வைஜெயந்தி மாலா: 6. ஸ்ரீராம ஜெயம்...!

எந்தத் தருணத்தில் உள்ளே புகுந்தது என்ற உணர்வறியாமல் சுவாசம் போல் சீராக ஓடிக் கொண்டிருந்தது காதலும். காய்ச்சல் தீர்ந்த கணத்திலா... நோய் தீர்க்க வந்த மருத்துவரை நோக்கிய முதல் நொடியிலா..?

எந்தத் தருணத்தில் உள்ளே புகுந்தது என்ற உணர்வறியாமல் சுவாசம் போல் சீராக ஓடிக் கொண்டிருந்தது காதலும். காய்ச்சல் தீர்ந்த கணத்திலா... நோய் தீர்க்க வந்த மருத்துவரை நோக்கிய முதல் நொடியிலா..?

மருந்துகளை விடவும் வைத்தியரின் புன்சிரிப்பே வியாதிகளை விரட்டக் கூடிய முதல் வலி நிவாரணி. பாலிக்கு அந்த வித்தை புரிந்திருக்கக் கூடும்.

'பாரதம் கொண்டாடும் பார் புகழும் அழகியின் பிணி தீர்க்க வந்திருக்கிறோம்...! ' என்கிற ரகசிய இறுமாப்பை, எப்படியாவது பிரதிபலித்து விடத் துடித்த உதடுகளின் அனிச்சையான செயலின் நல் விளைவு...!

இரு பாலரின் ஒருமித்த உணர்வுகளும் ஊசிகளின் ஒத்தடத்தில், ஓயாமல் இடம் மாறி ஒத்திகைகள் தேவைப்படாமல், உடனடியாக உட் புகுந்ததா காதலும்..?

ஒப்பனைகளின் ஊர்வலத்தில் நாள் தோறும் கூடு விட்டு கூடு பாய்ந்து, அன்றாடம் அரிதாரம் பூசித் தனக்குத் தானே அந்நியமாகி, எழிலைச் சிதைக்கும் செயற்கை ஒளியில் வேற்று மனிதர்களுடன் நினைவு மறந்து, காமிரா முன்பு நின்று அழுது புலம்பி கண்ணீர் விட்டு, சிரித்து வேடிக்கைக் கதைகள் பேசி... லட்சம் லட்சமாக ஊதியம் வாங்கும் கனவுக்கன்னிக்கும் நிஜத்தில் காதல் கனிந்தே விட்டது.

புண்ணைத் துடைத்த பஞ்சாக தூரத் தூக்கி வீசுவதா காதல்...? உள்ளத்தை செல் அரிக்கும் புற்று நோய் அல்லவா.

தாமதமாகவேணும் வைஜெயந்திக்கு வசந்தத்தின் அஞ்சல் வந்து விட்டது!

அகவைகளின் எண்ணிக்கையில் யவ்வனம் விடை பெற்றுப் போனாலும், கட்டுப்பாடுகளுடன் கட்டிக் காத்தத் தமிழச்சியின் தேகத்தில் இளமையின் அணைக்கட்டு நிரம்பி வழிந்தது.

பஞ்சாப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் சமன்லால் பாலி. சாமர்த்தியங்கள் கை வரப் பெற்ற அனுபவசாலி! மும்பையில் ராஜ் கபூர் முதலான உச்ச நட்சத்திரங்களின் குடும்ப டாக்டர். திருமணமாகி மூன்று குழந்தைகளின் தகப்பனார்.

முதல் மனைவியோடு நெய்த நேசப் புடைவையில் கிழிசல் விழுந்த சூழல்.

கலை மாந்தர்களால் கர்வஸ்திரி என்று கிசுகிசுக்கப்பட்ட வைஜெயந்தியுடனான சந்திப்பும், நெருக்கமான தோழமையும் வாயில் சர்க்கரையைத் தூவிற்று.

இனி தன் காதல், அதற்கான காரண காரியங்கள் பற்றி வைஜெயந்தி உங்களுக்குச் சொல்வார்.

‘10.3.1968ல் ஆழ்வார்பேட்டையில் உள்ள எங்கள் வீட்டில் டாக்டர் பாலியை மணந்து கொண்டேன். எங்களுடையது ஒருவரையொருவர் புரிந்து கொண்ட காதல் திருமணம்.

ஆனால் அந்தக் காதல் கூட எனக்கு நேர்ந்த விபத்தின் மூலமாக, உடனடியான திருமண விழாவுக்கு வழி வகுத்தது.

டைரக்டர் ஸ்ரீதரின் தேன் நிலவு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அது சரியான குளிர் சீசன். சும்மாவே காஷ்மீர் எப்படியிருக்கும் என்பது அதை அனுவித்தவர்களுக்குத் தெரியும்.

டால் ஏரியில் நானும் ஜெமினி கணேசனும் பங்கேற்ற,

'ஓஹோ எந்தன் பேபி... நீ வாராய் எந்தன் பேபி... '

பாடல் காட்சி படமாகிக் கொண்டிருந்தது.

டால் லேக் வெளிப் பார்வைக்குத்தான் ரொம்ப அழகு. உள்ளே கொடிகள் பின்னிய மாய வலை!

நான் துடுப்பு போட்டுப் படகில் போவேன். அந்தக் காட்சியை காமிரா மேன் வின்சென்ட் வெவ்வேறு கோணங்களில் படமாக்க விரும்பினார்.

ஓரிரு தடவை அவர் நினைத்தவாறே எடுத்து முடிக்க, வின்சென்ட்டின் மூன்றாவது முயற்சியில் விபரீதம் நிகழ்ந்தது.

வேகமாக இழுத்துச் செல்லும் ஓடத்தின் துடுப்புக் கயிறை, நான் கை நழுவி விட்டு விட எவரும் எதிர் பாராமல் படகு கவிழ்ந்து விட்டது.

ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஓஹோ படத்தில் அதுவும் ஒரு பரபரப்பான கட்டம் என்று ரசித்தவாறு நின்றனர்.

நீந்தத் தெரிந்தும் நான் மூழ்கிக் கொண்டிருந்தேன்.

மொத்த யூனிட்டும் செய்வதறியாமல் திகைக்க, தண்ணீரில் என் தத்தளிப்பை முதலில் உணர்ந்தவர் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சட்டென்று ஏரிக்குள் தாவிக் குதித்து, என்னை எச்சரிக்கையாகக் கைப்பற்றி இன்னொரு படகில் சேர்ப்பித்தார்.

டால் லேக்கில் தவறி விழுந்தவர்கள் பிழைப்பது அபூர்வமாம். ஏரியின் அடி ஆழத்தில் தாவரப் பாறைகளாகப் பரந்து கிடக்கும் கொடிகளுக்கு இடையில் சிக்கி, நீச்சல் வீரர்களும் இறந்து போவது உண்டாம்.

அதையெல்லாம் கேள்விப்பட்டதும் நான் பிழைத்தது தெய்வச் செயல் என்று உணர்ந்தேன். அதோடு என்னைக் காப்பாற்றிய வின்சென்ட்டுக்கு, எதுவும் நேராமல் இருந்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி சொன்னேன்.

அந்தச் சம்பவத்தால் எனக்கு ஜூரம் வந்து விட்டது. அதிர்ச்சி, குளிர், விஷப்பூச்சி கடியால் பாதிப்பு எல்லாம் சேர்ந்து படுக்கையில் தள்ளிவிட்டது.

முதலில் மலேரியா, அடுத்து டைபாயிட் என்று புதுசு புதுசாக, எனக்கு வந்த காய்ச்சலுக்கு விளக்கம் கொடுத்தார்கள்.

இடைவிடாத ஜுரம் இரண்டு மாதமாக என்னைப் படாதபாடு படுத்தியது.

உடல் நலக் குறைவாக இருந்த சமயம். உடனிருந்து எனக்குத் தீவிர சிகிச்சை அளித்தவர் டாக்டர் பாலி!

கையில் டாக்டர் கிட்... படு ஸ்டைலான டிரஸ்... பளிச்சென்று முகத்தில் அடிக்காமல் இதமான கலரில் சூட், அதற்கு மாட்சாக கழுத்தில் டை, பூட்ஸ்!

பாக்கெட்டில் இருக்கும் கர்ச்சீப் கூட டிரஸ்ஸூக்கு மேட்சாக இருக்கும்.

எனக்கு எப்போதுமே மிகப் பொருத்தமாக உடை அணிகிறவர்களை ரொம்பப் பிடிக்கும்.

பார்த்த அந்த நிமிஷத்திலேயே அவரையும் பிடித்தது. எங்களுக்குள் நல்ல அறிமுகமும் நட்பும் ஏற்கனவே உண்டு. என்றாலும்... நோயாளியான என்னிடத்தில் பாலி காட்டிய கனிவும், பிணி தீர்க்கச் செலுத்திய அக்கறையும், என் மீது கொண்ட தனிப்பட்ட ஈடுபாடும்...அவரையே என் வாழ்க்கைத் துணைவராக ஏற்கும் நிலையை ஏற்படுத்தியது. அன்று அரும்பிய அன்பு நிறம் மாறாமல் இறுதி வரையில் நிரந்தரமாக நீடித்தது.

திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். டாப் லெவல்ல நின்ற நேரம் அது. இந்தியிலும் தமிழிலும் தொடர்ந்து படங்கள் இருந்தன. என்றாலும் விலகினேன்.

எதைச் செய்தாலும் அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அதற்கான காரணம். குடும்ப வாழ்க்கைக்கு வந்த பிறகு முழு கவனம் செலுத்தினால் மாத்திரமே, கணவரின் தேவைகளை மிகச் சரியாக நிறைவேற்ற முடியும்.

ஆர்வக் கோளாறில் குடும்பம் - சினிமா என்று இரண்டையும் இணைத்துப் போட்டுக் கொண்டு, எதிலும் ஓர் முழுமை ஏற்படாத நிலையை நான் விரும்பவில்லை. '- வைஜெயந்தி மாலா.

ஆயிரம் இருந்தும் மரோ சரித்ரா காதல் போல வைஜெயந்தியின் நேசப்பயிரும் நீண்ட காலம் அறுவடைக்கு ஏங்கி நின்றது. காரணம் பாலியின் முதல் மனைவியுடனான விவாகரத்துக்கானக் காத்திருப்பு. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நெடிய தவத்தின் பலன்... முறைப்படியான வைதீக விவாஹத்தில் நிறைவு பெற்றது.

பொறுப்புள்ள மனைவியாகப் பெயர் பெற, சினிமாவில் நடிப்பதைக் கணவருக்காகக் கை விட்டு விட்டார் வைஜெயந்தி மாலா.

அன்புள்ள அத்தான் பாலி தன் பிரியசகிக்குக் காட்டிய நன்றி என்ன தெரியுமா...?

உயர் ரக மீன்களை அயல் நாட்டுக்கு அனுப்பி, அதிக லாபம் ஈட்டும் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டார்.

‘பாலி கோல்ட் ஸ்டோரேஜ்’ என்கிற பெயரில் பனிக்கட்டிகளைப் பாதுகாக்கும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

வைஜெயந்தி மாலா பற்றி அவருடைய சிநேகிதி திருமதி சுசிலா பத்மநாபன் -

‘வைஜெயந்தியின் இஷ்ட தெய்வம் - ஸ்ரீஇராமபிரானுக்கு சூடாமணி தந்த சிரஞ்சீவி ஆஞ்சநேயர்’.

சீதா ராம ஸ்தோத்ரம் உள்பட அத்தனை ஸ்தோத்ரமும் வைஜெயந்திக்குத் தலை கீழ்ப்பாடம்.

புதுப் படமொன்றுக்குத் தன் பூஜைகளை முடித்துக் கொண்டு, வைஜெயந்தி கையெழுத்திடும் போது நள்ளிரவு கடந்து இரண்டரை மணி ஆகி விட்டது.

கடவுளை வேண்டாமல் சுவாமி கும்பிடாமல் பகவானைத் துதித்து ஸ்லோகங்கள் சொல்லாமல் வைஜெயந்தி எந்தக் காரியத்திலும் ஈடுபட மாட்டார்.

சுசித்ரா சென், நடிகையர் திலகம் சாவித்ரி ஆகியோர் மீது அதிக அபிமானமும் மதிப்பும் கொண்டவர்.

தன் படங்களின் முதல் நாள் சிறப்புக் காட்சி பார்க்க விரும்புவதில்லை. அவரிடமும் புடவை சுரங்கம் உண்டு.

நகைகள் அணியப் பிடிக்காது பாப்பாவுக்கு. கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் நிறைய.

குளிர் ஒத்து வராது. சிம்லா, ஊட்டி என்று மலைப் பிரதேசங்களில் ஷூட்டிங் என்றால் அவரது எழில் முகம் வாடி விடும்.

நாட்டியப் பேரொளி பத்மினிக்கு, பாப்பா என்றால் கொள்ளை ஆசை.

‘வஞ்சிக் கோட்டைவாலிபன்’ ஷூட்டிங்கின் போது வைஜெயந்தியின் ரசிகை நான்’ என்பார் பப்பி அடிக்கடி.

‘வைஜெயந்தி மாலா எப்படித்தான் தன் உடலை இத்தனை அழகாகப் பராமரித்து வருகிறார்’ என்று பப்பி பிரமிப்பார். - திருமதி சுசிலா பத்மநாபன்.

திருமதி சுசிலா பத்மநாபன், பத்மினி கூறியதாக எழுதியதை ‘நாட்டியப் பேரொளி’யும் வழி மொழிந்துள்ளார்.

‘இந்திப்பட உலகில் நாட்டியம் ஆடக்கூடிய நடிகைகள் மிகக் குறைவு. அதில் ஒரு சாதனையைச் செய்தவர் வைஜெயந்தி மாலா.

அவருடைய இளமை குன்றாத அழகு இன்னமும் அப்படியே இருக்கிறது.

இப்போது அவர் என்னைப் போலவே நடிப்பதை விட்டு விலகி, நாட்டியப்பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறார். ' பத்மினி.

வைஜெயந்தி பணமே குறியாக வாழ்ந்தவர் அல்ல. பரதத்தில் அவர் காட்டிய அக்கறை, ஆர்வம், இன்பம், ஈடுபாடு, உத்வேகம், ஊக்கம், எதிர்பார்ப்பு, ஏற்றம், எல்லாமே ஐயமின்றி அவரை ஒப்பற்ற ஓர் நாட்டியத் தாரகையாக்கி நிரந்தரமாக ஒளி வீசச் செய்தன.

வடக்கின் உச்ச நட்சத்திரமாக இந்துஸ்தானியின் கலை பிரம்மாக்களுடன் அரிதாரம் பூசி நடித்த போதும் சென்னை மேடைகளை அவர் மறந்தது கிடையாது.

வைஜெயந்தியின் கலை வாழ்வின் உச்ச பட்ச ஆண்டான 1964லும், அவர் மியூசிக் அகாடமியில் ‘சண்டாளிகா’ நாட்டிய நாடகத்தை நடத்தினார்.

வைஜெயந்தி மாலாவின் நடனக்குழுவில் அங்கம் வகித்தவர் சாந்தி. இயக்குநர் ஸ்ரீதரின் அறிமுகத்துக்குப் பின்னர் அவர் ‘வெண்ணிற ஆடை நிர்மலா’வானது தமிழ் சினிமா வரலாறு.

நம்ம ஊர் நிர்மலா மட்டும் அல்ல. ஹாலிவுட் நடிகை ‘ஷெர்லிமேக்சின்’. அவரும் வைஜெயந்தியின் அன்புக்கு அடங்கி பரதம் கற்றுக் கொண்டவர்.

பொதுவாக குருதட்சணை என்பதைத்தான் நாம் கேள்விப்படுகிறோம்.

‘வைஜெயந்தி மாலா தன்னுடைய மாணவி ஷெர்லி மேக்சினின், நாட்டியக் கலை அர்ப்பணிப்புக்காக 18 பட்டுப் புடைவைகளைப் பரிசாக அளித்துள்ளார். '

இந்திய சினிமாவில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வைஜெயந்தி மாலாவுக்கு 1968 ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

அந்த மிட்டாய் நொடிகளில்

‘பத்மஸ்ரீ வைஜெயந்தி மாலா’வின் அருமை பெருமைகளை சினிமா இதழ் ஒன்றில் எழுதி இன்புற்றார் ஏவி.எம்.

‘கங்கா ஜமுனாவில் வைஜெயந்தியின் உயரிய நடிப்பைக் கண்டு பூரித்தது உண்டு. ‘அமர்பாலி’யில் அவரது ஆடை அணிகலன்களையும், நடனம் ஆடிய வேகத்தையும் பார்த்து வியந்திருக்கிறேன்.

நமது இந்தியக் கதாநாயகிகளில் இளமைத் தோற்றத்துடன், உடலமைப்பைச் சீராக வைத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை வைஜெயந்திமாலா என்பதை நான் துணிந்து சொல்வேன்!

பாப்பாவின் திறமையும் பன்மடங்கு கூடியிருக்கிறது.

வைஜெயந்தி ஒரு பிறவிக் கலைஞர். குறிப்பாக நடனத்தில் அவருக்குள்ளப் பற்று சொல்ல முடியாதது.

பல லட்சக் கணக்கான ரூபாய் வருமானமுள்ள சினிமாத் துறையில் உள்ள அவர், சில ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கக் கூடிய நடனத் துறையில் நாட்டம் செலுத்தி, பல புதுப் புது நாட்டிய நாடகங்களை உருவாக்கி வருவதிலிருந்தே நடனக் கலை மீது அவருக்குள்ள ஈடுபாடு தெரியும்.’- ஏ.வி. மெய்யப்பச் செட்டியார்.

‘1969ல் ஐக்கிய நாடுகளின் சபையில் ஆடுகிற மிக அரிதான கவுரவமும் வைஜெயந்திக்குக் அமைந்தது’.

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் பரிசு மூன்று முறை, பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியன வைஜெயந்தியால் கவுரவம் பெற்றவை.

பரதம், சினிமா, நாட்டியப்பள்ளி, நடன ஆராய்ச்சி, ஆடல் கலை குறித்த இசை ஆல்பங்கள் என்று சலிக்காமல் உழைத்த சாதனைப் பெண்மணியின் அடுத்த கட்டம் அரசியல்.

வேறு எந்தத் தமிழ் நடிகைக்கும் கிடைக்காத வெற்றி, இரு முறை மக்கள் அவைத் தேர்தலில் வைஜெயந்திக்கு வாய்த்தது.

தமிழ் நாட்டில் எப்போதும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் மிக கவுரவமான, கடினமான முக்கியத் தொகுதி தென் சென்னை.

1984 மற்றும் 1989 தேர்தல்களில் வைஜெயந்தி மாலா காங்கிரஸ் சார்பில் நின்றார். இரு முறையும் தென் சென்னை மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984ல் 48,017 வாக்கு வித்தியாசத்தில் இரா. செழியன், 1989ல் 1,25,844 கூடுதல் ஓட்டுகளில், ஆலடி அருணா போன்ற பழுத்த அரசியல்வாதிகளை வைஜெயந்தி மாலா தோற்கடித்தார்.

வைஜெயந்தி மாலாவின் கணவர் பாலி 1986 ஏப்ரல் 21 ஆம் தேதி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இயற்கை எய்தினார்.

வைஜெயந்திமாலாவின் ஒரே மகன் சுசீந்திர பாலி. மாடலிங், சினிமா என்று வளர ஆரம்பித்தார். திரைத் துறையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாமல் போனது.

ஆரம்பத்தில் யதுகிரி பாட்டி, கல்யாணத்துக்குப் பின் கணவர் பாலி, தற்போது மகன் சுசீந்திர பாலி என்று வைஜெயந்திக்கு உற்சாகமூட்டி உறவுகள் புகழ்த் தேடித் தந்துள்ளன.

1933 ஆகஸ்டு 13ல் பிறந்த வைஜெயந்தி மாலாவுக்குத் தற்போது வயது 83.

‘லிவிங் லெஜென்ட்’ என்கிற ஆங்கில சொல்லின் முழு அர்த்தம் அவர்!

மத்திய சர்க்கார் சவுகர்யமாக வைஜெயந்தி மாலாவை மறந்து விட்டது.

சசி கபூர், மனோஜ் குமார் என்று வடக்கத்திய வேட்டிகளுக்கே தாதா சாஹிப் பால்கே விருது வழங்குகிறது மோடி அரசு.

அவ்வுயரிய கவுரவத்துக்கு வைஜெயந்தி மாலாவின் பெயரை அடுத்த ஆண்டிலாவது தமிழ்த் திரை உலகமும், மாநில அரசும், மக்களும் பலமாக சிபாரிசு செய்ய வேண்டும்.

------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com