தேவிகா: 1.தேன்மொழி தேவிகா...!

தேவிகா நடித்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவானவை.
Published on
Updated on
5 min read

தேவிகா நடித்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவானவை.

அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்த உதவிய ஒவ்வொரு சினிமாவுமே தென்னகத் திரை வரலாற்றின் பொற்கால அத்தியாயம்.

கிடைத்தத் தரமான வேடங்களில் அதி அற்புதமாக வாழ்ந்து காட்டியவர். இன்றளவும் அனைத்துத் தமிழர்களின் இதயங்களிலும் நிரந்தர இடம் பிடித்தவர் தேவிகா!

‘வேர்க்கடலைத் தோல்களும் கள்ளங்கபடமற்ற சிரிப்பொலியும்... ’ அது தேவிகாவின் ஷூட்டிங் என்று, லைட் மேன், ஸ்டில்ஸ் போட்டோகிராபர் உள்ளிட்டத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எளிதில் அடையாளம் காட்டி விடும்.

‘நாட்டிய தாரா’ என்ற தெலுங்கு டப்பிங் சினிமா முதல் முதலாக தேவிகாவை தமிழக ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.

1958ல் வெளியானது பரணி பிக்சர்ஸ் ‘மணமகன் தேவை’ நகைச்சுவைச் சித்திரம். பானுமதியின் தயாரிப்பு. நடிகர் திலகமும் - பானுமதியும் ஜோடியாக நடித்தனர். அதில் ஹீரோயினின் தங்கையாக முக்கிய வேடத்தில் ‘பிரமீளா’ என்கிற பெயரில் அறிமுகமானார் புதுமுகம் தேவிகா.

அது தேவிகாவின் மூன்றாவது டாக்கி.

ஒட்டு மொத்தத் திரைக்கதையும் தேவிகாவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி அமைந்திருக்கும். முதல் இணை காமெடி நடிகர் ஏ. கருணாநிதி.

பானுமதியின் ஆதரவால் அடுத்து சிவாஜி-பானுமதி இணைந்து நடித்த ராணி லலிதாங்கி படத்திலும் தேவிகா இடம் பெற்றார்.

ஆனந்த விகடன் மணமகன் தேவை திரை விமர்சனத்தில் அக்கறையுடன் பிரமீளா குறித்தும் எழுதியது.

சந்தர் -‘யாரோ புதுப் பெண் நடிச்சிருக்காப் போலிருக்கே? ’

சேகர் - ‘பிரமீளாவா? நல்ல முகம். நல்ல குரல். நடிப்பைப் பத்தி போக போகத்தான் தெரியணும். ’

ஆனந்த விகடனின் கூற்று விரைவில் பலித்தது.

இயற்கையின் தூரிகை வரைந்த அவரது ஓவிய இதழ்களின் தமிழ் உச்சரிப்புக்கு, இலங்கை வானொலி நற்சான்றிதழ் வழங்கியது.

‘தேன்மொழி தேவிகா! ’ என்கிற அடைமொழியோடு சிலோன் ரேடியோ அறிவிப்பாளர்கள் தேவிகாவைத் தனித்துச் சிறப்பித்தார்கள்.

இருபதாம் நூற்றாண்டு பயாஸ்கோப்பில் சுடர் விட்டுப் பிரகாசித்தக் கனவுக் கன்னிகளில் தேவிகா மிக மிக வித்தியாசமானவர்.

நட்சத்திரங்களுக்கே உரிய பாசாங்குகள் அற்றவர். ஒளிவு மறைவின்றி உள்ளத்தில் பட்டதைப் பட பட வென்று பேசிப் பட்டாசாக தூள் கிளப்பியவர் நமது தேவிகா.

எடுத்த எடுப்பில் ஹீரோயினாகிப் புகழின் இமயம் சென்றவர் அல்ல. ஒவ்வொரு படியாக ஏறி 1963ல் தமிழ் சினிமாவின் உச்சம் தொட்டவர்!

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். என்று தமிழ்த் திரையுலகின் முக்கியத் தூண்களுடன் ஜோடி சேர்ந்த போதும், எந்த வித இமேஜூம் பார்க்காதவர்.

கல்யாண் குமார், ஆர்.எஸ். மனோகர், பிரேம் நசீர், கே. பாலாஜி, ’வீரத்திருமகன்’ புகழ் ஆனந்தன் என அடுத்த வரிசை நடிகர்களுடனும் தயங்காமல் இணைந்து நடித்தார்.

தேவிகாவுடன் அதிகப்படங்களில் பங்கேற்ற ஹீரோக்கள் நடிகர் திலகமும் - நவரஸத்திலகமும்.

------ சினிமா ஸ்டாராக அறிமுகமான சூழல் குறித்த தேவிகாவின் நினைவலைகள்-

‘எனக்குச் சொந்த ஊர் ஆந்திராவிலுள்ள சித்தூர். சகோதரிகள் இருவர். ஒரு சகோதரர். பழமையில் ஊறிய குடும்பம். ஆகவே கட்டுப்பாடுகள் ஜாஸ்தி. வீட்ல சினிமா மேல அத்தனை நல்ல அபிப்ராயம் கிடையாது.

என்னோட பாட்டிக்குக் கலைகள்ள ஈடுபாடு ஜாஸ்தி. கர்நாடக சங்கீதம்னா உசுரை விட்டுடுவாங்க. அருமையாப் பாடவும் செய்வாங்க.

ஒரு நவராத்திரி சமயம். பாட்டி பாட நான் மகிஷாசுர மர்த்தினியா வேஷம் போட்டுக்கிட்டு நடனம் ஆடியிருக்கேன். நடிப்பு, நாட்டியம்னு நான் எடுத்த முதல் அவதாரம் அது.

பாட்டிக்கு ஜோசியத்துல அபாரமான நம்பிக்கை. பேத்தியோட எதிர்காலம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்குற ஆசை என்னை விட பாட்டிக்கே அதிகம்.

குடும்ப ஜோதிடர் கிட்டே என் ஜாதகத்தைக் கொடுத்துப் பலன் பார்க்கச் சொன்னாங்க.

‘கலைத்துறையில் உங்கக் குழந்தைக்கு மிகப் பிரமாதமான பேரும் புகழும் சித்திக்கும்’னு ஜொதிடர் ஆருடம் சொன்னாராம்.

வயலின், பாட்டு கிளாஸ்னு வீட்டிலேயே வகுப்புகள் ஆரம்பமாயின. என் அக்காவுக்குப் பாட்டில் ஆர்வம் கிடையாது. நான் நல்லா பாடுவேன்.

ஆடல் பாடல்ல முழுத் தேர்ச்சி பெறுவதற்குள் பாட்டியின் ஆர்வம் மற்றும் ஜொசியத்தில் கூறியது போல் அரிதாரம் பூச வேண்டியதாயிற்று. ’ - தேவிகா.

------------------தேவிகாவின் இயற்பெயர் பிரமீளா. வீட்டில் செல்லமாக ‘ராணி’ என்றும் அழைத்தார்கள். சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளிக் கூட முன்னாள் மாணவி.

வி.என். ரெட்டி இயக்கிய ‘புட்டிலு’ தெலுங்கு படத்தில் நடனமாட தேவிகாவுக்கு முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. டைரக்டர் வி.என். ரெட்டி. இயக்குநர் அதன் நாயகி ஜமுனாவிடம்,

‘ராணி பெரிய நடிகை ஆகி விடுவாள்’ என்பாராம். ஜமுனாவின் முகம் அதைக் கேட்டு கோபத்தில் தாறுமாறாகச் சிவக்குமாம்.

‘ரேசுகா’ இரண்டாவதாக வெளியானது. என்.டி. ராமாராவுடன் இணைந்து தேவிகா நடித்த முதல் படம். மிகப் பெரிய வெற்றி. ‘நாட்டுக்கு ஒரு வீரன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தமிழகத்திலும் பரவலாக ஓடியது.

சென்னையில் ஒட்டப்பட்ட சினிமா போஸ்டர்களில் பிரமீளாவை இனம் கண்டு கொண்டனர் பள்ளித் தோழிகள். வகுப்பில் அவர்களது கேலி கிண்டல் தாங்க மாட்டாமல் படிப்பு பாதியில் நின்றது.

பிரமீளா உறவுகளின் ஒட்டு மொத்த எதிரி. அவரது தந்தையை ஏமாற்றி, பெரியப்பா சொத்துகளை அபகரித்துக் கொண்ட அவலமும் நிகழ்ந்தது. அதனால் செல்வ செழிப்புடன் விளங்கிய தேவிகாவின் வீடு காலப்போக்கில் நலிவுற்றது.

சினிமா நடிகையாக மாறியதால் தேவிகாவின் குடும்பத்தை சொந்தபந்தங்கள் விலக்கி வைத்தன. எதைப் பற்றியும் பயப்படாமல் தேவிகா நடிப்பில் முழு மூச்சுடன் களம் இறங்கினார்.

---------- ராணி, பிரமீளா என்றெல்லாம் விதவிதமாக அழைக்கப்பட்டவர், தேவிகாவாக மாறியது எவ்விதம்?

சேலம் ரத்னா ஸ்டுடியோ. எம்.ஏ. வி. பிக்சர்ஸின் முதலாளி படப்பிடிப்பு. ஒப்பனை அறையின் வாயிலில் எந்தெந்தக் கலைஞர்களுக்கு மேக் அப் என்றப் பட்டியலை ஒட்டுவது உதவி இயக்குநர்களின் அன்றாட வேலை.

அன்றைய தினம் அதில் ‘தேவிகா’ என்று எழுதி இருந்தார்கள். முதலாளி படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தவர் பிரமீளா.

‘தேவிகா யாருங்க? ’ன்னு காரை விட்டு இறங்கும் போது பதற்றத்துடன் கேட்டார். தனக்கான ஹீரோயின் சான்ஸ் பறி போய் விட்டதோ என்கிற பீதி பிரமீளாவின் குரலில்.

‘பிரமீளா’ என்கிற தெலுங்கு பெயர் வேண்டாம் என்று எண்ணி, தேவிகா என்பதாக மாற்றியிருக்கிற விஷயத்தை எடுத்துக் கூறினார்கள்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் பிரமீளாவின் முகத்தில் அதிர்ச்சியின் அங்கப் பிரதட்சனம்.

நீண்ட காலம் ஷூட்டிங்கில் தேவிகா என்று கூப்பிட்டால் பதில் சொல்லாமல் மவுனமாகவே இருப்பார். ஆதரவாக வற்புறுத்தி கோபத்துக்குக் காரணம் கேட்டால்,

‘எங்கம்மா எவ்ளோ ஆசையா பிரமீளான்னு பேரு வெச்சாங்க... அதுல எனக்கு இஷ்டம் ஜாஸ்தி.அதைப் போய் மாத்தி வெச்சிட்டிங்களே... என் பெயரை தேவிகான்னு நீங்க மாத்தினது பிடிக்கலே’ என்பார் வருத்தம் கலந்த ஆத்திரத்துடன் - ‘வெகுளிப் பெண்’ தேவிகா.

-----------‘எனக்குத் தமிழ்ல பெரிய லிஃப்ட்னு பார்த்தா அது முதலாளி தான். டைரக்டர் முக்தா சீனிவாசனுக்கு முதல் படம்.

என்.டி.ஆர்.- சிவாஜி- பத்மினி நடிக்க, பிரம்மாண்டமா ‘சம்பூர்ண இராமாயணம்’ எடுத்த எம்.ஏ. வேணுவின் தயாரிப்பு.

‘முதலாளி’ல கூட முதல்ல பத்மினியை புக் பண்றதா இருந்திருக்காங்க. அவங்க ‘பர்தேஷ்’ங்கிற இந்திப்படத்துல நடிக்கப் போயிட்டதால எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

நானும் எஸ்.எஸ். ராஜேந்திரனும் ஜோடியா நடிச்சோம். ஆறாயிரம் அடி வரை வளர்ந்தப்ப, பட அதிபர் எம். ஏ. வேணு, ‘அவர் நினைச்ச மாதிரி வரலன்னு’ சொல்லி படத்தை நிறுத்திட்டார். முக்தா சார் ரொம்ப வேதனைப்பட்டார். முதல் படமாயிற்றே...

அதுக்கப்புறமா எஸ்.எஸ். ஆர். தலையிட்டு, தயாரிப்பாளருக்கு தைரியமூட்டினார். மறுபடியும் ஷூட்டிங் தொடங்கியது.

1957 தீபாவளி அன்னிக்கு நடிகர் திலகத்தின் அம்பிகாபதி, புரட்சி நடிகரின் மகாதேவி ஆகிய மெகா படங்களுக்கு மத்தியில் சின்ன பட்ஜெட் படமான முதலாளியும் ரிலிசானது.

முதன் முதலா நான் ஹீரோயினா நடிச்ச படம் ஓடுமாங்கிற பயம் உள்ளுக்குள்ள வந்துடுச்சி. என்னால் எந்தத் தோல்வியையும் தாங்க முடியாது. முதலாளி கண்டிப்பா வெற்றி பெறாது என்கிற அவநம்பிக்கையில் அது வெளியான அன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன்.

சினிமாவில் ஹீரோவின் பின்னால் சைக்கிளில் அமர்ந்து ஹீரோயின் டபுள்ஸ் போறது முதலாளியில் இருந்து ஆரம்பமாச்சு.

முதலாளி தோல்வி அடைந்திருந்தால் அத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டிருப்பேன். ஆனால் முதலாளி வசூலில் மாபெரும் வெற்றி அடைந்தது.

ஒரு படத்தின் வெற்றியில் அதில் பங்கு பெறும் கலைஞர்களின் வளர்ச்சியும் இருக்கிறது. அதை அனுபவபூர்வமாக நானும் உணர்ந்தேன். ‘முதலாளி’க்குக் கிடைத்த பேரும் புகழும் என்னையும் பிரபலப்படுத்தியது. ’ தேவிகா.

கே.வி. மகாதேவன் - கா.மு. ஷெரிஃப் கூட்டணியின் காலத்தால் அழியாத - ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே, குங்குமப் பொட்டுக்காரா, நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு போன்ற இனிய பாடல்களின் பங்களிப்பும் ‘முதலாளி’ முன்னுக்கு வர உதவியது.

ஆனந்த விகடன் முதலாளி படத்தை முழு மனதாகப் பாராட்டி எழுதியது.

முனுசாமி -:‘தேவிகான்னு ஒரு பொண்ணு வள்ளியா வருது. ஆடுது, பாடுது, அதை விட நல்லா ஓடுது! அது போடற டிரஸ்ஸூம் ஆடற ஆட்டமும் பார்த்தா, ஒருத்தரும் தொழிலாளின்னு சொல்ல மாட்டாங்க.

மாணிக்கம்- : ஹீரோயின் ஆச்சே. சும்மா விட்டுட முடியுமா?’ டைரக்டர் யாரு?

முனுசாமி- : யாரோ புதிசு. அதான் படத்தில புதுமை அதிகமா இருக்கு.

மாணிக்கம்- : மொத்தத்தில இந்தப் படமே ...

முனுசாமி- : புது மாதிரி, சமூகக் கதையில சமூகத்தைத் திட்டல்லே. அடிக்கல்லே. துப்பாக்கி இல்லே! கோர்ட் இல்லே! ஆக்ஸிடென்ட் இல்லே. ஆஸ்பத்திரி இல்லே. அழுகை இல்லே!

மாணிக்கம்- : அப்படியானால் நான் பார்க்காமல் இருக்கப் போறதில்ல!’

-------------- 1957ன் சிறந்தத் தமிழ்ப்படமாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது முதலாளி.

தேவிகாவுக்கு மிகப் பெரிய முகவரியை முதலாளி ஏற்படுத்தித் தந்தது. ஆனாலும் அவரால் தமிழ்த் திரையில் உடனடியாக விண்ணைத் தொட முடியவில்லை.

அதற்கு ஒரே காரணம் மொழிப் பிரச்சனை.

அன்றைய நாடக உலகில் ‘சேவா ஸ்டேஜ்’ மகத்தானதொரு கலைக் கூடம். சிவாஜி, முத்துராமன், பண்டரிபாய், எம்.என். ராஜம் போன்ற சாதனைக் கலைஞர்களின் நடிப்பு பட்டை தீட்டப்பட்ட இடம். அதன் நிறுவனர் குணச்சித்திரக் கலைஞர் எஸ். வி. சகஸ்ரநாமம்.

‘சேவா ஸ்டேஜ் நாடகங்களில் நடிக்க ஒரு பெண் ரொம்ப ஆர்வத்துடன் இருக்கிறார். வாய்ப்பு இருந்தால் தெரிவியுங்கள்... ’ என்று சகஸ்ரநாமத்திடம் கேட்டுக் கொண்டார் ஜெமினி ஸ்டுடியோ காஸ்ட்யூமர் ராமாராவ்.

அவர் மூலம் தேவிகா சகஸ்ர நாமத்துக்கு அறிமுகமானார்.

சேவா ஸ்டேஜின் கண்கள் நாடகம் சினிமாவான போது தேவிகாவை நடிக்க அழைத்தார்கள். அவரைப் பார்த்ததும் ஏனோ திருப்பி அனுப்பினார் எஸ். வி.சகஸ்ரநாமம்.

எதிர் பாராத விதமாக தேவிகாவுக்கு ஏற்றத்தை வழங்கிச் சிறந்த நடிகையாக உருவாக்கியதும் அதே சேவா ஸ்டேஜே.

‘ சேவா ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட் எம்.என். ராஜம். சினிமால பிரபலமானதால அவங்க போட்டுக்கிட்டிருந்த ஹீரோயின் ரோல்ல நாடகத்துல நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தார் எஸ். வி. சகஸ்ரநாமம். முதலாளியோட சக்ஸஸால அவரால் மீண்டும் விரும்பி அழைக்கப்பட்டேன்.

ஒரே ஒரு வாரம் ரிகர்ஸல்ல கலந்துக்கிட்டேன்.

சகஸ்ரநாமம் வீட்டிலேயே ஒத்திகை நடக்கும். எங்கூட முத்துராமன், பண்டரிபாயின் தங்கை மைனாவதி ஆகியோரும் சேர்ந்து நடிப்பாங்க.

டிராமால ரசிகர்களை நேருக்கு நேரா சந்திக்க பயம். அதனால தரையைப் பார்த்துக்கிட்டு வசனம் பேசுவேன். அல்லது மோட்டுவளையைப் பார்த்துக்கிட்டு டயலாக் சொல்லுவேன்.

‘வானவில்’னு சேவா ஸ்டேஜ்ல ஒரு நாடகம். நானும் சிவாஜியும் புரட்சிக்காரர்களாக நடித்தோம். ராஜா அண்ணாமலை மன்றத்தில் அன்னிக்கு அரங்கேற்றம்.

சிவாஜி எம்மேலே சந்தேகப்பட்டு என் கழுத்தை நெரிக்கிற கட்டம்.

‘கத்து... கத்து... வீல்னு அலறுன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.

ஊஹும்... எங்கிட்டயிருந்து எந்தச் சத்தமும் வரல. ஒண்ணும் நடக்கலே. நல்ல வேளை. யாரோ போய் வேகமாத் திரையை இறக்கி விட்டுட்டாங்க. அதுக்கப்புறமா மெல்ல மேடையில சமாளிக்கிற தைரியம் வந்தது.

தமிழைச் சத்தம் போட்டுப் பேசிப் பழகிச் சீக்கிரத்துலயே ‘வானவில்’ நாடகப் புகழ் தேவிகா ஆயிட்டேன்.

தொடக்கத்துலே எனக்கு முப்பது ரூபாய் சம்பளம். பின்னால அது நாற்பது, ஐம்பதுன்னு வளர்ந்து நூறு ரூபாய் வரை உசந்து போச்சு.

சேவா ஸ்டேஜ்ல ரிகர்ஸல்ல பங்கேற்க எனக்கு மட்டும் கார் அனுப்பிக் கூட்டி வரச் சொல்வாங்க. மத்த நடிகர் நடிகைகள் பஸ்ல வருவாங்க.

எஸ். வி. சகஸ்ரநாமம் சார் என்னை கவுரவமா நடத்தினார். அதனால் 1957 முதல் 1962 வரை ஆறு ஆண்டுகள் சேவா ஸ்டேஜ்ல பராசக்தி, பாம்பே மெயில் உள்ளிட்டப் பிரபல நாடகங்கள்ள நடிச்சேன்.

வானவில் நாடகத்துல என் நடிப்பைப் பார்த்துட்டு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ‘நல்லா பண்ணினேம்மா’ என்று வாழ்த்தினார்.

சரியா நடிக்காம இருந்தாலோ, சரி வர தமிழ் வசனம் பேசாமல் இருந்திருந்தாலோ கலைவாணர் பாராட்டியிருப்பாரா... அந்தப் பாராட்டுக்குப் பின்னணியில இருந்தவர் எஸ். வி. சகஸ்ரநாமம்.

நடிக்க வந்த புதுசுல தமிழ் சரியா வாயில வராது. நாடக அனுபவம் எனக்குக் கற்றுத் தந்த பரிசு, ஒழுங்காத் தமிழ் பேச வந்தது. அதற்குக் காரணம் எஸ். வி. சகஸ்ரநாமம் சார் கொடுத்த பயிற்சி. ’தேவிகா.

-பா. தீனதயாளன்.

----------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com