தேவிகா: 3. நடிப்பு தண்ணீர் பட்ட பாடு..!

தேவிகா: 3. நடிப்பு தண்ணீர் பட்ட பாடு..!

தேவிகா மிக அதிகப் படங்களில் நடித்த ஆண்டு 1963. அவ்வருடத்தில் அவர் நடித்தவை மக்களின் நினைவில் நீங்காத இடம் பிடித்தன.

தேவிகா மிக அதிகப் படங்களில் நடித்த ஆண்டு 1963. அவ்வருடத்தில் அவர் நடித்தவை மக்களின் நினைவில் நீங்காத இடம் பிடித்தன.

‘ஷீஷ் பரிஷ்’ என்ற பெயரில் வெளியாகி தோல்வி  அடைந்த வங்காள சினிமாவின் தழுவல்- கண்ணதாசனின் வானம்பாடி. தமிழில் வெற்றி பெற்ற ஒரே காரணம் தேவிகா!

1963  மார்ச் 9ல் திரைக்கு வந்தது. வானம்பாடியை உருவாக்கியவர் ஒளிப்பதிவாளர்- டைரக்டர் ஜி.ஆர். நாதன்.

‘காத்திருந்த கண்கள்’- சாவித்ரிக்குப் பிறகு, இரட்டை வேடத்தில் இறக்கை கட்டிப் பறக்கும் வாய்ப்பு வானம்பாடியில் தேவிகாவுக்கு வாய்த்தது.
ஓ.ஏ. கே. தேவரைச் சுட்டு விட்டு, ரயிலில் எழுந்து தற்கொலைக்கு முயலும் மீனாவாகவும், கணவர் ஆர்.எஸ். மனோகரின் கொடுமை தாளாமல் வீட்டை விட்டு வெளியேறி, ‘பாடகி கவுசல்யா’ என்ற பெயரில் வாழும்  ‘அபலை சுமதி’யாகவும் மாறுபட்ட இரு ரோல்கள் தேவிகாவுக்கு.

சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் ஆகிய  சொந்தப்படங்களின் படு தோல்வியால், அன்றாடம் கடன் தொல்லையில் சிக்கித் தத்தளித்தார் கவிஞர் கண்ணதாசன். இடையில் கோவை செழியனுடன் இணைந்து சுமைதாங்கி படத்தைத் தொடங்கினார் கவிஞர். ஸ்ரீதரின் சுமை தாங்கி  கண்ணதாசனுக்கு நல்ல வருவாயைத் தேடித் தந்தது. ஆனாலும் அசல் மலையளவு பாக்கி இருப்பதாக பைனான்ஸியர்கள் வழக்கு போட்டனர்.

கோர்ட் படிகளில்  ஏறிய நேரம் போக, கவிஞர் தயாரித்த படம் வானம்பாடி.
சின்னப்பாதேவர் வானம்பாடியைப்  பார்த்துப் பாராட்டியதோடு நில்லாமல்,  மிக நல்ல  விலைக்கும் விற்றுக் கொடுத்தார்.

வானம்பாடி வெற்றிச் சிறகுகளை  விரித்துப் பறந்ததில் கண்ணதாசனின் துக்கம் தீர்ந்தது.

‘டூயல் ரோலில் திறம்பட சமாளித்திருக்கிறார் தேவிகா. மீனாவின் பயந்த தோற்றத்தில் அவர் முகத்தில்  கண்ட கலவரத்துக்கும், கவுசல்யாவின் அலட்சிய பாவத்தில்  காணும் செருக்குக்கும் எத்தனை வேறுபாடு!
நீதிமன்றத்தில் தனக்கு வாழ்வளிக்குமாறு தாய் மாமனை தேவிகா கெஞ்சுவது உருக்கமாக இருக்கிறது.’
என்று தேவிகாவின் இரட்டை வேட நடிப்புக்குக் கட்டியம் கூறியது கல்கி.

‘ உணர்ச்சிகளை  அமரிக்கையாக அதே சமயம்  முழுமையாகச் சித்தரிக்கும்  மென்மையான முகம்  தேவிகாவுக்கு அமைந்திருப்பதால், நடிப்பு தேவிகாவுக்குத் தண்ணீர்பட்ட பாடாக இருக்கிறது!’ என்று குமுதம் தன்  விமர்சனத்தில் வியந்தது.

கே. . மகாதேவன் - கண்ணதாசன் கூட்டணியில் வானம்பாடியில் ஒலித்த கங்கைக்கரை தோட்டம், தூக்கணாங்குருவிக் கூடு, ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள், கடவுள் மனிதனாக, ஏட்டில் எழுதி வைத்தேன், யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம், நில் கவனி புறப்படு என ஒவ்வொரு பாடலும் பாதாம் அல்வாவாக இனித்தன.

எப்போது திரையிட்டாலும் அரங்கம் வழியும் கறுப்பு வெள்ளைப் படங்களில் ஒன்றாக வானம்பாடி சிரஞ்சீ த்துவம் பெற்றது.

வானம்பாடியின்  மற்றொரு சிறப்பம்சம் அதுவே டி.ஆர். ராஜகுமாரி நடித்த கடைசி சினிமா!

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து நடிக்கும் அரிய சந்தர்ப்பமும் தேவிகாவுக்குக் கிடைத்தது.

1963 கோடை  விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட ஜூன் மாதம். சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். எனத் தமிழ் சினிமாவின் மூவேந்தர்களுடன் தேவிகா ஜோடியாக நடித்த, மூன்று படங்களும் வரிசையாக ரிலிஸ் ஆகியிருந்தன.

 சென்னை மவுண்ட் ரோடு கெயிட்டி தியேட்டரில் குலமகள் ராதை. அருகில் காசினோ ல் இதயத்தில் நீ, சற்றுத் தள்ளி பாரகன் டாக்கீஸில் ஆனந்த ஜோதி.
தேவிகாவின் நட்சத்திர வாழ்வில் அது ஓர் அரிய நிகழ்வு!

வகுப்பைக் கட் செய்து  விட்டு, தேவிகாவின் புதுப்படங்களைத் திரையில் காண க்யூவில் முண்டியடித்தன அரும்பு மீசைகள்.

‘சந்திரலேகா’- கால சர்க்கஸ்காரி டி.ஆர். ராஜகுமாரிக்குப் பின்னர், குலமகள் ராதையில் நடிகர் திலகத்துடன்  ‘பார்’விளையாடும்  வித்தியாசமான வேடம் தேவிகாவுக்கு.  

லீலா என்கிற கதாபாத்திரத்தில் காதல் நாயகனோடு கட்டுக் கோப்பாக, குடித்தனம் நடத்தத் துடிக்கும் இளம் சர்க்கஸ்காரியின் ஏக்கத்தை, அருமையாகப் பிரதி பலித்துக் காட்டினார் தேவிகா. போட்டிக்கு சரோஜாதேவி வேறு.
அகிலனின் ‘வாழ்வு எங்கே ?’ புதினமே  ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் குலமகள் ராதை. ‘நீண்ட காலத் தயாரிப்பில் சிக்கும் படங்கள் கண்டிப்பாகத் தோல்வியையே தழுவும்’ என்கிற எழுதப்படாத விதியை குலமகள் ராதை அடியோடு மாற்றிக் காட்டியது.

சினிமா சின்னத் திரைக்குள் அடங்கும் வரையில் எப்போது வெளியானாலும், வசூலை வாரிக்குவிக்கும் வெற்றிச் சித்திரமாக ‘குலமகள் ராதை’ கொலுவிருந்தது.

தேவிகா சர்க்கஸ் வலையில்  விழுந்து ஆடிப்பாடி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள், கள்ளமலர்ச் சிரிப்பிலே,’ உள்ளிட்டப் பாடல்கள்  தேவிகாவின் இயல்பான கவர்ச்சியைத் திரையில் கூடுதலாகக் காட்டின.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும்- தேவிகாவும் ஜோடியாக  நடித்த ஒரே படம் என்கிற பெருமைக்குரியது ஆனந்தஜோதி. பி.எஸ். வீரப்பாவின் தயாரிப்பு.

பொதுவாக எம்.ஜி.ஆர். பட டைட்டில்கள் எல்லாமே நாயகன் புகழ் பாடுவதாகவே அமையும். அகிலனின் ‘கயல்விழி’ நாவலை ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனாக’ திரையில் மாற்றி இயக்கியவர் மக்கள் திலகம்.

முதலும் கடைசியுமாக நாயகன் - நாயகி இருவரது பெயரையும் இணைத்துப் பெயர் சூட்டப்பட்ட ஒரே எம்.ஜி.ஆர். படம் ஆனந்தஜோதி!

தேவிகாவின் சோக கீதங்கள் ‘நினைக்கத் தெரிந்த மனமே, காலமகள் கண் திறப்பாள் செல்லையா’ இரண்டும் சென்ற நூற்றாண்டில் நேயர்களால் மிக அதிக முறை விரும்பி கேட்கப்பட்டவை.

எம்.ஜி.ஆர். க ஞர் மணிமாறனாகவும் டிரில் மாஸ்டர் ஆனந்தனாகவும் தோன்றினார். நடிப்பில் ‘ஜோதி’யாக ஒளி வீசிய தேவிகாவும்- வாத்தியாரும் இடம் பெற்ற ’ பனி இல்லாத மார்கழியா, பொய்யிலே பிறந்து... இரண்டு டூயட்களும் இன்றைக்கும் நேயர்  விருப்பத்தில் தவறாமல் ஒலிக்கின்றன.
ஆனந்தஜோதி அகன்றதொரு வசூல் வெளிச்சம் பரப்பியும், தேவிகாவுடன் தொடர்ந்து டூயட் பாடுவதை எம்.ஜி.ஆர். ஏனோ ஒரே படத்துடன் நிறுத்திக் கொண்டார்.

ஸ்ரீதர்-தேவிகா காம்பினேஷனில்  அடுத்த சினிமா நெஞ்சம் மறப்பதில்லை. தமிழில் வெளியான முதல்  பூர்வ ஜென்ம கதை. வெற்றிகரமாக ஓடியது.
தேவிகாவுக்கு கண்ணம்மா,  ஜெயா என்று இரு வேடங்கள். முதல் ஜென்மத்தில் ஜமீனில் வேலை செய்யும் கூலிக்காரப் பெண் கண்ணம்மாவாக தேவிகா!
ஜமீன்தார் எம்.என். நம்பியாரின் மகன் கல்யாண்குமாரை, அவர் ஜமீன் பரம்பரை என அறியாமல் காதலித்து, ஜமீன்தாரால் கொலை செய்யப்படும் பரிதாபத்துக்குரிய வேடம்.

தேவிகா பாடி நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ சோக கீதம்,  தமிழ் சினிமா படப் பாடல்களில் தனி வரலாறு படைத்தது. பி. சுசிலாவின் புகழை கின்னஸில் எழுதியது.
----------
தேவிகாவுக்கு மாபெரும் நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிய ஸ்ரீதர் பற்றி தேவிகா கூறியவை-

‘ ஜெமினியின் கரானா இந்தி சினிமா பார்த்துட்டு டைரக்டர் ஸ்ரீதர் எங்க வீட்டுக்கு வந்து நெஞ்சில் ஓர் ஆலயம் கதை சொன்னார். அப்ப ரிலீசாயிருந்த அவரோட தேன் நிலவு சரியாப் போகலை. கதை எனக்கு ரொம்பப் பிடிச்சது. சரி சார் நானே நடிக்கிறேன்னு ஸ்ரீதர் சாரிடம் தெரிவித்தேன்.

மஞ்சளும் குங்குமமும் குலமகளின் இரு கண்கள். பெண்ணாகப் பிறந்திருந்தும் கூட அதை நான் புரிந்து கொள்ளப் பல ஆண்டுகள் ஆகியது.

மஞ்சள் குங்குமத்தின் மங்கல மகிமையை நான் உணர்ந்து கொள்ளக் காரணமானவர்  டைரக்டர் ஸ்ரீதர்.

சிறு வயது முதல் எப்போதும் நான் குங்குமம் இட்டுக் கொள்வதில்லை. சேவா ஸ்டேஜில்  நடித்துக் கொண்டிருக்கும் போது, எஸ்.வி . சகஸ்ரநாமம் என் முகத்தை உற்று கவனித்துவி ட்டு, ‘உன் நெற்றியில் சாணத்தை எடுத்துப் பூசுகிறேன். அப்போது தான் நீ குங்குமம் இடுவாய்...’ என்பார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் எனது கணவராக  நடிக்கும் முத்துராமனின் பெயரில், அர்ச்சனை செய்து குங்குமம் பெற்று வருமாறு, குட்டி பத்மினியின் அம்மாவிடம் நான் கேட்பதாக ஒரு காட்சி வரும்.

அப்போது டைரக்டர் ஸ்ரீதரின் இந்து மதம் குறித்த நம்பிக்கையைப் பார்த்து நான் மனத்துக்குள் சிரித்தேன்.
‘நீ கிருத்துவப் பெண்ணா...’ என்று கூடப் பலர் என்னிடம் கேலியாகக் கேட்டது உண்டு. திருமணத்துக்குப் பிறகு என் போக்கு அடியோடு மாறியது. ஒரு நாள்  நெற்றித் திலகம் என் கைபட்டுக் கலைந்தது தெரிந்ததும் நான் துடிதுடித்துப் போனேன்.

கணவர் வீடு திரும்பியதும் வெங்கடேச பெருமாள் படத்தின் முன்பு போய், சுவாமிக்கு ஆரத்தி எடுத்து அவரை  எனக்குக் குங்குமம் இடச் சொன்னேன். அதன் பிறகே எனக்கு நிம்மதி பிறந்தது.

ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் ஒரு புறம் என்னைச் சிறந்த நடிகையாக்கி அழகு பார்த்தது. இன்னொரு பக்கம் ஓர் இளம் மனைவியாக  தாம்பத்ய பந்தத்தின் அருமையை எனக்கு எடுத்துக் காட்டியது. 

டைரக்டர் ஸ்ரீதர்  நம் தேசத்து மாதர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையை எண்ணி  மனமாறப் பாராட்டினேன்.

நெஞ்சில் ஓர் ஆலயம்  முதல் வாரம் சுமாராத்தான் போச்சுது. அப்புறம் நல்ல படம்னு ரசிகர்களுக்குத் தெரிஞ்சதுமே பிரமாதமா ஓட ஆரம்பிச்சது.
ஸ்ரீதர் எனக்கு ரொம்பவே உதவினார். நெஞ்சில் ஓர் ஆலயம் வெற்றியைத் தொடர்ந்து அவரோட சுமை தாங்கி, நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் தொடர்ந்து என் நடிப்புக்குப் பெயரையும்  புகழையும் தேடித் தந்தன.
ஸ்ரீதர் நடிச்சிக்காட்டும் போதே நமக்குத் தன்னாலயே நடிப்பு வந்துடும்.’ - தேவிகா.
ஸ்ரீதரின் உதவியாளர் சித்ராலயா கோபு. அவர் தேவிகா பற்றி எழுதியவை.
எப்போதும் வேடிக்கையும்  விளையாட்டுமாக கலகலப்பாகப் பேசும் சுபாவம் கொண்டவர். குறும்புத்தனம் அதிகம் கொண்ட குழந்தை மாதிரியானவர் தேவிகா.

ஹீரோயின் தேவிகாவும் வில்லன் எம்.என். நம்பியாரும் ஒரே இடத்தில் இருந்தால் வேடிக்கைக்குப் பஞ்சம் இருக்காது.

திகில் படமான நெஞ்சம் மறப்பதில்லை அவுட்டோரில் அப்படியோர் சந்தர்ப்பம் எங்கள் யூனிட்டுக்குக் கிடைத்தது.  அவர்கள் இருவரின் அரட்டைக் கச்சேரியால், ஓயாத கலாட்டாக்களால் எங்களுக்குச் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.

ஸ்ரீதரின் மூன்று படைப்புகளில் தொடர்ந்து நாயகியாக நடித்த பெருமை தேவிகாவுக்கு மட்டுமே உண்டு!

 ஒவ்வொரு படமும் முடியும் தருணத்தில், எங்கள் யூனிட்டில் வேலை செய்த தொழிலாளர்கள் அத்தனை பேருக்கும் தன் கையிலிருந்து பணத்தைப் பகிர்ந்து கொடுத்தார்.

அபாரமான நடிப்புத் திறமையோடு இயற்கையிலேயே இளகிய மனமும் கொண்டவர் தேவிகா.’ -கோபு.
ஆரவல்லியில் தவறவி ட்ட வாய்ப்பு மறுபடியும் மாடர்ன் தியேட்டர்ஸின்  யாருக்குச் சொந்தம் படத்தில் தேவிகாவுக்குக் கிடைத்தது. ஹீரோ கல்யாண்குமார்.

இதயத்தில் நீ முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் தேவிகா நடித்த ஒரே படம். தேவிகாவின் பாட்டு ராசி அதிலும்  உறுதியானது.
 உறவு என்றொரு சொல் இருந்தால், பூ வரையும் பூங்கொடியே போன்ற இதயத்தில் நீ படப் பாடல்கள் அவற்றை எழுதிய கவிஞர் வாலிக்கு மிகப் பெரிய வாழ்வு தந்தன.

டைரக்டர் ஏ. பீம்சிங்கின் படங்களில் தொடர்ந்து பங்கேற்றவர்கள் தேவிகாவும் - ஆரூர்தாஸூம். ஆனால் ஆரூர்தாஸூம் - தேவிகாவும் பீம்சிங் இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையாமல் போனது.

நடிகர் திலகமும் தேவிகாவும் ஜோடியாக நடித்த வெற்றிச் சித்திரங்களில் ஒன்று பி. மாதவன்  டைரக்ட் செய்த அன்னை இல்லம். 1963 தீபாவளிக்கு வெளியாகி 100 நாட்களைக் கடந்து ஓடியது.

அன்னை இல்லம் படத்தில் சிவாஜி தேவிகாவை கேலி செய்து பாடும்
‘நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது.’ சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

சென்ற நூற்றாண்டில் மிக அதிக முறை சென்னை வானொலியிலும் ஒலித்த ஈவ் டீஸிங் சாங்! அன்னை இல்லம் படத்துக்குத் திரைக்கதை வசனம் ஆரூர்தாஸ்.

‘நான் தப்பித்தவறி ஒரு வசனத்தை மறந்திட்டாலோ, இல்லே மாத்திச் சொல்லிட்டாலோ உடனே கோவம் வந்து என்னைத் திட்டுறீங்க.
‘அழகா இருந்தா மட்டும் போதுமா? ஒழுங்கா வசனம் பேசி நடிக்க வேணாமா? நீயெல்லாம் ஏன் நடிக்க வந்தேன்னு கேக்குறீங்க.’

ஆனா சாவித்ரியம்மான்னா மட்டும் ஏங்க அப்படி பயப்படுறீங்க? அவுங்ககிட்டேயிருந்து போன் வந்துருக்குன்னு சொன்னா ஏன் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடுறீங்க. அந்தம்மா உங்களை ஏன் இப்படிப் பயமுறுத்தி வெச்சிருக்காங்க? அப்படி நீங்க என்னத் தப்புப் பண்ணுனீங்க? எங்கிட்ட மட்டும் சொல்லுங்களேன். ப்ளீஸ்...’

அப்படிச் சொல்லி என்னைக் கேலி செய்யும் ஹீரோயின் வேறு யாருமல்ல. ‘வெகுளிப்பெண்’ என்ற சொந்தப்படத்தை எடுத்து, தன் வாழ்க்கையிலும் ஒரு வெகுளிப் பெண்ணாகவே வாழ்ந்து- அகால மரணம் அடைந்த என் அன்பிற்கும், அனுதாபத்துக்கும் உரிய திருமதி தேவிகாதான்.

நான் வசனம் எழுதி எம்.ஜி.ஆர்.- சாவித்ரி இரண்டாவது முறையாக இணைந்து  நடித்த பரிசு  படப்பிடிப்பு கோடம்பாக்கம் வாகினி ஸ்டுடியோ லும், சிவாஜி - தேவிகா ஜோடி சேர்ந்த அன்னை இல்லம் ஷூட்டிங் அடையாறு நெப்டியூன்  (சத்யா) ஸ்டுடியோவிலும் நடந்து கொண்டிருந்தன.

அங்கே எம்.ஜி.ஆர்.! இங்கே சிவாஜி! இருவருக்கும் வசனம் சொல்லித் தர, ஒரே நாளில் நான் பல தடவைகள் மாறி மாறி போய் வந்து கொண்டிருந்தேன்.
சில சமயங்களில் என்னை உடனே வாஹினிக்கு வரச் சொல்லி சாவித்ரியிடமிருந்து போன் வரும். நான் அவசர அவசரமாகத் தெற்கே உள்ள அடையாறிலிருந்து மேற்கே இருக்கும் கோடம்பாக்கத்திற்கு அனுமார் மாதிரி அப்படியே தாவிப்பறந்து போய்விடுவேன்.

அதை வைத்துத்தான் தேவிகா என்னைக் கேலி செய்வார். அன்று தேவிகா சொன்னதில் ஓர் அர்த்தமும் இருந்தது என்பேன் - ஆரூர்தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com