சரோஜா தேவி: 2. வண்ணுமில்ல ச்சும்மா...!

ஜெமினி ஸ்டுடியோவை எஸ்.எஸ். வாசனுக்கு விற்றவர் - டைரக்டர் கே.சுப்ரமண்யம்.

ஜெமினி ஸ்டுடியோவை எஸ்.எஸ். வாசனுக்கு விற்றவர் - டைரக்டர் கே.சுப்ரமண்யம்.

தமிழ் சினிமாவின் ‘முதல் கனவுக்கன்னி’ டி.ஆர். ராஜகுமாரியை ‘கச்ச தேவயானி’ படத்தில் அறிமுகப்படுத்தியவர்.

அதன் கன்னடப் பதிப்புக்குப் புது ஹீரோயின் தேடி பெங்களூர் சென்றார். அங்கு காளிதாஸ் படம் ஓடிக் கொண்டிருந்தது.

திரையில் சரோ தெரிந்ததும், கன்னட கச்சதேவயானியைக் கண்டு பிடிக்கும் கவலை தீர்ந்தது. நேரில் சந்திக்கையில்,

‘பெங்களூரிலேயே இருந்தால் எப்படி...? பட்டணம் வாருங்கள். நாலு பட முதலாளிகள் கண்களில் படலாம்... ’ என்று சரோ குடும்பத்தினரை மதராசுக்குக் கூப்பிட்டார்.

சென்னை. வாஹினி ஸ்டுடியோ. கே. சுப்ரமணியம் இயக்கத்தில், சரோ நடிக்க கச்ச தேவயானி ஷூட்டிங் தொடங்கியது.

அன்று சரோவின் வாழ்வில் திருப்புமுனை தினம்!

‘ லன்ச் பிரேக் விட்டாங்க. பக்கத்தில் படப்பிடிப்பில் இருந்த ஹீரோ, சுப்ரமணியம் சாரைத் தேடி வந்தார்.

ஆயிரம் சூரியன் ஒரே நேரத்தில் உதிச்சா அதன் பிரகாசம் எப்படியிருக்கும்னு, அன்னிக்கு நேரில் தெரிஞ்சு கிட்டேன்.

அப்படியொரு வெளிச்சத்தோடு நுழைந்தவரைப் பார்த்ததும், எல்லாரும் எழுந்து நின்னு வணக்கம் சொன்னார்கள்.

வந்தவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் பேசாமல் உட்கார்ந்திருந்தேன்.

டைரக்டர் கே. சுப்ரமணியம் கிட்ட அவர்,

‘யாரு சார் இந்தப் பொண்ணு... புதுமுகமா? ’ன்னு விசாரித்தார். பேசிட்டுத் திரும்பிப் போறப்ப, என்னிடம் ‘செனாகிதியம்மா’ன்னு கேட்டார். கன்னடத்தில் அதுக்கு சவுக்கியமான்னு அர்த்தம். சவுக்கியம் என்பதற்கு அடையாளமாக நான் தலையை ஆட்டினேன்.

அடுத்து காபி குடிக்கிறயான்னார்... அதுக்கும் நான் மறுபடியும் மவுனமா மண்டையை மட்டும் அசைச்சேன். காபி வந்தது.

வந்தவரை சகல மரியாதைகளுடன் வழியனுப்பி வைத்தார்கள். அவர் சென்றதும் சுப்ரமணியம் சார் கிட்டப் போய், ‘யார் சார் அவங்கன்னு...? ’ கேட்டேன்.

‘என்னம்மா... உனக்குத் தெரியாதா..? அவர் தானம்மா எம்.ஜி.ஆர்.! ’ என்றார். அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

‘எவ்வளவு பெரிய மனிதர் வந்திருக்கிறார்!’ எதுவும் தெரியாமல் சும்மா இருந்து விட்டோமே... என்று எண்ணி வருந்தினேன். ’ -- சரோஜாதேவி.

சின்ன அண்ணாமலையின் சாவித்ரி பிக்சர்ஸ் உருவானது. சியாமளா ஸ்டுடியோவில் மேக் அப் போட்டுக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். சின்ன அண்ணாமலை அவரிடம் கால்ஷீட் பற்றிக் கேட்டார். மலைக்கள்ளன் மகுடம் சூட்டியதில் எம்.ஜி.ஆர். பயங்கர பிசி. அதனால் மாலை ஆறு மணியிலிருந்து இரவு பத்து வரை ஷூட்டிங் நடத்த முடிவானது. ஆறு மாதங்களில் படத்தை முடிக்கத் திட்டமிட்டார்கள். கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.ஸ்ரீனிவாசன். சினிமா பைனான்ஸியர். படத்தின் நெகட்டிவ் உரிமை அவரைச் சார்ந்தது.பத்மினியை நடிக்க வைக்கலாம் என்றார் ஏ.எல்.எஸ். மூன்று மாதங்கள் காத்திருக்கச் சொன்னார் பத்மினி.

‘புது நாயகி நடித்தால் நம் சவுகர்யம் போல் சீக்கிரத்தில் படத்தை முடிக்கலாம்’ என்பது எம்.ஜி.ஆரின் யோசனை. மறு பேச்சின்றி ஒப்புக்கொண்டார் சின்ன அண்ணாமலை. ஏற்கனவே இயக்குநர் ப. நீலகண்டன் சிபாரிசு செய்த சரோ நினைவுக்கு வந்தார்.‘தங்கமலை ரகசியம்’ படத்தில் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு ஆட வந்தவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். அதுவும் நாயகி அரங்கேற்றம் எடுத்த எடுப்பில் எம்.ஜி.ஆருடன்!

எம்.ஜி.ஆர். ஆராயாமல் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க மாட்டார். மேக் அப் , ஸ்கிரின் டெஸ்ட் பார்த்த பிறகு தீர்மானிக்கலாம் என்றார்.அதற்குக் காரணம் உண்டு. நடனப் பெண்ணை நாயகி ஆக்குவதா..?

பல விதங்களில் வெவேறு திசைகளில் எதிர்ப்புகள் தோன்றின.

சிட்டாடல் ஸ்டுடியோ. அரிதார நிபுணர் தனகோடி. புதுப் பெண்ணுக்கு மேக் அப் போட்டு விட்டார். காமிராமேன் வி. ராமமூர்த்தி ஆயிரம் அடியில் காட்சிகளை எடுத்தார்.

‘என்னை எம்.ஜி.ஆர். ஏற்பாரா ..? அவநம்பிக்கையில் நகம் கடித்தார் சரோ.

வாகினி லேப் தியேட்டர். புதிய தாரகையின் தரிசனங்கள் திரையில் ஓடின.

எம்.ஜி.ஆர். திரும்பத் திரும்பப் பார்த்தபடிச் சிந்திக்கலானார். அவரது முடிவுக்காகக் காத்திருந்தனர். உடனடியாகப் பதில் சொல்லாமல் சஸ்பென்ஸில் தவிக்க விட்டார்.

அதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டார்கள் சிலர்.

‘ சார்... அந்தப் பொண்ணு ஒரு காலைத் தாங்கித் தாங்கி நடக்குது. ஹீரோயினுக்கு சரி வருமா...? ’ எம்.ஜி.ஆர். கலகலவென்று சிரித்தார் .

‘ஏன் அதுவும் செக்ஸியாகத்தானே இருக்கு. பார்க்கப் புதுசாவும் தெரியுது. இந்தப் பொண்ணையே செலக்ட் செஞ்சுடலாம்.’

எம்.ஜி.ஆரின் நாயகித் தேர்வில் பலத்த வெற்றி பெற்றார் பி. சரோஜாதேவி. தாயார் ருத்ரம்மாள், ஹீரோயினாகி விட்டத் தன் மகளுக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம் போதாது எனத் தகராறு செய்தார். கூடுதலாக ஆயிரம் கேட்டார். ஏ.எல்.எஸ். கடுப்பானார்.

‘எம்.ஜி.ஆர். ஜோடியா நடிக்க வைக்கிறோம். அதுக்கு அவ எவ்ளோ கொடுக்கறான்னு கேளுங்க... ’ என்றார்.

யூனிட்டில் முடிந்தவரைச் சமாதானம் செய்தனர்.

‘படம் ஹிட் ஆனால் உங்கள் பெண்ணுக்கு லட்சம் கூடத் தருவார்கள். ’

‘ ஏனப்பா சுள்ளு ஹேளூ... லட்சா! ’ (என்னப்பா பொய் சொல்றே... லட்சமா) என வாயைப் பிளந்தார்.

சாவித்ரி பிக்சர்ஸின் ‘திருடாதே’ படத்தில் சரோஜாதேவிக்கு எம்.ஜி.ஆருடன் முதல் நாள் ஷூட்டிங். காட்சிப்படி அண்ணன் முஸ்தஃபாவின் போட்டோ கீழே விழுந்து நொறுங்குகிறது. தங்கை சரோ அதிர்ச்சியோடு அதை எடுக்க வேண்டும். ஒத்திகை பார்த்தார்கள்.

எம்.ஜி.ஆரின் எதிரில் ஒழுங்காக நடிக்கும் ஆர்வம்.

சரோ கண்ணாடித் துகள்களைக் கவனிக்கவில்லை. அவைக் காலில் பலமாகக் குத்திவிட்டன. சங்கீதமாக சரோவின் அலறல் சத்தம்.

எம்.ஜி.ஆர். எங்கிருந்தோ பதறியபடி ஓடோடி வந்தார். சொட்டுச் சொட்டாக சரோவின் குருதி சிந்திச் சுற்றிலும் ரத்தத் திலகங்கள்.

‘சரோஜா இப்படி வாம்மா. ரொம்ப வலிக்குதாம்மா..? ’ அன்புடன் அழைத்தார் எம்.ஜி.ஆர். கொஞ்சமும் லஜ்ஜையில்லாமல், சரோவின் ரத்தம் பொங்கும் பாதத்தைத் தன் மடியில் எடுத்து வைத்துக் கொண்டார்.

இலேசாகக் கீறி வாட் லோடு துண்டுகளை எடுத்தார். அத்தோடு நிற்காமல் தனது நட்சத்திரக் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து, காலில் பேண்டேஜ் மாதிரி கட்டி விட்டார்.

‘அண்ணே..! ’

நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் திக்குமுக்காடினார் சரோ.

தாயார் ருத்ரம்மா, மகளிடம்,

‘சரோஜா இனி நான் செத்தால் கூட நீ கவலைப்பட வேணாம். அண்ணன் எம்.ஜி.ஆர். உன்னை கவனித்துக் கொள்ள இருக்கிறார். ’ என்றார்.

--------------

புரட்சி நடிகர் தனது சொந்தத் தயாரிப்பான நாடோடி மன்னனில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினார். அதில் ரசிகர்கள் விரும்பிய அவரது வெற்றி ஜோடியான பானுமதியை ஒப்பந்தம் செய்தார்.

வாத்தியாரின் கனவுச் சித்திரம் வேகமாக முடிவடைவதற்காக, ‘திருடாதே’ உள்ளிட்ட அவரது ஏராளமான படங்கள் எடுத்த வரையில் நிறுத்தப்பட்டன.

‘நான் எங்கு தொழில் செய்தாலும் சுதந்திரமாக இருக்கவும் தொழில் செய்யவும் விரும்புகிறவன். இதே குணத்தைப் படைத்தவர் திருமதி பானுமதி அவர்கள். நாங்கள் இருவருமே விட்டுக் கொடுக்காத மனோபாவம் உள்ளவர்கள். ’- எம்.ஜி.ஆர்.

வாத்தியாரின் வாக்கு பலித்தது.

நாடோடி மன்னன் ஷூட்டிங்கில் பானுமதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் அபிப்ராய பேதம் ஏற்பட்டது. விளைவு பானுமதி விலகிக் கொண்டார்.

நாடோடி மன்னனில் புதிய கதாநாயகி யார்...? என்பது தமிழகத்தின் மில்லியன் டாலர் கேள்வியானது.

இறுதிச் சுற்றில் சரோ முன்னணியில் நின்றார்.

‘சரோவைத் தேர்வு செய்தது ஏன்? ’ என்று, படத்தின் வெற்றிவிழா மலரில் எம்.ஜி.ஆர். விவரமாக எழுதியுள்ளார்.

‘ இளவரசி ரத்னா’ பாத்திரத்திற்குப் பல புதிய நடிகைகளையும், இன்று விளம்பரமடைந்திருக்கும் ஒரு சிலரையும் நடிக்க வைக்க நினைத்ததுண்டு. எப்படியாவது ஒரு புதிய நடிகையை இந்தப் பாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்தப் பெரிதும் முயன்றேன்.

எனது முயற்சி பலவகையிலும் தோல்வியே கண்டது. இரண்டொரு நடிகையைப் படமெடுத்தும் பார்த்தேன். சரியாயில்லை. பிறகுதான் சரோஜாவை நடிக்கச் செய்து படமெடுத்தேன். இது ஒரு புதிய விசித்திர அனுபவம்.

சரோஜாவைக் கொண்டு ‘பாடு பட்டாத் தன்னாலே‘ என்ற பாட்டுக்கு நடனம் ஆடச் செய்து முன்பே படமும் எடுக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே எடுத்த காட்சியை சந்திரா என்ற வேறொருவரை நடனமாடச் செய்து மீண்டும் படமாக்க நேரிட்டது.

சரோஜாதேவி அவர்கள் இப்போது பேசுவதை விடத் தமிழ் உச்சரிப்பு மோசமாக இருந்த நேரம். ஆகவே அவருக்கு ஏற்றாற் போல் வசனங்களை அமைக்கச் செய்தேன். அவருடைய பாத்திரத்தில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி பாவங்களை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.

வெளி உலகத்தைப் பற்றியோ, நல்ல பண்பாட்டைப் பற்றியோ எதுவுமே அறியாத ஓர் அப்பாவிப் பெண்ணாக அந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டது.

அந்தப் பாத்திரத்துக்குச் சரோஜாதேவி அவர்களும், சரோஜாதேவி அவர்களுக்கு அந்தப் பாத்திரமும் அற்புதமாகப் பொருந்திவிட்டன.

சரோஜாதேவி அவர்கள் அந்தப் பாத்திரத்தைத் தனதாக்கிக் கொண்டு, நடித்துப் புகழைப் பெற்று விட்டார் என்று துணிந்து கூற முடிகிறது.

‘வண்ணுமில்லே சும்மா! ’ என்று சொல்லும் கொச்சையான, ஆனால் கருத்தாழம் கொண்ட இயற்கை நடிப்பால் அவர் மக்கள் மனதில் பதிந்து விட்ட ஒன்று போதுமே, அவர் அந்தப் பாத்திரம் தாங்கி நடித்ததில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதை நிருபிக்க. ’ - எம்.ஜி.ஆர்.

----------‘நாடோடி மன்னனில் நடிக்க எம்.ஜி.ஆர். தன்னைத் தேர்வு செய்த சூழல் பற்றி சரோஜாதேவி- - ‘எம்.ஜி.ஆர்., திருடாதே ஹீரோயினாக என்னை ஓகே செய்தாலும், ஒரு புதுமுகத்தை எப்படி நமது தயாரிப்பில் நடிக்க வைப்பது என்கிற குழப்பம் நிலவியது. அவர்கள் யாரும் எம்.ஜி.ஆரிடம் அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். அதைப் புரிந்து கொண்டார். என்றாலும் என்னைத்தான் கதாநாயகியாகப் போட வேண்டும் என்று அவர் வற்புறுத்தவில்லை. அந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆரின் எண்ணத்தில் முழுமையான உறுதி இருந்தது.

அவரது சொந்தத் தயாரிப்பில், பிற்பாதியில் முழுக்க முழுக்க கலரில் நடிக்க, என்னை அவர் ஒப்பந்தம் செய்தார்.’ -சரோஜாதேவி.

எம்.ஜி.ஆரே துணிந்து தனது சொந்தப் படத்தில் சரோஜாதேவியை நடிக்க வைத்தது, சரோ வேண்டாம் என்று மறுத்தவர்களிடம் ஒரு நிர்ப்பந்தத்தை உண்டாக்கியது.

‘திருடாதேயிலும் சரோஜாதேவியே கதாநாயகி...! ’என்பதை முகத்தில் அடித்த மாதிரி சொன்னார் எம்.ஜி.ஆர். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தத் திருப்தி எம்.ஜி.ஆருக்கு.

‘நாடோடி மன்னன்’ விமர்சனத்தில் - ஆனந்தவிகடன்: மாணிக்கம் - ‘கடைசி ஆறாயிரம் அடியும் சரோஜாதேவிதான். தீவுலே துணிப்பஞ்சம் போலிருக்குது. அப்படி இருந்தும் ஏதோ கிடைக்கிற துணியைக் கட்டிக் கிட்டு வந்து எல்லாரையும் சொக்க வைக்குது...

காதல் காட்சிகளில் எல்லாம் ரொம்ப ப்ரீயா நடிச்சிருக்குது... ’

நாடோடி மன்னனின் வெற்றியில் எம்.ஜி.ஆரை விட அதன் முழுப்பலனையும் அடைந்தவர் சரோ.

தேவர் பிலிம்ஸ் படத்தில் ஒரே ஒரு நடனம் ஆடுவதற்காகச் சென்றார் சரோ. ஊதிய முரண்பாடு காரணமாக ருத்ரம்மா சம்மதிக்கவில்லை. தேவரின் அடுத்தத் தயாரிப்பில் சரோவை ஹீரோயினாக்கி அழகு பார்த்தார்கள்.

நாடோடி மன்னன் வெளியீடு தாமதமானது. கிடைத்த ‘அரிமா’ இடைவெளியில் தேவர் முந்திக்கொண்டார்.

‘சரோ கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் தமிழ்ப் படம்’ என்கிற பெருமை, 1958 ஜூலை 11ல் ரிலிசான தேவரின் ‘செங்கோட்டை சிங்கத்து’க்குக் கிடைத்தது. நாடோடி மன்னனுக்கு முன்பாகவே ஒரு கன்னட டப்பிங் சினிமா, சரோஜா தேவியைப் பரவலாகத் தமிழர்களிடத்தில் நன்கு அறிமுகப்படுத்தியது. அந்த அதிசயம் பற்றி சரோ-

‘கன்னடத்தில் பி.ஆர். பந்தலு இயக்கத்தில் நான் நடித்த ஸ்கூல் மாஸ்டர் என்ற படம், ‘எங்க குடும்பம் பெரிசு’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ் நாட்டில் ஓடிக் கொண்டு இருந்தது.

மயிலாப்பூரில் காமதேனு தியேட்டரில் அந்தப் படம் பிரமாதமாக ஓடி பெரிய வெற்றி பெற்றது.

நேரடித் தமிழ் படங்களில் நடித்து நான் பெரும் புகழ் பெற்றாலும், என்னைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தது அந்த கன்னட டப்பிங் படமே ஆகும். ’ சரோஜாதேவி.

காளிதாஸ் கன்னட ஷூட்டிங் நடைபெற்ற சமயம். எம்.ஜி.ஆரைச் சந்தித்த அதே வாஹினியில் ஜெமினி கணேசன் - சரோ சந்திப்பும் நடந்தது.

கூனன் மேக் அப்பில் செட்டுக்குச் சென்றார் ஜெமினி கணேசன்.

‘இவரா காதல் மன்னன்...! ’ சரோவை ஆச்சரியமும், அருவருப்பும் ஒரு சேரத் தாக்கியது.

கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் ஜெமினியின் கெட் அப் அது, என அவருக்கு விளக்கிச் சொன்னார்கள்.

அதைத் தயாரித்த நாராயணன் கம்பெனியின் அடுத்த படைப்பு இல்லறமே நல்லறம். எம்.ஜி.ஆர். போலவே ஜெமினியும் சமர்த்தர். உடனடியாக அவர் ஒப்பந்தம் ஆகியிருந்த ‘இல்லறமே நல்லறம்’ படத்தில் சரோவுக்குத் தனது ‘சின்ன வீடாக’ பெரிய வாய்ப்பை அளித்தார்.

மஞ்சக்குப்பத்து தெருக்கூத்தில் ஆடும் சரோவை, ‘ஜெர்மன் புகழ் நாட்டியத் தாரகை சரளாதேவியாக’ ஜெமினியிடம் காட்டிப் பணம் பறிப்பார் வில்லன் எம்.என். நம்பியார்.

‘அஞ்சலிதேவி, ஆர். கணேஷ், வி. நாகையா நடித்தது’ என்று இல்லறமே நல்லறத்தில் அஞ்சலிதேவியின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திக் காட்டினார்கள். எம்.வி. ராஜம்மாவை அடுத்து சரோவின் பெயர் பட்டியலில் இடம் பெறும்.

ஓரிரு மாத இடைவெளியில் சரோ நடிப்பில் தேடி வந்த செல்வம், திருமணம், மனமுள்ள மறு தாரம் போன்றவை ரிலிசானது.

தேடி வந்த செல்வம் படத்தில் வில்லன் நடிகர் டி.கே. ராமச்சந்திரன், சரோஜாதேவியின் காதல் ஜோடி. மனமுள்ள மறுதாரம் மூவியில் கே. பாலாஜி நாயகன்.பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர். பந்தலு சரோவின் திடீர் ஏற்றத்தைப் பார்த்து வியந்து போனார்.

கச்சதேவயானி கன்னடப்படம் முடிந்ததும், தனது சபாஷ் மீனாவில் ‘ஹீரோ’ சந்திரபாபுவுக்கு ஜோடியாக சரோவுக்கு வாய்ப்பளித்தார்.

பாசக்காரத் தந்தை - மகளாக சரோவும் - எஸ்.வி. ரங்காராவும் 1970கள் வரை டஜன் கணக்கில் நடித்தார்கள். அதற்குப் பிள்ளையார் சுழி போட்டது சபாஷ் மீனா.

சென்னை காசினோ தியேட்டரில் 20 வாரங்களுக்கும் மேலாக ஓடியது. சென்ற நூற்றாண்டில் மிக அதிகமாகத் திரையிடப்பட்ட சினிமாக்களில் சபாஷ் மீனாவும் ஒன்று!

தெலுங்கில் என்.டி. ராமாராவுடன் ‘பாண்டுரங்க மஹாத்மியத்தில்’ அறிமுகமானார் சரோ. சவுகார் ஜானகியின் தங்கை, நடிகை கிருஷ்ணகுமாரி பின்னணிக் குரல் கொடுத்தார்.

அடுத்து வந்த ஆந்திர சித்திரங்களில் சரோவே மாட்லாடினார்.

தமிழில் சரோ நாயகி அந்தஸ்தை அடைந்த 1958ல் மட்டும், அவரது நடிப்பில் அரை டஜன் படங்களுக்கும் மேல் வெளிவந்தது. அது சரோ மீது தமிழர்கள் கொண்டிருந்த அபிமானத்தின் அளவு கோல்.

1959 சரோஜாதேவி சரித்திரம் படைத்த ஆண்டாக அரும்பியது.

-------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com