வைஜெயந்தி மாலா: 5. டெலிபோன் ஆபரேட்டர்!

சரத்சந்திரரின் சாஸ்வதமான படைப்பு தேவதாஸ். அநேக முறைகள் இந்தியில் தேவதாஸ் சினிமாவாகி இருக்கிறது.

சரத்சந்திரரின் சாஸ்வதமான படைப்பு தேவதாஸ். அநேக முறைகள் இந்தியில் தேவதாஸ் சினிமாவாகி இருக்கிறது.

1935ல் ’வடக்கின் கான சம்பந்தர்’ கே.எல். சைகாலின் நடிப்பில் முதல் தேவதாஸ் தயாரானது. சைகாலின் பாடல்களும் நடிப்பும் பிரமாதமாக பேசப்பட்டது.

பிமல்ராயின் இஷ்ட தெய்வம் தேவதாஸ். முதன் முதலில் எடுக்கப்பட்டதில், ஏற்கனவே ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிமல் ராய்.

ஆழ்ந்த ஈடுபாடு, மற்றும் ஆளுமையின் அடுத்த அத்தியாயம் 1956ல் அவரது இயக்கத்தில் உருவான தேவதாஸ்.

திலீப் குமார் - சுசித்ரா சென், வைஜெயந்தி மாலா நடித்திருந்தனர்.

திலீப் குமாருக்கு நிகரான சோக நடிப்பில் பெரும் புகழ் பெற்றவர் ’வங்கத்துத் தங்கம்’சுசித்ரா சென். தாயும் மகளுமாக மாறுபட்ட இரு வேடங்களில் சுசித்ரா சென் வாழ்ந்து காட்டிய படம் ’மம்தா’.

சுசித்ரா சென்னின் மறக்க முடியாத நடிப்பைப் பார்த்து வியந்து நின்றனர் நடிகையர் திலகம் உள்ளிட்டத் தென்னக நட்சத்திரங்கள்.

வைஜெயந்தி மாலா நடிக்கத் தமிழில் வீனஸ் பிக்சர்ஸ் ‘மம்தா’வை உருவாக்க இருந்தது.

பின்பு சவுகார் ஜானகியின் சொந்தத் தயாரிப்பில், கே. பால சந்தர் இயக்கத்தில் காவியத் தலைவி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. 1970 தீபாவளித் திருநாளில் வெளி வந்து வெற்றிகரமாக 100 நாள்கள் ஓடியது.

அப்படிப்பட்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுசித்ரா சென்னை, தேவதாஸில் ‘நோ வேர்’ஆக்கி விட்டார் ‘தாசி சந்திரமுகி’யாக சதிராடிய வைஜெயந்தி மாலா.

‘சந்திரமுகிக்கு உயிரூட்டிக் கண் முன்பு நிறுத்தியிருக்கிறார் வைஜெயந்தி மாலா...!’ என்று மலைத்தது ‘பிலிம் பேர்’.

‘சிறந்த துணை நடிகை’ விருதை மனமுவந்து வைஜெயந்தி மாலாவுக்கு முதன் முதலாக அளித்தது.

தொழில்ரீதியாக பம்பாயே தாயகம் என்றான பின்னும், மறத்தமிழச்சிகளின் வீரத்தை மறந்ததில்லை வைஜெயந்தி மாலா.

‘பிலிம் பேரின் முடிவு தவறு. ‘பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்ட்ரஸ்’ என்ற பெயரில், பரிசு வழங்கப்படுவது தன்னைச் சிறுமைப் படுத்துகிறது’ எனக் கூறி அவார்டை ஏற்க மறுத்தார் வைஜெயந்தி மாலா.

பிலிம் பேர் சரித்திரத்தில் அத்தகையத் தீவிர எதிர்ப்பும், மறுப்பும், காட்டமும் முதல் அனுபவம்!

‘நயா தவுர்’ நேற்றைய இந்தியர்களால் அத்தனைச் சீக்கிரத்தில் மறக்க முடியாத அற்புதச் சித்திரம்! பி.ஆர். சோப்ராவின் தரமானத் தயாரிப்பு.

நயா தவுரின் அட்டகாச வெற்றியால் தமிழிலும் அதனை ‘பாட்டாளியின் சபதம்’ என்ற பெயரில் டப் செய்தார்கள். தமிழகத்திலும் நன்றாக வசூலித்தது.

‘ஆனந்த விகடன்’ தன் விமரிசனத்தில் நயா தவுர் சினிமாவையும் திலீப் குமார் - வைஜெயந்தி மாலா ஜோடியின் ஒப்பற்ற நடிப்பையும் உளமாறப் பாராட்டியது.

சந்தர் - நயா தவுர்னா என்னப்பா அர்த்தம்?

சேகர் - ‘புதிய சகாப்தம்’னு அர்த்தம். ‘மனித உழைப்பைக் கபளீகரம் செய்துவிடும் எந்திர பூதத்துக்கு, இந் நாட்டில் முக்கிய இடம் கொடுத்து விடக் கூடாது’ என்ற காந்தி மகானின் அஹிம்சைக் குரலை ஆதாரமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

சந்தர் - திலீப் குமார் எப்படி?

சேகர் - என்னால் சொல்லவே முடியாதப்பா! முகத்திலேயே நடிப்பு! இந்தப் படத்தில் நவரஸங்களும் வருகின்றன. அனைத்தையும் அற்புதமாகச் செய்கிறார். ‘கிராமத்து ஜட்கா வண்டிக்கார சங்கரா’ வரார் அவரு. ‘சல் ராஜா சல்’ என்று குதிரையை ஓட்டுகிறார் பாரு, அதுக்கே கொடுக்கலாம் இரண்டரை ரூபாய்!

சந்தர் - வைஜெயந்தி மாலா ?

சேகர் - அவர் நடந்தால் நடிப்பு. பார்த்தால் அன்பு. கடைசியில் ஒரு டான்ஸ் ஆடுகிறார் பாரு, அப்படியே உள்ளத்தை அள்ளி விடுகிறார். விறுவிறுப்பும் ஜோரும் பிரமாதம் போ!

காலத்துக்கேற்ற நல்ல கதை. கருத்துச் செறிந்த வசனம். நல்ல பாட்டுக்கள். பாதிக்கு மேல் வெளிப்புறக் காட்சிகள்... நயா தவுர், பம்பாய்ப் பட உலகிலே ஒரு புதிய சகாப்தத்தை உண்டாக்கி விட்டது என்றே சொல்லலாம்!

----------

திலீப் குமார் - வைஜெயந்தி மாலாவின் நேச மிக்க நடிப்பில் மற்றும் ஒரு மகுடம் ‘மதுமதி’ - திகிலும் விறுவிறுப்பான திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த மாறுபட்ட பூர்வ ஜென்மக் கதை.

இந்தியத் திரையுலகின் மாபெரும் கலைஞர் பிமல் ராய் செதுக்கிய காலத்தால் அழியாத காதல் காவியம்!

மதுமதி என்கிற பெயரைக் கேட்டதும் மகுடியில் கட்டுண்ட நாகமாக மயங்குவர் இந்தி சினிமா இசை ரசிகர்கள்.

சலீல் சவுத்ரியின் இதயத்தை உருக்கும் இசையில், லதா மங்கேஷ்கரின் குரலில் ஒலித்த ‘ஆஜாரே...’ தொடங்கி, மதுமதியில் ஒலித்த அத்தனை பாடல்களும் தேனில் தோய்த்த பலாச் சுளைகள்!

‘மதுமதி’ ஏற்படுத்தியத் தாக்கத்தில் ஸ்ரீதர் இயக்கிய படம் நெஞ்சம் மறப்பதில்லை. தமிழ் சினிமாவில் புதுமையான கதையாக ரசிக்கப்பட்டது. வெற்றிகரமாகவும் ஓடியது.

‘பா’ வரிசைப் படங்களின் மூலம் தென்னகத்தை நடிகர் திலகமும்- பீம்சிங்கும் கூட்டணி சேர்ந்து அசத்திக் கொண்டிருந்தனர். அவர்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்துஸ்தானிகளையும் இன்னொரு முறையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது திலீப் குமார் - வைஜெயந்தி மாலா ஜோடி.

அவர்களது நெஞ்சம் நெகிழச் செய்யும் நடிப்பில் வைரமாக ஜொலித்து, வரலாறு காணாத வசூலில் மாணிக்கமாக இந்தியா முழுவதும் ஒளி வீசியது ‘கங்கா ஜமுனா’.

‘திலீப் குமார் கிராமத்து வாலிபனாகவே மாறி இருப்பது ஒரு புதுமை. வைஜெயந்தி மாலாவுக்குத்தான் உண்மையான வெற்றி என்று சொல்ல வேண்டும்.

தமிழில் வைஜெயந்தி மாலாவை பணக்காரியாகக் காட்டுகிறார்கள். அவர் ஏழையாக இருப்பின், கண்டிப்பாக படித்த பெண்ணாகக் காட்டுகிறார்கள்.

ஆனால் வைஜெயந்தி மாலாவுக்குக் குடியானவப் பெண் வேடம் கொடுத்து, நாட்டுப்புறத்து நங்கையாக நடிக்க வைக்கிறவர்கள் இந்திக்காரர்கள்.’

என்று குமுதம் வைஜெயந்தி மாலாவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு, அவரது சிறந்த நடிப்பைச் சீர்தூக்கி வாழ்த்தி விமரிசனம் எழுதியது.

நடிகர் திலகத்தின் ஆலயமணி இந்தியில் திலீப் குமார் நடிக்க ஆத்மி என்ற பெயரில் ஒலித்தது. அதன் தோல்வியில் கதி கலங்கி நின்றார் பி.எஸ். வீரப்பா.

அவரது நஷ்டத்தில் பங்கு கொள்ளும் வகையில், அன்றைய தேதியில் விலை மதிப்பற்ற ‘கங்கா ஜமுனா’ கதையை திலீப் குமார், இலவசமாகவே வீரப்பாவுக்கு வழங்கினார்.

கங்கா ஜமுனா, தமிழில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு ‘இருதுருவம்’ என்ற பெயரில், 1971 தைத் திருநாளில் பிரம்மாண்ட வண்ணச் சித்திரமாக வெளிவந்தது.

நடிகர் திலகம் - நாட்டியப் பேரொளி இணைந்து நடித்தும், இருதுருவம் வெற்றி பெறவில்லை.

திலீப் குமார் - வைஜெயந்தி மாலா ஏற்படுத்தியத் தாக்கம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழர்களின் மனத்தில் மறையாமல் இருந்ததே அதன் தோல்விக்குக் காரணம்.

திலீப்குமார் - வைஜெயந்தி மாலா ஜோடியின் மற்றொரு சூப்பர் ஹிட் வசூல் சாதனை - ‘லீடர்.’ நேரு மறைந்த நேரத்தில் பாரதம் முழுவதும் பரபரப்பாக ஓடிய அரசியல் சார்ந்த சினிமா.

‘வண்ணப்படம் எடுக்க வேண்டுமா ? இந்தியாவிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று மற்ற தேசத்தினர் சொல்லும் காலம் வந்தால் ஆச்சரியப்படத் தேவை இருக்காது.

ஏன் வந்தோம் என்ற எண்ணம் எழவொட்டாமல் தடுக்கும் விஷயங்கள் 1.வைஜெயந்தி மாலா 2. வண்ணம் தவிர மூன்றாவதாக, இவ்வளவு வேடிக்கையாக திலீப்குமாருக்கு நடிக்கத் தெரிந்திருப்பது...’என்று லீடர் படத்தை மனமாறப் பாராட்டி எழுதியது ‘குமுதம்’.

1967ல் வெளியானது ‘ஆம்ர பாலி’ - வரலாற்றுச் சித்திரம். ‘அமர பாலி’ என்றும் குறிப்பிடுகின்றன சில தமிழ்ப் பத்திரிகைகள்.

‘ஊர்வசி’ விருதைக் குறி வைத்துக் கடுமையாக உழைத்து வைஜெயந்தி மாலா நடித்த லட்சியப் படம்.

சுனில் தத் ஹீரோ.

மாறு வேடத்தில் வந்து மன்மதனாக கண் முன்பு நிற்கிறான் எதிரி தேசத்து இளவரசன். யுவராஜனைக் காதலித்து ஏமாந்து, இறுதியில் புத்த பிரானைச் சரண் அடையும் நாட்டியக்காரியாக நவரஸத் திலகம் வைஜெயந்தி மாலா.

சுனில்தத்துடன் காதலும் கவர்ச்சியும் ஒருங்கே மிளிர, நடிப்பும் நாட்டியமுமாக வைஜெயந்தி உயிரைக் கொடுத்து, உன்னதமாக உரு மாறியும் ஆம்ர பாலி கேட்பாரற்றுப் போனது.

தாங்க முடியாத அதிர்ச்சியில் வைஜெயந்தி மாலா துடிதுடித்த முதலும் கடைசியுமான நிகழ்வு அது!

வைஜெயந்தி மாலா ரசிகர்களின் மலரும் நினைவுகளில் நிரந்தர வாசம் தரும் மற்ற சினிமாக்கள் -

தேவ் ஆனந்துடன் ஜ்வல் தீஃப், ராஜேந்திர குமாருடன் சூரஜ், ஷம்மி கபூருடன் பிரின்ஸ், கிஷோர் குமாருடன் நியூ டெல்லி போன்றவை.

வைஜெயந்தி மாலாவின் நடிப்பாற்றலை மூலதனமாக வைத்து நடிகர் திலகம் முதன் முதலில் வடக்கே பட அதிபராக உயர்ந்தார்.

ஸ்ரீதரின் அமர தீபம் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியில் ’அமர் தீப்’ ஆனது.

சாவித்ரி ஏற்ற வேடத்தில் வைஜெயந்தியும், தமிழில் தோன்றிய அதே ஜிப்ஸி நாட்டியக்காரி பாத்திரத்தில் பத்மினியும் அக்கா தங்கைகளாக நடித்தார்கள். ஹீரோ தேவ் ஆனந்த்.

வைஜெயந்தி மாலாவை அறிமுகப்படுத்திய இந்தி பஹாரில், முதன் முதலாக லலிதா- பத்மினியின் பாம்பாட்டி நடனைத்தையும் இணைத்தவர் ஏவி.எம்.

வைஜெயந்தியும் பத்மினியும் ஒரே படமான பஹார் மூலமே பம்பாயில் வலது கால் வைத்தார்கள்.

தமிழில் வஞ்சிக் கோட்டை வாலிபன், ராஜ பக்தி, இந்தியில் ராஜ் திலக், அமர் தீப் ஆகிய நான்கு படங்களில் இணைந்து நடித்துள்ளனர் பத்மினி- வைஜெயந்தி மாலா இருவரும்.

ராஜ் கபூரின் ராசி நாயகியாக பத்மினியும், திலீப் குமாரின் நடிப்பரசியாக வைஜெயந்தி மாலாவும் வடக்கே வாகை சூடினர்.

தீலிப் குமார் - பத்மினி இந்தியில் ஜோடி சேர்ந்ததே கிடையாது. தெற்கே இருந்து சென்றாலும் வைஜெயந்தி மாலா - பத்மினி இருவரது வழியும் தனித் தனியாக அமைந்தது.

ராஜ் கபூருடன் வைஜெயந்தி மாலாவுக்கு பரஸ்பர மரியாதை மட்டும் உண்டு. ஆனால் பத்மினி - வைஜெயந்தி மாலா இருவரிடமும் ஆரோக்கியமான நட்பை விரும்பினார் ராஜ் கபூர்.

‘திருப்பதி ஏழுமலையானை எனக்குக் காட்டியவர் பத்மினி. டைரக்டர் ஸ்ரீதர் திருமணத்துக்குச் சென்னை வந்த போது, திருமலையில் வெங்கடேசப் பெருமாளின் சந்நிதியில் அங்கப் பிரதட்சணம் செய்ய வைத்த குரு வைஜெயந்தி மாலா!’ - ராஜ் கபூர்.

அமர தீபம், கல்யாண பரிசு வரிசையில் இந்தியில் ஜூலா என்ற பெயரில் ரீமேக் ஆனது கே. சங்கரின் கைராசி வெற்றிச் சித்திரம்.

தமிழில் ஜெமினி - சரோஜாதேவி நடித்த வேடங்களில் சுனில்தத் - வைஜெயந்தி மாலா நடித்தனர்.

வீம்பும் வேடிக்கையும் வைஜெயந்தியின் உடன் பிறப்பு. வைஜெயந்தியின் வெளிப்புறப் படப்பிடிப்புகள் எப்போதும் கூத்தும் கும்மாளமுமாக இருக்கும்.

கேரளாவில் மலம்புழா அணைக்கட்டில் ஜூலா அவுட்டோர் ஷூட்டிங்.

சுனில்தத்துடன் வைஜெயந்தி மாலா யானை சவாரி செய்ய வேண்டிய டூயட் சீன். எத்தனை எடுத்துச் சொல்லியும் வைஜெயந்தி மாலா ‘கஜேந்திரன்’ மீது ஏற மறுத்து விட்டார்.

வாரணத்தின் பக்கம் நெருங்கவே பயந்தார்.

பட அதிபர் வட்டிக்கு வாங்கி போட்டப் பணம் போல வெயில் போய்க் கொண்டிருந்தது.

கடைசி முயற்சியாக ஹீரோ சுனில்தத்தும், கேமரா மேன் தம்புவும் கூட்டு சேர்ந்தார்கள். வலுக்கட்டாயமாக நாயகியை வேழத்தின் மேல் ஏற்றி, பாடல் காட்சியைப் படமாக்கினர்.

மும்பை பிலிமாலயா சினிமா ஸ்டுடியோ. தொலைபேசி என்பது அதிசயமாகக் கருதப்பட்ட 1960. கோடையில் ஒரு நாள். உச்ச நட்சத்திரங்கள் சென்னைக்குத் தொடர்பு கொள்ள வேண்டுமானால் ட்ரங்கால் போட்டுத்தான் பேச வேண்டும்.

அத்தனைப் பெரிய சினிமா ஸ்டுடியோவில் நிர்வாகி அறையில் மட்டுமே தொலைபேசி இருந்தது.

வெளியே புழுங்கியது. வைஜெயந்தி மாலாவுக்கு அன்று டெலிபோன் தேவைப் பட்டது. மேனஜர் ரூமுக்குள் நுழைந்தார். நிர்வாகி முகர்ஜி ஏதோ அவசர வேலையாக வெளியேறினார்.

காலியாக இருந்த முகர்ஜியின் நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டார் வைஜெயந்தி மாலா.

திலீப் குமார் திடீரென்று என்ட்ரி ஆனார். எதிர்பாராமல் வைஜெயந்தி மாலாவைப் பார்த்ததும்,

‘ ஓ...! நீங்களா...! நீங்கள் தான் இனி பிலிமாலயா நிர்வாகியா...? கடவுளே! நீ தான் பிலிமாலயாவைக் காப்பாற்ற வேண்டும்...’ என்று அலறியவாறு அங்கிருந்து அகன்றார்.

தொலைபேசி அன்று வைஜெயந்தியின் கையில் படாத பாடு பட்டது. ஒப்பனை நடிப்புடன் ஓவர் டைமாக டெலிபோன் ஆபரேட்டர் உத்யோகமும் உற்சாகம் அளித்தது.

எங்கெங்கோ இருந்து ரசிகர்கள், நட்சத்திரங்கள் குறித்து ஆவலாக விசாரிப்பது திரைத் துறையின் அன்றாட அஜந்தா.

அன்றைக்கும் எக்கச்சக்க போன் கால்கள். அனைத்துக்கும் அதிரடியாகப் பதில் சொன்னவர் வைஜெயந்தி!

‘திலீப் குமார் எங்கே இருக்கிறார். பிலிமாலயாவிலா...?’

‘இப்போது தான் அவரை யாரோ கடத்திக்கொண்டு போய் விட்டார்கள்’.

‘ஹவ் ஈஸ் வைஜெயந்தி மாலா...?’

‘பேரப் பிள்ளைகளைச் சீராட்டிக் கொண்டிருக்கிறார்’.

‘ஸ்டுடியோ முக்கியஸ்தர்’ முகர்ஜியைக் குறித்து விசாரித்தவர்கள் எல்லாரையும், பிற்பகல் மூன்று மணிக்கு வரச் சொல்லி விட்டார் வைஜெயந்தி மாலா.

முகர்ஜிக்கு மூச்சுத் திணறும் அளவுக்கு மூன்று மணி முதல் அவரது அறையில் தள்ளுமுள்ளு!

----------------

சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணிவதே ஆபாசமாகக் கருதப்பட்ட 1964. கமல் உலக நாயகனாக உலா வராத, நட்சத்திர உதடுகள் ஈரமாகாத இந்திய டாக்கியின் வறண்ட காலம்.

ஜெர்மன் நடிகை காரின்டோர்- வைஜெயந்தி மாலா சந்திப்பு நடந்தது.

‘உங்கள் ஊர் சினிமாவில் லவ் சீன்களில் கிஸ் அடிப்பது இருக்கவே இருக்காதா..?‘

வைஜெயந்தி மாலா வாயை இறுக மூடிக்கொண்டு, ‘நோ... நோ...’ எனத் தலை அசைத்ததும்,

‘பின்னர் காதலை நீங்கள் எப்படி வெளிக் காட்டுவீர்கள்...?’

‘அஃதொன்றும் பெரிய காரியமில்லை. லவ்வைச் சொல்ல ஒரு டூயட் போதும் எங்களுக்கு!’

----------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com