25. கிருமிகள் வாழ்க! - 2

கிருமிகள் எங்கிருந்து வருகின்றன? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் நமக்கு கொசு ஞாபகம் வரலாம். ஏனெனில், கிருமியும் கொசுவும் இணைபிரியா ஜோடிகளாகவே ஜோடிக்கப்பட்டுவிட்டன!

சொர்க்கலோகம், நரகலோகம், தேவலோகம் என்பதுபோல கிருமிலோகம் என்று எதுவும் உண்டோ?

– ஹீலர் உமர் ஃபாரூக்

கிருமிலோகம் எது?

ஹீலர் உமரின் கேள்வி நியாயமானதே. கிருமிகள் எங்கிருந்து வருகின்றன? இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் நமக்கு கொசு ஞாபகம் வரலாம். ஏனெனில், கிருமியும் கொசுவும் இணைபிரியா ஜோடிகளாகவே ஜோடிக்கப்பட்டுவிட்டன! கொசுக்கள்தான் கிருமிகளை உருவாக்குகின்றனவோ என்ற சந்தேகம் வருவதும் இயற்கைதான். நீங்கள் எந்திரன் ரஜினி மாதிரி ‘மஸ்கிட்டோமோடு’க்குப் போய் கொசுக்களிடம் இதுபற்றி விசாரிக்க முடிந்தாலும், உங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்காது! ஏன்? கிருமிகள் பற்றி கொசுக்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவை பாவம்!

ஒருவேளை எலி, பன்றி இவற்றில் இருந்து கிருமிகள் உருவாகின்றனவா? இந்தச் சந்தேகமும் அபத்தமானதே. கொசு, எலி, பன்றி, காற்று, தண்ணீர் இவை மூலமாகக் கிருமிகள் பரவுகின்றன என்றுதான் அறிவியல் சொல்கிறது. அவற்றிலிருந்து உருவாகின்றன என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னாலும் அது சரியல்ல என்பதுதான் சரி!

கிருமிகள் இருக்கட்டும். இந்தக் கொசுக்கள் எங்கிருந்து வந்தன? பின்பு அவை எங்கு சென்றன? யாருக்கும் தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குன்யா என்று ஒரு காய்ச்சல் வந்தது. உடனே எல்லா சந்து பொந்துகளிலும் போர்க்கால நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கப்பட்டது. இப்போது அந்தச் சிக்குன்குன்யா பற்றி சிக்கன் சாப்பிடும்போதுகூட யாரும் யோசிப்பதில்லை! சிக்குன்குன்யா எங்கே போனது? அதை உருவாக்கியதாகச் சொல்லப்பட்ட கொசுக்கள் எங்கே போயின? ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வந்து, நம்மையெல்லாம் கடித்து, சிக்குன்குன்யா வைரஸை நம் உடலுக்குள் செலுத்திவிட்டு, கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்ட, கடமையைச் செய்துவிட்ட திருப்தியில் கொசு ராஜாவின் உத்தரவுப்படி மீண்டும் திரும்பி அந்த படைவீரர்-கொசுக்களெல்லாம் தங்கள் உலகத்துக்கே போய்விட்டனவா? 

இப்பொழுது கொசுவே இல்லையா? கொசுக்களை ஒழித்துவிட்டோமா? இந்தக் கேள்விக்கான நியாயமான பதில் இல்லை என்பதுதான். அப்படியானால் என்ன அர்த்தம்? கொசு மருந்துகளால் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை, ஒழிக்கவும் முடியாது என்றுதானே அர்த்தம்? அப்படியானால், ஒரு காலகட்டத்தில் நம்மைத் தாக்கிய சிக்குன்குன்யா இப்போது ஏன் இல்லை? அதுவே இப்போது டெங்குவாக மாறிவிட்டதா? ஒரே காய்ச்சலுக்குத்தான் டைஃபாய்டு, காலரா, சிக்குன்குன்யா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என்று மாற்றி மாற்றி வெவ்வேறு பெயர்களைச் சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டுள்ளோமா?

மேலே சொன்ன காய்ச்சல்களைப்போல, காலராகூடத்தான் வந்தது. அசுத்தமான நீரின் மூலம் கிருமிகள் நம் உடலுக்குள் சென்று சிறுகுடலை பாதித்து, கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி வாட்டியதாகச் சொல்லப்பட்டது. அந்தக் காலரா கிருமிகள் எங்கே சென்றன? ஏன் இப்போது அக்கிருமிகள் இல்லை? கிருமிகள், அவற்றை நமக்குக் கொடையளிக்கும் கொசுக்கள் இவற்றுக்கெல்லாம் சொற்ப காலத்தில் விதி முடிந்துபோய்விடுமோ? அல்லது அவற்றுக்கெல்லாம் விடுமுறைக்காலமோ?

கொசுக்களையும், அவற்றின் வாய் வழியாக நம் ரத்தத்தில் கலக்கும் வைரஸ்களையும் ஒழிக்க ரொம்ப நேர்மையாகத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், அடிப்படையில் தவறு உள்ளது! அதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

என்ன தவறு?

விளம்பரத்தில் ஒரு நடிகர் வெள்ளைக் கோட்டைப் போட்டுக்கொண்டு, கழுத்தில் ஒரு ‘ஸ்டெத்’தை மாட்டிக்கொண்டால் அவர் டாக்டர் என்று நாம் நினைக்க வேண்டும். ஆனால், அவர் உண்மையில் டாக்டர் இல்லை என்று நமக்குத் தெரியும். அதேபோலத்தான், அறிவியல் என்ற பெயரில் பல கவர்ச்சிகரமான பொய்கள் அன்றாடம் நமக்குள் திணிக்கப்படுகின்றன. நடிகரை டாக்டர் என்று நாம் நம்புவதில்லை. ஆனால், கிருமிகளையும் கொசுக்களையும் பற்றிய உண்மைகளை மட்டும் புரிந்துகொள்ளாமல், அவைதான் நோய்களைப் பரப்புகின்றன என்ற கருத்தை மட்டும் கேள்விகள், சந்தேகம் ஏதுமின்றி நாம் நம்பிவிடுகிறோம். 

கிருமிகளின் வரலாறு!

அப்படியானால், எல்லாக் கிருமிகளும் நல்லவையா? அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. இந்த உலகில் கோடிக்கணக்கான கிருமிகள் உள்ளன. அவற்றில் மிகமிகச் சிறிய மைனாரிட்டிதான் நமக்கு தீங்கு செய்ய வல்லவை!

இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி உயிரினம் கிருமிதான் என்று நான் சொன்னால் நம்புவீர்களா? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி இந்தக் கிருமிகள்தான்! ஏழாம் அறிவை நோக்கி மனிதன் சென்றுகொண்டிருக்கிறான். விலங்குகளுக்கு ஐந்தறிவு. புழுக்களுக்கு இரண்டே அறிவுதான். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பே கிருமிகள் வந்துவிட்டன. 

இயற்கை சுழற்சியின் ரகசியமே கிருமிகள்தான். இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே மாற்றமடைந்துகொண்டிருக்கிறது, நாம் உள்பட. இன்றைக்கு இருப்பது போலவே இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து இருப்பீர்களா? இருக்கமாட்டீர்கள். அப்படியானால் மாற்றம் எப்போது நடக்கிறது? பத்து ஆண்டுகள் கழித்து திடீரென்று ஒரு மாற்றம் நடக்கிறதா? இல்லை. இப்பொழுது, இக்கணத்தில், ஒவ்வொரு கணமும் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நமக்கு அது தெரிவதில்லை. அவ்வளவுதான். 

ஒன்று இன்னொன்றாக மாறும் அன்றாட transformation process-ல், கிருமிகளின் பங்கு மிக முக்கியமானது. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று இறைவனைச் சொல்வார்கள். கிருமிகளுக்கும் அதைச் சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். ‘கிருமிகளின்றி அமையாது உலகு’ என்று தன் நூலின் ஒரு அத்தியாத்துக்கு தலைப்பே கொடுத்திருக்கிறார் ஹீலர் உமர்! ஆமாம். எங்கும் கிருமி உண்டு, எதிலும் கிருமி உண்டு. நீரிலும், நிலத்திலும், காற்றிலும் கிருமிகளின் ராஜ்ஜியம்தான் என்று சொன்னால் அது மிகையல்ல. ஒரு understatement-ஆக வேண்டுமானால் இது இருக்கலாம். 

“மிகப்பெரியதாக பரந்து விரிந்திருக்கும் கடலின் அடியிலுள்ள வெந்நீர் ஊற்றுகளிலும், நிலக்கரிச் சுரங்கங்களில் ஆழமாகத் தோண்டப்பட்ட கரிக்குழிகளிலும், பாறைகளிலும்கூட கிருமிகள் வாழ்ந்தபடியே இருக்கின்றன. மனிதர்கள் பயந்தோடும் எரிமலையின் லாவா குழம்புகளிலும்கூட கிருமிகள் வாழ்கின்றன” என்கிறார் ஹீலர் உமர் (பக்கம் 14).

கிருமியின் சேவைகள்

கிருமிகள் செய்யும் வேலைகள் எண்ணில் அடங்காதவை. அநேகம். முக்கியமாக, மேலே சொன்ன மாதிரி, இயற்கை மாற்றங்களுக்கு கிருமிகள் உதவுகின்றன. இந்த உலகில் எல்லாமே ஒன்று இன்னொன்றாக மாறிக்கொண்டே உள்ளது. நிரந்தரமானது மாற்றம் ஒன்றுதான். அதில் மாற்றமே இல்லை என்று சொல்வார்கள். விந்து உயிராகிறது, உயிர் உடலாகிறது, பின் உடலிலிருந்து மீண்டும் விந்து பிறக்கிறது. நீர் ஆவியாகிறது, ஆவி மீண்டும் நீராகிறது. நெருப்பு கரியாகிறது, கரி மீண்டும் நெருப்பாகும். பஞ்சபூதங்களால் ஆன நம் உடல் இறந்த பிறகு மீண்டும் மண்ணாகவோ, சாம்பலாகவோ மாறிவிடுகிறது. காலையில் எட்டு மணிக்கு நான் சாப்பிட்ட மூன்று இட்லிகள் மூன்று மணி நேரம் கழித்து நாகூர் ரூமியாகிவிடுகிறது! இப்படியாக வேதியியல், உயிரியல் சுழற்சிகள் நடந்துகொண்டே உள்ளன. அந்தச் சுழற்சி ஒழுங்காக நடப்பதற்குப் பிரதான காரணம் கிருமிகள்தான்!

கிருமிகளின் இந்தச் சேவையை மரங்களோடு ஒப்பிடுகிறார் ஹீலர் உமர். அது உண்மைதான். மரங்கள் எப்படி நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை கொடுத்து, நமக்குத் தேவையில்லாத கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொள்கின்றனவோ அதேபோல, கிருமிகளும் இவ்வுலகில் நம் முட்டாள்தனமான அல்லது அறிவார்ந்த செயல்பாடுகளால் உருவாகும் கழிவுப் பொருள்களையெல்லாம் உண்டு, மறுசுழற்சி செய்து, அவற்றில் உள்ள நச்சுக்களை அகற்றி ‘டிடாக்ஸிஃபிகேஷன்’ செய்கின்றன! 

கந்தக சல்ஃபைடு என்ற வேதியியல் விஷப்பொருளை கந்தக ஆக்ஸைடாக மாற்றும் வேலையைக் கிருமிகள்தான் செய்கின்றன. அக்கிருமிகள் கந்தகத்தை உணவாக எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. உலோகங்களை உண்ணும் கிருமிகளும் உண்டு. தங்கம், வெள்ளி போன்றவற்றை தரம் குறைந்த உலோகக் கலப்பிலிருந்து பிரித்தெடுப்பதற்கும் கிருமிகள் பயன்படுகின்றன! குறிப்பாக, ‘ஆல்கே’ (Algae) என்றவகைக் கிருமிகள், இவ்வகை உலோகப் பிரிப்புக்குப் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. 

நிலத்தடியில், பாறைப் பிளவுகளில் கசியும் நீரில் செம்பு, யுரேனியம் போன்ற உலோகக் கலப்பு இருக்கும். அவற்றின் தாதுக்களைப் பிரித்தெடுக்க கிருமிகள் பயன்படுத்தப்படுகின்றன. மெக்ஸிகோ நாட்டின் ஆறுகளில் கலந்துள்ள தங்கத்தைப் பிரித்தெடுக்க, உலோகம் தின்னும் கிருமி வகையான க்ளோரல்லா வல்காரிஸ் என்ற கிருமி பயன்படுத்தப்படுகிறது (பக்கம் 14). 

அதுமட்டுமல்ல. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரண்டு பிரச்னைகளை மேற்கத்திய உலகம் சந்தித்தது. ஒன்று, பெருகிய மக்கள் தொகை; இரண்டு, வறுமை. அந்த இரண்டு பிரச்னைகளையும் தீர்க்க உதவிய உணவுப்பொருள் க்ளோரல்லா வல்காரிஸ் என்றும் சி வல்காரிஸ் என்றும் சொல்லப்படும் அந்தக் கிருமிதான்! அந்தச் சூழ்நிலையில் அது ஒன்றுதான் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய, ப்ரோட்டீன், விட்டமின்களெல்லாம் அடங்கிய மனித உணவாகப் பயன்பட்டுள்ளது! 

சோறு கிடைக்காதவர்களெல்லாம் சி வல்காரிஸ் கிருமியை உண்டு உயிர் பிழைத்திருக்கிறார்கள்! கிருமியையா? உணவாகவா? என்றெல்லாம் ஆச்சரியப்படவேண்டியதில்லை. கிருமி என்றாலே அது நோயை உண்டாக்கும் சமாசாரமாகும் என்ற தவறான கருத்து நம் மூளையில் பதிந்துபோனதால் வரும் ஆச்சரியங்கள் அவை. அமெரிக்காவில் உள்ள கார்னகி இன்ஸ்டிடியூஷன், ராக்ஃபெல்லர் ஃபௌண்டேஷன் போன்றவை க்ளோரல்லா வல்காரிஸ் கிருமியின் பயன்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்துள்ளன! அதுமட்டுமா? அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஆரோக்கியத்துக்கான துணை உணவாகவும் அது பயன்படுத்தப்பட்டது. சி வல்காரிஸ் மாத்திரைகள் கிடைத்தன! 

விளைநிலங்களில் தொடர்ந்து பயிர் செய்யப்படும்போது மண் சோர்வடைந்துவிடும். அது சமயம், விவசாயிகள் பயறு வகைச் செடிகளை ஒருமுறை விளைவிப்பார்கள். அதனால் மண் வளம் புதுப்பிக்கப்படும். இக்காலகட்டத்தில், தாவர வேர்களில் உள்ள நைட்ரஜனை உரமாக மாற்றி மண்வளத்தைப் பெருக்க உதவுவது கிருமிகளே!

‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இப்போதெல்லாம் சைவ ஓட்டல்களிலும் மஷ்ரூம் 65, வெஜ் ஃப்ரைடு ரைஸ் என்றெல்லாம் வைக்கிறார்கள். ஏன்? சிக்கன் 65, சிக்கன்/மட்டன் ஃப்ரைடு ரைஸ் போன்றவற்றுக்கு மாற்றாகத்தான்! சைவ நாக்குகளுக்கு ஒரு அசைவை உணவைச் சாப்பிட்ட மாதிரி ஒரு ‘ஃபீல்’ கொடுக்க! அப்படிப்பட்ட ‘சோயா மீல் மேக்கர்’கள் உற்பத்திக்கும் பயன்படுவது கிருமிகள்தான்!

நாம் தூக்கி எறியும் ப்ளாஸ்டிக் குப்பைகளையெல்லாம் மண்ணால் மறுசுழற்சி செய்ய முடியாதென்று கூறுகிறோம். அதனால்தான் ப்ளாஸ்டிக் வேண்டாம் என்ற பிரசாரமும் நடக்கிறது. ஆனால், அவற்றையும் ‘ரீசைக்கிள்’ செய்யும் திறன் கிருமிகளுக்கு உண்டு. 

இவ்வளவு ஏன்? இட்லி மாவு புளிக்க வேண்டுமா? பால் தயிராக மாற வேண்டுமா? அப்படி நடப்பதை ஆங்கிலத்தில் ‘ஃபெர்மென்டேஷன்’ (fermentation) என்று சொல்வார்கள். அந்தப் புளித்தல் நடக்காமல் குஷ்பு இட்லிகள் கிடைக்காது! இதெல்லாம் நடப்பதும் கிருமிகளால்தான்!

இப்படி உலகெங்கிலும், கண்ணுக்குத் தெரியாத இடங்களிலும், மனிதர்களுக்காகக் கிருமிகள் உழைத்துக்கொண்டுள்ளன! மனிதர்களை உயிர்வாழ வைத்துக்கொண்டுள்ளன! ஆபத்பாந்தவா, அநாதரட்சகா என்று கிருமிகளைத்தான் அழைக்க வேண்டும். ஆனால், மனிதர்களைக் கிருமிகள் கொல்வதாக அல்லவா நாம் நினைத்துக்கொண்டுள்ளோம்! நினைப்புக்கும் நடப்புக்கும் இடையில்தான் எத்தனை இடைவெளி!

இப்பூவுலகில் கிட்டத்தட்ட 85 லட்சம் வகைக் கிருமிகள் (85 லட்சம் கிருமிகள் அல்ல) இருப்பதாகவும், அவற்றில் மனிதர்களுக்குத் தீங்கிழைப்பவை என்று பார்த்தால் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவு என்றும் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். இந்த விஷயத்தில் விஞ்ஞானிகளை நம்பலாம்!

அப்படியானால், இக்கிருமிகள் நம் உடலில் என்னதான் செய்கின்றன? பார்க்கத்தானே போகிறோம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com