சரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே...!

சரோவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய மகத்தான வெற்றிச் சித்திரம் பாலும் பழமும்!

சரோவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய மகத்தான வெற்றிச் சித்திரம் பாலும் பழமும்!

அபிநய சரஸ்வதியின்  ஒப்பற்ற நடிப்பாற்றலுக்கு உரைகல்லாக எல்லாரும் எடுத்துச் சொல்வது  பாலும் பழமும் மாத்திரமே.

நர்ஸ் ‘சாந்தி’   எதனோடும் ஒப்பிட இயலாத தனித்துவம் மிக்க கதாபாத்திரம். தொடக்கம் முதல் இறுதி வரை இறுக்கமாகக் கட்டப்பட்டு இன்றைக்கும் மணம் வீசும் ஜாதி மல்லி!

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்,   நான் பேச நினைப்பதெல்லாம், காதல் சிறகைக் காற்றினில் விரித்து,  என்னை யார் என்று,  இந்த நாடகம் அந்த மேடையில்... என்று ஒவ்வொரு பாடலிலும் நாயகி சரோவின் குணச்சித்திரம், கதையின் சூழலுக்கேற்ப ஒன்றிக் கலந்து வெவ்வேறு உணர்ச்சி பாவங்கள் பெருக,  நடிப்பின் ஜீவநதியாகக் கரை புரண்டோடும்.

உலகத் தமிழர்கள் விரும்பும் பொற்காலத் திரை கானங்களில் பாலும் பழமும் படப் பாடல்கள் முந்தி நின்று சுகபந்தி விரிக்கும். சரோவை சதா  நினைவுப்படுத்தும். 

பாலும் பழமும் படத்தில் சவுகார் ஜானகி இன்னொரு ஹீரோயின்.

தனது அசாத்தியத் திறமையால்  ‘அன்னை’ சினிமாவில் பானுமதியையே மலைக்கச் செய்தவர். அவரை எதிரில் வைத்துக்கொண்டு, தன்னிகரற்ற நடிப்பில் சரோ சாதித்தது சாதாரண விஷயம் கிடையாது.

லீலாவாக வந்திருக்கும் சாந்திதான் டாக்டரின் முதல் மனைவி என்கிற நிஜம் புரிந்த நொடியில் சுந்தரிபாயும், சி.டி. ராஜகாந்தமும் சரோவை வீட்டை விட்டு வெளியேற்றும் காட்சி.

கடமை அர்ப்பணிப்பில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சரோ திருட்டுத்தனமாக ஏணி மீது ஏறி, சிவாஜிக்கு  ஊசி போடும் கட்டம் பதற்றமும், பரிதாபமும் நிறைந்தது.

அக்காட்சியில் சரோவின் சோக நடிப்பு சர்வதேச சர்வாதிகாரிகளின்  கல் நெஞ்சையும் கரையச் செய்யும்!

இடைவேளைக்குப் பிறகு சிவாஜி வீட்டில் எதிர்பாராமல் சந்திக்கும் சரோவை, அவர் மாறு வேடத்தில்  ‘செவிலித்தாய் லீலா’ வாகத் தோன்றும் சூழலில்-  ஏற்கனவே டாக்டரின் நர்ஸ் மனைவியாகச் சந்தித்த ஞாபகத்தில் எம்.ஆர். ராதா, ‘நீ சாந்தி தானே...! ’ என்று அவருக்கே உரிய பாணியில் அழைத்து, ஆச்சரியத்தில் அலறும் போது தியேட்டர்களில் விசில் பறக்கும். ஆரவாரம் அடங்க நேரமாகும்.     

ஒரே ஆண்டில் பிறந்தும், சம காலத்தில் நடித்தும் திரையில் ஜோடி சேராதவர்கள் அபிநய சரஸ்வதியும்- மக்கள் கலைஞரும். 

டிசம்பர் 1967ல் சரோ சதம் அடித்த சமயம். சினிமா இதழ் ஒன்றுக்காக  சந்தித்துப் பேசினார்கள்.

சரோ - -: என் படங்கள்ள எது பிடிக்கும்?

ஜெய் -: பாலும் பழமும். அதுல உங்க கேரக்டர் வண்டர்ஃபுல்! மூணு, நாலு தரம் பார்த்திருக்கிறேன்.

சரோ -: கல்யாணப்பரிசுல எப்படி?

ஜெய் -: பாலும் பழமும் மாதிரி எனக்குப் பிடிக்கல.

‘குமுதம்’  விமரிசனத்தில்  பாலும் பழமும் - சரோ நடிப்புக்கு விசேஷப் பாராட்டு கிட்டியது.

‘ரூபாய் வேடம் ஒன்று. பைசா வேடம் ஒன்று. சோகத்துக்கு நல்ல வாய்ப்பு.

‘நீ சாந்திதானே என்று கணேசன் கேட்கையில், உண்மையை அவரிடம் ஒப்புக் கொள்ள முடியாமல், மவுனமாகத் தலை அசைக்கும் வேதனையைச் செவ்வனே சித்தரித்துப் பெயரை நிலை நாட்டிக் கொள்கிறார். ’

ஆனந்த விகடன் தன் பாணியில் சேகர் - சுந்தர் உரையாடலில்

‘நடிப்பிலே சிவாஜிக்கு ஈடு கொடுக்கிறார் சரோஜாதேவி. முதல் சீன்லே அப்படியே மனசை அள்ளிக் கொண்டு போகிறார். அதே மாதிரி சோகக் காட்சிகளிலும் கவர்கிறார்’ என்று மெச்சிக் கொண்டது.

பாலும் பழமும் நினைவினில் ஏந்தி  சரோ கூறியவை-

‘பாலும் பழமும் படத்தில் நடிகர் திலகம் டாக்டராகவும், நான் அவரது காதல் மனைவியாகவும் நடிச்சோம். படப்பிடிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் சிவாஜி என்னிடம், ‘சரோஜா... இந்தப் படத்துல நீ என்னை விட நல்லா நடிச்சிருக்கே’என்றார். நான் சிலிர்த்துப் போயிட்டேன்.

 அவர் நடிப்புக்கு முன்னாடி நானும் கொஞ்சம் நடிச்சிருந்தேன். ஆனா என் நடிப்பை அவர் நடிப்புக்கும் மேலா வெச்சு சொன்னார் பாருங்க. அதுதான் அவரை மத்தவங்கக் கிட்டயிருந்து வித்தியாசப்படுத்துது.       

அந்த கேரக்டருக்காக நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டுருக்கேன். அதில் நான் இரண்டு விதமாத் தெரிவேன். அதாவது டி.பி. பேஷண்டா இருக்கிறப்ப ரொம்ப வற்றி உலர்ந்து காணப்படுவேன். மத்த சீன்கள்ள வழக்கம் போல் தெரிவேன்.

டி.பி. பேஷண்ட் சீன்ல நான் அப்படி மெலிவா தெரியறதுக்கு காரணம் நான் கிடந்த கொலைப்பட்டினிதான். சாப்பாடு நேரத்துல கொஞ்சம் ஜூஸ் மட்டுமே சாப்பிட்டு உடலை இளைக்க வெச்சிருக்கேன்.

ஒரு வேளை என் கேரக்டர் மேலே நான் காட்டின அக்கறை சிவாஜி சாரை இப்படிச் சொல்ல வெச்சிருக்கலாம்’

மேற்கண்டவாறு தினத்தந்தி நேர்காணலில் தெரிவித்த சரோஜாதேவி, அதற்கு நேர் மாறான  இன்னொருத் தகவலை ‘சித்ராலயா’ சினிமா  இதழில்  குறிப்பிட்டுள்ளார்.

 இரண்டில் எது சரி என்பதை அவர் மட்டுமே கூற முடியும்.

‘ பாலும் பழமும் ஷூட்டிங்கின் போது நான் படுத்த படுக்கையாகி விட்டேன். அத்துடனேயே டி.பி. பேஷன்ட்டாக  நடித்தேன். தேகம் மிகவும் மெலிந்து போய் அந்தப் பாத்திரம் சோபிக்கும் வகையில்  அமைந்தது. நல்ல பெயரும் கிடைத்தது’

பாகப்பிரிவினையைத் தொடர்ந்து சரவணா பிலிம்ஸ் தயாரித்த படம் பாலும் பழமும். செப்டம்பர் 9ல் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. சென்னையில் 20 வாரங்களைக் கடந்து ஓடியது.

1961ல்  ஜனாதிபதி பரிசுக்காகச் சென்ற நாலு படங்களும் சிவாஜியுடவை. அவற்றில் மூன்று பீம்சிங் இயக்கியவை.

அவை மொத்தமாக மோதியதில், பாலும் பழமும்  பரிசைத் தவற விட்டது.  

அகில இந்தியாவிலும்  பாவமன்னிப்பு மிகச் சிறந்த படம் என்கிற விருதையும், பாசமலர் சான்றிதழையும், கப்பலோட்டிய தமிழன் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றது.

சரோவின் அடுத்த அதிரடி 1961 தீபாவளி வெளியீடான தேவர் பிலிம்ஸ் தாய் சொல்லைத் தட்டாதே.

‘ஹாயாக நடித்திருக்கிறார்கள் எம்.ஜி.ஆரும்- சரோஜாதேவியும்’ என குமுதம்  குதூகலித்துப் பாராட்டியது.

மிகக் குறுகிய நாள்களில் எடுக்கப்பட்டு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது தாய்  சொல்லைத்  தட்டாதே.

கல்யாண பரிசு வெள்ளிவிழாவுக்கு ஊர் ஊராக வர மறுத்த சரோ,  தாய்ச் சொல்லைத் தட்டாதே 100வது நாள் கொண்டாட்டங்களுக்கு  தஞ்சாவூர், திருச்சி, சேலம், மதுரை, நெல்லை, கோவை என எம்.ஜி.ஆரோடு பவனி வந்தார்.

சரோவை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை ‘பனித்திரை’ 1961 இறுதியில் டிசம்பர் 29ல் வெளியானது. முக்தா பிலிம்ஸின் முதல் தயாரிப்பு.

‘துர்பாக்கியம், துரதிர்ஷ்டம் கொண்ட பேதைப் பெண்ணாக சரோஜாதேவியின் நடிப்பு படம் முழுவதும் சுடர் விட்டுப் பிரகாசித்தது’ என்று கல்கி வார இதழ், அபிநய சரஸ்வதிக்கு ஆரத்தி எடுத்தது.

கே.வி. மகாதேவன் இசையில் ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே, மற்றும் ‘ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்... ’  ஒவ்வொரு முட்டாள்கள் தினத்திலும் விவிதபாரதியில் உங்கள் விருப்பப்  பாடலாக இன்றும் முதலிடம் பிடிக்கிறது.

எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். வாத்தியார் தலைமையில் 1962 பிப்ரவரியில் நடிகர் தின விழா! கோல்டன் ஸ்டுடியோவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

எம்.ஜி.ஆர். கேமராவும் கையுமாகச் சுற்றி வந்தார். சரோ போட்டிகளில் கலந்து கொள்ளாமல் பார்வையாளராக மட்டும்  நின்றார்.

 எம்.ஜி.ஆரின் குரு நடிகர்  டி.எஸ். துரைராஜ். சரோவிடம் அதற்கான விளக்கம் கேட்டார்.

‘எனக்கும் ரொம்ப ஆசையாகத்தான் இருக்கு. ஆனால் ஏதேனும் அடிபட்டு விட்டால், பட முதலாளிகள் சங்கடப்பட நேருமே என்பதற்காக ஒதுங்கி இருக்கிறேன்’ என்றார்.   

1962  சரோ நடிப்பில் தமிழில் மிக அதிகமாக படங்கள் வெளியான ஆண்டு. இந்தியிலும் நாயகியாக எல். வி. பிரசாத் இயக்கத்தில் சுக்ரால் படம் மூலம் வாகை சூடிய வருடம்.

தைத் திருநாளில் ஏவி.எம். தயாரிப்பான பார்த்தால் பசி தீரும் வெளி வந்து ஓடிக்கொண்டிருந்தது.

ஜெமினி கணேசன் - சாவித்ரி--சவுகார் ஜானகி, சிவாஜி கணேசன் - சரோஜாதேவி, என மூன்று நாயகிகள் நடித்த படம் அது. புதிய பிரச்சனையை ஏற்படுத்தியது.

டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது?

சாவித்ரிக்கும்-சரோவுக்கும் உச்சக்கட்ட உள் குத்துச் சச்சரவுகள் நடைபெற்ற நேரம். சினிமா மார்க்கெட்டில் யாருக்கு அதிகச் சம்பளம்,  அந்தஸ்து, கவுரவம்  என்பதில் பலத்த போட்டி நிலவியது. கூடுதலாக யோசித்து ஏவி.எம். செட்டியார் நூதன முறையில் டைட்டில் போட்டார்.

‘உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று எழுதப்பட்ட கார்டில் முதலில் சரோ, அடுத்து சிவாஜி, மூன்றாவதாக ஜெமினி, நாலாவதாக சாவித்ரி என புகைப்படங்களைக் காட்டினார்கள்.

நாயக நாயகியருடன் மறக்காமல் கே.ஏ. தங்கவேலு- எம். சரோஜா, சவுகார் ஜானகி, சி.கே.சரஸ்வதி, இரு வேடங்களில் குட்டி கமலின் தோற்றம் ஆகியனவும் இடம் பெற்றன.

சாவித்ரி - சரோஜாதேவி இருவரில் யாருக்கு மவுசு அதிகம் என்பதை புத்திசாலி ரசிகர்கள் சுலபமாகப் புரிந்து கொண்டார்கள்.  பார்த்தால் பசி தீரும் டைட்டில் தகராறு குறித்த நடிகையர் திலகத்தின் ஆதங்கம்- ‘நான் தான் சரோஜாதேவியை விட சீனியர். ஆனால் அவர் எனக்கு அடுத்த இடத்தில் தனது பெயரைப் போட்டுக் கொள்ள ஏதாவது மறுப்பு சொல்லியிருப்பார் போலிருக்கிறது.என்னுடைய பெயரைத் தொடர்ந்து சரோஜாதேவியின் பெயர், அப்புறம் சவுகார் ஜானகி - அப்படி இருந்திருந்தால் சரி. ஆனால் சிக்கல் அவ்வளவு சுலபமாகத் தீரவில்லை.எங்கள் வீட்டு மஹாலட்சுமி படத்தில் கண்ணாம்பாவின் பெயரைத்தான் முதலில் காட்டினார்கள். அப்போதும் நான் முன்னணி நடிகை. என் பெயரை அடுத்தபடியாகப் போட ஒப்புக் கொண்டேன்.பார்த்தால் பசி தீரும் படத்தில் எல்லாருடைய படத்தையும் ஒருங்கே காட்டி சமமான மதிப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் மட்டும்தான் அப்படிக் காட்டினார்களாம். வெளியூர்களில் சரோஜாதேவியின் பெயர் மேலே இருந்ததாகக் கேள்வி. எந்தப் படத்திலும் நடிப்புதான் முக்கியம். பெயர் போட்டுக் கொள்வது, நீ முந்தி நான் முந்தி என்று சண்டை போடுவது எனக்குப் பிடிக்கவில்லை.விவகாரத்தை அப்படியே விட்டு விட்டேன்’ - சாவித்ரி.

பிப்ரவரி ரிலிஸ்  மாடப்புறா. எம்.ஜி.ஆர். - சரோ நடித்தும் முதன் முதலாகப்  படு தோல்வியைச் சந்தித்தது. காரணம் படத்தில் எம்.ஜி.ஆரின் காதலியாகத் தோன்றியவர் ‘தேன்நிலவு’ புகழ் வசந்தி.

மீனா என்கிற அநாதைப் பெண் வேடம் சரோவுக்கு. குலதெய்வம் ராஜகோபாலோடு வீதிகளில் கழைக்கூத்தாடியாகக் காட்சி தருவார். ஒரு தலையாக எம்.ஜி.ஆரைக் காதலிப்பார். எம்.ஜி.ஆர்.-சரோ ஜோடியின் அபிமானிகள் ஏமாந்து போனார்கள்.

சிவாஜியோடு நடித்த வளர்பிறை மார்ச்சில் திரைக்கு வந்து வசூலில் தேய்பிறை ஆனது. நடிகர் திலகத்துடனும் இணைந்து தோல்வி கணக்குத் துவங்கியது.

தமிழ்ப்புத்தாண்டில் வழக்கம் போல் தனி முத்திரை பதித்தது தேவர் பிலிம்ஸ் தாயைக் காத்தத் தனயன். 100 நாள் படம். சரோவின் சறுக்கலைச் சரி செய்தது.

 மரகதமாக வரும் சரோவுக்காக எம்.ஜி.ஆர். தற்கொலை செய்யக் கூட தயாராக இருந்தார். புரட்சி நடிகர் நடித்த 136 படங்களில் வேறு  எதிலும் ரசிகர்கள் காண முடியாத காட்சி!

ஆகஸ்டில் சரோ நடித்து மூன்று சினிமாக்கள் ஒரே மாதத்தில் முதலும் கடைசியுமாக மக்களை அதிசயிக்க வைத்தன.

ஆகஸ்டு 2ல் காவிரிக் கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா. அதே தினத்தில் ஜெமினி - சரோ நடித்த ஆடிப்பெருக்கு சினிமாவும் திரையை அலங்கரித்தது.

அழகுப்  பதுமையாக  கவலை என்றால்  கிலோ என்ன விலை என கேட்கிற ‘பத்மா’வாக சரோ பிரமாதப்படுத்தினார். தன் காதலனை பணக்கார தேவிகாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டு  க்ளைமாக்சில் இறந்து போவார் சரோ.

கல்கி (1962 செப்டம்பர் 2 ) ஆடிப்பெருக்கு விமர்சனத்தில், சரோவின் நவரஸ பாவங்களில் உச்சி குளிர்ந்து  எழுதியது.

‘ஆடிப்பெருக்கில் புகழைப் பெருக்கிக் கொண்டவர் சரோ ஒருவரே.

அப்பப்பா என்ன நடிப்பு...! சரோ சக்கை போடு போட்டிருக்கிறார். நடிப்பில் தாம் உருகியது மட்டுமில்லாமல் படம் பார்ப்பவர்களையும் உருக்கி இருக்கிறார். அதற்காகவே ஆடிப்பெருக்கை  ஒரு முறை பார்க்கலாம்’

-------------
சரோ பீக் பீரியடில் இருந்த நேரம். ‘பத்மா’ சாகடிக்கப்பட்டதால் ஆடிப் பெருக்கு வசூலும் வற்றியது.

‘கைராசி’ டைரக்டர் கே. சங்கர் - மிக்க எதிர்பார்ப்போடு இயக்கியும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.

 1978ல் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ மாதிரியான புதுப் படங்களுக்கு 15 நிமிஷம் விவித பாரதியில் விளம்பரம் வரும். அதே போல் ஆடிப் பெருக்குக்கும் நடந்தது வியப்பின் வியப்பு!

எம்.ஜி.ஆர். ரசிகர்களின் ‘அண்ணி’யாக வலம் வந்த சரோவுக்கும் வாத்தியார் ராசி!

புதுமை இயக்குநர்களாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட, அத்தனைத் திறமைசாலிகளின் படங்களை விடவும் ஆடிப்பெருக்கு அட்டகாசமாக வசூலித்தது.

கே. சங்கருக்கு சகிக்க முடியாத ஆச்சரியம்!

ஏ.எம். ராஜாவின் இசையில் தனிமையிலே இனிமை காண  முடியுமா, காவேரியோரம் கவி சொன்ன காதல், கண் இழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்...  என அத்தனைப் பாடல்களும் காலத்தால் அழியாத கானங்களாக இன்றும் உலா வருகின்றன.

விடுதலைத் திருநாளில் மிகக் குறுகிய காலத்தில் தேவர் பிலிம்ஸ் குடும்பத்தலைவன் வெளியாகி ஹாட்ரிக் வெற்றி அடைந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான ஆர். ஆர். பிக்சர்ஸ்  பாசம்- ஆகஸ்டு 31ல்  புரட்சி நடிகரின் விசிறிகளைக் கதி கலக்கி விட்டது. க்ளைமாக்ஸில் எம்.ஜி.ஆர். இறந்ததைத் தாங்க இயலாமல் தியேட்டர்களில் கலவரம் மூண்டது.

‘ஆனந்த விகடன்’ - ‘பாசம்’ சினிமா விமர்சனத்தில்  ‘மஞ்சு’வாக வந்த சரோவின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளியது.

மாணிக்கம் -  : ‘சரோஜாதேவி பத்தி சொல்லணுமா அண்ணே! ரொம்ப முன்னேறிட்டாங்க. அந்தத் துடுக்கும், பார்வையும், பேச்சும் ஜோர்.  ஆனா சரோஜாதேவிக்கு எஸ். ஜானகியின்  குரல் பொருந்தல’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com