8. எவ்வளவு கொழுப்பு? - 2

கொலஸ்ட்ரால் என்ற வெள்ளையான, சுவையற்ற, மணமற்ற அந்தப் பொருள்தான் மனித உடலின் ஆதார சுருதி. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு, அதற்காக விற்கப்படுகின்ற மருந்து மாத்திரைகள் எல்லாமே, இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணத்தை வேண்டுமானல் மாற்றலாமே தவிர, இறப்புத் தேதியை மாற்றாது.
Published on
Updated on
7 min read

கொலஸ்ட்ரால் பற்றிய கருத்துகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனிதனால் உண்டாக்கப்பட்ட கற்பனையான பொய் மட்டுமல்ல; மனிதகுலத்துக்குக் கிடைத்த ஆகப்பெரிய சாபமும் ஆகும் –

டாக்டர் பி.எம். ஹெக்டே, இதய நிபுணர், ஹார்வர்டு.

‘‘பயப்படாதீங்க டாக்டர், எனக்கு கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும்”

இப்படி, டாக்டர் ரவன்ஸ்கோவிடம் (Uffe Ravnskov) சொன்னவர் ஒரு வழக்கறிஞர். அவர் சொன்னது உண்மை. அவருக்கு கொலஸ்ட்ரால் அதிகமாகத்தான் இருந்தது. 400-க்கும் மேல்! ‘‘எங்கப்பாவுக்கு இன்னும் அதிகமாக இருந்தது. அவர் 79 வயதுவரை நன்றாக வாழ்ந்தார். என் பெரியப்பாவுக்கு அப்பாவைவிட அதிகமாக இருந்தது. அவருக்கு குடும்ப ரீதியாக மிக அதிக கொலஸ்ட்ரால் இருந்தது (familial hypercholesterolemia). ஆனால், அவரும் ரொம்ப ஆரோக்கியமாக 83 வயதுவரை வாழ்ந்தார்” என்று முடித்தார்.

அவர் சொன்னது உண்மைதான். ரவன்ஸ்கோவின் நோயாளிக்கு அப்போது வயது 53. அவரது சகோதரருக்கு 61. அதிகமான கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவர்களுக்கு இதயம் தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லை. கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கான எந்த மருந்து மாத்திரைகளையும் அவர்கள் எடுத்துக்கொள்ளவும் இல்லை!

கனடாவின் டொரான்டோ பல்கலைக் கழக மருத்துவமனையின் டாக்டர் ஹென்றி ஷனோஃப் (Henry Shanoff) செய்த ஆராய்ச்சியின்படி, ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்குக் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் மறு அட்டாக் வருகிறது என்று கண்டுபிடித்தார். அதை வைத்துப் பார்க்கும்போது, அட்டாக் வந்தவர்களின் கொலஸ்ட்ரால் அளவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போகிறது.

ரஷ்யாவில் நடந்த இன்னொரு பரிசோதனையில், இன்னும் குழப்பமான முடிவுகள் கிடைத்தன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த ரஷ்யன் அகாடமி ஆஃப் மெடிகல் சயின்ஸஸின் டாக்டர் டிமிட்ரி ஷஸ்தோவ் நடத்திய பரிசோதனையில், கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருந்தவர்களுக்கே ஹார்ட் அட்டாக் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

அதிக கொலஸ்ட்ரால் அமெரிக்கர்களுக்கு ஆபத்து. ஆனால் கனடியர்களுக்கும், ஸ்டாக்ஹோமர்களுக்கும் அப்படியில்லை. குறைவான கொலஸ்ட்ரால் அளவு ரஷ்யர்களுக்கு ஆபத்தாக இருந்துள்ளது. அதிகமான கொலஸ்ட்ரால் ஆண்களுக்கு ஆபத்து. ஆனால், பெண்களுக்கு அது தீமை செய்யவில்லை. ஆரோக்கியமானவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் ஆபத்து. ஆனால், இதய நோயாளிகளுக்கு கொலஸ்ட்ராலால் ஆபத்தில்லை. முப்பது வயதுடையவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தானதாகவும், நாற்பத்தைந்து வயதைக் கடந்தவர்களுக்கு அப்படி இல்லாமலும் போகிறது!

ஆஹா, அற்புதமான கண்டுபிடிப்புகள். பல நாடுகளில் நடந்த பல பரிசோதனைகளுக்குப் பிறகு, மேற்கண்ட முடிவுகளுக்குத்தான் மருத்துவர்களால் வரமுடிந்தது!

இதனால் சகலருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், அதிக அளவில் ஒருவர் உடலில் கொலஸ்ட்ரால் இருக்குமானால், அதனால் அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று சொல்லிவிட முடியாது. ஹை கொலஸ்ட்ராலுக்கும் ஹார்ட் அட்டாக்குக்கும் நேரடியான ஒன்றுக்கொன்று தொடர்புள்ள முடிச்சு எதுவும் இல்லை. அதிகபட்சமாக என்ன சொல்லலாம் என்றால், அதிகமான கொலஸ்ட்ரால் தன்னளவில் அபாயகரமானதில்லை. ஆனால், வேறு ஏதாவது பிரச்னைகளை அது ஏற்படுத்தலாம்!

நல்ல கொழுப்பு - கெட்ட கொழுப்பு

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வித்தியாசமான மாலிக்யூல். அதை லிபிட் (lipid) என்றும் ஃபேட் (fat) என்றும் கூறுகிறார்கள் என்று ஏற்கெனவே பார்த்தோம். கொலஸ்ட்ரால் நீரில் கரையாத தன்மை கொண்டது. அதன் காரணமாகவே, நம் உடலில் உள்ள உயிரணுக்களெல்லாம், தங்களுக்கான பாதுகாப்புக் கோட்டைச் சுவர்களை எழுப்ப கொலஸ்ட்ராலை பயன்படுத்திக்கொள்கின்றன. இந்தச் சுவர்கள் ‘வாட்டர் ப்ரூஃப்’ ஆக இருந்தால்தான், நரம்புகளும் உயிரணுக்களும் மரபணுக்களும் பிரச்னை ஏதுமில்லாமல் செயல்பட முடியும். ஆகவேதான், மூளையிலும் நரம்பு மண்டலத்தின் முக்கியப் பகுதிகளிலும் கொலஸ்ட்ரால் குவித்துவைக்கப்பட்டுள்ளது. நம் உடலைக் காப்பது இந்த கொலஸ்ட்ரால் கோட்டைதான் என்று சொன்னால் அது மிகை இல்லை. கொலஸ்ட்ராலை ‘உயிர் கொடுப்பான்’ (Life Giver) என்று வர்ணிக்கிறார் டாக்டர் பி.எம். ஹெக்டே!

நீரில் கரையாத தன்மையைக் கொண்டிருப்பதால், ரத்தத்துக்குள் கொலஸ்ட்ரால் சுற்றிக்கொண்டே இருக்கும். எண்ணெய்யும் தண்ணீரும்போல, ரத்தத்தில் கலக்காமல் கொலஸ்ட்ரால் மிதந்துகொண்டே செல்லும். நீரில் கரையக்கூடிய தன்மைகொண்ட லிப்போபுரோட்டீன்கள் எனப்படும் சமாசாரங்கள்தான், கொலஸ்ட்ராலை உடல் முழுக்க ஒரு நீர்மூழ்கிக் கப்பலைப்போல எடுத்துச் சென்றுகொண்டிருக்கும்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் போய்ச் சேர வேண்டிய இடத்தைப் பொறுத்து, எச்.டி.எல். (HDL - High Density Lipoprotein) என்றோ, எல்.டி.எல். (LDL - Low Density Lipoprotein) என்றோ புதிய பெயர்களைப் பெறுகின்றன. எச்.டி.எல். நல்ல கொலஸ்ட்ரால் என்றும், எல்.டி.எல். கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அறியப்படுகிறது. ஏன்? கொஞ்சம் இருங்கள் பார்க்கலாம்.

எச்.டி.எல்.லின் முக்கியப் பணி, வெளிப்பக்கமாக இருக்கும் திசுக்களிலில் இருந்து கல்லீரலுக்குக் கொலஸ்ட்ராலை கொண்டுசெல்வது. அங்கே அது பித்தநீரோடு வெளித்தள்ளப்படுகிறது.

எச்.டி.எல். செய்யும் வேலைக்கு நேர்மாறானதை எல்.டி.எல். செய்கிறது. நம் உடலில் கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உருவாக்கப்படும் கல்லீரலில் இருந்து உடலின் பல பாகங்களுக்கும், இதயத்தின் சுவர்கள்வரை கொலஸ்ட்ராலை எல்.டி.எல். கொண்டுசெல்கிறது. உயிரணுக்களுக்குக் கொலஸ்ட்ரால் தேவைப்படும் போதெல்லாம், இந்த எல்.டி.எல்.தான் அவற்றுக்கு கொலஸ்ட்ராலை ‘சப்ளை’ செய்கிறது.

60 - 80 விழுக்காடு கொலஸ்ட்ராலை எல்.டி.எல்.தான் உடல் முழுக்கக் கொண்டுசென்று கொடுக்கிறது. 15 - 20 விழுக்காடு கொலஸ்ட்ரால்தான் எச்.டி.எல். மூலம் கல்லீரலுக்கு வந்து சேர்கிறது. பின்னே ஏன் எல்.டி.எல். ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் என்றும், எச்.டி.எல். ‘நல்ல’ கொலஸ்ட்ரால் என்றும் பெயர் வாங்கியது?

எச்.டி.எல். ‘நார்மல்’ அளவைவிடக் குறைவாக இருந்தாலோ,

எல்.டி.எல். ‘நார்மல்’ அளவைவிட அதிகமாக இருந்தாலோ,

ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் / வாய்ப்பு அதிகம் என்றும்,

எச்.டி.எல். ‘நார்மல்’ அளவைவிட அதிகமாக இருந்தாலோ,

எல்.டி.எல். ‘நார்மல்’ அளவைவிடக் குறைவாக இருந்தாலோ,

இந்த வாய்ப்பு குறைவு என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மாரடைப்பை ஏற்படுத்தும் உள்ளார்ந்த சாத்தியக்கூறைக் கொண்டதால், எல்.டி.எல்.லை கெட்டது என்றும், எச்.டி.எல்.லை நல்லது என்றும் சொல்லிவிட்டார்கள். பாவம், அதிகமாக வேலை செய்பவனுக்குக் கெட்ட பெயர்!

ஒடிந்து விழுந்துவிடுவார்களோ என்று நினைக்கும் அளவுக்குச் சில பெண்கள் ஒல்லிக்குச்சியாக இருப்பார்கள். நம்ம எல்.டி.எல்.லும் அந்த ரகம்தான். உடலெங்கும் கொலஸ்ட்ராலை எடுத்துச்செல்லும்போது, அதன் தடிமன் குறைவின் காரணமாக, வழியிலேயே உடைந்துபோகும் வாய்ப்பு உள்ளது. அப்படி உடைந்துபோகும்போது, ‘கப்பல் கவிழ்ந்து’ ரத்தத்தில் கொலஸ்ட்ரால் விழுந்துவிடும். கொலஸ்ட்ரால் அதன் கரையாத்தன்மையால் ரத்த ஓட்டத்தில் கலந்துகொள்ளாமல், விழுந்த இடத்திலேயே குத்துக்கல் மாதிரி உட்கார்ந்துகொள்ளும். அதனால், சீரான ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தக் குழாய்களின் இடைவெளி குறையும்.

இதைத்தான், ரத்தக் குழாய் அடைப்பு என்று நாம் புரிந்துகொள்கிறோம். இதேபோல தமனிகள், சிரைகள் போன்ற இதயக் குழாய்களின் வழியாக  கொலஸ்ட்ராலை எல்.டி.எல். எடுத்துச் செல்லும்போது இப்படி ஆகிவிட்டால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பும் உண்டாகிறது. இப்படி வழியிலேயே உடைந்துபோய் கொலஸ்ட்ராலை கீழே போட்டுவிடுவதால், எல்.டி.எல். ‘கெட்ட’ கொலஸ்ட்ரால். உடையாமல் கொண்டுபோவதால், எச்.டி.எல். ‘நல்ல’ கொலஸ்ட்ரால்!

நல்லவன் கெட்டவன்

கெட்டவன் நல்லவன்

பல சமயங்களில், நல்லவனே கெட்டவனாகவும்; கெட்டவனே நல்லவனாகவும் அவதாரங்கள் எடுப்பதுண்டு. ஏனெனில், ‘ரிஸ்க் ஃபேக்டர்’ என்பது ஒரு சாத்தியக்கூறுதானே தவிர, உறுதிப்படுத்தப்பட்ட காரணியல்ல! அதனால்தான், ‘அட்டாக்’ வருபவர்களுக்கெல்லாம் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும் என்று சொல்லமுடியவில்லை! நல்ல கொலஸ்ட்ரால் அதிமாக இருந்தவர்கள் ஹார்ட் அட்டாக் வந்து இறந்த வரலாறும் ஆராய்ச்சியில் உண்டு!

பொய் 2 - அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகள், ரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை அதிகப்படுத்துகின்றன.

ஒட்டகங்களும் பசுக்களும் கொலஸ்ட்ராலும்

கென்யா நாட்டின் சம்பூரு மசாய் ஆகிய பழங்குடியின மேய்ப்பர்கள், மூன்று வேளையும் பால், ரத்தம், மிருகக்கொழுப்பு ஆகியவற்றை மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டாலும், அவர்களது கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது, உதாரணமாக, 170 ml/dL தான் இருந்தது.

சோமாலியாவில் இருந்த மேய்ப்பர்கள், தங்கள் ஒட்டகங்களின் பாலைத் தவிர வேறெதுவும் குடிப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒன்றரை ‘கேலன்’ பால் என்பது அவர்களுக்கு ‘நார்மல்’! ஒரு பவுண்டு வெண்ணெய்யில் உள்ள கொழுப்புக்குச் சமம் அது! ஏனெனில், பசும் பாலைவிட ஒட்டகப் பாலில் கொழுப்பு மிக அதிகமாக உள்ளது. என்றாலும், அவர்களது சராசரி கொலஸ்ட்ரால் அளவு சுமார் 150 ml/dL தான். இது, நகர வாழ்க்கை வாழும் மக்களின் கொழுப்பைவிட ரொம்பக் குறைவு!

கொலஸ்ட்ராலும் தேங்காயும்

தேங்காயில், மிருகக் கொழுப்பைவிட அதிகமாகச் செறிவூட்டப்பட்ட கொழுப்பு இருப்பதாக நம்பப்பட்டது. நியூஸிலாந்தைச் சேர்ந்த டாக்டர் அயன் ப்ரியரும் (Dr. Ian Prior) அவரது குழுவும், டொகேலா (Tokelau), புகாபுகா (Pukapuka) ஆகிய தீவுகளில் வாழ்ந்த மனிதர்களிடம் ஓர் ஆராய்ச்சியைச் செய்தார்கள். அத்தீவில் வாழ்ந்தவர்களின் பிரதான உணவு தேங்காய்தான். தேங்காய்த் தோசை, தேங்காய் இட்லி, தேங்காய்ச் சோறு, தேங்காய்ப் பொடி – இப்படி! அவர்களின் எல்லா உணவு வகைகளிலும் தேங்காய் இருக்கும். அது மட்டுமல்லாமல், மீன்களையும் கோழிகளையும்கூட அவர்கள் விரும்பி உண்டனர். கோழிகளுக்கும் தேங்காய்தான் பிடித்தமான ‘கொத்து’க் கறி!

அத்தீவின் தேங்காய் மக்களின் தோலுக்குக் கீழே சிரிஞ்சை செலுத்தி கொழுப்பைக் கொஞ்சம் உறிஞ்சி, ஒரு மருத்துவர் குழு ஆராய்ச்சி செய்தது! அதிகமான கொழுப்பு உணவால் எவ்வகையான பாதிப்புகளுக்கு - முக்கியமாக, இதயப் பாதிப்புக்கு - உள்ளாகி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதுதான் ஆராய்ச்சியின் பிரதான நோக்கம்! அப்படி உறிஞ்சி எடுக்கப்பட்ட கொழுப்பின் அளவு, மேற்கத்திய உலகில் வாழ்ந்த நவநாகரிக மக்களிடம் இருந்த கொழுப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் ஆராய்ச்சிக்குப் பலம் சேர்ப்பதாக இருந்தது அந்தக் கண்டுபிடிப்பு.

ஆனால், அதற்குப் பிறகுதான் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. 1966-ல் ஏற்பட்ட ஒரு சூறாவளிக் காற்றில், டொகேலா தீவில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டன. இதையடுத்து, அத் தீவில் இருந்த மக்கள் அங்கு இருக்கமுடியாமல் நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்தனர். அங்கே நகர வாழ்க்கையின் உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறிக்கொண்டனர். வேறு வழி? அதனால், செறிவூட்டப்பட்ட கொழுப்புச் சத்துகளால் டொகேலா தீவில் கிடைத்துக்கொண்டிருந்த கலோரிகளில் பாதிதான் நியூஸிலாந்தில் அவர்களுக்குக் கிடைத்தது.

ஆனாலும், நியூஸிலாந்துக்குச் சென்ற டொகேலா தீவு மக்களின் கொல்ஸ்ட்ரால் அளவு, தீவில் இருந்ததைவிட பத்து விழுக்காடு அதிகரித்திருந்தது! 1950-களில் நடந்த ஃப்ராமிங்காம் (Framingham) ஆராய்ச்சியில், ஆயிரம் பேர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் உண்ட உணவுக்கும், அவர்கள் ரத்தத்தில் இருந்த கொலஸ்ட்ரால் அளவுக்கும் தொடர்பே இல்லை என்பது தெளிவானது!

கொலஸ்ட்ரால் என்ற வெள்ளையான, சுவையற்ற, மணமற்ற அந்தப் பொருள்தான் மனித உடலின் ஆதார சுருதி. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு, அதற்காக விற்கப்படுகின்ற மருந்து மாத்திரைகள் எல்லாமே, இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணத்தை வேண்டுமானல் மாற்றலாமே தவிர, இறப்புத் தேதியை மாற்றாது. வேண்டுமானால், தேதியை கொஞ்சம் முற்படுத்தலாம் என்கிறார் டாக்டர் ஹெக்டே!

கொலஸ்ட்ரால் பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம், கற்பனையானதொரு அச்சத்தை நிரூபிக்கவே செய்யப்பட்டன என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. மனித குலத்துக்கான சாபம் அது என்று டாக்டர் ஹெக்டே சொல்வதைப் பற்றி தீவிரமாக நாம் யோசிக்கவேண்டி உள்ளது. அவர் மேலும் சொல்கிறார்:

‘‘தேங்காய் எண்ணெய்யில் செறிவூட்டப்பட்ட கொழுப்பு (fat) கொஞ்சம் உள்ளது. ஆனால் அது மனிதர்களுக்கு நன்மை செய்யக்கூடியது. சிலவகையான புற்றுநோய்களில் இருந்து தேங்காய் எண்ணெய் நம்மைக் காப்பாற்றும் தன்மை கொண்டது. உடலில் கேன்ஸரை உருவாக்கும் ‘ரவுடி’ உயிரணுவை மேற்கொண்டு வளராமல் தடுப்பது தேங்காய் எண்ணெய்”.

‘‘தேங்காய் எண்ணெய்யையும் தேங்காயையும் அன்றாடம் பயன்படுத்துகின்ற, உடலில் தேய்த்துக் குளிக்கின்ற கேரளப் பெண்களின் தலையில் பொடுகை நான் கண்டதில்லை.

”அதுமட்டுமல்ல. தேங்காயில் மானோலாரியேட் (monolaureate) என்ற ஒரு பொருள் உள்ளது. இந்த உலகிலேயே, மானோலாரியேட் இருக்கும் இன்னொரு இடம் தாய்ப்பால்தான். எனவே, தேங்காயும் தேங்காய் எண்ணெய்யும் மோசமானதென்று சொன்னால், தாய்ப்பாலும் மோசமானதே”! என்று சொல்லிச் சிரிக்கிறார் ஹெக்டே.

மு.ஆ. அப்பனும் தேங்காயும்

தேங்காயைப் பற்றியும் தேங்காய்ப்பாலைப் பற்றியும் டாக்டர் ஹெக்டே இவ்வளவு சொன்ன பிறகு, எனக்கு இயற்கை உணவு நிபுணர் மு.ஆ. அப்பனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தேங்காய்க்கான மரியாதையாக எண்ணி அந்த நிகழ்ச்சியை இங்கே நான் பதிவிடுகிறேன்.

அப்பன் அவர்கள் இருபது வயது இளைஞராக இருந்தபோது, அவருக்கு தொழுநோய் வந்தது. காட்சிக்கும் அனுபவத்துக்கும், இந்த உலகில் தொழுநோயைவிட மோசமான நோய் ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முழு உடலும் அழுகிப்போகும். துர்நாற்றம் வீசும். தோல் முழுக்க, செந்நிறத்தில் உணர்ச்சியற்ற பற்றுக்கள் தோன்றும். ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில், எம்.ஆர். ராதாவின் career best performance நினைவுக்கு வருகிறதா?

அப்பன் அவர்கள், ஆங்கில மருத்துவர்களின் ஆலோசனைப்படி ‘டாப்சோன்’ (Dapsone) போன்ற ஆங்கில மருந்து மாத்திரைகளை எட்டு ஆண்டுகள் எடுத்துவந்தார். அதன் விளைவாக, அவரது தொழுநோய் இன்னும் தீவிரமானது! நம்பிக்கையற்றுப்போன ஒரு நிலையில், ஒரு சித்தராக இருந்த அவரது மூத்த சகோதரர் ராமகிருஷ்ணனிடமிருந்து, எல்லா மருந்து மாத்திரைகளையும் தூக்கிப்போடச் சொல்லியும் இயற்கை உணவுக்கு மாறச் சொல்லியும் உத்தரவு வந்தது.

இயற்கை உஷ்ணமான வெய்யில் பட்டு விளைந்த, சமையல் நெருப்பு படாத, இயற்கை உணவுகள். பழங்கள், காய்கறிகள், சிறு தானிய வகைகள். முக்கியமாகத் தேங்காய். மூன்று வேளையும். அல்லது, பசிக்கும்போதெல்லாம். அரை மூடி - ஒரு மூடி என்று தேங்காயைத் துருவி அவர் மென்று சாப்பிட்டார். அதோடு, பழங்கள் இன்னபிற. ரொம்பக் கஷ்டம்தான். அடிக்கடி பசிக்கும். ஏனெனில், சமைத்த உணவுகளைப்போல் ஃபுல் மீல்ஸ் கொடுத்து வயிறை ‘பேக்’ பண்ணுவது சாத்தியமில்லை. பசித்தபோதெல்லாம் தேங்காய்த் துருவல் அல்லது பழங்கள்தான். ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் மாதிரி, மூன்றே மாதங்களில் தொழுநோய் முற்றிலுமாகக் குணமானது!

இந்த உண்மையான உலக அதிசயம், முக்கியமாகத் தேங்காயினால் நடந்துள்ளது. இந்த உலக வரலாற்றில், இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு தொழுநோயை தேங்காய்தான் குணப்படுத்தியுள்ளது என்று நான் சொன்னால் அது மிகையல்ல.

‘இயற்கை உணவின் அதிசயம், ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்’ என்று அப்பன் ஒரு நூலும் எழுதியுள்ளார் (தினமணி டாட் காமில், மருத்துவப் பகுதியில், இயற்கை உணவை அடிப்படையாகக் கொண்ட ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ என்ற தொடரை திரு. மு.ஆ. அப்பன் எழுதியுள்ளார்). சமைக்கப்படாத, இயற்கையான உணவின் உன்னதத்துக்குச் சான்றாக, வாழும் அதிசயமாக அப்பன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

முழுக்க முழுக்க சமைக்காத உணவுகளுக்கு நம்மால் மாற முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இயற்கையான உணவின் மகத்துவத்தை அவர் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நம்மால் நிச்சயம் உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக தேங்காயின், இளநீரின், வழுக்கையின், தேங்காய்ப்பாலின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். கிட்டத்தட்ட எண்பது வயதாகும் அப்பன் இன்னும் ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டு, மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ வழிவகைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் நூல்கள் மூலமாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

டாக்டர் ரவன்ஸ்கோவின் முட்டைப் பரிசோதனை

நாம் உண்ணும் உணவுப் பண்டங்களிலேயே, முட்டையில்தான் மிகமிக அதிகமான அளவு கொலஸ்ட்ரால் உள்ளது என்று கூறப்படுகிறது. மாரடைப்பு வந்தவர்கள், ஒருமுறை ஆன்ஜியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு மருத்துவர்கள் கூறும் முக்கிய அறிவுரைகளில் ஒன்று, முட்டை சாப்பிட வேண்டாம் என்பது. இல்லை, அதெல்லாம் முடியாது, சிக்கன் இல்லாமல்கூட நான் இருந்துவிடுவேன்; ஆனால், அதன் பிள்ளையான முட்டை இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று கூறுபவர்களுக்கு, டாக்டர்கள் தரும் கருணை அனுமதி, மஞ்சள் கரு வேண்டாம்; வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான்! மஞ்சளில் மிக அதிகமான அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறதாம்!

அப்படியானால், அதிகமாக முட்டை சாப்பிடுபவர்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கூடவேண்டும், அல்லவா? இதைப்பற்றி ஒரு நிச்சயமான முடிவுக்கு வர, டாக்டர் ரவன்ஸ்கோவ் தன்னை வைத்தே ஒரு பரிசோதனை நிகழ்த்தினார். ஒரு வாரத்துக்கு முட்டைகளை அதிகமாக எடுத்துக்கொண்டார். முட்டைகளைச் சாப்பிடுவதற்கு முன், தனது கொலஸ்ட்ரால் அளவு என்ன என்பதையும், ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிட்ட பிறகு கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருந்தது என்பதையும் குறித்துக்கொண்டார்.

முதல் நாள் ஒரேயொரு முட்டை சாப்பிட்டார். அப்போது அவரது கொலஸ்ட்ரால் அளவு 278 mg/dl இருந்தது. இரண்டாவது நாள் நான்கு முட்டைகள், மூன்றாவது நாள் ஆறு முட்டைகள் சாப்பிட்டார்! ஆனால், மூன்று நாட்களும் கொலஸ்ட்ரால் அளவு இம்மிகூடக் கூடவில்லை. நான்காவது நாளிலிலிருந்து எட்டாவது நாள்வரை, ஒவ்வொரு நாளும் எட்டு முட்டைகளைக் கபளீகரம் செய்தார்! முட்டைகளின் அளவு அதிகமாக அதிகமாக, உடலில் இருந்த கொலஸ்ட்ராலின் அளவு குறைந்துகொண்டே போனது! எட்டாவது நாள், அவரது ரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு 246 mg/dl என்ற அளவுக்குக் குறைந்துபோனது!

எவ்வளவுக்கெவ்வளவு கொலஸ்ட்ரால் உள்ள உணவை நாம் அதிகமாக எடுத்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது உடல் இயற்கையாகவே உருவாக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்துக்கொள்கிறது. ஏனெனில், நமது தேவையைப் பொறுத்து, நமக்கான கொலஸ்ட்ராலை நம் உடலே உருவாக்கிக்கொள்கிறது என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.

இன்னும் நிறையக் கொழுப்பு உள்ளது…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com