சாவித்ரி-20. கல்யாணப் பரிசு!

'இயற்கையாகவே நான் மென்மையான உணர்ச்சிகளில் மனத்தை ஈடுபடுத்திக் கொண்டு விடுவேன். யாரிடமும் அன்பும் பற்றும் கொண்டால் அது மிகவும் ஆழ்ந்து

'இயற்கையாகவே  நான் மென்மையான உணர்ச்சிகளில் மனத்தை ஈடுபடுத்திக் கொண்டு விடுவேன். யாரிடமும் அன்பும் பற்றும் கொண்டால்  அது மிகவும் ஆழ்ந்து படிந்து விடும். அதற்குச் சிறு அதிர்ச்சி ஏற்பட்டாலும்  என்னால் தாங்க முடியாது, மிகுந்த மனவேதனைப் படுவேன்.’ - சாவித்ரி.

நிஜத்தில் நடிகையர் திலகம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நிதானம் அற்றவர். மகிழ்ச்சியோ, துக்கமோ,  ஆவேசமோ சட்டென்று வெளிப்படுத்தி விடுவார். கறந்த பால் போன்ற அப்பட்டமான மன நிலை. காமிராவுக்கு முன்பு மட்டுமே அவரது உதடுகள் ஒத்திகை பார்த்தன. பாசாங்குகளற்ற அற்புத பிறவி! சுபாவத்தில் பச்சை மிளகாய். முன் கோபத்தில்  சிவகாசி சரவெடி!

சாவித்ரியால் மதுவைச் சுவைக்காமல் இருக்க முடியவில்லை. மற்ற நாயகிகளுடனான ஜெமினியின் மன்மத லீலைகள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி. கால காலமாக மனப்பாடம். இருந்தும் அழுதார். காரணம், உடல் இன்பத்தைப் பொருட்படுத்தாது பரஸ்பரம் ஜெமினியும் சாவித்ரியும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த கலப்படமற்ற ஐ எஸ் ஐ அன்பு!

நீங்கள்  பரிசுத்தமான நேசத்தை  அனுபவத்திருந்தால் மாத்திரமே ஜெமினி - சாவித்ரியின் உறவையும் பிரிவையும் மனமார  உணர முடியும்! அது ஏதோ மேம்போக்கான சினிமாகாரர்களின் அன்றாட அடிதடி கலாட்டா கிடையாது. உள்ளார்ந்த உணர்வுகளின் விஸ்வரூபம்!

மேற்கத்திய கலாசார கோயிங் ஸ்டெடி ஃலைப் அல்ல ஜெமினி- சாவித்ரியின் இல்லறம்.  ஒன்று பட்ட உயிர்க் கூடுகளில் பொங்கிப் பெருகி ஓடிய பிரியங்களின் சமுத்திரம்.

நேசத்தின் நீரோட்டத்தில் கல் எறிந்த பின் சாவித்ரியால் சும்மா இருக்க முடியவில்லை. கணவருடன்  கற்கண்டாக பேசி பேசி கனிந்த நெஞ்சம் கடைசியில் ரவுத்திரம் பழகியது. காணவே உக்கிரமாகி ரகளை உச்சம் தொட்டது.

தன்னை விட்டு விலகி நிற்கிற தலைவனைத் தண்டிப்பதாக எண்ணி, ஜெமினிக்கு தீராத அவமானத்தை அனைவரின் முன்பும் தேடித் தந்தார்.

ஜெமினி ஸ்டுடியோவில் சாந்தி நிலையம் ஷூட்டிங். தனிமைத் துயரில் மனம் குமுறிய  சாவித்ரி குடித்து விட்டுப் போய் அங்கே காதல் மன்னனுடன் தகராறில் ஈடுபட்டதாகச் செய்திகள் கசிந்தன. ஜெமினி-சாவித்ரியின் நிஜமான ரசிகர்கள் வேதனைப்பட்டனர்.

‘அப்பா அம்மா ரெண்டு பேருமே பார்க்க ரொம்ப அழகா இருக்கிறதிலே எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கும். ஜோடிப் பொருத்தம்னு சொல்லும் போதே அடையாளம் காட்டணும்னா அது ஜெமினி கணேசன் - சாவித்ரியாகத்தான் இருக்கும்.

இரண்டு இதயங்கள் ஒன்றை ஒன்று விரும்பினாங்க. காதலிச்சாங்க. அதனால ஏற்பட்ட உறவு இது. அப்பாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டதே, குழந்தைகளிருக்கே, இவரோட நான் வாழறனே, என் வாழ்க்கைக்கு என்ன பாதுகாப்பு இருக்கும், உத்தரவாதம் இருக்கும்னு அம்மா நினைக்கலை.

அதே போல அப்பாவும் என் குடும்பத்துக்கும் இவளுக்கும் என்னத் தொடர்பு, இவளுக்கு ஆங்கிலம் கூட சரியாப் பேசத் தெரியாதேன்னு அம்மாவைப் பத்தி நினைக்கல.

இரண்டு பேரும் உண்மையான  காதலுக்காக  எமோஷனலா ஒன்றிப் போய்த்தான் ஏத்துக்கிட்டாங்க. வாழ்ந்தாங்க.

அந்த அளவு உணர்ச்சிவசப்பட்டதாலேதான் அவங்களுக்குள்ள விரிசலும் பிரிவும் வந்தது’. -விஜய சாமுண்டீஸ்வரி. 

பிராப்தம் வெளியாகி சரியாக ஓர் ஆண்டுக்குப் பின்னர், 1972 தமிழ்ப் புத்தாண்டு. கோலிவுட்டில் புகுந்த வீடு படம் மூலம் லட்சுமியின் மாமியாராக சாவித்ரியின் மறு பிரவேசம் நிகழ்ந்தது. அது அந்த ஆண்டின் மிகச் சிறந்த படம். சாவித்ரி நடிக்க புகுந்த வீட்டை உடனடியாக ஏவி.எம். தெலுங்கிலும் தயாரித்தது.

மயிலாப்பூர் ஏவிஎம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபம். ஜூலை 21.-1972. வெள்ளிக்கிழமை மாலை. புகுந்த வீடு 100வது நாள் வெற்றி விழா!

சாவித்ரி நெற்றியில் திருநீறு குங்குமம் துலங்க குடும்பப் பாங்காக, கழுத்தில் ரோஜா மாலையோடும் முகத்தில் மலர்ச்சிரிப்போடும் பரிசு பெற மேடை ஏறினார்.  கேடயம் வழங்கிய  விஐபி நடிகர் திலகம். தன் உடன் பிறவா தங்கையின் செகன்ட் இன்னிங்ஸ் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நடிகையர் திலகத்தின் மகிழ்ச்சியை திரை உலகம் ஆச்சர்யத்துடன் நோக்கியது. புகுந்த வீடு கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே சமயம். வருமான வரி இலாகா சாவித்ரியின் இல்லத்திலிருந்து ஆறு லட்சம் ரூபாயைக் கைப்பற்றியதாகத் தகவல்கள் பரவின.

'பிரபல தமிழ் குணச்சித்திர நடிகையின் வீட்டில் ரெய்டா?’ எனப் பத்திரிகைகள் கிசுகிசு பாணியில் கேள்விக்குறி போட்டன. 

சாவித்ரி வீட்டில் இன்கம்டாக்ஸ் ஆபிஸர்ஸ் சோதனையிட்டது நிஜம் என்கிற கருத்தை ஆரூர் தாசும் பதிவு செய்துள்ளார்.

‘வரவு - செலவு கணக்கு சரியாகச் சமர்ப்பிக்கப்படாததால் நிறைய வருமானவரி விதிக்கப்பட்டதுடன் கூட, அன்றைய பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் ஏதோ தனிப்பட்ட காரணத்துக்காக, சாவித்ரியை காட்டிக் கொடுத்து அதனால் வருமான வரித்துறையினர்,  சாவித்ரியின் வீட்டைச் சோதனை போட்டு அவர் வைத்திருந்த மிச்சம் மீதி பணத்தையெல்லாம் சட்டப்படி எடுத்துக் கொண்டு போய்விட்டனர்.’

-------------------------------------------------------------------------------------

புகுந்த வீட்டைத் தொடர்ந்து சாவித்ரி நடித்தது 'பெத்த மனம் பித்து'. எஸ்.பி. முத்துராமனின் இரண்டாவது படைப்பு. 1973 தைத் திருநாள் வெளியீடு.

எஸ்.பி. எம். இயக்கி நூறு நாள் கொண்டாடிய முதல் படம் பெத்த மனம் பித்து. மலையாளத்திலிருந்து   அம்மா கேரக்டருக்காகவே தழுவப்பட்டது. சாவித்ரி ஒப்புக் கொண்டிருக்காவிட்டால்  ஒரு வேளை பெத்த மனம் பித்து தமிழில் வந்திருக்காதோ என்னவோ. படத்தின் ஜீவனே தாய் மீனாட்சியாக வரும் சாவித்ரிதான்.

பெத்த மனம் பித்து சாவித்ரியின் நடிப்புக்காகவே ஓடியது. வேறு பெரிய நட்சத்திரங்கள் யாரும் அதில் கிடையாது. சாவித்ரியால் முத்துராமன்  கூட ஹீரோவாக வெற்றி பெற்ற படம் அது. பிராப்தத்தில் அற்ப காசு, பணம் போயிற்றே தவிர, திறமை சாவித்ரியின் கூடவே தங்கி விட்டது கோலிவுட்டுக்குப் புரிந்தது.

ஜெமினி கணேசனின் இரண்டாவது வீடு புஷ்பவல்லி. 'மலேயா மாமியார்’ என்ற பெயரில் சொந்தப் படம் எடுத்து பல லட்சங்களை இழந்தார். நஷ்டத்தைச் சரிக்கட்டத் தன் மகள் பானு ரேகாவை மிகக் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு 1971ல்  இந்தியில் நட்சத்திரமாக்கினார்.

சாவித்ரியும் தன் மகள் விஜியை திரையில் அறிமுகப்படுத்துவார் என்பது சிலரது எதிர்பார்ப்பு.

‘என் மகள் விஜி வாங்கி வரும் மார்க்குகளைப் பார்த்தால் படிப்பிலும் அவள் அப்பா மாதிரிதான்.  ஒரு சமயம் டாக்டராகப் போகிறேன் என்பாள். மறு நிமிடம் வக்கீலாகப் போகிறேன் என்பாள்.

'சீதா’வில் நான் வக்கீலாகவும் 'சிரஞ்சீவி’யில் ( நீர்க்குமிழி-தெலுங்கு) டாக்டராகவும் வேஷம் போடும் போது அவள் நிஜமாகவே அப்படி வந்தால் அதைவிட எனக்கு சந்தோஷம் என்ன இருக்க முடியும்?

என் மகன் சதீஷ். ஒரே பையன் தானே அவனைச் செல்லம் கொடுத்து சாவித்ரி வளர்ப்பாளோ என்று நீங்கள் யூகித்தால் அது தவறு.

என் மகனை நான் ஆரம்பம் முதலே  கண்டிப்புடனும் கட்டுப்பாடுடனும் வளர்க்கப் போகிறேன். இவங்க அப்பா கணேஷ், அவங்க அப்பா-அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவர் அவங்க அம்மாவிடம் இருந்ததைப் போல இவனும் என்னிடம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இது என் ஆசைக்கனவு அல்ல. கவலை.

சிவாஜிகணேசன், எஸ்.வி.ரங்காராவ், கே. பாலாஜி, ஏவி.எம். ராஜன், அஞ்சலிதேவி, பத்மினி, எம்.என். ராஜம், ராகினி, ஜமுனா, புஷ்பலதா, மனோரமா ஆகியோர் கலந்து கொள்ள, மூன்று வயது வரை விஜியின் பிறந்த நாள் விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடினோம்.’

என்றெல்லாம் பத்திரிகைகளில் பூரிப்புடன் எழுதிய நடிகையர் திலகம் திடீரென்று திடுக்கிடச் செய்யும் புதிய முடிவுக்கு வந்தார்.

 தனது மகள் விஜயசாமூண்டீஸ்வரிக்கு அவசரக்கல்யாணம் செய்து பார்க்கும் தீர்மானம் அவரை அரித்தது. நெல்லூரில் அனுமந்தராவ் என்பவரின் மகன் கோவிந்தராவை மணமகனாக, தனது சொந்தத்தில் பார்த்து விட்டார்.

விஜயசாமூண்டீஸ்வரி எட்டாவது படிக்கும் மாணவி. பதினைந்து வயது கூட பூர்த்தி ஆகவில்லை. மகன் சதீஷ்  பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு வாசித்துக்கொண்டிருந்தான். சதீஷ் வாயைத் திறந்தால் 'என்னடி ராக்கம்மாவும்’, ’தம் மேரே தம்மும்’ திரை கானமாக ஒலித்தன.

'மேஜராகாத மைனர் பெண்ணுக்கு மேரேஜா...?  விஜி தொடர்ந்து படிக்கட்டும். கல்யாணத்துக்கென்ன அவசரம் இப்போது..?’ என்றார் ஜெமினி. சாவித்ரியின் நோக்கம் தந்தைக்கு சரி என்று தோன்றவில்லை. அம்மாவின் பிடிவாதத்துக்கு  வழக்கம் போல் ஜெயம்.

டிசம்பர் 5, 1973ல் சாவித்ரியின் ஹபிபுல்லா சாலை இல்லத்தில் விஜிக்குத் திருமணம் என அறிவித்தார்.

தன்னை எந்த வீட்டிலிருந்து சாவித்ரி வெளியேற்றினாரோ... அங்கே சென்று, தன் ஆசை மகளின் கல்யாணத்தில் கலந்து கொள்ள  ஜெமினி கணேசனுக்கு விருப்பம் கிடையாது. இன்னொரு காரணம் சாவித்ரி குறித்த முகூர்த்த நாளில் அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்தாக வேண்டும். அங்கே கலை விழாவில் கலந்து கொள்வதாக முன்பே சம்மதம் சொல்லி, அதற்காக அத்தனை ஏற்பாடுகளும் தயார் என்கிற நிலை.

வேறு தேதியில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாமே என்றார் ஜெமினி. மேடம் சாதாரணமாகவே பிடிவாதத் திலகம். சாவித்ரியா விட்டுக் கொடுப்பார்?

அப்பா ஜெமினியை ஏற்றிக் கொண்டு விமானம் காற்றில் பறந்தது. ஆனாலும் மனசு கேட்கவில்லை. டிசம்பர் நான்காம் தேதி. தென் ஆப்பிரிக்காவிலிருந்து அன்பு மகளுக்குத் தன் ஆசிர்வாதங்களை டெலிபோன் மூலம் தெரிவித்தார்.

எப்பேர்ப்பட்ட வைபவம்!  வாழ்நாளில் மீண்டும் வருமா? எத்தனை எத்தனை கனவுகளோடு விஜியின் கல்யாணத்துக்காக யோசித்திருப்பார் அப்பா ஜெமினி.

அத்தனையும் சாவித்ரி என்கிற அழகான அம்மா நடிகையால் காணாமல் போய் விட்டது.

கணவர் ஊரில் இல்லாவிட்டால் என்ன? அன்புள்ள அத்தானின் இடத்தில் அவரது தர்ம பத்தினி பாப்ஜியை அமர்த்தி, கல்யாணத்தை வெற்றிகரமாக நடத்தினார் நடிகையர் திலகம்.

பாப்ஜிக்குதான் வானத்தைப் போல அகன்று விரிந்து பரந்த,  எதையும் தாங்கும் இதயமாயிற்றே!

ஜெமினியைப் போல் சாவித்ரியும் தக்க சமயத்தில் அதை இரவல் வாங்கிக்கொண்டார். போனஸாக சாவித்ரியின் மகளுக்குத் தங்க நெக்லஸை கல்யாணப் பரிசாக அளித்தார் அன்னை பாப்ஜி.

1974 ஜனவரி முதல் வாரம். சென்னை திரும்பிய ஜெமினி மணமக்களுக்கு நேரில் வாழ்த்துகளைக் கூறினார்.

-----------------------

'நண்பனால் மட்டுமே எதிரியாக முடியும். உறவினர்கள் ஆரம்பம் முதலே பகைவர்களாக இருக்கிறார்கள்.’- பில் மார்ஷல்.

பில் மார்ஷலின் அந்தக் கருத்து யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, சாவித்ரியின் வாழ்க்கைக்கு மிக அற்புதமாக இலக்கணம் வகுத்தது.  அதைக் குறித்து சாவித்ரியே தன் மனம் திறந்து வேதனைகளைக் கொட்டியுள்ளார். (1972  ஜூலையில் அளித்த நேர்காணல்)

‘எனக்கு முன் கோபமும் அவசர புத்தியும் உண்டு. குடும்பப் பொறுப்பு முழுவதையும் என் அம்மா கவனித்து வந்தார்கள். விலைவாசி தெரியாமல் அசட்டையாக வாழ்ந்தேன்.

விஜி, சதீஷோடு நானும் மூன்றாவது குழந்தையாகத் தாயின் மடியில் குதூகலமாகப் படுத்துக் கொள்வேன். அம்மா நான் சற்றும் எதிர்பாராத சமயத்தில் இறந்த பிறகு, மொத்த சுமையும் என் தலையில் விழுந்தது. எனக்கு ரிலேட்டீவ்சை விட ஃப்ரண்ட்ஸை அதிகம் பிடிக்கும். ஃப்ரண்ட்ஸூம் நிறைய பேர் கிடையாது.

'அடேயப்பா! சாவித்ரி இவ்வளவு சம்பாதிக்கிறாளே...! நமக்கு ஏன் உதவக் கூடாது என்று பேசக் கூடியவர்களாகவும் நினைப்பவர்களாகவும் எனது உறவினர்கள் இருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதில் நான் படுகின்ற கஷ்டம் சொந்தக்காரர்களுக்குத் தெரியுமா...?

என் பணத்துக்காகவே என்னிடம் பழகுகிறவர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாது.’

சொந்தக்காரர்களில் இரு வகையினர் உண்டு. ஒரு சாரார் அக்னி போன்றவர். இன்னொரு வர்க்கம் புதைகுழி போன்றது.

முகத்துக்கு நேராக மனத்தில் பட்டதைப் படபடவென்று கொட்டித் தீர்க்கும் எரியும் நெருப்பை நம்பலாம். ஆறுதல் என்கிறத் தண்ணீர் ஊற்றி அணைக்கலாம். அதுவும் முடியாத போது தாண்டி வரலாம். அந்த இடத்தை விட்டு ஓடிச் சீக்கிரம் தப்பித்து விடலாம்.

ஆனால் முகத்தில் கள்ளச் சிரிப்பும் உதடுகளில் கபடமான சர்க்கரைப் பேச்சும் நிறைந்த புதைகுழிகளை  எளிதில் அடையாளம் காணவோ நம்பவோ முடியாது. சாவித்ரியைச் சுற்றிலும் புதைகுழிகள் பொக்கிஷம் எடுக்கக் காத்திருந்தன. 

சாவித்ரியின் அச்சம் கூடிய விரைவில் நிஜமானது. அதைப் பற்றி ஆரூர்தாஸ்  தினசரி ஒன்றில் எழுதியவை:

‘வருமான வரி பாக்கி. அத்துடன் படம் எடுத்தது சம்பந்தமாக ஏற்பட்ட கடனுக்கான வட்டி செலுத்தத் தவறியது போன்ற காரணத்துக்காக சாவித்ரி பிரச்சனையில் சிக்கினார். அதனால், சாவித்ரி பார்த்துப் பார்த்து,  ஆசை ஆசையாகக் கட்டிய ஹபிபுல்லா சாலை பங்களா,  ஜப்தி செய்யப்படப் போவதாக அவர் வீட்டுக்கு எதிரிலேயே தெருவில் தண்டோரா போடப்பட்டது.

அதைக் கண்டு சாவித்ரி துன்பத்தில் துடித்தார். உடனே தன்னிடமிருந்த விலையுயர்ந்த நகைகளையெல்லாம் நான்கைந்து பாகமாகப் பிரித்துத் தனித்தனியாகக் கட்டிப் பெட்டியில் வைத்து, தன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று நினைத்திருந்த நபர்களிடம் கொடுத்து வைத்தார்.

அவர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் - சென்னை அண்ணாநகரில் இருந்த அன்றைய பிரபல தெலுங்கு நடிகர், அவருடைய மனைவி. மற்றும் ஐதராபாத்திலிருந்த சாவித்ரியின் ரத்த உறவு கொண்ட பெண்ணும், அவருடைய கணவரும் ஆவார்கள்.

சாவித்ரி ஐதராபாத்தில் தன் சொந்தப் பணத்தில் இரண்டு வீடுகள் வாங்கி அவர்களிடம் ஒப்படைத்து இருந்தார். அவற்றில் ஒரு வீட்டில் அவர்கள் வசித்துக்கொண்டு, இன்னொரு வீட்டை வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தை சாவித்ரிக்குக் கொடுக்காமல் அவர்களே அனுபவித்து வந்தனர்.

கஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக அந்த வீடுகளைத் திருப்பித் தனக்குக் கொடுக்கும்படி சாவித்ரி கேட்டதற்கு,  மறுத்து ஒரு வீட்டை மட்டும் சாவித்ரி பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்து விட்டு, மற்றொன்றை - பினாமி என்ற முறையில்  தனக்கே சொந்தமாக்கிக் கொண்டு நடிகையர் திலகத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்.

அந்த தெலுங்கு நடிகரும், அவரது மனைவியும், சாவித்ரி தியாகராய நகர் வீட்டை விட்டு அண்ணாநகருக்கு வந்து விட்டால்,  அவரைத் தாங்களே கவனித்துக் கொள்வதாகக் கூற, சாவித்ரி அதற்குச் சம்மதித்தார். அவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் வேறொரு வாடகை வீட்டைப் பார்த்து அதில் சாவித்ரியைக் குடி வைத்தனர்.

மகுடம் சூடாத மகாராணியாக தன் சொந்த மாளிகையில் வாழ்ந்து மகிழ்ந்த அந்த மாடப்புறா இப்பொழுது ஒரு சிறிய வாடகை வீட்டில் அல்ல,  கூட்டில் அடைப்பட்டது.

பின்னர்  அவர்களும் சாவித்ரி கொடுத்து வைத்திருந்த நகைகளைக் கையாடினார்கள்.

சாவித்ரி தி.நகர். ஹபிபுல்லா சாலை பங்களாவை விற்றுக் கடன்களை அடைத்து விட முடிவு செய்து கணவர் ஜெமினி கணேசனுக்குத் தெரிவித்தார்.

ஜெமினி வேறு எந்த ஒரு வழியும் இல்லாத நிலையில் விலை பேசி வீட்டை விற்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

சாவித்ரியின் அந்தக் கனவு மாளிகை கடனுக்காகக் கை விட்டுப் போனது. அத்துடன் அண்ணியைக் கவ்விக் கொண்டிருந்த கடனும் தீர்ந்தது.

நல்ல வேளையாக பிரதான - மெயின் பங்களாவின் மேலண்டைப் பகுதி மனை சாவித்ரியின் மகள் விஜியின் பெயரில் பத்திரப்பதிவு ஆகி, அதில் அமைந்திருந்த கட்டடம் சாவித்ரி கட்டியிருந்தாலும், மனை மகளின் பெயரில் இருந்ததால், அதில் யாரும் கை வைக்க  முடியவில்லை.’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com