சுடச்சுட

  
  Student

   

  மாணவர்களின் கற்கும் விதத்தில் இருக்கும் மூன்று வழிகளை, சென்ற மூன்று வாரங்களாகப் பார்த்தோம்.

  இந்த மூன்று வகைகளில், அவர்கள் எந்த வகையினர் என்பதை அவர்களும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் கவனித்தோம். அவர்களின் கற்றுக்கொள்ளும் விதத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே, கற்றுக்கொள்வதைச் சீரமைத்து செம்மையாக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு மேலே செல்லுவோம்.

  நூற்றுக்கு நூறு என்பது நமது இலக்கு. அதனை அடைய வேண்டிய வழியில் ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு கட்டமாக நாம் கவனித்துக்கொண்டு வருகிறோம். சிரமமின்றி பாடங்களைப் படிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதற்காகத்தான், கற்றுக்கொள்ளும் விதங்களைக் குறித்து விரிவாகப் பார்த்தோம்.

  இனி, கற்றுக்கொள்ளும்போது சந்திக்கும் சவால்களைக் கவனிப்போம். சவால்கள் என்றவுடன் தயங்க வேண்டாம், கலங்க வேண்டாம்.

  சவால் என்னவெனத் தெரிந்துவிட்டால் போதும். அது எப்படி ஏன் எதற்கு என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து, அதற்கு தீர்வு கண்டுவிடலாம்.

  முதல் சவால்

  நான் நன்றாகத்தான் படிக்கின்றேன். ஆனால், தேர்வில் எனக்கு சரியான மதிப்பெண்கள் வருவதில்லை. நான் எதிர்பார்த்திருந்த grade கிடைக்கவில்லை.

  இந்த சவாலைச் சந்திக்கும் மாணவர்கள் பலர். இது பொதுவானதொரு சவால். இதன் காரணம் ஒன்றே ஒன்றுதான். இப்படியான மாணவர்கள் நன்றாகப் படிப்பவர்கள்தான். அவர்களுக்குத் தாங்கள் படிப்பதும் புரிந்தும் இருக்கும். ஆனால், தேர்வுவரை அவர்கள் தாங்கள் படித்ததை சுயமாகப் பரிசோதனை செய்துகொள்வதில்லை. பரிசோதித்து உறுதிசெய்துகொள்ளாத பாடம், நன்கு பரிச்சயமான பாடமாக இருந்தாலும்ர அது தேர்வு நேரத்தில் பயன்தராமல் போவது இதன் காரணமாகத்தான்.

  இதை, Familiarity bias என உளவியல் நிபுணர்கள் சொல்லுவார்கள். ஒரு பாடத்தை அதிகம் முறை தானே முன்வந்து வாசித்துப் பயிற்சி எடுப்பதும், அதே பாடத்தை கேள்விகளால், பரிசோதனைகள் மூலம் பரிட்சித்துப் பார்ப்பதும் இரண்டு வேறு கோணங்கள்.

  பரிட்சை என்பதும் தேர்வு என்பதும், நாம் என்ன படித்திருக்கிறோம் என்பதன் ஆழத்தை, அதன் தன்மையினை ஆராய்ந்து சொல்வதற்காக நடத்தப்படுகிறது. இதனால்தான், வகுப்புகளில் வருடத் தேர்வுக்கு முன்பாக காலாண்டு தேர்வும், அரையாண்டுத் தேர்வும், ஒவ்வொரு மாதத்திலும் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இப்படிப் பிரித்துக்கொடுப்பதன் நோக்கம், மொத்த பாடத்தின் சுமையைப் பிரிப்பது மட்டும் அல்ல என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  நன்கு வாசித்த பாடம், நன்கு பயிற்சி எடுத்த பாடம் என்றாலும், தேர்வுக்கு முன், நாம் கற்றுக்கொண்டதை சுயமாகப் பரிட்சித்துப் பார்ப்பது, மிக மிக அவசியம்.

  குறிப்பாக, நன்கு படிக்கும் மாணவர்கள் தேர்வில் குறைவாக மதிப்பெண் வாங்கும் சவாலை எதிர்கொள்ளும்போது, இந்த சுய பரிசோதனை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  இப்படிப்பட்ட மாணவர்கள், சில தவறான நம்பிக்கைகளையும் கொண்டிருப்பார்கள்.

  தவறான நம்பிக்கை 1

  வேகமாகப் படிப்பது முக்கியம் என்பது இவர்களது நம்பிக்கை. இந்த தவறான நம்பிக்கை காரணமாக, இவர்கள் பாடத்தை கருத்து ஊன்றி வாசித்திருக்கமாட்டார்கள். பாடத்தின் நோக்கம், பயன், முக்கியக் கருத்துகள் குறித்து இவர்களுக்கு ஆழமான புரிதல் உருவாகாது. ஆனால் பாடத்தைக் குறித்த மேம்போக்கான தகவல், நுனிப்புல் அளவுக்கான விவரங்களை வைத்து சமாளிப்பார்கள்.

  தவறான நம்பிக்கை 2

  அறிவு என்பது பாடத்தில் இருக்கும் பலதரபட்ட தனித் தனி விவரங்கள் மட்டுமே என்பது இவர்களது தவறான நம்பிக்கை. இதன் காரணமாக, பாடத்தின் அடிப்படைத் தன்மைகளை அடித்தளமாகக் கொண்டு, அதே சமயம் அந்த தன்மையைப் பயன்படுத்திக் கேட்கப்படும் சிக்கலான கேள்விளை இவர்களால் எதிர்கொள்ள முடியாது.

  தவறான நம்பிக்கை 3

  பாடம் என்பது பல விவரங்களை உள்ளடக்கிய கோட்பாடு. ஆகவே, ஒவ்வொரு அம்சமும் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கமாட்டார்கள். இதனால், சில பாடங்கள் சிலருக்கு மட்டுமே சரியாகப் படிக்க வரும். அவர்கள் மட்டுமே மதிப்பெண் வாங்குவார்கள். நாம் சுமாராக எழுதினால் போதும் என்பது இவர்களின் தவறான நம்பிக்கை.

  தவறான நம்பிக்கை 4

  பாடத்தைப் பயிலும்போது கவனச் சிதறல்களுக்கு இடம் தரக்கூடாது என்பது இவர்களுக்கு புரிந்திருக்காது.

  இவர்கள் படிப்பார்கள். ஆனால் படிப்புக்கிடையே, கைபேசி பயன்படுத்துவது, கொஞ்சம் டிவி பார்ப்பது, கொஞ்சம் பிறருடன் அரட்டை அடிப்பது இதுபோன்ற கவனச் சிதறல்களுக்கு அதிக இடம் தருவார்கள். இதனால் இவர்களுக்கு பாடம் பரிச்சயமாக இருக்கும். ஆனால், தேவையான அளவுக்கு அதிலே பரிச்சயம் இருக்காது. சிக்கலாக கேள்விகளுக்கு விடை அளிக்க இயலாது.

  இரண்டாவது சவால்

  நேரத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொள்ளாத தன்மை. பள்ளி மாணவர்களாக இருக்கலாம், கல்லூரி மாணவர்களாக இருக்கலாம், சம்பளத்துக்கு வேலை செய்பவராக இருக்கலாம், அல்லது சொந்தமாக தொழில் செய்பவராக இருக்கலாம். யாராக இருந்தாலும், நேரத்தை சரியாக நிர்வகிக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். நூற்றுக்கு நூறும் வெற்றிதான்!

  மாணவர்கள், ஆண்டுத் தொடக்கத்தில் பாடத் திட்டம் கைக்கு கிடைத்தவுடன், ஒவ்வொரு பாடத்துக்கான வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வு அட்டவணைகள் தெரிந்தவுடன், மிக விவரமான கால அட்டவணை தயார் செய்து, அதை மிகக் கவனமாகப் பின்பற்ற வேண்டும். நேரத்தை சரியாக நிர்வாகம் செய்யாத மாணவர்கள், காலப்போக்கில் பெரும் சவால்களைச் சந்திப்பார்கள்.

  மாணவர்கள் தங்களுக்கான அட்டவணை தயாரிப்பது எப்படி என்பதை விரிவாக பின்னர் கவனிக்க இருக்கிறோம்.

  மூன்றாவது சவால்

  எல்லாப் பாடங்களையும் ஒரே விதத்தில் அணுகுவது. மொழிப் பாடங்களுக்கு ஒருவிதமாகவும், அறிவியல் பாடங்களுக்கு ஒருவிதமாகவும், கணிதப் பாடத்துக்கு வேறுவிதமாகவும், சமூக அறிவியல் பாடத்துக்கு இன்னுமொரு விதமாகவும் படிக்கும் திட்டம் இருக்க வேண்டும் என்பது புரியாமல் படிப்பது.

  பெரும்பாலும், பாடங்களை மனப்பாடம் செய்வது மட்டுமே சிறந்த வழி என நினைப்பது.

  நான்காவது சவால்

  போதுமான ஓய்வும், கேளிக்கையும், பொழுதுபோக்கும் அவசியம் என்பதைத் தெரிந்துகொள்ளாமால், படிப்பது ஒன்று மட்டும்தான் வாழ்வின் நோக்கம் என்பதுபோல, படித்துக்கொண்டே இருப்பது. இதனால் மூளை அயற்சி அடைந்து, சரியாகப் படித்ததும் நினைவில் நில்லாமல் போவது.

  இந்த வகை சவாலில் இன்னுமொரு அம்சம், ஓய்வையும் கேளிக்கையையும் பொழுதுபோக்கையும் தவறாகப் புரிந்துகொண்டு தகாத நடவடிக்கைகளில் ஈடுபட முனைவது.

  ஐந்தாவது சவால்

  தன்னைத்தானே சரியாகக் கவனித்துக்கொள்ளும் தன்மை இல்லாமல் இருப்பது.

  தனக்கான பாடங்களை தானே முன்வந்து திட்டமிட்டுப் படிப்பது ஊக்கமாக அமையும் என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள். ஆனால் அதே சமயம், பாடம் தொடர்பான அறிவுரைகளைப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அடிக்கடி வழங்குவதையும் விரும்பாதவர்கள். இந்த முரண்பாடு மிகப்பெரிய சவால். இதனை இலக்கு இல்லாத தன்மை எனச் சொல்லலாம். பாடங்களைத் திட்டமிட்டு அட்டவணையிட்டுப் படிக்கத் தொடங்கினால், இந்தச் சவாலை எளிதில் எதிர்கொள்ளலாம்.

  சவால்களை விரிவாகப் பார்த்தோம். இதனை எப்படி திட்டமிட்டு எதிர்கொள்வது என்பதுதான், நூற்றுக்கு நூறு வாங்குவதன் அடுத்தபடி.

  அடுத்த அத்தியாயம் சவாலே சமாளி!

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai