சரோஜா தேவி: 4. எம்.ஜி.ஆர். சாப்பாடு...!

வீட்டையொட்டி வாக்சல் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் ருத்ரம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி!

வீட்டையொட்டி வாக்சல் கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் ருத்ரம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி!

‘ஜெமினி’ எஸ்.எஸ். வாசன்!

சரோவின் தாயாரால் நிஜமாகவே நம்ப முடியவில்லை.

கால விரயம் செய்யாமல் நேரடியாகத் தன் வருகையின் நோக்கத்தை வெளியிட்டார் வாசன்.

அவரது அடுத்த ப்ராஜெக்ட்டான இரும்புத்திரையில் ‘வைஜெயந்திமாலாவின் தங்கையாக சரோ நடிக்க வேண்டும். ’

கதைப்படி அப்பா எஸ். வி. ரங்காராவ் இரண்டு பெண்டாட்டிக்காரர்.

தனித்து வாழும் ஏழைத் தாயிடம் வளரும் முதல் மகள் ‘ஜெயந்தி’யாக வைஜெயந்திமாலா.

தொழிலதிபர் எஸ்.வி.ரங்காராவுடன் வசதியோடு வசிக்கும் இன்னொரு பெண் ‘மாலதி’.

வைஜெயந்தியின் சாயலில் சரோ தெரிவதால், இருவரும் சகோதரிகளாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார் வாசன்.

சரோவின் தாயாருக்குச் சம்மதமில்லை.

‘வேணாம். குழந்தை நடிக்காதுங்க’ என்று தைரியமாகவே சொல்லி விடத் தோன்றியது.

சினிமா பரமபதத்தில் எம்.ஜி.ஆர். என்கிற மிகப் பெரிய ஏணியில் ஏறி, இப்போதுதான் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறோம்...

மீண்டும் துணைக் கதாபாத்திரங்களில் சிக்கி அவதிப்படுவானேன்!

ஹீரோயினுக்குத் தங்கையாக நடித்தால் கடைசி வரை அதே ரோலுக்கு அழைப்பார்கள்.

விடாப்பிடியாக உட்கார்ந்திருந்தார் நினைத்ததை முடிக்கும் வாசன். ருத்ரம்மாவின் ஒப்புதல் அவருக்குத் தேவையில்லை என்பதைச் சில நொடிகளில் உணர்த்தினார்.

‘இதுல மட்டும் உங்க பொண்ணு நடிக்க மாட்டான்னு சொல்லிட்டீங்கன்னு வெச்சுக்குங்க... இப்பவே சரோஜாவைக் குண்டுக்கட்டாத் தூக்கிக்கிட்டு போயிடுவேன்... ’என்றார் சிரித்தவாறே.

‘கதர்ச்சட்டைக்குள் ஒரு தீவிரவாதி...! ’

வாசனின் வல்லமை ருத்ரம்மாவுக்குச் சட்டென்று புரிந்தது.

கைத் தட்டினால் ஏவலுக்கு ஆயிரம் பேர் காத்திருக்க, ஜெமினி முதலாளியே மெனக்கெட்டு வீடு தேடி வந்திருக்கிறார்..!

அதுவே சரோவுக்குக் கிடைத்த மிகப் பெரிய அந்தஸ்து. அப்படியிருக்க சரோவின் மேன்மையைக் குறைக்கும் விதத்திலா வாசன் படம் எடுப்பார்..?

‘எல்லாம் நன்மைக்கே’ என்று எண்ணினால் எப்போதும் எதிலும் மனம் சலனப்படாது.’

தன் சஞ்சலத்தை வியர்வையைத் துடைப்பது போல் துடைத்த ருத்ரம்மா,

‘ உங்க விருப்பப்படியே செய்யுங்க’ என்றார்.

தனது நிஜமான அன்னை வசுந்தரா தேவிக்கு சினிமாவிலும் மகளாக வைஜெயந்தி நடித்த ஒரே படம் இரும்புத்திரை.

இந்தியிலும் தமிழிலும் சம காலத்தில் ஜெமினி ஸ்டுடியோவில் படமானது. இரண்டிலும் இரு நாயகிகள் வைஜெயந்திமாலா - சரோஜாதேவி.

இந்தியில் அதன் பெயர் ‘பைகாம்’ ஹீரோ திலீப் குமார். தமிழில் சிவாஜி கணேசன்.

முன்னேறி வரும் சில்வர் ஜூபிளி ஸ்டார் சரோ. அவரது உச்ச நட்சத்திர ஸ்தானத்துக்கு எந்த பங்கமும் நேரிடாமல் வாசன் டைட்டில் போட்டார்.

இரும்புத்திரையில் எடுத்த எடுப்பில் வைஜெயந்திமாலா - சரோஜாதேவி இருவரின் பெயரையும் காட்டினார்.

அதற்கு அடுத்தே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இடம் பெறும்.

அக்கா- தங்கை என்று அறியாமலே ஆரம்பத்திலேயே சிநேகிதிகளாகி சிறகடிப்பார்கள் வைஜெயந்தியும்- சரோவும்.

‘படிப்புக்கும் ஒரு கும்பிடு பட்டத்துக்கொரு கும்பிடு

பாஸூம் ஃபெயிலும் போடும் இந்தப் பழக்கத்தொரு கும்பிடு’

என்று பி. லீலா - ஜிக்கி குரல்களில் ஒலிக்கும் படத்தின் துவக்கப் பாடல். தேர்வுகள் முடிந்த சந்தோஷத்தில் தோழிகளுடன் இணைந்து மோட்டாரில் நகர்வலம் வருவார்கள்.

‘கலைமணி’ கொத்தமங்கலம் சுப்பு எழுதிய அர்த்தம் நிறைந்த ஹாஸ்யப் பாடல். அனைத்துக் கல்லூரி மாணவிகளாலும் அதிகம் பாடப்பட்டது.

எஸ்.எஸ். வாசனின் தயாரிப்பு இயக்கத்தில் சரோ அதற்குப் பின் நடிக்க முடியாத அளவு பிசி.

சரோவுக்கு, பொங்கல் வெளியீடாக 1960ன் முதல் சூப்பர்ஹிட் ஜெமினியின் இரும்புத்திரை.

தமிழில் கோவை- கர்நாடிக் தியேட்டரில் இரும்புத்திரை 25 வாரங்களைக் கடந்தது.

16 மாதங்களுக்குள் சரோவின் 5 வது வெள்ளிவிழாச் சித்திரம்- ‘பைகாம்’ ஆண்டுக்கணக்கில் ஓடி அபாரமாக வசூலித்தது!

தென்னக சினிமாவில் வேறு எந்த நாயகியாலும் என்றும் எண்ணிப் பார்த்திட முடியாத இமாலய சாதனை!

ஜெமினியைத் தொடர்ந்து சரோவைத் தேடி அடுத்துக் களம் இறங்கியது ஜூபிடர் பிக்சர்ஸ். அவர்களது பிரம்மாண்டத் தயாரிப்பு ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’.

அன்றைய கால கட்டத்தில் மிக அதிக சம்பளம் வாங்கிய டைரக்டர் டி. பிரகாஷ்ராவ் இயக்கியது. வசனம் - மு.கருணாநிதி. ஹீரோ ஜெமினி கணேசன்.

ஒரு டஜன் படங்களில் நாயகியாக நடித்து முடிப்பதற்குள், முதன் முதலாக இரண்டு லட்சத்துக்கு நெருக்கமாக சரோஜாதேவிக்கு, ஜூபிடர் மிகக் கூடுதலான ஊதியத்தை மனமுவந்து கொடுத்தது.

ஏறக்குறைய மூவேந்தர்களுக்கு நிகரான பேமென்ட்!

சரோ மீது அனைவரது கண் திருஷ்டியும் விழுந்திருக்க வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் க்ளைமாக்ஸில் அவர் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது.

வில்லன், சரோவைக் கூண்டில் அடைத்து நெருப்பு வைக்கும் கட்டம்.

காட்சி வெகு ஜோராக வர வேண்டும் என்கிற ஆர்வக் கோளாறு. டைரக்டர் பெட்ரோலை நிறைய ஊற்றித் தீ வைத்தார்.

திடீர் எம்.ஜி.ஆராகி சிவந்த தீக்கங்குகளும் சரோவைத் தழுவ வந்தன.

கதாசிரியரும்- துணை இயக்குநருமான மா. லட்சுமணன் சரோ நின்றிருந்த கூண்டைச் சற்றே தள்ளி விட்டார்.

நல்ல நேரம்! சரோவை ‘சத்யநாராயண விரதம்’ காப்பாற்றியது!

‘இன்றைக்கும் சரோஜாதேவி எங்கள் குடும்பத்தில் ஒருவர். சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வராமல் போக மாட்டார். மறக்காமல் அவரது உயிரைக் காப்பாற்றிய சம்பவத்தை நினைவு கூறுவார்.

நன்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு சரோஜாதேவி!

ஒரு நாள் மதியம் உணவு வேளையில் அவர், ‘ஏன் லட்சுமணன்... இப்பவும் நாம சாப்பிடறது எம்.ஜி.ஆர். சாப்பாடுதானே...? ’ என்றார்.

தனது உயர்வுக்குக் காரணமான எம்.ஜி.ஆரை எப்போதும் எண்ணிப்பார்க்கும், சரோஜாதேவி போன்ற நல்ல உள்ளம் சினிமா உலகில் அபூர்வமானது. ’ கதாசிரியர் மா. லட்சுமணன். ( 2001 கோடை)

சரோ அனலில் அகப்பட்டு நடித்தும், 1960 ஜூலை முதல் தேதி வெளியான எல்லோரும் இந்நாட்டு மன்னர் கல்லா கட்டவில்லை.

பட்டுக்கோட்டையாரின் ‘என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே’ பாடல் மட்டும் அதன் நினைவைப் பறை சாற்றுகிறது.

1960 தீபாவளிக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் மூன்று. மக்கள் திலகத்தின் மன்னாதி மன்னன், நடிகர் திலகத்தின் இரட்டைஇலக்கியச் சித்திரங்கள் 1. அகிலனின் பாவை விளக்கு 2. மு.வரதராசனாரின் பெற்ற மனம் ஆகியன.

அதே அக்டோபர் 19-ல் எந்த விதப் பரபரப்புமின்றி வெளியானது வாசு பிலிம்ஸ் கைராசி.

ஜெமினி கணேசன் -சரோஜாதேவி இருவருக்கும் கல்யாணப்பரிசுக்குப் பிறகு அற்புதமாக நடிக்க அதிக வாய்ப்பு வழங்கிய மற்றொரு காதல் காவியம்!

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் உறவினர் வாசுமேனனின் தயாரிப்பு.

தீபாவளி ரேஸில் கைராசி ஓஹோவென்று ஓடியது. அது வாரிக் கொடுத்த வசூலில் ‘வாசு ஸ்டுடியோ’ கோலிவுட்டில் உருவானது.

‘எம்.ஆர். ராதா அழுதால் யார் பார்ப்பார்கள்... ’என்று கேட்டார் நடிகவேள். அவரை முழு உற்சாகமூட்டி நடிக்க வைத்தவர் டைரக்டர் கே. சங்கர். அவரது முந்திய படம் சிவகங்கைச் சீமை ஓடவில்லை. அதனால் மிகுந்த வெறியோடு வெற்றிக்காக உழைத்தார்.

கதை வசனம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இசை கோவர்த்தனம் என ஒரு புது யூனிட் கைராசியில் கை கோர்த்தது.

வசந்தி, பொன்னி வரிசையில் கைராசி ‘சுமதி’யும் தாய்க்குலங்களின் கவனத்தைக் கவர்ந்தாள். சரோ நர்ஸாகவும் ஜெமினி டாக்டராகவும் நடித்தனர்.

காலத்தால் அழியாத கண்ணதாசனின் காதல் கீதங்கள்-

1.கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ, 2.காத்திருந்தேன் காத்திருந்தேன், 3.காதலெனும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே 4. அன்புள்ள அத்தான் வணக்கம் என ஒவ்வொருப் பாடலும் வாலிப உள்ளங்களைக் கிறங்க அடித்தது.

அதே தீபாவளி நாளில் ரிலீசான சரோவின் இன்னொரு படம் தேவர் பிலிம்ஸ் யானைப்பாகன். தோல்வியைத் தழுவியது.

1960ன் கடைசி தினம். அன்றும் சரோ நடிக்க ஒரு சினிமா வெளியானது. அது ஸ்ரீதரின் விடிவெள்ளி.

சிவாஜியின் சிநேகிதர் - வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் தயாரித்தது - பிரபுராம் பிக்சர்ஸ் விடிவெள்ளி. ஏறக்குறைய நடிகர் திலகத்தின் சொந்தப்படம் எனலாம்.

விடிவெள்ளி க்ளைமாக்சிலும் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் உண்டு. இசை ஏ.எம். ராஜா.

‘கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை

நினைத்துப் பார் பார் அதன் தெம்பை’

என்கிற நல்ல நோக்கம் கொண்ட கோஷ்டி கானம் விடிவெள்ளியில் சூப்பர் ஹிட்!

ஆண்டின் இறுதியாக வந்தாலும் தரத்திலும் வசூலிலும் முதலிடம் பிடித்தது. முக்கிய நகரங்களில் 100 நாள்கள் ஓடியது விடிவெள்ளி.

டி.ஆர். ராஜகுமாரியின் ஆர். ஆர். பிக்சர்ஸ் சரோவைக் கைத் தூக்கி விட்ட நிறுவனங்களில் மிக முக்கியமானது. அதற்குப் பிள்ளையார் சுழி 1961ன் பொங்கல் வெளியீடான ‘மணப்பந்தல்’.

கதாநாயகன் எஸ்.எஸ். ராஜேந்திரன். அவரது அண்ணனாக அசோகன். தம்பியைக் காதலிக்கும் சரோ, விதி வசத்தால் மூத்தவனை மணக்க நேரிடுகிறது.

எஸ்.எஸ். ஆர்.- சரோ நடித்து மிக அதிக முறை மக்களைச் சந்தித்த ஒரே படம் மணப்பந்தல்.

‘பூத்து மணம் பரப்புகிறவர் சரோஜாதேவி’ என்று சரோ நடிப்பை குமுதம் பாராட்டியது.

‘பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்’

பி.பி. ஸ்ரீநிவாஸ் - பி. சுசிலா குரல்களில் எஸ்.எஸ். ஆர்- சரோ பங்கேற்ற மணப்பந்தல் டூயட் இன்றைக்கும் நேயர் விருப்பமாக வலம் வருகிறது.

1959ல் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடிக்கப் போன எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. நீண்ட கால சிகிச்சைக்குப் பின், வாத்தியார் குணமானதும் மீண்டும் திருடாதே ஷூட்டிங் தொடங்கியது.

‘என் அருகே நீ இருந்தால் ‘பாடல் காட்சி. எம்.ஜி.ஆர். காத்திருந்தார். சரோவைக் காணோம். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.

எம்.ஜி.ஆரே எதிர்பார்க்காத உயரத்தில் எம்.ஜி.ஆரை விட பிஸி சரோ!

கை படாத ரோஜா, கன்னடத்துக் கிளி என்றெல்லாம் பட்டங்கள். அவரது பெயரில் ஆபாசப் புத்தகங்கள். ரசிகர்களின் ரகசியக் கனவுகளில் சரோவின் உலா சகட்டு மேனிக்கு.

எம்.ஜி.ஆர். பொறுமை இழக்கத் தொடங்கினார். அப்புறம் என்ன நடந்தது. அதனை சரோவே சொல்வது அதை விட சுவாரஸ்யம்.

‘வாகினியில் சிவாஜியோட விடிவெள்ளி, பரணி ஸ்டுடியோல திருடாதே. விடிவெள்ளி படத்துக்கு பெரிய அளவில் செட் போட்டு எடுத்தாங்க. அதை முடிச்சிட்டு நான் பரணிக்கு வரணும். சில காரணங்களால் காட்சி நீண்டு விட்டது.

திருடாதேவுக்காக நான் கொடுத்திருந்த கால்ஷீட்டில் பாதி நேரத்தை விடிவெள்ளி எடுத்துக் கொண்டது.

ஒரு வழியாக நடித்து முடித்து விட்டு பரணிக்குப் பதற்றத்துடன் ஓடி வந்தேன். மொத்த யூனிட்டும் எனக்காகக் காத்திருந்தது.

என் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் படத்துக்கே நான் லேட்டாக வருகிறேன் எனும் போது என் குற்ற உணர்வு எப்படி இருக்கும்?

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் யாராவது லேட்டாக வந்தால், அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களின் முகத்தையே பார்க்க மாட்டார். அன்று என்னையும் பார்க்கவில்லை.

அவரைக் கடந்து நான் மேக் அப் ரூமுக்குப் போக வேண்டும். அவர் அருகே சென்றதும், மன்னிச்சுடுங்க என்றேன். அண்ணனோ,

‘நான் என்ன பண்றது நீ பெரிய ஸ்டார் ஆயிட்டே’ என்றார்.

சந்தோஷமான டூயட் பாடலில் நடித்து முடிக்கும் வரை, தாமதமாக வந்த உணர்வில் என் தலையில் ஒரு தயக்கம் சுழன்று கொண்டிருந்தது. ’ சரோஜாதேவி.

என் அருகே பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். போலிசுக்கு பயந்து மறைவிடத்தில் தங்கி இருப்பார். அங்கே செல்லும் சரோவோடு டூயட் பாடுவார்.

அவசரத்தில் சரோவின் பாவாடையை எம்.ஜி.ஆர். அணிந்து பாடுவதாக காட்சி. தியேட்டர்களில் கலகலப்பை ஏற்படுத்தும்.

எம்.ஜி.ஆர்.-சரோ சேர்ந்து நடித்த முதல் முழு நீள டாக்கி திருடாதே. அதுவும் விடிவெள்ளியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதை.

திருடி விட்டு அதற்காக வருந்தும் ஹீரோவின் மன உளைச்சலே அடிப்படை. இரண்டிலும் ஒரே நாயகி சரோ.

விடிவெள்ளி மாதிரி திருடாதே ஓடுமா...!

கண்டிப்பாக ஓடியே தீர வேண்டும் என்கிற கட்டாயம் எம்.ஜி.ஆருக்கு. திருடாதே வெற்றி அடைந்தால் மட்டுமே எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் மறு மலர்ச்சி ஏற்படும் அசாதாரண சூழ்நிலை.

போதாததற்கு சிவாஜியின் அடுத்த ‘பா’ வரிசைச் சித்திரம் பாவமன்னிப்பு மார்ச் 16ல் வெளியானது. மற்றொரு போட்டிக்கு முந்திக் கொண்டு உற்சாகமாகத் தோள் தட்டியது.

மார்ச் 23ல் திருடாதே ரிலீஸ்!

தனது சக்ஸஸூக்கு சரோவின் பாபுலாரிடியை நம்ப வேண்டிய சங்கடம், முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டிருந்தது எவராலும் மறுக்க முடியாத நிஜம்!

திருடாதே அநேக ஊர்களில் அநாயாசமாக 100 நாள்களைக் கடந்து ஆர்ப்பரித்தது.

எம்.ஜி.ஆர். நிரந்தரமாகச் சமூகச் சித்திரங்களுக்கு திசை மாற, திருடாதேயின் மகத்தான வசூலும் வெற்றியும் அஸ்திவாரம் அமைத்தது.

‘திருடாதே வெற்றிப்படத்துக்கு நான் தான் அஸ்திவாரம் என்ற நிஜம், வெளியே பலருக்குத் தெரியாமல் போயிற்று. ஆனால் சரோஜாதேவிக்கு எல்லாம் தெரியும்.

அதனால் ‘திருடாதே’ நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்ற அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் கொண்டு வந்து என்னைப் பார்த்து வணக்கம் தெரிவித்து கொடுத்து விட்டுச் சென்றார்’ - சின்ன அண்ணாமலை.

தமிழ் சினிமாவில் தரித்திரம் தொலைய வேண்டுமானால், எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி ஜோடி தொடர்ந்து இணைந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியானது.

அதற்கான அவசியத்தை அழகாகச் சொன்னது குமுதம் - ‘திருடாதே’ சினிமா விமர்சனம்-

‘எம்.ஜி.ஆருக்கு மற்றொரு புரட்சிதான். இதமாகத்தான் செய்திருக்கிறார். எத்தனையோ பேர் நாட்டுக்கட்டையாக நடித்து விட்டார்கள். என்ன போடு போடுகிறது அந்தப் பெண்! நாட்டுக்கட்டையாக சரோஜாதேவி செய்திருக்கும் விதத்தில் ஒரு தனிச்சிறப்பு உண்டு’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com