4. மொளகூட்டல் என்றால் என்ன?

நான் தனிக்குடித்தனம் வந்து குழந்தையும் பிறந்த பிறகு, ஒரு ஓணத்தன்று அடைப் பிரதமன் செய்து எடுத்துக் கொண்டு போய் என்னை கிண்டலும் கேலியும் செய்த மாமியாரிடம் கொடுத்தேன்.
4. மொளகூட்டல் என்றால் என்ன?

நான் தனிக்குடித்தனம் வந்து குழந்தையும் பிறந்த பிறகு, ஒரு ஓணத்தன்று அடைப் பிரதமன் செய்து எடுத்துக் கொண்டு போய் என்னை கிண்டலும் கேலியும் செய்த மாமியாரிடம் கொடுத்தேன். ஓ நன்னா உண்டாக்கி இருக்காய்ட்டியா? என்று மனசாரப் பாராட்டினார். என் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். ஆத்தா நா பாஸாய்ட்டேன் என்று மனசு கூவியது. என் கணவர் சொல்லிக் கொடுத்தபடி அடைப் பிரதமன் எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.

அடைப் பிரதமனுக்குத் தேவையான பொருட்கள்

200 கிராம் பாலடை (கடைகளில் ரெடிமேட் பாலடைகள் கிடைக்கும்) பாலக்காட்டில் கல்யாணம் அல்லது இதர விருந்துகளின் போது பாலடைகளை பாயசம் செய்வதற்கு முன்பாக ஃபிரஷ் ஆகத் தயாரித்துக் கொள்வார்கள்) சிறிய சைஸ் பாலாடைகளாக இருந்தால் நல்லது. 

வெல்லம் ¾ kg.

இரண்டு தேங்காய்கள். (இவற்றைத் துருவி அரைத்து முதல் பால் தனியே இரண்டாம் பால் தனியே எடுத்துக் கொள்ள வேண்டும். (அல்லது கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் தேங்காய்ப் பாலும் அவசரத்திற்கு உபயோகிக்கலாம்).

ஏலப்பொடி. சிறிதளவு.

நெய் இரண்டு ஸ்பூன்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நிறையவே வெந்நீர் வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு  கழுவிய பாலடையை அதில் போட்டு நன்கு மூடி வைத்து விட வேண்டும். முக்கால் மணி நேரம் அது அப்படியே இருக்கட்டும். முக்கால் மணி கழித்து திறந்து பார்த்தால் கொதி நீரிலேயே அடை நன்கு வெந்திருக்கும். இதனை ஒரு பெரிய சல்லடையில் வடிகட்டி நல்ல தண்ணீரில் இரண்டு முறை நன்கு அலம்பி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

வெல்லத்தைப் பொடி செய்து இரண்டு கிளாஸ் நீரில் கரைத்து வடிகட்டி ஒரு வாணலியில் அல்லது வெண்கல உருளியில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அது பாகு பதத்திற்கு வர வேண்டும். இப்போது பாலடையை வெல்லப்பாகில் சேர்க்க வேண்டும். நன்கு கொதி வந்து வெல்லப்பாகில் பாலடை மிதந்து வரும் போது, முதலில் இரண்டாம் பால் விட்டு ஏலப்பொடி சேர்க்க வேண்டும் அது நன்கு கொதித்து குறுகும் போது முதல் பாலை ஊற்றிக் நன்கு கிளறி விட்டபின் அடுப்பை உடனே அணைத்து விட வேண்டும். முதல் பால் ஊற்றிய பிறகு அதிகம் கொதிக்க விடக்கூடாது. தேவைப்படுபவர்கள் வாசனைக்காக, வெல்லம் கொதிக்கும் போதே அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் சக்கவரட்டியும் கூட சேர்த்து கிளறி, பாலடைகளுடன் கொதிக்க விட்ட பிறகு தேங்காய்ப் பால் சேர்க்கலாம். சக்கை வாசனையும் இதில் இணைந்து கொள்ளும். பாயசம் சாப்பிடும் போது பாலடைகள் மெத்து மெத்தென்று பல்லில் அரைபடுவது ஒரு தனி சுவையாக இருக்கும்.

***

பாலக்காட்டு தமிழ் கேட்பதற்கு இனிமையானது. அவர்கள் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் சில வார்த்தைகளுக்கு தமிழில் பொருளும் அவ்வப்போது கொடுக்கிறேன். ஓஓ என்கிற சப்தத்தை அவர்கள் வெவ்வேறு தொனியில் சொன்னால், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அர்த்தம். அச்சச்சோ என்ற தொனியில் சில நேரம் இருக்கும். சரி என்ற அர்த்தத்திலும் சில நேரம் சொல்லப்படும். அப்டியா என்கிற கேள்வியோடும் சொல்லப்படும். அது அந்தந்தச் சூழலைப் பொறுத்தது.  ஏஏஏய்ய்ய் என்று ராகத்தோடு இழுத்துச் சொன்னால் இல்லை என்று மறுப்பது போன்றது. இன்னும் சில வார்த்தைகளும் அதன் அர்த்தமும் கீழே. இதை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாய் சொல்கிறேன்.

எத்தரை – எத்தனை

எத்ர பிராவஷ்யம் – எத்தனை தடவை

களி – விளையாட்டு

பனி – ஜுரம்

விசப்பு – பசி

வெசர்ப்பு – வியர்வை

மச்சு – மாடி

மடியன், மடிச்சி – சோம்பேறி

மனசிலாச்சோ – புரிஞ்சுதா?

அசலாம் – அடுத்தவீடு

மத்தன் – மஞ்சள் பூசணி

எளவன் – வெள்ளைப் பூசணி

வழுதனங்கா = கத்திரிக்காய்

வெள்ளம் – தண்ணீர்

சாய – தேநீர்

பாலக்காட்டு சமையல் வகைகளில் குழம்பை கூட்டான் என்பார்கள். கறிவகைகளை மெழுக்குபெரட்டி, பொடுத்துவல், தோரன் என்பார்கள். பாலக்காட்டு சமையலில் பலரும் அதிகம் செய்வது மொளகூட்டல். என் மாமியார் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் வாரத்தில் மூன்று நாட்கள் மொளகூட்டல்தான். என் மாமியார் பல்வேறு அளவுகளில் கச்சட்டி வைத்திருப்பார். பத்திருபது பேருக்கு சாம்பார் வைக்கும் அளவுக்கு பெரிய சைஸ் கச்சட்டியிலிருந்து, சிறிதளவு பச்சடி செய்யும்படி சிறிய கச்சட்டி வரை வைத்திருப்பார். கச்சட்டி சமையலுக்கென்று தனியொரு மணம் உண்டு. சரி இந்த மொளகூட்டல் என்றால் என்ன? இதை தனித்தனி காயிலும் செய்யலாம். எல்லா காய்களும் சேர்த்தும் செய்யலாம். கீரைவகைகளில் கூட செய்யலாம். கீரையில் செய்யும் போது கீரை மொளகூட்டல் என்போம்.  இனி மொளகூட்டல் செய்யும் முறையைப் பார்ப்போம். இந்தப் பெயரில்தான் மிளகு இருக்குமே தவிர சமையலில் மிளகு இருக்காது.

6) மொளகூட்டல்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – ஒரு சிறிய கப் (150 gm)

தேங்காய் – அரைமூடி துருவிக் கொள்ளவும்

தேவையான காய்கறிகள்:

எளவன் (வெள்ளைப் பூசணி) – ஒரு பத்தை

கேரட் – பெரியதாக ஒன்று

பீன்ஸ் – 100 gm

பெங்களூர் கத்திரிக்காய் – ஒன்று

வெள்ளரிக்காய் – மீடியம் சைஸ் ஒன்று

சேனை – கால் கிலோ.

பச்சை பட்டாணி – 50 gm

கறிவேப்பிலை

பச்சை மிளகாய் – 3

சீரகம் – ஒரு சிறிய ஸ்பூன்

பெருங்காயத் தூள் – சிறிது

மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

தாளிக்க கடுகு, மிளகாய். சீரகம்

முதலில் துவரம் பருப்பை கழுவி கொஞ்சம் மஞ்சள் தூளும், அரை ஸ்பூன்  எண்ணெயும் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை சிறு சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொண்டு ஒரு வாணலியில் போட்டு மஞ்சள் தூளும், கொஞ்சம் உப்பும் சேர்த்து கிளறிக் கொடுத்து மூடி, வேக வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை உங்கள் விருப்பப்படி இரண்டு விதமாக அரைக்கலாம். தேங்காய்த் துருவலை கொஞ்சம் சீரகம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்வது ஒரு வகை. மூன்று காய்ந்த மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்துக் கொண்டு தேங்காய், கறிவேப்பிலை சீரகத்தோடு சேர்த்து மையாக அரைத்துக் கொள்வது மற்றொரு வகை. இது இன்னமும் கூடுதல் சுவையும் வாசனையும்  கொடுக்கும். காய்கள் நன்கு வெந்த பிறகு அரைத்து வைத்த விழுதையும், வேக வைத்திருக்கும் பருப்பையும் வெந்த காயில் கொட்டி நன்கு கிளறிக் கொடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து, சிறிய தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி ரெண்டு மிளகாய், சிறிது கடுகு, சீரகம், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து மொளகூட்டளில் சேர்த்த பிறகு மேலே ரெண்டு ஸ்பூன் வெளிச்செண்ணெயும் விட்டு கப்பென்று மூடி விடுங்கள். சற்றுப் பொறுத்து திறக்கும் போது வாசனை கமகமக்கும்.

இதே முறையில் காய்கறிகளுக்கு பதில் எந்த வகை கீரை வேண்டுமானாலும் நறுக்கிக் கொண்டு மொளகூட்டல் செய்யலாம். கீரை வெந்ததும் மத்தால் நன்கு மசித்துக் கொண்டு பருப்பும், அரைத்த விழுதும் சேர்க்க வேண்டும். பல்வகை காயில்லையா கவலையில்லை. ஒரே ஒரு பெங்களூர் கத்திரிக்காயிலும் செய்யலாம். ஒரே ஒரு பூசணி பத்தையிலும், கூட இதைச் செய்யலாம். உங்கள் சௌகார்யம்தான்.

***

7)  அரச்சு கலக்கி

இதென்னடா பேருன்னு யோசனையார்க்கா? எனக்கும் அப்டித்தான் இருந்தது இதை முதன் முதலில் செய்யும் போது. என் மாமியார் ஒரு முறை மகா பெரியவாளை தரிசிக்க சதாரா சென்றிருந்தார். அப்போது நான்தான் சமையல். என் கணவர் மொளகூட்டல் பண்ணி ரசம் வெச்சுடு என்று சொல்லி அதற்கு வேண்டிய காய்களை எல்லாம் நறுக்கிக் கொடுத்துவிட்டு ஆபீசுக்குக் கிளம்பி விட்டார். மதியம் சாப்பிட வந்து விடுவார். வீட்டில் வயது முதிர்ந்த மாமனார் இருந்தார். மொளகூட்டல் செய்து விட்டேன். ரசமும் வைத்து விட்டேன். மாமனாரிடம் சாப்பிடறேளாப்பா என்று கேட்டேன்? என்னவாக்கும் சமைச்சிருக்காய் என்று கேட்டார். மொளகூட்டலும் ரசமும் பண்ணியிருக்கேன் என்றேன் நான். “மொளகூட்டலுக்குத தொட்டுக்க ஏதும்  பண்ணலையா என்று கேட்டார் அவர். நான் உதட்டைப் பிதுக்கினேன். ஆத்துல கணி மாங்காய் இருக்கும் பாரு என்றார். பீங்கான் ஜாடியில் உப்பிலிட்ட வடு மாங்காய்கள் இருந்தன. அவற்றை ஒரு ஏழெட்டு எடுத்துக் கொள்ளச் சொன்னார். (மாமனாரும் கல்யாண சமையல் செய்பவர்தான். அவர் தலைமையில் ஒரு குழுவே இருந்தது). உப்பிலிட்டகணி மாங்காய்களை எடுத்து அவர் சொல்லியபடியே செய்தேன். இதான் அரச்சு கலக்கி தெரியுமோ என்றார் அவர். மொளகூட்டலுக்கு அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட அவ்வளவு சுவையாக இருந்தது. உப்பிலிட்ட நெல்லிக்காயிலும் இதனைச் செய்யலாம் என்றார் அவர்.  போகிற போக்கில் கற்றுக் கொள்வதுதான் சமையல். இனி மொளகூட்டலுக்குத தொட்டுக் கொண்டு சாப்பிடும் அரச்சு கலக்கி எப்படி செய்வதெனப் பார்ப்போம்.

தேவையானவை

உப்பிலிட்டு வைத்திருக்கும் வடுமாங்காய்கள் ஏழெட்டு

தேங்காய்த துருவல் கொஞ்சம்

பச்சை மிளகாய்

புளித்த தயிர் கடைந்தது ஒரு கப்.

தாளிக்க ஒரு சிறிய மிளகாய்,

கால் ஸ்பூன் கடுகு,

சிறிது பெருங்காயம்.

கறிவேப்பிலை சிறிது,

உப்பு சிறிது (மாங்காயிலேயே உப்பிருக்கும் என்பதால் மிகக் குறைவாக போட்டால் போதும்.

வடுமாங்காய்களின் கொட்டையை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதோடு துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சிறிது உப்பு இவற்றை மிக்ஸியிலிட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொண்டு, அரைத்ததை, கடைந்து வைத்திருக்கும் புளித்த தயிரில் போட்டுக் கலந்து விட வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் மிளகாயும் கடுகும் தாளித்து அதிலேயே பெருங்காயத்தூளும் சேர்த்து அதை இந்த அரச்சு கலக்கியில் சேர்க்க வேண்டியதுதான். இதை மொளகூட்டலுக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிடும் போது, வயிறு நிறைந்த பிறகும் கூட நாலு கவளம் அதிகம் சாப்பிடத் தோன்றும். உப்பிலிட்ட நெல்லிக்காயிலும் கொட்டை நீக்கி இதே போல் செய்யலாம். இரண்டையும் சேர்த்தே கூடச் செய்யலாம். அது உங்கள் வசதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com