பானுமதி: 1. ஆல்வேஸ் அன் எக்செப்ஷன்...!

பானுமதி எங்களைத் தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டு ரிகர்சல் பண்ணி நடிக்கக் கற்றுக் கொடுப்பார்.

‘நான் மிகவும் போற்றும் நட்சத்திரம் பானுமதி ராமகிருஷ்ணா. தென் நாட்டில் திரைப்படத் துறையில் கதை எழுதுவது, டைரக்ட் செய்வது, பாடுவது, நடிப்பது இப்படி எல்லாவற்றிலும் திறமை மிகுந்த ஒருவர் உண்டென்றால் அது பானுமதிதான்! அவருக்கு ஓவியம் வரையக் கூடத் தெரியும். ஆனால் அதை எத்தனை பேர் அறிவார்களோ...!

பானுமதியின் சொந்தத் தயாரிப்பான ‘லைலா மஜ்னு’வில் நாங்கள் நடித்தோம். அப்போது எனக்குப் பதிமூன்று வயது. முக்கியமாக நடனக் காட்சிகளில் மட்டும் நானும் லலிதாவும் படங்களில் இடம் பெற்ற காலம் அது.

பானுமதி எங்களைத் தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டு ரிகர்சல் பண்ணி நடிக்கக் கற்றுக் கொடுப்பார். ஷூட்டிங் இரவில் நடக்கும். அவர் எங்களுடன் கூடவே இருப்பார்.

ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் ஏதாவது ஒரு குறிப்பைச் சொல்லி எங்கள் நடிப்பைத் திருத்துவார். பானுமதியின் மகன் பரணி அப்போது ஒரு வயதுக் குழந்தை.

பானுமதி நடனமும் ஆடுவார். அழகாகப் பாடுவார்... எவ்வளவு நயமான குரல் அவருடையது...! கர்நாடக இசை, இங்கிலீஷ் மியூசிக் இரண்டுமே அவருக்குக் கை வந்த கலை.

‘நீ ஒரு நாள் நிச்சயம் பெரிய நடிகை ஆகப் போகிறாய்...!’ என்று பானுமதி எனக்கு அன்புடன் ஆசி கூறியது உண்டு. அந்த வாக்குப் பலித்தது! அவரைப் போலப் பாடவும் நான் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் அது பலிக்கவில்லையே...!- நாட்டியப் பேரொளி பத்மினி.

------------------

‘நடிகை பானுமதியின் வீடு தியாகராய நகர்- வைத்தியராம அய்யர் தெருவில் இருந்தது. அப்படியொரு பெரிய நடிகையின் வீட்டுக்குக் குடி போனது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

நான் எட்டு வயதுப் பெண்ணாக இருக்கும் போது, பானுமதி நடித்த ‘ஸ்வர்க்கசீமா’வைப் பார்த்திருக்கிறேன். அதில் புறா ஒன்றைத் தொடர்ந்து கவர்ச்சியான குரலில் பானுமதி பாடிக் கொண்டு வரும், பாவுரமா பாட்டு அந்த நாளில் ரொம்பப் பிரசித்தம்.

அந்தப் பாட்டுக்காகவே மறுபடியும் பல தடவை ‘ஸ்வர்க்கஸீமா’ பார்க்கச் சென்றவர்களும் உண்டு.

பானுமதிக்குத் தமிழ்ப் படங்களிலும் மிகவும் நல்ல பெயர். அதனால் தமிழ்ப் படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக ஏற்பட்டது. - நடிகையர் திலகம் சாவித்ரி.

------------------------------

‘சொந்தக் குரலில் இனிமையாகப் பாடி பெரிய சினிமா நட்சத்திரம் ஆகி விட வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர். என்னுடைய நடிப்பு முறைகள், பாடும் விதம், காஸ்ட்யூம்ஸ் எல்லாவற்றிலும் மோகம் உண்டு அவருக்கு.

‘என்னோடு சேர்ந்து ‘வர விக்ரயம்’ தெலுங்கு படத்தில் பானுமதி நடித்தார். அமோக வசூலோடு படம் பிரமாதமாக ஓடியது. புதுமுகமான அவருக்கு அதில் நல்ல பெயர் கிடைத்தது.

பானுமதி எனது பரம ரசிகை. என்னைப் பார்த்துத் தன் பெயரை ‘கனகவல்லி’ என்று மாற்றிக் கொள்ளத் துடியாகத் துடித்தார். பானுமதி கனகவல்லியாக மாற, அவரது குடும்பத்தினரின் அனுமதி கிடைக்காமல் போனது. -புஷ்பவல்லி.

புஷ்பவல்லி ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி! எஸ். எஸ். வாசனால் புகழ் பெற்றவர்.

ஜெமினியின் தாசி அபரஞ்சி, பால நாகம்மா, சம்சாரம், சக்ரதாரி போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர். இந்தி நடிகை ரேகாவின் தாயார்.

பத்மினி, சாவித்ரி, புஷ்பவல்லி ஆகியோரால் மதிக்கப்பட்டவர் மட்டுமல்ல பானுமதி!

எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எம்.கே.ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி. ராமச்சந்திரன், டி.ஆர். மகாலிங்கம், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி. ராமாராவ், ஏ. நாகேஸ்வர ராவ் என அன்றையத் தென் இந்திய திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் பிரியமுடன் சேர்ந்து நடித்த ஒரே நட்சத்திரம். அவர்களால் அண்ணாந்து பார்க்கப்பட்ட சாதனைகளின் ஆகாயம்!

மாத ஊதியம் அளித்து நடிகைகளை கம்பெனி ஆர்ட்டிஸ்டாக வைத்திருந்த ஜெமினி எஸ்.எஸ்.வாசன் வெளியில் ஓடி வந்து ஒப்பந்தம் செய்த ஒப்பற்ற ஒரே ஆந்திர நாயகி!

ஜெமினியின் மூன்று மகத்தான வெற்றிச் சித்திரங்களில் மூன்று மொழிகளில் மிகக் குறுகிய காலத்தில் நடித்த அதி திறமைசாலி பானுமதி.!

இசை, நடிப்பு, பாட்டு, நடனம், எழுத்து, பட இயக்கம், ஓவியம், ஜோதிடம் என்று பானுமதி அறியாத கலைகளே கிடையாது. அத்தனையிலும் ஆழ்ந்த முத்திரை பதித்தவர்.

வாழ்வின் எந்த நொடிகளிலும் ஆண் ஆதிக்கத்தைத் தன் எல்லைக்குள் அனுமதிக்காத இயல்புடையவர் பானுமதி.

அறிமுகமானது முதல் கடைசி நாள் வரை எதற்காகவும் யாரிடமும் வளைந்து கொடுக்காத ஒரே ஸ்திரி. எவ்வாறு பானுமதியால் பல்வேறு துறைகளிலும் பரிமளித்து முன்னணியில் நிற்க முடிந்தது என்பது ஆராய்ச்சிக்குரிய கேள்வி.

பானுமதியின் சிறப்புகளை ஒரு சொம்புக்குள் அடக்கி விட முடியாது. நாளைய தலைமுறையினர் தோண்டித் துருவிப் பார்க்க நினைக்கும் சரித்திரம் படைத்தவர். அவரது வரலாற்றின் சில பொன் ஏடுகள்:

ஒங்கோல் நகரம். அங்கு தோடவரத்தில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வீடு என்றால் யார் வேண்டுமானாலும் சுலபமாக அடையாளம் காட்டி விடக் கூடும். எப்போதும் அதிலிருந்து அற்புதமான நாத வெள்ளம் பாய்ந்து கொண்டே இருக்கும்.

வயிற்றுக்காக வருவாய் ஆய்வாளராகப் பணி புரிந்தாலும் பொம்மராஜூ வெங்கட சுப்பையாவின் ஜீவன் இசை மாத்திரமே.

குறிப்பாக தியாகராஜர் கீர்த்தனைகளை அவரது உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருக்கும். சதா சர்வ காலம் தம்பூராவும் கையுமாக தியாகராஜரின் ராம நீ ஸமானம் எவரு, ராம பக்தி சம்ராஜ்யம், ராம ரகு குல ஜல நிதி, ராமா நீவாது கொந்துவோ, ரா ராமாயிண்டிதாக, லாவண்ய ராம, அனுபம குணாம்புதி, அநுராகமுலேனி, அப்பராம பக்தி, அபராதமுல நோர்வ, அம்பா நின்னு, அம்ம தர்மஸம்வர்த்தினி, என்று ஒட்டு மொத்தக் குடும்பமும் பாடும்.

தியாகராஜரின் சங்கீத வம்சத்தில் தானும் ஒருவர் என்று சொல்லிக் கொள்வதில் பொம்மராஜூவுக்கு அலாதி ஆர்வம். அதற்குக் காரணம் உண்டு.தியாகராஜரின் நேரடி சிஷ்யப் பரம்பரையில் வந்த சின்னையா பந்தலுவிடம் பொம்மராஜூ பாடம் பயின்றிருந்தார்.

இரண்டு மகன்கள், பெண்கள் இருவர் என நான்கு வாரிசுகள். மகள்களில் மூத்தவர் பானுமதி. குடும்பத்தில் தேனோடையாகப் பாய்ந்து ஒலித்தது அவரது குரல்.

இனிப்பும், பூவும் தவிர பொம்மராஜூ அலுவலகம் முடிந்து, அன்றாடம் வீடு திரும்பும் போது அவரது கைகளில் கனத்தது புத்தம் புதிய கிராமஃபோன் இசைத்தட்டுக்கள்.

எம்.எஸ். வசந்த கோகிலம், அப்துல் கரிம் கான், பால் கந்தர்வா,ரோஷனாரா பேகம் பாடிய ரிகார்டுகள் அலமாரிகளை நிறைத்தன.

பானுமதியும் தகப்பனைப் போலவே சங்கீதப் பைத்தியம். எந்த கீர்த்தனையையும் ஒரே ஒரு முறை கேட்டால் போதும். விளக்கேற்றும் நேரத்தில் அது நெஞ்சில் ராக தீபமேற்றி விடும்.

பானுமதிக்கு பிதாவே முதல் ஞான குரு. இந்துஸ்தானி சங்கீதம், கர்நாடக இசை இரண்டையும் அவர் தன் மகளுக்குக் கற்பித்தார். விஜய நகரத்தின் ஆஸ்தான கவிஞர் விஸ்வநாத கவிராஜ், மற்றும் விஸ்வநாத சத்யநாராயணா இருவரும் பானுமதிக்கு விருத்தம் எழுதச் சொல்லித் தந்தார்கள்.

இனிய குரல் வளம், அதனோடு தீவிரப் பயிற்சியும் அமைந்ததால் பானுமதியை கர்நாடக இசைப் பாடகியாக உருவாக்க முனைப்போடு பாடுபட்டார் தந்தை. அப்போது பானுமதிக்கு பால வயது.

முதல் முயற்சியாக பானுமதியை இசைத்தட்டுகளில் பாடச் செய்தார். நல்ல வரவேற்பு அமைந்தது.

உரிய பருவத்தில் பெரியவள் பானுமதிக்கு கல்யாணம் செய்து பார்க்க ஆசைப்பட்டது குடும்பம். வந்த ஓரிரு வரன்களும் அக்காலத்திய வழக்கப்படி இரண்டாம் தாரம், மூன்றாம் தாரம் என்றோ, இல்லை மாற்றுத் திறனாளி மாப்பிள்ளைகள் ஆகவோ வந்து சேர்ந்தன.

ஊமைப் படங்கள் விடை பெற்று, டாக்கிகள் தயாரான காலம். திறமையாகப் பாடி நடிக்கத் தெரிந்தவர்களுக்கான சொர்க்க வாசல் அகலத் திறந்தது. பொம்மராஜூவின் ஆப்த நண்பர் சினிமா டைரக்டர் சி. புல்லையா.

அவர் தனது இசைச் சித்திரத்தில் பானுமதியை அறிமுகப்படுத்த விரும்பினார். நா தழும்பேற தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடி வளர்ந்த பானுமதி சினிமாவில் நடிப்பதா...? பொம்மராஜூவுக்குத் திகைப்பு தோன்றியது.

தொடக்கத்தில் திரையில் தோன்றியவர்கள் தேவதாசி குல மகளிராகவோ, கணவர்களால் கை விடப்பட்டவர்களாகவோ, வாழும் வழியற்று சினிமாவில் சேர்ந்தவர்களாகவோ, பிறந்தது முதலே வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தங்கள் அழகையும் திறமையையும் காட்டி நடித்தவர்களாகவோ இருந்தனர். இதில் பானுமதி எந்த ரகமும் இல்லை.

பானுமதியை நடிகையாக எண்ணிப்பார்க்க உள்ளம் நடுங்கியது பெற்றோருக்கு. மனம் சோர்ந்து போய் ஆஸ்தான ஜோதிடரிடம் பானுமதியின் ஜாதகத்தைக் காட்டி ஆருடம் கேட்டார் அப்பா.

‘18 வயதில் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். ஆனால் இது நிச்சயமாக அபூர்வ ஜாதகம். சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் சகலகலாவல்லியாக பானுமதி வருவார். இது ஆண்டவன் கட்டளை. உம்மால் தடுத்து நிறுத்த முடியாது’ என்றார் அவர்.

அப்படியும் பொம்மராஜூவுக்கு மனசு கேட்கவில்லை.

‘பானுமதிக்கும் பாட்டுப் பாடுவதில் மட்டுமே ஆர்வம். பிடித்தம். நடிப்பெல்லாம் தனக்குச் சரிப்பட்டு வராது என்கிறாள். கண்ட கண்ட தடி ஆம்பிளைகளையெல்லாம் கல்யாணமாகாத என் பெண் தொட்டு நடிப்பாளா...?’

‘மற்றவர்கள் எப்படியோ ஆடி விட்டுப் போகட்டும். உன் பெண்ணால் யாரையும் தீண்ட முடியாது என்றால் தள்ளி நிற்கச் சொல்லி நடிக்கச் செய். நீயும் அவள் கூடவே பாதுகாப்புக்குப் போ.

முழு ஒழுக்கதோடு வேலை செய்தால் எந்தத் தொழிலிலும் புகழ் பெற முடியும். சினிமா அவளது தலையெழுத்து என்றான பிறகு அதைத் திருத்தி எழுத நீயும் நானும் யார்?’

ஜோதிடர் செவிட்டில் அறைந்த மாதிரி வகுப்பெடுத்த பிறகு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காமல் வெளியேறினார் பொம்மராஜூ.

பூஜை அறையில் தியாகராஜரின் கீர்த்தனையைப் பாடிய வேளையில் மனச் சாந்தி கிடைத்தது. சினிமாவில் நடிக்க மறுத்து முரண்டு பிடித்த பானுமதியை சமாதானம் செய்தார்.

‘பானு நீ கச்சேரி பண்ணா ஒரு ஊர்லதான் கேக்க முடியும். ஆனா சினிமாவில் பாடி நடிச்சா எல்லாருக்கும் தன்னால போய்ச் சேரும். கல்கத்தால உன் முதல் படத்தோட ஷூட்டிங். பிரயாணத்துக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோ. அவா கூப்பிடற சமயத்துக்குச் சமர்த்தா புறப்படத் தயாரா இரு.

அங்கே இங்கே போகாம நான் உன் கூடவே இருந்து உன்னை வழி நடத்துவேன். நீ எந்தப் பயமும் இல்லாம தைரியமா நடிக்கலாம் கொழந்தே.’

அப்பா தன் வாக்கைக் கடைசி வரையில் காப்பாற்றினார். பானுமதிக்குப் புது அடையாளத்தைத் தேடித் தந்தார்.

85 ஆண்டு காலத் திரை உலக வரலாற்றில் ‘த்ரிஷா வரையில்’ நடிகைகளை வழக்கமாக ஆட்டி வைப்பது தாயார்கள் மட்டுமே. ஆனால் பானுமதிக்கு சகலமும் அப்பா மயம். பானுமதி ஆல்வேஸ் அன் எக்செப்ஷன் என்பது விதி போலும். பானுமதியின் தாயார் அம்மனியம்மாவுக்குத் தன் மகள் குறித்து அனாவசிய அச்சம், கவலை ஏதும் இருக்கவில்லை.

‘வரவிக்ரயம்’ தெலுங்குப் படத்தில் பானுமதியின் அபிமான நடிகை புஷ்பவல்லி கதாநாயகி. அவரது தங்கையாக பானுமதி சினிமாவில் அறிமுகமானார்.

அவரைப் பெண் பார்க்கும் காட்சியில் முதன் முதலாக பானுமதி பாடியது, பூர்ண சந்திரிகா ராகத்தில் அமைந்த ‘பலுக வேமிநா தெய்வமா’ என்கிற கீர்த்தனை.

பானுமதி அநேக முறை பாடிப் பழகிய தியாகராஜர் கீர்த்தனையை டாக்கியில் வலிய இணைத்தவர் அப்பா பொம்மராஜூ. அவரது பெயரால் மட்டுமே பொம்மை. மற்றபடி செயல் வீரர். அவரது அடியவராக மாறி விட்டார் இயக்குநர் சி. புல்லையா. 1939 ஆம் ஆண்டை வரவிக்ரயம் படத்தின் வெற்றி சிறப்பித்தது.

1925 செப்டம்பர் 7ல் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் பானுமதி. பணம் சம்பாதிக்க அவர் சினிமாவுக்கு வரவில்லை. வாய்ப்பாட்டுக்கே முதலிடம் கொடுத்தார். நடிப்பு அவரைப் பொறுத்தமட்டில் இரண்டாம் பட்சம். ஒற்றைத் தலைவலி!

அதனாலேயே தன் மனம் போன போக்கில் கடைசி வரையில் நடித்தார்.

சுப்புலட்சுமி- சுஜாதா(ஸ்வர்க்க ஸீமா) புஷ்பா,(நல்ல தம்பி) காஞ்சனா (அபூர்வ சகோதரர்கள்) லைலா,(லைலா மஜ்னு) சண்டி - சாமுண்டி,(சண்டி ராணி) பூங்கோதை,(மலைக்கள்ளன்)

(கல்யாணி, (கள்வனின் காதலி) பொம்மி,(மதுரை வீரன்) ரங்கம்மா,(ரங்கோன் ராதா) பொன்னுரங்கம்(மக்களைப் பெற்ற மகராசி) பானுமதி - சந்திரமதி, (மணமகன் தேவை) அமராவதி,(அம்பிகாபதி) மதனா,(நாடோடிமன்னன்) இளம் விதவை மாதவி, (கானல் நீர்) மனோரமா (அறிவாளி) மீனாட்சி (கட்டிலா தொட்டிலா) பாட்டி (செம்பருத்தி)

என்றெல்லாம் விதவிதமாகப் படத்துக்குப் படம் மாறுபட்டு நடித்த போதும், கதாபாத்திரங்களுக்கும் மேலாக பானுமதி அவருக்கே உரிய தனித்துவத்துடன் துருத்திக் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். அஞ்சலிதேவி, சாவித்ரி, பத்மினி போன்ற மற்றச் சிறந்த நடிகைகளிலிருந்து அதுவே பானுமதியை இனம் பிரித்துக் காட்டியது.

அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களும் பானுமதியை பாராட்டியது வரலாறு! வாழ்த்துகள் மட்டுமல்ல. வசவுகளும் பானுமதிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.

சினிமா செய்தியாளர்களின் நட்சத்திர சந்திப்பு. பங்கேற்ற பானுமதி மீது அன்று எதிர் பாராதத் தாக்குதல். மூத்தப் பத்திரிகையாளர் ‘நாரதர் ஸ்ரீனிவாசராவ். அரங்கத்தில் ‘பானுமதியைப் பொல்லாதவர்!’ என்று மிகக் கடுமையாக நேருக்கு நேராக விமர்சிர்த்தார். பானுமதி நிலை குலைந்து போகவில்லை. ஸ்ரீனிவாசராவின் கருத்தைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்.

இந்திய சினிமாவில் கறாரும் கண்டிப்புமாக இமாலயத் துணிச்சலுடன் வலம் வந்த ஒரே நாயகி பானுமதி.

மும்பையில் நடைபெற்றப் படப்பிடிப்புக்காகச் சென்றிருந்த பானுமதி மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். ஸ்டுடியோ அதிபரை சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாக பானுமதி விளாசித் தள்ளினார்.

‘என்னடா நெனச்சீங்க என்னை...? உன்னைப் போல முந்நூறு பேரை எனக்குக் கீழே சொந்த ஸ்டுடியோல வேலைக்கு வெச்சிருக்கேன் தெரியுமா. மரியாதை கெட்ட ஜென்மங்களே...

எல்லா நடிகைகள் கிட்டேயும் பல்லக் காட்டற மாதிரி என் கிட்டேயும் நடந்தீங்கன்னா உங்க வாலை வெட்டிடுவேன்.’

என்று கர்ஜித்து விட்டு உடனடியாக விமானத்தைப் பிடித்துச் சென்னைக்குத் திரும்பினார்.

‘படா படா பஜாரிப்பா.’ என்று பயந்து ஓதுங்கினார்கள் பாலிவுட் பட அதிபர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com