சரோஜா தேவி: 6. அழுமூஞ்சி...!

ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் பணத்தோட்டத்தில் எம்.ஜி.ஆரும் டைரக்டர் கே. சங்கரும் முதன் முதலில் கை கோர்த்தார்கள்.

ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் பணத்தோட்டத்தில் எம்.ஜி.ஆரும் டைரக்டர் கே. சங்கரும் முதன் முதலில் கை கோர்த்தார்கள்.

சிவாஜி கணேசனும் கே. சங்கரும் நீண்ட கால சிநேகிதர்கள். பி.எஸ். வீரப்பாவின் சூப்பர் ஹிட் படைப்பு ’ஆலயமணி’. கலைத் தொழிலிலும் அவர்களை ஒன்று சேர்த்தது.

அதே நேரம் எம்.ஜி.ஆர், ஜி.என்.வேலுமணியை அனுப்பிக் கையோடு சங்கரை வரவழைத்தார்.

‘ஏன் எதுக்கு எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிடறார்... சிவாஜியோட புது ப்ராஜெக்ட் ஆரம்பமாயிடுச்சே, அப்புறம் வரேன்னு சொல்லுங்களேன்.’ என்றார் அப்பாவியாக.

‘அதை நீங்களும் எம்.ஜி.ஆரும் நேர்ல பேசித் தீர்த்துக்குங்க.’

வேலுமணி விடமாட்டார் போலிருந்தது.

1962ல் உச்சக்கட்ட யுத்தம் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் நிலவியது. தினந்தோறும் விசிறிகளின் விஸ்வரூபம்! ரசிகர்களின் மண்டைகள் உடைந்த கதை பத்திரிகைகளில் வராத நாளே கிடையாது.

சங்கருக்கு சங்கடம்.

பயமும் குழப்பமும் போட்டியிட்டன. அது ஒரு காலை நேரம். வீட்டிலேயே சிற்றுண்டி அருந்தி விட்டு சங்கர் கிளம்பினார்.

ராமாவரம் ராமச்சந்திரன் சங்கரை மறுபடியும் டிபன் சாப்பிட வற்புறுத்தினார்.

ஏற்கனவே ஆயிற்று என்றாலும் ஆளை விடவில்லை. உண்ட பிறகே பேச்சு வார்த்தை என்றார். அஜீரணம் ஆனாலும் பரவாயில்லை என்று சங்கர் இலை முன்பு அமர்ந்தார்.

‘சார் ஆலயமணில முன்னாலேயே கமிட் ஆயிட்டேன். இப்ப உங்க படத்தையும் எப்படி ஒத்துக்கறது...?’

சங்கரின் வாய்க்குள் வார்த்தைகள் சடுகுடு ஆடின.

பார்க்க மிக எளிமையாகக் காட்சி தரும், சபைகளில் இனிமையாகப் பழகும் எம்.ஜி.ஆர். உள்ளுக்குள் சமர்த்தர்.

எம்.ஜி.ஆரின் சொல்லை மீறுவதும், காலை இடறுவதும் வெளியே தெரியாத விளைவுகளை சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கச் செய்யும்.

சங்கர் தன் பதில் எம்.ஜி.ஆருக்குப் போதுமானது என்று புறப்பட ஆயத்தமானார். சங்கரின் பணிவையும் பவ்யத்தையும் எம்.ஜி.ஆர். கிண்டலடித்தார்.

‘இந்த ஆக்டிங்லாம் இங்க வெச்சுக்காதீங்க. நீங்கதான் பணத்தோட்டம் டைரக்ட் பண்றீங்க...!’

எம்.ஜி.ஆர். அடித்துப் பேசினார். சங்கருக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு யோசனை எப்படி வரும்?

ஓர் படைப்பாளியைக் கைது செய்து சிறைப்படுத்தாத குறையாக சங்கரை பணத்தோட்டத்தில் சிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

ஆலய மணி, பணத்தோட்டம் இரண்டிலும் ஒரே நாளில் வேலை செய்ய வேண்டி சங்கரும், நாயகி சரோவும் வாஹினியில் மாறி மாறி காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரையில் கஷ்டப்பட்டார்கள்.

நவம்பர் 23 - மாலை. கே. சங்கரை தொலைபேசி கூவிக் கூவி அழைத்தது. மறுமுனையில் எம்.ஜி.ஆர்.

‘சங்கர் நீங்கள் பெரிய வெற்றியைப் பெற்று விட்டீர்கள். சூப்பர் ஹிட் படத்தைக்கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!’

அன்று ஆலயமணி ரிலீஸ். நடிகர் திலகத்தின் படம் நூறு நாள்களைக் கடந்து வசூலில் சாதனை புரியப் போகிறது... என்கிற ஆசீர்வாதம் முதன் முதலில் பொன்மனச் செம்மலின் வாயிலிருந்து!

எம்.ஜி.ஆரின் வாக்குப் பலித்தது.

சென்னையில் பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, உமா, நூர்ஜஹான் என நான்கு தியேட்டர்களில் 100 நாள்கள் கண்ட முதல் படம் என்கிற அழியாப் பெருமையை அடைந்தது ஆலயமணி!

பாரகன் டாக்கீஸில் நிறைவாக 20 வாரங்களைக் கடந்தது.

ஆலயமணி தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஆங்கில பாணி படம். மன வக்கிரம் நிறைந்த தியாகராஜன் என்ற புதுமையான வேடம் சிவாஜிக்கு மட்டும் அல்ல. கோலிவுட்டுக்கும் புதுசோ புதுசு!

பி. எஸ். வீரப்பாவின் புகழ் பாடிய ஒரே சாதனைத் தயாரிப்பு!

‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா’ எஸ்.எஸ். ஆரும் - சரோவும் எடுத்த எடுப்பில் ஆடிப்பாடும் லவ் டூயட் சஸ்பென்ஸை ஏற்படுத்தும்.

சந்தர்ப்பவசத்தால் சரோ சிவாஜி கணேசனின் காதலி ஆவார். ஜாவர் சீதாராமனின் வெகு நுட்பமான திரைக்கதை.

‘மானாட்டம் தங்க மயிலாட்டம்’ சரோ ஆடிப்பாடி நடிக்கும் சூப்பர் ஹிட் பாடல். அக்காட்சி முடிந்ததும், சிவாஜியை சந்திக்க நேரும் சரோ, அவர் தனது எஸ்டேட் முதலாளி என்பதை அறியாமல் கேலி செய்வார்.

நிஜம் தெரிந்ததும் சரோ எப்படிக் கிண்டல் அடித்தாரோ..., அதை அப்படியே சிவாஜி அபிநயித்துக் காட்டுவது அரங்கை அமர்க்களப்படுத்தும் சுவாரஸ்யம்.

பின்னணி குரலில் பேக்ரவுண்ட் வாய்ஸில் ’ஹம்மிங்’குக்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் ஆலயமணி.

‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ டூயட்டில் எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் ஒலிக்கும். சரோவுக்கு ஈஸ்வரி பாடி சூப்பர்ஹிட் ஆன முதல் பாடலும் அதுவே.

சிவாஜி கணேசனின் தூரிகையில் சகுந்தலையாக சரோ சில விநாடிகள் தோன்றுவார்.

ஆலயமணியில் திருப்பம் ஏற்படுத்தும் மரணப்பாறை காட்சிகளை ‘வர்க்கலை’ என்கிற ஊரில் படமாக்கினார்கள்.

க்ளைமாக்சில் சிவாஜி - சரோ இருவரும் இறந்து விடுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. நல்ல வேளையாக ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் ஆலயமணி சுபமாக முடிந்தது.

1962ல் சிவாஜி - சரோ இருவரது புகழையும் தக்க வைத்துக்கொண்ட ஒரே படமாக ‘ஆலயமணி’ அமைந்தது.

‘ஆலயமணியில் ‘மீனாவாக’ சரோஜாதேவி வருகிறார். அவரது சொந்த மாடல் குறும்புத்தனங்களைக் காதல் கட்டங்களில் காண்கிறோம். அப்புறம் குறும்புகளுக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது.

அக்காவின் வாழ்க்கையைக் கடைத்தேற்றப் போக, அதற்காகத் தன் காதலைத் தியாகம் செய்ய நேரும் இடத்தில் அதிர்ச்சியைப் பொருத்தமாகக் காட்டியிருக்கிறார்’ என்று குமுதம் குறிப்பிட்டது.

----------------------------------

‘நீ படிப்பில் மேதையாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம். ஆனால் கண்ணியம் இல்லையே உன்னிடம்...‘

சரோ தட்டுத் தடுமாறி ஒத்திகையில் கஷ்டப்பட்டு பேசிப் பார்த்தும், டைரக்டர் எல். வி. பிரசாத் மவுனமாக நின்றார். ஓகே சொல்லவில்லை.

எல்.வி. பிரசாத்தின் ‘சுக்ரால்’ (இந்தி) மூலம் வடக்கேயும் சரோ வாகை சூடிய சமயம். 40 வாரங்களை வெகு சுலபமாகக் கடந்த ’சுக்ராலின்’ நாயகி உளறிக் கொட்டுவது சரோவுக்கே அவமானமாகத் தோன்றியது.

அது ‘இருவர் உள்ளம்’ சினிமா ஷூட்டிங்.

சரோவை அச்சுறுத்திய சமாசாரங்கள் அதில் அதிகம். தமிழகத்தின் மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் லட்சுமி எழுதிய புதினம் ‘பெண் மனம்’. அதுவே இருவர் உள்ளம் என்ற பெயரில் படமாகியது. அதனைத் தயாரித்து இயக்கியவர் எல். வி. பிரசாத்.

சரோ ஹாயாக வந்து போகும் வழக்கமானப் பொழுது போக்குச் சித்திரமில்லை.

ஆண் இனத்தின் வாலிபத் தவறுகளுக்கு சாட்டையடி கொடுக்கும், வலிமை மிக்க வீராங்கனை – ‘சாந்தா’ வாக, சரோ விஸ்வரூபம் எடுக்க வேண்டிய வேடம்!

அதுவரையிலோ அதற்குப் பிறகோ அத்தனை உணர்ச்சிப் போராட்டமான, இறுக்கமானத் திரைக்கதையில் சரோ நடித்ததில்லை.

இருவர் உள்ளம் படத்துக்கு வசனம் மு. கருணாநிதி.

‘மனோகரா’ வின் செந்தமிழ்ச் சோலையிலிருந்து விடுபட்டு, சரோ சுலபமாகப் பேசும் வகையில் கலைஞர் உரையாடல் எழுதியிருந்தார்.

அதைப் பேசவும் சரோ சிரமப்பட்டார். அதற்குக் காரணம் நடிகர் திலகம்!

சிவாஜி கணேசனுடன் நடிக்கும் போது டயலாகை கோட்டை விடுவது சரோவின் வாடிக்கை.

ஃபிலிமைத் தின்னும் தமிழர்களின் ட்ரீம் கே(ர்)ளை யூனிட் ஆள்கள் துச்சமாகக் காண்பது போல் தோன்றியது.

விளைவு சுய பச்சாதாபம் மேலிட க்ளிசரின் இன்றிக் கண்ணீர் விடத் தொடங்கினார்.

சதா புன்னகை தவழும் சரோவின் சந்தோஷக் கன்னங்களில், முதன் முதலாகச் சோகத்தின் தூரிகைகள்! அதைக் கண்டதும், கணேசனுக்கும் பதற்றம் பற்றிக் கொண்டது.

டைரக்டர் பொறுமையிழந்து கோபத்தில் சரோவை ஏதாவது ஏசி விடுவாரோ என்கிறத் தவிப்பு. சரோ மூட் அவுட் ஆனால் தமிழ் சினிமாவின் கல்லாவே காலி என்று அர்த்தம்.

புதிய பறவைக்கான கால்ஷீட்டும் கோவிந்தா ஆகிவிடும்.

ஹீரோயினைக் காப்பாற்ற கணேசன் துரிதமாகக் களத்தில் இறங்கினார்.

‘அன்று இப்படியே விட்டிருந்தால் என் டென்ஷன் ஜாஸ்தியாகி மேலும் சில டேக்குகள் வீணாகி இருக்கும். டைரக்டர் பிரசாத் என்னையே பார்க்கிறார். அப்போ சிவாஜி ஒரு காரியம் செய்தார்.

‘யாருப்பா அது லைட் சரியில்லை. சரி பண்ணு... சரி பண்ணு... என்றார்.

‘சரோஜா சரியாகத்தான் பேசறா...’,

‘சரோஜா... இந்த சீனை மறுபடியும் எடுக்கறதுக்கு நீ காரணமில்லை. டெக்னிகல் மிஸ்டேக். இந்த வாட்டி அழகா பண்ணிடு.’ என எனக்கு உற்சாகமூட்டுவது போல் கூற, நான் சுதாரித்துக் கொண்டேன்.

அடுத்த டேக்கில் என் நடிப்பு உடனடியாக ஓகே ஆனது.

அக்காட்சி திருப்தியாக எடுக்கப்பட்டதும்,

‘தப்பு என் மேலே. எதுக்கு லைட் சரியில்லன்னு பழி போட்டீங்க...?’ என்று கேட்டேன்.

அண்ணன் அதற்கு,

‘நீ தான் அழுமூஞ்சின்னு எனக்குத் தெரியுமே..! நானும் சேர்ந்து உன்னைத் திட்டினா அப்புறம் அந்த சீனை என்னைக்கு எடுக்கறது... ? என்றாரே பார்க்கலாம்.’ - சரோஜாதேவி.

சரோ நடித்து முடித்ததும் சிவாஜி ரீ ஆக்ஷன் தர வேண்டும். சரோவை மிஞ்சும் போட்டி மனப்பான்மை உசுப்ப கணேசன், ‘ஹீரோ செல்வம்’ உயிர் பெற்று உலவும் படியாக நடிப்பின் எல்லைக்கே சென்றார்.

கலைச் சிற்பி பிரசாத் முன்பு சிவாஜியும் சிறு துரும்பு.

’கட் கட் என்ற எல்.வி. பிரசாத், கணேசனை மெல்ல செட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றார்.

‘சிவாஜி நீ சிறந்த நடிகன் எனக்குத் தெரியும். நீ நடித்தால் காட்சியும் நன்றாக இருக்கும். ஆனால், இந்த சீனில் நீ பிரமாதமாகப் பண்ணினால் எல்லாமே வீணாகி விடும்.

இந்தக் கட்டத்தில் சரோஜாதேவிதான் உன்னை டாமினேட் பண்ணி நடிக்க வேண்டும்.

நீ பதில் பேசாமல் அமைதியாக இரு. இல்லையென்றால், இந்தக் காட்சி எடுபடாது. படமே ஓடாமல் போய் விடும்.’

பிரசாத் சொல்லே மந்திரம்! கணேசன் செயலற்று நின்றார்.

இருவர் உள்ளம் படத்தில்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

பி. சரோஜாதேவி

என்று இருவரது பெயரையும் இணைத்து டைட்டில் காட்டினார் எல்.வி. பிரசாத். கணேசனுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்தில் சரோஜாதேவிக்கும் கவுரவம் தேடித் தந்தார்.

இருவர் உள்ளம் 1963 மார்ச் இறுதியில் வெளியானது. ’கல்கி’ வார இதழ் சரோவின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியது.

‘ சரோஜாதேவி மிக இயல்பாக நடித்திருக்கிறார். விழியும், பார்வையும், நடையும், முக பாவங்களும் பாத்திரத்தின் தன்மையை அற்புதமாக வெளிப்படுத்துகின்றன.

‘நாயகி சாந்தா’ பாத்திரத்துக்கு எல்லாவிதத்திலும் தகுதி உள்ளவர் சரோஜாதேவி.

சிவாஜியிடம் சீறும் போதும், சிவாஜியின் தங்கை பத்மாவுக்கு ட்யூஷன் எடுக்கையில், சிவாஜிக்கு சூடு கொடுக்கும் போதும், கணவன் களங்கமற்றவன் என்பதையறிந்து உதட்டசைவிலேயே உள்ளத் துடிப்பைக் காட்டும் உயிருள்ள நடிப்பு இருவர் உள்ளத்தை உயர்த்திக் காட்டுகிறது.’

கலைஞர், எல்.வி. பிரசாத்திடம் பந்தயம் கட்டிய மாதிரியே இருவர் உள்ளம் 100 நாள்கள் ஓடியது. எட்டு எழுத்து டைட்டிலில் தமிழில் வெற்றிச் சித்திரம் மிக அபூர்வம்! அதே போல் எட்டு சூப்பர் ஹிட் பாடல்கள்!

சரோவின் சோக கீதம் ‘இதயவீணை தூங்கும் போது பாட முடியுமா...!, பறவைகள் பலவிதம், கண் எதிரே தோன்றினாள், நதி எங்கே போகிறது, அழகு சிரிக்கிறது, ஏன் அழுதாய் ஏன் அழுதாய், கண்ணே கண்ணே, புத்தி சிகாமணி...

உள்பட கே.வி.மகாதேவன் இசையில் கேட்க கேட்கத் திகட்டாத கவியரசின் கானங்கள் இன்னமும் ஃஎப் எம் வானொலிகளில் நித்தமும் வலம் வருகின்றன.

சரோவின் நடிப்பாற்றலைச் சொல்லும் படமாக கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்புச் சித்திரமாக அவ்வப்போது ஒளிபரப்பாகிறது.

1963ல் எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி ஜோடியின் மிகப் பெரிய வசூல் சித்திரம் ஆர்.ஆர். பிக்சர்ஸின் பெரிய இடத்துப் பெண்.

டி.ஆர். ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் உருவானது.

பட்டி தொட்டிகளில் கமலை முதன் முதலாக வசூல் ராஜாவாக்கிய சினிமா ‘சகலகலாவல்லவன்’. பெரிய இடத்துப் பெண்ணின் அப்பட்டமான காப்பி.

‘புனிதா’ என்கிற மாறுபட்ட வேடத்தில் நடிப்பில் சரோ சாதித்துக் காட்டிய படம் அது.

எம்.ஜி.ஆர். - சரோ ஜோடி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது.

‘ஆனந்த விகடன்’ தனது விமர்சனத்தில் ரசிகர்களின் உணர்வைப் படம் பிடித்துக் காட்டியது.

முனுசாமி - ‘எம்.ஜி.ஆர். ஜோரா நடிச்சிருக்காராமே...?

மாணிக்கம் - ‘ஆமாம் அண்ணே. அவர் ஆடற இங்கிலீஷ் டான்ஸ் நல்லா இருக்குது.

முனுசாமி - லவ் சீன்ஸ் எப்படி?

மாணிக்கம்- ஏன் அதை மட்டும் தனியா கேக்கற?

முனுசாமி-எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி ஜோடின்னாலே காதல் காட்சிகள் எப்படின்னு கேட்கத் தோணுது.

மாணிக்கம்- ரசிக்கும் படியா இருக்கண்ணே. கண்ணுக்குக் குளிமையான காமிரா, காதுக்கு இனிமையான பாடல்கள்...

மற்றப் பட அதிபர்களுக்கு சிம்ம சொப்பனமாகக் காட்சி அளித்தவர் சின்னவர் எம்.ஜி.ஆர்.

தேவர் பிலிம்ஸில் நடிக்கும் போது மட்டும் ஜாலி ஹீரோ. அதிலும் சரோ ஜோடி என்றால் கேட்கவே வேண்டாம்.

1963 கோடை. மூவேந்தர்களும் ஊட்டியில் முகாமிட்டார்கள். சிவாஜிக்கு ரத்தத் திலகம், ஜெமினிக்கு வாழ்க்கை வாழ்வதற்கே, எம்.ஜி.ஆருக்கு நீதிக்குப் பின் பாசம் படப்பிடிப்புகள்.

தேவர் சில நாள்கள் எம்.ஜி.ஆரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்னைக்குப் போயிருந்தார். அதுவரை மழை கொட்டு கொட்டென்று கொட்டியது. தேவர் ஊட்டிக்குத் திரும்பிய அன்று வெயில் கொளுத்தியது.

சரோ, எம்.ஜி.ஆரைக் கலாய்க்கும் உற்சாகத்தில், ‘தேவர் இல்லாவிட்டால் ஷூட்டிங் நடக்க மாட்டேன் என்கிறது. என்ன இருந்தாலும் தேவர்தான் வேகத்துக்கும் வெற்றிக்கும் காரணம்.’

எம்.ஜி.ஆர். செல்லக் கோபத்துடன், ‘அப்படியா, அப்ப தேவரே நடிக்கட்டும் பார்ப்போம். வேகம், வெற்றி எப்படியிருக்குன்னு.

தேவர் : ‘ எல்லாம் முருகன் செயல்!’

எம்.ஜி.ஆர்.- ‘இது ஆர்ட்டிஸ்டுகளுக்கு இன்சல்ட்.’ அதற்கு மேல் பேச்சு வளர்த்த தேவரா விடுவார்.

‘வெயில் வந்தாச்சு. ரெடி ரெடி திருமுவம் டேக் எடுப்பா...’ என்ற படி, எம்.ஜி.ஆர். தன்னை மறைத்துக் கொண்ட குடையைப் பிடுங்கிப் போட்டார்.

***

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com