25. பிள்ளையார் சதுர்த்திக்கு அரிசிமாவு கொழுக்கட்டை

இதுவும் சுவையாக இருக்கும்  கடைகளில் கிடைக்கும் அரிசி மாவிலும் இதைச் செய்யலாம்.
25. பிள்ளையார் சதுர்த்திக்கு அரிசிமாவு கொழுக்கட்டை

91)  அரிசிமாவு கொழுக்கட்டை

இதுவும் சுவையாக இருக்கும்  கடைகளில் கிடைக்கும் அரிசி மாவிலும் இதைச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்  

அரிசி மாவு – ஒரு கோப்பை

தேங்காய் துருவல் – அரை கோப்பை

தாளிக்க

கடுகு – ஒரு ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்

கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

பெருங்காயம் – சிறிது

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

அரிசி மாவை வாணலியில் போட்டு அது பழுப்பு நிறமாகும் வரை நன்கு வறுக்க வேண்டும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி வைத்துவிட்டு அதே வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் வெளிச்செண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து, தேவையான உப்பும் சேர்த்து  ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் அதில் தண்ணீர் விட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பை சிறிதாக்கி  வறுத்து வைத்திருக்கும் அரிசி மாவை அதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். அடுப்பை அணைத்து விடலாம். இந்த மாவுக் கலவை கொஞ்சம் ஆறியதும், உருண்டை பிடித்து ஆவியில் வைக்க வேண்டும். விருப்பப்படுபவர்கள் மாவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தும் உருண்டை படிக்கலாம்.

                                ************

92)  புளிப் பொங்கல்:

மழைக்காலங்களில் பிற்பகல் நேரம் உண்பதற்கு மிகச் சிறந்த சிற்றுண்டி இது. அக்காலத்தில் டிபன் வகைகள் செய்வதற்காகவே என் அம்மா ஒரு டப்பாவில் நொய்யரிசி வைத்திருப்பாள். இப்போதெல்லாம் கடைகளில் அரிசிக் குருணை என்றே கிடைக்கிறது. சற்று பெரிய குருனையாகப் பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்

நொய்யரிசி அல்லது அரிசிக் குருணை  - ஒரு டம்ளர்

புளி – நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் – 3

கடுகு – ஒரு ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்

வறுத்து உடைத்த வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து 

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவவையான அளவு

வெல்லம் – சிறிய கட்டி

பெருங்காயம் – அரை ஸ்பூன் அல்லது கட்டி என்றால் சுண்டைக்காய் அளவு 

செய்முறை:

புளியைக் கரைத்துக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசிக் குருணைக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் புளிக்கரைசல்  இருக்க வேண்டும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு தாளிக்க வேண்டும். எல்லாம் சிவந்ததும், கடைசியாக வறுத்து பாதியாக உடைத்த வேர்க்கடலைகளையும் அதில் சேர்த்து பின்னர் புளிக்கரைசலை ஊற்றி, உப்பு, வெல்லம் சிறிது சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். புளிக்கரைசல் நன்கு தளைத்ததும், ஒரு கையால் கிளறிக் கொண்டே மறுகையால் அரிசிக் குருணையை அதில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளற வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விடவும். இப்போது இதை வேக வைக்க இரண்டு வழி இருக்கிறது. வாணலியிலேயே மூடி வைத்தும் ஒரு இருபது இருபத்தைந்து நிமிடம் வேக விடலாம். அவ்வப்போது திறந்து தண்ணீரின் அளவைப் பார்த்துக்கொண்டு தேவை என்றால் சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது இந்தக் கலவையை அப்படியே ஒரு பாத்திரத்திற்கு மாற்றி குக்கரின் அடியில் நீர் விட்டு இந்த பாத்திரத்தை அதில் வைத்து தட்டு போட்டு மூடி மூன்று விசில் விடலாம். உங்கள் விருப்பம். பிறகு திறந்து பார்த்தால் சுவையான புளிப் பொங்கல் நாவில் ஜாலம் ஊற வைக்கும். புளிப்பு, உறைப்பு, உப்பு, அவற்றின் சுவையைத் தூக்கிக் கொடுக்கும் துளி வெல்லத்தின் இனிப்பு என்று சுடச்சுட இதை சாப்பிட்டு சூடான தேநீரையும் குடித்தால்....ஆஹா...!

என் அம்மாவும் அத்தையும் இந்த புளிப் பொங்கலை வெங்கலப் பானையில்தான் செய்வார்கள். அப்போது பானையின் அடிப்புறம் கொஞ்சம் அடை மாதிரி முறுகலாக பொங்கல் ஒட்டிக் கொண்டிருக்கும். அதைச் சுரண்டித் தின்பதற்கு ஒரு போட்டியே நடக்கும். என்ன சொல்லுங்கள் வெங்கலப் பானை சமையலுக்கென்று ஒரு தனி மணம் உண்டுதான். ஊறவைத்த கெட்டி அவலிலும் கூட இதே மாதிரி செய்யலாம்.

                               **************

93)  கோதுமை ரவை தோசை:

இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு இது நல்லது. நிறைய நார்ச்சத்து கிடைக்கும்.

தேவையானவை

சம்பா கோதுமை ரவை – அரை கிலோ (கடைகளில் கிடைக்கும்)

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 3 (காய்ந்த மிளகாயும் கூட போடலாம்)

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

பெருங்காயம் – சிறிது

செய்முறை:

கோதுமை ரவையை ஐந்தே நிமிடம் அது முங்கும் அளவுக்கு  தண்ணீரில் ஊறவிடவும். ஐந்து நிமிடம் என்றால் ஐந்தே நிமிடம்தான். அதிகம் ஊறினால் அப்பறம் அரைக்கும் போது சக்கை சக்கையாய் வரும். வார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கும்.

ஐந்து நிமிடம் கழித்து ரவையை வடிகட்டியில் வடித்தெடுத்து மிக்சியில் போட்டு ஊறிய நீரையே வேண்டிய அளவுக்கு சேர்த்து அதில், மிளகாய், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இரண்டே நிமிடத்தில் இது அரைந்து விடும். அதிக நேரமெல்லாம் அரைக்க வேண்டாம். பிறகு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும், தோசைமாவு பதத்திற்கு இந்த மாவு இருக்க வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் போட்டு மெலிதான தோசைகளாக வார்க்க வேண்டியதுதான். பட்டு பட்டாக வரும் இந்த தோசை. மிருதுவாக இருக்கும். நெய் தொட்டு சாப்பிடலாம். தக்காளி சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி என எதை வேண்டுமானாலும் உங்கள் விருப்பப்படி தொட்டு சாப்பிடலாம்.

94)  கோதுமை ரவைப் பொங்கல்

அரிசிப் பொங்கல் அலுத்துப் போகும் பொது கோதுமை ரவைப் பொங்கல் செய்து சாப்பிடலாம்.

தேவையானவை

கோதுமை ரவை – 1 கோப்பை

பயத்தம் பருப்பு –  1 கோப்பை

மிளகு – ஒரு ஸ்பூன்  (ஒன்றும் பாதியுமாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும்)

சீரகம் – ஒரு ஸ்பூன்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு பொடியாக நறுக்கியது

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயத்தூள் – சிறிது

முந்திரி பருப்பு –  உடைத்தது இரண்டு டேபிள் ஸ்பூன்

நெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கோதுமை ரவை, மற்றும் பாசிப் பருப்பை ஒரு வாணலியில் தனித்தனியே லேசான வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். சிவக்க வறுக்க வேண்டும் என்பதில்லை.  பிறகு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் நீர் விட்டு குக்கரில் மூன்றோ நான்கோ விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி, அது சுட்டதும், மிளகு, சீரகம், இஞ்சி கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனோடு பெருங்காயமும் சேர்க்கவும். பிறகு குக்கரில் வெந்த கோதுமைரவைக் கலவையை எடுத்து வாணலியில் போட்டு உப்பு பிடிக்குமாறு நன்கு கலந்து விடவும். தேவையானால் மேலும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்தும் கிளறலாம். முந்திரியை ஒரு ஸ்பூன் நெய்யில் தனியே சிவக்க வறுத்து கடைசியாகப் பொங்கலில் சேர்க்கவும். சுவையான கோதுமை ரவைப் பொங்கல் உங்களை சாப்பிட அழைக்கும். .

                              ********************

95)  மோர்க்களி

மோர்க்கூழ் என்றும் சொல்வார்கள் இதை. என் அத்தை மோர்க்களி செய்தால் எட்டூருக்கு மணக்கும். அவள் செய்யும் போது நான் அருகிலிருந்து ஆர்வமாகப் பார்ப்பேன். விரும்பி சாப்பிடுவேன். குமுட்டி அடுப்பில், இரும்பு வாணலியில்தான் செய்வாள். கிளறுவது கூட இரும்பு தோசைத் திருப்பியில்தான் என்பதால் வாசனை தூக்கலாக இருக்கும். அதுவும் அந்த அடி முறுகல் இருக்கிறதே அதன் சுவை...அபாரமாயிருக்கும்.

தேவையானவை:

ஒரு கப் அரிசி மாவு

புளித்த தயிர் – ஒரு கப்

மோர் மிளகாய் – நான்கு (இல்லை என்றால் காய்ந்த மிளகாய் உபயோகிக்கலாம்)

தாளிக்க

நல்லெண்ணெய் – நான்கு டேபிள் ஸ்பூன் (இதற்கு எண்ணெய் கொஞ்சம் கூடுதலாக வேண்டும்)

கடுகு – ஒரு ஸ்பூன்

உடைத்த உளுந்து – ஒரு ஸ்பூன்

பெருங்காயம் – சிறிது

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

தயிரை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டு கொஞ்சம் நீர் சேர்த்து கடைந்து கொண்டு அதில் அரிசிமாவைப் போட்டு கட்டியின்றி நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று கப் தண்ணீர் அதில் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும். மோர் மிளகாயிலேயே உப்பு இருக்கும் என்பதால் உப்பு பார்த்து போட்டுக் கொள்ளவேண்டும்.

செய்முறை

அடுப்பில் இரும்புக் கடாய் இருந்தால் அதை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, பெருங்காயம் தாளித்து கடைசியாக மோர் மிளகாய்களைக் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலையும் சேர்த்து மிளகாய் முறுகலாக சிவந்ததும், கரைத்து வைத்திருக்கும் அரிசி மோரை அதில் ஊற்றி கை விடாமல் கிளற வேண்டும். தண்ணீர் தேவை என்றால் அவ்வப்போது சேர்க்க வேண்டும். உப்பை சரிபார்த்துக் கொள்ளவும். அரிசிமாவு  பளபளவென்று வெந்து உருண்டு ஒட்டாமல் வரும். அதுவரை கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். எண்ணெய் கொஞ்சம் பிரிந்து மாவின் மீது பளபளக்கும் நிலையில் அடுப்பை அணைத்து விடலாம். இதில் மாவுச்சத்து அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் பார்த்துதான் சாப்பிட வேண்டும்.

                                ************

96)  பாசிப்பருப்பு தோசை

இதைச் செய்வது மிகவும் சுலபம். இரவு உணவுக்கு அரைமணி முன்னால் பாசிப்பருப்பை ஊற வைத்தால் கூடப்போதும். அரைத்து விடலாம்.

தேவையானவை

பாசிப்பருப்பு – ஒரு டம்ப்ளர்

பச்சை மிளகாய் – 1

மிளகு – கால் ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம் சிறிது

செய்முறை

பாசிப்பருப்பை அரைமணி ஊறவைத்து மிக்சியில் போட்டு மேற்கூறிய மற்ற பொருட்களையும் அதில் சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும். தோசைக்கல்லில் இதை மெலிதாக  வார்த்தால் பட்டு பட்டாக வரும். தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதையே பச்சைப்பயறில் செய்தால் பெசரட் என்பார்கள். ஆனால் பாசிப்பருப்பின் சுவை வேறு.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com