37. பெற்றோரின் தன்மைகள்

பெற்றோருக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இருக்கும் குணங்களின் காரணங்களைக் குறித்துச்
37. பெற்றோரின் தன்மைகள்



பெற்றோருக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இருக்கும் குணங்களின் காரணங்களைக் குறித்துச் சென்ற வாரம் சிந்தித்தோம். அவர்களுக்குள் உருவாகும் கருத்து மோதலை எப்படிச் சமாளிப்பது எனும் கேள்வியோடு இந்த வாரம் தொடர்வதாகச் சென்ற வாரக் கட்டுரை நிறைவு ஆனது. இந்த கருத்து மோதலைச் சமாளிப்பதில் பெற்றோர்கள் தரப்பில் அவர்களின் பிள்ளை வளர்ப்புத் தன்மைகளைக் குறித்துப் புரிந்துகொள்வது முதல் படி எனக் கொள்ள வேண்டும். 

பிள்ளை வளர்ப்பில் பல நூற்றாண்டுகள் உளவியல் வழியாக அந்த செயல்கள் அணுகப்படாமல், தலைமுறை இடைவெளி உருவாகியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களின் நீட்சியாக தங்களின் வாழ்க்கைத் தொடர்ச்சியாக மட்டுமே கவனிக்கின்றார்கள். அவர்கள் பிள்ளைகளின் கல்வி, உடல் நலம், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏனைய திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றில் காட்டும் அக்கறை போல பிள்ளைகளின் மன நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்பது தான் நிதர்சனம். இந்த காரணத்தினால் தான் பெற்றோர் பிள்ளைகள் கருத்து மோதல் எனும் அம்சம் தினசரி இல்லங்களில் நிகழ்கிறது. 

அதிகாரமும் கட்டுப்பாடும் கொண்டு மட்டுமே சில பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்பு முறையினைக் கையாள்வதைக் கவனிக்கலாம். இந்த வகை பெற்றோர்கள் அப்படியான அணுகுமுறையினை மட்டுமே தங்கள் பெற்றோர்களிடமிருந்து சீதனமாகப் பெற்றவர்கள். அதே வழிமுறையினை தங்கள் பிள்ளைகள் மீது செலுத்துவது மட்டுமே இவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி. இவர்களின் இந்த அணுகுமுறையால் பிள்ளைகளின் மனநலனில் என்ன என்ன பாதிப்புகள் உருவாகின்றது என்பதை அவர்கள் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை.

இந்த வகை பெற்றோர்களிடம் அன்பும், கனிவும், அரவணைப்பும் மிகக் குறைந்த அளவில் காணப்படும். பிள்ளைகளிடம் என்று மட்டுமில்லை, இல்லத்தில் ஏனையோரிடமும் மிகவும் குறைந்த அளவில் உரையாடும் பழக்கம் இருக்கும். எந்த சூழலிலும் தங்களைத் தளர்த்திக் கொண்டு, இறங்கி வந்து சமரசம் செய்து கொண்டு இயங்க மறுக்கும் பிடிவாதம் இருக்கும். தங்கள் கருத்தைச் செயல்படுத்த கனிவு குறைந்த நடவடிக்கைகளை, உதாரணமாக கடும் சொல்லில் ஏசுவது, அடிக்கடி தண்டனைகள் தருவது, தான் நினைப்பது நடக்காவிட்டால் என்ன ஆகும் என பின் விளைவுகளைச் சொல்லி அச்சமூட்டுவது போன்றவை இவர்களின் வழி முறைகள். இத்துடன் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகள் மீது கண்காணிப்பு எனும் பெயரில் ஆக்கிரமிப்பு செய்யும் பழக்கமும் இவர்களிடம் இருக்கும்.

இந்த முறையால் அந்தப் பிள்ளைகளின் மன அழுத்தம் அதிகரிக்கும். எப்போதும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக பந்தயத்தில் ஓடும் குதிரை போல இயங்கும் மனநிலை உருவாகும். தோல்வி பயம் அவர்களிடம் மிகுதியாக இருக்கும். இதன் காரணமாக சமூகத்தில் பிறருடன் பழக வேண்டும் எனும் மிக முக்கியமான திறன் முற்றிலும் பாதிக்கப்படும். இந்த பாதிப்பை உருவாக்குவது பெற்றோரின் அளவுக்கு அதிகமான கண்டிப்பும் அதிகாரமும் கொண்ட வளர்ப்பு முறை மட்டுமே சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடம் கொடுப்பதை மகிழ்ச்சியுடன் செய்வார்கள். கேட்டதை வாங்கித் தருதல், பிள்ளைகளின் கல்வி, உடல் நலன் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதும், அவர்களின் எந்த நடவடிக்கைகள் மீதும் கண்டிப்பும், கவனமும் கொஞ்சமும் இல்லாத வகையில் பிள்ளை வளர்ப்பு முறைகள் கொண்ட பெற்றோர்கள் தொடக்க காலத்தில் பிள்ளைகளை மிகச் சுதந்திரம் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள். 

சிறு வயதில் கொடுக்கப்படும் சுதந்திரம் பிள்ளைகள் வளர்ந்த பின்பு அவர்களுக்கு பயன்படும் என்பது இவர்களது கண்ணோட்டம். இது ஓரளவே உண்மை., மாறாக இந்த முறையில் வளரும் பிள்ளைகள் வயது ஏற ஏற தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்குள் அந்த பிரச்னை பல மடங்கு பெருகி பூதாகரமாக நிற்பதைக் கவனிப்பார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பெற்றோரின் துணை, பங்களிப்பு இதனை எதிர்பார்ப்பதா இல்லையா என்பதில் குழப்பம் உருவாகி பாதிப்பு அதிகம் நிகழ்ந்திருக்கும். உதாரணமாக எந்தப் பாடம் தேர்வு செய்வது எந்த கல்வி மேற்படிப்பு படிப்பது, எந்த கல்லூரியில் படிப்பது போன்றவை திருமணத்திற்கு தனக்கான துணையினைத் தேர்வு செய்தல் போன்றவையும். இதிலெல்லாம் பிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டு அமைத்துக் கொண்ட எண்ணங்களைக் கொண்டு முடிவு எடுக்கும் போது அனுபவக் குறைவு காரணமாகத்‌ தவறுகள் செய்வது இயல்பு. பெற்றோர்களின் வழிகாட்டுதல் வழியாகக் கிடைக்க வேண்டிய சில அனுபவப் பாடங்களை, அவர்கள் பெறுவதில்லை, காரணம் அவர்களுக்கு கிடைத்த மிகுதியான சுதந்திரம். இதனைப் பெற்றோர்கள் உணர வேண்டும்

பிள்ளை வளர்ப்பில் எந்த அக்கறையும் காட்டாத பெற்றோர்களும் உண்டு. தங்கள் பிள்ளைகள் என்ன படிக்கின்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அவர்கள் மேற்கல்வி என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து அவர்களிடம் எந்த கண்ணோட்டமும் இருக்காது. அதே போல உடல் நலன் தொடர்பாக எந்த வரன்முறைகளும் இந்த வகை பெற்றோர்களிடம் இருக்காது. இந்த வகைப் பிள்ளை வளர்ப்பில் வளரும் பிள்ளைகள் கண்டிப்பு இல்லாத வகையில் வளரத் தொடங்குகின்றார்கள், பதின்பருவம் வரும் போது மிக எளிமையாகத் தீய பழக்கங்களைக் கை கொண்டு, உடல் நலன் மன நலன் இழக்கின்றார்கள். இதனால் பாதிப்புகள் பெரிதாகும் தருணத்தில் தான் அந்த பெற்றோர்களுக்கு அதன் தீவிரம் புரிந்து தீயணைக்கும் முனைப்புடன் தீர்வு காண முயற்சி செய்கின்றார்கள் . ஆனால் அந்த முயற்சி பெரும்பாலும் முழு வெற்றி தருவதில்லை.

அழகான பிள்ளை வளர்ப்பு என்பது, இது சரி இது தவறு என்பது போல இரண்டே நிலை கொண்ட binary system இல்லை. தாய், தந்தை எனும் இரண்டு பெரும் ஜீவன்களின் உழைப்பு, தியாகம், அக்கறை , பாசம் இதோடு பிள்ளைகளின் அன்பு, அறியாமை, உற்சாகம் எதிர்பார்ப்பு எனும் ஊற்று போன்று பொங்கி வரும் உணர்வுகளைக் கலந்து நிகழும் ரசவாதம் இதனை அமுதமாக மாற்றிக் கொள்ளும் பக்குவம் பெற்றோர்களின் பொறுப்பு. இந்த பொறுப்பை நிறைவேற்றக் கல்வித் தகுதி, படிப்பு, இதெல்லாம் தேவையில்லை. இதற்குத் தேவை ஒன்றே ஒன்று தான். 

எந்த சமையல் குறிப்பு புத்தகத்தை எடுத்து எந்த பதார்த்தத்தின் செய்முறைக் குறிப்புகளைக் கவனித்தாலும் அந்தப் பதார்த்தத்தைத் தயாரிக்கத் தேவையான பொருட்களின் பெயர் எழுதி அந்த பொருள் எவ்வளவு தேவை என்பதையும் எழுதியிருப்பார்கள். உப்புக்கு மட்டும் தேவையான அளவு என்று எழுதியிருப்பார்கள்.

பெற்றோர்களின் பொறுப்பும் அப்படியானது தான். அவர்களின் பொறுப்புகளைக் கையாள்வது ரசவாதம் எனில் அதன் சுவைக்கான அனைத்தும் உப்பு போன்றதே. அதாவது தேவையான அளவு 
பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, பிள்ளைகளின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுதல், கண்டிப்பு , பிள்ளைகளிடம் எதில் என்ன எதிர்பார்ப்பு போன்ற பிள்ளை வளர்ப்பு அம்சங்களில் எதில் என்ன தேவையான அளவு என்பதைப் புரிந்து கொண்டால் ரசவாதம் நன்கு அமைந்து, பிள்ளைகளிடம் சுய கட்டுப்பாடு, முறையான முயற்சி, திறமைகளைத் தானே முன்வந்து வளர்க்கும் ஆர்வம், கொடுத்த வேலையை அதிக கண்காணிப்பு இன்றி நிறைவேற்றும் ஆற்றல், நல்ல மனப்பக்குவம், நல்லொழுக்கம், தலைமைப் பண்புகள், பண்பு நெறி எனும் சீரிய அம்சங்கள் கூடி, தகுதியான நல்ல பிள்ளையாக , கவலை கொள்ள வேண்டிய அம்சங்கள் எதுவும் கொண்டிராத பிள்ளைகளாக அமைவார்கள். 

இந்தப் பொருளில் நாம் சிந்திக்க இன்னமும் ஏராளம் உண்டு.. வரும் வாரம் தொடருவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com