சரோஜா தேவி: 16. சரோ நல்ல பொண்ணு...!

ஜனவரி 7. சரோவின் பிறந்த நாள்! அன்றைய கோலிவுட்டின் கோலாகலத் திருவிழா! சரோ வசித்த அடையாறு காந்தி நகர் வீட்டில் கேளிக்கையும் கும்மாளமும் அமர்க்களப்படும் என்று நினைத்தால் அது தவறு.

ஜனவரி 7. சரோவின் பிறந்த நாள்! அன்றைய கோலிவுட்டின் கோலாகலத் திருவிழா! சரோ வசித்த அடையாறு காந்தி நகர் வீட்டில் கேளிக்கையும் கும்மாளமும் அமர்க்களப்படும் என்று நினைத்தால் அது தவறு.

பிறந்த தினத்தில் ஆண்டு தோறும் ‘சத்திய நாராயண பூஜை’ செய்வது சரோவின் வழக்கம். சத்தியநாராயண ஸ்வாமிக்கும் சரோ பிறப்புக்கும் என்ன சம்பந்தம்?

அதற்கானத் தொடர்பை சரோ தெளிவுப்படுத்தியுள்ளார்.

‘ நிறைமாத கர்ப்பிணி அம்மா. அன்று பயங்கர வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்பா வழக்கம் போல் அலுவலகத்தில். பாட்டனாரைத் தவிர, பெரியவர்கள் வேறு யாரும் உதவிக்குக் கிடையாது.

தாய் துடிதுடிப்பதைப் பார்த்துச் சிறுமிகளான சகோதரிகள் பயத்தில் அழுதனர். தாத்தா பேத்திகளை சமாதானம் செய்வாரா... அம்மாவைக் கவனிப்பாரா...?

பக்கத்து வீட்டில் அன்றைக்கு சத்திய நாராயண விரதம்.

ஆராதனையெல்லாம் முடிந்ததும் ஸ்வாமிக்குப் படைத்த நைவேத்யத்தை அம்மாவிடம் கொடுத்து,

‘கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இந்தப் பிரசாதத்தை முதலில் சாப்பிடு ருத்ரம்மா. சத்திய நாராயணன் அருளால் உன் வலி படிப்படியாகக் குறையும். சுகப்பிரசவம் ஆகும்’ என்று ஆறுதல்படுத்தினார்கள்.

அவர்கள் சொன்னது பலித்தது. கொஞ்ச நேரத்தில் வலி மாயமாகி விட்டது. அம்மாவுக்கும் சத்திய நாராயண ஸ்வாமி மீது அபார பக்தி உண்டானது. அதற்கு மறு நாள் நான் பிறந்தேன். அதனாலேயே ஆண்டு தோறும் என் பிறந்த நாளில் சத்திய நாராயண பூஜை கொண்டாடப்படுகிறது. ’- சரோஜாதேவி.

எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா மூவரும் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள்.

சரோவின் இல்லத்துக்குள் நுழையும் போதே,

‘அம்மா... சரோஜா... ’ என்று வாயாரத் தன் ஸ்டைலில் கூப்பிடுவார் எம்.ஆர். ராதா. அடுத்த நொடிகளில் அவர் பாதங்களில் விழுந்து ஆசி பெறுவது சரோவின் அனிச்சையான செயல்.

தன் வீட்டு விசேஷம் போல் சரோ பிறந்த வைபவத்தில்,

‘வாப்பா... ராமச்சந்திரா...! ’ என்று எம்.ஜி.ஆரையும் எதிர் கொண்டு அழைப்பார் நடிகவேள்.

சரோஜாவின் தாயார் ருத்ரம்மாவிடம்,

‘உம் பொண்ணை நல்லா வளர்த்து வெச்சிருக்கே. உடம்பு நிறைய துணி போட்டு வர்ற நடிகை யாருன்னா... அது நம்ம சரோஜாதான்! என்னா அழகு! ரொம்ப சந்தோஷமா இருக்கு.! ’ என்பார்.

எம்.ஆர்.ராதா உளமாற வாழ்த்துகையில் ருத்ரம்மாவின் பெற்ற வயிறு மண் பானைத் தண்ணீராக ஜில்லிட்டுப் போகும்!

தன் மகன்களிடம் ராதா சொன்னது-

‘அடேய், எல்லா நடிகைங்க போட்டோவையும் மறைச்சு மறைச்சு வெச்சுப் பார்க்காதீங்கடா...! சரோஜாதேவி போட்டோவை மட்டும் வெச்சுக்கோங்க. சரோ நல்ல பொண்ணு! ’

தனக்கான ஹீரோவை சிபாரிசு செய்யும் பொறுப்பும் சரோவை நாடி வந்தது.

‘1960ல் முக்தா பிலிம்ஸை ஆரம்பித்தேன். முதன் முதலில் ‘பனித்திரை’ படத்தைத் தயாரித்து நான் டைரக்ட் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. அது முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்ட். சரோஜாதேவி நாயகி என்று முடிவானது.

தொடக்கத்தில் சிவாஜி கணேசன் நடிக்க ஒப்புக்கொண்டார். பிஸியான ஷெட்யூலால் அவரால் கால்ஷீட் தர முடியவில்லை.

வேறு சில பிரபல ஹீரோக்களும் முதலில் சம்மதித்து, சரோஜாவுக்கு மட்டுமே ஸ்கோப் உள்ள கதை என்பதால் பின்பு மறுத்து விட்டனர்.

சரோஜாதேவி, நடந்தவற்றை ஜெமினி கணேசனிடம் எடுத்துச் சொல்லி, அவரை நடிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். முக்தா பிலிம்ஸில் தொடர்ந்து மூன்று படங்களில் ஜெமினி நாயகனாக நடிக்க, சரோஜாதேவியே முதல் காரணம். ’ - முக்தா சீனிவாசன்.

ஸ்டுடியோ முதலாளிகள் போட்டி போட்டுக் கொண்டு சரோவுக்கு வழங்கிய சலுகைகளும் ஊதியமும் உச்ச நட்சத்திரங்களின் புருவத்தை உயர்த்தின.

‘நான் விதியின் குழந்தை. பிறந்தது மாட்டுத் தொழுவத்தில். வயலும் தோட்டமுமே என் உலகம். வெங்காயம், உருளைக் கிழங்கு ஏற்றுமதியில் ஈடுபட்டேன். நான் முதலில் கட்டடம் கட்டும் போது கோடம்பாக்கத்தில் சாலைகள் கூட இல்லை. ’ எங்க வீட்டுப் பிள்ளையைத் தயாரித்த நாகிரெட்டியின் உழைப்பாளி வாழ்வின் முதல் அத்தியாயத்தின் தொடக்க வரிகள் அவை.

என்.டி. ராமாராவ் - ஜமுனா நடித்த ராமூடு பீமுடு தெலுங்கு கறுப்பு வெள்ளைப் படத்தின் தமிழ் வடிவம் எங்க வீட்டுப் பிள்ளை. நாகிரெட்டியின் தயாரிப்பு.

சாவித்ரியை ஆஸ்தான நாயகியாகக் கொண்டு, தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து வசூலைக் குவித்த படங்களை வழங்கியவர் நாகிரெட்டி. ‘மனிதன் மாறவில்லை’ படத்துக்குப் பிறகு நாகிரெட்டியும் சரோவுக்கு மாறினார்.

தெலுங்கில் என்.டி.ராமாராவ்- சரோ ஜோடியாக நடிக்க, ஜெகதலபிரதாபன் வெற்றிச் சித்திரத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. தமிழிலும் அது டப் செய்யப்பட்டு 1963 தீபாவளிக்கு ரிலிசானது.

‘நாகிரெட்டியின் விஜயா- வாஹினி நிறுவனம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் எடுக்கும் போது நான் ரொம்பவே பிஸியா இருந்தேன். ஆனாலும் அவங்க என்னை வற்புறுத்தினாங்க.

ஒரு நாள் அதிகாலை. நாங்கள் கண் விழித்து எழுந்து வெளியில் வந்த போது வீட்டு வாசலில், ஒரு ஹெரால்டு கார் நின்று கொண்டிருந்தது. காரில் தெரிந்த தயாரிப்பாளர் நாகிரெட்டியைப் பார்த்ததும், எனது அம்மா கடும் அதிர்ச்சி அடைந்து,

‘நீங்கள் இப்படிச் செய்யலாமா...வந்த உடனேயே காலிங் பெல்லை அடித்து இருக்கலாமே...? ’ என்றார் தவிப்புடன்.

பொழுது விடிவதற்குள் சென்றால் மட்டுமே, ஹீரோ -ஹீரோயின்களை வீட்டில் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் மற்ற கம்பெனிளிகளின் படப்பிடிப்பில் சந்திக்க நேரும். அது வேலைக்கு ஆகாது. அதனால் நாகிரெட்டி விடியலுக்கு முன்னரே வந்து காத்திருந்தார்.

‘நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருப்பீர்கள். உங்களைத் தொல்லைப் படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நடிக்க சரோஜாவை ஒப்பந்தம் செய்ய வந்திருக்கிறேன்.எவ்வளவு சம்பளம் வேணும்னாலும் தர்றோம். நீ தாம்மா நடிக்கணும்னு மனப்பூர்வமா சொன்னார். அவர் கேட்டுக் கொண்டவாறே குறுகிய காலத்தில் நடித்துக் கொடுத்தேன். ’ சரோஜாதேவி.

நாகிரெட்டியின் கணிப்பு மிகச் சரியே என நிருபித்தது எங்க வீட்டுப் பிள்ளையின் ஈடு இணையற்ற வெற்றி!

‘1965 பொங்கலுக்கு வெளியாகி, சரோவுக்கு ராசியான ஏழாம் எண்ணில் வரும் ஜூலை மாதத்தில், ஏழாம் தேதி ( ஜூலை -7) அன்று தமிழ் நாட்டில் ஏழு தியேட்டர்களில், 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம்! ’ என்கிற அழியாப் பெருமையைப் பெற்றது எங்க வீட்டுப் பிள்ளை!

சென்னையில் காசினோ, பிராட்வே, மேகலா என்று மூன்று தியேட்டர்களிலும், மதுரை, திருச்சி, கோவை, தஞ்சை என நான்கு நகரங்களிலும் ஆக மொத்தம் ஏழு இடங்களில் ஆறு மாதங்களைக் கடந்து பரபரப்பாக ஓடியது.

1977 ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பதவியேற்ற காலம் வரையில், சிவாஜி கணேசனாலும் முறியடிக்க முடியாத சாதனைச் சரித்திரம் படைத்தது!

எங்க வீட்டுப் பிள்ளை கொண்டாட்டத்தில் சரோவைப் பார்க்க முண்டியடித்தனர் ரசிகர்கள். தள்ளுமுள்ளு நடந்ததில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது.

எங்க வீட்டுப் பிள்ளை குறித்த பிரமிப்பு பாமரர்களுக்கு மட்டுமல்ல. சரோவுக்குள்ளும் என்றும் நிரந்தரம்.

‘எங்க வீட்டுப் பிள்ளை படத்தை ரொம்பவே பிரம்மாண்டமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள். விஜயா ஸ்டுடியோவின் எட்டாவது ஃப்ளோரில் ஷாப்பிங் சென்டர் அமைக்க அப்போதே எட்டு லட்சம் செலவு ஆனதாம்.

நான் காரில் கடை வீதிக்கு வருவேன். இறங்கி சாலையில் நடக்கும் போது என் ஹேண்ட் பேக் கை ஒருவன் பிடுங்கிக் கொண்டு ஓடுவான்.

நான் திருடன் திருடன் எனக் கத்த எம்.ஜி.ஆர். ஓடி வந்து உதவுவார்.

படப்பிடிப்புக்காக போடப்பட்ட அரங்கில் ஒரு நாள் இரவு திடீரென தீ பிடித்துக் கொண்டது.

உடனே நாகிரெட்டி அய்யாவுக்குத் தகவல் போய்ச் சேர்ந்தது. அய்யாவோ கொஞ்சம் கூடப் பதற்றம் அடையாமல்,

‘என் தொழிலாளர்கள் ரொம்ப நல்லவர்கள். அவர்களே முன் நின்று கவனித்து நெருப்பை அணைத்து விடுவார்கள்’ என்றாராம்.

அய்யாவின் வார்த்தைக்கு எத்தனை வலு என்பதை நேரில் பார்த்த போது புரிந்தது.

ஃப்ளோரின் உச்சியில் சக தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காக்கி யூனிபார்மில் தகிக்கும் அனலுக்கிடையே நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தவர் யார் தெரியுமா...?

நாகிரெட்டியின் மகன் வேணு!

அதற்குள் விஷயம் தெரிந்து ராமாவரம் தோட்டத்தில் இருந்து சின்னவர் கூட வந்திருந்தார்.

வசதி வாய்ப்பிருந்தும் தன்னைத் தானே எளிமைப் படுத்திக் கொண்ட முதலாளிகளால் அன்றைய திரை உலகம் ஆரோக்கியமாக இருந்தது.- சரோஜா தேவி.

‘வேட்டைக்காரன்’ விவகாரத்தில் விளைந்த கருத்து வேறுபாடு பனித்துளி போல் கரைந்தது. தேவர் - சரோ இடையேயான தோழமை எப்போதும் போல் நீடித்தது.

‘எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப் பார்த்து விட்டு சரோஜாவைப் புகழ்ந்து பேச நினைத்தேன்.

‘பாவாடை தாவணி போட்டுக் கொள்ளாமல், புடைவை கட்டிக் கொண்டு நடிக்கும் பொழுதுதான் அழகாக இருக்கிறீர்கள். இப்படியே நடிக்கவும்’ என்று சரோஜாவைப் பாராட்ட எண்ணி, அரை குறை ஆங்கிலத்தில் நான் அவரிடம்,

‘ரிமூவ் தி பாவாடை. டேக் தி புடைவை. ஐ லைக் யூ வெரி மச்! ’ என்று சொல்லி விட்டேன்.

நான் அப்படிச் சொன்னதும் சரோஜாதேவி வெட்கப்பட்டுக் கொண்டு நாற்காலியிலிருந்து எழுந்து போய் விட்டார்.

அருகில் இருந்தவர் நான் பேசியதில் தொனித்தத் தவறான அர்த்தத்தை, எடுத்துக்கூறி விளக்கியதும் மிகவும் வருந்தினேன். அன்றிலிருந்து சரோஜாவிடம் ஆங்கிலத்தில் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.’ -சாண்டோ சின்னப்பா தேவர். பட்சிராஜா ஸ்டுடியோ உரிமையாளர் ஸ்ரீராமுலு நாயுடு தனது ‘கல்யாணியின் கணவன்’ பட டைட்டிலில் ‘அபிமான நட்சத்திரம் சரோஜாதேவி! ’ என்று சில நிமிடங்களுக்குத் தனித்துக் காட்டினார்.

கல்யாணியின் கணவன் சினிமாவில் ஒலித்த டூயட் ‘எனது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்’ அதில் சரோவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை அழகாக உணர்த்தியிருப்பார் கண்ணதாசன்.

‘சிவாஜி கணேசன் - சரோஜாதேவி ஆரம்ப சீன்களில் சரோவின் சேட்டைகள் திருப்திகரத்துக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன.

சரோஜாதேவி சிவாஜியை எம்.ஜி.ஆராகவே பாவித்து, நம் கவலைகளை மறக்க அடிக்கிறார்...! ’என்று குமுதம் விமர்சனம் திரையில் சரோவின் சரஸங்களைக் கொண்டாடி மகிழ்ந்து மலர் மகுடம் சூட்டியது.

அன்பே வா. சரோவின் வாழ்க்கையில் மறக்க முடியாத வண்ணச்சித்திரம். ஏவி.எம்., சிவாஜி பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ், நாகிரெட்டியின் விஜயா நிறுவனம், டி.ஆர். ராமண்ணாவின் ஆர்.ஆர். பிக்சர்ஸ் என ஏகப்பட்ட சினிமா கம்பெனிகள் தயாரித்த முதல் கலர் படத்தில் சரோவே கதாநாயகி!

சரோவைத் தவிர வேறு எவரையும் தங்களின் ராசியான ஸ்டாராக நினைத்துப் பார்த்தது இல்லை அன்றைய எஜமானர்கள்.

ஊட்டியில் அன்பே வா அவுட்டோர் ஷுட்டிங். அங்கு நடந்த நிகழ்வு சரோவைப் பட அதிபர்கள் ஏன் கொண்டாடினார்கள் என்பதை விளக்கும்.

பேசும் படம் ஆசிரியர் பதிவு செய்துள்ள சம்பவத்திலிருந்து-

‘ஊட்டிக்கு நானும் ஏவி.எம். குமரனும் போய்ச் சேர்ந்த மறுநாள், எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் வந்தார்கள்.

சரோஜாதேவி, ‘ஊட்டியிலே தாசப்பிரகாஷ் ஓட்டல் என்னுடைய பர்மனெண்ட் வீடு மாதிரி ஆயிடுச்சி. வருஷா வருஷம் ஏதாவது ஒரு ஷூட்டிங்குக்கு இங்கே வந்து விடுவேன். என்னைப் பொறுத்த வரையில் இந்தக் குளிர் எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டுவிட்டது. ’ என்று சொன்னார்.

அதற்கேற்ப அவர் பிரதி தினமும் மாலை சுமார் ஆறு மணிக்கு நடனப் பெண்கள் படை சூழ, கீழே உள்ள கோயிலுக்கு நடந்தே போய் பூஜை செய்து விட்டு வருவார்.

ஒருநாள் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆருடன், நான், ஏவி.எம். குமரன், ஏவி.எம். சரவணன் ஆகியோர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம்.தேங்காய் பழத்தட்டு, சாமி பிரசாதத்துடன் எங்கள் அறைக்குள் நுழைந்தார் சரோஜாதேவி.

புரட்சி நடிகர், சரோஜாதேவியைப் பார்த்து, ‘தினமும் கோயிலுக்குப் போய் என்ன வேண்டிப்பீங்க...? ’ என்று கேட்டார்.

‘நல்லா வெயிலடிக்கணும். தெனமும் ஷூட்டிங் ஒழுங்கா நடக்கணும். சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு நாங்களெல்லாம் பத்திரமா திரும்ப ஊருக்குப் போக அருள் புரியணும்!’னு கடவுள் கிட்டே பிரார்த்தனை செஞ்சிட்டு வரேன்’ என்றார் சரோஜாதேவி. ’

சரோவின் வெற்றிக்கான ரகசியம் தொழில் பக்தியும்- கடுமையான உழைப்பும் தவிர வேறில்லை.

----------------

சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்ய அனைத்து பிரபல ஸ்டுடியோ அதிபர்களும் முண்டியடித்தனர். ஏனோ சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மாத்திரம் சரோ நடித்தது கிடையாது.சரோவின் காஸ்ட்யூமர் எம்.ஏ. ரெஹ்மான். பத்திரிகை ஒன்றில் அளித்த பேட்டியிலிருந்து,‘ சரோஜாதேவிக்குப் பிடித்தது க்ளோஸ் நெக், போட் நெட் வைத்த இரு மாடல் ப்ளவுஸ்கள். ஸ்லீவ்லெஸ் எனப்படும் கையில்லா ரவிக்கையை அவர் அணிந்ததே கிடையாது.தைக்கப்படும் ஆடைகள் உடலை ஒட்டி அமைய வேண்டும். ஃபிட்டிங் சற்று மிகையான கவர்ச்சியுடன் அமைந்து விட்டால், அதைத் தொட மாட்டார்.

சினிமாவில் பயன்படுத்தும் ஜாக்கெட்டுகள் போல் சொந்த உபயோகத்துக்கும் சேர்த்துத் தைக்கச் சொல்லி சில நடிகைகள் கேட்பது உண்டு. சரோஜாதேவி அவ்வாறு செய்ததில்லை.அம்மாவுக்கு நான் தனிப்பட்ட முறையில் தைத்துக் கொடுத்த ரவிக்கைகள் ஆயிரத்தைத் தாண்டும். சரோஜாதேவி வீட்டுக் கண்ணாடி பீரோக்களில் ஆயிரக் கணக்கான வண்ண வண்ணச் சேலைகள் கண்களுக்கு விருந்தளிக்கும். ’

-------

1969 கோடையில் உலகச் சுற்றுலா சென்று வந்தார் சரோ. திரும்பி வருகையில் தன்னை என்றும் மறக்க முடியாதபடி, எம்.ஏ. ரெஹ்மானுக்கு ஓர் அபூர்வ பரிசை வழங்கினார்.

அது கட்டை விரல் அளவே உள்ள சின்னஞ்சிறு பெட்டி. அதன் உள்ளே இருந்தவை ஒரு சிறிய ஊசி. இரு குண்டூசிகள். மூன்று பித்தளைப் பின்கள். தையற்கலைஞர்கள் விரலில் மாட்டிக் கொள்ளும் அங்குஸ்தான். மூன்று ஜதை வர்ண நூல்களைச் சுற்றி வைக்கக் கூடிய உருளை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com