக்கும் ரொம்ப நல்லாவே கற்றுக் கொடுத்தார். அதில் அடைந்த தேர்ச்சியால் சண்டி ராணியில் வேக வேகமாக, நான் வாளைச் சுழற்றி ரசிகர்களை பிரமிக்க வைக்க முடிந்தது.

அதனால்தானோ என்னவோ சினிமாவில் கூட என்னை நானே காப்பாற்றிக் கொள்ள விரும்பினேன்.

1953லேயே சண்டி ராணில சண்டி, சம்பான்னு இரட்டை வேஷங்கள்ள நடிச்சேன். ஒருத்தி காட்டுல இருப்பா. இன்னொருத்தி அரண்மனையில இளவரசியா வாழ்வா. என். டி. ராமாராவ் ‘கிஷோர்’ன்ற பேர்ல மந்திரி மகனா வருவாரு.

வில்லனைப் பழிக்குப் பழி வாங்கி அவன் கிட்டயிருந்து பெத்தவங்கள காப்பாத்தற, ஒரு ஆக்ஷன் ஹீரோ செய்ய வேண்டிய ரிவென்ஜ் சப்ஜெக்ட் அது. நான் தைரியாமா நடிச்சேன்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாள்ள தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகள்ள 1953 ஆகஸ்டு 28ல் வெளியிட்டேன். எனக்கு அப்ப முழுசா இருபத்தேழு வயசு.

‘ஒரு பொம்பள தனியா நின்னு ஜெயிச்சிட்டா பாரு!’ன்னு, ஏவிஎம். செட்டியார் எல்லார் கிட்டயும் என்னைப் பாராட்டிப் பெருமையா பேசுவாராம். -பானுமதி.

அபூர்வ சகோதரர்களை உல்டா செய்து பானுமதி சண்டிராணி எடுத்திருந்தும், அதுவும் நன்றாகவே ஓடியது.

சண்டி ராணி இசை அமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் அகால மரணம் எய்த, மிச்சத்தைப் பூர்த்தி செய்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். அதன் மூலம் எம்.எஸ்.விக்கு மிகப் பெரிய திருப்புமுனையை உண்டாக்கியவர் பானுமதி.

அவர் சொந்தக்குரலில் பாடி அதில் இடம் பெற்ற மகா அற்புதமானப் பாடல்

‘வான் மீதிலே... இன்பத் தேன் மாரி பெய்யுதே...!’ இளையராஜாவை வெகுவாகக் கவர்ந்தது.

சண்டிராணியில் இடம் பெற்ற அதே பாடல் மீண்டும் ஏவி.எம்மின் மெல்லத் திறந்தது கதவு படத்தில் (வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே...) புதுமையாக ஒலித்தது.

தன்னை அசத்திய எம்.எஸ்.வி.யின் மெட்டை, மெல்லிசை மன்னருடன் சேர்ந்து பணியாற்றிய வேளையில் அவர் முன்னிலையிலேயே மீண்டும் பயன்படுத்திக் கொண்டார் இசைஞானி.

எடுத்த எடுப்பில் மூன்று மொழிகளிலும் சொந்தமாகப் படத்தைத் தயாரித்து, இயக்கி அதில் வெற்றியும் அடைந்த முதல் பெண் டைரக்டர் பானுமதி! என வரலாறு பதிவு செய்து கொண்டது. இன்று வரையில் மிக அபூர்வமான சாதனை!

சண்டி ராணிக்குப் பிறகு பானுமதிக்குப் பெரும் புகழைத் தேடித் தந்த படம் மலைக்கள்ளன். பானுமதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த முதல் படமே வெற்றிச் சித்திரமாகவும், தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படமாகவும் விளங்கியது தனிச் சிறப்பு.

மலைக்கள்ளன் நாயகி பானுமதி பற்றிய ‘குமுதம்’ விமர்சனம்:

‘பானுமதிக்குப் ‘பூங்கோதை’ பாகம் வெகு பொருத்தம். ஏய் யார் நீ... ? என்று அவர் போடும் அதட்டலைக் கேட்டு அஞ்சாதவர்கள் இரும்பு மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்.

கதாநாயகியை ஒரு முறை கூடக் கண்ணீர் விடச் செய்யாமல் எடுக்கப்பட்ட, முதல் தமிழ்ப் படம் மலைக்கள்ளன்’ என்று எண்ணுகிறோம். பானுமதியின் நாட்டியம் சுகமில்லை. பாட்டுக்கள் மதுரமாக இல்லை.’

சரோஜாதேவி அறிமுகமாவதற்கு முன்பு தொடர்ந்து வெற்றி வலம் வந்தது எம்.ஜி.ஆர் - பானுமதி ஜோடி. மலைக்கள்ளனின் அமர்க்களமான வசூல் ஓட்டத்துக்குப் பின்னர், அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க கிராக்கி கூடியது.

மாடர்ன் தியேட்டர்ஸ் அலிபாபா அடுத்து வெளியானது. சேலத்தில் அதன் படப்பிடிப்பில் பானுமதிக்கு கிடைத்த இன்னொரு அற்புத இணை நடிகர் திலகம்!

முதன் முதலாக சிவாஜியைச் சந்தித்தது பற்றி பானுமதி விவரமாக கூறியுள்ளார்.

‘நெப்டியூன் ஸ்டுடியோவில் ஜூபிடர் பிக்சர்ஸ் ராணி படத்தில் நடித்த சமயம். ஒருநாள் அவர்களது ‘மனோகரா’ படக் காட்சிகளைப் பார்த்து விட்டு செட்டுக்குத் திரும்பினேன்.

அவரது நடிப்பு என்னைக் கவர்ந்து விட்டிருந்தது. அன்றைய தினம் அரங்கில் என்னுடன் நடித்தவர்களிடமெல்லாம், கணேசனின் திறமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

சிவாஜிகணேசன் நடித்து நான் பார்த்த முதல் படம் இதுவே. பின்னர் நான் பார்த்த சினிமாக்களில் அவரது ஆற்றல் மேலும் மேலும் பெருகியது.

தவிர, ஒரு சிறந்த நடிகர் என்கிற முறையில் அவர் மீதுள்ள மதிப்பும் நம்பிக்கையும் என்னிடம் வளர்ந்தன. மனோகரா பார்த்துச் சில மாதங்கள் சென்றிருக்கும்.

சேலம் பக்கம் ஏதோ வேலையாக வந்த சிவாஜி, அன்றைக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் அலிபாபா ஷூட்டிங்கில் இருந்தார். அங்கே தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன்.

சிறிது நேரம் காமிராமேன் டபிள்யூ. ஆர். சுப்பாராவ் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணேசன் கிளம்பிச் சென்றார்.

அந்த சில நிமிஷங்களில்

என்ன அருமையாக நடிக்கிறார் இவர்! இவருடன் எப்படியாவது நான் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். என்ற தன் விருப்பத்தை சுப்பாராவிடம் சொன்னாராம்.

சிவாஜி போன பிறகு, அதை என்னிடம் கூறிய சுப்பாராவ், ‘என்னம்மா உங்களுடன் நடிக்கணும்னு இவர் இப்படித் துடிக்கிறாரே!’ என்றார்.

சென்னைக்குத் திரும்பி வந்த சில நாள்களிலேயே அதற்குப் புதிய சந்தர்ப்பம் கிடைத்தது.

கல்கியின் ‘கள்வனின் காதலி’ கதையைப் படமாக்க என்னைத் தேடி வந்தார் ரேவதி ஸ்டுடியோ அதிபர், டைரக்டர் வி.எஸ். ராகவன்.

‘இந்தப் படத்தில் கதாநாயகி கல்யாணியாக நீங்கள் நடிக்க வேண்டும். முத்தையனாக சிவாஜி நடிக்கப் போகிறார்... உங்களுக்குச் சம்மதமா?’ என்றார்.

‘நான் என்ன சொல்வது...? கணேசன் மிகச் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே...! என உடனடியாக ஒத்துக் கொண்டேன்.- பானுமதி.

‘கள்வனின் காதலி’ 1955 தீபாவளி வெளியீடு. சென்னையில் கெயிட்டி, மகாலட்சுமி, சயானி, ராஜகுமாரி, பிரபாத் என ஐந்து தியேட்டர்களில் ரிலிசானது. அந்நாளில் அது ஓர் அபூர்வ நிகழ்வு. பிரம்மாண்டமான ஜெமினி சித்திரங்கள் கூட மூன்று அரங்குகளில் மட்டுமே நடைபெறும்.

அதே நாளில் சிவாஜியின் இன்னொரு படமான கோட்டீஸ்வரனும் வெளியானது. அதில் அவரது ராசியான பத்மினி ஜோடி. கோட்டீஸ்வரன் முழு நீள நகைச்சுவைச் சித்திரம். வீணை எஸ். பாலச்சந்தர் கூட சிரிப்பு காட்டினார்.

திரையிட்ட ஐந்திலும் கள்வனின் காதலி 80 நாள்களைக் கடந்து ஓடி நன்கு வசூலித்தது.

மூன்று தீபாவளிகளைக் கண்ட ஹரிதாஸ் பட இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணியின், சொந்தத் தயாரிப்பு இயக்கத்தில் கோட்டீஸ்வரன் உருவானது. இருந்தும் கள்வனின் காதலி பிரமாதமாக ஓடியது. காரணம் சிவாஜி- பானுமதி இருவருமே விட்டுக் கொடுக்காமல் நடித்திருந்தார்கள்.

நூறாவது நாள் விழா எடுத்தால் ஐந்து தியேட்டர் ஊழியர்களுக்கும் போனஸ் தர வேண்டியிருக்கும். அதனால் கிடைத்த வசூலோடு ரேவதி ஸ்டுடியோ திருப்தி அடைந்தது. கள்வனின் காதலியில் பானுமதி பாடியதில் ‘வெயிலுக்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு’ சூப்பர் ஹிட்.

1955 தீபாவளி தொடங்கி தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான நடிப்புப் போட்டி முதன் முதலாக உருவானது.

‘கள்வனின் காதலியில்’ நடித்தது பற்றி நடிகர் திலகம்:

‘கள்வனின் காதலி’யில் பானுமதி ஹீரோயின் என்று டைரக்டர் ராகவன் சொன்னதும் எனக்குப் பெருமையாக இருந்தது. படப்பிடிப்புக்காகச் சென்றேன்.

ராகவன் என்னை பானுமதிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பெரிய நடிகை, நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பிருந்தே, நடித்துப் பிரபலமாக விளங்கி வரும் சிறந்த நடிகை என்ற உணர்வோடு வணக்கம் என்றேன்.

அன்றைய தினம் நான் பெண் மாதிரியும், அவர் ஆண் பிள்ளை போலவும் பேசி கிண்டல் செய்யும் தமாஷான காட்சி ஒன்றை எடுத்ததாக நினைவு.

முந்நூறு படங்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நாயகிகளுடன் நடித்தவர் சிவாஜிகணேசன். 1970ல் ராமன் எத்தனை ராமனடியோடு விரைந்து 140 படங்களை முடித்தத் திருப்தி !

சற்றே விரும்பித் தனது படப்பட்டியலை வாசித்து, அதில் ஒவ்வொன்றைப் பற்றியும் தன் எண்ணங்களை வரைந்தார்.

கள்வனின் காதலி பற்றிக் குறிப்பிடுகையில், ‘தலை சிறந்த நடிகையான பானுமதியுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறோம், என்று நான் பயந்து நடித்த படம்’ என்று எழுதினார். வேறு எந்த நடிகைக்கும் வழங்காத மதிப்பை பானுமதிக்குத் தந்தார்.

கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலம்(1955 -1970) கடந்திருந்தும், அதே பழைய பணிவை, வி.சி. கணேசன் போன்ற யுகக் கலைஞரிடம் பெற பானுமதியால் மட்டுமே முடிந்தது!

‘மலைக்கள்ளன், - கள்வனின் காதலி’ எம்.ஜி.ஆர்.-சிவாஜியோடு முதன் முதலாக பானுமதி சேர்ந்து நடித்த இவ்விரு படங்களும் தமிழின் புகழ் பெற்றப் புதினங்கள்.

இரு கதைகளிலும் கதாநாயகன் திருடன். ஆனால் மிகவும் நல்லவன். இரண்டிலும் ஒரே நாயகி பானுமதி. பூங்கோதைக்கும், கல்யாணிக்கும் நடிப்பில் எத்தனை எத்தனை வித்தியாசம் காட்டி இருக்கிறார் பானுமதி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com